சமீபத்தில் 1978-ல் சிவாஜி இரட்டை வேடங்களில் நடித்த "என்னைப் போல் ஒருவன்" படம் வெளியானது. மூலக்கதை "Scapegoat" by Daphne du Maurier. அதே கருவில் அறுபதுகளிலேயே ஏ.வி.எம். ராஜன் இரட்டை வேடங்களில் நடித்த "தரிசனம்" படம் வந்து விட்டது. இப்பதிவு அப்படத்தைப் பற்றியதல்ல.
சிவாஜியின் இப்படத்தில் ஒரு துள்ளும் நடையில் அருமையான பாட்டு ஒன்று. அது இவ்வாறு ஆரம்பிக்கிறது:
"தங்கங்களே, நாளைத் தலைவர்களே,
நம் தாயும் மொழியும் கண்கள்
சிங்கங்களே வாழும் தெய்வங்களே
நம் தேசம் காப்பவர் நீங்கள்"
அப்பாடலில் என்னைக் கவர்ந்த அடுத்த வரிகள் இதோ:
"நம் தாத்தா காந்தியும் மாமா நேருவும் தேடிய செல்வங்கள்
பள்ளிச்சாலை தந்தவன் ஏழைத் தலைவனை தினமும் எண்ணுங்கள்"
(இப்பாடல் வரிகள் சரியாக அமைய வேண்டும் என்பதற்காகவே பல்லவி புகழ் என்றென்றும் அன்புடன் பாலாவுக்கு போன் செய்து கேட்டதற்கு மிக அன்புடன் மேலே குறிப்பிட்ட என்னைக் கவர்ந்த அவ்விருவரிகளை ராகத்துடன் பாடிக் காட்டினார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. பிறகு முதலில் விட்டுப்போன இரண்டு வரிகளையும் அன்புடன் எடுத்துக் காட்டினார். அவற்றையும் இணைத்து விட்டேன்).
காந்தியையும் நேருவையும் பெயர் சொல்லி சுட்டிய கவிஞர் (கண்ணதாசன்?) இரண்டாம் வரியில் பெயரிடாமலேயே விட்டாலும் தமிழருக்கு உடனே புரியுமாறுதான் எழுதியிருக்கிறார். அந்தப் பள்ளிச்சாலை தந்தவன் ஏழைத் தலைவன் காமராஜரை பற்றி ஒரு பதிவுகள் வரிசை போட வேண்டும் என்று பலகாலம் எண்ணி வந்தேன்.
மாமனிதர் ராஜாஜி அவர்களைப் பற்றி 5 பதிவுகள் போடுவதற்கு கல்கி அலுவலகத்தில் இரண்டு முழுதினங்கள் கழிக்க வேண்டியாதாயிற்று. ஆனால் காமராஜ் அவர்களைப் பற்றி எழுத நான் தேடியது ஒரே ஒரு புத்தகமே. அதுதான் பத்திரிகையாளர் மு.நமசிவாயம் அவர்கள் எழுதிய "காமராஜ் வரலாறு". இது குமுதத்தில் தொடராக வந்தபோது நான் படித்திருக்கிறேன்.
அந்த புத்தகத்தில் காமராஜ் அவர்களின் இளையபருவ நிகழ்ச்சிகள் விஸ்தாரமாக எழுதப்பட்டுள்ளன. எங்கு தேடியும் கிடைக்காத இப்புத்தகம் நேற்று திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரி ஸ்ரீனிவாசன் நூலகத்தில் அகஸ்மாத்தாகக் கிடைத்தது. "நற்றுணை ஆவது நமச்சிவாயவே" என்று முணுமுணுத்துக் கொண்டே புத்தகத்தை எடுத்து வந்து விட்டேன். இப்போது சாவகாசமாக அடுத்து வரும் தினங்களில் பதிவு போட உத்தேசம்.
1952-லிருந்து 1969- பிப்ரவரி வரை நான்கு சிறந்த நபர்கள் முதலமைச்சர்களாக இருந்தது தமிழகத்தின் பாக்கியமே. இவர்களில் ராஜாஜி அவர்களை பற்றி எழுதியாகி விட்டது. இப்போது காமராஜ் அவர்களைப் பற்றி.
1954-ல் காமராஜ் அவர்கள் முதல்வராக வந்தப்போது அவர் அதிகம் படிக்காதவர் என்ற கருத்தே மேலோங்கியிருந்தது. ஆனால் வாழ்க்கை என்னும் பள்ளியில் கற்று புடமிடப்பட்டவர் என்பது காலப் போக்கில்தான் தெரிய வந்தது. கூர்ந்த, அதே சமயம் தூரப் பார்வையும் ஒருங்கே அமைந்தவர் காமராஜ் அவர்கள். ஒவ்வொரு மந்திரிசபையும் ஜம்போ சைஸில் இருந்த காலத்தில் எட்டே எட்டு பேரை வைத்துக் கொண்டு அவர் சித்து விளையாட்டு காட்டினார். அவர் இருந்தவரை தமிழக காங்கிரஸ் என்றால் அது காமராஜைத் தலைவராகக் கொண்ட காங்கிரஸ் என்பதுதான் நிஜம்.
இவ்வரிசையின் அடுத்த பதிவுகளிலிருந்து திரு நமச்சிவாயத்தின் நூல் பெரிதும் உபயோகப்படுத்தப்படும். அவருக்கும் என் நன்றி உரித்தாகுக. அவரது புத்தகம் தவிர சமீபத்தில் 1960களில் நடந்த நிகழ்ச்சிகளும் எனது ஞாபகத்திலிருந்து சேர்க்கப்படும். விட்டுப் போகும் விஷயங்களை வாசகர்கள் நிறைவு செய்வார்கள் என நம்புகிறேன் - முக்கியமாக டண்டணக்கா அவர்கள்!
அன்புடன்,
டோண்டு ராகவன்
கே.வி.சுப்ரமணிய ஐயர்
-
கந்தாடை வைத்தி சுப்ரமணிய அய்யர் தமிழ் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாய்வாளர்.
தமிழ்நாட்டின் குகைக் கல்வெட்டெழுத்துக்கள் தமிழ்ப் பிராமி எழுத்துருவில்
வடிக்கப்பட்...
6 hours ago
11 comments:
தொடரை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.
திரு காமராஜ்- நாகைக்கு ஒருதடவை வந்தபோது நேரிடையாக பார்த்த அனுபவம் உண்டு.சின்ன பையனாததால் என்ன பேசினார் என்ற ஞாபகம் இல்லை.
நன்றி சிறில் அலெக்ஸ் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உங்களை புரிந்து கொள்ள முடிகிறது வடுவூர் குமார் அவர்களே. பல பதிவாளர்கள் நிலையும் அதுவே. தத்தம் தகப்பனார் மற்றும் பாட்டனார்களிடம் கேட்டால் தகவல் கிடைக்கலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு அய்யா,
இப்போது இருக்கும் தலைவர்களின் தரத்தை பார்க்கும்போது," கர்ம வீரர் இன்னும் 50 வருடங்கள் உயிருடன் இருந்திருக்கலாமே" என்ற ஆதங்கம் தான் எழுகிறது.
பாலா
உங்கள் ஆதங்கத்தை புரிந்து கொள்கிறேன் பாலா அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
போச்சுரா...காமராஜரப் புகழ்ந்து எழுதிட்டீங்களா...இனிமே யார் யாரெல்லாம் அவரத் திட்டி தமிழ்மணத்த நாரடிக்கப் போறாங்களோ... பயமா இருக்குது...
அது இருக்கட்டும்... நீங்க இங்க ஞாபகப் படுத்தின பாட்ட...என்னால மறக்கவே முடியாது... ஏன்னா, ஒவ்வொறு ஜூலை 15 ம் இதே பாட்டப் போட்டு உயிரை எடுப்பாங்க...மதுரை பக்கம்...!
காமராஜரை யாரும் திட்ட மாட்டர்கள் என்பதை உறுதியாக நம்புகிறேன்.
அந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் எனக்கு அலுக்காது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இப்போது கூட பாண்டிச்சேரியின் முதல்வர் திரு ரங்கஸ்வாமி அவர்கள் காட்சிக்கெளியனாக இருக்கிறார்.
கம்யூனிஸ்டு தலைவர்களைல் திரு நல்லக்கண்ணு இருக்கிறார்.
ஆனால் ஒன்று, இதெல்லாம் விரல் விட்டு எண்ணுமளவில் உள்ள உதாரணங்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எல்லாமே உங்களுக்கு சமீபத்தில் நடந்தது போலத்தானே தோன்றும்?
:)))))))))))
அன்பன்,
முகம்மது யூனுஸ்
Post a Comment