முதல் பகுதி இங்கே.
கவிஞர் ஞானக்கூத்தன்
மனுஷ்யபுத்திரன் தன்னை இக்கூட்டத்திற்கு வருமாறு அழைத்தபோது மற்ற பங்கேற்பாளர்கள் யார் யார் என தெரிந்ததும் இவ்வளவு பெரிய கூட்டத்தில் பேசவியலுமா என தயங்கினதாக குறிப்பிட்டார்.
சுஜாதாவை 1965 முதல் தெரியும் எனக்குறிப்பிட்டார். அவரது இயற்பெயரும் ரங்கராஜன்தான் எனக்குறிப்பிட்டவர் சுப்பிரமணியம், ரங்கராஜன் ஆகிய பெயர்கள் ரொம்பவும் அதிகமாகவே தமிழகத்தில் இருப்பதாக நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். அக்காலகட்டங்களில் உட்லேன்ட்ஸ் டிரைவ் இன்னில் வைத்து சுஜாதா, இவர் இன்னும் பலர் அடிக்கடி சந்தித்து பேசுவதை குறிப்பிட்டார். பிரெஞ்சு எழுத்தாளர் Jean Paul Sartre காஃபீ ஷாப்பில் அமர்ந்து நண்பர்களுடன் உரையாடுவதை விரும்பியதையும் குறிப்பிட்டார். அச்சமயங்களில் சந்த்தித்த மற்றவர்களில் மாலன், பாலகுமாரன், சுப்பிரமணிய ராஜு ஆகியோரை குறிப்பிட்ட அப்போதே அவர்கள் எல்லாம் தத்தம் ஈடுபாடுகளில் பெரிய ஆட்களாக வரும் சாத்தியக்கூற்றை சுஜாதா கணித்ததாக கூறினார்.
சுஜாதா ஆசிரியராக சிலகாலம் செயல்பட்ட குமுதம் கவிதை போட்டியில் தான் நடுவராக பங்காற்றி கவிஞர் தாமரையையும் இன்னொரு கவிஞரையும் தேர்ந்தெடுத்து இருவருக்குமே பரிசளிக்க சிபாரிசு செய்ததையும் நினைவு கூர்ந்தார். சுஜாதாவுடன் அதிக அளவில் பழகிய கவிஞன் தானாகத்தான் இருப்பார் என்பதையும் குறிப்பிட்டார். சுஜாதா மனுஷ்யபுத்திரனை அடையாளம் கண்டு, அவரை முதலில் பலருக்கு தன் எழுத்துக்கள் வாயிலாக அறிமுகப்படுத்தியதையும் அவர் குறிப்பிட்டார்.
திருமலை
இந்த மேடையில் தனக்கு பேச வாய்ப்பு கிடைத்ததற்கான ஒரே தகுதி தான் சுஜாதாவின் தம்பி என்பது மட்டுமே என அவர் ஆரம்பத்திலேயே வெளிப்படையாகவே குறிப்பிட்டார்.
தனது அண்ணா ஒரு பன்முக ஆளுமை என குறிப்பிட்டார். பல துறைகளில் செயல்பட்டாவர். அதே சமயம் ஒவ்வொன்றிலுமே சிறப்பாக செயல்பட்டவர். நேர மேலாண்மையை நன்கறிந்து கடைபிடித்தவர். இவ்வளவு திறமை வாய்ந்தவரை மருத்துவத்தால் காப்பாற்ற இயலாமல் போனது குறித்து வருத்தம் தெரிவித்தார். எந்த கலைஞனையும் அவர் இறந்தபிறகுதான் புகழ்வது என்ற நிலை மாறி அவர்கள் உயிருடன் இருக்கும்போதே கௌரவம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
டைரக்டர் வசந்த்
தனது புனைப்பெயர்தான் வசந்த் எனக்கூறிவிட்டு, அப்பெயர் கணேஷின் தோழன் வசந்த் ஏற்படுத்திய பாதிப்பாலேயே தனக்கு வந்தது எனக்கூறினார். தனக்கு சுஜாதா மேல் காதல் என குறிப்பிட்டு, பிறகு தான் அவரை சந்தித்த தருணங்களை விளக்கினார். முதல் சந்திப்பு பற்றி அப்புறம் கூறுவதாக சொல்லிவிட்டு அடுத்த சந்திப்புகள் பற்றி பேச ஆரம்பித்தார்.
தனது அன்னைக்கு படித்து காட்டவே முதலில் சுஜாதா நாவல்களை வாசிக்க ஆரம்பித்தவர் அவர் மேலே காதலாகி போனதை குறிப்பிட்டார். இரண்டாம் சந்திப்பு சாவி ஆஃபீசில் வைத்து நடந்ததாக சொன்னார். “யார் உள்ளே இருக்கிறார் தெரியுமா” என அவரிடம் கேட்கப்பட, அவர் கேஷுவலாக என்ன சுஜாதா இருப்பது போல பில்ட் அப் தருகிறாயா எனக் கேட்க, ஆம் சுஜாதாதான் என பதில் வந்த போது திக்குமுக்காடி போனதையும் சொன்னார். உள்ளே எட்டிப் பார்த்தல் பலர் (சுஜாதா உட்பட) புகைத்து கொண்டிருந்த சிகரெட் புகையால் அவரை சரியாக பார்க்க இயலவில்லை.
மூன்றாம் சந்திப்பில் பங்களூருவில். அப்போதுதான் சுஜாதாவின் கையெழுத்தை பார்த்ததாகவும், ஒன்றுமே புரியாத இடியாப்பச் சிக்கலாய் இருந்தது என்றும் குறிப்பிட்டார். பிறகு நான்காம் சந்திப்பும் பெங்களூருவில் வைத்துத்தான் நடந்தது, “சொல்லத்தான் நினைக்கிறேன்” படத்தில் கன்னட வெர்ஷனின் படப்பிடிப்பின்போது. அப்போது 45 நாட்கள் பெங்களூருவில்தான் இருந்தாலும் படப்பிட்டின் பிசி ஷெட்யூலால அவரை கடைசி நாள்தான் சந்தித்து பேச முடிந்தது என்றும் கூறினார்.
கடைசியாக முதல் மீட்டிங்கிற்கு வந்தார். அப்போது என்ன நடந்தது என்று பார்த்தால் ஒன்றுமே நடக்கவில்லை என்று கூறிவிட்டார். தன்னை ஒருவர் சுஜாதாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததுமே, அப்படியா சரி எனக்கூறிவிட்டு அவர் நகர்ந்து விட்டதாகவும், தனக்கு மிகுந்த ஏமாற்றம் என்றும் அவர் கூறினார்.
எழுத்தாளர் தேவிமைந்தன்
எதையும் சான்சுக்கு வைக்காமல் இவர் சில முழுத்தாள்களில் எழுதிக் கொண்டு வந்து படித்து விட்டார். ஆகவே தயக்கம் ஏதும் இன்றி பேச்சு வந்தது.
சுஜாதாவுடன் தனக்கு வந்த தொடர்புகளை பட்டியலிட்டார். அவரது கற்றதும் பெற்றதும் தொடர் விகடனில் வந்தது பற்றி குறிப்பிட்டார். ஏன், எதற்கு, எப்படி என்னும் தலைப்பில் அவர் நடத்திய கேள்வி பதில்கள் சீரியல்கள் மிக நன்றாக இருந்தன. பதில்கள் சிந்தனையை தூண்டுவதாக இருந்தன.
கார்ட்டூனிஸ்ட் மதன்
சுஜாதா எழுதிய புத்தகங்களின் லிஸ்ட் மிக உயரமானது.
ஜூனியர் விகடன் ஆரம்பித்த போது அதில் இணையாசிரியராக தான் நியமிக்கப்பட்டதாக மதன் கூறினார். அச்சமயம் அதில் கதை எதுவும் வேண்டாம் என முடிவெடுத்தையும் அவர் கூறினார். அப்போது சுஜாதாவின் கேள்விபதில்கள் அதில் வர ஆரம்பித்த பின்னணியையும் கூறினார். ஒரு சமயம் சுஜாதாவின் பதில்கள் பெங்களூருவிலிருந்து வர தாமதமாக தானே 3 கேள்விகளுக்கு பதில் எழுதியதையும், அதை சுஜாதா பாராட்டியதையும் குறிப்பிட்டார்.
தான் இப்போது நாடக இயக்கம் ஒன்றில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அதில் பல விஷயங்களில் நாடகம் போட போட்டி வைத்தபோது பெரும்பாலானோர் சுஜாதாவின் கதைகளையே தேர்ந்தெடுத்ததையும் கூறினார். அதனால் தனக்கு வந்த துயரம் மகிழ்ச்சி இரண்டையுமே சுவைஒயாக விளக்கினார்.
இந்த நிகழ்ச்சி நடத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஹால் மெல்லிசை நிகழ்ச்சி நடத்தவே லாயக்கு என்றும், அடுத்த முறை நல்ல அகௌஸ்டிக் உள்ள ஹாலை தேர்ந்தெடுக்க வேண்டும் என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். சென்னையில் பல நூலகங்கள் அமைக்கும் திட்டம் இருப்பதாகவும் அவற்றில் சுஜாதாவின் நூல்களுக்காக பிரத்தியேக இடம் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
நடிகர் பார்த்திபன்
தாமதமாக வந்ததற்காக முதற்கண் மன்னிப்பு கேட்டு கொண்டார். சுஜாதாவை தான் தந்தை ஸ்தானத்தில் வைத்து பார்ப்பதாக குறிப்பிட்டார். அவரது அறக்கட்டளைக்காக தன்னல் இயன்ற அளவு உதவி செய்வதாக கூறினார்.
மணி எட்டை தாண்டிய நிலையில் கூட்டம் ஒரு முடிவுக்கு வந்தது. அதன் பிறகு அடுத்த ஹாலில் எல்லோருக்கும் உணவுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக அறிவிப்பு வர, அங்கு விரைந்தேன். சும்மா சொல்லப்படாது, நல்ல கல்யாண சமையல்.
எல்லோரும் சுஜாதாவுடனான தத்தம் தொடர்பை கூறிவிட்டார்கள். டோண்டு ராகவனான என்னால் ஆனது, இங்கே சில வரிகள்.
அறுபதுகளில் சில கதைகள் என் மனதைக் கவர்ந்தன. அவற்றில் ஒன்றுதான் "ஒரு கதையில் இரு கிளைக்கதைகள்". ஒரு கிளைக்கதை சரித்திரக்கதை, இன்னொன்று தற்காலக் கதை. இரண்டாவதில் வந்த கதாநாயகனை அவன் காதலிக்கும் பெண் நிராகரிக்கிறாள். முதல் கதையில் வந்த ராஜகுமாரி தனது முறைமாப்பிள்ளையை துரத்தி விட்டு பல்லக்கில் செல்கிறாள். திடீரென ஒரு உருவம் வந்து நிற்கிறது. பல்லக்கின் திரையை விலக்குகிறது. ராஜகுமாரி "யார் அது" என்று கேட்க, "ராஜகுமாரி, நான் பக்கத்துக் கதையில் நிராகரிக்கப்பட்டவன்" என்று கூறுகிறது. அவனை பல்லக்கில் ஏற்றிக் கொள்கிறாள் ராஜகுமாரி, பயணம் தொடர்கிறது. சர்ரியலிசம் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் அக்கதையைப் படித்ததுமே என் மனதைக் கொள்ளை கொண்டது அது. எழுத்தாளர் பெயரை அப்போது கவனிக்கவில்லை.
அதே போல இன்னொரு கதை, தலைப்பு மறந்து விட்டது, ஆனால் கடைசி வரி ஞாபகத்தில் இருக்கிறது. "இஞ்சினியர்கள் நாசமாப் போக". ஹோட்டலில் ஒரு பெண்ணின் நெக்லஸைத் திருட திட்டம் போடுகிறான் ஒரு இளைஞன். விளக்கையெல்லாம் அணைக்க ஏற்பாடு செய்து விட்டு, நெக்லஸையும் வெற்றிகரமாக பறித்து ஓடுகிறான். ஆனால் திடீரென மீண்டும் விளக்குகள் எரிகின்றன. கதையிலிருந்து சில வரிகள்: "நான் கோழிக்குஞ்சு மாதிரி ஓடிக்கொண்டிருக்கிறேன். ஆறடி உருவமும் மிகுந்த அகலமும் கொண்ட தர்வான் கைகளை விரித்து கொண்டு வந்து, என்னை தடுத்து, தமிழ் சினிமாவில் அப்பா மகனை அணைத்துச் செல்வது போல தூக்கிச் செல்கிறான்". விஷயம் என்னவென்றால், எமெர்ஜென்சி ஜெனெரேட்டர் தானாகவே செயல்படத் துவங்கியுள்ளது. அதனால்தான் "இஞ்சினியர்கள் நாசமாப் போக". இக்கதையின் எழுத்தாளர் பெயரையும் அச்சமயம் கவனிக்கவில்லை.
சமீபத்தில் 1971 ஜனவரியில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு மெயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தேன். அப்போதெல்லாம் ரயில் வண்டிகளில் மூன்று வகுப்புகள் உண்டு. பிறகுதான் இரண்டாம் வகுப்பு நீக்கப்பெற்று, அப்போதைய மூன்றாம் வகுப்பு இப்போதைய இரண்டாம் வகுப்பாயிற்று. கம்பார்ட்மெண்டில் ஒரே கூட்டம். நால்வர் அமர வேண்டிய பெஞ்சில் ஏழு பேர் அமர்ந்திருந்தோம். என் பக்கத்தில் இருந்தவரை எங்கோ பார்த்த உணர்வு. அப்போது ஐ.ஓ.பி. மீனம்பாக்கம் கிளையின் மேனேஜர் திரு. கோபு அவர்களது முகஜாடை இருந்தது, ஆனால் அவர் இல்லை. ஆகவே அவரிடம் அவர் கோபு அவர்களது சகோதரரா எனக்கேட்க, அவர் அதை மறுத்து தான் எழுத்தாளர் சுஜாதா என்றார். எனக்கு ஒரே சந்தோஷம்.
அவரது நைலான் கயிறு நாவலிலிருந்து எனக்கு பிடித்த வரிகளை கோட் செய்த போது அவருக்கு மிக்க மகிழ்ச்சி. அந்த ரயில் பயணத்தின்போது திடீரென நான் மேலே சொன்ன கதைகள் ஞாபகத்துக்கு வர, ஒரு வேளை அவர்தான் அவற்றை எழுதியதோ எனக்கேட்க, அவரும் ஆமோதித்தார். ஆக, ஒரு நல்ல கதை எழுத்தாளர் யார் என்றே தெரியாத நிலையிலும் நினைவில் நிற்கும் என்பது நிரூபணம் ஆயிற்று.
அவரது ”ரத்தம் ஒரே நிறம்” என்ற கதை அக்காலக் கட்டத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அது பற்றி நான் எழுதிய பதிவில் எனது அனுமானங்கள் சிலவற்றை வைத்திருந்தேன். அவற்றை சரி பார்த்துக் கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதே போல கணேஷும் வசந்தும் ஒருவரே என்பது பற்றியும் கன்ஃபர்ம் செய்து கொள்ள முடியவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கிறிஸ்துவமே ஐரோப்பாவின் பண்பாட்டுமையம்
-
நியூயார்க் நகரின் மையத்தில் அமர்ந்து செய்த ஒரு காணொளி. அந்த இடத்தில்
அப்போது உருவான எண்ணம் அப்படியே வெளிவரவேண்டும் என நினைத்தேன். மைக்
பொருத்துவது வரை ஒரு ...
7 hours ago
2 comments:
நல்ல பகிர்வு
Dondu sir, I do envy many of your skills like memory, language. But, this - met Sujatha in train (when I was one year old that time!)...do you aware how lucky you are!
Essex Siva
Post a Comment