கிஷோர்:
1) மோடி போன்ற ஒரு மதவாதி என்னதான் ஒரு சிறந்த நிர்வாகி(எனக்கு இதில் ஆட்சேபணை இல்லை) என்றாலும். அவர் சார்ந்திருக்கும் மத அமைப்பின் சாயல் இருக்கும் வரை அவரை எப்படி ஒரு உதாரணபுருஷன் அளவிற்கு உயர்த்த முடியும்? (குஜராத்தில் பெற்ற வெற்றியை கூறாதீர்கள். அரசியல் வேறு நிர்வாகம் வேறு).
பதில்: நீங்கள் கூறுவதாலோ அல்லது பத்திரிகைகள் கூறுவதாலோ மோடி அவர்கள் மதவாதி ஆகி விடப்போவதில்லை. நீங்களாக ஒன்றை அனுமானமாகக் கொண்டு அதன் மேல் கேள்விகள் கிளப்புவது என்ன நியாயம்? மோடி மதவாதி என்றால், ராஜீவ் காந்தி சீக்கியக் கொலைகளை செய்தவர்களுக்கு மந்திரி பதவி தந்து அழகு பார்த்தவர். அவரை அவ்வாறு கூறுவீர்களா? சீக்கிய இனம் என்றாலே இந்தியாவை பிரதிநிதிப்படுத்துவதாக இருந்த நிலையை மாற்றி அவர்களை இந்திய நீரோட்டத்திலிருந்தே ஒதுக்கிவைத்தவர் அன்னை மாதா தாயார் இந்திரா காந்தி. அவர் மகன் ராஜீவோ சீக்கியக் கொலைகளை ஒரு ஆலமரம் வீழ்ந்தால் நஷ்டமாகும் பல சிறு செடிகளுக்கு ஒப்பிட்டு பேசியவர். மோடியைப் பற்றி கூறினால் அவரும் கவனத்தில் எடுத்து கொள்ளப்படவேண்டும். மோடி மதவாதி என்பதை 2002 தேர்தலிலேயே கூறித்தான் பிரசாரம் செய்தனர். அப்படியும் அவர் வெற்றி பெற்று விட்டார். பிறகு அடுத்த 5 ஆண்டுகளில் நல்ல நிர்வாகம். ஏதேனும் ஒரு மதக்கலவரமோ அல்லது தீவிரவாதத் தாக்குதலோ நடந்ததா குஜராத்தில்? 2007 தேர்தலின்போது இந்தியச் சரித்திரத்திலேயே முதல்முதலாக ஒரு பதவியில் உள்ள மந்திரி மீது ஒரு சிறிய ஊழல் புகார் கூடக் கூறமுடியாமல் போனது. மோடி மதவாதி என்பது ஒரு பிதற்றலாகவே இப்போது எனக்கு படுகிறது. என்ன, எல்லா மக்களையுமே அவர் சமமாகப் பாவிக்கிறார். இசுலாமியர் என்பதற்காக அவர்கள் ஓட்டைப் பெற அவர்களுக்கு அசட்டு சலுகைகள் தர மறுக்கிறார். எல்லோருக்குமே நல்ல நிர்வாகம். அதுதான் அவரது தாரக மந்திரம்.
2) அப்படி அவரை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் ஏன் பின்லேடனை மோடியை விட சிறந்த நிர்வாகியாக எடுத்துக்கொள்ளக்கூடாது? அவ்வளவு பெரிய நெட்வொர்க்கை தலைமறைவில் இருந்து கொண்டே கவனித்துக்கொள்கிறானே! நிர்வாகம் பற்றி மட்டுமே நான் பேசுகிறேன். அவனுடைய தீவிரவாதத்தை அல்ல.பதில்: பின்லேடனை மோடியுடன் ஒப்பிடுதல் அபத்தமானது. ஹிட்லராக இந்திரா காந்தியே அவசர நிலை கொண்டு வந்து நாட்டைக் குட்டிச்சுவராக்கினாலும் அவரை அன்னை இந்திரா என்றும், அவரது மருமகள் மற்றும் ராஜீவ் காந்தியின் விதவை என்பதற்காக மட்டுமே இத்தாலியக்காரரை எல்லாம் அன்னை என்று அழைக்கும் நமக்கும் வெட்கமே இல்லை.
3) ஒரு இந்து அமைப்பு ஒரு முஸ்லீம் அமைப்பு இரண்டுமே ஒரே பஞ்சாயத்திற்கு மோடியிடம் சென்றால் அவரின் தீர்ப்பு என்னவாக இருக்கும்?பதில்: அவரது தீர்ப்புக்கு ஏன் வரப்போகிறது? தீர்ப்பு என்பதை அளிப்பது கோர்ட் நீதிபதிகள், முதன் மந்திரிகள் அல்ல. அவர் என்ன கட்டை பஞ்சாயத்தா செய்கிறார்? அப்படியே செய்தாலும் அவர் சம்பந்தப்பட்ட பிரச்சினையை உணர்ந்துதான் நடவடிக்கை எடுப்பார் என்பதை இசுலாமியரும் அவருக்கு கணிசமாக ஓட்டு போட்டதிலிருந்தே தெரியவில்லையா?
கோமணகிருஷ்ணன்:
1. பிரியங்கா சிறையில் போய் நளினியை சந்தித்தது,விடுதலைப் புலிகளை 'அப்பீஸ்' செய்யவே என்ற ஒரு கருத்து நிலவுகிறதே,அது பற்றி? (இந்திய அரசு இலங்கை அரசுக்கு தார்மீக ரீதியாக தரும் பல ஆதரவு உதவிகள்,புலிகளை கோபமடையச் செய்திருக்கும் இந்தச் சூழலில்,இக்கருத்து முக்கியத்துவம் பெறுகிறது).
பதில்: இதில் பல உள்குத்துக்கள் அடங்கியுள்ளன. நிலைமை தெளிவாக இல்லை. ஆயினும் சோனியா காந்தி என்னமோ தான் தியாகபிம்பமாக விளங்க வேண்டும் என்பதற்காக காய் நகர்த்துகிறார் என்பது மட்டும் புலனாகிறது. ராஜீவ் கூடவே இறந்தவர்களது குடும்பங்களை பற்றி காங்கிரசின் ஓட்டு பொறுக்கும் அரசியலுக்கு என்ன கவலை? இது பற்றி நேற்று (24.01.2008) விற்பனைக்கு வந்த 30.04.2008 தேதியிட்ட துக்ளக் கூறியுள்ளவை கவனத்துக்குரியது. அதன் சுருக்கம்: 1.சிறைச்சாலை விதிகள் பல மீறப்பட்டு அரசின் துணையுடன் இது நடந்துள்ளது என்பது கவலைக்குரியது. 2. ராஜிவ் கொலை என்பது பிரியங்காவை மட்டும் பாதிக்கும் விஷயமல்ல. நாட்டின் முன்னாள் பிரதமர் கொல்லப்பட்டதும், அப்போதைய தமிழகத்தில் அதற்கு சாதகமான நிலை இருந்ததும், இப்போது கூட அந்த கொலை கும்பலைச் சேர்ந்த பலர் தமிழகத்தில் உலவி வருவதும், அவர்களுக்கு இங்குள்ள சிலர் ஆதரவு தெரிவிப்பதும் பொதுப் பிரச்சினைகள். 3. ராஜீவ் கொலையில் உயிரிழந்தது இன்னும் பலர். அவர்கள் சார்பில் கருணை காட்ட சோனியா காந்திக்கு என்ன உரிமை இருக்கிறது என்று அப்போதே (நளினிக்கு மன்னிப்பு வழங்கியபோதே) துக்ளக் கேள்வி எழுப்பியது. இப்போது மகளின் முறையா, அவர் என்ன நீதி தேவதையா? 4. இத்தனை ஆண்டுகள் கழித்து பிரியங்கா இம்மாதிரி செய்வதற்கு மனிதாபிமானம் ஒரு போர்வையே தவிர உண்மைக் காரணம் அல்ல எனத் தோன்றுகிறது. நளினியின் கணவர் முருகன் ஒரு புத்தகம் எழுதுவதாகவும், அது பிரசுரமானால் சிலர் சில கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்னும் அவசியம் வரும் என்று வேறு செய்தி வருகிறது.
2. வாங்கும் சக்தி உயர்ந்தால் மக்களுக்கு விலைவாசி பிரச்னை தெரியாது என்று 'கருத்து' உதிர்த்திருக்கும் மு.க.பற்றி?பதில்: வெறுமனே அவர் குடும்பத்துக்குத்தானே வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது போலத் தோன்றுகிறது. மக்களுக்கு ரொட்டி கிடைக்காவிட்டால் அவர்கள் கேக்குகளை உண்ணட்டும் என்று திருவாய் மலர்ந்தருளின ஃபிரெஞ்சு ராணி ஆன்ட்வானெட் நினைவுக்கு வந்து தொலைக்கிறார்.
திண்டுக்கல் சர்தார்:
1. நேற்று(17.4.2008)ந்தேதி சட்டசபையில் பேசும்போது காந்தியைக் கொன்ற பாவிகளின் ஆட்சி வந்துவிடக்கூடாது.மீண்டுமொரு ராம ரதம்,அதவானியின் சுற்றுப் பயணம் எல்லாம் நடந்தால் நாடு காடாகி விடும்"என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளரே! இது தொடர்பாக நீதிமன்றத்தில் விரிவாக விவாதம் நடந்து காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ்.க்குப் பங்கு இல்லை என்று தீர்ப்பு வந்தபின்னரும் கூட கருணாநிதி இவ்வாறு கூறுவதன் பொருள் என்னவாக இருக்கும்?பதில்: இப்போதைக்கு திமுக பாஜக கூட்டு இல்லை. கருணாநிதி அவர்களுக்காக காங்கிரசே அவர்தம் உறவினருக்கு பதவி அளிக்கிறது. ஆகவே பாஜகவின் தயவு தற்சமயம் அவருக்கு தேவையில்லை. அதுதான் விஷயம்.
3. "இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையில் கிரீமி லேயருக்கான தற்போதுள்ள இரண்டரை லட்ச ரூபாய் உச்சவரம்பைத் தளர்த்திப் பத்து லட்சமாக்க வேண்டும்"என்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் டி.ஆர்.பாலு பேசியதாக செய்தி வெளியாகியுள்ளது.உண்மையிலேயே இவ்வாறு நடந்துவிட்டால் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பே கேலிக்குள்ளாகி விடாதா? (உண்மையில் இவ்வாறு தளர்த்தப்பட்டாலும் ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.பி.,எம்.எல்.ஏ.,உட்பட பஞ்சாயத்துக் கவுன்சிலர்கள் வரை யாருமே இந்த வரம்புக்குள் வர மாட்டார்களே.அவர்கள் வருமானம் இதை விட அதிகமல்லவா!) பதில்: ஏதாவது செய்து பின்வாசல் வழியாக கிரீமி லேயர் வந்துவிடுமோ என அஞ்சுகிறேன்.
கூடுதுறை:
1) படிக்காத மேதை காமராஜர் ஆட்சியை விடவா மோடி சிறந்த முதல்வர் ஆகிவிட்டார்?பதில்: காமராசர் ஆட்சியைப் பற்றி கூட 1957/1962/1967 தேர்தல்களில் ஊழல் புகார்கள் கூறப்பட்டன. 1962-ல் பக்தவத்சலனார் தான் தேர்வடைவதற்காக ஓட்டு பெறுவதில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார். 1967 தேர்தல் சமயத்தில் ரேஷன் கடைகளில் பொருள் கிடைக்கவில்லை. அந்த வகையில் மோதியின் ஆட்சி பற்றி 2007 தேர்தலில் ஒரு ஊழல் புகாரும் இல்லை.ஆகவே, .... .... (வாக்கியத்தை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளவும்).
2) உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்காதா? உங்கள் பதிவுகளில் அதன் வாடையே தென்படுவதில்லையே?பதில்: கிரிக்கெட்டா? ஹா ஹா ஹா. டெண்டுல்கர் பத்து கோல்களாவது போட மாட்டாரா எனக் கேட்டு நண்பர் என்றென்றும் அன்புடன் பாலாவை டென்ஷன் ஆக்கியவன் நான். மேலும், சாரணர் இயக்கத்தில் இருந்தபோது டயரி எழுதும் பழக்கம் இருந்தது. இன்று ரன் எதுவும் எடுக்கவில்லை என்றே தினமும் எழுதிவர, ரன் ஏதாவது எடுத்தால் மட்டுமே அதை டயரியில் குறிப்பிடுமாறு எனது அன்னையால் அன்புடன் தலையில் குட்டப்பட்டு அறிவுறுத்தப்பட்டவன். இருப்பினும் கிரிக்கெட் பற்றியும் பதிவுகள் போட்டுள்ளேனே. பார்க்க:
1. 2. அனானி (21.04.2008, 00.37 மணிக்கு கேட்டவர்)
1. Have you started buying Times of India - Chennai Editionபதில்: முதல் நாள் மட்டும் வாங்கினேன். பிறகு வாங்கவில்லை. தில்லியில் இருந்தபோது கூட ஹிந்துஸ்தான் டைம்ஸ்தான் வாங்கினேன்.
2. What Newspapers, Magazines do you read regularly. Do you plan to subscribe to Times of India..பதில்: ஹிந்து, விகடன், கல்கி, ஜூ.வி., குமுதம், குமுதம் ரிப்போர்டர் ஏல்லாவற்றையும் விட முக்கியமாக துக்ளக். டைஸ் ஆஃப் இந்தியாவுக்கெல்லாம் சந்தா கட்டும் எண்ணம் கிடையாது. அப்படி பார்க்கப் போனால் எல்லாவற்றையும் நேரடியாக கடைகளில் அன்றன்று வாங்குவதுதான் வழக்கம். சந்தாவெல்லாம் எதற்குமே கட்டுவதில்லை, ரீடர்ஸ் டைஜஸ்ட்,
பிசினஸ் டுடே மற்றும் டைம் ஆகிய மூன்று பத்திரிகைகள் தவிர. அதுவும் தற்சமயம் இல்லை.
சங்குமாமா:
1. பிரியங்கா நான் சொல்லித்தான் நளினியை சிறையில் சந்தித்தார் என்று மொக்கை போடும்..டி ஆர் மாதிரி லூசு அரசியல் செய்பவர்களை பற்றி டோண்டு சார் என்ன நினைக்கிறார்?
பதில்: தமாசு. இதற்கு பேசாமல் டி.ஆர். காமெடி டயலாக் போட்டு சண்டைக் காட்சிகளை அமைக்கலாம். ஒரு படத்தில்
"வாடா என் மச்சி, வாழைக்கா பஜ்ஜி" என்று பாடியபடியே சண்டை போடுவதன் காவியத்தன்மையை கூறவும் இயலுமோ! :))) இன்னொரு காவியத்தன்மை வாய்ந்த டயலாக் ஒன்று சண்டைக் காட்சியில், "தாசு நீ க்ளோசு".
ஜாம்பஜார் ஜக்கு:
1. ஸாரே, இந்த மெட்ராஸ் பாஷைல இருக்கிற ஒரு இஸ்பீடு வேற தமிழ்ல ஏன் தலீவா வரமாட்டேன்னுது?பதில்: இந்த மெட்ராஸ் பாசைலே இருக்கற கிக்கே தனிப்பா. அதாவது பாஷையோட கிராம்மர் எல்லாம் தாரவாந்துப் பூடுது. இன்னா நெனிக்கிறியோ அத்த அப்படியே பால்மாறாம பேசிக்கினே போகணும் அவ்ளோத்தான். இதுக்கெல்லம் டூஷன் அப்புசாமி சார் கிட்ட எடுத்துக்க வோணும் சொல்லிப்பிட்டேன். எந்த அப்புசாமியா? எந்த ஊர்ல கண்ணு இருக்கே. நம்ம சீதே கெயவியோட புருசனத்தாம்பா சொல்றேன்.
சாத்தப்பன்
Why do you waste your energy in fighting 'bramanical' things instead of accepting 'stone age fact of braminical' and take different topics for discussion , like......
1-Untold story of kushbuபதில்: அவரைப் பற்றி எல்லோரும் பல தருணங்களில் பலான பலானது கூறிவிட்ட பிறகு அவருக்கு ஒன்றும் Untold story இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும் முயற்சிக்கிறேன். சமீபத்தில் 1986-ல் மேரி ஜங் என்ற ஹிந்தி திரைப்படத்தில் அனில் கபூரின் தங்கையாக அவர் வந்து நன்றாக நடித்தார். அதற்கும் முன்னால் சுனில் தத்தின் தர்த் கா ரிஷ்தா படத்தில் குழந்தை நட்சத்திரமாக வந்தார்.
2-What is your beauty rating of current TV actressss and which one do you like most.எனக்கு பிடித்தவர் காயத்ரி (மெட்டி ஒலி சரோ) மற்றும் காவேரி
3-Have you seen Dr.Cockney's sex surveys?இல்லை, இதுவரை பார்த்ததில்லை. நம்ம டாக்டர் மாத்ருபூதம் மாதிரித்தான் அவர் என கூகளிட்டு அறிந்தேன். பாலியல் அறிவீனம் மேல்நாடுகளிலும் உள்ளது என்பதைக் காண ஒரு அல்ப திருப்தி.
கண்ணன், பாங்காக்
1. தமிழகத்தைச் சேர்ந்த தற்போதுள்ள மத்திய அமைச்சர்களில் யார் சிறப்பாக பணியாற்றுகிறார்கள்? உங்கள் அளவில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு மார்க் போடுவீர்கள் (Out of 10) இந்தியா டுடே பாணியில்).அப்படியெல்லாம் மதிப்பெண் தர எனக்கு ஒரு தகுதியும் இல்லைதான். இருப்பினும் ப.சிதம்பரமும் டி.ஆர். பாலுவும் அன்புமணியும் மனதைக் கவர்கின்றனர்.
2. மகர நெடுங்குழைக்காதன் இவ்வளவு ஃபேமஸ் ஆவார் இணையத்தில் (உங்கள் மற்றும் லக்கி பதிவுகளால்) என எதிர்பார்த்ததுண்டா?பதில்: நானோ அல்லது வேறு யாரோ சொல்லியா என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் புகழடையப் போகிறான்? அவனால் நான்தான் பெருமை பெறுகிறேன். அதே போல என்னை கேலி செய்வதாக நினைத்து அவனை அசிங்கமாக எழுதும் அரைகுறைகளைப் பற்றி எனக்கு கவலை இல்லை. அதே சமயம் அவனுக்கும் எனது பாதுகாப்பு தேவையில்லை.
3. பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருக்கும் நீங்கள், ஐடி கம்பெனிகள் ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியன் (அவர்கள் பணியாளர்களுக்கு) சொல்லித்தர கூப்பிட்டால் செல்வீர்களா ? சென்னையில் உள்ள காக்னிசாண்ட் (CTS), இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ போன்ற கம்பெனிகளிடம் இந்த மாதிரி ஒரு கன்சல்டன்ஸி வேலையை ஏற்றுகொள்வீர்களா? அவர்களை தொடர்பு கொண்டதுண்டா?டி.எஸ்.க்யூ. (இப்போது அது இல்லை. "எப்படியிருக்கும் நீ வேலை செய்தால் என கெக்கலி கொட்டுகிறான் முரளி மனோஹர்)), குமரன் சிஸ்டம்ஸ், எச்.சி.எல். ஆகிய கம்பெனிகள் எனது வாடிக்கையாளர்கள் மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு. பிர்லா சாஃப்ட் கம்பெனிக்கு ஃபிரெஞ்சு தெரிந்தவர்களை
இண்டர்வ்யூ செய்து பரிந்துரைகள் தர பல முறை அழைக்கப்பட்டு அவ்வேலையை செய்துள்ளேன். மற்றப்படி மொழி கற்றுக்கொடுக்க நான் ஆள் இல்லை. முக்கியமாக அதிக துட்டு அதில் இல்லை. துபாஷியாக வந்தோமா வேலை செய்து பணம் பார்ப்போமா என்று இருக்கும் நிலையில் சொல்லி கொடுக்கும் ஆப்ஷன் கவர்ச்சிகரமாக இல்லைதான்.
4. ஜெ. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நடக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?தீவிரவாதிகளுக்கு எதிராக அதிக நடவடிக்கைகள் இருக்கும். மற்றப்படி அதிமுகவும் திமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.
5. இந்தக் கோடையின் உக்கிரத்தை தணித்துக்கொள்ள என்னென்ன உத்திகளில் இறங்கியுள்ளீர்கள் ? ஊட்டி, கோடை டிரிப் உண்டா? இல்லை நங்கநல்லூர் மட்டுமேதானா?பதில்: நான் விரும்பி தங்குவது நங்கநல்லூரில் மட்டுமே. மேலும் எனக்கெல்லாம் ஏது விடுமுறை? வாரத்துக்கு ஏழு நாட்களும் வேலைதான். எனது கணினி முன்னால் அமர்ந்து வேலை செய்வதைத்தான் விரும்புகிறேன்.
6. இந்தியாவின் மின்சார பற்றாக்குறையை தீர்க்க உடனடியாகவும், நீண்ட கால நோக்கிலும் என்ன செய்யவேண்டும் என நினைக்கிறீர்கள்?பதில்: உடனடி தேர்வாக முதற்கண் மின்சாரத் திருட்டை ஒழிக்க வேண்டும். அவ்வாறு திருடுபவர்களுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும். என்ன, அதற்கு அரசியல் ரீதியான தைரியம் தேவை. அது செய்துதான் குஜராத்தில் ஜோதிகிராம் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. முக்கியமாக கட்சி மகாநாடுகளுக்கு கொக்கி போட்டு நேரடியாக லைனிலிருந்தே மின்சாரம் திருடுவதை நிறுத்த வேண்டும். நீண்ட கால நோக்கில் கரியோ எண்ணையோ நிரந்தரமாக இருக்க இயலாது என்பதை உணர வேண்டும். சூரிய ஒளியிலிருந்து, அலைகளிலிருந்து மின்சாரம் எடுக்கும் தொழில் நுட்பத்தை ஊக்குவிக்க வேண்டும்.
அடுத்த பதிவில் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்