1/23/2005

On the sunny side of a one-way street

இது 1968-ல் நான் படித்தப் புத்தகம். எழுதியது வில்லியம் இ வில்சன். கவித்துவம் வாய்ந்த இத்தலைப்பைப் போலவே அப்புத்தகத்தின் உள்ளடக்கமும். தன் சிறு வயது அனுபவங்களை அதில் ஆசிரியர் மிக அழ்காகக் குறிப்பிருப்பார். நேற்று திருவல்லிக்கேணி பக்கம் சென்ற போது இப்புத்தகம் என் நினைவுக்கு வந்தது.

நேசமுடன் வெங்கடேஷைப் பார்க்க திருவல்லிக்கேணி சுங்குவார் தெருவுக்குச் சென்றிருந்தேன். பழைய நினைவுகள் என்னுள் கிளர்த்தெழுந்தன. "ஞாபகம் வருதே..." என்றுப் பாடாததுதான் பாக்கி.

கையில் வெங்கடேஷ் எழுதிய "நேசமுடன்" புத்தகத்தை எடுத்துச் சென்றிருந்தேன். அவர் இருக்கும் அபார்ட்மென்ட் ப்ளாக்கில் பெயரைச் சொல்லிக் கேட்டதும் கீழே இருப்பவர்களுக்கு முதலில் புரியவில்லை. புத்தகத்தில் இருந்த அவர் புகைப்படத்தைக் காண்பித்ததும் ஒருவர் அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தையை அழைத்து "இவர் உன் அப்பாவைத்தான் பார்க்க வந்திருக்கிறார். அழைத்துப்போ. ஆமாம், உன் அப்பா புத்தகங்கள் எல்லாம் எழுதுவாரா என்ன?" என்றார்.

அச்சிறுமி என்னை தன் தந்தையிடம் அழைத்துச் சென்றாள். பிறகு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வெங்கடேஷுடன் பேச்சுத்தான். பல விஷயங்கள் அவரிடமிருந்துக் கற்றுக் கொண்டேன். தன் மனைவி மற்றும் மாமனாரை எனக்கு அறிமுகம் செய்வித்தார். ஆதவன் சாரின் புத்தகங்களை தான் பதிப்பிக்க இருப்பதாகக் கூறினார். மனதுக்கு மிக்க நிறைவாக இருந்தது. பேச்சு பல விஷ்யங்களை கவர் செய்தது.

பிறகு அவரிடம் விடை பெற்று சுங்குவார் தெரு வழியே நடந்துச் சென்றேன். என் நண்பன் பி.எஸ். ராமன் வீட்டுக்குச் சென்று அவன் சகோதரியிடமிருந்து அவன் டெலிஃபோன் எண்ணைப் பெற்றேன்.

இதற்கு முந்தைய சனிக்கிழமை திருவல்லிக்கேணியில் இருக்கும் பாலா (என்றென்றும் அன்புடன்) வீட்டிற்கு சென்றேன். இனி வரும் சனிக்கிழமைகளில் திருவல்லிக்கெணியின் மற்ற ஏரியாக்களுக்கு செல்ல வேண்டும். முக்கியமாக பைக்ராஃப்ட் சாலையில் உள்ள நடைபாதை புத்தகக்கடைகளை அலச வேண்டும். அலைகளில் கால் நனைக்க வேண்டும்.

நேற்று குளக்கரை பக்கம் போன போது 1953-ல் குளத்தில் மூழ்கி மரணமடைந்த என் மூன்றாம் வகுப்புத் தோழன் கே. ராகவன் என் நினைவுக்கு வந்தான். "முதன் முதல் அழுத சினேகிதன் மரணம்" என்ற வரி என் மனதில் ஓடியது.

ஆட்டோக்ராஃப் படம் ஏன் வெற்றி பெற்றது என்பது இன்னொரு முறை நன்றாக விளங்கியது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

No comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது