என்.டி மணி அவர்களின் இந்தப் பதிவில் சிவா என்பவர் தன்னுடையப் பின்னூட்டத்தில் (பின்னூட்ட எண் 258) இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளார். அவர் தங்கிலீஷில் கொடுத்ததைத் தமிழில் தருவேன்:
"டோண்டு ஐயா,
நீர் என்ன சொல்ல வரீர் என்றே எமக்குப் புரியவில்லை ஐயா!!!?
சந்தர்ப்பவசமாக நீர் ஒரு தலித்தாகப் பிறந்திருந்தால் இதையே பேசிக் கொண்டு இருப்பிரா என எண்ணிப் பாரும்.
சிவா"
சிவா அவர்களே, நான் தலித்தாகப் பிறந்திருந்தால் என்ன பேசிக் கொண்டிருப்பேன் என்றா கேட்கிறீர்கள்? பேசுவதை விடுங்கள். என்ன செய்திருப்பேன் என இரண்டு பதிவில் கூறியிருக்கிறேன். முதல் பதிவு இரட்டை டம்ளர் முறை பற்றியது. அதில் நான் தலித்தாகப் பிறந்திருந்தால் என்று கூறவில்லைதான், இருப்பினும் அதுதான் அப்பதிவின் அடிப்படை அர்த்தம், ஏனெனில் பின்னூட்டங்கள் எல்லாம் என்னுடைய அனுபவத்திலிருந்தே கூறப்பட்டவை. ஆனால் இந்தப் பதிவில் அதை நான் வெளிப்படையாகவே கூறிவிட்டேன். அதுவும் கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்னாலேயே போட்டப் பதிவு அது. இன்னொரு விஷயம் என்னவென்றால் அப்போதும் இப்பதிவு வந்ததற்கு திரு தங்கமணியால் நாராயணன் அவர்கள் பதிவு ஒன்றில் இட்டப் பின்னூட்டமேயாகும். இப்போது இப்பதிவு மீள்பதிவு செய்யப்படுவதற்கும் அதே தங்கமணி அவர்களின் மேலே சுட்டியப் பதிவில் நீங்கள் இட்டப் பின்னூட்டமே காரணம்.
நானே மெதுவாக என்னுடைய பல பழைய பதிவுகளை தற்சமயம் இற்றைப்படுத்தி வருகிறேன். அதற்கு முக்கியக் காரணம் அவற்றை வகைபடுத்துவதேயாகும். இப்பதிவு இற்றைப்படுத்தப்படுவதற்கு நீங்கள் தூண்டுகோலாயிருந்ததற்கு உங்களுக்கு என் நன்றி. இப்பதிவை அப்போதிடப்பட்டிருந்தப் பின்னூட்டங்களுடனேயே மீள்பதிவு இங்கு செய்கிறேன் என்பதையும் கூறிவிடுகிறேன்.
இப்போது இற்றைப்படுத்தப்பட்டப் பதிவின் ஒரிஜினலுக்குப் போவோமா?
"தலித் அதிகாரிகளும், தமிழக அரசும்" என்றத் தலைப்பில் நாராயணன் அவர்கள் ஒரு பதிவு கொடுத்துள்ளார். அதில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. இதை நான் என் தனிப் பதிப்பாகவும் இங்கிடுவதற்கு காரணம் அங்கு நான் இட்டது பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என்று போய் விடக்கூடாது என்பதற்குத்தான். இப்போது பின்னூட்டத்துக்குச் செல்வோமா?
என்.டி. மணி அவர்கள் எழுதுகிறார்: "நாராயணன், இவர்கள் ஏன் அரசிடமிருந்து வேலையை எதிர்பார்க்கவேண்டும்? டீ கடை, இட்லிகடை அல்லது ஏதாவது கைத்தொழில் செய்து சுயமரியாதையோடு வாழக்கூடாதா?" இதை மதி கந்தசாமி அவர்கள் வேறு வழிமொழிந்திருக்கிறார்.
புரிகிறது. இப்போது தலித் அதிகாரிகளின் பிரச்சினையைப் பார்ப்போம். ஒவ்வொரு பிரச்சினையையும் அதன் சூழ்நிலைக்கேற்பத்தான் கையாள வேண்டும். இரட்டை டம்ளர் முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சொன்ன யோசனை அம்முறையைக் கடைபிடிக்கும் கடைகளைப் புறக்கணிப்பதேயாகும். அதற்கு நாமே டீக்கடை வைப்பது ஒரு முதல் படியே.
ஏற்கனவே ஐ.ஏ.எஸ்ஸில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இம்முறை தேவையில்லை. அவர்களுக்கு ஏற்ற முறையை மனப்பூர்வமாகக் கூறுவேன். அதற்கு முன் ஒரு சிறிய ஆனால் நான் சொல்லவிருப்பதை இன்னும் தெளிவாக்கும் சிறு டைவர்ஷன்.
சமீபத்தில் 1973-ல் "விக்டோரியா நம்பர் 203" என்றத் தலைப்பில் இந்திப் படம் ஒன்று வந்தது. அதில் ஒரு சீன். அஷோக் குமார் மற்றும் ப்ரான் கைகால் கட்டிப் போடப்பட்டு படகில் கிடப்பார்கள். பிரான் அஷோக் குமாரின் விஸ்கி பாட்டிலை வாயினால் கௌவி போட்டின் சைடில் மோதி உடைப்பார். பிறகு வாயில் கௌவியபடி வைத்திருக்கும் பாட்டில் துண்டால் அஷோக் குமாரின் கைகட்டுகளை அறுத்து விடுவார். விடுதலையான அஷோக் குமார் இப்போது பிரானைக் காப்பாற்ற அதே மாதிரி பாட்டில் துண்டை வாயில் கௌவிக் கொண்டு பிரானின் கைகட்டை அறுக்க முயற்சிப்பார். பிரான் அவரைத் திட்டுவார். "உன் கைகள்தான் சுதந்திரமாக உள்ளனவே, பிறகு ஏன் வாயில் கௌவிக் கொண்டு அவஸ்தைப்படுகிறாய்" என்று.
இப்போதுதான் கைகள் சுதந்திரமாகி விட்டனவே, டீக்கடை யோசனை இவர்களுக்கில்லை. நான் அவ்வாறு காத்திருப்பில் வைக்கப்பட்ட தலித் அதிகாரி என்று வைத்துக் கொள்வோம். இப்போது பாருங்கள்.
முதலில் காத்திருப்பில் வைத்திருப்பது என்ன என்பதைப் பற்றி நான் புரிந்துக் கொண்டதைக் கூறி விடுகிறேன். தவறு இருந்தால் திருத்தவும். அதாவது போஸ்டிங் கொடுக்க மாட்டார்கள், வீட்டில் அமர்ந்திருக்க வேண்டும். சம்பளம் தாமதமில்லாமல் மாதா மாதம் கொடுப்பார்கள் அல்லவா? அவ்வாறு காத்திருக்கும் காலத்தை லீவாகக் கணக்கெடுத்துக் கொள்ள் மாட்டார்கள்தானே? இந்த அனுமானத்தில் யோசனை கூறுகிறேன். தவறு என்றால் சரியான சட்ட நிலைமையைக் கூறுங்கள். அதற்கேற்ப யோசனையை மாற்றித் தருகிறேன்.
நான் ஏற்கனவே கூறியது போல அவ்வாறு பாதிக்கப்பட்ட தலித் அதிகாரி. முதலில் ஹாய்யாக ஓய்வெடுப்பேன். அதே சமயம் நான் செய்ய வேண்டியவற்றையும் திட்டமிடுவேன். கூட்டங்களுக்குப் போவது வேலை ஒழுங்கு விதிகளுக்கு முரணானதா? சரி பரவாயில்லை. மீட்டிங்கில் நம்மவர்கள் என்னென பேச வேண்டும் என்பதை பின்னணியிலிருந்து வியூகம் அமைத்துக் கூறுவேன். கையில் எழுத்து வேலை இருந்தால் அதைப் பார்ப்பேன். அரசு உத்தியோகத்திலிருந்துக் கொண்டே அதை செய்ய அனுமதி கிடைக்கும்தானே? ஆகவே இது செய்ய முடிந்ததே. வேறு பொழுதுபோக்குகளை மேற்கொள்வேன். இது ரொம்ப முக்கியம். காத்திருக்கச் செய்து என் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் அரசுக்கு அந்த வேலையை எளிதாக்க மாட்டேன். அதற்கு பதில் நான் ரிலேக்ஸ்டாக இருந்து அரசு யந்திரத்தை வெறுப்பேற்றுவேன். இது ஒரு யுத்தம். என் கையில் இருக்கும் அத்தனை ஆயுதங்களையும் பயன்படுத்துவேன். எவ்வளவு நாட்கள்தான் காத்திருப்பில் வைத்திருக்க முடியும்? ஒரு வருடம்? 12 மாத சம்பளம் பெற்று அரசு எனக்காக வேறு செலவுகள் செய்ய வைப்பேன். உறவினர் கல்யாணங்களுக்கு செல்ல விடுமுறை எடுக்கத் தேவையில்லை. நான் கூறிய யோசனைகள் விளையாட்டுக்கல்ல. மனப்பூர்வமாகவே கூறியது. என்னைத் தேவையில்லாமல் சீண்டி என்னைக் கட்டாயக் காத்திருப்பில் வைப்பவர்களை இவ்வாறு எதிர்க்கொள்வதில் எனக்கு எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லை என்பதையும் கூறுவேன்.
டீக்கடை யோசனை சொன்ன போது நானே டீக்கடை நடத்தியதைப் பற்றிக் கூறினேன் அல்லவா? இப்போதும் நான் மேலே சொன்ன யோசனைகளும் ஒரு சமயம் என்னாலேயே கடைபிடிக்கப்பட்டவையே. எப்படி என்று விளக்குகிறேன். திடீரென்று என்னை ஐ.டி.பி.எல். தலைமையகத்திலிருந்து பக்கத்து வளாகத்தில் இருந்த தொழிற்சாலைக்கு மாற்றி விட்டார்கள். அப்போது நான் உதவி மின் பொறியாளர் மற்றும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராகப் பணி புரிந்து வந்தேன். அதே நேரத்தில் தொழிற்சாலையில் இன்னொரு உதவி மின்பொறியாளர் இருந்தார். என் சீனியாரிட்டி அவருடையதை விட அதிகம். அவர் என் கீழ் வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம். அதுவும் அது வரை நான் வெறும் மொழிபெயர்ப்பு வேலைகள்தான் பார்த்து வந்தேன். அது வேறு அவருக்கு கடுப்பு. எங்கள் மேலதிகாரியிடம் போய் தன் செல்வாக்கைப் பயன்படுத்தியிருக்கிறார். விளைவு நான் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்த உடனேயே என்னைத் தலைமையகத்தில் உள்ள விளக்குகள், மின் விசிறிகள் முதலியவற்றைப் பார்த்துக் கொள்ளுமாறும் நான் இருக்க வேண்டிய இடமும் அதுதான் என்றும் கூறி திருப்பி அனுப்பிவிட்டார்கள். சம்பளம் மட்டும் தொழிற்சாலை கொடுத்து விடும். மின் பிரிவில் மிக அதிக சீனியாரிட்டி உள்ள நான் ஒரு சாதாரண மேற்பார்வையாளன் செய்யக் கூடிய வேலையைச் செய்ய வேண்டியதாயிற்று. நான் என்ன செய்தேன்? பேசாமல் திரும்பி வந்தேன். என்னுடைய பழைய மேஜை நாற்காலிகள் எனக்கு கொடுக்கப்பட்டன. உதவிக்கு ஒரு எலெக்ட்ரீஷியன், ஒரு ஹெல்பர் மட்டுமே. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு நாள் வேலை பத்து நிமிடங்களில் முடிந்து விடும். சந்தோஷமாக மீதி நேரங்களில் என் சைட் பிஸினஸை செய்ய ஆரம்பித்தேன். தில்லி முழுக்க எனக்கு வாடிக்கையாளர்கள். அவர்கள் கொடுக்கும் மொழி பெயர்ப்பு வேலைகளை ஹாய்யாகச் செய்து கொண்டிருந்தேன். நல்ல பிராக்டீஸ், நல்ல அனுபவமும் கூடக் கிடைத்தன. என்னைக் கண்காணிக்க வேண்டியவர்கள் தொழிற்சாலையில், நான் இருப்பதோ தலைமை அலுவலகத்தில். அங்கு இல்லையென்றால் தொழிற்சாலையில் இருப்பதாக இவர்கள் நினைத்துக் கொள்ள ஒரே தமாஷ்தான் போங்கள். இந்தக் கண்ணாமூசி 6 வருடம் நீடித்தது.
ஆகவே தலித் ஐ.ஏ.எஸ். நண்பர்களே, உற்சாகம் பெறுங்கள். சோர்வடையாதீர்கள். நீங்கள் அனுமதித்தால் மட்டுமே மர்றவர்கள் உங்களை டிஸ்டர்ப் செய்ய முடியும். அதுவும் அரசில் முதல் வகுப்பு அதிகாரிகள் நீங்கள். அதன் நெளிவுசுளிவுகளை அறிந்தவர்கள். ஆல் தி பெஸ்ட்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
5 hours ago
16 comments:
சமீபத்தில் 1973-ல்
appa!
"சமீபத்தில் 1950-ல் வெளியான படம் வாழ்க்கை" என்று கூடத்தான் வேறொரு பதிவில் இன்றுதான் பின்னூட்டமிட்டிருக்கிறேன். அதாவது நான் நேரில் பார்த்த விஷயங்கள் எவ்வளவு ஆண்டுகள் போனாலும் என்னைப் பொருத்தவரை நேற்று நட்ந்தது போலத்தான் எனக்குத் தோன்றும்.
அதை விடுங்கள். விஷயத்துக்கு வாருங்கள். நான் இப்பதிவில் கூறிய யோசனையைப் பற்றி தங்கள் பின்னூட்டம் என்ன?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஒரு பாயின்டை விளக்குவதற்காக ஒரு திரைப் படத்தை மேற்கோள் காட்டினால் எல்லோரும் அதையே செய்தால் எப்படி? தலித் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காத்திருக்கிறார்கள் ஐயா. பிரச்சினையின் தீவிரம் புரிந்து பின்னூட்டமிடுங்களேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்றைக்குத்தான் இந்தப்பதிவை படிக்கின்றேன், முதலாவதாக தேவையின்றி கட்டாய காத்திருப்பில் வைத்திருக்கும் அதிகாரிகள் அரசு எந்திரத்தை எதிர்த்து நிச்சயமாக நீதித்துறையிடம் சென்றோ அல்லது இந்த பிரச்சினையை எல்லோருக்கும் எடுத்துச்சென்றோ போராடவேண்டும், இதைவிடுத்து சொந்த வேலையை செய்து கொள்வேன் என்பதோ, விடுமுறைகாலமாக பாவித்துக்கொள் என்பதோ ஒரு மிகச்சாதாரணமான போராட்டகுணமில்லாத முக்கியமாக அதிகாரத்தை பார்த்து பயப்படுகின்ற
மனோபாவமாக இருக்கின்றது
ஏதோ தவறு செய்தோ செய்யாமலோ வகுப்பறையை விட்டு வேளியேற்றப்பட்ட மாணவன் ஹைய்யா நான் வகுப்பு கவணிக்கவே தேவை இல்லை, நான் ஜாலியா விளையாடலாம் வெளியனுப்பினாலும் அட்டெண்டன்ஸ் முன்னாடியே போட்டாச்சே! என்று கூறுவதற்கு இணையான சிறுபிள்ளை மனப்போக்கு.
குழலி அவர்களே, பின்னூட்டத்துக்கு நன்றி. நீங்கள் ஒருவர்தான் நேரடியாக விஷ்யத்துக்கு வந்தீர்கள். என்னுடைய யோசனைக்கு நீங்கள் வெளியிலிருந்து கொண்டு கருத்து தெரிவிக்கிறீர்கள். நான் நேரடியாக இதைப் போன்ற சூழ்நிலையை வெற்றிகரமாக எதிர்க் கொண்டவன் என்னும் முறையில் பேசுகிறேன். அதுதான் வித்தியாசம். எதிராளி எதிர்ப்பார்ப்பதை செய்யாது நாம் வேறு ஏதாவது செய்தால் அவன் குழம்பிப் போவான். கயிறு இழுக்கும் போட்டியில் திடீரென்று கயிறை விடுவதும் ஒரு உத்தியே. நான் என் யோசனைகளைக் கூறுமுன் நான் எந்த அனுமானங்களின் அடிப்படையில் அவற்றைக் கூறினேன் என்பதையும் குறிப்பிட்டேன். அதில் முக்கியமானது காத்திருப்பு காலம் லீவ் அக்கௌன்டில் வராது என்பதே. கத்துபவர் கத்தட்டும், நீ உன் வேலையைப் பார்த்து கொள் என்பதே என் கொள்கை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வேலையிடத்தில் நடைபெறும் பல அரசியலை பார்த்துள்ளேன்.
எனக்கு வேலை அனுபவம் ஏழு ஆண்டுகள் மட்டுமே, இருந்தாலும் எந்த இடத்திலும் நான் அலட்சியப்படுத்தப்படுவதை அனுமதிக்க மாட்டேன்.மிகக்கடுமையாக வேலை செய்பவன் நான். சில கான்செப்ட்களை நிறுவன அளவில் அறிமுகப்படுத்தியவன், தனியாளாக ஒரு புது கான்செப்ட்டை டிசைன் செய்து துனைத்தலைவரிடம் அதை விளக்கி அனுமதிப்பெற்று ஒரு குழு உருவாக்கி அந்த ப்ராடக்டை இரவு பகல் பாராமல் உழைத்து உருவாக்கினேன். அலுவலகக்கூட்டங்களில் மேலதிகாரிகளுக்கு பயப்படாமல் பிரச்சினைகளை நேரடியாக பேசுவேன் ஆனால் என்னுடைய மேலதிகாரிகளிடம் தேவையின்றி அலுவலக விடயம் தவிர்த்த வேறு விடயங்களை பேசும் வழக்கமில்லாதவன்
இந்த நிலையில் பதவியுர்வு கிட்டவில்லை.ஆனால் வேலையில் சாதிக்காத மேலதிகாரிக்கு ஜிங்ஜாங் போட்ட சிலருக்கு பதவியுர்வு, சரி பதவியுர்வு இல்லையென்றால் பரவாயில்லை, எதற்கு தேவையின்றி வேலைப்பளுவை, அதிக பொறுப்பை ஏற்றிக்கொள்ளவேண்டும், ஆறு மணியானால் வீட்டிற்கு போகலாம் என எண்ணாமல் நேரடியாக பிரச்சினையை மேலிடத்துக்கு எடுத்துச்சென்றேன், போராடினேன். அதன்பின் எல்லாம் சுமுகமானது.
என்றுமே நாம் சரியாக இருக்கும்போது அலட்சியப்படுத்தப்படுத்தப்படுவதை போராடாமல் ஏற்றுக்கொள்தல் எனக்கு உடன்பாடில்லா விடயம்.
இந்த இ.ஆ.ப. அதிகாரிகள் இல்லையென்றால் அரசாங்கத்துக்கு ஆயிரம் அதிகாரிகள் அந்த வேலையை செய்யத்தயாராக உள்ளனர், இதனால் அரசாங்கத்திற்கு பாதிப்பு இல்லை? ஆனால் அந்த அதிகாரிகள் வெறும் சம்பளம் மட்டுமே வாங்கிக்கொண்டு, வேலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருப்பர் இதனால் பாதிப்பு யாருக்கு?
அதுவுமின்றி தனக்கு நடக்கும் ஒரு அநியாயத்தை எதிர்த்து போராடக்கூட மனநிலையில்லை அல்லது கூடாது என்றால் இவர்கள் எப்படி இந்திய ஆட்சி பணியை திறம்பட செய்வர்?
நம்மளவில் சரியாக இருக்கும் வேளையில் நிச்சயமாக அலட்சியப்படுத்தப்படுதலை ஏற்றுக்கொண்டு போராடாமல் இருப்பது குறைந்தபட்சம் என்னளவில் ஏற்றுக்கொள்ள இயலாது.
"ஆனால் அந்த அதிகாரிகள் வெறும் சம்பளம் மட்டுமே வாங்கிக்கொண்டு, வேலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருப்பர்"
காத்திருப்பு காலம் சீனியாரிட்டிக்கும் கணக்கு எடுத்து கொள்ளப்படும். வேலை உயர்வு அது பாட்டுக்கு வரும். அத்ற்கு தனி லிஸ்டே உண்டு அவர்களுக்கு.
"நேரடியாக பிரச்சினையை மேலிடத்துக்கு எடுத்துச்சென்றேன், போராடினேன். அதன்பின் எல்லாம் சுமுகமானது." பாராட்டுகள். ஆனால் அதே மாதிரி நிலையில் இருந்தப் பலர் பேசாமல் வேறு வேலை தேடிப் போயினர். கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பல்லவா? ஒவ்வொரு முறை மாறும்போதும் சம்பளம் மற்றும் கௌரவம் அதிகம் பெற்றனர்.
ஐ.டி.பி.எல்லில் நான் இருந்த சமயம் இருந்த எங்கள் தலைமை நிர்வாகி சில வருடங்கள் முன் ஐ.டி.பி.எல்லை விட்டு வெளியேறியவர். பல கம்பெனிகள் தாவி ஒவ்வொரு மாற்றத்தின் போதும் உயர்வு பெற்று, திரும்ப தான் விட்டுச் சென்ற அதே நிறுவனத்தின் தலைவரானவர். அவரும் முதலில் ஐ.டி.பி.எல்லில் ஓரம் கட்டப் பட்டவர். இருந்து போராடியிருந்தால் ஓரிரண்டு பதவி உயர்வுகள் பெற்றிருக்கலாம். நிலைமைக்கேற்ப நடந்து கொள்வதே புத்திசாலித்தனம்.
எது எப்படியானாலும் என் நிலையில் நான் செய்தது எனக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்து, இப்போது ஓய்வு பெற்ற பிறகும் கைவசம் நல்லத் தொழில் உள்ளது. 59 வயது நிறைந்தப் பிறகும் சுறுசுறுப்பாகவே உள்ளேன்! இருக்கும் நிலை எதுவாக இருந்தாலும் அதைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்வதே புத்திசாலித்தனம். "வாடிக்கையாளர்களை அணுகும் முறைகள்" என்னும் என் பதிவில் அதைப் பற்றியும் கூற இருக்கிறேன்.
"அதுவுமின்றி தனக்கு நடக்கும் ஒரு அநியாயத்தை எதிர்த்து போராடக்கூட மனநிலையில்லை அல்லது கூடாது என்றால் இவர்கள் எப்படி இந்திய ஆட்சி பணியை திறம்பட செய்வர்?"
கூடாது என்று கூற யாருக்கு உரிமை? தேவையா என்பதே இங்கு கேள்வி. எப்போதுமே இவர்கள் காத்திருப்பில் இருக்கப் போவதில்லை. அம்மாதிரி இருக்கும் காலங்களில் ரிலேக்ஸ்டாக இருந்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது இருக்கும், ஏனெனில் இவர்கள் தங்களுக்கு செய்து கொள்வது இவர்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நான் ஏற்கெனவே ஓரிடத்தில் குறிப்பிட்டது போலவே, i never want to take things lying down. குழலியின் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு.
"நான் ஏற்கெனவே ஓரிடத்தில் குறிப்பிட்டது போலவே, i never want to take things lying down. குழலியின் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு."
நான் கூறுவதும் அதுதான். நான் மேலும் கூறுவது குத்து வரும்போது தலையை சற்றே விலக்கி தப்பிப்பதே. இதை feinting என்று கூறுவார்கள்.
And for God's sake, who is talking of taking things lying down? Please read this post carefully. I advocate taking advantage of things as they come and this too is a struggle. And I practised it myself. As a result, when I took VRS, I already had a well vetted client list.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வெங்கடேஷ் ஷர்மா அவர்களே,
நீங்கள் கூறுவதுபோல விஷயம் அத்தனை எளிதானதல்ல. இவர் தலித் சமுதாயம் ஆகவே அவ்வாறு செய்யப்படுகிறது என்று எந்த அரசும் வெளிப்படையாகக் கூறாது. தைரியமாக உண்மையைக் கூறும் நேர்மை யாருக்கும் வராது.
பாதிக்கப்பட்டவர்கள் கோர்ட்டுக்குப் போவார்கள் என்பதை அரசும் எதிர்பார்க்கும். அதற்குத் தயாராகவே இருக்கும்.
நான் சொல்லும் வழி யுத்தத்தை நாம் தீர்மானிக்கும் விதிகளின் கீழ் நடத்துவது. கொரில்லாப் போர் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன். அரசு எதிர்பார்ப்பது கோர்ட், கேசு, வாய்தா என்று பாதிக்கப்பட்டவர் அலைய வேண்டுமென்பதே. எதற்கு அரசுக்கு அந்த திருப்தியைத் தரவேண்டும்?
2000 வருடங்களாக உலகில் சென்ற இடமெல்லாம் கொடுமைபடுத்தப்பட்டு ஒடுக்கப்பட்டனர் யூதர்கள். அவர்கள் தங்கள் தனித்துவத்தைக் காப்பாற்றிக் கொண்டாலும் குற்றம், மற்றவர்களுடன் சேர்ந்து வாழ முற்பட்டாலும் குற்றம் என்றே சம்பந்தப்பட்ட அரசுகள் நடந்து வந்திருக்கின்றன. அவர்களுக்குப் பல தொழில்கள் மறுக்கப்பட்டு, அவர்கள் வட்டிக்கு பணம் விடும் தொழிலை மட்டும் அனுமதித்தனர். கடைசியில் அவர்கள் என்ன செய்தனர்? ஒருவரும் எதிர்பார்க்காத, உலக சரித்திரத்திலேயே இதற்கு முன் உதாரணம் கிடையாது என்று சொல்லப்படும் காரியம் செய்தனர். இஸ்ரேல் பிறந்தது.
1945 வரை யூதர்கள் கோழைகள் என்று செய்யப்பட்ட பிரசாரம் மொத்தமாகக் கிழிந்து போனது. இதை நான் இங்கே குறிப்பிடும் காரணமே எதுவும் முடியாதது என்று கிடையாது என்பதே.
எதிரி நினைப்பதை செய்யாதே. அவனுக்கு மோசமான ஆச்சரியங்களைக் கொடு என்பதுதான் யூதர்களின் தாரக மந்திரமாயிற்று.
தலித்துகளின் பிரச்சினை பற்றி இன்னொரு பதிவு போட இருக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தப்பா நினைச்சிக்காதீங்க சார்..
நீங்க சொல்ற போஸ்ட்டிங்க கிடைக்காத காலகட்டத்துல சும்மா இருக்காம உங்க சொந்த வேலைய பார்த்துக்குங்கங்கற லாஜிக்க என்னால ஏத்துக்க முடியலை..
எங்க பேங்க்லயும் இந்த மாதிரி சில பேரை செய்வாங்க. எதுக்குன்னு நினைக்கறீங்க? அவங்கள அவமானப்படுத்தணுங்கற ஒரே நோக்கத்தோட.. பதவி உயர்வு கிடைக்கும். ஆனா ஒன்னுத்துக்கும் பிரயோசனமில்லாத போஸ்ட்ல தூக்கி போட்ருவாங்க.
நீ ஒன்னும் செய்ய வேணாம். சும்மா வீட்ல இருடாங்கறதே ஒரு அவமானம்தானே.. அத பொறுத்துக்கிட்டு எப்படி நம்ம வேலைய பாக்கறது?
வணக்கம் ஜோசஃப் அவர்களே. இதில் தப்பாக நினைத்துக் கொள்ள ஒன்றுமேயில்லை. இப்பதிவின் நோக்கமே தலித்துகள் தங்கள் பிரச்சினையை எதிர்நோக்குவது பற்றித்தான். ஆகவே எல்லாவித கருத்துக்களையும் பார்க்கத்தானே வேண்டும்.
நான் இம்மாதிரி கூற முயற்சிக்கிறேன். தலித்து ஒருவர் பிறவியிலிருந்தே ஒடுக்கப்படுபவர். அவர் மனதில் உறுதி கொள்ள எதிரியை மனத்தளவிலாவது துச்சமாக நினைக்க வேண்டும். அப்போதுதான் அவர் சுயமரியாதை நிற்கும். இவன் என்ன என்னை ஒடுக்குவது, இவன் யோக்கியதை எனக்குத் தெரியாதா என்ற ரேஞ்சில் சிந்தித்தால் தைரியம் பிறக்கும். அதை வெளியில் காண்பிக்காது நீங்கள்பாட்டுக்கு உங்கள் வேலையைப் பார்ப்பதுதான் உங்கள் மனநிலை பாதிக்காமலிருக்கும் வழியாகும்.
அவ்வாறு இருந்ததால்தான் சந்திரகுப்தனால் நந்தர்களை வெற்றி கொள்ள முடிந்தது. எதிராளி எதிர்ப்பார்ப்பதை செய்யாமல் இருந்தாலே அவன் குழம்பிப் போவான்.
மத்தியப் பணித்துறையில் சில ஊழியர்கள் சில மாதங்களில் (ஊரில் அவர்கள் நிலங்களில் அறுவடை காலங்களில்) வேண்டுமென்றே சஸ்பென்ஷன் ஆணை வர ஏற்பாடு செய்து, அறுவடை வேலை முடிந்ததும் சந்தோஷமாகத் திரும்பிவந்து கூறவேண்டிய சமாதானங்களைக் கூறி அரியர்ஸும் பெற்ற கதையெல்லாம் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்தப் பிரச்சினையை குறைத்து மதிப்பிடுகிறேன் என்றோ, நீர்த்துப் போகச் செய்கிறேன் என்றோ, திசை திருப்புகிறேன் என்றோ குற்றம் சாட்ட வேண்டாம்!!!!!
இதைப் படித்தவுடன், பிரச்சினையின் பரிமாணம் என்னை தாகியது என்னவோ உண்மை; ஆனாலும், கூடவே வந்த ஒரு எண்ணத்தைப் பதிக்கிறேண்!
எங்கள் ஊரிலும்[அமெரிக்கா] இது போன்ற 'சும்மா' இருக்கும் மக்கள் உண்டு!
'ப்ரோக்ராமர்ஸ்'[Programers] என்று அழைக்கபடும் இந்த 'neo-தலித்துக்கள்' 'பெஞ்சர்ஸ்' [benchers]என அழைக்கப் படுவார்கள்!!
வேலை இருப்பதாகச் சொல்லி இங்கு வந்த பின்னர், அழைத்து வந்த நிறுவனம், இவர்களுக்குத் தகுந்த வேலை கிடைக்காத வரைக்கும், சும்மாவேனும் பேருக்கு ஒரு சம்பளத்தைக் கொடுத்து, இருக்க இடமும் கொடுத்து 'வெட்டி'யாக வைத்திருப்பார்கள்!
அவர்களுக்கும், உங்களின் உதாரணம் பொருந்தும் என நினைக்கிறேன்!!
அமெரிக்க உதாரணம் இங்கு பொருந்தாது. நம் ஊர் தலித் ஆஃபீசர்கள் வேலை செய்ய அஞ்சாதவர்கள். மிகத் திறமை வாய்ந்தவர்கள். அவர்களைத் தேவையின்றிக் காத்திருப்பில் வைத்து அவமதிப்பதை நானும் ஆட்சேபிக்கிறேன்.
அவர்களுக்கு நான் கூறிய யோசனையும் மன நிம்மதியை இழக்காமலிருப்பதற்காகத்தான். நான் கூறிய வழியும் ஒரு விதப் போராட்டமே. அரசை நேரடியாக எதிர்ப்பதை விட இருக்கும் நிலையைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்வதில்தான் புத்திசாலித்தனமே இருக்கிறது.
போராட்டத்தைக் கூட தங்களுக்கு சாதகமான சூழ்நிலைக்கு மாற்றுவதும் ஒரு போர் யுக்தியே.
நீங்கள் குறிப்பிட்ட பெஞ்சர்ஸ்களுக்கு வேலை கொடுக்காமல் வைத்திருப்பது வேறு வழியின்றி செய்யப்படுவதே. இப்பதிவின் சூழ்நிலை முற்றிலும் மாறுபட்டது.
ஆனால் நீங்கள் கூறியதில் ஒரு உண்மை உண்டு. சும்மா இருக்கும் நேரத்தில் சுய முன்னேற்றத்துக்கான வினைகள் ஆற்றினால் நல்லதே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி தினகர் அவர்களே. நான் கூறியதை சரியான முறையில் புரிந்து கொண்டதற்கு நன்றி.
ஆதர்ச முறையில் செயலாற்ற வேண்டும் என்று கூறும் பலர் அதை மற்றவர்களுக்கு மட்டும் வலியுறுத்துகிறார்கள். அதே நிலைமை தங்களுக்கு வந்தால் ஓசைபடாமல் நான் கூறுவதைத்தான் செய்கிறார்கள். செய்யவும் வேண்டும், இல்லாவிடில் மற்றவர்கள் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்.
நான் போட்ட இப்பதிவையும் இரட்டை டம்ளர் பற்றியப் பதிவையும் படிக்கும் பலரில் பாதிக்கப்பட்ட ஓரிருவராவது எனது யோசனையை செயல்படுத்த முடிந்தால் அதுவே வெற்றிதான் - அவர்களுக்கு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஜெயக்குமார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://jeyakumar777.blogspot.com/2006/04/blog-post_29.html
நாடார்களின் உதாரணம் பின்பற்றத் தக்கது என்பதை நிச்சயம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். முக்கியமாக தலித்துகளுக்கு சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்வது முக்கியம். அதற்குத்தான் முதல் அடியாக இரட்டை டம்ளர் முறை செயல்படுத்தும் டீக்கடைகளைப் புறக்கணிக்க ஆலோசனை கூறி போன வருடமே பதிவு போட்டு சமீபத்தில்தான் மீள் பதிவும் செய்தேன். பின்னூட்டங்களுடன் பார்க்க http://dondu.blogspot.com/2006/03/blog-post_08.html
தலித்துகள் அதிகாரிகளாக வந்தாலும் மரியாதை கிடைப்பதில்லை என்றும் பார்க்கிறோம். இதுவும் கொடுமையே. அதற்கு என்ன செய்யலாம் என்பதற்காகக் நான் அளித்த யோசனை இந்தப் பதிவு. இதுவும் போன ஆண்டு போடப்பட்டு இவ்வாண்டு மீள் பதிவு செய்யப்பட்டது. பின்னூட்டங்களுடன் பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_26.html
அதர் மற்றும் அனானி போன்ற அபாயகரமான ஆப்ஷன்களை நீங்கள் வைத்துள்ளதால் இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காண்பிக்கும் வகையில் இதை என்னுடைய இந்தத் தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_26.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment