5/29/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 91 & 92)

எபிசோட் - 91 (26.05.2010) சுட்டி - 2
நாதன் ஜட்ஜைப் பார்த்து பேசுகிறார். கைலாஷ் டைம்சில் அசோக் பற்றி எழுதும் முன்னாலே தன்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே என அவர் அங்கலாய்க்கிறார். தானே கோவில் புனருத்தாரணத்துக்கான பணத்தை தந்திருப்பேனே எனக்கூறி அவர் வருத்தப்பட, இது தனக்கு ஏற்கனவேயே தோன்றாமல் போயிற்றே என ஜட்ஜும் மன்னிப்பு கேட்கிறார். நாதன் ஒரு பிளாங்க் செக் தந்து விட்டு செல்கிறார்.

காதம்பரி தன் அக்கா வீட்டுக்கு வருகிறாள். அசோக்கிடம் தான் படும் கஷ்டங்களைச் சொல்லி புலம்புகிறாள். அசோக் கதா காலட்சேபத்துக்கு போக, அவள் கதா படத்துக்கு சென்றாளாமே என அவளது அத்திம்பேர் கேட்க, பின்னே வேற என்ன செய்வது என அவள் திரும்பக் கேட்கிறாள். அது ஒரு காதல் கதை, ஆனால் அதுபற்றி அசோக் கேட்டபோது அது ஒரு பக்திப் படம் எனக்கூறி தான் சமாளித்ததை அவள் கூறுகிறாள். ஒரு பத்தினி தன் பர்த்தாவிடம் பொய் சொல்லலாமா என அத்திம்பேர் கேட்க, அவர் வேண்டுமானால் அரிச்சந்திரனாக இருக்கட்டும் தன்னால் முடியாது என அவள் பதிலளிக்கிறாள். அரிச்சந்திரனின் மனைவியின் தாலி அவன் கண்களுக்கு மட்டும்தான் தெரியும் எனவும், ஆனால் காதம்பரியின் தாலி தன் கண்களுக்கு தெரிகிறதே என அவள் அத்திம்பேர் கிண்டலடிக்கிறார்.

அரிச்சந்திரன் மனைவியின் தாலி கதை தனக்கும் தெரியும் என சோவின் நண்பர் குறிப்பிட, அந்த தாலி மேட்டர் ஒரு பிற்சேர்க்கையே என சோ அழுத்தந்திருத்தமாக கூறுகிறார். பிறகு அரிச்சந்திரனின் முழுக்கதையையும் சுருக்கமாகவே கூறுகிறார் (இதை நானும் சமீபத்தில் 1968-ல் படித்திருக்கிறேன்). பொய்யே பேசாதவன் எனப் பெயரெடுத்த அரிச்சந்திரன் உண்மையிலேயே ஆரம்பத்தில் பொய்யுரைத்த கதையும் அதில் வருகிறது. அவனுக்கு மகன் பிறக்கவில்லை என வருணனை நோக்கி தபஸ் செய்ய, அவனும் பிள்ளை வரம் தருகிறான். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன், அப்பிள்ளையை தனக்கு பலி தரவேண்டும் என. அரிச்சந்திரனும் எப்படியாவது பிள்ளை வந்தால் போதும் என அதற்கு ஒத்துக் கொல்ள லோகிதாட்சன் அவனுக்கு பிறக்கிறான்.

ஆனால் பிறகு பிள்ளையை வருணனிடம் தராமல் சாக்கு போக்கு சொல்லியே தள்ளிப் போடுகிறான். அப்போதே பல பொய்களை கூறியவனாகி விட்டான். பிறகு இன்னொரு ஏழையின் பிள்ளையை விலைக்கு வாங்கி அவனை பலி கொடுக்க எண்ணியபோது விஸ்வாமித்திரர் அப்பிள்ளைக்கு வருண மந்திரத்தை உபதேசித்து அவனை அதை சொல்ல வைக்கிறார். வருணனும் வந்து அப்பிள்ளையை ஆசீர்வதிக்க, எல்லாமே சுபமாக முடிகிறது.

ஆனால் அதற்கு பிறகு அரிச்சந்திரன் தான் சொன்ன பொய்களுக்கு பிராயச்சித்தமாக ஒரு பொய் கூட சொல்லாமல் வாழ்ந்து நல்ல பெயர் பெறுகிறான். அவனது குரு வசிஷ்டர் அதற்காக அவனை சிலாகித்து பேச, விஸ்வாமித்திரர் வசிஷ்டரை வெறுப்பேற்றவே அரிச்சந்திரனுக்கு அத்தனை சோதனைகள் வைக்க, அவனும் வெற்றி பெறுகிறான் என கதை போகிறது. ஆனால் ஒரிஜினல் கதையிலோ தாலி விஷயம் இல்லவே இல்லை. இதே மாதிரி பல நிகழ்ச்சிகள் பிற்சேர்க்கையால் மெருகேற்றப்படுகின்றன எனக் கூறும் சோ உதாரணங்களையும் அடுக்குகிறார். அவற்றில் சில வாலிக்கு இந்திரன் அளித்த மாலை எதிராளியின் பாதி பலத்தை முதலிலேயே கிரகித்துக் கொள்வது, லட்சுமணன் கோடு கிழிப்பது, குசேலருக்கு 27 பிள்ளைகள் ஆகியவை ஆகும்.

எப்படியாவது காதம்பரி தன் கணவனை மாற்ற வேண்டுமென அவள் அக்கா கூற, மாறியது தான் மட்டுமே எனக் கூறி அவள் உதாரணங்களை அடுக்குகிறாள்.

நாதன் வீட்டில் வசுமதி காதம்பரியிடம் அவள் அசோக் பற்றி அவளது பிறந்தகத்தில் குறை கூறியது குறித்து கண்டிக்கிறாள். அவரை எப்படி மாற்றுவது என்பது தெரியவில்லை என காதம்பரி வருத்தப்பட, வசுமதி அவளுக்கு ஒரு ஐடியா சொல்கிறாள். அதன்படி அடுத்த நாள் அவர்கள் கோவிலுக்கு நடந்து செல்லும்போது காதம்பரியின் செருப்பு ‘அறுந்து’ போகிறது. வீட்டுக்கு திரும்பிச் சென்று காரில் போகலாம் என அவள் யோசனை கூற, கோவிலுக்கு செல்லும்போது படாடோபம் கூடாது என அசோக் மறுக்கிறான். வாக்குவாதம் இவ்வாறே வளர, கோவில்களில் நைவேத்தியம் செய்து பக்தர்கள்தானே பிறகு அதை உண்கிறார்கள், விக்கிரகம் உண்ணவில்லையே என அவள் கேள்வி கேட்கிறாள். அது சூரியன் கடல் தண்ணீரை உறிஞ்சுவது போல புறக்கண்களுக்கு தெரியாது என அசோக் பதிலளிக்கிறான்.

அது எப்படி சார், தண்ணீரை சூரியன் உறிஞ்சினால் தண்ணீர் குறைவது நமது கண்ணுக்கு தெரிகிறதே, ஆனால் நைவேத்தியத்தின் அளவு குறைவதில்லையே என சோவின் நண்பர் கேட்கிறார். சோ ஒரு எதிர் கேள்வி போடுகிறார், அப்படி நைவேத்தியத்தின் அளவு குறைந்தால் மறுபடி யாராவது நைவேத்தியம் செய்வார்களா என.

(தேடுவோம்)

எபிசோட் - 92 (27.05.2010) சுட்டி - 2
சோ மேலும் பேசுகிறார். நிவேதனம் என்றால் காட்டுதல் எனப் பொருள். பகவானிடம் உனதருளால் இன்றைய அன்னம் கிடைத்தது. இதை உன் ஆசியுடன் எடுத்துக் கொள்கிறேன் எனச் சொல்லி தன்னடகத்தை வளர்த்து கொள்ளவே செய்யப்படுகிறது. விக்கிரகம் உண்ணும் என்று பொருள் அல்ல. அப்படியெல்லாம் நாம் அளிக்கும் அன்னத்தை உண்ண நாம் என்ன கண்ணப்ப நாயனாரா என சோ மேலும் கிண்டலுடன் கேட்கிறார். அசோக் கொடுக்கும் விளக்கம் தவறானது என்றும் கூறுகிறார்.

காதம்பரி விடாது பேசுகிறாள். சரி கார் வேண்டாம், ஆட்டோ வைத்துக் கொண்டு போகலாமே என அவள் கேட்க, அதுவும் படாடோபமே, மேலும் கோவிலுக்கு நடந்து போவதே சிறப்பு என அவன் பதிலளிக்கிறான். கடைசியில் வீட்ட்லிருந்து அவர்கள் அதிக தொலைவில் இல்லையென்றும், காதம்பரி வீட்டுக்கே செல்லலாம் எனவும் அவன் கூறிவிட்டு மேலே செல்கிறான்.

காதம்பரி வீட்டுக்கு வந்து வேறு செருப்பு அணிந்து செல்ல, வசுமதி தான் சொன்ன ஐடியா (செருப்பு அறுந்து போவது) என்னவாயிற்று என கேட்க, காதம்பரி அது ஊத்திக்கிச்சு எனக்கூறிவிட்டு வேகமாக போய் அசோக்குடன் சேர்ந்து கொள்கிறாள். அவனும் அவளை ஒரு பெரிய புன்னகையுடன் வரவேற்க, இது என்ன எப்போதுமே புத்தர் போல அவன் புன்முறுவல் பூக்கிறான் என காதம்பரி ஆச்சரியப்படுகிறாள். அது போதாதா அசோக்குக்கு, இப்படித்தான் பகவான் புத்தர் ஒரு சமயத்துல என பேசியவாறே நடக்க, காதம்பரி ஒரு அற்புதமான கேமரா லுக் தருகிறாள்.

நீலகண்டன் வீட்டுக்கு நாதன் வந்திருக்கிறார். உமா விஷயம் அலசப்படுகிறது. ரமேஷ் விடுதலையானதில் கம்பெனியின் எம்டி என்னும் முறையில் தனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்றாலும், தான் நீலகண்டனின் நண்பர் என்னும் முறையில் அவர் மாப்பிள்ளை விடுதலையானதில் சந்தோஷமே எனக்கூறுகிறார். ரமேஷ் நேரில் வந்து பேசினாலும் உமா அவனுடன் முகம் கொடுத்து பேசவில்லை என நீலகண்டன் வருந்துகிறார். ரமேஷ் வந்த காட்சி ஃப்ளாஷ் பேக்காக காட்டப்படுகிறது. நீலகண்டன் மிகவும் வற்புறுத்திக் கேட்க, உமா அசோக்குடன் கலந்து பேசித்தான் இனிமேல் முடிவெடுக்கப் போவதாகக் கூற நீலகண்டனும் பர்வதமும் கோபமடைகின்றனர்.

தன் பிள்ளை அசோக்தான் விசித்திரமானவன் என தான் நினைத்தால் உமா அதற்கு மேலாக இருக்கிறாளே என நாதனும் வியக்கிறார். பிறகு ரமேஷுக்கு ஏதேனும் பிசினஸ் வைக்க தானே பின்னால் உதவி செய்வதாக அவர் கூற நீலகண்டன் மனம் நெகிழ்கிறார். யார் கண்டது, பின்னால் ரமேஷ் பெரிய பிசினஸ்மேனாகவும் நல்ல பெயர் எடுக்கலாம் என நாதன் மேலும் கூற, நீலக்ண்டன் Every Saint has a past என்று அவர் கூறுகிறா என கேட்க, நாதனோ Every sinner has a future என்று பதிலளிக்கிறார். (வசுமதி இதை பின்னால் நீலகண்டன் தன்னிடம் டெலிஃபோனில் கூறக்கேட்டபோது மனமெல்லாம் நெகிழவில்லை என்று கூறவும் வேண்டுமோ)?

சிங்காரம் நாதனிடம் வேம்பு சாஸ்திரிகள் இப்போதிருக்கும் வீட்டில் படும் கஷ்டங்களை பட்டியலிடுகிறான். நாதன் யோசனையில் ஆழ்கிறார். அப்போது அங்கு வரும் அசோக் ஒரு யோசனை கூறுகிறான். சாம்பு சாஸ்திரிகளின் வீடு விற்பனைக்கு வருகிறது என்றும், அதை நாதனே வாங்கி அவர்கள் பெயருக்கு கிரயம் செய்து கொடுத்து விட்டு, வேம்பு சாஸ்திரிகளையும் சாம்பு சாஸ்திரிகளையும் ஒரே வீட்டில் குடியேற்றி விடலாம் எனபதுதான் அந்த யோசனை. இப்படி செய்தால், வைதீகாளையும் கௌரவம் செய்த மாதிரி இருக்கும் என்றும் அவன் கூறுகிறான்.

நாதன் உடனே அதற்கு ஒத்துக் கொள்ள, அசோக் தனது தந்தையின் தர்ம சிந்தனையை மிகவும் சிலாகிக்கிறான். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என நாதன் கூறிவிட்டு, அசோக் தன் பிள்ளை என்றும் முடிந்தவரை அவன் கேட்பதை தான் தருவது தனது கடமை என அவர் புரிந்து கொண்டிருப்பதாகக் கூறிவிடுகிறார். மேலும் அவனுக்காக தன் உயிரையே கூட தருவேன் எனவும் கூற, பாபர் ஹுமாயூன் கதை மாதிரியா என அசோக் கேட்கிறான். அவரோ அப்படியும் வச்சுக்கலாம், ஆனால் யயாதி மாதிரி பிள்ளையின் யௌவனத்தை கேட்க மாட்டேன் எனக் கூறிவிட்டு, அப்போது தான் காண்டேகரின் யயாதி கதையை தான் படித்து கொண்டிருப்பதாக கூறுகிறார்.

யயாதிதானே பிள்ளையின் இளமையை வாங்கிக் கொண்ட ராஜா, நீங்க ஏற்கனவே சொல்லியிருக்கீங்களே, பேராசை பிடிச்சவன் சார் அவன் என சோவின் நண்பர் கூற, சோ கண்களை உருட்டியவாறே புன்னகை பூக்கிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2 comments:

Kasaly said...

//விஸ்வாமித்திரர் வசிஷ்டரை வெறுப்பேற்றவே அரிச்சந்திரனுக்கு அத்தனை சோதனைகள் வைக்க, அவனும் வெற்றி பெறுகிறான்//
இந்த ‘கலியுக‘ நிகழ்காலத்திலும்
ஒன்றை வெறுப்பேற்ற இன்றொன்று
வசைப்படுகிறது எதற்கெடுத்தாலும்
......!!!!!

நறுமுகை said...

டோண்டு சார். உடன்பாடு இருக்கோ இல்லையோ உங்களின் பதிவுகளை படிக்கும் ஆட்களில் நானும் ஒருவன்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது