1/21/2007

மாநகராட்சி மறுதேர்தல்

நான் இட்ட இந்தப் பதிவிலும், அதையே எக்ஸ்டண்ட் செய்த இன்னொரு பதிவிலும் எழுதியதை மீண்டும் பாருங்கள். ஒரு நல்ல கூட்டணி அமைத்திருந்த நிலையில் சர்வ சாதாரணமாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய சென்னை மாநகராட்சி தேர்தலைத் தேவையின்றி கேலிக் கூத்தாக்கியதற்கு முதல்வர் கருணாநிதிதான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். பிரும்மாஸ்திரத்தை தாம்புக் கயிறு கட்டி சொதப்பி விட்டார்.

இப்போது இவராகவே முன் வந்து 99 வார்டுகளில் தங்கள் கூட்டணி கட்சியினர் ராஜினாமா செய்வார்கள் என்று அறிவிப்பு செய்ததைப்பார்த்தால், எனது இப்பதிவில் நான் இட்ட ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்ட, விகடனில் சமீபத்தில் 1961-ல் வந்த துணுக்கு ஞாபகத்துக்கு வருகிறது. அப்பா பையனிடம் மனசாட்சி என்றால் என்ன என்று கேட்க, பையன், தான் செய்த தவறு தங்கச்சிக்குத் தெரியவர, அவள் அதை அப்பாவிடம் போட்டுக் கொடுக்கும் முன்னாலேயே தானே அப்பாவிடம் அதைக் கூறச் செய்வதுதான் மனசாட்சி என்கிறான்.

அதாவது ஒரு நீதிபதி மட்டும்தான் ஊழல் என்றாராம் இன்னொருவர் வழக்கைத் தள்ளுபடி செய்து விட்டாராம். என்ன ஜல்லி பாருங்கள். இன்னொருவர் டெக்னிகலான காரணத்துக்காக வழக்கைத் தள்ளுபடி செய்தார் அவ்வளவே. இன்னும் மூன்றாவது நீதிபதி வரவிருக்கிறாராம், அப்பீல் வேறு இருக்கிறதாம், இருந்தாலும் ராஜினாமா செய்கிறாராம். அடாடா என்ன பெருந்தன்மை. கண்ணேறுதான் கழிக்க வேண்டும். மூன்றாம் நீதிபதி என்ன கூறுவார் என்பதை ஊகிக்க பெரிய அறிவு எல்லாம் தேவையில்லை. ஆகவே வேக வேகமாக மனசாட்சி வேலை செய்து விட்டது. இந்த அழகில் 98 பேர்தான் ராஜினாமா செய்தனர். ஒருவர் பெப்பே காட்டி விட்டார்.

அதிலும் எப்படிப்பட்ட மனசாட்சி பாருங்கள். தேர்தலில் கூட்டணியாக போட்டியிட்டு விட்டு பிறகு துளிகூட வெட்கமேயில்லாது தன் கட்சி மட்டும் ஆட்சியமைத்து, அவசரம் அவசரமாக அத்தனை துறைகளுக்கும் அமைச்சர்களை போட்டு, அவர்களில் தன் மகனையும் போட்டு என்றெல்லாம் நடந்து கொண்டவர் இப்போது ராஜினாமா செய்ய மட்டும் கூட்டணி என்று உதார் விடுவது எதில் சேர்த்தி? கல்யாணப் பந்தியில் உட்கார்ந்து உணவு உண்ணும்போது தனக்கு பாயசம் வேண்டாம் (சர்க்கரை நோயாளி) அடுத்த இலைகளுக்கும் சேர்த்து வேண்டாம் என்று கூறுவது போல இல்லை?

நான் நினைக்கிறேன் கருணாநிதி அவர்களே ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது உள்ளாட்சித் துறைக்கான மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும். சம்ப்ந்தப்பட்ட தமிழக தேர்தல் அதிகாரி, கடமை செய்யத் தவறிய போலீஸ் அதிகாரிகள் எல்லோர் மேலும் நடவடிக்கை தேவை.

கருணாநிதி அவர்களது ஆட்சி காலத்தில் சமீபத்தில் 1972-ல் மஸ்டர் ரோல் ஊழல் கண்டுபிடிக்கப்பட்டு சென்னை மாநகராட்சியையே கலைக்க வேண்டியதாயிற்று. அதற்கு பிறகு முறையான உள்ளாட்சித் தேர்தல் வர பல ஆண்டுகள் பிடித்தன. இப்போது என்ன ஆகுமோ என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

2001, 2006 இவ்விரு ஆண்டுகளிலுமே நடந்தவற்றுக்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே பொறுப்பு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

23 comments:

dondu(#11168674346665545885) said...

எதற்கு இந்த கைக்கூப்பல் செந்தழல் ரவி அவர்களே? :))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்குறிப்பு: அல்லது வேறு ஏதாவது கூற விரும்பினீர்களா?

bala said...

_/\_

டோண்டு அய்யா,

செந்தழல் ரவி அய்யா என்ன சொல்லவராரு? இப்படி எதிர்பார்ப்பு இருந்தா, கருணாநிதி அய்யா மக்களுக்கு நாமம் தான் போடுவார் என்றா?

பாலா

dondu(#11168674346665545885) said...

நாமத்தின் ஷேப் இது இல்லையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

bala said...

டோண்டு அய்யா,

நானும் யோசிச்சேன்.ரவி அய்யா பொடி வச்சி சொல்லியிருக்கார்.மக்கள் தலை கீழா நின்னாலும் கருணாநிதி அய்யா வெட்கப் பட்டு ராஜினாமா செய்ய மாட்டார்,நாமம் தான் போடுவார்னு சொல்றாரோன்னு தோணுதய்யா.தலைகீழா இருந்தா நாமம் இப்படி இருக்கலாமில்லே?
ரவி அய்யாவும் மக்களுக்கு நாமம் போட்டே உடல் வளர்க்கும் கும்பலுக்கு ஜால்ரா போடறவர் தானே.அதான் சந்தேகம்.

பாலா

dondu(#11168674346665545885) said...

"தலைகீழா இருந்தா நாமம் இப்படி இருக்கலாமில்லே?"

என்ன இண்டர்ப்ரெட்டேஷன்? இதுக்கென்னே ஒக்காந்து யோசிப்பீங்களா? :)))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

"நான் நினைக்கிறேன் கருணாநிதி அவர்களே ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது உள்ளாட்சித் துறைக்கான மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும்."

இரண்டாமவர் யார்? அது இருக்கட்டும், இவ்வாறு மறுதேர்தல் நடக்கிறதே, அதன் செலவு யார் செய்வது? நம் வரிப்பணம்தானே?

முனிவேலு

Madhu Ramanujam said...

"தலைகீழா இருந்தா நாமம் இப்படி இருக்கலாமில்லே?"

கலக்கிட்டீங்க பாலா...அதெப்படி உங்களால மட்டும் ?!?

டோண்டு சார்...மீண்டும் ஒரு நல்ல பதிவு...

இந்த மாதிரி தரமற்ற அரசியல்வாதிகளைக் கட்டிக் கொண்டு அழ வேண்டுமென்று நமக்கு தலையெழுத்து போல...

Madhu Ramanujam said...

//"நான் நினைக்கிறேன் கருணாநிதி அவர்களே ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது உள்ளாட்சித் துறைக்கான மந்திரி ராஜினாமா செய்ய வேண்டும்."

இரண்டாமவர் யார்? அது இருக்கட்டும், இவ்வாறு மறுதேர்தல் நடக்கிறதே, அதன் செலவு யார் செய்வது? நம் வரிப்பணம்தானே? //

முனிவேலு,

உங்களுக்கு விஷயமே புரிய மாட்டேங்குது. இவனுக காலை எழுந்ததும் தேய்க்கிற பல்லு குச்சியிலேர்ந்து ராத்திரி அடிக்கிற சரக்கு வரை எல்லாம் நம்ம காசு தான். இதை எல்லாம் கணக்கு பார்த்தா .... யம்மா தலை சுத்துது. இதுக்கு மேலயும் இங்க எழுதினா படிக்க நல்லா இருக்காது. இருங்க இதுக்காக ஒரு தனி பதிவே போடுறேன்.

Anonymous said...

"இருங்க இதுக்காக ஒரு தனி பதிவே போடுறேன்."
Looking forward to that Mr.Madhusudhan.

Thangamma

Madhu Ramanujam said...

தங்கம்மா...

நிச்சயம் எழுதுறேன்...அதுவரை நம்ம வலைப்பூவில் உள்ள மிச்ச பதிவுகளைப் படித்துக் கொண்டிருங்கள்.

dondu(#11168674346665545885) said...

I have edited Hariharan's post.

டோண்டுசார்,

கருணாநிதியின் அரசியல் சாணக்கியத்தனம் = கூட்டணிக் கொள்கை

கருணாநிதியின் கொளுகை நேர்மை = மஞ்சள் துண்டு+சாய்பாபா தரிசனம்

மணலைக் கயிறாகத்திரிப்பது=
மனச்சாட்சியோடு கருணாநிதி நடப்பது

கல்லுல நார் உரிப்பது = கருணாநிதி பதவியை ராஜினாமா செய்வது

மாநகராட்சித் தேர்தலில் கருணாநிதி எங்கே வன்முறையைக் கட்டவிழ்தார்?
சிறையிலிருக்கும் உடன்பிறப்புக்களுக்குத் தந்தருளுய வேலைவாய்ப்பு அல்லவா அது?

ரவுடிகள் மனிதர்கள் இல்லையா? ரவுடிகளின் வேலைவாய்ப்பைப் பெருக்குவது கருணாநிதியின் இஷ்டமான, மனநிறைவு தரும் செயல்.

(காமராஜருக்கு பள்ளிக்கூடம் திறந்தது மனநிறைவான செயல், எம்ஜிஆருக்கு பள்ளிக்குழந்தைகளுக்கு சத்தான மதிய உணவுத்திட்டம் மனநிறைவான செயல்)

dondu(#11168674346665545885) said...

"அதிமுக வந்தால் மேயர் மலேசியாவில் ஒளிந்து கொண்டு இருப்பார்."

:)))

உண்மைதான். நான் ஏற்கனவே கூறியபடி தன்னால் இயல்பாக ஜெயித்திருக்கக் கூடிய தேர்தலை திமுகாவே சொதப்பியது. இதனால் எவ்வளவு பொருள் நட்டம்?

மற்றப்படி திமுக இந்த நகராட்சி தேர்தலில் வெற்றி பெறுவதே நலம். மேம்பால ஊழல் என்று ஜெ எவ்வளவோ தலைகீழாக நின்றாலும் அதில் ஒன்றையும் கண்டுபிடிக்க இயலவில்லையே.

இப்போதைய நிலையில் மாநகராட்சிக்கு திமுக வருவதே சரி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

முதலில் தேர்தலில் கூட்டணியாக போட்டியிடுவதை தடைச் செய்ய சட்டம் கொண்டு வரவேண்டும்.

எப்படி நம்ம யோசனை?

dondu(#11168674346665545885) said...

"தவறு செய்து விட்டார்கள் திமுக அதை வெளிபடையாக ஒத்து கொண்டு தேர்தலை சந்திக்க தயார் என வீரமாக சொல்லி விட்டார்கள்."
எங்கு ஒத்து கொண்டார்கள்? இங்கு செய்தது டேமேஜ் லிமிட்டிங்க் செயல்பாடுதான். நேர்மை இல்லை. இருந்தாலும் மாநகராட்சிக்கு இப்போதைய சூழ்நிலையிலவர்கள்தான் வரவேண்டும் என்பது வேறு விஷயம்.

அடுத்த துக்ளக்கை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன். மேலும் தெளிவுகள் எனக்கு பிறக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"முதலில் தேர்தலில் கூட்டணியாக போட்டியிடுவதை தடைச் செய்ய சட்டம் கொண்டு வரவேண்டும்."

ஏன்?

Anonymous said...

//"முதலில் தேர்தலில் கூட்டணியாக போட்டியிடுவதை தடைச் செய்ய சட்டம் கொண்டு வரவேண்டும்."

ஏன்?//

கூட்டணி என்ற பெயரில் எத்தணை கூத்துக்கள் நடக்கின்றன!..

தனிப் பெறும்பாண்மை இல்லாத பட்சத்தில் கட்சி எதற்கு? கொள்கை எதற்கு?

இவர்கள் அனைவரின் கொள்கையே, எப்பொழுதுமே ஆளும் கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதுதான்.

இதற்கு பா.ம.க நல்ல உதாரணம்.

"கூட்டணி" வைக்காதவரை தே.மு.தி.க நல்ல கட்சி. கூட்டணி என்று வந்துவிட்டால், பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று....

dondu(#11168674346665545885) said...

"தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் செய்ய முடியாத செயல்கள் திமுக ஆட்சியில் சர்வசாதரணமாக செய்ய முடிகிறது."

ஆம், தீவிரவாதம் திமுக ஆட்சியில் வெற்றிபெறுவதைப்போல ஜெயின் ஆட்சியில் வெற்றி பெறாதுதான். நம்பிக்கை துரோகம் செய்து தமிழகத்தையே சுடுகாடாக்கும் புலிகளும் அதிமுக ஆட்சியில் வளரவில்லை.

இந்த இருகாரணங்கள் மட்டுமே சோ ஜெயை ஆதரிப்பதற்கான அடிப்படை. எனது நிலையும் சோவின் நிலைதான்.

மற்றப்படி ஊழலில் இருவருமே சிறந்தவர்கள். ஜெயின் வேறு சிறப்புகளில் முக்கியமானது எல்லோரையும் வற்புறுத்தி மழைநீர் சேமிப்பு திட்டத்தில் பங்கு பெற செய்தார். கருணாநிதியால் அதை நிச்சயம் செய்திருக்க முடியாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நீங்கள் கூறுவதில் பல உண்மைகள் உண்டு முகில் அவர்களே. ஆனால் யோசனைகள் (சட்டத் திருத்தம்) இப்போதைய நிலையில் சாத்தியமானவை அல்ல.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

புலிகள் நம்பிக்கை துரோகிகள் என்பதை சோ அவர்கள் முதலிலேயே கண்டு கொண்டவர். எண்பதுகளில் தமிழகமே புலிகளை ஆதரித்தது. எல்லாவற்றையும் அவர்களாகக் கெடுத்துக் கொண்டார்கள். பேச்சு வார்த்தைக்கு வருவதாக பாவலா காட்டி வந்தவர்கள் அமிர்தலிங்கத்தை போட்டு தள்ளியது பச்சை நம்பிக்கை துரோகம். அவ்வாறு செய்து தங்கள் நம்பகத் தன்மையை அவர்களே போக்கிக் கொண்டனர்.

இந்திய அமைதிப்படை விஷயத்தில் சில குளறுபடிகள் நடந்தன. தமிழ் தெரியாத அதிகாரிகளை நியமித்தது முதல் தவறு. புலிகளும் சும்மா இல்லை. பெண்கள் மற்றும் குழந்தைகளையும் குண்டு வீசும் செயல்பாடுகளில் தாராளமாக பயன்படுத்தினர். ராஜீவை கொன்றது முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம்.
அதற்கு பிறகு இந்திய ஆதரவை எதிர்நோக்குவது அதைவிட வடிக்கட்டிய முட்டாள்தனம்.

அவர்கள் சங்காத்தமே வேண்டாம் என்று இருப்பதைத்தான் சோ சிபாரிசு செய்கிறார். நான் அதை 100% ஆதரிக்கிறேன்.

ஸ்ரீலங்கா விவகாரத்தில் நாம் ஒதுங்கி இருப்பதுதான் இந்திய நலனுக்கு உகந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

சோ ஒரு இந்தியனாய் புலிகளை எதிர்த்திருக்கலாம். ராஜிவ் கொலையால் இந்த முடிவா?

அதற்குமுன் ஆதரித்தாரா? எனக்குத் தெரியவில்லை..(தெரிந்தவர்கள் விளக்கவும்)

என்னைக் கேட்டால் ராஜிவை பாதுகாக்க தவறிய தி.மு.க-வோடு காங்கிரஸே ஒத்து போகும்போது, சோ போன்றவர்கள் புலிகளுக்கு ஆதரவளிக்கலாம்!

dondu(#11168674346665545885) said...

"அதற்குமுன் ஆதரித்தாரா? எனக்குத் தெரியவில்லை..(தெரிந்தவர்கள் விளக்கவும்)"

அதுதான் மேலேயே குறிப்பிட்டிருக்கிறேனே. சோ ஆரம்பம் முதலே புலிகளை எதிர்த்தவர். ராஜீவின் கொலைக்குப் பிறகு தமிழகமே எதிர்த்தது என்பது வேறு விஷயம்.

அமைதிப்படையில் தமிழ் தெரியாத ஆட்களை நியமித்தது இந்திய அரசு செய்த தவறு. மேலும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை இன்ஸ்ட்ரக்ஷ்ன்களில் தெளிவு இல்லை. பல நேரங்களில் இருட்டில் கத்தி வீசும் நிலைதான் ஏற்பட்டது.

புலிகளே பிரேமதாசாவுடன் சேர்ந்து கொண்டு தங்கள் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிடக் கூடாது என்று கூறினர்.

இந்தியாவும் அவர்கள் சங்காத்தமே வேண்டாம் என்று உள்ளது.

இப்போது சோ கூறுவது என்னவென்றால் தெரிந்தே நாம் புலிகள் விரிக்கும் வலையில் விழக்கூடாது என்பதே. அதை நான் முழுக்க புரிந்து கொண்டு ஆதரிக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"இவர்களுக்கு சாயி எப்படி இம்புட்டு பணம் சம்பாதிக்கிறான் என்று தெரிந்து கொள்ளதான் இந்த நாடகம்."

எனக்கு சாய்பாபா மேல் பக்தியெல்லாம் கிடையாது. இருப்பினும் அவர் பல நல்ல காரியங்கள் செய்துள்ளார் என்பதால் அவர்மாட்டு நன்றி உணர்ச்சி உண்டு.

அதே போல தமிழக முதல்வராக இருந்து கொண்டு கருணாநிதி அவர்களும் நன்றியைக் காட்டியிருக்கலாம் அல்லவா.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

"ஆனால் மஞ்சா துண்டுக்கு திடிர் என்று இப்ப மட்டும் நன்றி உணர்ச்சி வருவதில்தான் சந்தேகம்."
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தேன்னு ரஜனி குரலில் கலைஞர் பேஸினால் எப்ப்டி இருக்கும்?

"ஆனால் சாயி பாபா செய்வது போல மற்ற நிறுவனங்களும் செய்து வருகின்றன. eg. 1.நாராயன ஹிருத்யாலயா, 2.அரவிந்த் கண் மருத்துவமனை. அதனால சாயி பாபா ஒன்னும் ரொம்ப பெருசா செய்யவில்லை."
அலட்டிக் கொள்ளாமல் பேரிடர் தருணங்களில் நம்ம ஆர்.எஸ்.எஸ். செய்வதை விடவா? தேசபக்தியுடைய அந்த அமைப்புக்கு நன்றி கூறாமல் அவதூறு செய்கிறார்களே, நம்ம போலி மத சார்பற்ற வியாதிகள்.

ஆனால் அரசாங்க நிர்வாகம் என்னவோ எப்போது பேரிடர்கள் ஏற்பட்டாலும் இந்த அமைப்புக்குத்தான் முதலில் அவசர அழைப்பு அனுப்புகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது