"எந்தக் கடையில் அவள் பூ வாங்கினாளோ, அடுத்த மாசமே பொறந்தாத்துக்கே திரும்பி வந்துட்டா". இந்த வாக்கியத்தைக் கேட்டதுமே மனம் மிக கனமாயிற்று. வேறு காண்டக்ஸ்ட் ஏதும் இல்லாமல் கேட்டபோதே இந்த நிலை. வைதவ்யம் அடைந்த அப்பெண், அவளது பெற்றோர்களின் துயரம் ஆகியவற்றை மனம் தன்னையறியாமலேயே கற்பனை செய்யத் தொடங்கி விட்டது.
இதன் பின்புலம் புரியாதவர்களுக்காக இப்போது கடந்த புதனன்று நடந்த நிகழ்ச்சியை ஆரம்பத்திலிருந்து கூறுவேன்.
கிழக்கு பதிப்பகம் இலக்கிய மொழி பெயர்ப்பாளர்களுக்காக ஒரு கலந்துரையாடலை எல்டாம்ஸ் ரோடில் உள்ள பார்வதி மினிஹாலில் ஏற்பாடு செய்திருந்தது. இது பற்றி ஹிந்து பத்திரிகையில் அதற்கு முந்தைய நாள் அறிவிப்பு வந்தது. நம்ம பத்ரியை உடனே தொடர்பு கொண்டு விசாரித்தேன். அவர் கலந்துரையாடலுக்கு இலக்கிய மொழிபெயர்ப்பாளர்கள் பலரை எதிர்பார்ப்பதாகக் கூறினார். யோசித்தேன். நானும் இது வரை தொழில்நுட்ப எழுத்துக்களை மட்டுமே மொழி பெயர்த்து வந்திருக்கிறேன். கதைகளை தொழில் முறையில் மொழி பெயர்த்ததில்லை. போன மாதம் நடந்த வலைப்பதிவர் சந்திப்பில் நண்பர் பால பாரதி அவர்கள் நான் ஏன் நாவல்களை மொழிபெயர்க்கக் கூடாது என்று கேட்டதற்கு அப்போதைக்கு அது ஒரு வேலை என்ற கணக்கில் என்னிடம் வராதவரை நானாகவே மெனக்கெட்டு ஒரு நாவலை மொழி பெயர்ப்பதற்கில்லை என்று கூறி விட்டிருந்தேன்.
இருப்பினும் மனதில் இது ஒரு எண்ண அலையை உருவாக்கி விட்டது, ஏன் அதை முயற்சி செய்து பார்க்கக் கூடாது என்று. அதற்கேற்றாப்போல் அந்த சந்திப்பிற்கு முன்னமேயே Jerome K.Jerome எழுதிய "Three men in a boat, not to say of the dog" என்ற புத்தகத்தை விளையாட்டாக மொழிபெயர்க்க ஆரம்பித்திருந்தேன். அதன் நாலாம் அத்தியாயம் இங்கே.
மேலும், என் மனைவியின் அத்தையின் கணவர் திருக்குறள் பரிமேலழகர் உரை சார்ந்து ஒரு ஆங்கில நூலை வெளியிட இருப்பதாகவும், அதை நான் சரிபார்த்து தட்டச்சிட வேண்டும் என்று அதிகாரபூர்வமாக வேலை கொடுத்தார். (அதற்கான முன் காசோலையை நேற்றுத்தான் அனுப்பியதாக தில்லியிலிருந்து தொலைபேசி மூலம் இப்போதுதான் தெரிவித்தார்). இந்த வேலை பற்றி இன்னொரு பதிவில்.
நான் புதன் அன்று காலை ஒன்பதரை மணியளவில் கலந்துரையாடல் நடக்கும் இடத்திற்கு செல்லும்போது ஏற்கனவே ஆரம்பமாகி இருந்தது. தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்ப்பதில் இருக்கும் சில சங்கடங்களை பேச்சாளர் எடுத்துரைத்தார். அப்போதுதான் "எந்தக் கடையில் அவ்ள் பூ வாங்கினாளோ, அடுத்த மாசமே பொறந்தாத்துக்கே திரும்பி வந்துட்டா" என்னும் வாக்கியம் கூறப்பட்டது. தமிழர்களுக்கு உடனுக்குடன் பொருள் புலப்பட்டுவிடும் இந்த வாக்கியம் ஆங்கிலம் மட்டுமே அறிந்த ஒருவருக்காக எவ்வாறு மொழி பெயர்ப்பது. என்பதை வைத்துத்தான் பேச்சு. அதைக் கேட்ட உடனேயே என்னுள்ளே இருக்கும் மொழி பெயர்ப்பாளன் மனதுக்குள்ளேயே வேகமாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தான். அந்த வாக்கியத்தை பதிவின் கடைசியில் தருகிறேன்.
கலந்துரையாடலுக்கு சிறப்பு விருந்தினர் ஜெயகாந்தன் மற்றும் இந்திரா பார்த்தசாரதி. அவர்களை நான் அறிமுகப்படுத்தத் தேவையில்லை. ஜெயகாந்தனின் புத்தகங்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவரும் அங்கு வந்திருந்தார். அவருடன் பேச விருப்பமா என்ற கேள்விக்கு ஜெயகாந்தன் தேவையில்லை என்று கூறிவிட்டார். அவரைப் பொருத்தவரை தான் ஒருமுறை ஒரு கதையை எழுதிவிட்டால் அது எவ்வாறு மொழிபெயர்க்கப்படுகிறது என்பதையெல்லாம் பார்ப்பதில் தனக்கு சுவாரசியம் இல்லை எனக் கூறிவிட்டார்.
இந்த நேரத்தில் இஸ்ரவேல எழுத்தாளரான Ephraim Kishon பற்றியும், அவரது ஜெர்மானிய மொழிபெயர்ப்பாளர் Friedrich Torberg பற்றியும் என் எண்ணங்கள் எழுந்தன. அவர்களை பற்றி பேசலாம் என எண்ணியபோது ஜெயகாந்தன் அவர்கள் மேலே பேச ஆரம்பித்ததால் பிறகு கூறலாம் என்று விட்டு விட்டேன். பார்வையாளர்கள் அவர்கள் அறியாமலேயே இஸ்ரேல் சம்பந்தப்பட்ட எனது உரையிலிருந்து தப்பித்தனர். இங்கே அதை பற்றி கூறிவிடுகிறேன்.
Ephraim Kishon ஒரு ஹங்கேரிய யூத எழுத்தாளர். இரண்டாம் உலக மகாயுத்தத்துக்கு பிறகு இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தவர். மத்திய ஐரோப்பாவை சேர்ந்த அவருக்கு பல ஐரோப்பிய மொழிகள் தாய் மொழி அளவுக்கு சரளமாக வரும். இஸ்ரேலுக்கு வந்ததும் ஹீப்ரூவில் எழுத ஆரம்பித்தார். அவரது புத்தகங்கள் ஆங்கிலத்தில் முதலில் மொழிபெயர்க்கப்படும். அந்த ஆங்கில மொழிபெயர்ப்பை Friedrich Torberg ஜெர்மனில் மொழிபெயர்ப்பார். அந்த மொழியில் தானே எழுதியிருந்தால் எப்படியிருக்குமோ அதே மாதிரி தோர்பெர்க் மொழிபெயர்த்துள்ளார் என்று கிஷோன் அழுத்தம்திருத்தமாகக் கூறுவார். ஒரு மொழிபெயர்ப்புக்கு இதைவிட பெரிய பாராட்டு இருக்கவே முடியாது என்பது இன்னொரு மொழிபெயர்ப்பாளனான எனக்கு தெரியும். தோர்பெர்க் மரணத்துக்கு பிறகு கிஷோனே தனது புத்தகங்களின் ஜெர்மானிய மொழிபெயர்ப்பை செய்தார்.
இப்போது கலந்துரையாடலுக்கு போவோமா. தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் நடுவில் கலாசார இடைவெளி மிகப் பெரியதுதான். அடிக்குறிப்புகள் கொடுப்பதை பலரும் விரும்பவில்லை. அது கதையின் போக்கை தேக்கிவிடும் என்று பலரும் கருதினர். அடிக்குறிப்பு எண்களை அங்கங்கே தந்துவிட்டு, விளக்கங்களை கடைசியில் கூறலாம் என்றும் கூறப்பட்டது. இந்த யோசனை நன்றாகத்தான் இருந்தது. தமிழர்கள், ஆனால் தமிழ் படிக்கத் தெரியாது என்றிருப்பவர்களுக்கு இக்குறிப்புகள் தேவையிருக்காது என்றும் கூறப்பட்டது. ஆகவே ஒவ்வொரு மொழிபெயர்ப்புக்கும் டார்கெட் வாசகர்கள் யார் என்பதையும் தீர்மானிக்க வேண்டும் என்ற எண்ணமும் முன்வைக்கப்பட்டது.
நடுவில் என் செல்பேசி "அதோ அந்த பறவைபோல வாழவேண்டும்: என்று ஒலிக்க ஆரம்பிக்க, வெளியில் வந்து பார்த்தால் சகபதிவர் சுவனப்பிரியன் அழைத்திருக்கிறார். எதிர்பாராத போனஸ். அவரது பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
தேனீர் இடைவேளை சமயத்தில் இ.பா. அவர்களுடன் சிறிது பேச சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் எழுதிய "ஔரங்கசீப்" நாடகம் தில்லியில் மேடையேற்றப்பட்ட சமயம் அதில் ஷாஜஹானாக என் மனைவியின் அத்தையின் கணவர் (மேலே குறிப்பிடப்பட்ட திருக்குறள் வேலை தந்தவர்) நடித்ததை அவரிடம் கூறினேன். இ.பா.வும் என் அத்தையின் கணவரைத் தெரியும் என்று கூறினார்.
இடைவேளைக்கு பிறகு ஜெயகாந்தனின் மொழிபெயர்ப்பாளர் மற்றும் திருமதி கௌரி நாராயணன் பேசினார்கள். பின்னவர் கல்கியின் எழுத்துக்களை மொழிபெயர்த்தவர். (அவர் பேத்தி என்று நினைக்கிறேன், தவறாயிருப்பின் யாராவது திருத்தவும்). கலந்துரையாடலுக்கு வந்தவர்கள் சுய அறிமுகம் செய்து கொண்டனர். ஒரு ரெஜிஸ்தரில் தத்தம் விவரங்களை பதித்தனர். நானும்தான். 12 மணி அளவில் கூட்டம் முடிந்தது.
இப்போது மேலே கூறிய "எந்தக் கடையில் அவ்ள் பூ வாங்கினாளோ, அடுத்த மாசமே பொறந்தாத்துக்கே திரும்பி வந்துட்டா" என்ற வாக்கியத்துக்கான எனது மொழிபெயர்ப்பு: "It should really have been an inauspicious moment, when she was married. She returned a widow to her parents, next month itself".
இதே வாக்கியத்துக்கான வேறு விதமான மொழிபெயர்ப்புகளை எதிர் நோக்குகிறேன். இந்த வாக்கியம் எந்த புத்தகத்தில் என்ன சூழ்நிலையில் வந்தது என்பது தெரியாது. கதையில் ஒரு பாத்திரத்தை அறிமுகப்படுத்தும்போது கதாசிரியர் இதை எழுதியிருக்கலாம். அல்லது கதையில், அந்த பாத்திரத்தின் அன்னையோ தந்தையோ மூன்றாமவருக்கு தன் மகளைப் பற்றி கூறும்போது இதை கூறியிருக்கலாம். இன்னும் வேறு சூழ்நிலைகள் இருந்திருக்கலாம். சூழ்நிலைக்கேற்ப வாக்கியங்களும் வேறுபடும்.
இந்தத் தருணத்தில் ஒரு ஹிந்தி சிறுகதை நினைவுக்கு வருகிறது. ஹிந்தி தலைப்பு: "உஸ்னே கஹா தா". அக்கதையை இரு மொழிபெயர்ப்பாளர்கள் தனித்தனி முயற்சியாக தமிழில் மொழிபெயர்த்திருந்தார்கள். ஒரு தலைப்பு "அவன் சொன்னான்", இன்னொரு தலைப்பு "அவள் சொன்னாள்". ஹிந்தி தலைப்பு இரு மொழிபெயர்ப்பையும் ஒத்துக் கொள்ளும். இந்த விஷயத்தை நான் தில்லியில் Indian Scientific Translators Association-னின் கருத்தரங்கில் போட்டு உடைக்க, ஒரு ஜப்பானிய மொழிபெயர்ப்பாளரும் ஒரு ஜெர்மானிய மொழிபெயர்ப்பாளரும் (இருவரது தாய்மொழியும் ஹிந்திதான்) இது குறித்து பத்து நிமிஷங்கள் காரசாரமாக விவாதம் செய்து குடுமிப்பிடி சண்டை செய்ய, நிகழ்ச்சியின் அமைப்பாளர் ஸ்ரீவாஸ்தவ் "பத்த வச்சுட்டயே பரட்டை" என்று கூறுவது போல என்னைப் பரிதாபமாகப் பார்த்தார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
51 comments:
"எந்தக் கடையில் அவள் பூ வாங்கினாளோ, அடுத்த மாசமே பொறந்தாத்துக்கே திரும்பி வந்துட்டா". இந்த வாக்கியத்தைக் கேட்டதுமே மனம் மிக கனமாயிற்று."
எனக்கும்தான் டோண்டு சார்.
"இதன் பின்புலம் புரியாதவர்களுக்காக இப்போது கடந்த புதனன்று நடந்த நிகழ்ச்சியை ஆரம்பத்திலிருந்து கூறுவேன்."
சுரீரென தாக்கும் ஒரு வரியை சொல்லிட்டு இந்த மாதிரி ஃப்ளாஷ் பேக் கூட நல்ல கதை கேக்கற ஃபீலிங்ஸை தருது.
"அதற்கான முன் காசோலையை நேற்றுத்தான் அனுப்பியதாக தில்லியிலிருந்து தொலைபேசி மூலம் இப்போதுதான் தெரிவித்தார்."
பக்கா ப்ரொஃபஷனல்தான சார் நீங்க. செக் வந்துதா?
"இதே வாக்கியத்துக்கான வேறு விதமான மொழிபெயர்ப்புகளை எதிர் நோக்குகிறேன்".
நான் முயற்சி செய்யறேன். சிரிக்காதீங்க சார்.
There must have been a bad conjunction of stars at the time of her marriage. She lost her husband within a month after the event.
எப்படி சார்?
முனிவேலு
நல்ல முயற்சி முனிவேலு அவர்களே. ஏன் சிரிக்கப் போகிறேன்?
ஏது எனக்கு போட்டியாய் வந்து விடுவீர்கள் போலிருக்கிறதே?
பை தி வே செக் வந்து விட்டது. அக்கறையுடன் கேட்டதற்கு நன்றி. தொழில் என்று வந்து விட்டப் பிறகு காரியத்தில் கண்ணாயிருக்கணும் சார்.
வாடிக்கையாளர்களை அணுகும் முறை பற்றி நான் போட்ட 10 பதிவுகளைப் பார்க்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இதை மொழிபெயர்க்கவும்.
"இந்திராகாந்தி இந்தியாவின் எத்தனையாவது பிரதமர் ? "
ஆங்கிலத்தில் அல்லது வேறுவாக்கியத்தில் சொல்லுங்கள்..இதில் ஒரு இண்ட்ரஸ்டிங்கான மேட்டர் உள்ளது..
"உங்கப்பா அம்மாவுக்கு நீ எத்தனையாவது பிள்ளை?"
சாதாரணமா ஆங்கிலம் கற்றுக் கொள்ளும்போது எல்லோரையும் இந்த கேள்வி அசத்தும்.
ஒத்துக் கொள்ளக் கூடிய மொழி பெயர்ப்பு, "Which son are you, second or third?" Let me explain.
Let us say, in the course of a conversation, a person tells me that he has six brothers and five sisters (quite active parents!). Then I ask him, which child/son are you? Second or third?
விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு கட்டுமானம் இருக்கும். ஒன்றுக்கு ஒன்று என்று மொழிபெயர்த்து கொண்டிருத்தல் இயலாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"இந்திராகாந்தி இந்தியாவின் எத்தனையாவது பிரதமர் ?"
நான் ஏற்கனவே கூறியது போலவே, இதற்கு நேரடி மொழி பெயர்ப்பு ஆங்கிலத்தில் தர தேவையில்லை. சிலர் கூறுவார்கள், "what is the sequential order of Indra Gandhi among the prime ministers of India.
ஆங்கிலத்தை தாய் மொழியாகக் கொண்டவன் இந்த மொழிபெயர்ப்பைப் பார்த்தால் வழித்துக் கொண்டு சிரிப்பான்.
அதற்கு பதிலாக, "Indra Gandhi, was she fourth or the fifth prime minister of India?
Just for your information, Nehru was the first prime minister, on his death Gulzarilal Nanda was stop-gap prime minister, as the Indian constitution does not permit a vacuum in this connection. Then Lal Bahadur Sastry came. On his death Gulzarilal Nanda was once again stop-gap prime minister. Then came Indra Gandhi.
Personwise, she is 4th Prime Minister but strictly speaking, she is fifth prime minister, as Gulzarilal Nanda was second as well as fourth prime minister.
சரியா செந்தழல் ரவி அவர்களே?
அன்புடன்,
டோண்டு ராகவன்
Dondu sir,
Vanakkam. Just now created a blogger account. I usually blog at http;//rgiri.livejournal.com.
But reading your posts , I wanted to write some comments.
Translation to Tamil/English always fascinates me.Your blogs are interesting to read.
My attempt to translate the line:
"Perhaps bad omen played their fate , for just after one month of marriage, she came back for the worst to her parent's house."
I feel the original line in Tamil does not convey whether she became a widow or she was forced to move out of her husband's house. I think we should keep that benefit of doubt in the translation as well.
I don't know whether this is correct, but can metophor's be directly translated? I cannot write " she got flowers from bad shop " , but just that the phrase means some bad omen or her stars.
Correct me if I'm wrong.
நன்றி கிரி அவர்களே. அவள் விதவையானாள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இல்லையென்றால் பூ வாங்கியதைக் குறிப்பிடீருக்க மாட்டார் ஆசிரியர்.
""Perhaps bad omen played their fate , for just after one month of marriage, she came back for the worst to her parent's house."
Omen is singular, but the possessive pronoun "their" is plural.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Nandri sir.
Mistike agippochu:)
Perhaps bad omen played, for just after one month of marriage, she came back for the worst to her parent's house
Ippadi irundhaal seria?
Giri
"Perhaps bad omen played, for just after one month of marriage, she came back for the worst to her parent's house"
Try this instead:
No doubt/surely some bad omen played its part, because just after one month of marriage, she came back for good to her parents'.
Regards,
Dondu N.Raghavan
மிகவும் நன்றாக உள்ளது சார். very fascinating!
இது எப்படி இருக்கு?
Blame it on the unlucky shop that sold her flowers, she returned as a widow within a month
நன்றி ஆராதனா அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்புள்ள ம்யூஸ்,
பூ என்பது சுமங்களிக்கு அடையாளம் என்பது தமிழர்களுக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம். ஆனால் ஆங்கில டார்கெட் ஆடியன்ஸுக்கு அது புரியாது.
ஆகவே பூக்கடையைப் பற்றி பேசினால், அடிக்குறிப்புகள் எல்லாம் போட வேண்டியிருக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"Perhaps that was an inauspicious moment when she ordered that 'brides bouquet'. She was widowed soon!"
இது சுலபமாக மேலை நாட்டவரால் புரிந்து கொள்ளக்கூடும் என நினைக்கிறேன்!
மொழிபெயர்ப்பு ஓக்கேதான், ஆனால்
எஸ்.கே. அவர்களே, பூவையும் சுமங்கலித்துவத்தையும் சேர்ப்பது ஆங்கிலேயருக்கு புரியாது. Bride's bouquet என்பது வெறுமனே ஒரு பூங்கொத்துதான் அதற்கு மேல் ஒன்றும் இல்லை.
ஆகவே இந்த மொழிபெயர்ப்பில் பூவோ பூக்கடையோ வந்தால் அது அது வெறும் மொழிபெயர்ப்பு மட்டுமே.
லோக்கலைஸேஷன் ஆகாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அப்படிப் பார்த்தால், 'சுமங்கலித்துவம்' என்ற ஒன்றே மேலைநாட்டவர்க்குப் புரியாத ஒன்றுதானே!
அந்த திருமணம் நிலைக்கவில்லை என்பதை இது காட்டுகிறது.
மணம் முடிந்து செல்லும் முன்னர் இந்தப் பூங்கொத்தை பின்பக்கம் எறிவது ஒரு சுபநிகழ்வாகவே கருதப் படுகிறது அங்கு!
அந்தப் பொருளில் இந்த அமங்கல நிகழ்வும் புரிந்து கொள்ளப்படும் என்றே நான் இன்னமும் நினைக்கிறேன்!
மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்?!!
"அப்படிப் பார்த்தால், 'சுமங்கலித்துவம்' என்ற ஒன்றே மேலைநாட்டவர்க்குப் புரியாத ஒன்றுதானே!"
இந்தியாவில் - குறைந்தபட்சம் - ஒரு நூறாண்டுகளாகளுக்கு முந்தைய இந்தியாவில் - விதவைகளின் நிலைமை எவ்வளவு கொடூரமானதாக இருந்தது என்பதை சதி ஆகிய கொடிய பழக்கங்களைப் பற்றி படித்து ஆங்கிலேயருக்கு அந்த பிரச்சினை ஓரளவுக்கு புரியும். ஆனால் பூ விஷயம் இன்னும் அதிக மசங்கலான விஷயம் அவர்களுக்கு. ஆகவேதான் அதை நேரடியாக கொண்டு வர வேண்டாம் என எண்ணினேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
// செந்தழல் ரவி said...
இதை மொழிபெயர்க்கவும்.
"இந்திராகாந்தி இந்தியாவின் எத்தனையாவது பிரதமர் ? "
ஆங்கிலத்தில் அல்லது வேறுவாக்கியத்தில் சொல்லுங்கள்..இதில் ஒரு இண்ட்ரஸ்டிங்கான மேட்டர் உள்ளது..//
How manieth PM of India was ms.Indira Gandhi?
How manieth என்பதை நான் கேள்விப்பட்டதில்லை. ஜெர்மன் மொழியில் wie vielte(r) என்று கேட்பது மிக சகஜம். இப்படி வேண்டுமானால் கேட்கலாம் என்று இந்த சுட்டியில் படித்தேன். பார்க்க: http://schools.mylounge.com/showthread.php?p=280493
Where does Indra Gandhi come in the sequence of Indian Prime Ministers?
ஆனால் அந்த கேள்வி அங்கு வேறு உதாரணத்துடன் வந்தது.
Where does [] come in the sequence of American presidents?
அதற்கு வந்த ஒரு பதில்: In the case of Bill Clinton, in the ante room of the Oval Office.
பதில் புரியாதவர்களுக்கு புரிந்தவர்கள் விளக்கலாம், ஆனால் மைதானம் முழுக்க அவர்கள் துரத்தி துரத்தி உதைக்கப்பட்டால் என்னை கேக்கப்படாது. :))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
Just check this one, sir!
http://www.google.com/search?sourceid=gmail&q=How%20manieth
The world is not dark just because the cat has closed it eyes!!
இல்லை எஸ்.கே. ஐயா, பூனை கண்ணையெல்லாம் மூடிக்கொள்ளவில்லை. நான் கேள்விப்பட்டதில்லை என்பது உண்மைதான். அதற்காக சும்மா இல்லை.
நானும் கூகளிட்டுத்தான் பார்த்தேன். நீங்கள் சுட்டிய அதே பக்கத்திலிருந்துதான் க்ளிண்டன் உதாரணமும் கொண்டு வந்தேன் (இரண்டாவது அல்லது மூன்றாம் பக்கத்திலிருந்து).
ஆனால் கூகளை ஜாக்கிரதையாக உபயோகிக்க வேண்டும். நீங்கள் சுட்டியதையே எடுத்து கொள்வோம். வெறுமனே 465 ஹிட்கள்தான் உள்ளன. அவற்றிலும் பல வேறு மொழி மூலங்கள். உதாரணத்துக்கு ரஷ்யனிலிருந்து அல்லது ஜப்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்ப்பது சம்பந்தமானவை அவை. தமிழைப் போலவே அந்த மொழிகளிலும் எத்தனையாவது என்பதற்கு வார்த்தை உண்டு. அவர்களும் இதை ஆங்கிலத்தில் கூறும் பிரச்சினையை சந்தித்திருக்கிறார்கள்.
How manieth என்பது பழைய ஆங்கிலத்தில் உண்டு என்றும் கூறப்பட்டுள்ளது. கூகிளை உபயோகித்து, எவ்வாறு ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சுக்கு மொழி பெயர்ப்பு செய்தேன் என்பதை பற்றி ஏற்கனவே கூறியுள்ளேன்.
நீங்கள் கூறியதையே எடுத்துக் கொள்வோம். "The world is not dark just because the cat has closed its eyes". "பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடுமா" என்று தமிழில் நாம் வழக்கமாகக் கூறுவதை நீங்கள் கூறியது போல நேரடியாக மொழிபெயர்த்தால் சட்டென்று ஆங்கிலேயருக்கு புரியாது. இப்படி வேண்டுமானால் கூறலாம். There is a saying in Tamil, which when literally translated into English conveys "The world is not dark just because the cat has closed its eyes". Then the average English reader will definitely understand and even appreciate the imaginativeness of the Tamil language.
இந்த சந்தர்ப்பத்தில் இன்னொரு உதாரணம் நினைவுக்கு வருகிறது. தில்லியில் ஒரு உ.பி. காரரிடம் பேசும்போது நான் ஹிந்தியில் இவ்வாறு கூறினேன் "யே இந்தஜார் லக்தா ஹை ஜைஸே ஸமுந்தர் கே கினாரே கடே லெஹரோன் பந்த் ஹோனே கி ப்ரதீக்ஷா மே ஹோன்" (இந்த மாதிரி காத்திருப்பது கடற்கரையில் நின்று கொண்டு அலைகள் ஓய்வதற்காகக் காத்திருப்பது போல). அவ்வளவுதான் மனிதர் என்னை நான் ஒரு கவிஞனா என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தார்.இல்லை, தமிழில் அலை ஓஞ்சு ஸ்நானம் பண்ண கதை என்று சர்வ சகஜமாகக் கூறுவோம் என்று கூறியதும் அவர் வியப்பு எல்லை கடந்தது. விஷயம் என்னவென்றால், உ.பி. யில் கடல் கிடையாது. ஹிந்தி பேசும் எந்த மாநிலங்களுமே கடற்கரையில் இல்லை. அதனாலேயே கடல் சம்பந்தமான இந்த பழமொழி அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்று நான் நினைக்கிறேன்.
மொழிபெயர்ப்பு என்பது டார்கெட் ஆடியன்ஸைத்தான் குறி வைக்க வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பெரும் அனுபவசாலிகள் பேசிக் கொண்டிருக்கையில்
//மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்?!!
//
என்று எஸ் கே ஐயா கேட்டதினால்,இடையில் இந்தச் சிறுவனின் இரண்டனா...
மொழி பெயர்ப்புக்கு Target Audience முக்கியம்தான். ஆனால் அதே மாதிரி மூலத்தின் சாரமும் முக்கியமே. உதாரணமாக R K Narayanan -ன் நாவல்கள், ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருந்தாலும், மால்குடியை அப்படியே ஒரு ஆங்கில நகரமாக அவர் சித்தரிக்கவில்லை. அந்த நகரமும், மக்களும் அவர்களின் பழக்கவழக்கங்களும் அப்படியேதான் சொல்லப் பட்டிருந்தன.
இங்கு சொல்லப்பட்ட மொழி பெயர்ப்புகளில் அந்த 'brides bouquet' கொஞ்சம் நெருக்கமாக் வருவதாக ஒரு வாசகனாக எனக்குத் தோன்றுகின்றது. அதே போல் அதற்கு அடிக் குறிப்புகளுடன் விளக்கம் சொல்லப்பட்டால் மீண்டும் ஒரு வாசகனாக எனக்கு அந்த மொழியாக்கத்தின் மூலத்தின் பின்புலமான கலாசாரத்தைப் பற்றி நிறைய விவரங்கள் அறிய உதவியாக இருக்கும். அது எனக்கு அந்த புத்தகத்தைப் பற்றி 'சரியாக' புரிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று தோன்றுகிறது.
மீண்டும் சொல்கிறேன்... ஒரு வாசகனாகத்தான் எனது பின்னூட்டம். தவறாக எண்ண வேண்டாம்.:-)
இந்த how-manyeth என்பதைப் பற்றி எனது சிறு அனுபவம்.
பல வருடங்களுக்கு முன்னர் எழுத்தாளர் மெரினா - ஆனந்த விகடனில் இதைப் பற்றி எழுதியிருந்தார். பள்ளியில் படிக்கையில் அதைப் படித்ததாக ஞாபகம்.
'உங்கள் பெற்றோருக்கு நீங்கள் எத்தனையாவது குழந்தை'
'இவர் என் சம்பந்தி'
இதை இரண்டும் எப்படி மொழி பெயர்ப்பது என்று கேட்டு அவரே விடையும் சொல்லியிருந்தார்.
what is the rank of yours among the children of your parents
என்று சொல்லியிருந்ததாக ஞாபகம்.
அவரே இந்த 'how-manyeth' என்ற வார்த்தையை உபயோகப் படுத்தலாம் என்றும் எழுதியிருந்தார். Google-ல் தேடிப் பார்த்தால் அதே யோசனையை சிலர் 2004-ல் சொல்லியிருப்பது மிக்வும் வியப்பாக இருக்கின்றது. மெரினா கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்னர் சொன்ன யோசனை மிகச் சீக்கிரம் ஆங்கிலத்தில் நடைமுறைப் படுத்தப்படும் என்றே தொன்றுகிறது.
இங்கு டோண்டு ஐயா சொன்ன மொழிபெயர்ப்பு சரியாக தோன்றுகிறது...
what son/daughter are you? 1st or 2nd?
-------------------------------
சம்பந்திக்கு???
மெரினாவின் நகைச்சுவையான விளக்கம் (ஞாபகத்திலிருந்து)
"பையனுக்கும் பெண்ணுக்கும் கல்யாணம் நடந்தால் அது marriage. பையனோட பெற்றோரை மனம் நோகாமல் manage பண்ணுவதால் பெண்ணின் தந்தையை manager என்று சொல்லலாம். அப்ப பையனின் தந்தையை damager என்று சொல்லலாம்."
இக்கேள்வி இந்த சுட்டியில் இன்னும் நாசுக்காக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
"How many siblings of yours were born before you?"
அதே போல "How many Prime Ministers were there prior to Indra Gandhi?" என்றால் செந்தழல் ரவி திருப்தி அடைவார் என எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நான் சமீபத்தில் 1969-ல் பொறியியல் கல்லூரியில் கடைசி ஆண்டு படிக்கையில் எங்கள் ஆசிரியர் ஒரு பழைய கேள்வித்தாளை வகுப்பில் வைத்து டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தார். அந்த பேப்பர் கேனத்தனமாக செட் செய்யப்பட்டிருந்தது.
எவனோ (விஷயம்) தெரியாதவன் ஒருத்தன் இதை செய்திருக்கான் என்பதைக் கூற "Some unknown person has set this paper" என்று கூறினார். நாங்கள் எல்லோரும் சிரித்து விட்டோம்.
பிறகு ஹிந்து நிருபரான என் தந்தையிடம் இதை சிரிப்புடன் நான் கூற, அவர் என்னை ஒரு நிமிடம் கூர்ந்து பார்த்தார். "ஆசிரியரை கேலி செய்யும் அளவுக்கு நீ பெரிய மனுஷன் ஆகி விட்டாயா? எங்கே இதை ஆங்கிலத்திலே நீ சொல்லிக் காட்டு" என்று கேட்டார். நான் அம்பேல்.
பிறகு ஒரு புன்முறுவலுடன் அவரே விடை கூறினார். விடை பிறகு கூறுவேன். நீங்கள் யாராவது முயற்சி செய்யுங்களேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உண்மைதான். லோக்கலைஸேஷன் செய்யாவிட்டால் அதன் வீச்சு குறைகிறது. இந்த குறையை நான் வடிவமைத்த வாக்கியத்திலேயே கண்டேன்.
வெறும் ஆங்கில மொழிபெயர்ப்பாக, அதாவது இந்தியர்களுக்கான மொழிபெயர்ப்பாக இருக்குமாயின் நான் வடிவமைத்த வாக்கியம் ஓரளவு சரியக வரும். இருந்த போதிலும், ஒரு சில உணர்வுகளை மொழியோடு பழகியவர்களுக்கு மட்டுமே அதன் வீச்சு பாதிப்பு புரியும்.
இப்போது இரண்டாவது கேள்விக்கான பதிலை முயற்சிக்கிறேன் (இதுவும் மெனக்கெடாமல் எழுதுவதுதான்):
"An ignorant person has set this paper"
நேர்த்தியான மொழிபெயர்ப்பு ம்யூஸ் அவர்களே. ஆனால் என் தந்தை கொடுத்த மொழிபெயர்ப்பு என் ஆசிரியர் கூறியதையே சற்று மாடிஃபை செய்தது. அதை ஊகிக்க முடிகிறதா என்று பாருங்கள்.
நீங்கள் கொடுத்தது சரியான மொழிபெயர்ப்பே. அதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//Some unknown person has set this paper//
Muse தவிர யாரும் முயற்சி பண்ணவில்லை போல... நான் ஒரு சின்ன முயற்சி -
//என் தந்தை கொடுத்த மொழிபெயர்ப்பு என் ஆசிரியர் கூறியதையே சற்று மாடிஃபை செய்தது// என்று நீங்கள் சொன்னதால் இப்படி முயற்சி செய்தேன். :-)
Some person unknowing the subject has set this paper
சபாஷ் ஸ்ரீதர் வெங்கட் அவர்களே. கிட்டத்தட்ட வந்து விட்டீர்கள்.
Some person unknowing the subject has set this paper என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்.
என் தந்தை கூறியது:
Some unknowing person has set the paper.
வாக்கியத்தின் காண்டக்ஸ்படி the என்று கூறினாலே this என்றுதான் இங்கு பொருளாகும். அதே போல unknowing மட்டும் போதும். நீங்கள் கூறியது போல எழுதுவதானால் Some person not knowing the subject has set this paper என்று எழுதுவது அதிக சிறப்புடையதாக இருக்கும்.
என் தந்தை கொடுத்த மொழிபெயர்ப்பு மிக குறைந்த சொற்களிலேயே கதையை முடித்து விட்டது. மொழிபெயர்க்கும்போது வார்த்தை சிக்கனமும் அவசியம்.
அவர் என்னை Ten commandments படத்துக்கு கூட்டி சென்ற கதையை அடுத்த பதிவுகளில் கூறுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நீங்கள் சொல்வது சரிதான்.
//Some unknowing person has set the paper// என்பது சிக்கனமாகவும் சரியாகவும் இருக்கிறது.
நானும் அதைத்தான் நினைத்தேன். பிறகு, 'விஷயம் தெரியாத யாரோ' என்று சொல்ல வரும் பொழுது 'subject' என்ற வார்த்தை வர வேண்டுமே என்றுதான் அப்படி மாற்றி அமைத்தேன்.
மிக்க நன்றி!!!
ஸ்ரீதர் வெங்கட் அவர்களே,
அதுதான் மொழிபெயர்ப்பில் ஒரு பிரச்சினை. எந்த இரண்டு மொழிபெயர்ப்பாளர்களும் ஒரே மாதிரி வேலை செய்ய மாட்டார்கள்.
வார்த்தை சிக்கனத்தையே எடுத்து கொள்ளுங்கள். எல்லா இடங்களிலும் அது சரியாக வராது. மூல மொழியில் வார்த்தைகளை வைத்து விளையாடியிருந்தால் நாமும் அதை மொழிபெயர்ப்பில் கொண்டு வர வேண்டியிருக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்ல பதிவு டோண்டு சார்.
முனிவேலு அவர்களின் மொழிபெயர்ப்பு இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்.
There may have been a bad conjunction of stars at the time of her marriage. She lost her husband within a month after the event.
தமிழிலேயே 'எந்தக்கடையில் பூ வாங்கினாளோ?' என்று ஒரு வித சந்தேகத்துடன் கூறும் போது அதற்கு ஆங்கிலத்துல் must க்குப் பதில்
may இருந்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
சொற்குற்றம் பொருட்குற்றம் இருந்தால் மன்னிக்கவும்.
must have been என்பது கூட ஒரு வித சந்தேகத்தை உள்ளடக்கியுள்ளது. உதாரணத்துக்கு no doubt என்றால் ஒருவேளை என்பது அதில் தொக்கி நிற்கும். சந்தேகமே கூடாது என்றால் without any trace of doubt என்று கூறவேண்டும்.
"சொற்குற்றம் பொருட்குற்றம் இருந்தால் மன்னிக்கவும்."
இவ்வளவு டிஸ்கி வேண்டாமே. தைரியமாக நினைப்பதை எழுதவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
எந்தக் கடையில் அவள் பூ வாங்கினாளோ?
//
என்பது கொஞ்சம் எமோஷனலான விஷயம்.
"எந்த கடையில் அரிசி வாங்குறாளோ ?" என்பதை எப்படி மொழிபெயர்ப்பீர்கள் ?
:D
"எந்த கடையில் அரிசி வாங்குறாளோ"
அதை இவ்வாறு மொழிபெயர்க்கலாம்.
Where does all that fat come from, I wonder.
இதை முயற்சி செய்யுங்களேன்.
It is like selling coal to Newcastle.
அன்புடன்,
டோண்டு ராகவன்
she returned back to her parents, After she bought a flower..
இது.. :(
"she returned back to her parents, After she bought a flower..
இது.. :("
தவறான மொழிபெயர்ப்பு. முதலில், return back என்றெல்லாம் சொல்லக்கூடாது. மற்றப்படி பூ வாங்கியவுடன் திரும்பி வந்தாள் என்பது மூல வாக்கியத்துடன் சற்றும் ஒத்துப் போகவேயில்லை. வார்த்தைகளை விட அடிநாதமான கருத்தே முக்கியம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அவள் பூ வாங்கிய பின் பெற்றோர் வீட்டுக்கு திரும்பினாள்.
கொழுவி எங்கேயாவது சீரியசாக பின்னூட்டம் இட்டிருக்கிறதா என்ன..
"கொழுவி எங்கேயாவது சீரியசாக பின்னூட்டம் இட்டிருக்கிறதா என்ன.."
:))))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
my attempts. :)
may be misfortune adorned her, through the florist, the rose was the last she wore.
may be misfortune adorned her through the florist, only to see her widowed in a month.
Dear Buspass,
I think the emphasis here is on becoming a widow, so soon after the marriage.
In Tamil cultural background the allusion to the flower shop in the the original Tamil sentence would have been promptly understood. But that is not so in other backgrounds, not even in Hindi milieu.
So, any attempt to bring in the reference to the flower shop is bound to look contrived.
Regards,
N.Raghavan
ஐயா, தங்கள் பதிவில் உள்ள வாக்கியத்தை மற்றும் ஓர் முறை நோக்கவும்...
"It should really have been an inauspicious moment, when she was married. She returned a widow to her parents, next month itself".
இதில்
She returned a widow to her parents
தவறு அல்லவா...
அவள் ஒரு விதவையை திரும்ப அனுப்பினாள் என்று பொருள் வருகிறது.
சரியான வாக்கியம்..
"It should really have been an inauspicious moment, when she was married. She returned AS a widow to her parents, next month itself".
இங்கு மிக முக்கியமான As என்னும் சொல்லை விட்டு விட்டீர்கள்.
நான் இங்கு தந்தது சரியா என்று தாங்களே சொல்லவும்.
நன்றி.
"She returned AS a widow to her parents, next month itself".
அபாரம் சாத்வீகன். நீங்கள் கூறியது பள்ளியில் ஆங்கிலம் கற்கும்போது இலக்கண சுத்தமாக எழுத வேண்டிய தருணத்தில் சேய்ய வேண்டிய விஷயம்.
ஆனால் நான் எழுதிய வாக்கியத்தில் as என்பது தொக்கி நிற்கிறது. அவ்வாறு தொக்கி நிற்பதே இந்த இடத்தில் வாக்கியத்தின் நேர்த்திக்கு துணை புரிகிறது. ஆகவே நான் எழுதியதே இந்த இடத்தில் அதிகப் பொருத்தம் வாய்ந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
// அதே போல் அதற்கு அடிக் குறிப்புகளுடன் விளக்கம் சொல்லப்பட்டால் மீண்டும் ஒரு வாசகனாக எனக்கு அந்த மொழியாக்கத்தின் மூலத்தின் பின்புலமான கலாசாரத்தைப் பற்றி நிறைய விவரங்கள் அறிய உதவியாக இருக்கும். அது எனக்கு அந்த புத்தகத்தைப் பற்றி 'சரியாக' புரிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று தோன்றுகிறது.//
நான் வழிமொழிகிரேன்
Of what chronological order was Indira Gandhi as PM of India ??
("Order" per se can mean a lot of criteria)
"How many Prime Ministers were there prior to Indra Gandhi?"
என்பதே சரியாக இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.
அடிக்குறிப்புகளின் பயனை நானும் உணர்ந்துள்ளேன். ஆனால் சிலசமயங்களில் இது அள்வுக்கு மேல் போய் விடும் அபாயம் உள்ளது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"எந்தக் கடையில் அவ்ள் பூ வாங்கினாளோ, அடுத்த மாசமே பொறந்தாத்துக்கே திரும்பி வந்துட்டா"
I don't want this to happen even to my enemies, if any.
Still, my attempt.
The signs of purchase of her flowers, did not transpire the best. She returned home without any, next month.
//The signs of purchase of her flowers, did not transpire the best. She returned home without any, next month.//
மொழிபெயர்ப்பு ஓக்கேதான், ஆனால்
பூவையும் சுமங்கலித்துவத்தையும் சேர்ப்பது ஆங்கிலேயருக்கு புரியாது.
ஆகவே இந்த மொழிபெயர்ப்பில் பூவோ பூக்கடையோ வந்தால் அது அது வெறும் மொழிபெயர்ப்பு மட்டுமே.
லோக்கலைஸேஷன் ஆகாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எத்தனாவது பிள்ளை என்பதற்க்கு,
Filial rank என்பதை உபயோகப்படுத்தலாம்.
What about your filial rank in your family?
இதைத்தான் grammatically right but idiomatically wrong எனச் சொல்வார்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//வார்த்தைகளை விட அடிநாதமான கருத்தே முக்கியம்.//
விளம்பரங்களில் மொழிபெயர்ப்பு சொதப்பல்கள் மிக அதிகம் என நினைக்கிறேன். ஒரு inverter ad-ல் TV, fridge நடக்கிறது என ஹிந்தியில் “சல்தா ஹை” என்பதை மொழிபெயர்த்திருப்பார்கள். ஆனால் “ஒடுகிறது” என சொன்னால் பொருத்தமாக இருந்திருக்கும்
Post a Comment