பிரபல இட்டிஷ் (Yiddish) எழுத்தாளர் Sholom Aleichem கூறுவதை நம்ப வேண்டுமென்றால் உலகிலேயே மிக சுலபமான மொழி இட்டிஷ்தானாம். ஏன் அவர் அவ்வாறு கூறினார்? ஏனெனில் இட்டிஷ் அவரது தாய் மொழி.
சமீபத்தில் 1953-ல் நான் படித்த இந்த ஜோக் அப்போது ஜோக் என்றே தோன்றவில்லை:
குப்பு: நல்ல வேளை நான் ஜெர்மனியிலே பிறக்கவில்லை.
சுப்பு: ஏன்?
குப்பு: ஏன்னாக்க எனக்கு ஜெர்மன் பாஷை சுத்தமாத் தெரியாது.
ஏனெனில், நான் பிறந்து சில ஆண்டுகளுக்கு உலகத்தில் எல்லோருக்குமே தமிழ் தெரியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு.
வருடம் 1995. தில்லிக்கு வந்து பதினான்கு ஆண்டுகள் அப்போது ஆகிவிட்டிருந்தன. திடீரென கேபிள் தொலைக்காட்சி நடத்துனர் எங்கள் வீட்டுக்கு சென்னை தொலைகாட்சி நிலையத்தின் நிகழ்ச்சிகளைக் காட்டும் DD 5 நிகழ்ச்சிகள் தரத் துவங்கினார். ஆஹா, பதினான்கு ஆண்டு வனவாசத்துக்கு பிறகு இந்த ராகவனுக்கு இதை விட என்ன மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி இருக்க முடியும்? இவ்வளவு ஆண்டுகளுக்கு பிறகு தேமதுரத் தமிழோசையை தொலைக்காட்சிப் பெட்டியில் கேட்க முடிந்தது சவலைக் குழந்தைக்கு தாய்ப்பால் கிடைத்தது போல இருந்தது என்று நான் நன்றியுடன் DD5 எதிரொலி நிகழ்ச்சிக்கு எழுத அதையும் ஒளிபரப்பி எனது களிப்பை பன்மடங்காக்கினர் சென்னைத் தொலைகாட்சியினர்.
பிறகு என்ன? செய்திகள் கூட தமிழ் செய்திதான் பார்ப்பது என்ற பிடிவாதம். ஒவ்வொரு திங்களன்றும் மாலை 7 மணிக்கு "நிலாப்பெண்" என்ற அருமையான சீரியல் இன்னும் மனதில் இருக்கிறது. கச்சிதமாக 13 திங்கட் கிழமைகளில் முடிந்து உள்ளத்தை கொள்ளை கொண்டது. இரவு 7 மணிக்கு "விழுதுகள்" என்ற மெகா சீரியல். ஓராண்டுக்குமும் மேல் தொய்வில்லாமல் ஓடியது. எல்லாவற்றையும் விட அது தமிழில் இருந்தது என்பதுதான் முக்கியம்.
வருடம் 2000. அகில உலக பெண் தொழிலதிபர்கள் மகாநாடு நடந்தது. அதில் நான் பிரெஞ்சு துபாஷியாக பங்கு பெற்றேன். அதில் ருவாண்டா தேசத்து பிரதிநிதி பிரெஞ்சில் எழுதிய உரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதை அவர் முதலில் பிரெஞ்சில் வாசிக்க நான் அவருக்கு பிறகு ஆங்கிலத்தில் வாசித்தேன். அது நல்ல அனுபவம்தான்.
ஆனால் காமரூன் பிரதிநிதி விஷயத்தில் அதை விட சிறந்த அனுபவம் கிடைத்தது. அதாவது மொழிபெயர்த்தது என்னவோ நாந்தான். ஆனால் அதை வாசிக்க அந்த நாட்டு பிரதிநிதி தனது பிரிட்டிஷ் தோழியை தேர்ந்தெடுத்தார். நான் எழுதியதை அந்த பிரிட்டிஷ் பெண்மணி படிக்கப் படிக்க நான் அப்படியே உறைந்து போனேன். எவ்வளவு அழகாகப் படித்தார்! நான் உருவாக்கிய வார்த்தைகளை எவ்வளவு அழகான ஏற்ற இறக்கங்களுடன் அவர் உச்சரித்தார்! நான் அப்படியே உருகிப் போனேன். பிறகு அப்பெண்மணியிடம் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க "அந்த வார்த்தைகள் என்னவோ உங்களுடையதுதானே, ஏனெனில் எனக்கு பிரெஞ்சு தெரியாது. நீங்கள் எழுதியதை வெறுமனே படித்தேன்" எனக் கூறினார். வெறுமனேவா? என்ன தத்ரூபமாகப் படித்தார்! என்ன இருந்தாலும் அவர் தாய் மொழி அல்லவா?
அதே போல புது தில்லி ரயில் முன்பதிவு செய்யும் இடத்தில் படிவத்தை ஹிந்தியில் நிரப்பித் தர, சம்பந்தப்பட்ட ஊழியர் மிக மகிழ்ந்து நல்ல இருக்கை தந்தார். அதுவும் தில்லியில் எல்லோரிடமும் சரளமாக இந்தி பேசியதால் நான் அங்கு வெளியூரில் இருப்பது போலவே என்னை அந்த ஊர்க்காரர்கள் உணர விடவில்லை. அதற்காக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தமிழில் பார்க்க முடிந்த போது நான் அதைத்தான் செய்தேன். இது எனது தாய் மொழி சம்பந்தப்பட்டது. தில்லிக்காரர்களின் எதிர்வினை அவர்களது தாய் மொழி சம்பந்தப்பட்டது. அதே போல இப்பதிவில் நான் குறிப்பிட்ட உருது ஃபிகருக்கும் அதே தாய் மொழி அபிமானமே.
இப்போது? என்ன மொழிபெயர்ப்பாக இருந்தாலும் தமிழுக்கு மாற்றும்போது உண்டாகும் மகிழ்ச்சிக்கு ஈடாகுமா? உதாரணத்துக்கு என் நண்பர் ரவி பாலசுப்ரமணியம் அனுப்பிய மின்னஞ்சலின் அடிப்படையில் நான் இட்ட இப்பதிவை மொழி பெயர்க்கும்போது நான் நானாக இல்லை. மடமடவென வார்த்தைகள் கணினியிலிருந்து துப்பாக்கிக் குண்டுகள் மாதிரி வெளிவந்தன.
சும்மாவா சொன்னார்கள், தமிழுக்கு அமுதென்று பேர் என்று?
அன்புடன்,
டோண்டு ராகவன்
A novel-writing workshop at Walnut Creek, California.
-
I conducted a workshop on writing novels in Chennai for Manasa
Publications. Now, my friends in the USA are asking me to hold similar
classes there. A one-...
7 hours ago
2 comments:
Have seen DD's "Rail Sneham" Serial ?
Can you write about that ??
Ravi
ரயில் சினேகம், கையளவு மனசு ஆகிய சீரியல்களை கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அவை எல்லாம் 1995-க்கு முந்தையவை. ஆகவே தில்லியில் இருந்த நான் அவற்றை மிஸ் செய்து விட்டேன் என அஞ்சுகிறேன். அதுவும் கையளவு மனசு சீரியல் ஹிந்தியில் வந்த போது பார்த்தேன், ஆனால் முழுக்க பார்க்க இயலவில்லை.
விழுதுகள் பற்றி ஒரு தனி பதிவு போடுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment