10/09/2012

புற்றுநோய் பற்றி சில எண்ணங்கள்

கேன்சருடன் வாழ்தல்
நேற்று நான் பாட்டுக்கு தேமேனென்று பத்திரிகை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். திடீரென “சார், சார், ஒரு நிமிஷம்” என என் பின்னால் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் ஒரு 20 வயது இளைஞன் மூச்சு வாங்க நின்று கொண்டிருந்தான்.

என்ன விஷயம் எனக் கேட்க, அவன் தயக்கத்துடன் கேட்டான், “சில மாசங்கள் முன்னாடி உங்களை பார்த்தபோது உங்கள் தலைமுடியெல்லாம் கொட்டி விட்டது. இப்போது என்னவென்றால் மறுபடியும் வளர்கிறது. என்ன ஆயில் போட்டீர்க்ள்”? எனக் கேட்டான். ஒரு நிமிடம் அவனை உற்றுப் பார்த்து விட்டு சொன்னேன், “இம்மாதிரி முடி மீண்டும் வளரும் நிலை யாருக்குமே வேண்டாமப்பனே” எனக்கூறி விளக்கியதும் அவன் தலை குனிந்த வண்ணம் சென்றான்.

அவனிடம் கூறாதது இம்முறையில் முடி வளர எனது செலவு ரூபாய் 4 லட்சத்துக்கு மேல் என்பதுதான். கிட்டத்தட்ட ஓராண்டுகளாக சலூனுக்கு செல்லாததில் கிட்டத்தட்ட 600 ரூபாய் மிச்சம் என்பது தனி.  

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் தைத்த பேண்ட் சட்டைகள் இப்போது பொருந்துவதும் தமாஷாக உள்ளது.

கேன்சரின் பின்விளைவுகள்
ஆறு கீமோதெரப்பி அமர்வுகளில் தலைமுடி கொட்டி, புருவங்களும் அவுட். மண்டையோட்டுத் தோற்றம். கதிர்விச்சு சிகிச்சைகள் 33 அமர்வுகளினால் காலில் புண்.

வசூல்ராஜாவில் கமல் கூறுவதுபோல பசியின்மையின் கொடுமையுடன், உணவு என்றாலே வாந்தி வ்ரும் உணர்வு வந்தது இன்னொரு கொடுமை. இதயம் சற்றே பெரிதாகியதில் மூச்சிரைப்பு, சற்று நடந்தாலே.

இவ்வள்வு கொடுமைகள் நடுவிலும் நல்லது என்னவென்றால், எனது மொழிபெயர்ப்பு வேலைகள் தாராளமாக வந்ததுதான். ஒரு ஜெர்மன்காரருக்கு துபாஷியாகச் சென்றேன். என்னைப் பார்த்ததுமே ஜெர்மன்காரர் என்ன உடம்புக்கு எனக் கேட்க எனது வாடிக்கையாளரிடம் கூடக் கூறாது அவரிடம் கேன்சர் பற்றிக் கூற அவர் அப்படியே என்னை அணைத்தவாறு, சென்றார். வேகமாக நடக்கும் அவர் எனது ஸ்பீடில் நடந்தார்.

எங்கொப்புராணை கூறுகிறேன், மொழிபெயர்ப்பு வேலைகளை எனக்கு தாராளமாகக் கிடைக்கச் செய்த எனது உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதனின் அருளே அருள். வேலை செய்யும்போது கேன்சரின் எண்ணமே வருவதில்லை.

நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
கேன்சர் என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். கெட்டப் பழக்கங்கள் ஏதும் இல்லாமலிருந்தால் அது வரும் சாத்தியக்கூறுகள் குறைவு மட்டுமே. மற்றப்படி அப்படியும் வரலாம் எனக்கு வந்தது போல.

மரணத்துடன் ஒரு சிறு சந்திப்பு வினையாகவே முடிந்தது. கெட்டதிலும் நல்லது நடந்தது மகரநெடுங்குழைகாத்னின் பேரருளே.

இமயமாக எனது மதிப்பில் உயர்ந்த என் வீட்டம்மா
சத்தியமாகச் சொல்கிறேன், நிலைமை நேர்மாறாக இருந்திருந்தால் நான் அத்தனை தைரியத்துடன் இருந்திருக்க மாட்டேன். ஒரு தாய் தன் குழந்தையை பார்த்துக் கொள்வதுபோல அவர் என்னைப் பார்த்துக் கொள்வதால்தான் இப்பதிவையெல்லாம் போட முடிகிறது. பூர்வ ஜன்ம புண்ணியம்தான்.

மனச்சமாதானங்கள்
சிகிச்சைகள் நடக்க ஆரம்பித்து கொஞ்ச நாள் கழித்துத்தான் எனக்கு வந்தது கேன்சரா எனக் கேட்கும் மனவுறுதியே எனக்கு வந்தது. அதுவரை எனக்கு மட்டும் ஏன் இப்படி என்ற எண்ணம்தான் வந்தது. அண்ணாசாலையில் உள்ள ராய் மெமொரியல் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளைப் பார்த்து அதிர்ந்து போனேன். பச்சிளங்குழந்தைக்குமா கேன்சர்?

பூர்வஜன்மாவில் செய்த பாவங்கள் தவிர வேறு என்ன காரணம் இவற்றுக்கெல்லாம் இருக்கவியலும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்


66 comments:

வருண் said...

***கேன்சர் என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். கெட்டப் பழக்கங்கள் ஏதும் இல்லாமலிருந்தால் அது வரும் சாத்தியக்கூறுகள் குறைவு மட்டுமே. ***

உண்மைதான். எப்போ வேண்டுமானாலும் வரலாம்! ஏற்கனவே வந்திருந்து அறியாமலும் இருக்கலாம்!

*** பூர்வஜன்மாவில் செய்த பாவங்கள் தவிர வேறு என்ன காரணம் இவற்றுக்கெல்லாம் இருக்கவியலும்?***

அப்படியும் எண்ணலாம்!

*****

உங்களோட போடுவது வெறும் கருத்துச் சண்டைதான். It is never personal.

மற்றபடி உழைப்பில், எழுத்தில் வேலையில் உங்களை மறப்பது கேன்சரை மறக்க ஒரு நல்வழிதான். உங்க மனவலிமைமீது எனக்கு நம்பிக்கையுண்டு! தைரியமாக இருங்கள்!

கணேஷ் said...

Take care!

ப.கந்தசாமி said...

ஒரு உயிர்க்கொல்லி நோயை நகைச்சுவையுடன் எதிர்கொள்ளும் உங்கள் மனவலிமைக்குத் தலை வணங்குகிறேன்.

என் பொறுப்பிலிருக்கும் தங்கைக்கு ஆறு வருடங்களுக்கு முன் இந்த வியாதி வந்து, இந்த வைத்தியங்களெல்லாம் செய்து இப்போது நலமாக இருக்கிறாள்.

ஒரு மாத்திரை (Leterozole) மட்டும் தினம் ஒன்று சாப்பிடவேண்டும்.

உங்கள் உடல் நலம் நலமாக நிலைத்திருக்க ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

dondu(#11168674346665545885) said...

//உங்களோட போடுவது வெறும் கருத்துச் சண்டைதான். It is never personal.//
இதைச் சொல்லவும் வேண்டுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

துளசி கோபால் said...

விழாவில் உங்களை எனக்கு அடையாளமே தெரியலை:(

அப்புறம் தெரிஞ்சதும் மனம் கசிந்தது,ஆனாலும் உங்கள் மனோதிடமும் விடாமுயற்சியும் தெரிஞ்சுருந்ததால்.... எப்படியும் மீண்டு(ம்) வந்துருவீங்க என்ற நம்பிக்கையுடன் எம்பெருமாளை மனதில் வணங்கி வேண்டினேன்.

எல் கே said...

மெரினாவில் உங்களை பார்த்த அன்று மனதுக்கு ரொம்ப சங்கடமா போச்சு. உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள்.. இதன் கொடுமை நன்றாக அறிந்தவன் நான். அறியா வயதில் பாட்டியை இதற்கு பலி கொடுத்தேன். இப்பொழுது எனது தங்கை (சித்தப்பா பெண் ) போராடிக் கொண்டிருக்கிறாள்

பழமைபேசி said...

Sir,

Get well soon; take care!!

Anonymous said...

மிக அருமையான மனதைத் தொட்ட பதிவு, ஒரு மனிதனுக்கு நோய் என்பது எப்படியான மன வேதனையைத் தருகின்றது, அவற்றையும் மீறி மீண்டு வருவதே அவனது வெற்றியாகும், சிலருக்கு அவ் வாய்ப்பு கிடைப்பதில்லை என்ற போதும் அறிவியல் வளர்ச்சியானது புற்றுநோயில் இருந்து மீண்டு வர பல மருத்துவத்தை நமக்கு கொடுத்துள்ளது .. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சித் தன்னால் மனிதன் நோய்களை விரட்டி வருகின்றான ..

உங்கள் உழைப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல மாட்டேன், ஆனால் நல்ல ஆகாரம், மருத்துவ பரிசோதனை, உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள் ...

புற்றுநோய் யாருக்கும் வரக் கூடியது, பூர்வ ஜென்ம பாவம் என்று சொல்வதை விட மூதாதையர் செய்த பிழைகள், சுற்றுச் சூழக் கேடுகள், மரபுவழிப் பிழைகள் போல பல்வேறுக் காரணங்கள் உள்ளன ஐயா !

முடிந்த வரை கேன்சர் பவுண்டேசனுக்கு உதவி செய்யுங்கள், உங்கள் நண்பர்களையும் இணைத்துவிடுங்கள் ...

தாங்கள் விரைவாக முழுக் குணமடைய விரும்புகின்றேன்.

Ganpat said...

அன்பின் டோண்டு,

உங்கள் உபாதைகள் யாவும் மறைந்து ஆரோக்கியம் திரும்ப இறைவன் அருள் வேண்டி பிரார்த்திக்கிறேன்.உங்கள் வீட்டம்மாவிற்கு என் வணக்கமும் அன்பும்.

அன்புடன்,
Ganpat


gnani said...

கேன்சரிலிருந்து மீண்டு வந்து நம்பிக்கையுடன் வாழும் சிலரை நான் அறிவேன். நீங்களும் அசாத்திய மன உறுதி உடையவர். இந்த அனுபவத்துக்குப் பின்னர் உங்கல் மீதி சக்தியையெல்லாம் ஆக்கப்பூர்வமான விஷயங்களிலும், மனதுக்கு மகிழ்ச்சியும் அமைதியும் தரும் செயல்களிலும் மட்டுமாகச் செலவிடுங்கள். தொடர்ந்து நலமுடன் நீடு வாழ வாழ்த்துகள். அன்புடன் ஞாநி

Unknown said...

கேன்சர்... உங்கள் கவனத்துக்கு! உணவு வகைகளை மூன்றாகப் பிரிக்கலாம்.


கேன்சர்... உங்கள் கவனத்துக்கு!



நல்ல உணவுப் பழக்கத்தால் கேன்சரே வராமல் தடுத்துவிட முடியுமா?'' என்ற கேள்விக்கு, 'முடியும்' என்று சென்ற இதழில் பதில் தந்திருந்தேன். அது எப்படி முடியும்?


உணவு வகைகளை மூன்றாகப் பிரிக்கலாம்.

* கேன்சரை உண்டாக்கக் கூடிய மோசமான உணவுகள்.

* கேன்சர் அபாயமற்ற நல்ல உணவுகள்.

* கேன்சரைத் தடுக்கும்/ குணமாக்கும் அற்புத உணவுகள்.

கேன்சரை உண்டாக்கும் உணவுகள்...

பலமுறை உபயோகித்த எண்ணெயிலயே மீண்டும் வறுக்கப்பட்ட/ பொறிக்கப்பட்ட பதார்த்தங்கள், அதிக காரம்/ எண்ணெய்ப்பசை கொண்ட கவர்ச்சிகர உணவுகள், துரித உணவு வகைகள், 'ஜங்க் ஃபுட் நொறுக்குத் தீனிகள்' என விரிகிறது பட்டியல்.



சுருக்கமாகச் சொல்வதானால், ஜீரணிக்கக் கடினமான 'ஹெவி' உணவுகள் அனைத்துமே கேன்சரை விளைவிக்கக்கூடிய ஆபத்து உள்ளவைதான். உடலுக்குத் தேவையற்ற கொழுப்புகள் இந்த உணவுகளில் நிறைந்துள்ளன. உணவில் உள்ள எல்லா சத்துக்களையும் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் நம் உடல், இந்தக் கொழுப்பு விஷயத்தில் மட்டும் குழப்பம் அடைந்து, அவற்றை தனியே சேர்த்து வைக்கிறது. அத்துமீறி ஒரு நாட்டுக்குள் அந்நியர் புகுந்துவிட்டால், நாட்டுக்கு கெடுதல்தான் செய்வார்கள். அதையேதான் அந்தக் கொழுப்புகளும் நம் உடலுக்குச் செய்கின்றன. கேன்சர் வரைக்கும் போய்விடுகிறது.

எளிதாக ஜீரணம் ஆகக் கூடிய பச்சைக் காய்கறிகள், பழங்கள், எண்ணெய் குறைவாகப் பயன்படுத்தப்பட்ட சமையல், நீராவியில் வேக வைக்கப்பட்ட பதார்த்தங்கள் போன்றவை கேன்சர் ஆபத்தற்ற உணவாகக் கொள்ளலாம்.



கேன்சரைத் தடுக்கும் அற்புத உணவுகள்...

இவற்றைப் பற்றிச் சொல்லும் முன்னர் கேன்சர் எப்படித் தோன்றுகிறது என்பதை நான் சொல்லியாக வேண்டும். 'அதைத்தான் பல முறை சொல்லிவிட்டீர்களே... ஹார்மோன்களின் தூண்டுதலால் அல்லது உடலுக்குத் தேவையற்ற கொழுப்பு மற்றும் புகையிலையில் இருந்து வரும் நிக்கோடின் என்ற பொருளின் தூண்டுதலால் கேன்சர் வரும். அவ்வளவுதானே?' என்று உங்களில் பலர் என்னை மடக்கலாம்.

ஹார்மோன் உள்ளிட்ட விஷயங்கள் தூண்டுகிறதென்றால், அவை நம் உடலில் உள்ள கோடானுகோடி செல்களையும் தூண்டிக் கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் குறிப்பிட்ட சில செல்கள் மட்டும் பாதை மாறி கேன்சர் செல்களாக மாறிவிடக் காரணம்? அதைத்தான் பார்க்கப் போகிறோம்.

நம் உடலின் செல்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று நெருக்கமாகத்தான் இருக்கும். ஆனால், ஒன்றுக்கொன்று ஒட்டிக் கொண்டிருக்காது. அவற்றுக்கு இடையே இன்டர் செல்லுலர் மேட்ரிக்ஸ் (Inter cellular matrix) எனப்படும் திடப்பொருள் சூழ்ந்திருக்கும். வானத்தில் இறைந்து கிடக்கும் நட்சத்திரங்களைப் போல இந்த திடப்பொருளில் செல்கள் இறைந்து கிடக்கின்றன. எனவே, செல்களைக் 'கட்டி'க் காப்பது இந்த இன்டர் செல்லுலர் மேட்ரிக்ஸ்தான். அன்பான கூட்டுக் குடும்பத்தில் பிறந்த ஒரு பிள்ளை, பாதை மாறி தவறான காரியங்களில் ஈடுபடுவது அரிது இல்லையா? அப்படித்தான்... இந்த இன்டர் செல்லுலர் மேட்ரிக்ஸ் ஆரோக்கியமானதாக இருந்தால் அவற்றில் கலந்துள்ள செல்களும் பாதை மாறி கேன்சர் செல்களாக மாறாது. அதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில உணவுகள் உதவுகின்றன.

இன்டர் செல்லுலர் மேட்ரிக்ஸ் என்ற அந்தப் பொருள், 1. விட்டமின் 'ஏ' 2. விட்டமின் 'சி' 3. விட்டமின் 'ஈ' 4. செலேனியம் 5.கால்ஷியம் என ஐந்து விதமான தாதுப்பொருட்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது.


இவற்றில் நான்காவதாகச் சொல்லப்பட்டிருக்கும் செலேனியம்தான் மிக முக்கியமான பொருள். சொலேனியம் போதுமான அளவு ஒருவர் உடலில் இருந்தால், அவருக்கு எந்தக் கட்டத்திலும் கேன்சரே வராது என அடித்துச் சொல்லலாம். உலக அளவில் 'பிரேசில் நட்' எனப்படும் ஒரு வகை பருப்பில்தான் அதிக அளவில் செலேனியம் இருக்கிறது. அதனாலேயே அதன் விலை மிக அதிகம். நம் நாட்டில் கிடைக்கக் கூடிய காய்கறிகளில் காலிஃப்ளவர் அதிக செலேனியம் கொண்டது. காலிஃப்ளவர் அதிகமாக உண்டு வந்தால் கான்சர் செல்களே தென்படாது.

செலேனியம் தவிர, கேரட்டில் உள்ள பீட்டாகெரோட்டின் (Betacarotene) என்ற பொருளில் விட்டமின் 'ஏ' அதிகம் உள்ளது. ஆப்பிள், தக்காளி, நெல்லிக்காய், இஞ்சி, பயத்தம் பருப்பு போன்றவற்றில் விட்டமின் 'சி' உள்ளது. பீட்ரூட், ஆல்மண்ட் அல்லது பாதாம் ஆயில், மஞ்சள், வெங்காயம் போன்றவற்றில் விட்டமின் 'ஈ ' உள்ளது. முருங்கைக் காய் / முருங்கைக் கீரை, கறிவேப்பிலை, சப்போட்டா பழம் போன்றவற்றில் கால்ஷியம் உள்ளது.


இவற்றையெல்லாம் மனதில் கொண்டு நாம் நம் உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொண்டால், உலகில் கேன்சர் என்ற சொல்லே இருக்காது!

தி.தமிழ் இளங்கோ said...

உங்களின் இந்த பதிவினைப் படித்ததும் அப்படியே யோசனையில் உட்கார்ந்து விட்டேன். நீங்கள் சொன்ன மனச்சமாதானங்கள்தான் எல்லாவற்றிற்கும் ஆறுதல்.

குடுகுடுப்பை said...

உங்கள் மனவலிமையால் வெல்வீர்கள்.

CS. Mohan Kumar said...

சார் உடல் நிலை சரியில்லாத இந்த நிலையிலும் பாசிடிவ் பக்கங்களையே பார்க்கும் நீங்கள் இதை தாங்கி, தாண்டி வருவீர்கள் என நம்புகிறேன்

செல்வநாயகி said...

Felt very sad, take care, you will be alright.

sury siva said...

// பூர்வஜன்மாவில் செய்த பாவங்கள் தவிர வேறு என்ன காரணம் இவற்றுக்கெல்லாம் இருக்கவியலும்?//

என்னதான் பயாலஜி வழியா, பேதாலஜி, வழியா இந்த ப்ரச்னையை எதிர்கொள்ள அறிவு பூர்வமான
மனசு சொன்னாலும், கடைசியா உள் மனசு இதுக்கெல்லாமே பூர்வஜென்ம பயன் என்று தான் சொல்லுகிறது.
சொல்லும்.

அந்த தென் திருப்பேரை நெடுன்குழைகாதன் ( சம்ஸ்கிருதப்பெயர் கொஞ்சம் அடியேனுக்கு சொல்லுங்கோ )
அவர் ப்ரசன்னமாய் உங்கள் ப்ரச்னையைத் தீர்ப்பார். நிஸ்ஸந்தேஹம்.

பெருமாள் திருவடிகள் சரணம். எதற்கும் இதை தினமும் ஜபியுங்கள். உங்களால் இயலவில்லை என்றால்
தங்கள் தர்ம பத்னியை ஜபிக்கச்சொல்லவும்.
http://youtu.be/qNgniKmglY8
உங்களால் இயலவில்லை என்றால் சொல்லுங்கள். நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன்.


ஓம் நமோ நாராயணாய‌

சுப்பு தாத்தா.

பூவண்ணன் said...

நோயை நீங்கள் தைரியமாக எதிர்கொண்டது பலருக்கு எடுத்துக்காட்டு
நீங்கள் நீண்ட காலம் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும்.பெரியாரின் 150 ஆண்டு கொண்டாட்டங்களின் போதும் அவரை திட்டும் உங்கள் பதிவுகள் வர வேண்டும் .

மு.சரவணக்குமார் said...

நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்களை வழிநடத்திய குருமார்களை மனதில் கொள்ளுங்கள்.அவர்களது ஆசிர்வாதம் வேதனை குறைக்கும்.குருவருள் உங்களுக்கு துனை நிற்கும் சார்.

மு.சரவணக்குமார் said...

குருவருள் உங்களுக்கு துனை நிற்கும் சார்.

யுவகிருஷ்ணா said...

நீங்கள் நூறாண்டு காலம் வாழ்ந்து என் மகள், பேரன் பேத்திகளோடும் பின்னூட்டத்தில் சண்டை போடுவீர்கள் சார். சீயர்ஸ்!

Barari said...

உங்கள் மன வலிமையை எண்ணி வியக்கிறேன்.நீங்கள் பரிபூரண நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்

ramachandranusha(உஷா) said...

உங்கள் நிலைமையைப் பற்றி சொன்னதும் என் மனதில் தோன்றிய எண்ணம் "டோண்டு சார்,
விட்டேனோ பார் என்று நோயுடன் சண்டை போட்டு அதை ஓட ஓட விரட்டி விட்டுவார் என்று! நலமடைய வாழ்த்துக்கள். உங்கள் மனோ திடம் எங்களுக்கும் வர வேண்டும்,

மணிஜி said...

கேன்சரா..அது இப்பதான் சமீபத்தில் 2012ல் வந்தது என்று 2020ல் எழுதுவீங்க சார்.. வேறென்ன சொல்ல...சியர்ஸ்தான்:-)

Jayadev Das said...

எவ்வளவு கஷ்டம் வந்தாலும், இறைவன் மேல் உள்ள நம்பிக்கையை இழக்காமல் இருக்கும் உங்கள் குணம் எனக்கும் வரவேண்டும் என வேண்டுகிறேன், மீண்டும் முழு குணமடைந்து மீண்டு வரவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் சார்.

@Vishnu Ananthkumar

தங்களது அருமையான பின்னூட்டத்திற்கு நன்றி.

chandramohan said...

உங்கள் தைரியத்திற்கு தலை வணங்குகிறேன். என் தந்தையும் அத்தையும் சிகிச்சைக்கு பின் நீண்ட நாள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள் நீங்களும் நீண்ட ஆயுளுடன் வாழ பிரார்த்திக்கிறேன்

Amudhavan said...

உங்கள் கருத்துக்கள் பலவற்றில் வேறுபட்டபோதிலும் பிடிவாதமான உங்கள் வாதத்திறமையையும் 'சமீபத்தில்' அதாவது 1971-ல், என்று எழுதும் உங்கள் எழுத்தையும் ரசிப்பவன் நான். இந்தப் பதிவு படித்து மிகவே வருந்தினேன். அலோபதியோ, மாற்றுமருத்துவமோ அல்லது தெய்வநம்பிக்கையோ ஏதோ ஒன்றின் மூலம் மறுபடியும் பழைய நிலைமைக்கு நீங்கள் வந்துவிடுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. விரைவில் குணமடையுங்கள் சார்.

பாரதி மணி said...

டோண்டு சார்: துளசி கோபால் விழாவில் உங்களை நீங்களே அறிமுகப்படுத்திக்கொள்ளாவிட்டால், தெரிந்திருக்காது. அவன் அருள் உங்களுக்கு நிறைய இருக்கிறது. உங்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் இப்போதும் உங்களிடமுண்டு. But I am afraid you have lost a bit of your intellectual arrogance. அதையும் மீட்டெடுத்தால், நீங்கள் பழைய டோண்டு தான்!!

ராஜரத்தினம் said...

நான் இதை ஏற்கனவே சொல்லியிருக்கேன்!
என்னோட அப்பாவுக்கு கூட கேன்சர் வந்தது! ஆனால் என் அப்பாவை அதிகம் கஷ்டபடுத்தவில்லை! காஞ்சி அரசு மருத்துவமனையில் ஒரு 5 நாள் ஒரு 14 ரேடியோ தெரபி! அதுக்கே அவருக்கு கால்ல சின்ன புண்!அவருக்கு செலவு 2 லட்சம் ஆவுனார் டாக்டர்! எங்கப்ப நான் இருந்து என்ன செய்ய போறேன் அந்த பணத்தில என் தம்பிக்கு கல்யாணம் செஞ்சிடலாம்னார்! அப்படியே செய்தோம்! ஆண்டவன் அருளால் அவர் நலம்! நிச்சயம் அவர் போல் நீங்கள் நலமடைவீர்! இறை அருளால்!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் நம்பிக்கை உங்களைக் காக்கும்...

sury siva said...

will u mind giving your cell or land line no.? i thought i shd be talking to u.

subbu rathinam.
PS: If it is confidential, you may leave a msg in my blog www.vazhvuneri.blogspot.com
i sh delete after notin it

ராஜ நடராஜன் said...

இரு வித மன அலைகளில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.கேன்சர் என்பது என்னைப் பொறுத்த வரையில் அது சொல் மட்டுமே.நேரடியாகவோ,உணர்வு ரீதியாகவோ என்னை சார்ந்து யாருக்கும் கேன்சர் வந்ததில்லை.பதிவுகளின் எழுத்து அறிமுகமாக நீங்கள் மட்டுமே முதல் மனிதர்.

வலிக்குள்ளும் வலி காணும் உங்கள் குணாதிசயம் வியப்பையே தருகிறது.இந்த பதிவு உங்கள் மீதான பிம்பத்தை பலருக்கும் மாற்றும் என நினைக்கின்றேன்.

தொடர் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

துரைடேனியல் said...

சார்! உண்மையில் நீங்கள் தைரியசாலிதான். இந்த நோயை எதிர்த்துப் போராடுவது நெருப்போடு விளையாடுவது போலத்தான். எந்நேரமும் தீவிரிக்க அஞ்சுவதில்லை இந்நோய். கடவுள் உங்களுக்கு இன்னும் நீண்ட ஆயுளைத் தர பிரார்த்தனைகள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நம்பிக்கை உங்களைக் காக்கும்...

துரைடேனியல் said...

இந்த உயிர்க்கொல்லி நோயை எதிர்த்து போராடும் தங்களது தைரியத்துக்கு ஒரு சல்யூட்! பூரண சுகம் பெற என் பிரார்த்தனைகள்.

Raj Chandra said...

Raghavan Sir,

Take care and I am happy to know you're getting back to normal with your family's support.

As others said, we have lot to fight so you're not going anywhere :)

Regards
Raj Chandra

suvanappiriyan said...

டோண்டு சார்!

சில வருடங்களுக்கு முன்பு சென்னை மீனம்பாக்கத்தில் உங்களை சந்தித்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசிக் கொண்டிருந்தது இப்பொழுது ஞாபகம் வந்தது. அப்பொழுதே இந்த வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பா என்று சந்தோஷப்பட்டேன். கேன்சரை சுமந்து கொண்டு இன்றும் பல வேலைகளையும் ஓய்வு ஒழிச்சல் இன்றி செய்து வரும் உங்களின் மன உறுதி பலரும் பின்பற்ற வேண்டியது.

உங்களுக்கு உடல் நிலை சரியாகி பழைய டோண்டுவாக மாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அடுத்த முறை சென்னை வந்தால் அவசியம் உங்களைச் சந்திக்கிறேன்.

Paleo God said...

Take care sir.

My Prayers..

Agila said...

Get well soon

Unknown said...

Take care Dondu sir.

My prayers are always there for you.

பட்டிகாட்டான் Jey said...

முழுமையான குணம் அடைய என் பிரார்த்தனைகள்.

T.Duraivel said...

நீங்கள் குணமடைந்து விரைவில் நலம்பெற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

வினையூக்கி said...

இதையும் நீங்கள் சமாளித்து வருவீர்கள்.

கல்வெட்டு said...

நந்தாவின் Google Plus வழியாக அறிந்தேன்.

உங்களின் கொள்கை,கருத்து ஏதும் பிடிக்காது என்பதால் உரையாடல்களில் கலந்து கொள்வது இல்லை, பெரும்பாலும் தவிர்த்தே வந்தேன்.

ஒருமுறை திரு மாசி அவர்கள் தொலைக்காட்சிக்கு ஒரு பேச்சாளர் விருந்தினர் வேண்டும் கேட்டுக்கொண்டிருந்த்போது ஏன் டோண்டுவைக் கேட்கக்கூடாது என்று சொன்னேன். ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு சக மனிதனாக வெறுப்புகள் ஏதும் இல்லை என்று கோடிட்டுக்காட்டவே.

கருத்து வேறுபாடுகள் தாண்டி சக‌மனிதனின் உயிர்த்திருத்தலே முக்கியம்.

நலம் திரும்ப விரும்புகிறேன்

அன்புடன்
கல்வெட்டு (அ) பலூன்மாமா

புதுகை.அப்துல்லா said...

நேரில் உங்களிடம் சொன்னதுபோல உங்களைப் பார்த்து அது பயந்து ஓடிரும் :)

லக்கி சொன்னது போல இன்னும் எங்கள் பேரன் பேத்திகளோடு எல்லாம் நீங்கள் பின்னூட்டச் சண்டை போட வேண்டியுள்ளது. சியர்ஸ் :)

ராம்ஜி_யாஹூ said...

lets come out of this sir

ராமுடு said...

Dear Sir, When I feel depressed OR loosing my motivational factor, I used to read few blogs and yours is on top of the list. Don't loose your confidence. You will be back to normal soon. I pray almighty to give enough strength to fight against this disease. Take care and get well soon.

With Love - Sriram

உண்மைத்தமிழன் said...

மறுபடியும் அதே சண்டைக்கார டோண்டுவாக திரும்பி வர வேண்டும் ஸார்..! மகரநெடுங்குழைநாதனை பிரார்த்திக்கிறேன்..!

butterfly Surya said...

என் வேண்டுதலும் பிரார்த்தனைகளும் டோண்டு சார்.

நம்பிக்கை.. அதானே எல்லாம்.

Santhosh said...

இப்ப தான் கூகிள் பிளஸ்ஸில் பாத்தேன் சார்.. இதுல இருந்து மீண்டு வந்து “போடா ஜாட்டான்னு” பழையபடி கலக்குவிங்க..

raghs99 said...

My Parthasarathy will definitely make you soon very comfortable and free from this disorder .
you will come with full energy/
Raghav

Natraj said...

நலம் பெற்று நீண்ட நாள் வாழ பிரார்த்திக்கிறேன்

Unknown said...

அண்ணாவை காப்பாற்ற முடியாதது போல் இன்றைய நிலை இல்லை.தலைக்கு வந்தது ஹெல்மெட்டோடு போயிற்று என்று ஆறுதலாயிருக்கு. இதற்கான மருந்துகள் அதிக விலையுள்ளவை.தங்களுக்காக சலுகை விலையில்,சண்டை போட்டு (உரிமையுடன்)வாங்கி தர தயாராயிருக்கிறேன், நீங்கள் விருப்பப்பட்டால்.

மாலன் said...

நம்பிக்கையால் நலம் பெற்றவர்கள் அநேகம். நீங்களும் நலம் பெறுவீர்கள்.
அன்புடன், மாலன்

Sri said...

Take care Sir.

Srini

shankar said...

After reading your article, I am very sad hearing this. I am totally upset.

Take care !

baleno said...

பூரண குணமடைந்து தொடர்ந்து நலமுடன் நேர்மையான துணிச்சலான பதிவுகள் தந்து நீடூழி வாழ வாழ்த்துகள்.

கோவி.கண்ணன் said...

திரு டோண்டு சார், பதிவு வெளியான அன்றே படித்து வருந்தினேன். விரைவில் நீங்கள் பூரண நலம் பெற்று 'இளைஞன் டோண்டு இராகவன்' என்று எழுந்து நிமிர்ந்து எழுதுவீர்கள்.

கவிதா | Kavitha said...

பதிவை இன்று தான் படித்தேன். நடுவில் என் பதிவுகளில் உங்களின் பின்னூட்டம் காணாது.. எங்க போனீங்க காணலியேன்னு நினைச்சேன்.

இரண்டு பதிவுகளாக மீண்டும் பின்னூட்டம் வந்ததில்.. வேலையாக இருந்திருப்பீர்கள் என்றே நினைத்தேன்.

பின்னூட்டங்களில் நண்பர்கள் சொன்னது போன்று, உங்களின் மனவலிமையால் வென்றுவிடலாம்.

உங்கள் மனைவியாருக்கு என் வணக்கங்கள்.

உதவி ஏதும் தேவைப்பட்டால் தயங்காமல் சொல்லவும். gkavith at gmail dot com

dondu(#11168674346665545885) said...

@கவிதா
உங்கள் பதிவுகளில் பின்னூட்டம் போடுவது எனக்கு பிடிக்கும். ஆனால் அதை சற்றே சுவையானதாக இட வேண்டும் என்பதே எனது எனது நோக்கம்.

அவ்வாறு புத்திசாலித்தனமாக ஏதேனும் என்னால் எழுத முடியாவிட்டால், பேசாமலேயே இருந்து விடுவேன்.

மற்றப்படி உங்கள் பதிவுகளை பார்ப்பதை நிறுத்தவில்லை.

ந்புடன்,
டோண்டு ராகவன்

ILA (a) இளா said...

ஆண்டவன் அருள் என்றும் உங்களுக்கு கிடைக்கட்டும்

sultangulam@blogspot.com said...

Get well Soon Dondu Sir

Nat Sriram said...

U r a fighter, Sir..உங்கள் மனவலிமை, கடவுள் அருளால் அனைத்தையும் வெல்வீர்கள்..

Nat Sriram said...

நீங்கள் பரிபூரண நலமடைய என் வாழ்த்துகள் சார்..

Anonymous said...

டோண்டு சார்,

நீங்கள் விரைவில் பூரண நலமடைய கடவுளைப் பிரார்த்திக்கிறேன்...

Anonymous said...

டோண்டு சார்,

நமஸ்காரம்.

உங்கள் கவனத்திற்கு...

பலன் தந்த ஸ்லோகம்…
http://balhanuman.wordpress.com/2012/07/18/

முரளிகண்ணன் said...

எதிர் கொண்டு மீண்டு வந்துவிடுவீர்கள் என நம்பினேன். உடல்நலத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள் டோண்டு சார்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது