3/04/2006

IDPL நினைவுகள் - 4

வருடம் 1986. சற்றும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் எனக்கு கார்ப்பரேட் அலுவலகத்திலிருந்து பக்கத்து வளாகத்தில் இருந்த குர்கான் தொழிற்சாலைக்கு மாற்றம் வந்தது. அப்போது நான் உதவி மின் பொறியாளர் மற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராகப் பணி புரிந்து வந்தேன். அதே நேரத்தில் தொழிற்சாலையில் என்னுடைய ரேங்கிலேயே இன்னொரு உதவி மின்பொறியாளர் இருந்தார். ஆனால் என் சீனியாரிட்டி அவருடையதை விட அதிகம். ஆகவே அவர் என் கீழ் வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம்.

அதுவும் அது வரை நான் வெறும் மொழிபெயர்ப்பு வேலைகள்தான் பார்த்து வந்தேன். ஜெனெரேட்டருக்கான வேலைகளை துவக்கி, நடாத்தி, முடித்துக் கொடுத்தது ஒரு விதிவிலக்காகவே பார்க்கப்பட்டது. அது வேறு அவருக்கு கடுப்பு. எங்கள் மேலதிகாரியிடம் போய் தன் செல்வாக்கைப் பயன்படுத்தியிருக்கிறார்.

விளைவு நான் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்த உடனேயே என்னைத் தலைமையகத்தில் உள்ள விளக்குகள், மின் விசிறிகள் முதலியவற்றைப் பார்த்துக் கொள்ளுமாறும் நான் இருக்க வேண்டிய இடமும் அதுதான் என்றும் கூறி திருப்பி அனுப்பிவிட்டார்கள். சம்பளம் மட்டும் தொழிற்சாலை கொடுத்து விடும். இப்படியாக மின் பிரிவில் மிக அதிக சீனியாரிட்டி உள்ள நான் ஒரு சாதாரண மேற்பார்வையாளன் செய்யக் கூடிய வேலையைச் செய்ய வேண்டியதாயிற்று. நான் என்ன செய்தேன்? பேசாமல் திரும்பி வந்தேன். என்னுடைய பழைய மேஜை நாற்காலிகள் எனக்கு கொடுக்கப்பட்டன. உதவிக்கு ஒரு எலெக்ட்ரீஷியன், ஒரு ஹெல்பர் மட்டுமே. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு நாள் வேலை பத்து நிமிடங்களில் முடிந்து விடும். சந்தோஷமாக மீதி நேரங்களில் என் வெளி மொழிபேயர்ப்பு வேலைகளைச் செய்ய ஆரம்பித்தேன். தில்லி முழுக்க எனக்கு வாடிக்கையாளர்கள். அவர்கள் கொடுக்கும் வேலைகளை ஹாய்யாகச் செய்து கொண்டிருந்தேன். நல்ல பிராக்டீஸ், நல்ல அனுபவமும் கூடக் கிடைத்தன. என்னைக் கண்காணிக்க வேண்டியவர்கள் தொழிற்சாலையில், நான் இருப்பதோ தலைமை அலுவலகத்தில். அங்கு இல்லையென்றால் தொழிற்சாலையில் இருப்பதாக இவர்கள் நினைத்துக் கொள்ள ஒரே தமாஷ்தான் போங்கள். இந்தக் கண்ணாமூசி 6 வருடம் நீடித்தது.

ஐ.டி.பி.எல் அப்போது தன் வீழ்ச்சியை நோக்கிப் போய்கொண்டிருந்தது. கைவசம் ஆர்டர்கள் ரொம்ப இல்லை. பலரும் வேலை நேரத்தில் பொழுதுபோகாமல் வம்பு பேசிக் கொண்டிருந்தனர். தன் இடத்தில் அமர்ந்து வம்பு பேசாமல் வேலை செய்பவர்கள் மிகச்சிலரே. அவர்களில் நானும் ஒருவனாக இனம் காணப்பட்டதுதான் பெரிய தமாஷ். எப்போதும் உட்கார்ந்து எதையோ பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருந்தது பலரை இம்ப்ரெஸ் செய்தது.

திடீரென 1990-ல் ஒரு பிரெஞ்சுக்காரர் ரிஷிகேஷில் உள்ள தொழிற்சாலைக்கு வந்து 21 நாட்கள் டேரா போட, அவருக்காக துபாஷி வேலை செய்தேன். என்னுடைய மொழிபெயர்ப்பு வேலைகளை விடாமல் செய்து வந்ததால் அந்த வேலையை இடது கை விளையாட்டாகச் செய்தேன். எங்கள் தலைமை நிர்வாகிக்கு ஒரே ஆச்சரியம். அவர் என்னிடம் "ராகவன், இங்கு கிட்டத்ததட்ட 8 வருடங்களாக பெரிய அளவில் பிரெஞ்சுவேலை எதுவும் வரவில்லை, இருப்பினும் நீங்கள் நேற்றுத்தான் விட்டது போல எப்படி சமாளித்தீர்கள்?" எனக்கேட்டார். அவரிடம் உண்மையையா கூற முடியும்? வேறு மாதிரி சமாளித்தேன். "ஐயா இது சைக்கிள் விடுவதைப் போலத்தான். பல ஆண்டுகள் சைக்கிளையே தொடாவிட்டாலும் பேலன்ஸ் செய்வது எப்படி மறந்துப் போகும்?"

இந்த இடத்தில் சைட் பிசினஸ் செய்வதைப் பற்றி என் எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.

மருத்துவப் பட்டம் பெற்றவர்கள் மருத்துவக் கல்லூரிப் பேராசியர்களாகவோ அல்லது ஏதாவது கம்பெனிகளுக்கு முழு நேர மருத்துவப் பணிக்கோ போகும் போது. தனி ப்ராக்டீசில் ஈடுபடக் கூடாது என்று விதி உண்டு. ஆனால் அதற்குப் பதில் அவர்களுக்கு அம்மாதிரி தனித் தொழில் செய்யாததற்கான ஈட்டுத் தொகை சம்பளத்துடன் வழங்கப்படும். அதே போல ஆசிரியர்கள் டியூஷன் எடுக்கக் கூடாது என்றும் விதி இருப்பதாக அறிகிறேன். இங்கு இதற்காக ஏதும் ஈட்டுத்தொகை வழங்கப் படுவதாகத் தெரியவில்லை. எது எப்படியாயினும் அதைப் பற்றி நான் இங்குப் பேச வரவில்லை.

சில வேலைகளில் நிறைய மிகுதி நேரம் கிடைக்கிறது. நான் வேலைப் பார்த்த நிறுவனத்தில் தினப்படி வேலையை ஒரு மணி நேரத்தில் முடித்து விடலாம். பிறகு என்ன செய்வது? எல்லோருக்கும் புத்தகம் படிப்பதில் விருப்பம் இருக்கும் என்றுக் கூற இயலாது. 90 சதவிகிதத்துக்கும் மேலான அளவில் அவ்வாறு ஓய்வு நேரம் அதிகம் உள்ளவர்கள் பேசிப் பேசியே அலுவலக வம்புகளுக்கு வழி வகுக்கின்றனர். ஆனால் திறமையுள்ள சிலர் அலுவலக வேலைக்கு ஒரு பங்கமும் வாராது மற்ற வேலைகள் செய்துப் பொருள் ஈட்டுகின்றனர்.

எனக்குக் கீழே ஒரு மெக்கானிக் பணி புரிந்தார். ஏர் கண்டிஷன் தொழில் நுட்பத்தில் திறமை அதிகம் அவருக்கு. கம்பெனி வேலைகளை உடனுக்குடன் முடித்துப் பிறகு தன் சொந்தத் தொழிலையும் கவனிப்பவர். பழகுவதற்கு இனிமையானவர். (அப்போதுதானே வெளி வாடிக்கையாளர்களைப் பிடிக்க முடியும்). அவரிடம் கம்பெனி வேலையிருந்தால் அதற்குத்தான் முதலுரிமை என்று இருப்பார். வெகு வேகமாக அந்த வேலையை முடித்து வேறு வேலையில் ஈடுபடுவார். எனக்குத் தெரியும் அவர் இம்மாதிரி வெளி வேலைகளை எடுத்துச் செய்கிறார் என்று. அதனால் என்ன? வெளி வேலை எதையும் செய்யாது அதே சமயம் கம்பெனி வேலையையும் சொதப்பும் மற்ற மெக்கானிக்குகளை விட அவர் பல மடங்கு மேலானவர்.

நான் மட்டும் என்ன? நான் பொறியாளர் மற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராக இருந்தாலும் நான் பாட்டுக்கு வெளி மொழிபெயர்ப்பு வேலைகளையும் செய்து வந்தேன். ஆகவே 12 வருடங்களுக்கு முன் விருப்ப ஓய்வு எடுக்கும் சமயம் ஒரு பிரச்சினையும் இல்லை. எனக்காக வாடிக்கையாளர்கள் தயாராக இருந்தனர்.

இதனால் கூறப்படும் நீதி யாது?

பொது நலனுக்கு பங்கம் வராது செயல்பட முடிந்தால் இம்மாதிரி தனி வேலையில் ஈடுபடுவது வேலை செய்யாமல் வம்பு பேசிக் கொண்டிருப்பதை விடச் சிறந்தது. அதே நேரத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பது முக்கியம். முழு நேர வேலையும் சைட் பிசினெஸும் ஒன்றுக்கொன்று எவ்விதத் தொடர்பும் இல்லாது இருக்க வேண்டும். முக்கியமாக நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பது உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் தெரியக் கூடாது. தேவையற்ற அச்சுறுத்தல்கள்தான் அதன் பலன். அதே மாதிரி வெளி வேலைகளைப் பற்றி உங்கள் கம்பெனியில் மூச்சு விடக் கூடாது. யாருடனும் சண்டைப் போடக் கூடாது. அதெல்லாம் வம்பு பேசுபவர்களின் உரிமை. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது உத்தமம். இதனால் கிடைக்கும் நல்லப் பெயர் ஒரு தனி போனஸ்.

அது சரி, நான் இவ்வாறு செய்தது யாருக்குமே தெரியாமல் போயிற்றா என்ற கேள்வி உங்கள் மனதில் கண்டிப்பாக எழும். பலருக்குத் தெரியும். அவர்களில் பலர் என்னைப் போலவே செயல்பட்டவர்கள். மனைவி பெயரில் இன்ஷூரன்ஸ் ஏஜென்சி எடுப்பது, யூ.டி.ஐ. பாண்டுகளுக்கான புரோக்கர் வேலை எல்லாம் செய்தனர். தனிப்பட்ட விரோதம் இருந்தால் ஒழிய யாரும் யாரையும் கண்டுகொள்வதில்லை. அதனால்தான் கூறினேன், எல்லோருடனும் சுமுகமாகப் பழக வேண்டுமென்று.

என்னுடைய மொழிபெயர்ர்ப்புகளை தட்டச்சு செய்ய இரு டைப்பிஸ்டுகளின் சேவையை பெற்றுக் கொண்டேன். அவர்களுக்கு ஒரு பக்கத்துக்கு இவ்வளவு எனக் கணக்கு போட்டு கைமேல் காசு அளித்ததால் எனக்காக வேலை செய்ய அவர்கள் இருவரிடையேயும் நல்லப் போட்டி. அவர்களிடம் ஒரே ஒரு கண்டிஷன்தான் போட்டேன். ஐ.டி.பி.எல் வேலைகளுக்குத்தான் முன்னுரிமை தர வேண்டும். அதில் எந்த சுணக்கமும் காட்டலாகாது. அவர்களும் அவ்வாறே செய்ததில் அவர்களுடைய மேலதிகாரிகளுக்கும் திருப்தியே. ஒரு டைப்பிஸ்டின் மேலதிகாரி என்னிடம் ஒரு முறை வெளிப்படையாகவே கூறினார், "நீங்கள் அவளுக்கு வேலை கொடுப்பதால் நான் கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் முடித்து விடுகிறாள், நன்றி" என்று.

பதிவை முடிக்குமுன் ஒரு சிறு தமாஷ். எனக்கு இஞ்சினியராக 23 வருடங்கள், ஜெர்மன் மொழிப் பெயர்ப்பாளனாக 31 வருடங்கள் மற்றும் பிரெஞ்சு மொழி பெயர்ப்பாளனாக 28 வருடங்கள் அனுபவம் ஆக மொத்த அனுபவம் 82 வருடங்கள் ஆனால் என் வயது 60-க்கும் கீழேதான் என்று ஒரு புது வாடிக்கையாளரிடம் கூறுவேன். அவர் வியப்புடன் இது எவ்வாறு சாத்தியம் என்றுக் கேட்டால், "ஓவர்டைம்" என்பேன் சிரிக்காமல்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9 comments:

வெளிகண்ட நாதர் said...

//பொது நலனுக்கு பங்கம் வராது செயல்பட முடிந்தால் இம்மாதிரி தனி வேலையில் ஈடுபடுவது வேலை செய்யாமல் வம்பு பேசிக் கொண்டிருப்பதை விடச் சிறந்தது. அதே நேரத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பது முக்கியம்.// இது கொஞ்சம் முரண்பாடான் கோட்பாடு. வேலை நேரங்களில் காசு கொடுக்கும் கம்பெனியை விட்டு விட்டு சுய வேலைகளில் கவனம் செலுத்து என்று கூறுவது கொஞ்சம் அதிகமாக தோணுகிறது. நான் இது போன்ற வேலையாட்கள் என்னுடன் வைத்து கொண்டு வேலை செய்யும் பொழுது நிறைய சிரமபட்டிருக்கிறேன். முதலில் நாம் சொல்லும் வேலையை அவர் குறித்த் நேரத்தில் செய்வதில்லை, இன்னொன்று அவர் நிலையில் உள்ள சக ஊழியர்களும் அதே போன்று செயல்ப்டுவதால் ஒரு கட்டுபாடற்ற நிலை. இவர்களின் சூப்ரவைசர் என்ற முறையில், எல்லோரிடமும் சமமாக வேலை வாங்குவது கடினம். வெகு நேரங்களில் நான் கண்டும் காணதது போல் விட்டும் இட்டிருக்கிறேன், அவரிடமே எனது பாலிஸி பிரிமிய தொகைகளை கட்டும் பணியையும் இட்டுரிக்கிறேன். இருந்தாலும் சில சமயங்களில் அதிகமாகும் பொழுது, விஷயம் வேறு மாதிரி ஆகிவிடும். நீங்கள் கூறுவது போல பொது நலனுக்கு பங்கம் விளைவிக்காமல் என்ற மாறுபட்ட கோட்பாட்டுடன், இது போன்று செயல்படலாம் என்பது எவ்வளவு தூரம் உண்மை என்று உங்களின் அனுபவத்தை அருகில் இருந்து பார்த்தவனில்லை, ஆனால், பெரும்பாலோர் அப்படி இல்லை. ஒரு வேளை மாறி வரும் காலத்திற்கேற்ப புதிய ஒழுங்கினம் என்று வேண்டுமானால் கருதி கொள்ளலாம். எல்லாம் 'Changing Morality' என்பதோ!

dondu(#11168674346665545885) said...

"அவரிடமே எனது பாலிஸி பிரிமிய தொகைகளை கட்டும் பணியையும் இட்டிருக்கிறேன்."

அது. அதைத்தான் நான் வேறு சொற்களில் கூறினேன். அப்படிப்பட்டவரிடம்தான் நீங்கள் அதிக வேலையும் வாங்க முடியும். செய்யாவிட்டால் அவருக்கு தொல்லை நிச்சயம் என்பதை கேஷுவலாக அவரிடம் கூறிவைப்பது உத்தமம்.

நான் ஐ.டி.பி.எல்லில் இருந்த முதல் 2 வருடங்கள் அல்ஜீரிய வேலை நெட்டிவாங்கியது. அப்போது வெளிவேலைகளை காலை மற்றும் இரவு வேளைகளில் வைத்துக் கொண்டேன்.

நான் கூறியது முழுக்க முழுக்க என் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டுதான். அவரவர் அனுபவம் அவரவருக்கு.

என் சக பொறியாளர்கள் வேலை செய்ததற்கு எந்த அளவிலும் குறையாது பணியாற்றினேன். அது பற்றி மேலும் அடுத்தப் பதிவில் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பழூர் கார்த்தி said...

// பொது நலனுக்கு பங்கம் வராது செயல்பட முடிந்தால் இம்மாதிரி தனி வேலையில் ஈடுபடுவது வேலை செய்யாமல் வம்பு பேசிக் கொண்டிருப்பதை விடச் சிறந்தது. //

சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.. ஆனால் எந்த அளவுகோளை வைத்து
இதை மதிப்பிட முடியும் ?? நீங்கள் கூறும்படி கம்பெனி வேலைகள் இல்லாதபோது, தனிவேலைகள் செய்வது தவறில்லை என்றே நினைக்கிறேன்...

dondu(#11168674346665545885) said...

நாட்டாமை அவர்களே, ஐ.டி.பி.எல். மீண்டும் ரிவைவ் செய்யப்படப் போகிறது என்று இந்த ரிப்போர்ட் கூறுகிறது. பார்க்க: http://www.pharmabiz.com/article/detnews.asp?articleid=31654§ionid=50

ஆனால் இதை முழுமையாக நடாத்திச் செல்லத் தேவையான மன வலிமை உள்ளதா எனத் தெரியவில்லை. வி.ஆர்.எஸ். மற்றும் வழமையான ஓய்வு பெறுதல் ஆகியவற்றால் கம்பெனியின் மனித வளம் அதல பாதாளத்தில் உள்ளது. ஏதேனும் அற்புதம் ந்டந்தால்தான் உண்டு. அவ்வாறே நடக்க வேண்டுமென ஆண்டவனை வேண்டுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.. ஆனால் எந்த அளவுகோளை வைத்து
இதை மதிப்பிட முடியும் ??

இதெல்லாம் அவரவரே உணர்ந்து செய்ய வேண்டும். எல்லோராலும் முடியாது. நான் குறிப்பிட்ட ஏசி மெக்கானிக்கால் முடிந்ததற்கு காரணம் அவர் தன் வேலையில் திறமையானவர்.

அதன்றி சிபாரிசு பிடித்து வேலையில் சேர்ந்து அலுவலக அரசியலில் ஈடுபட்டு அதன் மூலம் வேலையில் ஒட்டிக் கொண்டிருப்பவரால் இதையெல்லாம் கண்டிப்பாகச் செய்யமுடியாததுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

தீவிரவாதிகள் பிரச்சினைக்காக நான் ஜயலலிதா அவர்களைத்தான் ஆதரிக்கிறேன். அவர் கொண்டு வந்த மழைநீர் சேமிப்புத் திட்டம் கருணாநிதி அவ்ர்களால் கண்டிப்பாக இவ்வளவு சிறப்பாகச் செயலாகியிருக்க முடியாது. ஜெ அவர்களின் கறார் அணுகுமுறை அவரிடம் சுத்தமாக இல்லை.

வைக்கோ பற்றி எல்லோரும் கூறிவிட்டனர். என் பங்கிற்கு இவ்வாறு கூறுவேன்.

வைக்கோவை பொருத்தவரை அவர் செய்ததுதான் சரி. முதலில் சட்டசபையில் நுழைய வேண்டும். பிறகு சுவற்றை வைத்துத்தான் சித்திரம். கருணாநிதி அவரை சுவரெழுப்ப்பவே விட்டிருக்க மாட்டார் என்பதே நிஜம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஆம் நாட்டாமை அவர்களே. இணைப்பு வேலை செய்யத்தான் இல்லை. பரவாயில்லை அந்த அறிக்கையை முழுமையாகவே இங்கு தருவேன்.

IDPL - on revival path
Thursday, January 26, 2006 08:00 IST
Our Bureau, New Delhi

The ailing public sector drug company Indian Drugs and Pharmaceuticals Limited (IDPL) is in the process of revival, thanks to the interest shown by the present Government to turnaround its fortunes.

As part of the revival plan of IDPL, the government, which is working out a detailed revival package, has already released Rs 3 crore for redeveloping the three plants located at Rishikesh, Gurgaon and Chennai. The cleaning of the plants has commenced and would be made Schedule M compliant before April 2006. A sum of Rs 1 crore has been sanctioned and released for the Muzzafarpur plant. Further, the R&D centre of IDPL is to be developed as one of the best drug development centres of the country soon. National Institute of Pharmaceuticals and Education Research (NIPER) had recently been asked to take over the reigns of the IDPL R&D centre Hyderabad. The Central Government had also sanctioned Rs 1 crore for renovation and upkeep of the building and laboratory facilities in the R&D centre.

According to company sources, IDPL is planning to give priority for contract research in its revival plans. The company may enter into R&D collaborations on commercial basis with multinational clinical research organisations as part of its growth strategy. IDPL's R&D centre had turned the focus to several multinational companies. "Some of them have already visited our centre. Talks are soon to begin to identify areas of potential collaborative research agreements. If the R&D centre of IDPL had previously utilised its entire resources for its own purposes, the revamped company will make it a business proposition by taking up contract research," sources said. The IDPL may soon go for a major recruitment drive thereby inducting fresh talent into its research division.

It may be noted the R&D centre of IDPL had brought out three drug compounds a few years ago. While the compound (IDPH-8261) that has completed all the three pre-marketing phases of clinical trails was a potential NSAID drug with analgesic, anti-inflammatory and anti- arthritic properties, other two were a new triazolo benzothiazine derivative (IDPH-791) with pre-clinically confirmed central muscle relaxation potency and a triazole derivative (IDPH-85184) with proved anti-depressant properties.

The draft of pharma policy 2006 also gives hope for IDPL as it has emphasised to revive ailing PSU drug companies and to give preference for such companies in Government purchases.

A few months ago, the ministry of chemicals and fertilizers had decided to revive all the five units of IDPL located at Gurgaon, Chennai, Hyderabad, Muzaffarpur and Rishikesh in a phased manner as part of the Government's policy to ensure adequate role for PSUs in ensuring the availability of essential drugs at affordable prices. The previous government had decided to close down the loss making IDPL and most of the employees was given voluntary retirement. The work of revival of IDPL and its units would start from October 1 2005 and is expected to be completed within a period of two and a half years.

At present, three plants namely Gurgaon, Rishikesh and Chennai are producing medicines to a limited extent while the chemical plant at Muzaffarpur and bulk drug and formulation plant at Hyderabad were closed.

அவர்கள் ஆராய்ச்சி மையத்துக்கே அதிக முக்கியத்துவம் தருகின்றனர். நான் ஏற்கனவே கூறியதுபோல மனித வளம் ஐ.டி.பி.எல்லிடம் தற்சமயம் அறவே இல்லை. என்ன செய்யப் போகிறார்களோ தெரியவில்லை.

தனியார்மயமாக்குதலும் யோசிக்கவேண்டியதுதான். பழைய ஸ்டாஃப் கிட்டத்தட்ட எல்லோரும் விருப்ப ஓய்வில் சென்ற இந்த நிலையில் தனியார் மயமாக்கல் கடினமாக இருக்கக் கூடாது. ஆனால் செய்வார்களா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வியே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி விஸ்வாமித்ரா அவர்களே. உங்களைப் போன்றவர்கள் ஆதரவு கிடைக்கும்போது அந்த போலி டோண்டு போன்ற இழிபிறவிகள் எனக்கு லட்சியமே அல்ல.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

கால்கரி சிவா அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://sivacalgary.blogspot.com/2006/03/2.html
இந்த அரேபியன்களுக்கு திமிர் அதிகம். அதுவும் சவுதிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இந்தியர்கள் என்றால் அவர்களுக்கு இளப்பமே. இந்துக்களைப் பற்றி அவர்கள் அபிப்பிராயம் சொல்லிக் கொள்ளும்படியில்லை.

அவன்களிடம் போய் வேலை செய்யவேண்டும் என்பது துரதிர்ஷ்டவசமானதே.

நான் ஐ.டி.பி.எல்லில் வேலைக்கு சேர்ந்தபோது எல்லா விஷயத்திலும் மகிழ்ச்சிதான், ஒரு விஷயத்தைத் தவிர. அல்ஜீரியாவில் வேலை என்றார்கள். ஐயோ இஸ்ரேலுக்கு விரோதியான அரபு நாடு ஒன்றுக்கு போக வேண்டியிருக்கிறதே என்பதில்தான் சோகம். நல்ல வேளையாக அல்ஜீரிய வேலை இல்லை என்று ஆயிற்று. பிழைத்தேன்.

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதை காட்டும் வண்ணம் இதன் நகலை என்னுடைய ஐ.டி.பி.எல். பதிவு ஒன்றில் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/idpl-4.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது