5/05/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 77 & 78)

எபிசோட் - 77 (03.05.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
பிரியா தன் சீனியர் வீட்டுக்கு வருகிறாள். அவரிடம் அவர் ரமேஷ் கேசை கையில் எடுத்துக் கொண்டதால் அவருக்கு இனிமேல் தான் ஜூனியராக இருக்க விருப்பம் இல்லை எனக்கூற, அவரும் தான் இதை எதிர்பார்த்ததாகவும், அவள் தன் இஷ்டம்போல செய்து கொள்ளலாம் எனக்கூற, அவள் அவரிடம் விடைபெற்று செல்கிறாள்.

நீலகண்டனும் பர்வதமும் உமாவின் மாமனார் வீட்டுக்கு வந்திருக்கின்றனர். அவள் மாமனார் மாமியாருடன் பேசுகின்றனர். அவர்களுக்கு உமா மேல் ரொம்பக் கோபம். சிறிது நேரம் பொறுமையாகப் பேசிய நீலக்ண்டனும் திடீரென கோபப்பட்டு அவர்கள் பிள்ளை ரமேஷ் செய்த கிரிமினல் வேலைகள் மட்டும் நியாயமோ என கேட்கிறார். அப்படியே பேச்சு முற்றிப் போய் மாமனார் நீலகண்டனையும் பர்வதத்தையும் வீட்டை வீட்டு வெளியே போகுமாறு கூறுகிறார். அவர்கள் சென்ற பிறகு மாமியார் தன் கணவரிடம் இப்படி ஒரேயடியாக உறவை முறித்திருக்க வேண்டாம் என அபிப்பிராயப்படுகிறாள். ரமேஷை வெளியில் கொணர்ந்து அவனுக்கு வேறு நல்ல பெண்ணைக் கல்யாணம் செய்விக்கப் போவதாக அவர் கூற, மாமியாரோ அவரது திருட்டுப் பிள்ளைக்கு பெண் தர எல்லோரும் கியூவிலா நிற்கிறார்கள் எனக்கேட்டு அப்பால் செல்கிறாள்.

பிரியா வீட்டில் அவளும் காதம்பரியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். பிரியா தனது ஜூனியர் வேலையை விட்டு விட்டதைக் கூற, காதம்பரி அது பற்றி அவளிடம் விவாதிக்கிறாள். வக்கீல் தொழிலின் எதிக்ஸ் பற்றி பேச்சு செல்கிறது. பிறகு அவளும் காதம்பரியுமாக புறப்பட்டு அசோக் வீட்டுக்கு செல்கின்றனர். காதம்பரி கீழே தோட்டத்தில் இருப்பதாகக் கூறி நின்றுவிட, அசோக்கைப் பார்த்து பிரியா பேசுகிறாள். தான் வேலையை விட்டுவிட்ட சந்தர்ப்பம் பற்றிக் கூறி தான் செய்தது சரியா என அவள் அவனைக் கேட்க, அவன் புன்முறுவலுடன் அவள் எல்லா தரப்பையும் சீர்தூக்கிப் பார்த்து, மனசாட்சிப்படித்தானே முடிவெடுத்திருக்கிறாள், ஆகவே இதில் என்ன குழப்பம் எனக்கேட்க, அவள் மனதும் லேசாகிறது.

பிறகு அசோக்குக்கு மனைவி தேடும் விஷயம் பற்றி பேச்சு திரும்புகிறது. அவன் கல்யாணத்துக்கு சம்மதித்தானா என அவள் அசோக்கைக் கேட்க, அவனோ திருமணம் எனச் சொல்வதைவிட கிருஹஸ்தாஸ்ரமம எனச்சொல்லலாமே எனக் கூறுகிறான். ஆக, அவனுக்கு கூடிய சீக்கிரம் மனைவி வந்து விடுவாள் என அவள் மகிழ்ச்சியாகக் கூற, அவனோ மனைவி என்பதைவிட தர்மபத்தினி எனக்கூறலாமே என்கிறான்?

இதென்ன சார் தர்மபத்தினி, மனைவின்னு சொன்னா போறாதா, பெண்டாட்டி எனச்சொன்னா போறாதா, வீட்டுக்காரின்னு சொன்னா போறாதா, என சோவின் நண்பர் கேட்க, அவர் குறும்புத்தனமாக ஏன் தேடிவரவழைத்த தொந்திரவு எனச்சொன்னால் போறாதா எனக் கேட்கிறார். பிறகு சீரியசாக பேச ஆரம்பிக்கிறார். மனைவி அருகில் இல்லாது ஒரு கிரஹஸ்தன் எந்த தர்ம காரியமும் செய்யவியலாது, அதற்கான யோக்கியதை அவனிடம் இல்லை என அவர் விளக்க, அப்படியானால் அவன் தர்ம காரியங்கள் செய்யும்போது வெறுமனே பக்கத்தில் நின்றால் போதுமா என நண்பர் கேட்க, அதுவும் போதாது எனக்கூறுகிறார். மனு நீதிப்படி, மகாபாரதத்தில் சொல்லியபடி பல கடமைகள் மேலும் உள்ளன எனக்கூறி அவற்றில் சிலவற்றையும் அடுக்குகிறார்.

ஆனால் இதெல்லாம் தற்காலத்தில் சாத்தியமா எனப் பார்த்தால் கஷ்டம்தான் என்கிறார். பொருளாதார நிர்ப்பந்தங்களால் மனைவியானவள் வெளியே வேலைக்கெல்லாம் போக வேண்டியிருக்கிறது, ஆனால் தான் சொல்பவை தர்ம சாத்திரங்களில் கூறப்பட்டவை மட்டுமே எனவும் கூறி விடுகிறார்.

காதம்பரி வெளியே காத்திருப்பதைப் பார்த்த வசுமதி அவளை உள்ளே அழைத்துப் பேசுகிறாள். அவள் தனது தூரத்து சொந்தம் கும்பகோணம் காஞ்சனாவின் தங்கை என அறிந்து மேலும் மகிழ்கிறாள். அவர்கள் இவ்வாறு பரஸ்பரம் விசாரித்துக் கொண்டிருக்க, பிரியாவும் கீழே இறங்கி வருகிறாள். வசுமதியும் காதம்பரியும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை பார்த்து அவள் மகிழ்கிறாள்.

காதம்பரியிடம் பிரியா அவள் விரும்பினால் அசோக்கை சந்திக்கலாம் எனக் கூறுகிறாள், விருப்பம் எனக் கூறுவதை விட அவ்வாறு குடுமி வைத்த வாலிபன் எப்படி இருப்பான் என பார்க்க கியூரியாசிடியாக உள்ளது எனக் கூறி, காதம்பரி சற்றே தயங்குகிறாள்.

(தேடுவோம்)

எபிசோட் - 78 (04.05.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
கோவிலில் வைத்து சாம்புசாஸ்திரியும் வேம்பு சாஸ்திரியும் சந்திக்கின்றனர். தத்தம் குடும்ப விஷயங்களை விவாதிக்கின்றனர். பேசாமல் வேம்பு தன் வீட்டை காலி செய்ய நேர்ந்தபோது தங்கள் வீட்டுக்கே வந்து இருந்திருக்கலாம் என சாம்பு கூற அது சரியாக வந்திருக்காது என வேம்பு கூறுகிறார்.

அந்தப் பக்கம் வரும் அசோக்கும் அவர்களது பேச்சில் கலந்து கொள்கிறான். கர்மா தியரி பர்றி பேச்சு செல்கிறது. அசோக் கூறும் விஷயங்களை சாம்பு ஒரு குருவுக்கிருக்கும் பெருமையுடன் அவதானிக்கிறார். அசோக் இப்போது கிரகஸ்தாஸ்ரமத்துக்கு வரவிருப்பது பற்றி பேச்சு செல்கிறது. அவனால் சின்சியராக கிருகஸ்தாஸ்ரமக் கடமைகளையெல்லாம் கடைபிடிக்க இயலுமா என வேம்பு சந்தேகிக்க, அசோக் பொறுமையுடன் அது தன்னால் இயலும் என தான் நம்புவதாகக் கூறுகிறான். பிரும்மச்சரியத்தை முழுமனத்துடன் கடைபிடித்ததாலேயே அதை வெற்றிகரமாக முடிக்க முடிந்தது என்றும், இவ்வாறே கிருகஸ்தாஸ்ரமம் என்றால் என்னவென்றும், அக்னிஹோத்ரம் என்பது என்ன, மனைவியுடன் சேர்ந்து செய்ய வேண்டிய தினசரி கடமைகள் ஆகியவற்றையும் விளக்குகிறார்.

இங்கு டோண்டு ராகவன். இதுவே ஒரு முழுநேர வேலையாகி விடுகிறது. இப்போதைய அவசர யுகத்தில் அவற்றை பராமரிக்க முடியாது என்றுதான் எனக்குப் படுகிறது. அதைச் செய்யவும் வசிஷ்டராகிய அசோக் போன்றவர்களால்தான் முடியும் எனவும் தோன்றுகிறது. சீரியலில் இதற்கெல்லாம் விளக்கங்கள் வரும் எபிசோடுகளில் வரும் என நினைக்கிறேன்.

வேம்பு சாஸ்திரிகள் அசோக்கை தங்கள் வீட்டுக்கு வருமாறு அழைக்க அவனும் அங்கு செல்கிறான். சிங்காரம் வேம்புவுக்கு ஏற்பாடு செய்து தந்த வீடு அது. சுற்றுப்புறத்தில் உள்ள மனிதர்கள் முதலில் தங்களை வித்தியாசமாக நோக்கினாலும், இப்போதெல்லாம் அன்பு காட்டுகிறார்கள் என வேம்பு அவர்கள் மன நிறைவுடன் கூறுகிறார். அவர் அங்கு வந்து விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளதாகவும், அங்கு பூஜைகள் முதலியவை நன்கு செய்யப்படுவதாகவும் சிங்காரமும் மனநினைவுடன் கூறுகிறான். அவன் பிள்ளையின் நலத்தை அசோக் விசாரிக்க, அவனும் நன்றியுடன் அசோக் தனக்கு செய்த உதவியை நினைக்கிறான்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1 comment:

snkm said...

நேத்திக்கு பார்க்காத குறை நிவர்த்தி ஆயிற்று! நன்றிகள் பல! கிருஹஸ்தாச்ரம கடமைகளை இப்போதும் குறைவில்லாமல் நடத்த முடியும்! ஔபாசனம் மட்டும் முக்கியம்! அக்னியை அணையாமல் பார்த்துக்கொள்ளவும் முடியும்! தகுந்த இட வசதி வேண்டும்!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது