8/07/2010

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 07.08.2010

ABC World News
சமீபத்தில் 1992-93 வாக்கில் தில்லி கஸ்தூரிபா காந்தி மார்க்கில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் நூலகக் கட்டடத்திலிருந்து வெள்ளிக் கிழமைகளில் பிற்பகல் சுமார் 03.25 மணி வாக்கில் ஒரு உருவம் வேகமாக வெளியேறி, சப்வே வழியாக தெருவைக் கடந்து, அமெரிக்க நூலகத்துக்கு முகத்தில் தீவிரத்துடன் நூல்பிடிகணக்காய் ஓடி, அது அசப்பில் டோண்டு ராகவன் போலவும் இருந்தால் 99% சதவிகிதத்துக்கு அது டோண்டு ராகவனாகத்தான் இருக்கும்.

ஏன் ஓட வேண்டும்? ஏனெனில் சரியாக 03.30-க்கு அமெரிக்க நூலக நிலத்தடி அரங்கில் ஏபிசி வேர்ள்ட் நியூஸ் ஆரம்பிக்குமே, அதுவும் பீட்டர் ஜென்னிங்க்ஸின் கம்பீரமான குரலுடன். அதை மிஸ் செய்யக்கூடாது என்பதற்காகவே நான் எப்படியாவது கெஞ்சிக் கூத்தாடி, ஐடிபிஎல் மேலதிகாரியிடம் அனுமதி வாங்கி பிற்பகல் டெல்லி வேலை ஏதாவது வாங்கி விடுவேன். பிறகென்ன நேராக கனாட் பிளேசில் உள்ள மதறாஸ் ஹோட்டலுக்கு வந்து சாப்பாடு ஒரு பிடிபிடித்துவிட்டு (அளவில்லாமல் அப்பளங்கள், அதன் முதலாளி, “வாங்கோண்ணா சவுக்கியமா” எனக் கேட்கும் அளவுக்குப் பரிச்சயமானார்), பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு வரவேண்டியது. புத்தகங்களை வெறுமனே பார்த்து தேவையான புத்தகங்களை எடுக்கவே நேரம் சரியாக இருக்கும். பிறகு முதலில் சொன்னதுபோல ஓட்டம்தான். அமெரிக்க நேரப்படி வியாழன் இரவு வருவது இங்கு வெள்ளியன்று பிற்பகல் 12.30 மணியளவில் ஒளிபரப்பபட்டு பிற்பகல் 03.30 அதன் ரிகார்டிங் திரையிடப்படும்.

என்னை மாதிரி இதன் மகிமை தெரிந்த சிலர் அங்கு தவறாமல் வருவோம். அந்த நிகழ்ச்சியின் ஓப்பனிங் ட்யூனே பிரமாதமாக இருக்கும். முந்தைய வெள்ளிக்கிழமை, அடுத்த திங்கள் முதல் வியாழன் முடிய வந்த வேர்ல்ட் திஸ் டே-க்களின் தொகுப்பே நான் பார்க்கும் நிகழ்ச்சி. அதில்தான் பில் க்ளிண்டன், ஃபோர்ட் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட கதையைப் பார்த்தேன். நடுவில் ரோஸ் பெறோ என்பவர் வந்து இரு வேட்பாளர்களுக்கும் பேதி கொடுத்ததை ரசித்தேன். எல்லாவற்றையும் விட பால்கன்ஸில் நடந்த உள்நாட்டுப் போர்களின் அலங்கோலத்தையும் பார்த்து திடுக்கிட்டேன்.

அவ்வரிசையில்தான் செசென்யாவின் ரஷ்யாவுக்கெதிரான போராட்டம். அதில் ஒரு 12 வயது செசென்ய சிறுவனைப் போருக்கு அனுப்பும் நிகழ்ச்சி விஸ்தாரமாகக் காட்டப்பட்டது. போர் உடையில் அந்தக் குட்டிப் பையன் பெருமிதத்துடன் நின்றான். கடைசியின் பீட்டர் ஜென்னிங்க்ஸின் இரக்கம் தோய்ந்த குரல், “இந்த வீடியோ எடுக்கப்பட்ட அரைமணிக்குள் அந்தக் குட்டிப் பையன் குண்டுக்கு பலியானான்” எனக்கூறியதும், அது மகாபாரதப் போரில் விகர்ணன் பீமனை வீரத்துடன் எதிர்த்துப் போரிட்டு மரணமடைய, பீமனே சற்றே யுத்தத்தை நிறுத்தி, “அருமைத் தம்பி விகர்ணா, உன்னையும் கொல்ல நேர்ந்ததே. மிகவுமே கொடியது இந்த யுத்தம்” என துக்கிப்பதையே நினைவுபடுத்தியது.

இதைப் பார்த்ததும் எனக்கு வஞ்சிக்கோட்டை வாலிபனில் வரும் இக்காட்சி நினைவுக்கு வந்தது. புற நானூற்றிலோ அல்லது வேறு எங்காவது வரும் ஒருபாட்டில் இக்காட்சி வருகிறது. அது எங்கே, முழுப்பாடல்/கதை என்னவென்று யாராவது சொல்லுங்கப்பூ.

சுதந்திரத்தின் விலை
முதல் உலகமகாயுத்தமும் சரி, இரண்டாம் உலக மகா யுத்தமும் சரி, இந்தியர்களால் அசட்டை செய்யப்பட்டன. அவை “வெள்ளைக்காரனின் யுத்தங்களாக” சித்தரிக்கப்பட்டன. ஆகவே சமீபத்தில் 1962-ல் சீன யுத்ததின்போது பலபெரிசுகள் சுதந்திரம் வராமலிருந்தால் இந்த யுத்தமும் அவனுடையதாகியிருக்குமே எனப் பெருமூச்சு விட்டன.

சுதந்திரத்துக்கு விலை உண்டு என்பது என் விஷயத்திலும் நிரூபணமானது. முழுநேர வேலையிலிருந்து சுதந்திரம் பெற்றதும் மாதச் சம்பளம் இல்லை என்பது அதற்கான விலை. வார முழுதும்கூட உழைக்க வேண்டியிருக்கும் என்பது அதன் பை பிராடக்ட். ஓக்கே, ஓக்கே அதனால் என்ன? சந்தோஷமாகத்தானே இருக்கிறேன்.

தில்லியில் தமிழ் புத்தகங்கள் லேட்டாகத்தான் வரும், அப்படியே வந்தாலும் நாம் போவதற்குள் தீர்ந்து விடும் அபாயமும் உண்டு. எங்கள் ஏரியா கடைக்காரர், தன்னிடம் புக் செய்து கொண்டால் எனக்காக புத்தகங்களை ரிசர்வ் செய்து வைப்பதாகக் கூறுவார். ஆனால் நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். தில்லியில் எங்கு சென்றால் அந்தந்த இடங்களில் காணும் லேட்டஸ்ட் புத்தகங்களை வாங்கும் சுதந்திரம் எனக்குத் தேவை. சென்னைக்கு செல்லும் சமயம் இதற்கென மெனக்கெட்டு புத்தகக் கடைக்காரரிடம் சொல்லும் வேலை மிச்சம். ஆனால் இந்த சுதந்திரத்தின் விலை சில சமயங்களில் புத்தகம் கிடைக்காமல் போதல்.

மதுரை விஜயம்
வீட்டம்மாவும் பெண்ணும் மதுரைக்கு என் மச்சினி வீட்டுக்கு சென்று ஒரு வாரம் ஆயிற்று. அவர்களை அழைத்துவர இன்று எனது காரில் சென்றேன். நாளை சென்னை வந்துவிடுவேன். நல்ல காரோட்டி. ஏழே மணி நேரத்தில் மதுரைக்கு வந்து விட்டோம், ஆனால் மதுரை டிராஃபிக்கை சமாளித்து, வீட்டை அடைய ஒரு மணி நேரம் ஆயிற்று.

தில்லிகு விமானத்தில் சென்ற கணவனை வழியனுப்ப மீனம்பாக்கம் ஏர்போர்ட் செல்கிறாள் மனைவி. தில்லி விமான நிலையத்திலிருந்து கணவன் தன் வீட்டுக்கு ஃபோன் செய்கிறான், அம்மா இன்னும் ஏர்போர்ட்டிலிருந்து வீட்டுக்கு வரவில்லை என மகன் கூறுகிறான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

9 comments:

அருள் said...

// //கனாட் பிளேசில் உள்ள மதறாஸ் ஹோட்டலுக்கு வந்து சாப்பாடு ஒரு பிடிபிடித்துவிட்டு// //

கன்னாட் பிளேஸ் மதறாஸ் ஹோட்டலில் இட்லிக்கு சாம்பாரை தொட்டுக்கொள்ளாமல், தனியாக கோப்பையில் வைத்து எல்லோரும் குடிப்பது ஏன் ? என்று யோசித்தது உண்டா?

அதே கன்னாட் பிளேசில் ஓட்டல் சரவணபவன் வந்த பிறகு "மதறாஸ் ஹோட்டல்" பழைய பொலிவிழந்து போனதற்காக வருத்தப்பட்டது உண்டா?

dondu(#11168674346665545885) said...

@அருள்
2001-ல் தில்லியை விட்டு ஒரேயடியாக வந்ததில் நான் பார்க்காதது சரவணா பவன், மற்றும் தில்லி மெட்ரோ ரயில்,

மற்றபப்டி சாம்பாரை அப்படியே குடிப்பது வட இந்தியர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

என்ன சார் இது, நீங்களும் நிறைய எழுத்து / தட்டச்சுப் பிழைகள் செய்ய ஆரம்பித்து விட்டீர்கள்?

Anonymous said...

மற்றபப்டி?

மற்ற படி என்று படிக்கவும்

Anonymous said...

\\கன்னாட் பிளேஸ் மதறாஸ் ஹோட்டலில் இட்லிக்கு சாம்பாரை தொட்டுக்கொள்ளாமல், தனியாக கோப்பையில் வைத்து எல்லோரும் குடிப்பது ஏன் ? என்று யோசித்தது உண்டா?//

Joe Amalarayen Fernando?

ராம்ஜி_யாஹூ said...

டில்லி விமான பயணம் போல ஒரு செய்தி.

என் சித்தி மதுரையில் இருந்து தாம்பரம் வர ரயிலில் கட்டணம் நூற்றி இருபது ரூபாய்.
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி வர கால் டாக்சி / ஆட்டோ கட்டணம் நூற்றி முப்பது ரூபாய்.

கிருஷ்ண மூர்த்தி S said...

/அது எங்கே, முழுப்பாடல்/கதை என்னவென்று யாராவது சொல்லுங்கப்பூ./
சொல்லிட்டாப் போச்சு!

புறநானூற்றில் இருநூற்று எழுபத்தெட்டாம் பாட்டு, பாடினது காக்கை பாடினியார் நச்செள்ளையார்!

“நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள் முளரி மருங்கின், முதியோள் சிறுவன் படைஅழிந்து மாறினன்” என்று பலர் கூற, “மண்டுஅமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்டஎன் முலைஅறுத் திடுவென், யான்’ எனச் சினைஇக், கொண்ட வாளடு படுபிணம் பெயராச், செங்களம் துழவுவோள், சிதைந்துவே றாகிய படுமகன் கிடக்கை காணூஉ, ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே!

இது பாட்டு, அதில் வரும் கதை!

dondu(#11168674346665545885) said...

@எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மிக்க நன்றி.

இப்போது கூறுங்கள் பத்மினியின் நடிப்பு அக்காட்சியில் எப்படி?

அன்புடன்,
டோண்டு ராகவன்

கிருஷ்ண மூர்த்தி S said...

ஆரம்பத்தில் நல்ல நல்ல நடிகை, நாட்டியப் பேரொளிதான்! மறுக்க முடியாது! சகவாச (சிவாஜி)தோஷம், பத்மினிப் பாட்டியிடமும் ஓவர் அலட்டலாக, மிகை நடிப்பாகப் பார்த்துச் சலித்து விட்டது!

அம்புட்டுத்தேன்!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது