11/18/2004

தேசிகன் என்னும் மாமனிதர்

1969-ல் பொறியியல் கடைசி வருடத் தேர்வில் இரண்டுப் பாடங்களில் பணால். அடுத்தப் பரீட்சை நவம்பரில்தான்.

சோர்வுடன் இருந்த என்னிடம் என் தந்தை கூறினார்: "ஏண்டா, மேக்ஸ் ம்யுல்லர் பவனில் ஜெர்மன் வகுப்பு ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து ஆரம்பிக்கப் போகிறார்களாமே, அதில் ஏன் சேரக்கூடாது?" என்றுக் கேட்டார்.

அவ்வாறு சேர்ந்தது என் வாழ்க்கையயே மாற்றி விடும் என்று அப்போது எனக்குத் தெரியாது. அது பற்றிப் பிறகு.

அறுபது, எழுபது மற்றும் எண்பதுகளில் மேக்ஸ் ம்யுல்லர் பவனில் படித்தவர்களுக்கு தேசிகனைத் தெரியாமல் இருந்திருக்க முடியாது. அவர் அதன் நிர்வாக அதிகாரி. அவர் பேசும் ஜெர்மன் மொழி சங்கீதமயமானது. கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவர் வேறு மேக்ஸ் ம்யுல்லர் பவன் வேறல்ல என்றப் பாவனையில் அதனுடன் ஒன்றிப் போனவர்.

ஒரு நாள் மாலை (வருடம் 1969) நூலகத்தில் புத்தகங்கள் பார்த்துக் கொண்டிருந்தேன். உலகச் சிறுகதைத் திரட்டு ஒன்று ஜெர்மன் மொழியில் கண்டேன். எல்லா நாடுகளிலிருந்தும், வெவ்வேறு மொழிகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டிருந்தச் சிறுகதைகளின் ஜெர்மன் மொழிப் பெயர்ப்பை அதில் கொடுத்திருந்தார்கள். இந்தியாவிலிருந்து என்ன கதை தெரிவு செய்யப்பட்டது என்றுப் பார்த்தால், அது அகிலன் அவர்களின் "மூன்று வேளை" என்றக் கதையாகும். அதன் ஜெர்மன் மொழிபெயர்ப்பு வெண்ணையென வழுக்கிக் கொண்டு ஓடியது. அகிலனின் சொல்லாக்கம் ஜெர்மனில் அப்படியே இருந்தது.

மொழி பெயர்ப்பாளர் யார் என்றுப் பார்த்தால் ஆர்.தேசிகன் என்று போட்டிருந்தது. அப்படியே அந்த புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு தேசிகனிடம் சென்றேன்.

அவரிடம் "உங்கள் இனிஷியல் என்ன?" என்றுக் கேட்டேன். அவர் "ஆர்" என்றார். "இந்த மொழிப் பெயர்ப்பு உங்களுடையதா?" என்று அகிலனின் கதையைக் காட்டிக் கேட்டேன். சங்கோசத்தால் முகம் சிவக்க "ஆம்" என்றுக் கூறினார்.

அது வரைக்கும் என் வகுப்புத் தோழர்கள் யாருக்கும் தேசிகன் இவ்வளவுத் திறமை வாய்ந்தவர் என்பது தெரியாது. அவ்வளவு நிறைகுடம் அவர். 1993-ல் அவர் காலமானார். மேக்ஸ் ம்யுல்லர் பவன் களையிழந்தது.

தேசிகன் என்னுடைய மற்றப் பதிப்புகளிலும் அவ்வப்போது வருவார். அவர் உதவி இல்லாவிடில் நான் ஜெர்மன் மொழியை அவ்வளவு குறுகியக் காலக் கட்டத்தில் படித்து முடித்திருக்க முடியாது.

1 comment:

காசி (Kasi) said...

நான் கோவையில் பாரதீய வித்யா பவனில் மாலை நேரத்தில் ஜெர்மன் முதல் நிலை மட்டும் படித்தேன். பாடத்திட்டம், தேர்வு, சான்றிதழ் எல்லாம் சென்னை மாக்ஸ் ம்யுல்லர் பவன் பொறுப்பில். அலுவலகத்தில் பல ஜெர்மன் தொழில்நுட்ப விஷயங்களை புரிந்துகொள்ள ஏதுவாக இருக்குமென்பதாலும், இயல்பாகவே மொழியியலில் எனக்கு இருக்கும் ஆர்வம் காரணமாகவும் கற்றேன். அதன்பின் மேலும் தொடரமுடியாமல் போனது. மொழிபெயர்ப்பையே ஒரு முழுநேரப்பணியாக ஏற்றுள்ள உங்களைப் பார்த்தால் மேலும் தொடர ஆசையாயுள்ளது.

ஆம், நல்ல ஆசிரியர்கள் கிட்டிவிட்டால் பாதி படித்தமாதிரி. மீதி மட்டுமே நாம் செய்யவேண்டுவது.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது