8/08/2010

இஸ்ரேல் - ஹிட்லரின் தீர்க்கதரிசனம் என ஒரு இசுலாமியரின் புலம்பல்கள்

பதிவர் மஸ்தானின் இந்த இடுகையைப் பார்த்ததும் இந்த டோண்டு ராகவனால் சும்மா இருக்க இயலவில்லை. ஆகவேதான் இப்பதிவு.

அவர் உளறியதிலிருந்து சில வரிகள்.

இஸ்ரேல்... ஹிட்லரின் தீர்க்கதரிசனம்
Posted by ..:: Mãstän ::.. நாள் Friday, August 06, 2010
Aug 6,
சிலரை உயிரோடு விட்டுள்ளேன், அவர்கள் மீது இரக்கபட்டு அல்ல, அந்த இனம் எப்படி பட்டது என்பதை உலகம் அறியவேண்டும். --ஹிட்லர்.

இந்த படங்களை பாருங்களேன், மிகவும் வருத்தமாய் இருக்கும் இதையெல்லாம் பார்க்க, ஏன்தான் இப்படி நடக்கிறதோ??? ஹிட்லர் சொன்னது உண்மைதான் போல், ஈவு இரக்கம் இல்லாமல் இப்படியும் செய்வார்களா”?

பிறகு சில படங்கள்.

என்ன செய்வது மஸ்தான் அவர்களே, யுத்தம் என்றால் அப்படித்தான் இருக்கும். தங்கள் தேசத்தையே அழிக்க வேண்டுமென சொல்லிக் கொண்டிருப்பவர்களிடம் இஸ்ரேல் வேறு எப்படி நடந்து கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? இந்த அழகில் ஹிட்லர் சிலரை விட்டுவைத்தானாம். அந்த இழிபிறவியை தீர்க்கதரிசி என்று சொல்ல ஒரு கொடூரமான மைண்ட்செட் தேவைப்படுகிறது. அது பல இசுலாமியரிடம் தாராளமாகவே உள்ளது. செத்தது ஒன்றே அவன் இவ்வுலகுக்கு செய்த நல்ல காரியம்.

அறுபதுகளின் ஆரம்பத்தில் ஐஷ்மேனை அர்ஜன்டைனாவிலிருந்து சிறையெடுத்து வந்தனர் இஸ்ரவேலர்கள். பென் குரியன் இதை அவர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்தப் போது உறுப்பினர்கள் மேஜைகளைத் தாட்டித் தங்கள் களிப்பை வெளிப்படுத்தினர்.

அது சம்பந்தப்பட்டச் செய்திகளை நான் தினமும் கவனமாகப் படித்தேன். எனக்கு முதலில் தோன்றிய எண்ணம் என்னவென்றால் பேசாமல் அவனைப் போட்டுத் தள்ளியிருந்தால் பணம் மிச்சமாக இருந்திருக்குமே என்பதுதான். ஆனால் இஸ்ரவேலர்கள் வேறு மாதிரி நினைத்தனர். அவன் மேல் வழக்குத் தொடுத்தனர். அவனுக்காக வக்கீலும் வைத்துக் கொடுத்தனர். அவரும் தர்ம வக்கீல் போலன்றி அவனுக்காக உண்மையுடன் வாதாடினார். விவரங்கள் வெளி வரத் தொடங்கின. அப்போதுதான் நிலைமையின் தீவிரம் புரிந்தது. நாஜிகள் எவ்வளவுக் கீழ்த்தரமானவர்கள் என்றுப் புரிந்தது.

அறுபது லட்சம் பேரைக் கொலை செய்வது என்பது இது வரை சரித்திரத்தில் நடக்காதது. அதைச் செய்ய இந்த மனிதன் அரசு எந்திரத்தைப் பயன் படுத்தியிருக்கிறான். இரண்டாம் உலக யுத்தத்தின்போது எல்லாத் தளவாடங்களும் பற்றக்குறையில் இருக்க, யூதர்களை சித்திரவதை முகாம்களுக்கு அழைத்துச் செல்லும் வேலைக்கு முன்னுரிமை கொடுக்கப் பட்டது.

வழக்கு நடந்தக் காலத்தில் ஜெர்மனியிலும் சரி, இஸ்ரேலிலும் சரி தலைமுறை விரிசல்கள் அதிகமாயின. "நீங்கள் இவ்வளவுக் கொடூரமானவர்களா" என்று ஜெர்மானிய இளைய சமுதாயம் பெற்றோர்களைப் பார்த்துக் கேட்டனர். அவர்கள் அவமானத்தில் தலை குனிந்தனர். "நீங்கள் இவ்வளவு முட்டாள்தனமாக நடந்து நம்மவர்களில் அறுபது லட்சம் பேரை பலி கொடுத்தீர்களா" என்று இஸ்ரேலிய இளைய சமுதாயம் சீறலுடன் கேட்க, அவர்தம் பெற்றோர்கள் அவமானத்தால் தலை குனிந்தனர். அதனால்தான் 1967 யுத்தத்தின் போது அரபு தேசங்கள் தாங்கள் யூதர்களை எப்படியெல்லாம் அழிக்கப் போகிறோம் என்றுக் கூறியதை இஸ்ரவேலர்கள் யாரும் வெற்று மிரட்டலாக எடுத்துக் கொள்ளவில்லை. தங்கள் எதிரிகளை ஓட ஓட விரட்டினர்.

அதுதான் இன்னும் தொடர்கிறது. இசுலாமியர் தரும் பயமுறுத்தல்களை சீரியசாக எடுத்துக் கொள்வது இஸ்ரேலைப் பொருத்தவரை காலத்தின் கட்டாயமே.

இசுலாமியர்கள் இன்னொன்றையும் சௌகரியமாக மறைக்கின்றனர். அதாவது பாலஸ்தீனியருக்கு அளிக்கப்பட்ட நாட்டை அவர்கள் அனுபவிக்க முடியாத வண்ணம் செய்தவர்கள் சக இஸ்லாமியரான எகிப்தியர்கள் மற்றும் ஜோர்டானியரே.

இப்படித்தான் 1948-ல் முறையான ஐ.நா. வாக்கெடுப்பில் பாலஸ்தீனப் பிரிவினை ஏற்பட்டது. அன்றிலிருந்து யுத்தம்தான். அப்போதுதான் பிறந்தக் குழந்தையை கழுத்தை நெறித்துக் கொல்ல சுற்றியிருந்த அரபு நாடுகள் தாக்கின. அதையும் எதிர்க்கொண்டது இஸ்ரேல். அந்த யுத்தத்தில் யூதர்களை ஒட்டு மொத்தமாகக் கொல்ல ஏதுவாக பாலஸ்தீனர்களை தங்கள் வீடுகளைக் காலி செய்து விலகிப் போகுமாறுக் கூறினர் அரபு நாட்டவர்கள். அவ்வாறு சென்றவர்கள்தான் பாலஸ்தீன அகதிகள். தங்கள் போராட்டத்தைத் தாங்களே நடத்திக் கொள்ளாமல் மற்றவர்கள் தோளில் சவாரி செய்த சோம்பேறி பாலஸ்தீனியர்கள் அந்த வழக்கத்தை விடவே இல்லை. அதுதான் அவர்கள் பிரச்சினை.

யூதர்களுக்கும் அவர்களை இவ்வளவு ஆண்டுகளாகத் துன்புறுத்தி வந்திருப்பவர்களுக்கும் எதில் கருத்து வேறுபாடு? மற்றவர்கள் யூதர்கள் இறக்க வேண்டுமென்று விரும்புகின்றனர். அவர்கள் அவ்வாறு இறக்க விரும்பவில்லை.

ஜூலை 31, 1971. ஜோர்டான் நதியின் இக்கரையில் காவல் காத்துக் கொண்டிருந்த இஸ்ரவேலர்களுக்குத் தங்கள் கண்களை நம்பவே இயலவில்லை. என்ன நடந்தது? ஜோர்டான் பக்கக் கரையிலிருந்து சிலரை ஜோர்டான் படையினரைத் துரத்தி வந்தனர். யார் அந்தச் சிலர்? அவர்கள் பாலஸ்தீனியத் தீவிரவாதிகள். துரத்தப்பட்டவர்கள் நேராக ஜோர்டான் நதிக் கரையில் குதித்து இஸ்ரேல் தரப்பை நோக்கி நீந்த ஆரம்பித்தனர். இக்கரைக்கு வந்து இஸ்ரவேலர்களிடம் தஞ்சம் புகுந்தனர். பிறகு பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளிக்கும் போது அவர்கள் கூறினார்கள்: "இஸ்ரவேலர்கள் எங்களைக் கைதுதான் செய்வார்கள். ஆனால் ஜோர்தானியர்கள் கொன்று விடுவார்கள்" இந்த விஷ்யத்தில் பாலஸ்தீனியத் தலைமை மிகவும் அவமானப்பட்டது. இந்தச் செய்தி இங்கும் சகவலைப்பதிவாளர்கள் பலருக்குப் புதிதாக இருக்கும்.

ஆகவே மஸ்தான் அவர்களே, உங்கள் புலம்பல்களை தொடரவும். ரெடி ஜூட், ஸ்டார்ட் மியூஜிக் ஒன், டூ, த்ரீ....

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/07/2010

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 07.08.2010

ABC World News
சமீபத்தில் 1992-93 வாக்கில் தில்லி கஸ்தூரிபா காந்தி மார்க்கில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் நூலகக் கட்டடத்திலிருந்து வெள்ளிக் கிழமைகளில் பிற்பகல் சுமார் 03.25 மணி வாக்கில் ஒரு உருவம் வேகமாக வெளியேறி, சப்வே வழியாக தெருவைக் கடந்து, அமெரிக்க நூலகத்துக்கு முகத்தில் தீவிரத்துடன் நூல்பிடிகணக்காய் ஓடி, அது அசப்பில் டோண்டு ராகவன் போலவும் இருந்தால் 99% சதவிகிதத்துக்கு அது டோண்டு ராகவனாகத்தான் இருக்கும்.

ஏன் ஓட வேண்டும்? ஏனெனில் சரியாக 03.30-க்கு அமெரிக்க நூலக நிலத்தடி அரங்கில் ஏபிசி வேர்ள்ட் நியூஸ் ஆரம்பிக்குமே, அதுவும் பீட்டர் ஜென்னிங்க்ஸின் கம்பீரமான குரலுடன். அதை மிஸ் செய்யக்கூடாது என்பதற்காகவே நான் எப்படியாவது கெஞ்சிக் கூத்தாடி, ஐடிபிஎல் மேலதிகாரியிடம் அனுமதி வாங்கி பிற்பகல் டெல்லி வேலை ஏதாவது வாங்கி விடுவேன். பிறகென்ன நேராக கனாட் பிளேசில் உள்ள மதறாஸ் ஹோட்டலுக்கு வந்து சாப்பாடு ஒரு பிடிபிடித்துவிட்டு (அளவில்லாமல் அப்பளங்கள், அதன் முதலாளி, “வாங்கோண்ணா சவுக்கியமா” எனக் கேட்கும் அளவுக்குப் பரிச்சயமானார்), பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு வரவேண்டியது. புத்தகங்களை வெறுமனே பார்த்து தேவையான புத்தகங்களை எடுக்கவே நேரம் சரியாக இருக்கும். பிறகு முதலில் சொன்னதுபோல ஓட்டம்தான். அமெரிக்க நேரப்படி வியாழன் இரவு வருவது இங்கு வெள்ளியன்று பிற்பகல் 12.30 மணியளவில் ஒளிபரப்பபட்டு பிற்பகல் 03.30 அதன் ரிகார்டிங் திரையிடப்படும்.

என்னை மாதிரி இதன் மகிமை தெரிந்த சிலர் அங்கு தவறாமல் வருவோம். அந்த நிகழ்ச்சியின் ஓப்பனிங் ட்யூனே பிரமாதமாக இருக்கும். முந்தைய வெள்ளிக்கிழமை, அடுத்த திங்கள் முதல் வியாழன் முடிய வந்த வேர்ல்ட் திஸ் டே-க்களின் தொகுப்பே நான் பார்க்கும் நிகழ்ச்சி. அதில்தான் பில் க்ளிண்டன், ஃபோர்ட் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட கதையைப் பார்த்தேன். நடுவில் ரோஸ் பெறோ என்பவர் வந்து இரு வேட்பாளர்களுக்கும் பேதி கொடுத்ததை ரசித்தேன். எல்லாவற்றையும் விட பால்கன்ஸில் நடந்த உள்நாட்டுப் போர்களின் அலங்கோலத்தையும் பார்த்து திடுக்கிட்டேன்.

அவ்வரிசையில்தான் செசென்யாவின் ரஷ்யாவுக்கெதிரான போராட்டம். அதில் ஒரு 12 வயது செசென்ய சிறுவனைப் போருக்கு அனுப்பும் நிகழ்ச்சி விஸ்தாரமாகக் காட்டப்பட்டது. போர் உடையில் அந்தக் குட்டிப் பையன் பெருமிதத்துடன் நின்றான். கடைசியின் பீட்டர் ஜென்னிங்க்ஸின் இரக்கம் தோய்ந்த குரல், “இந்த வீடியோ எடுக்கப்பட்ட அரைமணிக்குள் அந்தக் குட்டிப் பையன் குண்டுக்கு பலியானான்” எனக்கூறியதும், அது மகாபாரதப் போரில் விகர்ணன் பீமனை வீரத்துடன் எதிர்த்துப் போரிட்டு மரணமடைய, பீமனே சற்றே யுத்தத்தை நிறுத்தி, “அருமைத் தம்பி விகர்ணா, உன்னையும் கொல்ல நேர்ந்ததே. மிகவுமே கொடியது இந்த யுத்தம்” என துக்கிப்பதையே நினைவுபடுத்தியது.

இதைப் பார்த்ததும் எனக்கு வஞ்சிக்கோட்டை வாலிபனில் வரும் இக்காட்சி நினைவுக்கு வந்தது. புற நானூற்றிலோ அல்லது வேறு எங்காவது வரும் ஒருபாட்டில் இக்காட்சி வருகிறது. அது எங்கே, முழுப்பாடல்/கதை என்னவென்று யாராவது சொல்லுங்கப்பூ.

சுதந்திரத்தின் விலை
முதல் உலகமகாயுத்தமும் சரி, இரண்டாம் உலக மகா யுத்தமும் சரி, இந்தியர்களால் அசட்டை செய்யப்பட்டன. அவை “வெள்ளைக்காரனின் யுத்தங்களாக” சித்தரிக்கப்பட்டன. ஆகவே சமீபத்தில் 1962-ல் சீன யுத்ததின்போது பலபெரிசுகள் சுதந்திரம் வராமலிருந்தால் இந்த யுத்தமும் அவனுடையதாகியிருக்குமே எனப் பெருமூச்சு விட்டன.

சுதந்திரத்துக்கு விலை உண்டு என்பது என் விஷயத்திலும் நிரூபணமானது. முழுநேர வேலையிலிருந்து சுதந்திரம் பெற்றதும் மாதச் சம்பளம் இல்லை என்பது அதற்கான விலை. வார முழுதும்கூட உழைக்க வேண்டியிருக்கும் என்பது அதன் பை பிராடக்ட். ஓக்கே, ஓக்கே அதனால் என்ன? சந்தோஷமாகத்தானே இருக்கிறேன்.

தில்லியில் தமிழ் புத்தகங்கள் லேட்டாகத்தான் வரும், அப்படியே வந்தாலும் நாம் போவதற்குள் தீர்ந்து விடும் அபாயமும் உண்டு. எங்கள் ஏரியா கடைக்காரர், தன்னிடம் புக் செய்து கொண்டால் எனக்காக புத்தகங்களை ரிசர்வ் செய்து வைப்பதாகக் கூறுவார். ஆனால் நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். தில்லியில் எங்கு சென்றால் அந்தந்த இடங்களில் காணும் லேட்டஸ்ட் புத்தகங்களை வாங்கும் சுதந்திரம் எனக்குத் தேவை. சென்னைக்கு செல்லும் சமயம் இதற்கென மெனக்கெட்டு புத்தகக் கடைக்காரரிடம் சொல்லும் வேலை மிச்சம். ஆனால் இந்த சுதந்திரத்தின் விலை சில சமயங்களில் புத்தகம் கிடைக்காமல் போதல்.

மதுரை விஜயம்
வீட்டம்மாவும் பெண்ணும் மதுரைக்கு என் மச்சினி வீட்டுக்கு சென்று ஒரு வாரம் ஆயிற்று. அவர்களை அழைத்துவர இன்று எனது காரில் சென்றேன். நாளை சென்னை வந்துவிடுவேன். நல்ல காரோட்டி. ஏழே மணி நேரத்தில் மதுரைக்கு வந்து விட்டோம், ஆனால் மதுரை டிராஃபிக்கை சமாளித்து, வீட்டை அடைய ஒரு மணி நேரம் ஆயிற்று.

தில்லிகு விமானத்தில் சென்ற கணவனை வழியனுப்ப மீனம்பாக்கம் ஏர்போர்ட் செல்கிறாள் மனைவி. தில்லி விமான நிலையத்திலிருந்து கணவன் தன் வீட்டுக்கு ஃபோன் செய்கிறான், அம்மா இன்னும் ஏர்போர்ட்டிலிருந்து வீட்டுக்கு வரவில்லை என மகன் கூறுகிறான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/03/2010

கை குலுக்காததால் வந்த அவமானம்

எங்கள் மொழிபெயர்ப்பாளர் தலைவாசல் ப்ரோஸ்.காம்-ல் வந்த இச்செய்தி சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது.

அதிலிருந்து சில வரிகள்:

A Saudi Arabian translator is seeking an apology and compensation from the Australian government after an incident with the Australian ambassador that she says showed disgraceful rudeness and lack of cultural sensitivity.

Wafaa Saeed had been working for the embassy in Riyadh only a day when the ambassador, career diplomat Kevin Magee, allegedly lost his temper at a staff function because – in accordance with local Islamic practice – she declined to shake hands with him. Ms Saeed, 28, said the incident occurred at a farewell lunch on January 19 this year for the translator she was replacing.

Ms Saeed emailed then Prime Minister Kevin Rudd and Foreign Minister Stephen Smith two weeks later. In the emails she asked that Mr Magee be given cultural sensitivity training. She also said that taking into account the position she passed over and ”the vigorous emotional, ethical and professional abuse I encountered by the man who should be the most diplomatic and knowledgable, he has to compensate me for all that as a result of his inconsiderate behaviour”.


முழு விவரங்களுக்கு இங்கு செல்லவும்.

ஆஸ்திரேலிய தூதுவருக்கு சங்குதாண்டி. அவர் தூதுவருக்குரிய குணங்களுடன் இருப்பதாகத் தெரியவில்லை.

எனது சகமொழிபெயர்ப்பாளருக்கு எனது முழு ஆதரவு. ஆஸ்திரேலிய அரசு எவ்வாறு எதிர்வினை தரும் என்பதைப் பார்க்க வேண்டும். சவுதி அரசையும் அவதானித்தால் அவசியம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8/01/2010

அம்மாவின் சமையல் போல வருமா???????

ஜெயமோகனின் சுவையாகி வருவது இடுகையின் பின்னூட்டம் ஒன்றிலிருந்து முதற்கண் சில வரிகள்:

“நான் என் அம்மாவின் சமையலே மிகுந்த ருசியானது என்று சொல்லிகொண்டிருன்தேன், என் மகன் பேச ஆரம்பித்த பின்பு என் மனைவியின் சமையலே மிகுந்த ருசி என்றான்”.

இதைப் படித்தவுடன் எனது நினைவுகள் சமீபத்தில் அறுபதுகளில் கல்கி அல்லது குமுதத்தில் வந்த ஒரு கதைக்கு சென்றன. அதன் தலைப்பே "அம்மாவின் சமையல்”தான். அதன் கதைச் சுருக்கம் பின்வருமாறு:

அகிலா (இக்கதாபாத்திரத்துக்கு நான் இங்கு பெயரளித்துள்ளேன், ஏனெனில் ஆக்சுவலாக என்ன பெயர் அக்கதையில் கொடுக்கப்பட்டது என்பது நினைவில் இல்லை) ஹோம் சயன்சில் எம்.ஏ. அவளுக்கு திருமணமாகிறது. அவளும் மிக சிரத்தையாக சுத்தமாக சமைக்க, அவள் கணவன் எல்லாவற்றையும் முழுங்கி விட்டு “என்னதான் இருந்தாலும் அம்மாவின் சமையல்போல வராது” என்கிறான். அகிலாவுக்கு அதில் மனக்குறை. ஆனால் அவள் மாமியாரோ திருப்தியாக சாப்பிடுகிறாள், “சமையல் பிரமாதம்” என்கிறாள். மாமியாரே அவ்வாறு சான்றிதழ் தந்ததில் அவளுக்கு சந்தோஷம்தான் என்றாலும், கணவன் கூறியது உறுத்துகிறது.

இதே மனக்குறையில் அவளுக்கு ஜுரமே வந்து விடுகிறது. ஆகவே அவள் மாமியாரே சமைக்கிறாள். அவ்வாறு சமைத்துக் கொண்டிருக்கும்போது எதேச்சையாக சமையலறை ஜன்னலைப் பார்க்க, அவளை இரு கண்கள் வெறித்தவாறு பார்க்கின்றன. நடுநடுங்கிப் போகிறாள். அவள் பார்ப்பதை உணர்ந்த அக்கண்களும் சரேலென விலகிக் காணாமல் போகின்றன. வேகமாக மாடிக்கு சென்றால், அவள் மருமகள் மூச்சுவாங்க படுத்திருக்கிறாள். “அம்மா நான் கீழேஎ வரவேயில்லை என சம்பந்தமில்லாமல் கூறுகிறாள்”.

சில நாட்கள் கழித்து குணமடைந்த பின்னால், அவளே சமையல் செய்ய ஆரம்பிக்க, இம்முறை கணவன் அம்மாவின் சமையல்போலவே இருக்கு என அவளை சிலாகிக்க, மாமியாருக்கோ சாப்பாடு குறைகிறது.

பிறகு ஒரு நாள் கணவன் எதேச்சையாக தன் மனைவி எழுதிய குறிப்பை படிக்கிறான். அதன் தலைப்பு அம்மாவின் சமையல் என இருக்கிறது. எல்லா உணவுப் பொருட்களுக்கும் போட வேண்டிய அளவுகள் அதில் உள்ளன. கடைசியில் எழுதப்பட்ட வரிகளே அவனது கவனத்தைக் கவர்கின்றன.

“ஆண்டவன் கொடுத்த கரங்கள் இருக்கும்போது கரண்டிகள் எதற்கு? புளி கரைக்க, புளிசாதம் பிசிய, அடுப்பில் ஏற்றும் முன்னால் குழம்புக்கு பொடி போட்டு கரைக்க எல்லாவர்றுக்குமே கைகளையே பயன்படுத்த வேண்டும்” என அவை கூறுகின்றன. யோசனையுடன் அவன் சமையறைக்கு வர, அவன் மனைவியும் அம்மாவும் பேசுவதை கவனிக்கிறான். அவன் அம்மா கூறுகிறாள். “என்னோட ஆத்துக்காரரும் அப்படித்தான் தன் அமாவின் சமையலே சிறந்தது என்று சொல்லி என்னை வெறுப்பேத்தினார். பிறகு என் மாமியார் சொல்லிக் கொடுத்ததுபடி செய்தேன்” என்றாள். அவள் மேலும் கூறுகிறாள், “அது ஒண்ணுமில்லை, நாம கையைத்தான் எல்லா கலக்கல் வேலைகளுக்கும் உபயோகப்படுத்துகிறோம், அதனால் சமைக்கப்பட்ட பதார்த்தங்களில் ஒருவித ஊசல் வாசனை வந்து விடும், அது இந்த ஆண்களுக்கு பிடித்துத் தொலைத்துவிடும், என் கணவரும் அப்படித்தான், உன் கணவனும் அப்படித்தான்”.

“ஐயோ சொல்லாதீர்கள் அம்மா, வயத்தைக் குமட்டுகிறது,” என மருமகள் கூற, கணவனுக்கு தலை சுற்றுகிறது.

இக்கதை பிளாட்தான் ஞாபகத்துக்கு வந்ததே தவிர, எழுதியவர் பெயர் என்ன என்பது நினைவுக்கு வரவில்லை. என் சித்திக்கு ஃபோன் போட்டு கேட்டேன். கதையின் பிளாட்டை கூறியதுமே அவருக்கும் அக்கதை தெரியும் என்றார். ஆனால் அவருக்கும் அக்கதையை எழுதியது யார் என்று தெரியவில்லை.

நானாகவே ஊகித்து அப்புசாமி சீதாபாட்டி புகழ் ஜ.ரா. சுந்தரேசனுக்கு ஃபோன் போட்டு கேட்டேன். அவரால் திட்டவட்டமாக சொல்லவியலவில்லை. இருந்தாலும் ஊசல் என்ற வார்த்தையை தான் அடிக்கடி பயன்படுத்துவதாகக் கூறினார். அவரிடமிருந்து ராகி ரங்கராஜனின் எண்ணை வாங்கி அவருக்கும் ஃபோன் போட்டேன். ஆனால் அவர் மனைவிதான் பேசினார். மதியத்துக்கு மேல் ஃபோன் செய்து பேசச் சொன்னார். எதற்கும் இப்பதிவையும் இங்கே போட்டு விடுகிறேன். உங்களில் யாருக்காவது அது யாருடைய கதை என்பது தெரிந்தால் சொல்லுங்கப்பு.

ஜரா சுந்தரேசனுக்கு ஃபோன் போட்டதில் வெகுநாட்களாக என்னைக் குடைந்து கொண்டிருந்த இன்னொரு கேள்விக்கு பதில் கிடைத்தது. சமீபத்தில் 1970-ல் பீச்சில் சுண்டல் வாங்கியபோது கிடைத்த காகிதத்தில் “புடலங்காய் கூட்டு” என்னும் தலைப்பில் வந்த கதையின் ஆரம்பம் மட்டும் கிடைத்தது. கதைக்கு ஓவியர் வர்ணம் அவர்கள் படம் போட்டிருந்தார். அக்கதையின் முடிவு தெரியாது. பதிவில் போட்டு இதே மாதிரி உங்களிடம் உதவி கோரலாம் என நினைத்தபோது, சுந்தரேசன் அவர்களே இந்த சந்தர்ப்பத்தில் கூறினார், தான் “புடலங்காய் கூட்டு” என்னும் தலைப்பில் கதை எழுதியதாகவும், அதிலும் இந்த ஊசல் விஷயம் வருகிறது என்று. வர்ணம் படம் போட்டதையும் அவர் ஊர்ஜிதம் செய்தார்.

ஆக, புடலங்காய் கூட்டின் புதிரும் தானாகவே தீர்ந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது