3/03/2006

புகார் கடிதங்கள் எழுதுவது பற்றி - 2

புகார் கடிதங்கள் பற்றி நான் ஏற்கனவே இட்ட இந்தப் பதிவில் சுவாரசியமான பின்னூட்டங்கள் வந்திருந்தன. "புகாரை கேட்டு பதில் வந்தால் பரவாயில்லை.ஆட்டோ வரும் நிலை அல்லவா தற்போது இருக்கிறது?" என்று நாட்டாமை அவர்கள் கேட்டிருந்தார். பல நேரங்களில் அது உண்மையே. அதற்கு சில அடாவடி காரியங்கள் செய்ய வேண்டும். அதைப் பற்றிப் பிறகு.

ஒருவரிடம் நாம் ஒரு காரியம் செய்து தருமாறு கேட்கிறோம். அதை எப்படிக் கேட்பது? அந்தக் காரியத்தை நமக்கு செய்து தருவதில் சம்பந்தப்பட்ட ஆளுடைய நலனும் அடங்கியிருக்கிறது என்பதை தெளிவுபட அவருக்கு காட்டுவது ஒரு நல்ல வழி என்று டேல் கார்னகி 1930களிலேயே கூறிவிட்டார்.

இதற்கு உதாரணமாக நான் எழுதிய ஒரு புகார் கடிதத்தைப் பற்றிக் கூறுவேன். எழுபதுகளில் ஒரு நாள் எக்மோரில் பஸ் பிடித்து தியாகராய நகர் சென்றேன். பஸ்ஸில் ஏறி, முன்னால் ஒரு வரிசையில் சீட் காலியாக இருக்க அதில் போய் உட்கார்ந்தேன். டிக்கட் வாங்க கண்டக்டர் எங்கே என்றுபார்த்தால் அவர் பின்னால் தன் சீட்டில் உட்கார்ந்து பாக்கு மென்றுக் கொண்டிருந்தார். அப்போதெல்லாம் கண்டக்டர்கள் பஸ்ஸில் முன்னும் பின்னும் சென்று டிக்கட் தரவேண்டும் என்பது அவர்கள் கடமைகளில் ஒன்றாக இருந்தது. கண்டக்டரிடம் நான் உட்கார்ந்த இடத்திலிருந்து கொண்டு டிக்கட் தருமாறு குரல் கொடுக்க அவர் என்னைக் கண்டுகொள்ளாமல் தன் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். இரண்டு மூன்று முறை கேட்டும் அவர் அசைவதாகத் தெரியவில்லை. இன்னும் ஒரு முறை கேட்ட போது அலட்சியமாக அவர் என்னிடம் வேண்டுமென்றால் அவர் இடத்திற்கு வந்து டிக்கெட் வாங்கிக் கொள்ளுமாறு கூறிவிட்டார். எழுந்து சென்றால் சீட் பறிபோய்விடும் என்ற நிலை, ஏனெனில் நிறைய பேர் நின்று கொண்டிருந்தனர். நிலைமை சற்று மோசமாயிற்று. என் பக்கத்தில் இருந்தவர் என்னிடம் அந்த குறிப்பிட்ட கண்டக்டர் அப்படித்தான் எல்லோரிடமும் நடந்து கொள்கிறார் என்று கூறிவருத்தப்பட்டார். நான் ஒன்று செய்தேன், டிக்கட் வாங்கவில்லை. கண்டக்டரிடம் அவர் வந்துதான் தர வேண்டும் என்றுகூறி அமர்ந்து விட்டேன். அவரும் வர மறுத்து விட்டார். அதற்குள் தி.நகர் பாண்டிபஜார் நிறுத்தம் வர, டிக்கட் வாங்காமலேயே இறங்கிவிட்டேன். நடுவில் செக்கிங்க் வந்திருந்தால் என் பாடு திண்டாட்டமாக இருந்திருக்கும். பத்து ரூபாய் அபராதம் கட்ட வரவேண்டியிருந்திருக்கும். இருந்தாலும் அந்த ரிஸ்கை தெரிந்தே எடுத்தேன்.

இப்போது செய்ததுதான் உச்சக் கட்டம். டிக்கட்டின் விலை வெறும் 25 பைசா மட்டுமே. நேரே தி.நகர் தலைமை தபால் நிலையம் சென்று 50 பைசாவுக்கு ஒரு போஸ்டல் ஆர்டர் வாங்கினேன். அதை க்ராஸ் செய்து பல்லவன் போக்குவரத்துக் கழகம் பெயரை நிரப்பினேன். பல்லவன் தலைமை அலுவலகத்துக்கு புகார் கடிதத்துடன் போஸ்டல் ஆர்டரையும் இணைத்தேன். புகார் கடிதத்தில் நடந்தது நடந்தபடி கூறினேன். கண்டக்டருக்கும் எனக்கும் இது ஒரு கௌரவப் பிரச்சினையாக ஆனதை வருத்தத்துடன் குறிப்பிட்டுவிட்டு, என் செயலுக்கு மன்னிப்பு கேட்டு, டிக்கட் விலை 25 பைசா அபாராதம் 25 பைசா என்றக் கணக்கில் போஸ்டல் ஆர்டர் அனுப்புவதாக குறிப்பிட்டேன். பஸ் ரூட் எண், நிகழ்ச்சி நடந்த நேரம் எல்லாம் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன்.

இரண்டே நாட்களில் பதில் வந்தது. அந்தக் கண்டக்டரை எழுத்துமூலம் கண்டித்ததாகக் கூறப்பட்டிருந்தது. எனக்கு நடந்த நிகழ்ச்சிக்கு வருத்தமும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் என்ன விசேஷம் என்றால் கண்டக்டரின் செயலால் ஒருவர் டிக்கெட் வாங்காமல் சென்றார், இதையே பலரிடமும் செய்திருந்தால் பல்லவனுக்கு வரும் நட்டம் என்னவாயிருக்கும் என்ற ரேஞ்சில்தான் நான் அதைக் குறிப்பிடாமல் இருந்தாலும் நிர்வாகத்தினரின் சிந்தனை இருந்திருக்க வேண்டும். ஆக, என் புகார் மேல் நடவடிக்கை எடுப்பது பல்லவனின் நலனுக்கு ஏற்புடையதே.

இப்போது நாட்டாமை அவர்கள் கூறியதற்கு வருவோம். மேலே கூறிய நிகழ்ச்சி இப்போது நடந்திருந்தால் நான் முந்தைய மாதிரி நடந்து கொண்டிருக்கமாட்டேன். அப்போது இளவயசு, விளைவுகளைப் பற்றி ரொம்ப கவலைப்படவில்லை. இப்போது அப்படியா? இப்போது என் பெயர் விலாசம் குறிப்பிடாமல் போஸ்டல் ஆர்டரை அனுப்பி, அதே கடிதத்தை எழுதியிருப்பேன். மொட்டைக் கடுதாசிகளுக்கு அவ்வளவு மரியாதை இல்லையென்றாலும், தங்கள் வருமானம் போகிறது என்று நிறுவனம் நினைத்தால் கண்டிப்பாக நடவடிக்கை இருக்கும்.

இந்த இடத்தில் என் நண்பர் அரோரா அவ்ர்கள் நினைவுக்கு வருகிறார். அவர் சென்னைக்கு டூர் வந்திருக்கிறார். வந்த இடத்தில் பஸ்ஸில் அவர் பர்ஸை ஜேப்படி செய்துவிட்டார்கள். அவர் குய்யோ முறையோ என ஊரைக் கூட்டி தன் பர்ஸில் 500 ரூபாய் நோட்டுகளாக பத்தாயிரம் ரூபாய்கள் வரை வைத்திருந்ததாகக் கூறி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார், நானும் அவர் ஹிந்தியில் கூறியதை தமிழில் மொழிபெயர்த்து கூற பஸ்ஸில் ஒரே கலாட்டா.

பஸ்ஸிலிருந்து இறங்கி அவர் தில்லி திரும்பச் செல்வதற்காக சென்ட்ரல் சென்றார். நானும் அவர் கூடவே சென்று போலீஸ் புகார் கொடுக்கச் சொன்னதற்கு, அவர் சிரித்துக் கொண்டே, பர்ஸில் ரூபாய் ஒன்றும் இல்லை என்றும் சில பில்கள் மட்டும் இருந்ததாகவும் கூறி, பணம் தன் உள்பையில் பத்திரமாக இருந்ததாகக் கூற, எனக்கு ஒரே திகைப்பு. ஏன் அவ்வாறு பஸ்ஸில் கத்தினார் என்று கேட்டப்போது ஜேப்படி செய்பவர்கள் போலிஸுக்கு மாமூல் கொடுக்க வேண்டியிருக்கும், சக ஜேப்படித் திருடர்களுக்கும் பங்கு தர வேண்டியிருக்கும் என்றும், அவர் பர்ஸை கொள்ளையடித்த அந்த அப்பன் பெயர் தெரியாத பயல் பத்தாயிரம் ரூபாய்க்கேற்ப போலீஸ் மாமூலைக் கொடுத்து சாகட்டும் என்று கூறிவிட்டு ரயிலேறினார். அவர் வெளியூர்க்காரர், அவர் வீட்டுக்கு எல்லாம் ஆட்டோ அனுப்பமுடியாது அல்லவா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

10 comments:

வெளிகண்ட நாதர் said...

பல்லவன் டிக்கெட்டுக்கு காசு, அபராதம் அனுப்பி, எப்படி புகார் செய்வது என்பதை அழகாக கூறினீர்கள்! நேர்மையற்ற சமுதாயத்திற்கு இது போன்ற குறுக்கு புத்தி சிந்தனைகளோடு கூடிய அணுகுமுறை சரியே!

dondu(#11168674346665545885) said...

நீங்கள் கூறுவது முற்றும் சரி நாட்டாமை அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

எந்த நிறுவனமுமே தனக்கு பொருளாதார ரீதியில் நட்டம் வருமென்றால் உடனே செயல்படுவார்கள் என்பது எதிர்ப்பார்ர்க்கக் கூடியதே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பழூர் கார்த்தி said...

//எந்த நிறுவனமுமே தனக்கு பொருளாதார ரீதியில் நட்டம் வருமென்றால் உடனே செயல்படுவார்கள் //

மிகச்சரியானது உங்கள் கூற்று.. இருப்பினும் மக்கள் (என்னையும் சேர்த்து) அநீதி காணுமிடத்தில் எல்லாம் இம்மாதிரி துணிந்து புகார் கூற முன்வர வேண்டும்.. குறைகள் பார்வைக்கு வரும்போது நிறுவனங்கள் அதைக் களைய முயற்சிக்கலாம்...

dondu(#11168674346665545885) said...

மிக்கச் சரி சோம்பேறி பையன் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி கந்தன் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அருள் குமார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட ஒரு பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. அதன் நகலை இங்கே இட வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நகல் எடுக்கும் முன்னாலேயே பப்ளிஷ் பட்டனை அழுத்தி விட்டேன்.

பார்க்க: http://whatiwanttosayis.blogspot.com/2006/03/blog-post.html
அன்புடன்,
டோண்டு ராகவன்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

இந்தப்பதிவு பற்றி யாருகிட்ட புகார் கொடுக்கணும்.. :)

dondu(#11168674346665545885) said...

வாங்க ஞானியார் ரசிகவ் அவர்களே,

இந்தப் பதிவைப் பற்றிப் புகார் எழுத வேண்டுமானால் போலி டோண்டுதான் சரியான நபர் ஆலோசனை பெறுவதற்கு. இதுவரை அவன் எவ்வளவோ தலைகீழாக தண்ணியெல்லாம் குடித்துப் பார்த்து விட்டான் ஆனாலும் ஜெயிக்கவில்லை.

அப்படியும் அவன் ஆலோசனை நல்லதுதான், ஏனெனில் அவன் கடை பிடித்த வழிகளை அறிந்து அவை வெற்றி பெறாது என்பதை முன்னமேயே தெரிந்து அவற்றை எலிமினேட் செய்து விடலாம் அல்லவா, ஹி ஹி ஹி.

எப்படியும் இன்னும் சில நிமிடங்களில் அவன் உங்களுக்கு 'அன்புடன்' செந்தமிழில் மின்னஞ்சல் அனுப்புவான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

அருள் குமார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட ஒரு பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://whatiwanttosayis.blogspot.com/2006/03/blog-post.html

"இனி அப்படிச் செய்வதை வழக்கமாக்கிக் கொள்கிறேன். நம்மால் முடிந்த சிலவற்றையாவது செய்யவேண்டுமல்லவா."

இதற்கு என்று நல்ல நாளா பார்ப்பது? எப்போதோ என்ன இப்போதே செய்யவும் என்று உங்களிடம் கூற என் என் உள்ளம்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் எனக்கு ஆணையிட்டு விட்டான்.

முன்வரைவுக் கடிதம் இதோ:

To,
The Commissioner of Police (Traffic),
Chennai Cioty Police,
Egmore.

Sir,

Sub: Dangerous situation prevailing in .......(fill up the place, with clear location indication)

There is an accident waiting to happen as can be seen from the photo enclosed with this letter, which is self explanatory.

You need not take my word at face value. Kindly have this independently confirmed by deputing a responsible official to the site. I request immediate remedial action on your part.

Encl: One photo
Thanking you,
Yours faithfully,
(Your signature)
CC:
1. Ms. Jayalalitha Jayaram, Hon. Chief Minister, Tamil Nadu, Fort St.George, Chennai
2. His Excellency The Governor, Tamil Nadu, Raj Bhavan, Guindy, Chennai - 32.

பின் குறிப்பு:
இந்தப் பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட ஏதுவாக அதன் நிகலை நான் என்னுடைய இப்பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது