10/16/2006

ராமாயணத்திலிருந்து ஒரு காட்சி

காகுத்தனுக்காக அன்னை சீதா பிராட்டியாரைத் தேடி அனுமன் கடலைத் தாண்டி இலங்கை வருகிறான். தடுத்த லங்கையின் காவல் தெய்வத்தை தோற்கடித்து உள்ளே பிரவேசிக்கிறான். ஒரு சிறு குரங்கு ரூபமெடுத்து ஒவ்வொரு இடமாக சீதா பிராட்டியார் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை நாடுகிறான். கடைசியில் அசோக வனத்துக்கு வருகிறான். சீதா பிராட்டியாரை சந்தித்துப் பேசி, காகுத்தன் கொடுத்தக் கணையாழியை அவரிடம் அளித்து, பதிலுக்கு ராம பிரானிடம் "கண்டேன் சீதையை" என்று பின்னால் கூற ஏதுவாக சீதா பிராட்டியாரிடமிருந்து சூடாமணியை பெறுகிறான்.

வந்த வேலை முடிந்தது. ஆனால் ஒரு நெருடல் பாக்கி இருக்கிறதே. சீதா பிராட்டியாரைத் தான் விஸ்வரூபம் எடுத்து தன் முதுகில் ஏற்றி ராமபிரானிடம் சேர்ப்பிப்பதாகச் சொன்ன யோசனையை சீதா தேவி அது தன் கணவனுக்கு இழுக்கு என்று மறுத்து விட்டார். சற்றே கையறு நிலையில் இருப்பதாக உணர்கிறான் ராமதூதனாகிய அனுமன். "சரி, இந்த ராட்சஸப் பசங்களை சற்று விசாரித்து விட்டுச் செல்வோம்" எனத் தீர்மானிக்கிறான். சடசடவென்று மரங்களை முறித்துப் போடுகிறான். காவல்காரர்களை ஆத்திரம் தீர அடித்து விரட்டுகிறான். அவர்கள் குய்யோ முறையோ எனக் கத்திக் கொண்டு அரசனிடம் தகவல் சொல்ல ஓடுகின்றனர்.

ராவணனின் வீரர்கள் ஒவ்வொருவராக பரலோகம் செல்கின்றனர். ராவணனது அருமை மகன் அட்சயக் குமாரனும் மாள்கிறான். அப்போது போருக்கு வருகிறான், மேகநாதனாகிய இந்திரசித்து. அனுமன் மேல் விடும் அம்புகளை அனுமன் அனாயாசமாக தவிர்த்து பறக்கிறான். மேலிருந்து பாறை, பிடுங்கப்பட்ட மரங்கள் என்றெல்லாம் படையினர் மேல் போட்டு துவம்சம் செய்கிறான் அனுமன். இந்திரசித்து செய்வதறியாது திகைக்கிறான். பிறகு சுதாரித்து பிரும்மாஸ்திரத்தை விடுகிறான். வருவது பிரம்மாஸ்திரம் என்பதைக் கண்டு அனுமன் மரியாதையுடன் கைகூப்ப அவனை அஸ்திரம் கட்டிப் போட்டு தரையில் தள்ளுகிறது. அனுமனுக்குக் கிடைத்த வரத்தின்படி அது அவனை ஒரு முகூர்த்த காலம்தான் கட்டுப்படுத்தும். அது அவனைத் தவிர மற்றவருக்குத் தெரியாது. ஆகவே அவன் கவலையின்றி இருக்கிறான்.

அரக்கர்களுக்கோ கும்மாளம். அகப்பட்டுக் கொண்டது துஷ்டக் குரங்கு என்று ஆர்ப்பரித்து, அனுமனை மேஎலும் கயிற்றினால் கட்டுகின்றனர். அதைப் பார்த்த இந்திரசித்து தலையில் அடித்துக் கொள்கிறான். "அட இந்த முட்டாப் பசங்க செஞ்ச வேலைய என்னான்னு சொல்லுறது" என்று கவுண்டமணி ரேஞ்சுக்கு புலம்புகிறான். விஷயம் என்னவென்றால், பிரும்மாஸ்திரம் செயலில் இருக்கும்போது, அதன் மேல் வேறு அதிகப்படியான கயிற்றைக் கொண்டு வந்து கட்டினால், பிரும்மாஸ்திரம் தானே விலகி விடும் என்பதே. அனுமனுக்கும் அது தெரியும், இருப்பினும் பேசாமல் இருந்து இந்திரசித்தை மேலும் டென்ஷனாக்குகிறான்.

இப்போது இந்தக் காட்சி ஏன் என் ஞாபகத்துக்கு வரவேண்டும்?

ஏற்கனவே பலமான நிலையில் உள்ள ஆளும் கட்சிக் கூட்டணி தேவையில்லாமல் தேர்தலில் ஏன் தில்லுமுல்லு செய்ய வேண்டும்? இது 2006-க்கும் பொருந்தும், 2001-க்கும் பொருந்தும்? தேவையில்லாத தாம்புக் கயிற்றால் முக்கியமான பிரம்மாஸ்திரம் அல்லவா செயலிழந்து போகிறது?

சமீபத்தில் 1977-ல் பாகிஸ்தானில் நடந்த தேர்தலில் பிரதமர் புட்டோ நல்ல நிலையிலேயே இருந்தார். இருந்தாலும் பிரமிக்கத்தக்க வெற்றியைப் பெற எண்ணி தேர்தலில் தில்லுமுல்லு செய்து, பேரைக் கெடுத்துக் கொண்டார். ஜியா உல் ஹக்கால் பதவியிறக்கப்பட்டு, கடைசியில் தூக்கில் தொங்கினார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

23 comments:

Muse (# 01429798200730556938) said...

ஏற்கனவே பலமான நிலையில் உள்ள ஆளும் கட்சிக் கூட்டணி தேவையில்லாமல் தேர்தலில் ஏன் தில்லுமுல்லு செய்ய வேண்டும்?

ஹனுமனை ஒரு முகூர்த்த காலம்வரைதான் கட்டிவைக்க முடியும் என்று நினைப்பதால் இருக்குமோ?

Muse (# 01429798200730556938) said...

முகூர்த்தம் முடிவதற்குள் முடிந்தவற்றை சொந்தமாக்குவது "Make Hay while the Sun Shines" என்று சொன்ன தலைவரின் இயல்புதானே.

dondu(#11168674346665545885) said...

ஒரு முகூர்த்த கால விஷயம் வேறு யாருக்கும் தெரியாதே. மேலும் அந்த ஒரு முகூர்த்த காலத்துக்குக் கூட அனுமன் கட்டுப்பட்டுக் கிடக்கவில்லை என்பதுதானே நிஜம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Hariharan # 03985177737685368452 said...

காட்சி மாறி அடுத்த க(ர்)ட்சி ஆட்சி அமைக்க இது அந்த முகூர்த்த வாய்ப்பைத் தரலாம்.

மக்கள் ஜெ. தவிர்த்துவிட்டு விஜய்காந்த்க்கு வாய்ப்பு தந்து பார்க்கவேண்டும்.

Muse (# 01429798200730556938) said...

ஒரு முகூர்த்த கால விஷயம் வேறு யாருக்கும் தெரியாதே. மேலும் அந்த ஒரு முகூர்த்த காலத்துக்குக் கூட அனுமன் கட்டுப்பட்டுக் கிடக்கவில்லை என்பதுதானே நிஜம்?


ராமாயணம்தான் ஏற்கனவே நடந்து முடிந்தும்விட்டதே. நடந்த விஷயங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுவது தமிழர்களின் இயல்பல்லவோ.

Muse (# 01429798200730556938) said...

1 நாழிகை = 24 நிமிடங்கள்

1 யோஜனை = 3 மணி நேரங்கள் (ஏறத்தாழ)

1 முகூர்த்தம் = ?

பின் குறிப்பு: தமிழர் கணக்கைக் கேட்கிறேன். தமிழ் வியாபாரிகளின் கணக்கையல்ல.

Unknown said...

//ஹனுமனை ஒரு முகூர்த்த காலம்வரைதான் கட்டிவைக்க முடியும் என்று நினைப்பதால் இருக்குமோ?//

இங்கேயுள்ள ஹனுமன் ஒரு முகூர்த்த காலம்தான் கட்டிப்போடப் படுவோம் என்று நம்பத் தயாரில்லை. ஏதாவது வம்பு பண்ணவில்லையென்றால் ஆயுள் முழுக்க இதுதான் கதியென்றும் அதற்குத் தெரியும்.

ஒரு முகூர்த்த காலமென்றால் எவ்வளவு டோண்டு ஐயா! (இது உண்மையிலேயே தெரிந்து கொள்ளத்தான்)

dondu(#11168674346665545885) said...

நன்றி ஹரிஹரன்.

"மக்கள் ஜெ. தவிர்த்துவிட்டு விஜய் காந்த்க்கு வாய்ப்பு தந்து பார்க்கவேண்டும்."

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற தவிப்பில் மக்கள் உள்ளனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஏன் தயக்கம் சுல்தான்? முகூர்த்த காலத்தைப் பற்றி இங்கே கூறப்பட்டுள்ளது.

"அப்பைய தீட்சிதர் என்றொரு சிவனடியார். அவர் முன்னூறு
ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். அவர் ஒரு பெரும்பேரறிஞர். ஞானி.
அவரைப்பற்றி சிலநாட்களுக்கு முன்னர் எழுதியிருக்கிறேன்.

அவர் எந்நேரமும் சிவ பஞ்சாட்சரத்தையே மனதில் ஓட விட்டுக்
கொண்டிருப்பார். அவருக்குத் திடீரென்று ஒரு சந்தேகம்.

'நினைவு இருக்கும்போதெல்லாம் சிவநாமத்தை ஜபித்துக்கொண்டே
இருக்கிறோம். சுயநினவு இஇல்லாத சமயத்திலும் சிவநாமம் மனதில் ஓடுமா?
அப்படி ஓடவில்லையானால் சிவநாமம் மனதிலும் உள்ளத்திலும் ஆவியிலும்
அழுந்திப் பதியவில்லை என்றுதான் பொருள். இதை எப்படி அறிந்து கொள்வது?
நமக்கே சித்தபிரமை ஏற்படவேண்டும். நமக்குப் பித்துப்பிடித்தால் அல்லவா
அதனை அறிந்துகொள்ளமுடியும்? நமக்கு எங்கே அதெல்லாம் பிடிக்கப்போகிறது?
அப்படியே பிடித்தாலும்கூட என்னெவெல்லாம் புலம்புகிறோம் என்பதை நாம் என்னத்தைக் கண்டோம்? ஆகவே நாமே சித்தப் பிரமையை ஏற்படுத்திக்கொண்டு
அதைப் பரிசோதித்துப் பார்த்து விடவேண்டியதுதான்'.

ஊமத்தை விதையை நைத்து, நீருடன் சேர்த்துத் தயார் செய்து கொண்டார்.

'பித்தம் தெளிய மருந்து ஒன்றிருக்குது பேரின்பமன்றுள்ளே, மற்ற மருந்துகள் உள்ளுக்குச் சாப்பிட்டும் வல்லேன் வல்லேன் ஐயே அடிமை', என்று இருந்து விடாமல் ஊமத்தைக்கு மாற்று மருந்தையும் தயார் செய்துகொண்டார்.

சீடர்களை அழைத்தார்.

'நான் இந்த ஊமத்தை விதையை அருந்தப்போகிறேன். சற்று நேரத்தில்
சித்தப்பிரமை ஏற்பட்டுவிடும். அந்த நிலையில் நான் என்னெவெல்லாம்
சொல்கிறேன் என்று ஒன்று விடாமல் ஏட்டில் எழுதி வைத்திருங்கள்.
ஒரு முகூர்த்தகாலம் கழித்து, ஊமத்தைக்கு முறிவு மருந்தைக் கொடுத்து
விடுங்கள்', என்றார்.

ஒரு முகூர்த்த காலம் என்பது ஒன்றரை மணி நேரம்.

ஊமத்தையையும் அருந்தினார். சிறிதுநேரத்தில் பிரமை ஏற்பட்டு, அரற்ற ஆரம்பித்தார். ஓர் எழுத்து விடாமல் சீடர்கள் எழுதிக்கொண்டனர். பின்னர் மாற்று மருந்தையும் கொடுத்தனர்.

சுயநினவு வந்ததும் அப்பைய தீட்சிதர் ஏடுகளை வாங்கிப் பார்த்தார்.

ஐம்பத்தோரு அழகிய சுலோகங்கள் அவற்றில் இருந்தன.அனைத்துமே சிவனைப் பற்றியவை. தம் சுயநினவு இல்லாத நிலையிலும் அவர் சிவ சிந்தனையிலேயே இருந்திருக்கிறார்.

ஊமத்தையை உண்டு உன்மத்த நிலையிலிருந்துகொண்டு அந்தப்
பாடல்களைப் பாடியதால் அந்த பாடல்களுக்கு 'உன்மத்த பஞ்சாசத்' என்ற பெயரைக் கொடுத்தார்கள்.

சுந்தரர் பாடியிருக்கிறார் அல்லவா.......

'நற்றவா உனை நான் மறக்கினும்
சொல்லும் நா நமச்சிவாயவே'

அது இதுதான்."

நன்றி ஜெயபாரதி அவர்களே.

பார்க்க: http://www.treasurehouseofagathiyar.net/34800/34834.htm

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muse (# 01429798200730556938) said...

சுயநினவு வந்ததும் அப்பைய தீட்சிதர் ஏடுகளை வாங்கிப் பார்த்தார்.

ஐம்பத்தோரு அழகிய சுலோகங்கள் அவற்றில் இருந்தன.


நினைவோடு சராசரி மக்கள் எழுதுபவை பேசுபவை பெரும்பாலும் வெறும் உளறலாக இருக்க, அவர் சுயநினைவு இல்லாத நிலையில் பாடியவை அற்புதமான பாடல்களாக இருந்தது ஆச்சரியமளிக்கின்றது.

அவருடைய சுயநினைவற்ற நிலை, நமது சுய நினைவுள்ள நிலையை கேலிக்குரியதாக மட்டுமல்ல, கேள்விக்குரியதாகவும் ஆக்குகின்றது.

ஒருவேளை அவருடைய சாதாரண மன நிலையே உயர்மன நிலையாக இருந்திருக்கவேண்டும், சுயநினைவற்ற நிலை பெரும் புலவர்களுக்கிணையான மனநிலையாக இருந்திருக்க வேண்டும்.

யாமறியோம் பராபரமே.

ஜடாயு said...

ராமாயணைத்தையும், தமிழக அரசியலையும் வைத்து நல்ல "முடிச்சு" போட்டுவிட்டீர்கள் டோண்டு சார். பிரசங்கத்தை நீங்கள் எழுதிய விதன் நன்று.

"ராமபத்திரன்" என்பது ஸ்ரீராமனுடைய பெயரே தான், ஹனுமனுடையது அல்ல. ராமதூதன் என்பதே அனுமன் பெயர்.

அப்பய்ய தீட்சிதர் பற்றிய குறிப்பு அருமை. அவர் வாழ்வில் நடந்த இந்த நிகழ்ச்சி பற்றி நானும் கேள்விப் பட்டிருக்கிறேன்.

dondu(#11168674346665545885) said...

""ராமபத்திரன்" என்பது ஸ்ரீராமனுடைய பெயரே தான், ஹனுமனுடையது அல்ல. ராமதூதன் என்பதே அனுமன் பெயர்."

நன்றி ஜடாயு அவர்களே, ராமதூதன் எனத் திருத்தி விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தேவையில்லாத தாம்புக் கயிற்றால் முக்கியமான பிரம்மாஸ்திரம் அல்லவா செயலிழந்து போகிறது//

டோண்டு சார், வணக்கம்!
நல்ல ஒப்புமை தந்துள்ளீர்கள்!
கிடிகிடு என்று படித்துப் பின் பதிவின் இறுதி வந்த பின், தாங்கள் காட்டிய ஒப்புமை சாலப் பொருத்தமே!

ஆயின் பிரம்மாஸ்திரப் பிரயோகத்துக்குப் பின், அனுமன் இராவணன் சபையில், பல நல்ல விளக்கங்களும், அரச முறைமைகளையும் எடுத்துச் சொல்லுவான்.

"காட்டுவார் இன்மையால் கடி காவினை வாட்டினேன்" என்று யாரும் இராவணனைக் காட்ட முன் வராததால் தான்
அவ்வாறு செய்ததாக தன்னிலை விளக்கம் அளிப்பான்!

இங்கே தேர்தலுக்குப் பின் "காட்டுவார் யார்"? அனுமன் அரச சபையில் செய்ததை, செய்பவர் யார் என்ற கேள்வியும் எழுகிறது! பார்ப்போம் என்ன நடக்கிறது என்று!

"அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்"
குறளோவியம் கண்டவர்க்கு சொல்லவும் வேண்டுமோ?

dondu(#11168674346665545885) said...

கண்ணபிரான் அவர்களே,

ஒப்பிடுவதை ஓரளவுக்கு மேல் கொண்டு செல்லக் கூடாது என்றாலும், ஒரே ஒரு கேள்விக்கு பதிலளிக்கலாம் என நினைக்கிறேன்.

"இங்கே தேர்தலுக்குப் பின் "காட்டுவார் யார்"?"
மக்கள்தான். அவர்களும் அனுமன் முதலில் தன் சக்தி தெரியாது இருந்தது போல இருக்கின்றனர். அவர்களுக்கென வரப்போகும் ஜாம்பவான் யாரோ தெரியவில்லையே.

அன்புடன்,
டோண்டு ராகவன்.

Raj Chandra said...

யாஹ்யாகானால் பதவியிறக்கப்பட்டு, கடைசியில் தூக்கில் தொங்கினார்.

Isn't Zia sent Bhutto to gallows?

dondu(#11168674346665545885) said...

நன்றி ராஜ் சந்திரா அவர்களே. அது ஜியா உல் ஹக்தான். அவரை மனதில் நினைத்துக் கொண்டு தவறுதலான பெயரை எழுதி விட்டேன்.

இப்போது திருத்தியாயிற்று.

மீண்டும் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

bala said...

//Zia sent Bhutto to gallows//

Thats right. after Yahya Khan stepped down(kicked out) after the 1971 war in which Bangladesh was liberated. Bhutto assumed charge.
Zia lu haq dismissed Bhutto in a coup and implicated Bhutto in cases of treason and hung him.

பகிஸ்தானில் இந்த மாதிரி tragi-comdedy நிறையவே உண்டு.

பாலா

Bajji(#07096154083685964097) said...

ராமாயணம், மஹாபாரதத்தில் கவர் செய்யாத விஷயங்களே இல்லைப் போலிருக்கே சார்.

கிருஷ்ணன்

வஜ்ரா said...

//
ராமாயணம், மஹாபாரதத்தில் கவர் செய்யாத விஷயங்களே இல்லைப் போலிருக்கே சார்.
//
சரியாகச் சொன்னீர்கள்,

கீமாயணம் படிப்பவர்களுக்கு அதெல்லாம் எப்படி விளங்கும்...?

..

நம் மக்களுக்கு அறிவு என்பதே இல்லை, அதே தவறை மறுபடியும் மறுபடியும் செய்து வெவ்வேறு Result எதிர்பார்ப்பது தான் முட்டாள்தனத்தின் Definition.

திராவிட கட்சிகளை வளர்த்து மூடத்தனம் செய்துவிட்டு. (வேலிய்ல் ஓடும் ஓணானை வேட்டியில் விட்டுக்கொண்டு) இப்ப குத்துதே குடையுதேன்னா?

dondu(#11168674346665545885) said...

"கீமாயணம் படிப்பவர்களுக்கு அதெல்லாம் எப்படி விளங்கும்...?"
:)))))))))))

ஆனால் ஒன்று. இந்தியாவில் இம்மாதிரி ரிக்கிங் (rigging) எனக்குத் தெரிந்து இந்திரா காந்தி காலத்தில் 1983-ல் அஸ்ஸாம் எலக்ஷனில் பெரிய அளவில் நடந்தது. என் நண்பர் டில்லியிலிருந்து டெப்யூட் செய்யப்பட்டு அங்கு சென்றவர் கூறியதிலிருந்து கூறுகிறேன். பூத்துகளில் கிட்டத்தட்ட யாருமே வரவில்லை. எதிர்க் கட்சிகள் தேர்தல் புறக்கணிப்புக்கான அழைப்பை விடுத்திருந்தனர். பல பூத்துகளில் அதிகாரிகளே சில ஓட்டுக்களை காங்கிரசுக்கு ஆதரவாக இட்டு வெற்றி பெறச் செய்தனர். வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் மொத்தமே நூற்றுக் கணக்கில்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

"ஏற்கனவே பலமான நிலையில் உள்ள ஆளும் கட்சிக் கூட்டணி தேவையில்லாமல் தேர்தலில் ஏன் தில்லுமுல்லு செய்ய வேண்டும்? இது 2006-க்கும் பொருந்தும், 2001-க்கும் பொருந்தும்? தேவையில்லாத தாம்புக் கயிற்றால் முக்கியமான பிரம்மாஸ்திரம் அல்லவா செயலிழந்து போகிறது?"
You took recourse to Ramayan and seeing now the developments in Tamil Nadu, it is clear that the great epic is relevant even today.

Thangamma

Anonymous said...

Superb!This news may be taken to the notice of our Honourable Chief Minister of Tamil Nadu.

dondu(#11168674346665545885) said...

என்ன சுப்பிரமணியன் சார், இது முதல்வருக்கு தெரியாதா என்ன? இருப்பினும் பழக்க தோஷந்தேன், என்ன செய்வது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது