திருக்குறள் பலரால் பலசமயங்களில் வெவ்வேறு பார்வைகளில் விமரிசனம் செய்யப்பட்டுள்ளது. மேலாண்மைக்கு உதாரணமாக பல குறள்கள் உள்ளன. இருக்கவே இருக்கின்றன நேரடியான உரைகள். உதாரணத்துக்கு எனது உறவினர் புலவர் விஸ்வநாதன் அவர்கள் பரிபேலழகர் உரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இப்போதுதான் வெளியிட்டுள்ளார் அந்த முயற்சியில் நானும் எனதளவில் ஒரு சிறு பங்கை அளித்துள்ளேன்.
ஆனால் இப்போது எனது பார்வையில் வந்திருக்கும் இந்த இடுகை திருக்குறளை முற்றிலும் ஒரு புதிய கோணத்தில் அணுகியுள்ளது. நண்பர் என்ற்றென்றும் அன்புடன் பாலா தனது நண்பர் வெங்கடாசலம் சார்பில் அதை இட்டுடுள்ளார். இதை பலரும் பார்க்க வேண்டு என்ற நோக்கத்தில் நான் உரிமை எடுத்துக் கொண்டு பாலா அவர்களின் பதிவை அவரது அனுமதியுடன் இங்கும் இடுகிறேன்.
முதலில் பாலா அவர்கள் கூறுவதைக் கேட்போம்.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் பேராசிரியராக, பல ஆண்டுகள் பணி புரிந்து ஓய்வு பெற்ற, எனது நண்பர் முனைவர் திரு.வெங்கடாசலம் அவர்கள், இந்த இடுகைக்கு இடப்பட்ட தலைப்பில் ஒர் நூல் எழுதியிருக்கிறார். நூல் விரைவில் வெளி வர உள்ளது. நண்பர் எனக்கு நூலின் சிலபல பகுதிகளை வாசிக்க அனுப்பியிருந்தார். ஒரு புதிய கண்ணோட்டத்தில், சிந்தனையைத் தூண்டுவதாக, நான் படித்த குறள் உரைகளிலிருந்து வித்தியாசமான ஒன்றாக, முக்கியமாக வாசிக்க ஆர்வமாக இருந்தது! முழுதும் வாசித்த பின்னர், ஒரு மதிப்புரை எழுத திட்டமிருக்கிறது. இப்போது, திரு. வெங்கடாசலமே எழுதி அனுப்பிய நூல் அறிமுக முன்னுரையில் நான் சில நூல் குறிப்புகளை சேர்த்ததில் விளைந்த கட்டுரை கீழே!
என்றென்றும் அன்புடன்
பாலா
இப்போது ஓவர் டு வெங்கடாசலம் அவர்கள்:
என்னுடைய நண்பர் தமிழ் பேராசிரியர் ஒருவரிடம் நான் இப்புத்தகத்தை எழுதத் திட்டமிட்டிருக்கிறேன் என்று கூறிய போது . . . ஹும் நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா? தமிழில் எதாவது எழுதவேண்டும் என நினைப்பவர்களெல்லாம் எழுதுவது திருக்குறளைப் பற்றித்தான். நூற்றுக்கணக்கில் வந்தாகிவிட்டது இனியும் என்ன எழுதப்போகிறீர்கள் என்றார். சில மணித்துளிகள் என் நா என்னுடன் ஒத்துழைக்க மறுத்துவிட்டது! ஒருவாறாக சக்தியைத் திரட்டிக்கொண்டு தொண்டையைச் சரி செய்து கொண்டு பேசலானேன். . . . என்னுடைய தடுமாற்றத்தைக் கண்ணுற்ற அவர் இளம் சிரிப்புடன் என்னை நோக்கியவாறு இருந்தார்.
திடீரென்று என்னுள் ஒரு உத்வேகம். சரி சார். . .
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதில்லார்
தோன்றலின் தோன்றாமை நன்று 236
என்ற குறட்பாவுக்கு என்ன பொருளென்று கூற இயலுமா என்றேன். இக்குறள் எல்லா மேடைப் பேச்சாளர்களும் பயன்படுத்தும் குறளாயிற்றே என்றவர் ஒரு துறையில் பணி புரியும் ஒருவன் அத்துறையினரின் பாராட்டுதல்களை பெறும் வண்ணம் பணி புரியவேண்டும் இல்லையென்றால் அவன் அத்துறையில் பணி புரியாதிருத்தல் நலம் என்று பொருள் என்றார். முதலில் பரிமேலழகர் ஒருவன் புகழ்பட வாழவில்லை என்றால் அவன் பிறவாதிருத்தலே நலம் என்று கூறி உள்ளார் என்று தொடர்ந்தார்.
நான் அவரை இடைமறித்துக் கேட்டேன்: புகழ் என்றால் என்ன பொருள் என்று கூறமுடியுமா? பேராசிரியர்க்குக் கொஞ்சம் எரிச்சல். புகழென்றால் பாப்புலர். . . பேரும் புகழும் பாராட்டும் பெற்றிருப்பது என்றார்.
மன்னியுங்கள் திருவள்ளுவர் புகழ் என்றசொல்லை அந்தப்பொருளில் பயன்படுத்தவில்லை. புகழ் என்பது ஒரு கலைச்சொல். அதன் பொருள் அதிகாரத்தின் முதல் குறட்பாவில் உள்ளது. அந்தக்குறள்:
ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு 231
இவ்வதிகாரம் ஒப்புரவு மற்றும் ஈகை அதிகாரங்களுக்குப் பிறகு வருவது. ஒருவனுடைய ஆன்மாவிற்கு (உயிர்க்கு) இவ்வுலகில் கிட்டும் ஊதியம் என்னவென்றால் இவ்வுலக வாழ்க்கை அவனுக்கு பிறருக்கு ஈகை புரியவும் ஒப்புரவு செய்யவும் ஒரு வாய்ப்பை நல்கி இருக்கிறது என்பதாகும் என்றேன்.
இப்படி ஒரு பொருளை அவர் அறிந்திருக்கவில்லை.
மேலும் திருவள்ளுவர் சிறப்பான நூல்களை எழுதுவோரெல்லாம் தம் நூல்களுக்கு தேர்வு செய்யும் கருப்பொருள் அவ்வாறு ஈகை புரிந்து வாழ்ந்தவரின் வாழ்க்கையாகும் என்று தனது இரண்டாவது குறளில் கூறுகிறார் ஆகவே புகழ்(இசை) என்றால் ஈகை மற்றும் ஒப்புரவு செய்து அதன்மூலம் பயனாளிகளின் மனதில் பாராட்டையும் மதிப்பையும் பெறுவது மட்டுமே என்றேன்.
சற்றே அசந்து போன பேராசிரியர் அதனால் ஆன்மாவுக்கு என்ன லாபம் என்றார் பிறருக்கு மனமுவந்து தமக்கு அசௌகர்யம் ஏற்படுத்திக்கொண்டும் கூட உதவுவதென்பது ஒருவன் அவனுடைய ஆன்மாவில் நின்று செயல்படும்போது மட்டுமே சாத்தியம். (ஈகோவில் இருக்கும்போது சாத்தியமே இல்லை.) ஆகவே அப்படிச்செயல்படும் ஒருவன் புகழப்படும்போது அவன் மேலும் மேலும் தன்னுடைய ஆன்மாவில் திளைப்பதற்கு ஊக்கம் பெறுகிறான். அப்படி ஆன்மாவில் நிலைத்திருக்கும் ஒருவனுடைய ஆன்மா மெல்ல மெல்ல மேம்பாடு அடையும். முற்றிலும் மேம்பாடு அடைந்த ஆன்மா பிறப்புச்சங்கலி அறுந்து கடவுள் உலகில் நிரந்தரமாகக் குடிபுகும்.
இவ்வாறு ஆன்ம மேம்பாடு அடைவதே இவ்வுலக வாழ்வின் பொருள் என்பதை பரிபூரனமாக உணர்ந்தவனை வித்தகன் என்ற சொல்லால் அதிகாரத்தின் ஐந்தாவது குறளில் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர் என்று கூறி நிறுத்தினேன். பேராசிரியர் ஆச்சரியப்பட்டு, வித்தகர் என்றால் ஆங்கிலத்தில் wise என்று கூறுகிறோமே அதுதான் என்றல்லவா நினைத்திருந்தேன் . . . அப்படியானால் அக்குறளுக்கு என்ன பொருள்? மிக ஆவலாகக் கேட்டார் அவர். அந்தக்குறள்:
நத்தம்போல கேடும் உளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது
அதாவது வாழ்க்கையில் செழிப்பும் வறட்சியும் அல்லது இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவன. இவ்விரண்டு நிதர்சனங்களை மனதளவில் ஒப்புக் கொண்டு துன்பம் வரும்போது அதனை convert the problem into opportunity எனப்படுவதைப் போல அதை தன் மீது ஒரு நல் அழுத்தமாக எடுத்துக்கொண்டு அயராது தன்னால் இயன்ற அளவில் மற்றவர்களுடைய வளர்ச்சிக்கு ஒத்துழைப்பவனை வித்தகன் என்று அழைக்கிறார் திருவள்ளுவர் என்றேன்.
பேராசிரியர் மௌனமானார். ”இது மாதிரி 584 குறட்பாக்களுக்கும் 33 அதிகாரங்களுக்கும் புதுப்பொருள் இத்துணை நூற்றாண்டுகளில் வராத பொருள் கண்டுள்ளேன். திருக்குறள் ஒரு அருமையான ஆற்றுப்படுத்தும் மன நூல். அதன் முழுப்பயனும் தற்போது உள்ள உரைகளால் கிட்டாது என நான் மனதாற நம்புவதால் இந்நூலை எழுதினேன்” என்று கூறினேன். பேராசிரியர் நெகிழ்ந்து போனார். என்னுடைய முயற்சிக்கு தன்னுடைய இதயபூர்வ இல்லை இல்லை ஆன்ம பூர்வ வாழ்த்துகளென்றார்.
மேப் லித்தோ சைசில் 570 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை ரூ.285. புத்தகம் வேண்டுவோர் 09886406695 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும். அல்லது prof_venkat1947@yahoo.co.in என்ற முகவரிக்கு எழுதவும்.
நூலிலிருந்து சில குறிப்புகள்:
ஒவ்வொருவருக்கும் அவருடய பின்னணி எதை ஒன்றையும் புரிந்துகொள்வதில் முக்கிய பங்கு வகிக்கும். சரித்திர ஆசிரியர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களின் அவரவரின் சார்பினைப்பொறுத்து ஒரே செய்தியை வேறு வேறு விதமாக விவரிப்பதை நாமெல்லாரும் அறிவோம். அவ்வகையில் ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் உளவியல் துறையில் ஆசிரியராகப் பணியாற்றியதும் ஆய்வுகளை வழி நடத்தியதும் என்னை திருக்குறளை ஒரு உளவியல் புத்தகமாகப் பார்க்க வைத்துவிட்டது. அந்தப்பார்வையில் சொல்வதற்கு புதிய செய்திகள் நிறைய உள்ளதாக எனக்குப்பட்டதாலேயே நான் இம்முயற்சியில் இறங்கினேன்.
இல்லையென்றால் தமிழை நன்றாகக் கல்லாததோடு இலக்கணப்பிழை, எழுத்துப்பிழை இல்லாமல் எழுதவும் தெரியாத நான் இம்முயற்சியில் இறங்குவேனா? முப்பதுக்கும் மேற்பட்ட அதிகாரங்களுக்கும் ஐநூற்று எண்பதுக்கும் மேற்பட்ட குறட்பாக்களுக்கும் புதிய பொருள் இத்தனை நூற்றாண்டுகளில் நானறிந்தவரை யாரும் கூறாத விளக்கங்களையும் பொருள்களையும் தரத்துணிவேனா?
ஆகவே வாசகர்களும் தமிழன்பர்களும் இந்நூல் ஒரு உளவியல் மாணவனின் பார்வை, அந்தப்பார்வையில் கிட்டும் விளக்கம் என்று மட்டுமே இம்முயற்சியை எடுத்துக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
திருவள்ளுவர் காட்டும் மனநல அடையாளங்கள்:
தம்முடைய வாழ்க்கை, தொழில் மற்றும் காதல் ஆகியனவற்றின் செயல் மற்றும் முயற்சிகளை சமூக நலன் மற்றும் தம்முடைய நலன் ஆகிய இரண்டினையும் ஒரு சேர மேம்படும்படி அமைத்துக் கொள்ளுதல்,
எல்லா உயிரிகளிடமும் அன்பு பாராட்டுவதில் அசாதாரன எல்லைக்குச் செல்வது , தேவைப்படின் அருள் செய்வது அதாவது ஒருவருடைய உரிமையை அவர் துய்ப்பதற்கு பக்க பலமாகச் செயல்படுவது, அந்தச் செயல்பாட்டில் பெரும் துன்பம் மற்றும் பொருள் இழப்பு ஆகியவற்றை மனம் உவந்து ஏற்றுக் கொள்ளுதல்,
எல்லா உயிர்களிடமும் ஒப்புரவு கொண்டு ஒழுகுவது அதாவது தன்னளவில் பொருள் உதவி, உழைப்புதவி, திறனேற்றல் ஆகியனவற்றை தகுதியானவர்க்குத் தருதல்,
தமது உரிமையை விட்டுவிடாமலும் பிறர் உரிமையைப் பறிக்காமலும் செயல்படுவது,
பிறருடைய பிரச்சனைகளை அவர்களிடத்தில் தம்மை வைத்து அறிந்து கொண்டு ஆவன செய்வது, இச்செயல்பாட்டில் அடுத்தவரைத் தணடனைக்கு உட்படுத்த நேரினும் அதனைச் செய்வது (கண்ணோட்டம்),
எந்த சூழலிலும் உண்மையை அதையும் புரை தீர்ந்த நன்மை பயக்கும் வண்ணம் பேசுவது,
கோபம், ஆசை, பொறாமை வெறுப்பு ஆகிய உணர்ச்சிகளை அறவழியில் நிர்வகிப்பது
தன்னுடைய பொறி (aptitude/strength) இன்னதென அறிந்து அதற்குத்தக திறன்களை ஏற்படுத்திக் கொண்டு தான் தேர்ந்த துறையின் அறிவுக்கு விசுவாசமாக தாளாது உழைப்பது,
எப்பொருள் யார் வாய்க்கேட்பினும் (தம்மையும் சேர்த்து) அப்பொருளின் உண்மைத் தன்மையை அறிந்து அதனைக் கடைப்பிடிப்பது,
எல்லாப் பணிகளிலும் அப்பணிக்கு ஆதாரத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள சிறந்த நடை முறைகளை மேற்கொண்டு ஒழுகுதல் (following evidence based best practices of a given profession),
தன்னுடைய தனிப்பட்ட வாழ்விலும், பணி சார்ந்த வாழ்விலும், பொது வாழ்விலும் தம்முடைய செயல்களனைத்தையும் மேற்கண்ட கொள்கைகளின் வழி நடாத்துவது,
“நான் ஒரு மனிதன் என்ற அடிப்படையில் குற்றம் புரியும் ஏது உள்ளவன். பல சமயங்களிலும் விழிப்பின்றி இருப்பின் பல்வேறான குற்றங்களைப் புரியக்கூடும். ஆகையால் சதா சர்வகாலமும் விழிப்புடன் நான் இருக்கவேண்டும். அதையும் மீறி நான் தவறு செய்துவிட்டால் என்னுடைய தவறுக்கு வருந்தி என்னால் பாதிக்கப்பட்டவருக்கு தக்க இழப்பு மீட்பினை ஈந்து சமாதானம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு நான் குற்ற உணர்வில் ஆழ்ந்து விடாமலிருக்க வேண்டும். அரசு நீதி பரிபாலனம் செய்யும்போது தரும் தண்டனையையும் மனமுவந்து ஏற்றுக் கொண்டு தண்டனையை எனக்குப் பயனுள்ளதாக மாற்றிக்கொண்டு தண்டனைக்குப் பிறகு மறுவாழ்வு வாழ்வதற்கு ஆவன செய்ய வேண்டும்” என்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டு அதனைச் செயல் படுத்துதல் ஆகியனவாம்.
மொத்தத்தில் எந்த செயலையும் சிந்தனையையும் ஒருவன் தன்னுடைய ஆன்மாவினை கடவுளர் உலகம் புகுவதற்குத் தகுதியடையும் வண்ணம் செம்மைப்படுத்துவதற்கு உறுதுணையாக அமைத்துக் கொள்வது உயர்ந்த மனநலத்தின் அடையாளம். இந்த வகையில் திருக்குறள் ஒரு ஆன்மிகப்பயண வழி காட்டி.
இவ்வடையாளங்களெல்லாம் Cognitive Psychology மற்றும் Humanistic Psychology ஆகிய உளவியல் துறைகளின் கருத்துக்களோடு ஏற்புடையவையே. கடவுள் மனிதருடைய இவ்வுலக வாழ்வில் தலையிடுவதில்லை என்பது திருவள்ளுவருடைய கொள்கையாக உள்ளது. ஆகையால் உளவியலருக்கு திருவள்ளுவர் வழியில் மனிதர்களை ஆற்றுப்படுத்துவதில் பிரச்சனை இருப்பதற்கு வாய்ப்பு இல்லை..
திருவள்ளுவர் ஒரு எதார்த்தவாதி. பல சமயங்களில் அவர் வகுத்தளித்துள்ள கோட்பாடுகளை முற்றிலும் பிறளாது கடைப் பிடித்தல் மிகக்கடினம் என்பதனை உணர்ந்துள்ள அவர் எல்லாரையும் ஊக்குவிக்கிறாரே ஒழிய யாரையும் நீ தவறி விட்டாய் இனி உனக்கு வாழ்வில்லை என்று சபிப்பதில்லை. கடவுளின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்று கூறுவதில்லை. தப்ப விரும்பினால் செய்ய வேண்டிய பரிகாரம் இதுவென எதையும் கூறுவதில்லை. சரியாகச் சொல்வதானால் கடவுள் தண்டிப்பார் என்ற கருத்து திருக்குறளில் இல்லை. ஆனால் அறம் தண்டிக்கும் என்று உறுதி படக்கூறுகிறார்.
அது எவ்விதம் என்பதை நூலில் பல இடங்களில் விளக்கி உள்ளேன்.
மன நலத்துடன் (அறவழியில் வாழும் வாழ்வு) கூடிய வாழ்வினைத் தேர்ந்தெடுத்து வாழாதார்க்கு கடவுளர் உலகில் குடிபுகல் என்ற இலக்கை நோக்கிய பயணம் நீண்ட நெடிய பாதையாக முடிவே இல்லாமல் இருக்க மன நலத்துடன் வாழ்வோர்க்கு அது மிகக் குறுகியதாக இருக்கும். அவ்வளவுதான் வித்தியாசம். சிறிதளவே அப்பாதையில் ஒருவர் முன்னேறினாலும் முன்னேற்றம் தானே ஒழிய பின்னேற்றமில்லை.
ஒரு பிறவியில் ஆன்ம பலம் பெரிதும் குன்றும் அளவுக்கு அறம் பிறழ்ந்த வாழ்வு வாழ்வோருக்கு பின் வரும் பிறவிகளில் இழந்த ஆன்ம பலத்தை மீட்டு எடுப்பதற்கே பல காலம் பிடிக்குமென்பதும் ஆன்ம பலம் அதிகமாக உள்ளவர்க்கு பின் வரும் பிறவிகளில் அவர்கள் அறவழியில் வாழ்வதற்கு அவ்வான்ம பலம் உறுதுணையாக இருக்குமென்பதும் மிகவும் ஆறுதல் அளிப்பதும் நம்பிக்கையூட்டுவதுமான செய்தியாகும். கர்மா கொள்கையை (Theory of karma) இந்தக்கோணத்தில் திருவள்ளுவர் அணுகி உள்ளார் என்றே தோன்றுகிறது.
கடவுள் கொள்கையைப் பொருத்தமட்டில் கடவுள் இருக்கின்றாரா அல்லது இல்லையா என்ற கேள்விக்கே செல்லாமல் ஒருவர் திருக்குறளால் பயன்பெறலாம் என்பதுவும் கண்கூடு. இந்தக் கருத்தின்படியும் உளவியலருக்கு திருவள்ளுவருடைய கடவுள் கொள்கையின் பால் குழப்பம் இருக்கமுடியாது.
மேலும் எனது நூலில் நான் கூறி உள்ள புதிய விளக்கவுரைகளில் சில அல்லது பல பிறராலும் கூறப்பட்டும் இருக்கலாம்.
அப்படி கூறப்பட்டு இருக்கும் உரைகளை என் கவனத்துக்குக் கொண்டுவந்தால் நான் அவற்றை இப்புத்தகத்தின் அடுத்த பதிப்பில் குறிப்பிட்டு அவர்களுடைய பங்களிப்பை ஏற்று உலகுக்கு அறிவிப்பேன் எனக்கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
அருஞ்சொற்பொருள் விளக்கம் அதிகாரம் மற்றும் குறட்பாக்கள் ஆகியவற்றின் பொருளடக்கம் புத்தகத்தின் இறுதியில் உள்ளன.
நூலிலிருந்து, மாதிரிக்காக, ஒரு குறளுக்கான விளக்கவுரையை தந்துள்ளேன்.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு 5
புதிர்: குறளில் நான்கு புதிர்கள் உள்ளன. இருள் என்றால் என்ன பொருள்? இருவினைகள் யாவை? இறைவன் பொருள்சேர் என்றால் என்ன பொருள்? புகழ் புரிந்தார் மாட்டு என்றால் என்ன பொருள்?
விளக்கம்: இருள் என்றால் குழப்பம் அல்லது மயக்கம். அதாவது ஒன்றை இன்னொன்று எனப்பொருள் கொள்வது. சற்று இருள் நிறைந்த ஒரு இடத்தில் கிடக்கும் கயிற்றினைப் பாம்பு எனத் தவறுதலாகப் பொருள் கொண்டு விடுகிறோமல்லவா?
இவ்வுலக வாழ்க்கை ஒரு பயிற்சிக்களம், இவ்வுலகத்தில் நாம் துய்ப்பன யாவும் பயிற்சிக்கான பொருள்கள். பயிற்சியின் நோக்கம் உயிரை அல்லது ஆன்மாவை கடவுளர் உலகில் வசிப்பதற்கு தகுதியானதாக மேம்படுத்துவது. ஏனெனில் கடவுள் ஒருவரே உண்மையான பொருள். இதைப் புரிந்து கொள்ளாமல் இவ்வுலகமும் அதன்பொருள்களும் உண்மையானவை என மயங்கி நிற்றலே இருளாம்.
இரு வினைகளாவன, சிந்தனையும் மற்றும் செயலாம். (சிந்தனையும் ஒரு செயலே. சிந்தனைத் தொழிலாளிகள் என்ற கருத்தினை நாம் அறிவோம்.)
அடுத்து இறைவன் பொருள் சேர் என்றால் இறைவன் மட்டுமே உண்மைப்பொருள் என்பதைச் சார்ந்த ஒன்று என்று பொருள். அந்த ஒன்று எது? இந்தக்கேள்வி நாம் நான்காவதாக எழுப்பிய புதிர்வினாவுக்கு நம்மை இட்டுச்செல்கிறது. புகழ் புரிந்தார் மாட்டு என்று சொல்வதன் மூலம் புகழ் என்ற சொல்லை புகழுக்குரிய செயலைக் குறிப்பதாக திருவள்ளுவர் கையாண்டிருக்கிறார் என்பது தெரிய வருகிறது அல்லவா?
திருக்குறளில் புகழ் என்ற சொல் ஒரு கலைச்சொல்லாக சிறப்பாக வரையறைக்கப்பட்டுள்ள ஒரு சொல். ஒருவருடைய, சமூகத்துக்குப் பெரிதும் பயன்படும், உள் நோக்கமில்லாத செயலின் அருமை கருதி அவர் பால் அவருடைய பயனாளிகளிடத்தும் அவரை அறிந்தவர்களிடத்தும் தோன்றும் மதிப்புதான் புகழ் (231). பிரபலம்(stardom, celebrity, popularity) அல்லது பொரும் புள்ளி என்பது போன்ற பொருளில் புகழ் என்ற சொல் திருக்குறளில் பயன்படுத்தப் படவில்லை.
உரை:இறைவன் ஒருவனே உண்மையான பொருள். இதை உணர்ந்தவர்களிடத்தில் இவ்வுலகமும் அதன்பொருள்களும் உண்மையானவை என்ற அறியாமை இருட்டு இராது.
அதேபோல் அவர்கள் பிறிதொரு உண்மையையும் அறிவர். அஃதாவது, தங்களுடைய உழைப்பு, நேரம், திறன், முயற்சி மற்றும் பொருள் ஆகியனவற்றை மனமுவந்து தேவைப்படும் நலிந்தோருக்கும் தகுதியான பிறருக்கும் ஈவதன் மூலம் தங்களுடைய ஆன்மா மேம்பாடு அடையும், முற்றிலும் மேம்பாடு அடைந்த ஆன்மா கடவுளர் உலகம் புகும் என்பதே அது. ஆகவே கடவுளர் உலகு புக சித்தம் கொண்டு அருளாளர்களாக ஒழுகுபவர்களிடம் தீயன சிந்திக்கும் செயலும் தீமை புரியும் செயல்பாடும் இராது.
வேறு விளக்கமும் உரையும்: இதல்லாமல் ”இறைவன் பொருள்சேர்” என்பதை இறைவனின் எட்டுத் தன்மை களைச் சார்ந்த என்று பொருள் கொள்ளவும் இடமுள்ளது. அவ்விதம் கொண்டால் இறைவனின் எட்டுக் குணங்களில் மனிதர்கள் தம் வாழ்வில் கடைப்பிடிக்க இயலக்கூடிய,வேண்டுதல் வேண்டாமை இலாதிருத்தல், ஐம்புலன்களின் செய்தியை நெறிப்படுத்திப் அறவழிப் பயன்பாட்டுக்குள்ளாக்குதல் மற்றும் எல்லா உயிரிகளிடத்தும் கருணையுடன் இருத்தல் ஆகியவற்றை தம் வாழ்வில் மேற்கொண்டு வாழ்வோரிடத்தில் இவ்வுலகம்தான் உண்மையானது என்ற மயக்கம் காரணமாகத் சிந்தை மற்றும் செயலில் தோன்றும் தீமைகள் இரா என்ற பொருள்கிட்டும்.
பின் குறிப்பு:
இக் கட்டுரையின் தொடக்கத்தில் கூறியது போல, உண்மையில் தமிழ்ப்பேராசிரியர் எவரையும் நான் சந்திக்கவில்லை. தங்களுக்கு சற்று ஆர்வம் ஏற்படச்செய்ய கற்பனையாக ஒரு பேராசிரியரை உருவாக்கினேன். பிழையை அன்புடன் பொருத்தருள்வீர் என நம்புகிறேன்.
நன்றி வணக்கம்.
அன்பன்
அர. வெங்கடாசலம்
மீண்டும் டோண்டு ராகவன்:
வெங்கடாசலம் அவர்களின் ஆய்வு பிரமிக்க வைக்கிற்து. கடைசி பாரா வெறும் குறும்புதான், ஆனால் ரசிக்கும்படித்தான் உள்ளது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
போலி இளமை
-
இணையக்குப்பை அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஜெ., வணக்கம்! உங்கள் பதில்
இணையக்குப்பை பல முறை மீண்டும் மீண்டும் வாசித்தேன். முதலில், எனது மின்னஞ்சலை
கருத்தி...
21 hours ago
3 comments:
Thanks, Dondu Sir....
dOndu Sir,
மிக்க நன்றி. நான் வெங்கடாசலம். இந்நூலை எழுதியவன். தங்களுடைய அன்பான சொற்கள் என்னை மிகவும் உற்சாகப்பட வைக்கின்றன. திருக்குறள் ஏறக்குறைய 600 வருடங்களாக பயிலப்பட்டு வந்துள்ளது என அறிகிறோம். ஆனாலும் தமிழர்களிடையே அதன் தாக்கம் இல்லையென்றே சொல்லலாம். ஒருவேளை அந்நூல் வாழ்க்கையில் கடைப்பிடிக்கக்கூடிய அளவுக்கு எளிமைப்படுத்தப்பட்டால் தமிழர்களின் கவனம் அதன் பக்கம் திரும்புமோ என பலகாலம் நான் சிந்தித்ததின் விளைவுதான் இந்த நூல். ஆனால் இதுவே முடிவாக இருக்கக்கூடாது இருக்கவும் முடியாது. திருக்குறள் ஆர்வலர்கள்/அறிஞர்களைக்கொண்டு ஒரு அரங்கம் திருக்குறள் கன்வென்ஷன் என்பது போல ஒன்று
ஏற்படுத்தப்பட்டு ஒவ்வொரு குறளும் மிகத்துல்லியமாக அலசப்பட்டு சரியான இனி ஒரு ஐம்பது வருடங்களுக்காவது மாற்றம் தேவை இல்லை என்ற அளவுக்கு பொருள் கானப்பட்டு அரசாங்கம் ஒரு வித அங்கிகாரம் அளித்து மக்களிடையே அறிமுகப்படுத்தவேண்டும். ஒவ்வொருவனும் தவறு செய்யும்போது நசித்துவிடும் அவன் ஆன்மா அவனுக்கு எதிரியாகி விடும் என்ற உண்மையை நன்றாக மனதில் பதியவைத்தால் தவறு செய்பவர்கள் தவறு செய்ய மிகவும் தயங்குவார்கள். அதே போல தவறு செய்தால் மீண்டும் தவறுசெய்யமாட்டேன் என முடிவெடுத்து அதில் உறுதியாக இருந்தால் நசுங்கிய ஆன்மா மீண்டும் தளைக்கும் என்ற செய்தியும் மனிதர்களை மிகப்பெரிய அளவில் நல்வழிப்படுத்தும். தங்கள் உதவிக்கு மிக்க நன்றி.
dondu சார் என்னுடைய கமண்டை பதிந்ததற்கு நன்றி. இன்று மீண்டும் உங்கள் பதிவினைப்படித்தபோது ஒன்றைக்கவனித்தேன். அந்தபட்டனில் சென்றபோது தங்களின் திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பைப்பற்றி படித்து மகிழ்ந்தேன். ஒரு அன்பர் கேட்ட கேள்விக்கு தெய்வம் தொழாள் கொழுநன் றொழுதெழுவாள் // பெய்யெனப் பெய்யும் மழை என்ற குறட்பாவிற்குத் தங்களது மொழிபெயர்ப்பை படித்தேன். அதைப்பார்த்தபோது என்னுடைய மொழிபெயர்ப்பைத் தங்களிடம் காண்பிக்கவேண்டும் எனத்தோன்றியது. தங்களுக்கு நேரமிருக்கும் பட்சத்தில் இதனைப்படித்துப்பார்க்கவேண்டுமாய்க்கேட்டுக்கொள்கிறேன்.
55.Gets up meditating not on God* but on her husband Rain pours on her command.
*The Tamil word ‘thozhuthu’ can be conceived (in addition to mean as prayer) as meditation or concentration. Perhaps the Kural tries to say that meditating or concentrating on her husband’s love and support the wife feels powerful. And to impress on the reader about the power she feels the poet says it is good enough to bring rain.
Post a Comment