2/23/2005

கேளுங்கள் கொடுக்கப்படும்

இது முற்றிலும் உண்மையே. நம் தேவை எதுவாக இருப்பினும் கேட்க வேண்டியவர்களிடம் கேட்டால் அது கிடைக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம். என் வாழ்வில் இதை நிரூபிக்கும் பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. அவற்றில் ஒன்றை இங்கே கூறுவேன்.

வருடம் 1971. வேண்டா வெறுப்பாக சென்னையை விட்டு பம்பாய் சென்றேன். என்னுடைய முதல் போஸ்டிங் அந்த நகரில்தான். முக்கியமாக ஜெர்மன் புத்தகங்கள் படிக்கக் கிடைக்குமா என்ற சஞ்சலம். பம்பாய் மேக்ஸ் ம்யுல்லர் பவனுக்குச் சென்று நூலகத்தில் உறுப்பினராகச் சேர விண்ணப்பத் தாள் கேட்டேன். இங்கு நூலகம் ஒன்றும் கிடையாது என்றுத் திட்டவட்டமாகக் கூறப் பட்டது. ஆனால் ஒரு அறையில் பல புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன். என்ன செய்வது என்று ஒரு நிமிடம் திகைத்தேன். பிறகு பம்பாயில் உள்ள நேற்கு ஜெர்மனியின் துணைத் தூதருக்கு ஒரு இன்லேண்ட் லெட்டரில் கடிதம் எழுதினேன். மேக்ஸ் ம்யுல்லர் பவனில் நடந்ததைக் கூறி கான்ஸுலேட்டில் ஏதாவது நூலகம் உள்ளதா என்றுக் கேட்டிருந்தேன்.

இரண்டே நாட்களில் பதில் வந்தது. அக்கடிதத்தில் மேக்ஸ் ம்யுல்லர் பவனில் நூலகம் இல்லை என்பதைக் கேட்டதில் அதிர்ச்சி அடைந்ததாக எழுதப்பட்டிருந்தது. பதில் கடிதத்தை எடுத்துக் கொண்டு உடனே மேக்ஸ் ம்யுல்லர் பவன் செல்லுமாறு எனக்கு ஆலோசனை கூறப்பட்டது.

அங்கு சென்றால் இம்முறை வரவேற்பு முற்றிலும் மாறுபட்டிருந்தது. என்னிடம் 10 ரூபாய் பெற்றுக் கொண்டு நூலக அட்டை வழஙப்பட்டது. அட்டை எண் 2. எண் 1 டைரக்டருடையது.

பிறகுதான் தெரிந்துக் கொண்டேன், டைரக்டர் கான்ஸுலேட்டுக்கு அழைக்கப்பட்டுக் கண்டனம் செய்யப்பட்டார் என்று. விஷயம் என்னவென்றால் ஜெர்மன் அரசிடமிருந்து நிதியுதவியைப் பெற்று வாங்கும் புத்தகங்கள் டைரக்டர், அவர் குடும்பத்தினர் மற்றும் இதர அதிகாரிகளால் தனிப்பட்ட முறையில் உபயோகிக்கப்பட்டது என்று. நான் எப்போது சென்றாலும் எனக்குத் தாராளமாகப் புத்தகம் படிக்கக் கொடுக்கப் பட்டது.

கேளுங்கள் கொடுக்கப்படும். நம்மில் பலர் கேட்கக் கூச்சப்பட்டுக் கொண்டுப் பேசாமல் இருக்கிறோம். அது தவறு. தப்பு நடந்தால் தட்டிக் கேட்க வேண்டும். ஆனால் எங்கே யாரிடம் எப்படி விஷயத்தைக் கொண்டுச் செல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். கடிதம் எழ்தும்போது உணர்ச்சி வசப்படாமல், யாரையும் திட்டாமல் நம் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். கேட்டால் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். கேட்கா விட்டால் நிச்சயமாகக் கிடைக்காது. அப்படிக் கிடைப்பது எல்லாம் அம்புலிமாமா கதைகளில்தான் சாத்தியம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4 comments:

Mahamaya said...

இதே தலைப்பில், தமிழோவியத்தில் நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். ஆம், நம்மில் பலர் வேண்டியதைக் கேட்காமலே இழந்து விடுகிறார்கள். ஒரு முறை கேட்டாலே கிடைத்துவிடக் கூடிய பல நன்மைகள் பெறப்படாமலாயே போகின்ரன.

உங்கள் பதிவால் என் கருத்துக்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்து விட்டது!

என் கட்டுரை நவம்பர் 2004-ல் வந்தது. இங்கே வாசிக்கலாம்:

http://www.tamiloviam.com/unicode/11250406.asp

எஸ்.கே
http://kichu.cyberbrahma.com/

kirukan said...

Nice. "Kelungal Kodukapadum"...You could have given the topic as "Kelungal Tharapadum"....This is more catchy....

dondu(#11168674346665545885) said...

"கேளுங்கள் கொடுக்கப்படும், த்ட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் என்றாரே"
என்ற கிறித்துவப் பாடல் சமீபத்தில் அறுபதுகளில் கேட்டது, என் மனதில் பதிந்து விட்டது, ஆகவே இத்தலைப்பு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜோ/Joe said...

டோண்டு ஐயா,
நீங்கள் குறிப்பிடும் கிறிஸ்துவ பாடலில் கூட "கேளுங்கள் தரப்படும்..தட்டுங்கள் திறக்கப்படும்..தேடுங்கள் கிடைக்கும் என்றார்" என்று தான் வரும்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது