2/28/2010
சுஜாதா இரண்டாம் நினைவு நாள் விழா - 27.02.2010 - பகுதி - 1
சுஜாதா அறக்கட்டளையும் உயிர்மையும் சேர்ந்து நடத்திய இந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை நியூ உட்லேண்ட்ஸில் நடந்தது. நிகழ்ச்சி பற்றி நான் சாரு நிவேதிதாவின் வலைப்பூவிலிருந்து அறிந்து கொண்டேன். ஏற்பாடு செய்த ஹால் போதுமானதாக இருக்குமா என்ற சந்தேகம் வந்தது. திடீரென அழைப்பு உள்ளவர்கள் மட்டும்தான் அனுமதிக்கப்படுவார்களா என்ற சந்தேகமும் வந்ததில் நண்பர் ஒருவரிடமிருந்து மனுஷ்யபுத்திரனின் நம்பர் பெற்று அவருக்கு ஃபோன் செய்து அழைப்பு எல்லோருக்குமே என்பதை உறுதி செய்து கொண்டேன்.
எனது கார் உட்லேண்ட்ஸை சென்றடைந்தபோது மணி சரியாக 06.30. நல்ல வேளையாக இடம் இருந்தது. முதல் இரண்டு வரிசைகளுக்கு பின்னால் காமெராக்கள் நிறுவப்பட்டிருந்தன. அவற்றுக்கு பின்னால் உள்ள நாற்காலிகளில் அமர்ந்திருப்பவர்கள் காமெராக்காரர்களது முதுகுகளை மட்டும் பார்க்க முடிந்தது.
முதலில் சாரு நிவேதிதாவை பார்த்தேன். அவருடன் பேசினேன். அவரது வலைப்பூ வைரஸ் தாக்குதலால் பீடிக்கப்பட்டு பழைய கோப்புகள் அழிக்கப்பட்டதை குறித்தும் கேள்விகள் கேட்டதில் கோப்புகள் நகல் உள்ளதாகவும் சீக்கிரம் வலையேற்றப்படும் என்றும் தெரிவித்தார். பேசாமல் பிளாக்ஸ்பாட் இலவச சேவைக்கு மாறிக்கொள்வதே நலம் என்று கூறிவிட்டு எனது இடத்தில் சென்று அமர்ந்தேன். உடனேயே நிகழ்ச்சியும் ஆரம்பமாகியது.
அதிஷா, லக்கிலுக், ஓகை, சிமுலேஷன் (இப்பதிவில் உல்ள படங்களை அனுப்பியவர். அவருக்கு நன்றி) ஆகிய வலைப்பதிவர்கள் வந்திருந்தனர்.
முதலில் எல்லோரையும் வரவேற்று பேசியது மனுஷ்யபுத்திரன். சுஜாதாவை தங்களை போன்ற எழுத்தாளர்களின் ஆசான் என அவர் குறிப்பிட்டார். ஒவ்வொருவரது கனவையும் உருவாக்கிய மாபெரும் கலைஞர் அவர். அவரை கொண்டாடும் அளவுக்கு ஒரு எழுத்தாளரை கொண்டாடுவது அபூர்வம். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக அவரது இருப்பு வந்திருக்கிறது. இன்னும் வலிமை கொண்டு செல்கிறது. சுஜாதா அறக்கட்டளை மற்றும் உயிர்மையுமாக சேர்ந்து சுஜாதா நினைவு விருதுகளை அளிக்கத் துவங்குவது பற்றியும் கூறினார். சிறுகதை, நாவல், கவிதை, உரைநடை, இணையம், சிற்றிதழ் ஆகிய தலைப்புகளில் அவை வழங்கப்படும் என்று கூறினார். இவ்வாண்டுக்கான விருதுகளுக்கான பரிந்துரைகள் மார்ச் 31 வரை ஏற்கப்படும் என்றும் அவற்றின் முடிவுகள் சுஜாதாவின் பிறந்த நாளான மே 3-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பிறகு ஒவ்வொருவராக பேச அழைக்கப்பட்டனர்.
தூர்தர்ஷனின் முன்னாள் டைரக்டர் நடராஜன்
சுஜாதா மற்றும் அவரது குடும்பத்தினருடன் தனது 40-ஆண்டுகால பரிச்சயத்தை அவர் எடுத்துரைத்தார். பல்வேறு நிலைகளில் அவருடன் உரையாடி இருக்கிறார். அவர் கடவுளின் அரிய படைப்பு. 1998 தான் சான் ஃப்ரான்சிஸ்கோ சென்றபோது அங்கிருந்து அவருடன் தொலைபேசியதாகவும், என்ன புத்தகம் வாங்கலாம் என அவரிடம் கேட்டதாகவும், புகைப்படம் எடுத்தல் பற்றிய ஒரு புத்தகத்தை சிபாரிசு செய்ததாகவும், அதை வாங்கி பிறகு ஊருக்கு வந்ததும் அவர் வீட்டுக்கு சென்று அவரிடம் அதை தந்ததாகவும் கூறினார். ஆனால் சுஜாதாவோ தன்னிடம் ஏற்கனவே அந்த புத்தகம் இருப்பதாகவும், அதை நடராஜன் தனக்காக வாங்கிக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே அதை சிபாரிசு செய்ததாகவும் கூறினார்.
அவரது ஒரு தொடர்கதை வாய்மையே சிலசமயம் வெல்லும் என்னும் தலைப்பில் வந்து, பிறகு புத்தகமாகவும் வந்ததாம். அதுவே தூர்தர்ஷனில் வாரத் தொடராக வந்தபோது மாதர் அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்து, அதை தான் சமாளித்த விதத்தை சுஜாதா சிலாகித்ததையும் குறிப்பிட்டார். மேலும், சுஜாதா எங்கு சென்றாலும் சோபித்தார்.
டைரக்டர் சங்கர்
சிறுவயதிலிருந்தே அவரது புத்தகங்களை படித்து ரசித்திருக்கிறார். அவர் புத்தகங்களை படிக்கும்போது ஒரு படமே பார்ப்பது போலிருக்கும். அப்படி தான் ரசித்த அவரே தனது படங்களுக்கு கதை எழுதுவார் என்பதை அக்காலத்தில் தான் நினைத்தும் பார்த்ததில்லை என கூறினார். இந்தியன் படத்திலிருந்து ஆரம்பித்து தனக்காக படங்களில் பணியாற்றியதை பல உதாரணங்களுடன் எடுத்துரைத்தார். சுவையான அவரது வசனங்களுக்கான சில சாம்பிள்கள் தந்தார்.
1. பிற நாடுகளில் கடமையை மீறத்தான் லஞ்சம் வாங்குகின்றனர், ஆனால் இங்கோ கடமையை செய்யவே லஞ்சம்.
2. தப்பிலே ஸ்மால், லார்ஜ், எக்ஸ்ட்ரா லார்ஜெல்லாம் சொல்ல அது என்ன பனியன் சைஸா?
3. தன் உள்ளங்கையில் முத்தமிட்ட நந்தினியிடம் ரெமோ: நான் என்ன போப்பாண்டவரா?
4. அம்பி டிடி.ஆரிடம்: அட்ஜஸ்ட் பண்ணி பண்ணித்தான் நாடே இந்த நிலைமையில் இருக்கு.
5. அன்னியன் நேரு ஸ்டேடியத்தில்: இப்போ நீங்க பார்த்த சீன்கள் நியூஸ் ரீல் இல்லை, நம் நாடு தப்ப விட்ட விஷயங்கள பற்றிய தொகுப்பு.
6. (இந்தியாவில்) எல்லாம் புதுசா வந்துடுச்சு, ஆனா இது மட்டும் (பிச்சை எடுப்பது) அப்படியே (பழசா) இருக்கு.
7. தாடி மீசையுடன் வந்த நாயகனை பார்த்து: என்ன லீவுல வந்த ரிஷி மாதிரி இருக்கே.
ஸ்டோரி விவாதங்களில் தான் சொன்ன பல ஐடியாக்களை அவர் பல ஆண்டுகளுக்கு முன்னமேயே எழுதியிருந்ததை ப்லமுறை காட்டியுள்ளார். ஒரு சீனுக்கு ஒரு பக்கத்துக்கு மேல் எழுத மாட்டார். சினிமா ஒரு விஷ்வல் மீடியா என்பதை புரிந்தவர்.
எவ்வளவுதான் பிசியாக இருந்தாலும் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்பதை வற்புறுத்தினார்.
பத்மஸ்ரீ இந்திரா பார்த்தசாரதி:
அவர் பேசியதை புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. ஹாலின் அகௌஸ்டிக்கிலும் பிரச்சினை. இருப்பினும் கூர்ந்து கேட்டதில் புரிந்தவற்றில் இருந்து எழுதுபவை:
சுஜாதாவை அவரது தில்லி நாட்களிலிருந்து தெரியும் என்றார். கணையாழி பத்திரிகையில் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்னும் பெயரில் அவர் எழுதியதை நினைவு கூர்ந்தார். அவரது பிரசித்திபெர்ற நாவலான நைலான் கயிறு முதலில் குருக்ஷேத்திரம் என்னும் தலைப்பில் சிறுகதையாக வந்ததையும் குறிப்பிட்டார். தான் நாடகங்கள் எழுத அவர் தூண்டுகோலாக இருந்தார் என்றும் சொன்னார். பல வளரும் கவிஞர்களை அடையாளம் காட்டியதையும் சொன்னார். எழுத்தாளர்களை நாம் மறக்கலாகாது என்றும் குறிப்பிட்டார்.
பெண்டாமீடியா சந்திரசேகரன்
1995-லிருந்து அவருடன் பழக்கம். தனது பல அனிமேஷன்களில் அவரது வசனங்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் அபாரமாக இருந்ததாக கூறினார். ஓப்பன் சோர்ஸ் மர்றும் ப்ரொப்ரைட்டரி மென்பொருட்கள் பற்றி அவருடன் செய்த விவாதஃங்களையும் குறிப்பிட்டார் அவர். தனக்கும் சுஜாதாவுக்கும் ஒரே நாளில் (மே 3) பிறந்த நாள் என குறிப்பிட்டார். தனது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் புத்தகங்கள் பரிசாக தந்ததாகவும் அவை எல்லாவர்றையும் தான் பாதுகாத்து வருவதாகவும் கூறினார் அவர். தனது வேலை சம்பந்தமாக தான் எடுத்த முடிவுக்கு எதிராக குடும்பத்தினர் அனைவரும் பேச அவர் மட்டும் தனக்கு ஆதரவாக இருந்ததை அவர் நினைவு கூர்ந்தார்.
சிவாஜி படக்கதை என்ன என தன்னை இவர் மட்டுமே கேட்கவில்லை என்று பாராட்டிவிட்டு தனக்கு அப்படத்தின் வெளியீட்டுக்கு சற்று முன்னால் அதன் கதையை கூறியதையும் சொன்னார். அவர் நுழைந்த எந்தத் துறையிலும் வெற்றிகரமாக செயல்பட்டதாக கூறினார்.
ராஜீவ் மேனன்
தனக்கு கண்ணளித்த ஆப்டீஷியன் அவர் என இவர் குறிப்பிட்டார். அவரை தனது நண்பராகவும் தந்தையாகவும் கருதியாகக் கூறினார். விக்ரம் படத்தின்போது அவரோடு ஏற்பட்ட காண்டாக்டுகளை சொன்னார். எல்லா வேலைகளுக்கும் நேரத்தை ஒதுக்கினார் என்பதை மேற்கோள்களுடன் கூறினார். மனதால் எப்போதும் இளமையாக தன்னை உணர்ந்தவர், தான் செய்ய விரும்பிய எல்லாவற்றையும் நிறைவேற்ற அவரால் நேரம் ஒதுக்க முடிந்தது.
அவரது தமிழ் எழுத்துக்களில் ஒரு ரிதம் இருந்தது. எல்லா இளைஞர்களுக்கும் அவருக்கான access உருவானது. கவிஞர் W.H. Auden-னின் வரிகளான no one anywhere wants to be forgotten, not even a man about to be hanged என்னும் அமரத்துவம் பெற்ற வரிகளை “மரணத்தைவிட மோசம் மறக்கப்படுவதே” என்ற வாக்கியத்தில் மிக அழகாக கூறியதை அவர் சிலாகித்தார். ஆனால் சுஜாதைவை அம்மாதிரி யாரும் மறக்க மாட்டார்கள், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னமும் இவ்வளவு பேர் வருவதே அதை நிரூபிக்கிறது. தமிழ் ரசிகர்கள் இருக்கும் வரை அவர் மறக்கப்பட மாட்டார்.
(தொடரும்)
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
நல்லதொரு பதிவு .
சுட ச்சுட விழாவின் பதிவை இட்டதற்கு நன்றி ... ஆம் , தமிழும் ரசிப்புத்தன்மையும் இருக்கும் இடமெல்லாம் சுஜாதா நிச்சயம் இருப்பார் .
வாழ்த்துக்கள்.....ஆவலாக பகுதி -2 நோக்கி ....... .
வர வர இந்த மீடியாக்காரர்கள் தொல்லை அதிகமாகிவிட்டது. அதுவும் யாராவது திரைப்பட நட்சத்திரங்கள் வந்துவிட்டால் போதும்.
இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட டஜன் போட்டோகிராபர்கள் பார்வையாளார்களை மறைக்கிறோமே என்ற லஜ்ஜை கொஞ்சமுமின்றி முதல் வரிசையில் தங்கள் விடியோ காமிராவின் பின்புறம் ஒரு அரண் போல நின்று கொண்டிருந்தார்கள்.
- சிமுலெஷன்
thanks for sharing this, great post.
பகிர்வுக்கு நன்றி...
-
DREAMER
என்ன டோண்டு சார்,
சாருவைப் பார்த்த போது அவர் தங்களை ஐடன்டிபை செய்தாரா.... ஏன் கேட்கிறேன்னா.... தனது பதிவில் தான் ஒரு பரவச நிலையில் அந்த நிகழ்ச்சியின் போது இருந்ததாக கூறியுள்ளாரே...
சார் நானும் விழா பத்தி எழுதிருக்கேன். முடியும் போது வாசிங்க நன்றி
Post a Comment