3/01/2006

பென்ஷன் கிடைத்தது எப்படி

நான் ஐ.டி.பி.எல். பற்றிய இப்பதிவில் CPWD பென்ஷன் கிடைத்ததை பற்றி கோடி காட்டியிருந்தேன். அது கிடைத்ததே ஒரு குருட்டாம்போக்கு அதிர்ஷ்டம்தான்.

ஆகஸ்ட் 1980-ல் ஐ.டி.பி.எல். பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளருக்காக ஒரு விளம்பரம் கொடுத்திருந்தது. அதில் வெறும் தபால் பெட்டி எண் மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. எதற்கும் இருக்கட்டும் என்று வெறுமனே ஒரு விண்ணப்பம் அனுப்பி வைத்தேன். சாதாரணமாக முறையான வழி மூலமாக (through proper channel) அனுப்பவேண்டிய விண்ணப்பம் நேரடியாக அனுப்பப்பட்டது. ஆனால் அரசு துறையில் வேலை செய்பவர்கள் வேறு வேலைகளுக்கு விண்ணப்பம் மேலே கூறியபடித்தான் அனுப்பவேண்டும். அதுவும் வருடத்திற்கு இரு விண்ணப்பங்கள் மட்டுமே அனுப்ப இயலும். எனக்கு என்னவோ இந்த வேலை கிடைக்கும் என்னும் நம்பிக்கை இல்லை. ஆகவே இதற்காக விண்ணப்பம் அனுப்புவதற்கு இருந்த இரு வாய்ப்புகளில் ஒன்றை இழக்க நான் விரும்பவில்லை. ஆகவே நடப்பது நடக்கட்டும் என நேரடியாகவே விண்ணப்பம் அனுப்பினேன்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் நேர்க்காணலுக்கான அழைப்பு ஐ.டி.பி.எல்லிடமிருந்து வந்தது. அப்போதுதான் இது ஐ.டி.பி.எல். கொடுத்த விளம்பரம் என்பது தெரிந்தது. அவர்களிடமிருந்து வந்த கடிதத்தில் நான் நேரடியாக விண்ணப்பித்திருந்ததால் CPWD-யிடமிருந்து ஆட்சேபம் இல்லல என்றக் கடிதம் பெற்றுவர வேண்டும் என்றும், அதன்றி நேர்க்காணல் நடக்காது என்றும் குறிப்பிட்டிருந்தனர். இங்குதான் நான் ஒரு வேலை செய்தேன். எங்கள் S.E.-க்கு No objection letter கேட்டு அனுப்பிய விண்ணப்பத்தில் நான் ஏன் நேரடியாக வேலைக்கான விண்ணப்பம் அனுப்பலாயிற்று என்பதன் உண்மைக் காரணத்தை (மேலே கூறியது) அப்படியே கூறினேன். மேலும் No objection letter தரும்போது நான் through proper channel மூலம் வின்ணப்பம் அனுப்பியதாகக் கருதப்பட்டு லியன் வைத்துக்கொள்ளும் உரிமையும் கேட்டிருந்தேன்.

அப்போது எஸ்.இ. திரு. கண்ணன் அவர்கள். அவர் என்னைக் கூட்டியனுப்பி முதலில் நேரடியாக விண்ணப்பம் அனுப்பியதற்கு நன்றாகக் காய்ச்சினார். நான் ஒன்றே ஒன்றுதான் கூறினேன். "சார், நான் செய்தது தவறே, இருப்பினும் அதற்கானக் காரணத்தை வெளிப்படையாகவே கூறிவிட்டேன். என் கோரிக்கையை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் கையில். எனக்கு மே 13 தில்லியில் நேர்க்காணல். மே 10-க்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் டிக்கட் புக் செய்திருக்கிறேன். நீங்கள் அனுமதி அளிக்காத பட்சத்தில் அதை உடனடியாகக் கூறிவிட்டால், என்னுடைய டிக்கட் ரத்து செய்யும் கட்டணம் குறையும்" என்று கூற அவர் சிரித்துவிட்டார். உடனே சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு கூறினார்: "சரி போன வருட ரிக்கார்டைப் பார்ப்பேன். நீங்கள் விண்ணப்பம் செய்ய இரண்டு சான்ஸ்களையும் பயன்படுத்தியிருந்தால் பொய் கூறியதற்காக உங்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும். இல்லையென்றால் நீங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்" எனக்கூறி விட்டார். அவ்வாறே செய்யவும் செய்தார். நான் through proper channel விண்ணப்பம் அனுப்பியதாக post facto ஒப்புதல் கொடுத்தார். உண்மை கூறியதற்கு கைமேல் நல்ல பலன்!

இதெல்லாவற்றையும் நான் கதையாக எழுதியிருந்தால் அதீத கற்பனை என்று பல விஷயம் தெரிந்தவர்கள் கூறியிருப்பார்கள். அப்படித்தான் ஆஃபீஸ் சூபரிண்டெண்டண்ட் திரு சிதம்பரம் அவர்களுக்கும் மனது ஆறவேயில்லை. அதெப்படி through proper channel முறையின்றி அனுப்பிய விண்ணப்பத்திற்கு post facto ஒப்புதல் கொடுக்கப் போயிற்று என்று அங்கலாய்த்தார். அப்படியே கண்ணன் அவர்கள் அறைக்கு சென்று அவ்வாறே கூறினார். அவர் சிதம்பரத்திடம் ஒரே கேள்விதான் கேட்டார்: "எஸ்.இ. நீங்களா அல்லது நானா" என்று, சிதம்பரம் அவர்கள் "நீங்கள்தான் சார்" என்று கூற அவரிடம் "உங்கள் சீட்டுக்கு சென்று உங்கள் வேலையைப் பாருங்கள்" என்று கடுமையாகக் கூறிவிட்டார்.

இதனால் என்ன ஆயிற்று என்றால், நான் ஐ.டி.பி.எல்லிலேயே இருக்கிறேன் என எழுதிக் கொடுத்ததும் நான் CPWD-யில் வேலை செய்த பத்து வருடத்துக்கு கணக்கிட்டு pro rata பென்ஷன் கொடுத்தார்கள். அங்கு என் கணக்கில் இருந்த 78 நாள் earned leave ஐ.டி.பி.எல்லுக்கு மாற்றப்பட்டது. CPWD பென்ஷன் இப்போதும் கிடைத்து வருகிறது. நான் CPWD-யை விட்டப்போது என் சம்பளம் 1100 ரூபாய்கள், இப்போது பென்ஷன் 2000 ரூபாய்களுக்கும் மேல். எல்லாம் குருட்டு அதிர்ஷ்டம்தேன்.

ஐ.டி.பி.எல்லில் நான் பெற்ற வேறு அனுபங்கள் பற்றி வரும் பதிவுகளில் கூறுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

2 comments:

பழூர் கார்த்தி said...

//உண்மை கூறியதற்கு கைமேல் நல்ல பலன்!//

நன்றாகக் கூறியுள்ளீர்கள்.. சில சமயங்களில் நிலைமை கைமீறி சென்று விட்டால், உண்மையை கூறிவிடுவது நல்லது..

*****

முன்பே நான் பாராட்டியபடி, உங்களின் ஒவ்வொரு நினைவலைப் பதிவும் பாதுகாத்து பின்பற்ற வேண்டிய அனுபவ பொக்கிஷங்கள்.. தங்களின் அனுபவப் பகிர்தலுக்கு மிக்க நன்றி..

dondu(#11168674346665545885) said...

நன்றி சோம்பேறி பையன் அவர்களே. இதில் என்ன வேடிக்கை என்றால் எஸ்.இ.க்கு நான் கொடுத்த விண்ணப்பத்தின் நகலைப் பார்த்த அவரது பொறியியல் காரியதரிசி (Engineer Assistant) நான் இவ்வாறு உண்மையைக் கூறி தவறு செய்வதாகக் கூறினார். பேசாமல் ஆட்சேபம் இல்லை என்றக் கடிதம் மட்டும் கொடுக்குமாறு விண்ணப்பித்திருக்க வேண்டும் என்று கூறினார். நான் அதை ஒத்துக் கொள்ளவில்லை. அதுவும் நல்லதுக்குத்தான்.

என் வாழ்க்கையில் இம்மாதிரி உள்ளுணர்வில் பல காரியம் செய்துள்ளேன். எல்லாமே நல்லபடியாக முடிந்துள்ளன. அதில் முக்கியமானது வீட்டம்மா சொல்வதைக் கேட்பது. இம்மாதிரி கடிதம் எழுதச் சொன்னதே அவர்தான். அவரைப் பற்றித் தனிப்பதிவே போட வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது