4/04/2007

ஸ்ரீ கிருஷ்ணவேணி நதிக்கரையில் உள்ள பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரங்கள்

தற்சமயம் கிருஷ்ணா என அழைக்கப்படும் ஸ்ரீ கிருஷ்ணவேணி நதிக்கரையில் உள்ள பஞ்ச நரசிம்ம க்ஷேத்த்திரங்களான ஸ்ரீமங்களகிரி, ஸ்ரீவேதாத்ரி, ஸ்ரீமட்டப்பல்லி, ஸ்ரீவாடப்பல்லி மற்றும் ஸ்ரீகேதவரம் ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டும் என லட்சுமி நரசிம்ம ஸ்வாமியின் தீவிர பக்தையான என் வீட்டம்மா பல நாட்களாகக் கூறி வந்தார். நானும் என்னால் முடிந்த அளவு பட்டும் படாமல் பதில் கூறி தப்பித்து வந்தேன். கையில் பல மொழிபெயர்ப்பு வேலைகள் ஆகவே கணினியை விட்டு நகரவே முடியவில்லை.

ஆனால் திடீரென போன வாரம் புதன் கிழமை எல்லாம் கூடி வர வெள்ளிக்கிழமை விஜயவாடா செல்லும் ஜன சதாப்தியில் சென்று, திங்களன்று திரும்பவரும் அதே வண்டியில் ரிடர்ன் டிக்கட் புக்கிங் எல்லாம் ஒரு நொடியில் நடந்தன.

விஜயவாடாவை எனது ரயில் சென்றடையும்போது மணி பிற்பகல் 1.45. உள்ளூர் வாடகை வண்டி நான் ஏற்பாடு செய்தது, அது காத்திருந்தது. அப்படியே அதில் ஏறி முதலில் வேதாத்ரி நோக்கிப் பயணம். பிறகு அங்கிருந்து மட்டப்பல்லிக்கு என் கார் சென்ற போது இரவு மணி 8. உள்ளூர்காரர் ஒருவரிடம் ஏற்கனவே பேசி வைத்திருந்தபடியால் அங்கு இரவு தங்கி ஆகாரம் செய்ய முடிந்தது. அடுத்த நாள் மட்டப்பல்லியிலிருந்து வாடப்பல்லிக்கு பயணம். பிற்பகல் 4 மணியளவில் தரிசனம். அங்கிருந்து குண்டூர் வழியாக விஜயவாடா செல்லும் வழியில் மங்களகிரி வர பானக நரசிம்மரையும் பார்க்க முயற்சி செய்தோம், ஆனால் தரிசன நேரம் கடந்து விட்டிருந்தது. ஆகவே மலையடிவாரத்தில் உள்ள புலிமுக நரசிம்மஸ்வாமி தரிசனம். புலிமுகம் பற்றி யாரிடம் கேட்பது எனத் தெரியவில்லை. தேடிப்பார்த்து கிடைத்தால் பதிவில் சேர்க்கிறேன்.

அன்று இரவு விஜயவாடாவில் ஹோட்டலில் அறை எடுத்து கொண்டோம். அடுத்த நாள், ஞாயிறன்று மங்களகிரி மற்றும் கனகதுர்கா ஆலயங்கள் தரிசனம். அடுத்த நாள்தான் ரிடர்ண் பயணம் என்பதால் ரிலேக்ஸ்டாக ஹோட்டலில் தங்கல். பிற்பகல் நம்ம என்றென்றும் அன்புடன் பாலா அவர்களின் போன் வர, தமிழ்மணம் ஞாபகம் வந்தது. உள்ளூர் சைபர்கஃபேக்கு விரைந்து தமிழ்மண அலசல். சுரதா பெட்டி பக்கத்தைத் திறந்து பல பின்னூட்டங்கள் போட முடிந்தது. திங்களன்று பிற்பகல்தான் வண்டியாதலால் இதற்கு முந்தையப் பதிவையும் போட முடிந்தது. சுரதாவுக்கு நன்றி.

செண்ட்ரலில் இறங்கி எனது கார் வீட்டுக்கு வரும்போது இரவு 10.30. நல்ல பயணம், ஆனால் கேதவரம் மட்டும் செல்ல இயலவில்லை. ஏனெனில் அது நக்ஸலைட்டு தோழர்கள் ராச்சியம் செய்யும் இடமாம். ஆகவே ஒரு டிரைவரும் அங்கு செல்ல முன்வரவில்லை.

இப்போது இந்த ஐந்து க்ஷேத்திரங்கள் பற்றி சில வார்த்தைகள். அமரர் முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் (குறையொன்றுமில்லை புத்தகம் எழுதியவர்) தனது தேன் சிந்தும் தமிழில் எழுதிய "மட்டப்பல்லியில் மலர்ந்த மறைபொருள்" என்னும் புத்தகத்தை ஆதாரமாக வைத்து எழுதுகிறேன். வடமொழி கலந்த தமிழை சற்றே தனித்தமிழாக முடிந்தவரை மாற்றியுள்ளேன்.

இந்த ஸ்ரீகிருஷ்ணவேணி நதிக்கரையில் உள்ள ஐந்து நரசிம்ம திவ்யத் தலங்கள் இந்தப் பாருக்கே அழகு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன. இந்த ஐந்து தலங்களின் பேரைச் சொன்னாலே பஞ்சமாபாதங்கள் பதறி ஓடும். இவ்வாறாக இந்த பஞ்ச நரசிம்ம க்ஷேத்த்திரங்களான ஸ்ரீமங்களகிரி, ஸ்ரீவேதாத்ரி, ஸ்ரீமட்டப்பல்லி, ஸ்ரீவாடப்பல்லி மற்றும் ஸ்ரீகேதவரம் ஆகிய இடங்கள் மிகவும் பெருமை வாய்ந்தவை.

1. ஸ்ரீமங்களகிரி:
இந்தத் தலம் உள்ள மலைக்கு மங்களகிரி, பத்ரகிரி, பீமாத்ரி என்றெல்லாம் பல பெயர்கள் உண்டு. இங்கு மலையடிவாரத்திலும் மலை உச்சியிலும் லட்சுமி நரசிம்மர் கோவில்கள் உண்டு. மலை உச்சி கோவிலில்தான் பானக நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். அவருக்கு பானகம் வைத்து சேவிக்க வேண்டும். பானகத்தை குருக்கள் சங்கினால் மொண்டு ஸ்ரீபுருஷ ஸுக்தம் கூறிக் கொண்டே பகவான் வாயினுள் விட கிட்டத்தட்ட பாதி பானகம் உள்ளே சென்றதும் எதிர்த்து கொண்டு சிறிதளவு பானகம் வர அதையும் பிரசாதமாக மீதி உள்ள பானகத்துடன் சேர்த்து நமக்கே தந்து விடுவார்கள். அபார சுவையுடன் கூடிய பானகம். போன ஜோடு தெரியாது நாமும் விழுங்கி வைப்போம்.

பரமபதத்துக்கு துல்யமானது மங்களகிரி தலம்.இங்கு மலையுச்சியிலும் மலையடிவாரத்திலும் எம்பெருமான் லட்சுமி நரசிம்மன் எழுந்தளியிருக்கிறான். இவன் ஸ்யம்பூவாக அதாவது தானாகவே தோன்றியவன்.பர்வத குகையில் விளங்குகிறான். பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பராக்கிரமசாலி பீமனால் ஆராதிக்கப்பட்ட பெருமாள். பீம பீம பராக்கிரமுடையவன். இவன் கிருத யுகத்தில் பாலையே அருந்தி கொண்டிருந்தவன். திரேதாயுகத்தில் தேனைப் பருகினான், துவாபர யுகத்தில் இக்ஷுஸாரம் என்னும் கரும்புச்சாறு மற்றும் கலியுகத்தில் குடோதகம் என்னும் பானகம். ஆகவேதான் இங்கு பானக நைவேத்யம் சிறப்பானது.

2. வேதாத்திரி:
இந்தத் தலம் உள்ள மலைக்கு வேதாத்ரி, வேதஸ்ச்ருங்கம், நிகமாத்ரி, வேதகிரி என்றெல்லாம் பெயர் உண்டு. நான்மறைகளும் மலையாகி அவற்றால் போற்றப்படுபவனே இந்த பெருமள் என அவனை தூக்கிக் காட்டுகிறது இந்த மலை. இங்குள்ள பெருமாள் ஸ்ரீயோகாநந்தன், தாயார் ஸ்ரீராஜ்யலட்சுமி. அருகில் உள்ள நதிக்குள் பெரிய சாலக்ராம மூர்த்தியிருப்பதாக ஐதீகம். அதை பார்க்கும் பாக்கியம் கிட்டவில்லை.

இங்குள்ள பெருமாள் நோய்கள் அனைத்தையும் போக்கடித்து பரிபூரண ஆரோக்கியம் கொடுப்பவன். இவனது இடையில் ஒரு உடைவாள் உண்டு. அதை வைத்து எம்பெருமான் அறுவை சிகிச்சை செய்கிறான். பேஷஜம் பிஷக் என்கிறபடி மருந்தும் இவனே, மருத்துவனும் இவனே. பிரதமோதைவ்யோ பிஷக் என்று வேதம் இவனை முதல் மருத்துவனாகக் கொண்டாடுகிறது.

3. ஸ்ரீகேதவரம்:
ஏற்கனவே கூறியபடி இங்கு நாங்கள் செல்ல இயலவில்லை. இது பற்றி தேவ ரிஷி நாரதர் கூறுகிறார்:

க்ருஷ்ணா தீர விஹாராய
காருண்யாம் ருதஸிந்தவே |
கமலா ப்ராண நாதாய
கேதவராய மங்களம் ||

இந்த மாபெரும் தலத்தில் ஸ்ரீகிருஷ்னவேணி உத்திர வாஹினியாய் எம்பருமானின் வடக்கு பக்கத்தில் ஓடுகிறாள். எம்பெருமானோ கருணாமூர்த்தி. பர்வதத்தின் மேலேயும், நதிக்கரையிலுமாக இரு மூர்த்திகளாக அவன் வீற்றிருக்கிறான். இங்கு பெருமாள் கேதவரநாதனாக வணங்கப்படுகிறான்.

4. ஸ்ரீமட்டப்பல்லி:
இங்கு பெருமாள் அந்தர்யாமியாக இருக்கிறான்.

ஸ்ரீ பல்யத்ரி மத்யஸ்தாய
நிதயே மதுராய ச |
சுக ப்ரதாய தேவாய
ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம் ||

மனத்துள்ளான், மாகடல் நீருள்ளான், மலர்ராள் தனத்துள்ளான், தண்டுழாய் மார்பன் எம்பெருமான் எங்கும் இருக்கிறான். ஆகவேதான் தூணிலுமிருப்பான் துரும்பிலுமிருப்பான் என பிரஹலாதன் அழுத்தம் திருத்தமாகக் கூறமுடிந்தது. எம்பெருமான் எள்ளில் வியாபித்துள்ள எண்ணெய் போல உள்ளான். இதுதான் உயர்ந்த நிலையானான எங்கும் நிறைந்திருத்தல் எனப்படுவதாகும்.

5. ஸ்ரீவாடப்பல்லி:
இங்குள்ள பெருமாள் பரம சௌலப்ய லட்சுமி ந்ருஸிம்ஹன். இவனது முகத்துக்கு நேராக ஒரு தீபம், திருவடிகளுக்கு நேராக இன்னொரு தீபம். முதல் தீபஜ்வாலை அப்படியும் இப்படியும் ஆடிக் கொண்டிருக்கும். அவன் மூச்சுக் காற்று பட்டு அவ்வாறு ஆவதாகத் தலப்புராணம் கூறுகிறது. காலடிக்கு முன்னால் தீபஜ்வாலை அப்படியே ஆடாமல் இருக்கும். இதுபற்றி இன்னொரு வியாக்யானமும் உண்டு.

நாம் சஞ்சலம் குடி கொண்ட மனதுடன் உள்ளே நுழைகிறோம். மனது அலை பாய்கிறது. பகவான் தாள் சேர்ந்ததும் சஞ்சலம் மறைந்து பேரமைதி குடி கொள்கிறது.

பகவான் தரிசனத்துக்கு செல்லும் வழியில் பல வாடிக்கையாளர்களின் தொலைபேசி அழைப்புகள். ஒரு புது வாடிக்கையாளரும் கிடைத்தார். எல்லாம் லட்சுமி நரசிம்மரின் அருளே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நம்ம தென்னாட்டு வினோத் துவா ம்யூஸ் கேட்டதற்கு இணங்க சேர்க்கப்பட்டன சில வரிகள்.
இந்தத் தலங்களை பற்றி தேவ ரிஷி நாரதர் பாடியது அநேகம். அவற்றிலிருந்து சில முத்துக்களை அந்தந்த இடங்களில் பொருத்தியுள்ளேன் என்னால் இயன்றளவு.

21 comments:

Anonymous said...

நல்ல பதிவு டோண்டு அவர்களே,
லஷ்மிநரசிம்மன் தங்களுக்கு பலநலன்களையும் தேக ஆரோக்கியத்தையும் நல்க வேண்டுகிறேன்.

ஜயராமன் said...

ராகவன் சார்,

ரொம்ப சந்தோஷம். படங்கள் இருந்தால் போடுங்களேன்... அஹோபிலம் இந்த பஞ்ச-க்ஷேத்திரங்களில் வருவது இல்லையா?

அந்த பிரகலாத வரதன் தங்களுக்கு இந்த இணைய இரண்யகசிபுகளிடமிருந்து பாதுகாப்பு அருளட்டும்.

dondu(#11168674346665545885) said...

நன்றி ஜெயராமன் அவர்களே. ஃபோட்டோ எதுவும் எடுக்கவில்லை.

மற்றப்படி என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன், மட்டப்பல்லி நரசிம்மஸ்வாமி ஆகியோர் என்னையும் என் குடும்பத்தாரையும் நிச்சயம் காப்பார்கள். ஹிரண்யகசிபுக்கள் எல்லாம் ஜுஜூபிதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜயராமன் said...

நன்றி.

மீண்டும்...

///அஹோபிலம் இந்த பஞ்ச-க்ஷேத்திரங்களில் வருவது இல்லையா? ////

dondu(#11168674346665545885) said...

///அஹோபிலம் இந்த பஞ்ச-க்ஷேத்திரங்களில் வருவது இல்லையா? ////

இல்லை. அகோபிலம் 13 க்ஷேத்திரங்களுக்குள் வருகிறது. அது பம்பாய் லைனில் உள்ளது. விஜயவாடா ஏரியாவிலிருந்து வெகு தூரம். பிரயாணம் அவ்வளவாக விரிவடையாத நாட்களில் ஒரு குறிப்பிட்ட ஏரியாதான் இம்மாதிரி வகைப்படுத்தலில் வரும். (108 திவ்ய தேசங்கள் தவிர).

அன்புடன்,
டோண்டுராகவன்

Muse (# 01429798200730556938) said...

டோண்டு அவர்களே,

இன்னும் சற்று விரிவாக எழுதியிருக்கலாமோ.

உதாரணமாக ஒவ்வொரு ஸ்தலத்திலும் உள்ள ஸ்ரீ நரஸிம்மனின் உருவம், அழகு, காம்பீர்யம், வித்யாஸங்கள், அலங்காரம், கோயிலின் வரலாற்று, ஸ்தல புராண, கலை நுணுக்கங்கள் என்பதுபோன்ற விஷயங்களை தங்களைப் போன்றவர் எழுத்தில் வெளுத்து வாங்கியிருக்கலாம்.

இவற்றை எழுதுவதற்கு நேரடியாகப் போய்த்தான் செய்ய வேண்டும் என்பதும் இல்லை.

மேலும், ஸ்ரீ கேதாவரம், ஸ்ரீ மட்டப்பல்லி பெருமாள்களைப்பற்றி ஆளுக்கு ஒரு ஸ்லோகம் என்கின்ற வகையில் முடித்துள்ளீர்கள். ஸம்ஸ்க்ருதம் புரியாத என்போன்ற அப்பாவிகளுக்கு அந்த ஸ்லோகங்களைத் தமிழ் படுத்தியிருந்தால் (ஸ்ரீ முக்கூர் லக்ஷ்மி நரஸிம்மாச்சாரி அவர்களுடைய மணிப்ரவாள நடையை சுத்த தமிழில் தர முயற்சி செய்வதற்கான நேரத்தில்) ஸ்தலத்தின் பெருமையை புரிந்துகொண்டிருப்போம் அல்லவா.

மேலும் ஒரு விண்ணப்பம். நீங்கள் ஏன் நல்ல தமிழ் பாசுரங்களைப்பற்றி மாதத்திற்கு ஒரு கட்டுரை எழுதக் கூடாது? சாதாரண பக்திப்பாடல்களாக மேலுக்குத் தோன்றினாலும் அவை எவ்வளவு பெரிய தத்துவத்தின் அடிப்படையில் எழுந்தவை என்பது குறித்த விளக்கத்துடன் எழுதினால் ஸ்லாக்யமாக இருக்கும்.

நம் பெருமாளை தேன் தமிழ் மொழியில் சிறப்பிக்கும்போது அது ஒரு தனி சுகம். எழுதுபவருக்கும். படிப்பவர்களுக்கும்.

உங்களிடம் சற்று உரிமையோடு இவற்றைக் கேட்டுவிட்டேன்.

Anonymous said...

நான் ஒரு இந்து. தாழ்த்தப்பட்ட ஹரிஜன வகுப்பை சேர்ந்தவன். என்னையும் உயர்ஜாதி என்று ஏற்றுக் கொள்வார்களா பார்ப்பனர்கள்? அவர்கள் போட்டுக் கொள்ளும் பூனூலை நானும் போட்டுக்கலாமா? நான் அவர்கள் வீட்டு திண்ணையில் கொஞ்ச நேரம் அமர்ந்தால் திண்ணையை கழுவாமல் இருப்பார்களா பார்ப்பனர்? எனக்கு பார்ப்பனர் பெண் கட்டித்தருவார்களா?

dondu(#11168674346665545885) said...

//இன்னும் சற்று விரிவாக எழுதியிருக்கலாமோ.//
வினோத் துவா என நான் உங்களை அழைத்ததில் தவறே இல்லைதான். சரியான பாயிண்டை பிடித்து விட்டீர்கள். நீங்கள் சொல்லியதற்கு இணங்க சில வரிகள் சேர்த்துள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//என்னையும் உயர்ஜாதி என்று ஏற்றுக் கொள்வார்களா பார்ப்பனர்கள்?//

பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டம் என்றாலும் நீங்கள் கேட்டதை ஏற்கனவே ஒரு நண்பர் நடேசன் பூங்கா சந்திப்பில் கேட்டிருந்ததால் இங்கு அதை அனுமதிக்கிறேன்.

1. பார்ப்பனர்கள் யார் உங்களை உயர்சாதி என்று ஏற்று கொள்வதற்கு? அவர்களுக்கு அந்த உரிமை யார் கொடுத்தது?

2. நான் கூறுகிறேன். நீங்கள் உங்களை ஐயங்கார் அல்லது ஐயர் என்றே கூறிக் கொண்டால் எந்த ஜாட்டான் உங்களை கேள்வி கேட்க முடியும்? பார்ப்பனர் ஒன்றும் வசிஷ்டர் அல்ல பிரும்ம ரிஷி என பட்டம் கொடுப்பதற்கு.

3. அது சரி, ஏன் பார்ப்பனாக வேண்டும் என நினைக்கிறீர்கள்? இது ஒரு முட்கிரீடம். தொல்லைகள்தான் அதிகம். மனிதனாக இருந்தால் போதுமே.

4. பெண் கொடுப்பார்களா என கேட்கிறீர்கள். நல்ல கல்வி, உத்தியோகம், ஆரோக்கியம் எல்லாம் இருந்தால் உங்களுக்கு பலர் பெண் கொடுப்பார்களே, பார்ப்பனர் உட்பட.

5. இப்போதெல்லாம் எந்த வீடுகளில் திண்ணை உள்ளது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

"என்னையும் உயர்ஜாதி என்று ஏற்றுக் கொள்வார்களா பார்ப்பனர்கள்? அவர்கள் போட்டுக் கொள்ளும் பூனூலை நானும் போட்டுக்கலாமா?"

அப்ப நீ ரிசர்வேசன் விட தயாரா? மத்த மேல் ஜாதி கோடும பன்னதுக்கு உன் மேல மட்டும்
பழி போடுவானுங்க நீ தயாரா?

இதுதான் சொந்த செலவுல சூன்னியம் வெச்சிகிறதா?

எங்கள வெச்சி காமெடி பன்ன பாக்கிறியா?

அட போய்யா நாங்களே நொந்து போயிருக்கோம், நீ வேற.

Muse (# 01429798200730556938) said...

மரியாதைக்குரிய டோண்டு அவர்களே,

மிக்க நன்றி.

ஸ்ரீ மட்டப்பல்லி பெருமாளோ எங்கும் நிறைந்திருக்கும் ஸத்யமாக இருக்கும்போது, ஸ்ரீ கேதவரநாதனோ மேல்நோக்கிச் செல்லும் குணமுடையவர்களுக்கு மலைமேலும், கீழ்நோக்கிச் செல்லும் குணமுடையாருக்காக நதிக்கரையிலும் காட்சி தருகிறான். என்னே, அவன் கருணை? மேலோர், கீழோர் பார்க்காத குணம் தய்மைக்கும், குழந்தைக்கும், தெய்வத்திற்கும் கிடையாது என்று சும்மாவா சொன்னார்கள் பெரியார்கள்.

வைஷ்ணவராகிய உங்களை ஸ்ரீ மட்டப்பல்லி பெருமாள் கொஞ்சம் அதிகம் ஆகர்ஷித்திருப்பதாகத் தோன்றுகிறதே. விஸிஷ்டாத்வைதத்தைவிட அத்வைதம் உங்களுக்குப் பிடிக்குமோ?

என்ன இருந்தாலும் அத்வைதம் அத்வைதம்தான், இல்லையா? ;-) !!

dondu(#11168674346665545885) said...

//விஸிஷ்டாத்வைதத்தைவிட அத்வைதம் உங்களுக்குப் பிடிக்குமோ?//

அன்புள்ள ம்யூஸ்,
த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகிய மூன்று தத்துவங்களையும் முறையே மத்வாச்சாரியார், சங்கரர் மற்றும் ராமானுஜர் ஸ்தாபித்தனர் என்ற அளவில்தான் நான் அவற்றை அறிவேன். மற்றப்படி விவரங்களை நான் அறியேன். மாமனிதர் ராஜாஜி அவர்கள் இவ்விஷயத்தில் எழுதியதை படித்தாலும் மனதில் நிற்கவில்லை.

நீங்கள் இம்மூன்றை பற்றியுமே ஒரு குறிப்பு பின்னூட்டமாக இப்பதிவில் இட இயலுமா? நீங்கள் கூறுவதை புரிந்து கொள்வது எளிது என்பதால்தானே உங்களுக்கு தென்னாட்டு வினோத் துவா எனப் பெயர் வைத்தேன். ஆகவே உங்கள் குறிப்பை எதிர்நோக்குகிறேன்.

அதற்கு முன்னால் நான் புரிந்து கொண்டதை கூறுகிறேன்.

த்வைதம் என்பது பரம்பொருள் ஆத்மா இரண்டும் தனித்தனி விஷயங்கள் என்று கூறுகிறது, அத்வைதம் இல்லை, அவ்விரண்டும் ஒன்றே எனக் கூறுகிறது. ஆனால் விசிஷ்டாத்வைதம்தான் என்ன கூறுகிறது எனத் தெரியவில்லை. ஒரு வேளை இரண்டுமே வேவ்வேறு தருணத்தில் உண்மைகளே எனக் கூறுகிறதோ? அதாவது ஒளி என்பது அலையா அல்லது க்வாண்டமா என்று கேட்கும்போது, இரண்டுமாகவே அது உள்ளது என்று இருக்கிறதா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

அரவிந்தன் நீலகண்டன் said...

ஒன்று: அருமையான பதிவு போட்டிருக்கிறீர்கள் நன்றி. அங்கங்கேயுள்ள தலங்களின் படங்களையும் போட்டிருக்கலாம். எங்களைப்போல கன்னியாகுமரியே கதியென கிடப்பவர்கள் படத்திலாவது பார்த்து ரசித்திருப்போம்.
இரண்டு: வேலை மெனக்கெட்டு அனானிக்கு பதில் சொல்லியிருக்கிறீர்கள்.

//1. பார்ப்பனர்கள் யார் உங்களை உயர்சாதி என்று ஏற்று கொள்வதற்கு? அவர்களுக்கு அந்த உரிமை யார் கொடுத்தது?
2. நான் கூறுகிறேன். நீங்கள் உங்களை ஐயங்கார் அல்லது ஐயர் என்றே கூறிக் கொண்டால் எந்த ஜாட்டான் உங்களை கேள்வி கேட்க முடியும்? பார்ப்பனர் ஒன்றும் வசிஷ்டர் அல்ல பிரும்ம ரிஷி என பட்டம் கொடுப்பதற்கு.
3. அது சரி, ஏன் பார்ப்பனாக வேண்டும் என நினைக்கிறீர்கள்? இது ஒரு முட்கிரீடம். தொல்லைகள்தான் அதிகம். மனிதனாக இருந்தால் போதுமே.
4. பெண் கொடுப்பார்களா என கேட்கிறீர்கள். நல்ல கல்வி, உத்தியோகம், ஆரோக்கியம் எல்லாம் இருந்தால் உங்களுக்கு பலர் பெண் கொடுப்பார்களே, பார்ப்பனர் உட்பட.//

அருமையாக எழுதியிருக்கிறீர்கள். சும்மா உங்களது பழமைத்தனமான எரிச்சலூட்டும் சில நிலைபாடுகளை வேண்டுமென்றே பெரிதுசெய்து உங்களை வசையாடுபவர்கள் (வசையாடிய கூட்டத்தில் நானும் உண்டு,) இந்த தங்கள் நிலைப்பாட்டினை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார்கள். அதுதான் சிறியான் ஈவெரா சொல்லிக்கொடுத்த சமூகநீதி நேர்மைத்தனம்.

அரவிந்தன் நீலகண்டன் said...

புகைப்படங்கள் என்றில்லை டோ ண்டு சார் அந்தந்த ஊர் பெருமாள் படத்தையாவது போடலாமில்லையா?

Muse (# 01429798200730556938) said...

டோண்டு அவர்களே,

இந்த விஷயங்கள் என்ன என்பதை நீங்களே அழகாய் சொல்லியிருக்க முடியும். என்றாலும், எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தீர்கள் - விஷயம் தெரியாதவன் என்றாலும்.

என் உளறல் கீழே. தவறுகளை திருத்த அனைவரையும் அழைக்கிறேன்.

வாழ்வு மூன்று விஷயங்களைக் கொண்டிருக்கிறது: உயிர்கள், இறை, இயற்கை

த்வைதம்: இறையும் அதனால் படைக்கப்பட்டவையும் வேறுபட்டவை.

அத்வைதம்: இருப்பது ஒன்றுதான். (ஒன்று என்பது இரண்டு என்கின்ற ஒன்று இருக்கும்வரைதான் இருக்கும் என்கின்ற கேள்வி புரியாமையால் எழுவதால், இருப்பது இறை மட்டுமே என்று சொல்லலாம். இதை பூஜ்யமாகப் புரிந்துகொள்ளலாம்) இருப்பது இறை (ப்ரஹ்மம் (அ) முழுமை) மட்டுமே.

இது வேறுபட்டதாகத் தெரியக் காரணம் அறியாமை. இதை மாயை என்று குறிப்பிடுவர்.

விஸிஷ்டாத்வைதம்: இருப்பது இறை மட்டுமே. ஆனால், அதன் வடிவங்களாகிய (இறையினால் உருவாக்கப்பட்ட?) இயற்கையும், உயிர்களும் இறை போலவே உண்மையானவை. ஆனால், ஒன்றிணையமுடியாத வேறுபட்டவை. (இவை வேறுபட்டவை என்று புரிந்துகொள்ளுவது மாயை இல்லை.) இறையின் வேறுவடிவங்களாக இவை இருப்பதால் இருப்பது இறை மட்டுமே.

இது ராமானுஜர் பின்பற்றிய போதித்த அணுகுமுறை. அவருக்கும் முன்னும் இருந்தது. பின்னும் இருக்கிறது. இருக்கும்.

(பி.கு: அத்வைதம் எனக்கு அப்பீலிங்காக இருந்தாலும், சாங்க்ய-யோகத்தின் மீதே நம்பிக்கை ஜாஸ்தி.)

Anonymous said...

புலிமுகம் பற்றி யாரிடம் கேட்பது எனத் தெரியவில்லை. தேடிப்பார்த்து கிடைத்தால் பதிவில் சேர்க்கிறேன்.

ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் கேட்டுப்பாருங்களேன். அவர்கள்தான் புலிகளின் உண்மையானமுகம் என்ன என்று எங்களுக்கு மட்டும்தான் தெரியும் என்று சொல்கிறார்கள்.

பெங்களூர் American

dondu(#11168674346665545885) said...

//ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் கேட்டுப்பாருங்களேன்.//
பதில் கிடைக்கிறதோ இல்லையோ இலங்கை மாமியார் வீட்டில் விருந்துபசாரம் நிச்சயம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

த்வைதம், அத்வைதம் மற்றும் விசிஷ்டாத்வைதத்தை பற்றி அருமையாக எழுதியுள்ளீர்கள். இதனால் எழுந்த வாதப் பிரதிவாதங்கள் அக்காலத்தில் மிக பிரசித்தம் அல்லவா?

அன்புடன்ன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

ரமணர், ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஆகியோர் அனுபவித்திருந்த நிலை அத்வைத நிலை அல்லவா?

இதுவும் இருக்கிறது -

// நல்ல பயணம், ஆனால் கேதவரம் மட்டும் செல்ல இயலவில்லை. ஏனெனில் அது நக்ஸலைட்டு தோழர்கள் ராச்சியம் செய்யும் இடமாம். ஆகவே ஒரு டிரைவரும் அங்கு செல்ல முன்வரவில்லை.//

Guru Prasath said...

த்வைதம், மேலும் விவரங்களுக்கு...

http://www.dvaita.org/docs/faq.html
http://www.dvaita.org/docs/srv_faq.html

உங்களின் ஆர்வத்துக்கு நன்றி.

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் காரணவரே (Reason),

உங்கள் பதிவுகள் சுவாரசியமாக உள்ளன. அதுவும் முக்கியமாக ஓபிசி பற்றிய பதிவுகள்.

உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது