இம்முறை இக்கூட்டம் தேனாம்பேட்டை காமராஜ் அரங்கத்தில் நடந்தது. 6.30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய கூட்டத்துக்கு மாலை 4.30-க்கு சென்றும் அரங்கத்தினுள்ளே இடம் கிடைக்கவில்லை. வெளியே ஹாலில் பல ஸ்க்ரீன்கள் ஏற்பாடு செய்திருந்தனர். நானும் ஒரு ஸ்க்ரீனுக்கு முன்னால் தரையில் அமர்ந்து கொண்டேன். கீழே உட்கார்ந்து ரொம்ப நாட்கள் ஆகியிருந்ததால் ரொம்ப கஷ்டப்பட்டேன். என்ன செய்வது மீட்டிங்கை அதற்காக மிஸ் செய்ய இயலுமா? கையில் காத்திருப்புக்கு என்றே கொண்டு சென்ற டெர்ரி ப்ராட்செட்டின் நாவல் கை கொடுத்தது.
மாலை 6.25 வாக்கில் வெங்கைய நாயுடு, ரஜனிகாந்த், எல்.கே. அத்வானி, எக்ஸ்பிரஸ் குருமூர்த்தி ஆகியோர் வந்து முதல் வரிசையில் அமர்ந்தனர். சரியாக 6.30-க்கு சோ மீட்டிங்கை எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை கூறி ஆரம்பித்து வைத்தார். முதலில் துக்ளக்கில் வேலை செய்பவர்கள் அறிமுகம். உதயசங்கர், சுந்தரம், மதலை, சத்யா, பர்க்கத் அலி, சுவாமிநாதன், தோஸ்த், துர்வாசர், இதயா, ஷண்முகம், ராமமூர்த்தி, வசந்தன் பெருமாள், ரா.கி. ரங்கராஜன் ஆகியோரை தனக்கே உரித்தான நகைச்சுவையுடன் அறிமுகப்படுத்தினார். குருமூர்த்தி அவர்களை பற்றி பேசும்போது பல பெரிய இடத்தொடர்புகள் இருந்தாலும் அவற்றிலிருந்து எந்த சுயலாபத்துக்கான விஷயங்களையும் அவர் பெற முயற்சி செய்ததில்லை என கூறினார். தன்னைப் போலவே இந்த விஷயத்தில் இருக்கும் குருமூர்த்தியை சோவுக்கு பிடித்து போனதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும் என நினைத்துக் கொண்டேன்.
பிறகு வாசகர்களை பேச அழைத்தார். இந்த இடத்தில் ஒன்று கூறவேண்டும். கையில் நோட்புக்கும் பேனாவும் எடுத்துச் சென்றாலும் அசௌகரியமான முறையில் உட்கார நேர்ந்ததாலும், ஒலிபெருக்கி மக்கர் செய்ததாலும், சுற்றியிருந்தவர்கள் பல சமயம் கைதட்டி ஆரவாரம் செய்ததாலும் சிலவற்றை சரியாகக் கேட்க இயலவில்லை. ஆகவே எனது நோட்ஸ், மற்றும் ஞாபகசக்தி ஆகியவற்றின் துணையோடு பதிவிடுகிறேன். பிறகு துக்ளக்கில் ரிப்போர்ட் வரும்போது ஏதெனும் முரண்பாடுகள் இருந்தால், துக்ளக் வெர்ஷனே சரியானதாக இருக்கும் என எடுத்துக் கொள்ளவும்.
ரமேஷ் என்னும் வாசகர் பேசும்போது வாக்கு வங்கி அரசியலைப் பற்றி சோ அவர்களின் கருத்தைக் கேட்டார். இலவசங்கள் நீண்ட காலத் திட்டங்களுக்கு உதவுவதாகத் தெரியவில்லையே என்றும் கூறினார். பல கோவில் நிலங்களில் உள்ள பல இந்து குத்தகைக்காரர்கள் குத்தகை பணத்தைத் தராது இழுக்கடித்தபோது இசுலாமிய குத்தகைக்காரர்கள் மட்டும் ஒழுங்காகப் பணம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார். அதே வாசகர் அத்வானிஜியிடம் பாஜக என்ன செய்ய திட்டம் வைத்துள்ளது என்ரு கேட்டார். இத்தனை ஆண்டுகள் துக்ளக்கின் இதழ்கKளை டிவிடியில் தர முடியுமா என்றும் கேட்டார்.
இதற்கு பதிலாக சோ பேசுகையில் இலவசம் என்பதை ஒரேயடியாக மறுக்க முடியாது என்பதை கூறினார். உதாரணத்துக்கு காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தை எம்ஜிஆர் அவர்கள் சத்துணவுத் திட்டமாக விரிவாக்கம் செய்தபோது தான் முதலில் அது பற்றி நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கவில்லை என்றும் ஆனால் காலப்போக்கில் எதனை பேருடைய வாழ்க்கையில் அது ஒளி கொண்டு வந்தது என்பதைப் பார்க்கையில் தன் கருத்தை அதிட்டத்தைப் பொருத்த வரை மாற்றிக் கொண்டதாகவும் கூறினார். ஆனால் டிவி, கேஸ் இணைப்பு என்று இழுத்ததும் அரங்கத்தின் உள்ளிலும் வெளியேயும் ஒரே சிரிப்பு. டிவிடி விஷயத்தை கவனிப்பதாக்க் கூறினார்.
அடுத்து பேசியது கும்மிடிப்பூண்டியிலிருந்து பாலகிருஷ்ணன். ஆனால் அவர் என்ன பேசினார் என்பதை இரைச்சலில் கேட்க இயலவில்லை. ரங்கநாதன் என்பவர் பேசும்போது பெரியார் படம் வெற்றி பெற்றால் ஆத்திகத்துக்கு பங்கம் வருமா என்று கேட்டார். டி.எம்.கே ஆட்சி 5 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்குமா என்றும் கேட்டார். ரஜனிகாந்த அரசியலில் நுழையாத பட்சத்தில் நதி இணைப்புகள் பற்றி ஏதேனும் ஃபாரம் உருவாக்கி வேலை செய்வாரா என்றும் கேட்டார். துக்ளக் மீட்டிங்கை நேரு ஸ்டேடியத்தில் வைத்து கொள்ளலாமே என்றும் ஆலோசனை கூறினார்.
அதற்கு பதிலளித்த சோ நிச்சயமாக தனது கூட்டங்களுக்கு நேரு ஸ்டேடியம் எல்லாம் தரமாட்டார்கள் என்று அபிப்பிராயப்பட்டார். தான் கலந்து கொள்வதாக இருந்த கார்பரேஷன் எலெக்ஷன் பற்றிய மீட்டிங்கையே தடை செய்து விட்டார்கள் என்பதையும் நினைவூட்டினார். திமுக ஆட்சி முழு 5 ஆண்டுகளும் இருக்க வேண்டும் என்ற ஆசையையும் வெளியிட்டார். அப்போதுதான் அவர்கள் முழு சுயரூபமும் தெரியவரும் என்றும் கூறினார். பெரியார் பிள்ளையார் சிலைகளை உடைக்க உடைக்க தெருவுக்கு நான்கு பிள்ளையார் கோவில்கள் உருவாயின. ராஜாஜி கூட பெரியாரை இன்னொரு ஆழ்வாராக அறிவிக்கலாம் என்று குறிப்பிட்டதையும் சோ அவர்கள் எடுத்து காட்டினார். அதையெல்லாம் பார்க்கும்போது இப்படம் வெற்றியடைவதால் ஆத்திகத்துக்கு ஒன்றும் ஆகாது என்றும் கூறினார்.
அழகப்பன் என்பவர் ஹிந்து மகாசமுத்திரம் ஆரம்பமே நன்றாக இருந்தது, ஆயினும் பள்ளி மாணவர்களுக்கும் புரியும் வகையில் எளிமைப்படுத்த வேண்டும் என்று கருத்து கூறினார். துக்ளக்கில் பல புது விஷயங்கள் செய்யலாம் என்றும் கேட்டுக் கொண்டார். மேலே அவர் கூறியது காதில் விழவில்லை. சோ அவர்கள் பதிலளிக்கும்போது இதற்கு மேல் ஹிந்துமகாசமுத்திரத்தை எளிமைப்படுத்த இயலாது என்று கூறினார்.
இன்னும் சிலர் பேசினர், ஆனால் என்னால் குறிப்பெடுக்க இயலவில்லை.
பிறகு சோ பேசினார். சதாம் பற்றி பேசுகையில் அவரை சரியான முறையில் விசாரித்துத்தான் தீர்ப்பு கூறப்பட்டது எனக் கூறினார். பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக பாவ்லா காட்டியது சதாம் ஹுசேன் மட்டுமே. அதன் பலனை அவர் அனுபவித்தார் என்று கூறினார். ஷியா பெரும்பான்மை மக்களை அவர் துன்புறுத்தியதற்கு கிடைத்த பரிசே தூக்கு தண்டனை என்றும் கூறினார். இப்போது தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் ஒத்துழைப்பதில்தான் இந்தியாவின் நலம் உள்ளது என்றும் கூறினார். சோவியத் யூனியன் பலமுறைகள் அடாவடி செய்த போது இந்தியா வெறுமனே வேடிக்கை பார்த்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.
பிறகு தமிழ் நாட்டு அரசியலுக்கு வந்தார். மைனாரிட்டி அரசு என்று ஜெயலலிதா குறிப்பிடுவதை பற்றிப் பேசும்போது அவர் உண்மையைத்தானே கூறுகிறார் என்று கேட்டார். கூட்டணி ஆட்சி அமைக்காது வெளியிலிருந்து ஆதரவு பெற்றால் அது மைனாரிட்டி ஆட்சியல்லாது வேறென்ன என்றும் கேட்டார். திடீரென நடுவில் ஒரு பாட்டை எடுத்து விட்டார். சும்மா சொல்லப்படாது, நன்றாகவே பாடினார். பிறகு சீரியஸாக தனக்கப்புறம் கர்னாடக இசையை சோதான் காக்க வேண்டும் என்று செம்மங்குடி தன்னிடம் கூறியதாக சோ சொன்னார். ஒரே சிரிப்பு. இதுவே அண்ணா தன்னிடம் இதைக் கூறினார் அதைக்கூறினார் என்று யாராவது கூறும்போது நம்பத் தயாராக இருப்பவர்கள் தான் சொன்னபோது மட்டும் ஏன் சிரிக்க வேண்டும் என்று கேட்டு மேலும் சிரிப்பு மூட்டினார்.
தற்போதைய மத்திய அரசு பொருளாதாரத்தில் நன்றாகச் செயல்படுகிறது, ஆனால் தீவிரவாதிகள் விஷயத்தில் கோட்டை விடுகிறது என்று கூறினார். அதே போல க்வாட்ரோக்கி சோனியாவுக்கு வேண்டியவர் என்பதற்காக மட்டுமே போஃபோர்ஸ் விஷயத்தில் அரசு குளறுபடி செய்தது என்று குற்றஞ்சாட்டினார். தமிழகத்திலும் புலிகளுக்கு கலைஞர் பரிவு காட்டுவது கவலைகுரியது என்றும் கூறினார்.
நல்லமுறையில் ஆட்சி செய்வது குஜராத்தில் மோடி மட்டுமே என்று கூறினார். அதை மட்டம்தட்ட மத்திய அரசு செய்யும் முயற்சிகளையும் சோ சுட்டிக் காட்டினார். மோடி மேல் ஒரு ஊழல் புகாரும் இல்லை என்றும் கூறினார். கோத்ரா விஷயத்தில் மோடி அரசுக்கு எதிராக அமைக்கப்பட்ட கமிஷனின் லட்சணத்தைப் பற்றியும் பேசினார். இது பற்றி துக்ளக்கில் விரிவாக வரும் அதில் பார்க்கலாம், ஏனெனில் எனக்கு சரியாக குறிப்பு எடுக்க முடியாமல் போயிற்று.
பிறகு பிஜேபியினர் சோர்வை விட்டு விட்டு உற்சாகத்துடன் உழைக்க வேண்டும் என்று கூறினார். அஃப்சல் விஷயாத்தில் தேவையற்ற சர்ச்சை வருவதை கண்டித்தார். மூன்றாம் அணி வர வாய்ப்பு அதிகம் இல்லை எனக் கூறினார். அவர் தொட்ட வேறு விஷயங்கள்: சினிமாக்களுக்கு தமிழ்ப்பெயர், கார்ப்பரேஷன் தேர்தல், சட்டசபைக்கும் பாராளுமன்றத்துக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தும் வாய்ப்புக்கள், அப்போது நேரக்கூடிய அரசியல் திருப்பங்கள் ஆகியவை.
இப்போதுதான் ஒரு அதிசயம் நடைபெற்றது. சாதாரணமாக ஆண்டுவிழா கூட்டங்களில் சோ மட்டும்தான் பேசுவார். ஆனால் இம்முறை அத்வானிஜியும் பேசினார். அது பற்றி அடுத்தப் பதிவில்.
அன்புடன்,
டோண்டு ராகவன்