1/09/2005

யாருக்கும் வெட்கமில்லை - SITA is ultravires of the Constitution of India

எழுபதுகளின் துவக்கத்தில் சோ அவர்களால் எழுதப்பட்ட "யாருக்கும் வெட்கமில்லை" என்ற நாடகத்தைப் பார்த்தேன்.

கதாநாயகி பிரமீளா ஒரு விலை மாது. அவ்வாறு அவள் ஆவதற்கு முன்னால் அவளை முதலில் காதலித்து ஏமாற்றியிருப்பான் நாடகத்தின் வில்லன் - கதாநாயகன். பிறகு சந்தர்ப்பச் சூழ்நிலையால் அவள் விலை மாது ஆகிறாள்.

இதில் சோ அவளுக்கு ஆதரவாகப் பேசும் ராவுத்தர் பாத்திரத்தை ஏற்றிருந்தார்.

அதில் ஒரு காட்சி.

முதலில் காட்சியின் பின்புலத்தைப் பார்ப்போம். கதாநாயகனின் தந்தை அப்பாதுரையும் ராவுத்தரும் வியாபாரத்தில் பங்காளிகள். கதாநாயகி ஒரு விலைமாது என்பதை கதாநாயகனின் தாயிடம் கூறுவார் அந்த வீட்டுக்கு வந்துஇருக்கும் ரங்கனாதன் என்பவர். தான் விலை மாதிடம் போகும் வழக்கம் உடையவன் என்பதையும் அவ்வாறு செல்லும் ஒரு தருணத்தில் கதாநாயகியைக் கண்டதாகவும் அவர் கூறுவார்.

அந்தத் தாய் கதாநாயகியைத் திட்டி விட்டு ரங்கநாதனிடம் இன்னும் ஒரு ஸ்வீட் எடுத்துக் கொள்ளச் சொல்லி உபசரிப்பார். உடனே சோ கூறுவார்:

"அம்மா, நீங்கள் பிரமீளாவைக் குற்றம் கூறியது சரியே. அந்தப் பெண்ணைச் செருப்பால் அடியுங்கள். ஆனால் அதே செருப்பையெடுத்து இந்த ரங்கனாதனையும் ரெண்டு அடி அடிப்பதற்குப் பதிலாக அவனுக்கு இன்னும் ஒரு ஸ்வீட் எடுத்துக் கொள்ள உபசரிக்கிறீர்களே. இது என்ன நியாயம்?"

நான் ரசித்த மிகச் சிறந்த காட்சி இது. அதைத்தான் இப்போது நான் மறுபடியும் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

விபசார ஒழிப்புச் சட்டம் விபசாரிகளை மட்டும் தண்டிக்கிறது. கொழுப்பெடுத்துப் போய் அவர்களிடம் செல்லும் வாடிக்கையாளர்களை மட்டும் விட்டு விடுகிறது.

இதே கேள்வி "ஜனவாணி" என்ற நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பொது மக்கள் தரப்பிலிருந்து அப்போதையச் சட்ட மந்திரி பரத்வாஜ் அவர்களிடம் வைக்கப்பட்டது.

ஆனால் அவர் கேள்வியைத் தவறாகப் புரிந்துக் கொண்டு (?) பதிலளித்தார்.

கேள்வி: " விபசாரச் சட்டம் ஆண்களை ஏன் தண்டிபதில்லை?"

பதில்: " ஏன், நாங்கள் பிம்புகளையும் (pimps) தண்டிக்கிறோமே!"

வாடிக்கையாளர்களைப் பற்றி ஒன்றுமே கூறவில்லை.

நான் இப்போது வைக்கும் இன்னொரு கேள்வி. இச்சட்டம் பால் அடிப்படையில் பாகுபாடு (sexual discrimaination) செய்து பெண்ணை மட்டும் தண்டிக்கிறது. இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. ஆகவே இச்சட்டமே செல்லாது. இவ்வாறு யாராவது ரிட் பேட்டிஷன் போட்டால் வெற்றி பெருமா?

இவ்வாறு செய்வது பலரது "மாமூல்" வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதை அறிவேன். ஆனால் எப்போதுதான் ரங்கனாதனையும் செருப்பால் அடிப்பது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

9 comments:

இராதாகிருஷ்ணன் said...

இந்தச் சட்டத்தை விட்டுவிட்டு, மேலை நாடுகள் சிலவற்றைப்போல இதை ஒரு தொழிலாக அங்கீகரித்தால் என்ன விளைவுகள் உண்டாகும்?

dondu(#4800161) said...

அதாவது தண்டனை இருபாலருக்கும் என்றாகிவிடும் என்றால் இந்தத் தொழிலையே சட்டப் பூர்வமாகுவது என்ற முடிவுக்கு ஆண்கள் வந்து விடுவார்கள் என்றுதான் எனக்குப் படுகிறது.

இதே நாடகத்தில் இன்னொருக் காட்சி நினைவுக்கு வருகிறது. கதாநாயகி நீதிமன்றத்தில் வைத்துக் கூறுவார்:"என்னுடைய வாடிக்கையாளர் ஒருவரை இங்கு இருப்பதைக் காண்கிறேன். நாளைக்கும் அவர் வந்தால் அவர் யார் என்பதைப் பகிரங்கமாகக் கூறிவிடுவேன்"

அடுத்த நாள் பார்த்தால் வேறு நீதிபதி வந்திருப்பார்.

அன்புடன்,
டோண்டு

ரவியா said...

இந் நாடகம் திரைப் படமாக எடுத்தபோது பிரமீளா வேடத்தில் நடித்தவர் யாரென்று நினைவிருக்கிறதா?

dondu(#4800161) said...

ஏன் இல்லை?
சிவகுமார்: வக்கீல்,
ஜயலலிதா:பிரமீளா.

அன்புடன்,
டோண்டு

dondu(#4800161) said...

இப்பதிவைப் பதித்தப் போது வந்தப் பின்னூட்டங்கள் அதிகம் இல்லை. இருப்பினும் நாராயணன் அவர்கள் பதிவு (http://urpudathathu.blogspot.com/2005/04/1_111253010275782064.html) நான் கூறியதுடன் ஒத்துப் போவதில் மகிழ்ச்சி அடைகிறேன். எப்படியாவது நியாயம் பிறந்தால் சரி. அதற்கு முன்னோடியாக நான் கூறிய யோசனையையும் பார்க்கலாம். அதாவது பரிமளாவை மட்டும் செருப்பால் அடித்தால் போதாது. அதே செருப்பையெடுத்து ரங்கனாதனையும் அடிக்க வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

Mookku Sundar said...

செருப்பால் அடித்தால் தீரும் பிரச்சினை இல்லை இது. விபசாரத்தை முழுதாக ஒழித்துவிட்டால் தொழில்முறை விபசாரிகளும், பிம்புகளும், தொழில்முறை வாடிக்கையாளர்களும்தான் குறைவார்கள். விபசாரம் வேறொரு ரூபத்தில் தொடரும்.

பாலியல் சார்ந்த குற்றங்கள் அதிகமாகும். பல குடும்பங்கள் சந்தி சிரிக்கும்.

dondu(#4800161) said...

பெண்களை மட்டும் குறி வைக்கும் விபசாரச் சட்டத்தைப் பற்றித்தான் பேசுகிறேன். இச்சட்டம் அரசியல் சட்டப்படித் தவறு என்றுதான் நான் நினைக்கிறேன். வாடிக்கையாளர்களையும் தண்டிக்க வேண்டும். அவ்வாறு செய்யாது ஒரு தரப்பினரை மட்டும் தண்டிப்பது கூடாது. இச்சட்டத்தை நீதி மன்றங்கள் ரத்து செய்தால் என்ன நடக்கும்? விபசாரம் தானே சட்டப் பூர்வமானதாக ஆகி விடும். ஏனெனில் கூட தண்டனை அடைய ஆண்கள் தயாராக இல்லை. அதைத்தான் நான் எழுதுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

பாலு மணிமாறன் said...

சிங்கப்பூர் போன்ற நாடுகள் பாலியல் தொழிலாளர்களை அங்கீகரிப்பதோடு, அவர்களுக்கு மாதந்திர medical checkup போன்றவற்றை கட்டாயமாக்கி இருக்கிறார்கள். விரும்பியோ விரும்பாமலோ இதில் வந்து விழுந்து விடுபவர்களுக்குத் தேவை - அங்கீகாரம் + பாதுகாப்பு !

PRABHU RAJADURAI said...

I have written on this subject in
http://marchoflaw.blogspot.com/2006/05/blog-post_114656610593585166.html

Regards
Prabhu Rajadurai

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது