12/31/2004

உலகம் ஒரு கிராமமாகிப் போனது

சுனாமியைப் பற்றி பல வருடங்களுக்கு முன் படித்திருக்கிறேன். அதை என் வாழ்நாளில் பார்ப்பேன் என்றுக் கனவிலும் கருதியதில்லை.

ஞாயிறன்று சென்னை மற்றப் பிற இடங்களைத் தாக்கிய கோரத்தைக் கண்டு உறைந்துப் போனேன். "நடுங்கு துயர் எய்த" என்று சிலப்பதிகாரத்தில் படித்ததன் பொருள் இப்போதுதான் விளங்கியது.

நான் வசிக்கும் நங்கநல்லூரில் ஒன்றும் உணர இயலவில்லை. டெலிஃபோன் மூலம் செய்தி கிடைக்கப் பெற்று தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கிப் பார்த்த போதுதான் நிகழ்ச்சியின் தீவிரம் உறைத்தது.

திருவல்லிக்கேணியில் வசிக்கும் பாலா அவர்களுக்கு ஃபோன் செய்தேன். அவரிடமிருந்து நேரடித் தகவல் பெற முடிந்தது.

உணர்ச்சிக் கொந்தளிப்பால் என்ன எழுதுவது என்றுப் புலப்படவில்லை. ஆகவே முன்பே எழுதவில்லை.

இதற்கிடையில் proz.com வலை வாசலில் இருந்து சுனாமியில் சிக்கியிருக்கக் கூடிய அவர்கள் உறுப்பினர்கள் சம்பந்தமாகக் கவலைத் தெரிவிக்கப் பட்டது. எனக்கும் சில மின் அஞ்சல்கள் வந்தன. மனதுக்கு மிக ஆறுதலாக இருந்தது.

இணையத்தின் உபயத்தால் உலகமே ஒரு கிராமமாகிப் போனது. வேறு என்னச் சொல்ல?

துயரம் மிக்க இத்தருணத்தில் நாம் எல்லோரும் ஒற்றுமையுடன் செயலாற்றுவதே இறந்தவர்கள் ஆத்மாவுக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

No comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது