9/04/2011

கருப்புப் பணமும் அடர் கருப்புப் பணமும்

சரவணா ஸ்டோர்ஸ் வருமானவரி ரெய்டில் பல கோடி ரூபாய்கள் கணக்கில் வராத பணம் சிக்கியது என்பது குறித்து ஒருவர் பேசியது எனது சிந்தனையைத் தூண்டியது.

அவரைப் பொருத்தவரை அவர் தெளிவாகவே இருந்தார். சரவணா ஸ்டோர்ஸ் தான் சம்பாதித்த பணத்துக்கு முழுமையாக வரி கட்டவில்லை, அதில் மிஞ்சிய பணம்தான் இது. கருப்புப் பணம்தான். ஆனால் உழைத்து சம்பாதித்தது அது.

ஆனால் அதே சமயம் ராசா, கனிமொழி ஆகியோர் ஈட்டியவை உழைத்து சம்பாதித்ததல்ல. ஆகவே அங்கு ரெய்ட் செய்து சிக்கக் கூடிய பணமும் கருப்புப் பணமே, ஆனால் அது அடர் கருப்புப் பணம் என்றார்.

அவர் மேலும் விளக்கினார். சரவணா ஸ்டோர்ஸ் விஷயத்தில் உண்மையிலேயே உழைத்து சம்பாதித்த பணம் என நிரூபித்து விட்டு, அபராதப் பணம் கட்டி விட்டு மிகுதி பணத்தை அவர்கள் வைத்துக் கொள்ளலாம். ஆனால் மேலே சொன்ன இன்னொரு கேசில் அவர்களது முழு கருப்புப் பணமும் கையகப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் நியாயம்.

சம்பாதித்த பணம் முழுக்க கணக்கில் காட்டாமல் இருக்க வைக்கும் காரணங்களில் அரசு கொள்கைகளும் உண்டு. 1970-களில் ஒருவர் வருட வருமானம் 10 லட்சம் என இருந்தால் வரிகளுக்கு பிறகு அவருக்கு மிஞ்சுவது 35 ஆயிரம் மட்டுமே. அத்தருணத்தில் என்ன நடக்கும்? சிலர் அப்படியானும் சம்பாதிக்க வேண்டுமா எனக்கருதி வாளாவிருந்து விடுவர். மற்றும் சிலர் வரி ஏய்ப்பில் ஈடுபடுவர். அதற்காக வருமான வரி அதிகாரிகள் பெறும் வாய்க்கரிசி வேறு கருப்புப் பண புழக்கத்தில் சேரும். அதாவது கருப்புப் பணமும் அடர் கருப்புப் பணமும் உருவாகும். அதனால்தான் வரிவிகிதத்தையே குறைத்தனர்.

இன்னொரு வேடிக்கை தெரியுமா? லஞ்சப் பணம் என்றாலும் அதற்கும் வரி கட்ட வேண்டும் என்பது விதி. ஆனால் வரியை கட்டிவிட்டு தப்பிக்க முடியாது. சிறை தண்டனை வேறு உண்டு. இந்த நிலையில் அம்மாதிரி வரிகள் கிடைக்கும் என நினைக்கிறீர்கள்?

இதெல்லாம் தெரிந்துதான் அரசு அவ்வப்போது தன்னிச்சையாக வருவாயை தெரியப்படுத்தும் ஸ்கீம்களை (VDIS) கொண்டு வருகின்றனர். குறிப்பிட்ட காலத்துக்கு வருமானத்தின் மூலத்தைக் கூறாமல் 30% வரி கட்டினால் மன்னிப்பு அளிக்கப்படும். இம்மாதிரி கடைசியாக அறிவிக்கப்பட்டது 1997-ஆம் ஆண்டில்.

அடுத்த VDIS எப்போது வரும் என பலர் யோசித்து வருவதாகக் கேள்வி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

14 comments:

Ganpat said...

இந்தியாவின் வரி விகிதம் முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிடும்போது மிக குறைவானது.இருப்பினும் இங்கு வரி ஏய்ப்பு அதிகம்.காரணம் மக்களுக்கு தாங்கள் தேர்ந்தெடுத்த அரசின் மீதே நம்பிக்கையோ,மதிப்போ இல்லை.தான் கட்டும் வரிப்பணம் அரசிற்கு செல்லாமல் அரசியல்வாதிக்கு செல்லப்போகிறது என நம்பும் இந்தியன் வரி கட்ட விரும்புவதில்லை.
நேர்மை எனும் ஒரு அடிப்படை அம்சம் அதள பாதாளத்தில் இருக்கும் நம் நாட்டில் இப்போதைக்கு இதற்கு தீர்வே கிடையாது.
ஏமாற்றுவது நமது தேசீய குணமாக ஆகிவிட்டது.என்றாவது ஒரு நாள் ஒரு நல்ல தலைவர் வரும்போது தான் இந்நிலை மாறும்.

Thought seeder said...

திரு டோண்டு - சரவணா ஸ்டோர்ஸ் செய்ததும் உழலே. கருப்பு பணம், அடர் கருப்பு என்றெல்லாம் வித்யாசம் கற்பித்தல், பிறகு சட்டத்தை மதிக்கவே மாட்டார்கள்...நீங்கள் சொல்வது கவுண்டமணி ஜோக் போல உள்ளது. "சார், டெம்போ-lam வைச்சி கடதிர்கோம் பாத்து போட்டு குடுங்க" ஒரு திருடன் கஷ்டப்பட்டு bank-a கொள்ளை அடித்தால் தண்டனை குறைக்க கேட்பிர்கள் போல?

VDIS பற்றிய ஒரு போஸ்ட்: http://intellibriefs.blogspot.com/2011/09/friend-father-philosopher-of-black.html - இதை வாசியுங்கள்...

Ganpat said...

think tank ,,,
டோண்டு சொன்னதில் தவறேதும் இல்லை.
ஒரு சிறுவனை அவனுடைய பக்கத்து வீட்டுக்காரன் ஏமாற்றுவதற்கும்,அவன் தந்தையே ஏமாற்றுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.நாம் முதலில் சரி செய்ய வேண்டியது அரசும் அரசு இயந்திரங்களும் செய்யும் மோசடிகளை..சரவணா ஸ்டோர்ஸும்,சரவணா பவனும் இதற்குப்பிறகுதான்.

வஜ்ரா said...

கருப்புல ரெண்டு கலர் கொடுத்த மாஹானுபாவுலு வாழ்க.

ராஜ நடராஜன் said...

//சம்பாதித்த பணம் முழுக்க கணக்கில் காட்டாமல் இருக்க வைக்கும் காரணங்களில் அரசு கொள்கைகளும் உண்டு. 1970-களில் ஒருவர் வருட வருமானம் 10 லட்சம் என இருந்தால் வரிகளுக்கு பிறகு அவருக்கு மிஞ்சுவது 35 ஆயிரம் மட்டுமே.//

இப்போதைய விகிதாச்சார ஒப்பீடு சொல்ல மறந்து விட்டீர்களே!1970 கணக்குக்கு யார் வேண்டுமென்றாலும் திருட்டுத்தனம் செய்யும் சாத்தியமான கொள்கையே. ஏமாற்றும் குணம் வளர்வதற்கு இந்திய அரசு கொள்கைகளும் கூட காரணம்தான் போலும்.

அடர் கருப்பு எல்லோருக்கும் புரியும்படி லஞ்சம்,ஊழல் என்று நடைமுறைப்புழக்கம் வந்து விட்டதென்ற போதிலும் கருப்பு பணம்,அடர் கருப்பு பணம் வித்தியாசமான சிந்தனைதான்.

Indian said...

//நேர்மை எனும் ஒரு அடிப்படை அம்சம் அதள பாதாளத்தில் இருக்கும் நம் நாட்டில் இப்போதைக்கு இதற்கு தீர்வே கிடையாது.
ஏமாற்றுவது நமது தேசீய குணமாக ஆகிவிட்டது.என்றாவது ஒரு நாள் ஒரு நல்ல தலைவர் வரும்போது தான் இந்நிலை மாறும்.//

ஆக மக்களிடம் நேர்மை ஒழுக்கம் குறைந்துவிட்டது என்பது புரிகிறது. இக்குணங்கள் மக்களிடம் திரும்பவும் வந்தால்தான் சமூகம், நாடு உருப்படும் என்றும் தெரிகிறது. ஆனாலும் ஒரு *தலைவர்* வந்து இதெல்லாம் தப்பு, மாத்திக்கோ என்று சொல்லும் வரை இப்படியே இருக்கவே விரும்புகிறோம்.

ஆக, மாற்றம் என்பது என்னில் தொடங்கப்பட வேண்டியதில்லை. அது ஈரோடு பக்கம், தூத்துக்குடிப் பக்கம் எவனோ ஒரு இளிச்சவாயன் தொடங்கட்டும். கடேசில வந்து நான் சேர்ந்துக்கிறேன்.

இப்படிப்பட்ட நிலைப்பாடுடனே நீங்களும், நானும் வாழ்ந்து வருகிறோம். பிரச்சினை என்னான்னா, எல்லாப் பயலும் இதே மாதிரி நினைக்கிறான்.

இப்ப யோசியுங்க, இந்த நாடு உருப்பட மாற்றம் எங்கே தொடங்க வேண்டுமென்று.

Indian said...

//திரு டோண்டு - சரவணா ஸ்டோர்ஸ் செய்ததும் உழலே. //

அவர்கள் செய்தது (allegedly) வரி ஏய்ப்பு. சார், 12% வரி கட்டறீங்களான்னு கடைக்காரன் கேட்டா, வேண்டாம்னு சொல்லி, பணத்த மிச்சம் பிடிச்சிட்டதா பெருமிதத்தோட வாறமே. அந்த வரி ஏய்ப்புல நமக்கும் பங்கு இருக்குதானே?

நாம் ஏன் பொருட்களை வாங்கும்போது வணிக வரி செலுத்தி ரசீதுடன் வாங்கக் கூடாது?

Indian said...

//
லஞ்சப் பணம் என்றாலும் அதற்கும் வரி கட்ட வேண்டும் என்பது விதி. ஆனால் வரியை கட்டிவிட்டு தப்பிக்க முடியாது. //

கணக்கில் காட்டினால் தானே வரி கட்ட வேண்டும்?

லஞ்சப் பணம் பிடிபடும் போது நீதிமன்ற கருவூலத்திலல்லவா செலுத்தப்படும்?

பின்னர் அது முறையாக சம்பாதித்த பணம் என்று நிறுவப்படாவிட்டால் அரசுக்கே போய்விடும் என்று நினைக்கிறேன்.

ரிஷபன்Meena said...

தங்களுடைய குறிப்பிட்டு சொல்லக்கூடிய பதிவுகளில் இதுவும் ஒன்று.

வாடிக்கையாளர்களைக் கையாள்வது குறித்தும், சமூக சேவை நிறுவனங்களிடம் எப்படி கறாராக இருக்க வேண்டும் என்றும் எழுதிய பதிவுகள் நல்ல அனுபவ பகிர்வுகள்.

திருட்டு திருட்டு தான் என்றாலும் கழுத்தை அறுத்து கொள்ளையடிப்பவனுடன் ஒப்பிட்டால் சொம்பு திருடுகிறவனை சகித்துக் கொள்ளலாம்.

ரிஷபன்Meena said...

// Ganpat said...
இந்தியாவின் வரி விகிதம் முன்னேறிய //

நூற்றுக்கு நூறு சரி.

இந்தியாவில சராசரி மனிதர்களிடம் நேர்மையே இல்ல, எவனாவது ஒழுங்கா வரிக்கட்டுகிறானா ? வளார்ந்த நாடுகளில் எல்லாம் மனமுவந்து மக்கள் வரிகட்டுகிறாகள் வாழ்கிறார்கள், நம்ம மக்களிடம் ஒழுக்கமே இல்லை என்றார் என் நண்பர் ஒருவர்.

அவங்களுக்கெல்லாம் வரிகட்டினா மட்டும் போதும் தரமான சாலை, நல்ல் தரத்தில் அரசு பள்ளி மற்று மருத்துவமனைக்கு உத்தரவாதம்.

ஆனா நம்ம நாட்டில் வரிமட்டும் கட்டனும் மத்த எதுக்குமே காராண்டி கிடையாது. எத்தனை ஜனத்தொகை இருந்தாலும் வரிப்பணத்தை சுருட்டாமல் இருந்த்தால் இப்போ இருப்பதை விட பல மடங்கு அருமையா செய்யமுடியும்.

நம்ம கட்டுகிற வரி நல்ல வழியில் செலவாகிறது என்று தெரிந்தாலே போதும் இங்கேயும் மனமுவந்து வரிக்கட்டும் மக்களை பார்க்கமுடியும்.

நம்ம பொதுஜனங்களில் பெரும்பாண்மையானவர்கள் மென்மையானவர்கள்.

காவ்யா said...

வரி ஏய்ப்பும் ஊழலே. வரியைக்கட்டாமல் அல்லது குறைத்துக்கட்ட ஏதுவாக செய்வதெல்லாம் ஊழலே.

பணத்தை சம்பாதித்த வழிகளில் கூட நேர்மையானதும் குறுக்குவழியும் உண்டு. கடத்திலிலும் சம்பாதிக்கலாம். அச்சம்பாதித்தையும் மறைக்கலாம்.

சரவணா ஸ்டோர்ஸ் வணிகத்தில்தான் சம்பாத்தித்தார்கள் என்றாலும் அவர்கள் அச்சம்பாத்தியத்தை மட்டும் குறைத்துக்காட்டவில்லை. வணிகப்பொருட்கள், அசையும் சொத்துக்கள் என்றவைகளை அவர்கள் ஒழித்தும் வைத்திருந்தார்கள். அவைகள் இன்று சீல் போடப்பட்டு இனகம் டாக்ஸ் கையில்.

மேலும், ஊழியர்களில் ஏழ்மை பின்புலத்தைத்தனக்குச் சாதகாமப் பயன்படுத்தியும் வரி ஏய்ப்பு பண்ணியிருக்கிறார்கள். அவர்களுக்குக் கொடுக்குப‌படும் ஊதியத்தைப் பண்மடங்காகக் கள்ளக்கணக்குக் காட்டி வரிஏய்ப்பு செய்திருக்கிறார்கள். இதெல்லாம் ஊழல் மட்டுமல்ல. பெரும்பாவமுமாம்.

இவர்களிடம் கருப்பும், அடர்கரும்பபும் மற்றும் பாவமும் கலந்தேயிருக்கிறது.

ராசா போன்றவர்கள் அடர்கருப்பு மட்டுமே

ரமணா said...

6.அமெரிக்காவின் முதல் பொருளாதார வீழ்ச்சி சமயம் இந்தியா தப்பித்தது இந்த அடர் கருப்பு பணத்தால்தான் என்பது பற்றி?
7.அஜித்தின் மங்காத்தாவின் வசூல் எந்திரனை மிஞ்சி விட்டதாமே?
8.சன் டீவி இல்லா அரசு டீவி ?
9.லேப்டாப்,மிக்ஸி,கிரண்டர்,ஃபேன் விலை குறையுமா தமிழகத்தில்?
10.சுப்பிரமணிய சாமியின் தொடர் மெளனம் தயாநிதி விசயத்தில் ?

வஜ்ரா said...

//
9.லேப்டாப்,மிக்ஸி,கிரண்டர்,ஃபேன் விலை குறையுமா தமிழகத்தில்?
//
டீ வி இலவசமாக வழங்கப்பட்டபோது டீ வி விலை குறைந்ததா ? இல்லையே.

இனிமேல், கலைஞர் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் பழைய டீ விக்கு புதிய 32" எல்.சி.டி அல்லது எல்.இ.டி டீவி வழங்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

pt said...

/வஜ்ரா said...

//
9.லேப்டாப்,மிக்ஸி,கிரண்டர்,ஃபேன் விலை குறையுமா தமிழகத்தில்?
//
டீ வி இலவசமாக வழங்கப்பட்டபோது டீ வி விலை குறைந்ததா ? இல்லையே.

இனிமேல், கலைஞர் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் பழைய டீ விக்கு புதிய 32" எல்.சி.டி அல்லது எல்.இ.டி டீவி வழங்கவேண்டும் என்று நினைக்கிறேன்./


WITH FREE CABLE TV CONNECTION OR LATEST DVD PALYER WITH 5:1 SPEAKERS.!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது