3/21/2006

IDPL நினைவுகள் - 5

ஐ.டி.பி.எல்லின் வீழ்ச்சி மூலம் ஒன்று கற்கலாம். அதாவது ஒரு நிர்வாகம் எவ்வாறு இருக்கக் கூடாது என்று. அதற்காக ஐ.டி.பி.எல்லின் உயர் அதிகாரிகளை குற்றம் சொல்வதாக நினைத்து விடாதீர்கள். அதிகாரிகளில் பலர் மிகத் திறமைசாலிகள். ஆனால் ஐ.டி.பி.எல்லை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த மினிஸ்ட்ரியின் செயல்கள் அது நல்ல முறையில் செயல்பட முடியாமல் தடுத்துவிட்டது.

உதாரணத்துக்கு ஐ.டி.பி.எல்லுக்கு சொந்தமான கார்களில் ஒன்று மினிஸ்ட்ரி அதிகாரிகள் வசமே இருந்தது. அதன் உபயோகத்தின் மேல் ஐ.டி.பி.எல்லுக்கு ஒரு கட்டுப்பாடும் இல்லை. ஆனால் அதன் செலவுகள் மட்டும் ஐ.டி.பி.எல் தலையில். அதன் ஓட்டுனர் ஐ.டி.பி.எல்லில் சம்பளம் பெற்றார். அது மட்டுமன்றி ஐ.டி.பி.எல்லில் வேலை செய்த எழுத்தர்கள் நான்கைந்து பேர் மினிஸ்ட்ரியிலேயே நிறுத்திக் கொள்ளப்பட்டனர். அவர்கள் சம்பளமும் ஐ.டி.பி.எல். பொறுப்பிலேயே. அதே போல மினிஸ்ட்ரியில் இருந்த ஜாயிண்ட் செக்ரெடரி வீட்டில் வாஷிங்க் மெஷின் வேலை செய்யவில்லையென்றால் எலெக்ட்ரிஷியனை அழைத்துக் கொண்டு நான் செல்லவேண்டிய நிர்ப்பந்தம். நாங்கள் சென்ற காரை அந்த அதிகாரியின் வீட்டினர் தங்கள் வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் கறிகாய் வாங்க எடுத்து சென்றனர், ஏனெனில் அங்கு கிலோவுக்கு அரை ரூபாய் மலிவாம். எங்கு அடித்துக் கொள்வது என்று தெரியவில்லை.

அல்ஜீரிய வேலையைப் பற்றியும் எழுதியிருந்தேன். தோல் பதனிடும் தொழிற்சாலையில் வரும் கழிவு நீரை சுத்தம் செய்யும் ப்ளாண்டை நிறுவும் வேலைக்கு ஒப்பந்தப் புள்ளிகள் தருமாறு ஐ.டி.பி.எல். என்னும மருந்துக் கம்பெனிக்கு அரசியல் ரீதியான நிர்ப்பந்தம். நல்ல வேளையாக அல்ஜீரியாவிலேயே எதோ அரசு கவிழ்ப்பு நடந்து எங்களுக்கு அந்த வேலை கிடைக்கவில்லையோ பிழைத்தோமோ. ஆனால் அதற்குள் ஒரு கணிசமான தொகையும் செலவழிக்கப்பட்டிருந்தது. அத்தனையும் எள்ளுதான்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போல 1980களின் தொடக்கத்திலேயே ஐ.டி.பி.எல்லின் சரிவு நிதானமாக ஆரம்பித்தது. அதெல்லாம் இப்போது பின்னோக்கிப் பார்க்கும்போதுதான் தெரிகிறது. நிலைமை மோசம் என்பதை நான் 1990-ல் ஐ.டி.பி.எல். ரிஷிகேஷுக்கு துபாஷி வேலையாய் சென்றபோது உணர்ந்தேன். அதற்கான சில அறிகுறிகள். டௌன்ஷிப்பில் விளையாடிய குழந்தைகள் பெரும்பான்மையினர் வேலை செய்பவர்களின் குழந்தைகள் அல்ல, பேரக் குழந்தைகள். அதாவது வேலை செய்பவர்களின் சராசரி வயது 40-க்கும் மேல். புது ஆள் சேர்ப்பு பல வருடங்களாக நடைபெறாததன் விளைவுதான் இது. வருடா வருடம் பலர் ஓய்வு பெற்று சென்றனர். ஆனால் அதனால் விளைந்த காலியிடங்கள் நிரப்பப்படவில்லை. தெரு விளக்குகளில் பாதிக்கு மேல் பல்புகள் இல்லை. தெருக்களின் பராமரிப்பும் மோசம். வேலை செய்யும் இடத்தில் தொழிலாளர்கள் கூடி நின்று வம்பு பேசிக் கொண்டிருந்தனர். தொழிற்சாலைக்கு வந்த பிரெஞ்சுக்காரர் கேட்ட அளவுக்கு மூலப் பொருள்கள் கிடைப்பதில் தாமதம். இன்னும் கூறிக் கொண்டே போகலாம்.

1992-ல் விருப்ப ஓய்வுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. டைனமிக்காக வேலை செய்யக் கூடியவர்களில் முக்கால்வாசிப்பேர் விருப்ப ஓய்வு பெற்று சென்றனர். தினசரி உற்பத்திக்கு தேவையான பணம் கிடைப்பதில் சுணக்கம். க்ரெடிட்டில் மருந்துப் பொருட்கள் பெற்ற அரசு மருத்துவமனைகள் பில்கள் செட்டில் செய்வதில் ஆமை வேகம் காட்டினர். இத்தனை ஆண்டுகளாக மத்திய அரசு கொடுத்துவந்த பட்ஜெட் ஆதரவு சுருங்கிப் போயிற்று. ஒரு நிதி ஆண்டில் 19 கோடி ரூபாய் அரசு ஒதுக்க, அது போதாது என்று தலைமை நிர்வாகி பெரிய நோட் போட்டார், அதை பரிசீலித்த அமைச்சு அதிகாரிகள் விழித்துக் கொண்டு உண்மையில் ஒதுக்கியது 19 கோடி அல்ல 19 லட்சமே என்று கண்டுபிடித்து எங்கள் தலைமை அதிககரியை நோக அடித்தனர் என்றெல்லாம் வதந்திகள் பரவின. 1993 வாக்கில் இன்னொரு செய்தி அடிப்பட்டது. அதாவது அந்த ஆண்டு முடிவதற்குள் ரிஷிகேஷிலிருந்து கணிசமான மின்னியல் அதிகாரிகள் ஓய்வு பெறப்போவதால் எங்களில் அனேகம்பேரை அந்த ப்ளாண்டுக்கு மாற்றப் போவதாக அறிந்தேன். அப்போதுதான் நான் விழித்துக் கொண்டு என்னுடைய விருப்ப ஓய்வு விண்ணப்பத்தை சமர்ப்பித்தேன். நல்ல வேளையாக ரிலீவும் செய்யப்பட்டேன். சிறிது தாமதித்திருந்தாலும் காரியம் கெட்டிருக்கும். ஏனெனில் எனக்கப்புறம் என் துறையில் வேலை செய்தவர்களுக்கு விருப்ப ஓய்வு மறுக்கப்பட்டது.

இவ்வளவு ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் ஐ.டி.பி.எல்லின் வீழ்ச்சி எனக்கு மனச் சோர்வை ஏற்படுத்துகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

15 comments:

நாட்டாமை said...

டோண்டு அவர்களே,

நீங்கள் முன்பிருந்த CPWDலேயே இருந்திருக்கலாம் என என நினைத்ததுண்டா?இன்னும் 10 வருடம் அதிக சர்வீஸ் பெற்றிருக்கலாம் அல்லவா? In restrospect ஐடிபிஎல்க்கு வந்தது நல்ல career move என்று நினைக்கிறீர்களா?

dondu(#4800161) said...

வருக நாட்டாமை அவர்களே. கண்டிப்பாக CPWDலேயே இருந்திருக்கலாம் என்று எப்போதுமே நினைக்கவில்லை. விளக்குகிறேன்.

1981-ல் எனக்கு CPWDயில் பத்து ஆண்டு கால அனுபவம் இருந்தது. ஆனால் ஜூனியர் இஞ்சினியராகத்தான் இருந்தேன். மேற்பார்வையாளர் மட்டுமே. அடிப்படை சம்பள விகிதம் ரூ. 425-700தான். அடுத்த நிலைக்கு முன்னேற்றம் பெற (சம்பள விகிதம் ரூ.650-1200) இன்னும் பத்து வருடங்களாவது காத்திருக்க வேண்டியிருந்தது. மேலும் பம்பாயிலிருந்து சென்னைக்கு மாற்றல் பெற்று வந்து 7 வருடங்கள் ஆகி விட்டிருந்தன. அவ்வளவு ஆண்டுகள் ஒரே இடத்தில் இருந்தது பெரிய ஆச்சரியமே. எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் மாற்றம் செய்திருப்பார்கள்.

அந்த நேரத்தில் ஐ.டி.பி.எல்லில் வந்த வாய்ப்பைப் பாருங்கள். பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் மட்டுமன்றி அஸ்ஸிஸ்டண்ட் இஞ்சினியராகவும் வேலை. சம்பள விகிதம் ரூ. 700-1300. மத்திய அரசின் அகவிலைப் படி, மேலும் க்ளாஸ்-1 அதிகாரி வேறு.

இருப்பினும் சம்பளத்தில் முன்னேற்றம் என்று பார்த்தால் ரூ. 150 மட்டுமே. தில்லிக்கு வேறு குடிபோக வேண்டும். வீட்டம்மா பேங்கில் வேலை செய்து கொண்டிருந்தார். அவருக்கும் மாற்றத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். குழம்பித்தான் போனேன். அப்போதுதான் என் வீட்டம்மா எனக்கு தைரியம் அளித்தார். பேசாமல் ஐ.டி.பி.எல். வேலையை ஒத்துக் கொள்ள சொன்னார். அவ்வாறே செய்தேன்.

அவர் பேச்சை கேட்டால் எப்போதுமே கஷ்டம் வந்ததில்லை.

CPWD பென்ஷன் வேறு கிடைத்தது. பத்தாண்டு கால செர்வீசுக்காக எனக்களிக்கப்பட்ட அடிப்படை பென்ஷன் ரூ.125. 1986-ல் வந்த பே கமிஷன் சிபாரிசுப்படி குறைந்த பட்ச பென்ஷனே ரூ.375 ஆயிற்று. அதாவது 200% உயர்வு. இதுவே கிட்டத்தட்ட 20 வருட செர்வீசுக்கு சமமான பென்ஷனாகி விட்டது.

12 வருடங்கள் தில்லியிலேயே இருந்தேன். அதுவே CPWD ஆக இருந்தால் இன்னும் இரண்டு மூன்று இட மாற்றங்கள் வந்திருக்கும். மொழி பெயர்ப்பு வேலைகள் செய்து மேல் அனுபவம் பெற்றிருக்க முடியாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dinakar said...

என் வீட்டம்மா எனக்கு தைரியம் அளித்தார். பேசாமல் ஐ.டி.பி.எல். வேலையை ஒத்துக் கொள்ள சொன்னார். அவ்வாறே செய்தேன்.

அவர் பேச்சை கேட்டால் எப்போதுமே கஷ்டம் வந்ததில்லை.

Dondu sir,

Behind every man's success there is a woman.That seems to be very true in your case.

I am wondering how husbands and wives, both of them who are working in government organizations manage to stay together.How do they manage if husband and wife are posted in two different states?You must have seen lots of such cases in your company,have'nt you?

dondu(#4800161) said...

நன்றி தினகர் அவர்களே. என் வீட்டம்மாவைப் பற்றி எழுத வேண்டுமானால் தனிப்பதிவே போட வேண்டியிருக்கும். கூடிய சீக்கிரம் அதையும் செய்வேன்.

முடிந்த வரை கணவன் மனைவி இருவருக்கும் ஒரே ஊரில் போஸ்டிங் போட ஏதுவாகத்தான் விதிகள் உள்ளன. ஆனால் அதற்கு வேக்கன்ஸி என்று இருக்க வேண்டும். ஒருவர் மாநில அரசிலும் மற்றவர் மத்திய அரசிலும் வேலை பார்த்தால், இரண்டாமவர் தன் போஸ்டிங் மாற்றத்துக்கு விண்ணப்பிப்பதே சாதாரண முறை. பேங்குகளில் வேலை செய்யும் பெண்கள் தத்தம் கணவர் இருக்கும் இடங்களுக்கு மாற்றம் பெற மூன்று வாய்ப்புகள் கொடுக்கப்படும். ஆனால் ஆண்களுக்கு இந்த சலுகையில்லை என்பதை இப்போதுதான் என் வீட்டம்மாவிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.

மொத்தத்தில் வாழ்க்கை கஷ்டம்தான். அதனாலேயே பலர் வேலை உயர்வு வேண்டாமென இருந்து விடுகின்றனர், முக்கியமாக பேங்குகளில், எல்.ஐ.சி.யில். அதற்கும் இப்போது ஆப்படித்து விட்டார்கள் என்பதையும் கேள்விப்படுகிறேன்.

ஐ.டி.பி.எல்லில் பிரச்சினையே இருந்ததில்லை. இருவருக்கும் ஒரே இடத்தில்தான் போஸ்டிங் போடுவார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

sivagnanamji(#16342789) said...

//engu adithukolvadhu enru//
edhal adithu kolvadhu........?
why dont you write regularly? why you take this much of time between 2 essays?

dondu(#4800161) said...

சிவஞானம் அவர்களே,

எதால் அடித்துக் கொள்வது, எங்கு அடித்துக் கொள்வது ஆகிய இரண்டுமே சரியான சொலவடைகளே.

சராசரிக்கும் மேலான அளவில்தான் பதிவு போடுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் அதிகம் போட வேண்டும் என்று நீங்கள் நினைப்பது எனக்கு மனதிற்கு நிறைவைத் தருகிறது.

அதே நேரத்தில் ரொம்ப அதிகமாகப் பதிவு போடும் தமிழ் இணையத்தில் சில வயதான பதிவாளர்களைப் பற்றி ஒரு கலாய்ச்சல் பதிவு வேறு வந்ததே. என்னைப் பொருத்தவரை அப்பதிவை (அதிலும் முக்கியமாக என்னைப் பற்றிய ஒரு வரியை) ரசித்தே பின்னூட்டமிட்டேன் என்பதையும் இவ்விடத்தில் முதற்கண் கூறிவிடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நாட்டாமை said...

டோண்டு அவர்களே

குறைந்த பட்சம் வாரம் 3 பதிவாவது போட வேண்டும் என்பது எங்கள் அன்பு வேண்டுகோள்.தினமும் போட வேண்டாம்.அமுதத்தை கூட தினமும் அருந்தினால் திகட்டி விடும்.

நாட்டாமை said...

அதே நேரத்தில் ரொம்ப அதிகமாகப் பதிவு போடும் தமிழ் இணையத்தில் சில வயதான பதிவாளர்களைப் பற்றி ஒரு கலாய்ச்சல் பதிவு வேறு வந்ததே. /

டோண்டு அவர்களே

அது வயதானவர்களை பற்றி எழுதப்பட்ட பதிவு.நீங்கள் 60 வயது இளைஞராச்சே..அதை ஏன் நீங்கள் கண்டுகொள்கிறீர்கள்?இன்னும் 100 வருடத்துக்கு நீங்கள் மகரநெடுங்குழைக்காதன் அருளால் இதே துள்ளலோடு பதிவு போட வேண்டும்.

dondu(#4800161) said...

நன்றி நாட்டாமை அவர்களே. நீங்கள் கூறுவதுபோல வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு பதிவுகள் போடுவது நல்லதே. அப்போதுதான் பின்னூட்டங்களும் எல்லா பதிவுகளுக்கும் நிரவி வரும்.

அறுபது வயது இளைஞன்? நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dinakar said...

Dondu sir,

You said that officers in PSU use government car for buying vegetables.Dont they have regulations about mileage and trip sheet of cars?My father is a government officer.He has restrictions about number of miles allowed per week.

dondu(#4800161) said...

தினகர் அவர்களே, ட்ரிப் ஷீட் எல்லாம் ஒரு பெரிய விஷயமா? அமைச்சகத்துக்கு போனதாக காட்டிவிட்டுப் போவார்கள். கறிகாய் கடையெல்லாம் யார் எழுதுவார்கள்? எனக்கு எப்படி தெரியும் என்று கேட்கிறீர்களா. சம்பந்தப்பட்ட அந்த நாள் என்னைத்தானே ட்ரிப் ஷீட்டில் கையெழுத்திடச் சொன்னார்கள். என்ன எழுத வேண்டும் என்பதையும் கூறினார்களே. அந்த நேரத்தில் எதிர்த்திருந்தால் என் வேலை அல்லவா போயிருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

venkateshsharma said...

ரொம்ப நாளா உங்க வெப்சைட் படிச்சுண்டிருக்கேன்.ரொம்ப நல்லா எழுதறீங்க.தொடர்ந்து எழுதுங்க.

dondu(#4800161) said...

மிக்க நன்றி வெங்கடேஷ் ஷ்ர்மா அவர்களே. உங்களைப் போன்ற வாசகர் பின்னூட்டங்களே என்னைப் போன்றப் பதிவாளர்களுக்கு உற்சாகம் தருகின்றன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

venkateshsharma said...

அந்த போலிக்கு நீங்க துளியும் இடம் தராம இருக்கறது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.இதே தைரியத்தோட துணிஞ்சு நில்லுங்க.நந்த கோபாலன் கிருபை உங்களுக்கு எப்பவும் இருக்கும்.உங்க ஒவ்வொரு பதிவுக்கும் கட்டாயமா நான் பதில் போடுவேன்.என்னோட பிரண்ட்ஸ் அத்தனை பேருக்கும் உங்க தர்மயுத்தத்தை பத்தி சொல்லிருக்கேன்.

dondu(#4800161) said...

மீண்டும் நன்றி வெங்கடேஷ் ஷர்மா அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது