1/30/2007

புது பிளாக்கரில் பிரச்சினை

புது பிளாக்கருக்கு என்னை வலுக்கட்டாயமாக பிளாக்கர் இழுத்து வந்து விட்டது. நல்ல வேளையாக புது பிளாக்கரில் தமிழமண இணைப்பு கூட கிடைத்துள்ளது.

ஆனால் ஒரே ஒரு கஷ்டம். முந்தைய பிளாக் பதிவை எடிட் செய்ய இயலவில்லை. எடிட் செய்து விட்டு பப்லிஷ் பட்டனை அழுத்தினால் இந்த எர்ரர் மெசேஜ் வருகிறது.

ERROR
URL should end in a valid domain extension, such as .com or .net

இதற்கு என்ன அர்த்தம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

5 comments:

dondu(#11168674346665545885) said...

இன்னும் பிரச்சினை தீர மாட்டேன் என்கிறது. எடிட்டும் செய்ய இயலவில்லை பப்ளிஷும் செய்ய இயலவில்லை. ஆனால் பினூட்டங்கள் மட்டும் இடவும் மட்டுறுத்தவும் இது வரை முடிந்திருக்கிறது.

நேற்றிலிருந்து சுவனப்பிரியனை சந்தித்ததை பற்றி பதிவு போட முழற்சித்து கொண்டே இருந்திருக்கிறேன். இது வரை தீர்ந்தபாடில்லை. ஆகவே நான் போட நினைத்த பதிவை இங்கே பின்னூட்டமாகப் போடுகிறேன். சுவனப்பிரியன் அவர்கள் மன்னிப்பாராக.

இப்போது பதிவு பின்னூட்டமாக:

சில நாட்களுக்கு முன்னால் சுவனப்பிரியன் அவர்கள் என்னுடன் தொலை பேசினார். அது பற்றி இப்பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அவர் அப்போது தன் ஊரில் இருந்தார். சென்னை வரும்போது என்னை தொடர்பு கொண்டு பேசும்படி கூறியிருந்தேன்.

நேற்று (01.02.2007) அவரிடமிருந்து ஃபோன் வந்தது. தான் சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு வருகைகள் அருகில் வெளியே நிற்பதாகவும் தன்னை வந்து நான் பார்க்க முடியுமா என்று கேட்டார். அவர் தனது அன்னை வழி தாத்தாவை ரிசீவ் செய்ய நிற்பதாகவும் கூறினார். எங்கள் வீட்டிலிருந்து ஏர்போர்ட் ரொம்ப தூரம் இல்லை, 5 கிலோமீட்டர்கள் சாலை வழியே, 2 கிலோமீட்டர்கள் மட்டுமே, நீங்கள் காக்கையாக இருக்கும் பட்சத்தில்.

ஆட்டோ எடுத்து சென்று அவரைச் சந்தித்தேன். அப்போது மணி காலை 7.30. சுவனப்பிரியன் என்னை அடையாளம் கண்டு கொண்டார். மனிதர் ஆறடி உயரத்துக்கு நல்ல ஆஜானுபாகுவாக இருந்தார். சவுதி ஃப்ளைட் வந்து விட்டிருந்தது. அதில்தான் அவர் தாத்தா தனது ஹஜ்ஜை முடித்து கொண்டு வந்திருந்தார். ஆனால் உள்ளேயே பல ஃபார்மாலிட்டீஸ்கள். கிட்டத்தட்ட 2 மணி நேரம் போல ஆகிவிட்டது. அவர் வெளியே வரும்போது மணி 9.30.

அது வரையில் ஒரே பேச்சுத்தான். அவர் தான் சவுதியில் வேலை செய்வதாகக் கூறினார். ப்ளஸ் டூ படித்து விட்டு கணினியில் பாடம் படித்திருக்கிறார். வேர்ட், எக்ஸெல், டால்லி எல்லாம் கற்றிருக்கிறார். குடும்ப சூழ்நிலையில் உடனே வேலைக்கு போகும் நிர்ப்பந்தம். நல்ல வேளையாக தெரிந்தவர்கள் மூலமாக ரியாத்தில் உள்ளூர் கம்பெனி ஒன்றில் வேலை கிடைத்தது. போன இடத்தில் இவரது கணினி அறிவைப் பார்த்து ஆஃபீசில் வேலை கொடுத்து பதவி உயர்வும் அளித்திருக்கிறார்கள். மனிதர் சும்மா இராது அராபிக், உருது கற்று தேர்ந்திருக்கிறார்.

அங்கு போனதும்தான் அவர் தாத்தா ஹஜ் முடித்து விட்டு வருகிறார் எனத் தெரிந்தது. அவரைப் பார்க்காமல் வருவதில்லை என முடிவு செய்தேன். ஹாஜிகளை பார்த்து ஆசி பெறுவது நல்லது. நம்மூரில் அதே போல தீர்த்த யாத்திரை முடித்து விட்டு வருபவர்களையும் பார்த்து விட்டு அவர்கள் ஆசி பெற்று வருவோம்.

அந்த முதியவர் வரும்போதே அவர் முகத்தில் இசுலாமியருக்கான ஒரு முக்கியக் கடமையை முடித்த திருப்தி தெரிந்தது. அவரிடம் ஆசி பெற்றேன். அவரும் அன்புடன் பேசினார். ஆனால் பயணக் களைப்புடன் இருந்தார்.

சுவனப்பிரியன் அவர்களிடம் காத்திருக்கும் நேரத்தில் பல விஷயங்களை பற்றி பேசினேன். முத்தலாக் பற்றியும் பேச்சு வந்தது. அது செல்லாது என்று நான் படித்து அறிந்ததை அவரும் உறுதி செய்தார். இருப்பினும் சமீபத்தில் நான் இட்ட இப்பதிவை மனதில் வைத்து கேட்ட போது அவர்கள் குரானை இண்டெர்ப்ரெட் செய்பவர்கள் செய்யும் தவறு என்றும், பல ஜமாத்துகள் இத்தவற்றை செய்கின்றன என்றும் கூறினார்.

அதே போல மார்க்க அறிஞர்கள் இசுலாமிய இளைஞர்களை ஆங்கிலம் கற்க விடாமல் செய்து பெரிய அநீதி இழைத்து விட்டனர் என்றும் கூறி வருத்தப்பட்டார்.

பிறகு அவர் தனது ஊரைப் பற்றி கூறினார். காவிரியின் கிளை நதிகளான குடமுருட்டி அரிசிலாறு அருகே அவர் வீடு இருப்பதாகக் கூறினார். பத்தடி ஆழத்தில் இளநீர் போன்று தண்ணீர் கிடைப்பதாகவும் கூறினார். எனது ஊர் சருக்கை பற்றியும் அறிந்திருக்கிறார். இதற்கு நடுவில் இரு முறை லெமன் டீ அருந்தினோம். போளியும் வாங்கி சாப்பிட்டோம். அது வரை அவருக்கு போளி என்று ஒன்று இருப்பதாகவே தெரியாது என்று கூறினார். பொல்லாத மனிதர் ஒரு முறை கூட என்னை பே செய்ய விட மறுத்து விட்டார்.

கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் பேசி விட்டு விடை பெற்றேன். உடனே பதிவும் போடுவேன் என்று கூறினேன். ஆனால் நேற்று பிளாக்கர் என்னை பதிவு போடவே விடவில்லை. பிளாக்கர் சப்போர்ட்டுக்கு புகார் செய்ததில் இன்று சரியாகி விட்டதாகக் கூறப்பட்டது. ஆகவே இப்போது ஒரு முயற்சி செய்வேன். பார்ப்போம் இன்ஷா அல்லா.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

பிப்ரவரி 11, 2007 ஞாயிறன்று சென்னை வலைப்பதிவர்கள் மீட்டிங்கை கூட்டலாம் என்று நானும் ஜோசஃப் சாரும் விரும்புகிறோம். அதன் அறிவிப்புதான் இந்தப் பதிவு. எனது புது பிளாக்கர் வலைப்பூ என்னை பதிவு போட விடாது படுத்துவதால் ஜோசஃப் சாரை நான் கேட்டு கொண்டு, அவரும் அன்புடன் இப்பதிவை தனது என்னுலகம் வலைப்பூவில் போட அன்புடன் ஒப்புதல் தந்துள்ளார்.

இருந்தாலும் நான் இன்னொரு முயற்சி செய்கிறேன், எனது வலைப்பூவிலும் இப்பதிவை வெளியிட, முடியாவிட்டால் இது எனது இந்த லேட்டஸ்ட் இடுகையில் பின்னூட்டமாக வரும்.

மாலை 6 மணியளவில் வழமையான உட்லேண்ட்ஸ் டிரைவ் இன்னில் மீட்டிங். வர விருப்பம் உடையவர்கள் இங்கு பின்னூட்டம் இட்டு விட்டு எனது செல்பேசியிலும் தகவல் அளித்தால் நன்றி. எனது செல்பேசி எண் 9884012948. ஜோசஃப் சாரின் செல்பேசி எண் 9840751117. வழக்கம்போல செலவு டட்ச் முறையில் பகிர்ந்து கொள்ளப்படும்.

வழமையான உட்லேண்ட்ஸ் வேண்டாம் என்றால் தி.நகர் வெங்கடநாராயணா ரோடில் உள்ள நடேச முதலியார் பார்க்கிலும் சந்திக்கலாம். பக்கத்திலேயே இட்லி சாம்பார் புகழ் ரத்னா கஃபே உள்ளது. கண்ணதாசன் மெஸ் வேறு.

மூன்றாவது இடம் தி.நகர் சோமசுந்திரம் பார்க். அறுசுவை நடராஜன் அவர்கள் ஹோட்டல் அருகிலேயே உள்ளது.

எது அப்படியானாலும் டட்ச் முறை மாறாது.

பின்னூட்டமிடுபவர்கள் நடேச முதலியார் பார்க்கா, உட்லேண்ட்ஸா அல்லது சோமசுந்திரம் பார்க்கா என்று விருப்பத்தைத் தெரிவித்தால் பெரும்பான்மை முறையில் தெரிவு செய்து கொள்ளலாம். நிறைய நேரம் உள்ளது.

பேச வேண்டிய விஷயங்கள் அங்கு கூடுபவர் விருப்பத்திற்கேற்ப தீர்மானிக்கப்படும். ஆனால் வழக்கமாக பேசும் ஒரு விஷயம் மட்டும் இம்முறை பேசப்படாது. அது என்ன என்பது எல்லோருக்குமே தெரியும். தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இந்த அறிவிப்பை சென்னையில் வசிக்கும், பிப்ரவரி 11-ஆம் தேதி அங்கு இருக்கப் போகும் எல்லா தமிழ் வலைப்பூ நண்பர்களுக்கும் பொதுவான அழைப்பாகக் கருதுமாறு கேட்டு கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மா.சிவக்குமார் அவர்களது உதவியுடன் பிரச்சினை தீர்ந்தது. விஷயம் என்னவென்றால், பதிவுகள் போடும்போது மேலே தலைப்புக்கான பெட்டி இருக்கும். அதன் கீழே இணைப்புக்கான பெட்டி இருக்கும். அதில் நான் சாதாரணமாக சில எண்களை ஒரு ஒழுங்கில் இடுவேன். அது இவ்வாறு வரும். அதாவது, 030220071. இதன் பொருள் பிப்ரவரி 3, 2007, முதல் பதிவு. இது நானே உருவாக்கிக் கொண்ட சுட்டி முறை. இதனால் எந்தப் பதிவுக்கும் அதற்கு மட்டுமான சுட்டி கிடைக்கும் (unique link).

ஆனால் புது பிளாக்கர் அதனால் குழப்பம் அடைந்து ERROR
URL should end in a valid domain extension, such as .com or .net
என்ற மெசேஜை கொடுத்துள்ளது. "டேய் சோம்பேறி, லிங்க் பெட்டியைத் தவிர்" என்று கொடுத்திருந்தால் குழப்பமே இருந்திராது. ஆனால் என்ன செய்ய? இரண்டு நாட்கள் குழம்பியிருக்க வேண்டும் எனும் விதி.

மீண்டும் மா.சிவகுமாருக்கு நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

suvanappiriyan said...

வணககம் ராகவன் சார்!

நான் உங்களைப் பற்றிய பதிவு போடுவதற்குள் நீங்கள் முந்திக் கொண்டீர்கள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பன்னாட்டு விமான நிலையத்தில் நாம் செலவழித்த நேரங்களை என்னால் மறக்க முடியாது. என் தாத்தாவும் உங்களை ரொம்பவும் விசாரித்ததாக சொல்லச் சொன்னார். நம்முடைய சந்திப்பை அழகிய முறையில் பதிவாக இட்டமைக்கு நன்றிகள். நேரம் கிடைக்கும் போது அடிக்கடி வருகிறேன்.

dondu(#11168674346665545885) said...

நன்றி சுவனப்பிரியன் அவர்களே. பதிவை தனியாகவே போட்டுள்ளேன். பிளாக்கர் பிரச்சினை மா.சிவக்குமார் அவர்கள் தயவில் தீர்ந்தது.

ஹாஜி தாத்தாவிடமிருந்து ஹஜ் விவரங்களெல்லாம் கேட்டறிந்தீர்களா? அவருக்கு என் பணிவான வணக்கங்களைத் தெரிவிக்காவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது