கடந்த காலத்துக்கு செல்வது என்பது பலருக்கு பிடிக்கும். எனக்கும்தான். அதே சமயம் அது முடியாது என்பதும் தெரியும். அப்படியே கற்பனை செய்து போனாலும் தற்கால சிந்தனைகள் அறிவுகள் ஆகியவை அவற்றை முழுமையாக அனுபவிக்க விடாது. இது பற்றி ஏற்கனவே ஒரு பதிவு போட்டுள்ளேன்.
நான் அப்பதிவில் குறிப்பிட்டபடி அந்தக் காலம் போல இப்போதெல்லாம் அதிகம் புத்தகம் படிக்க பொறுமையில்லை. அப்போதெல்லாம் ஒரு சராசரி புத்தகம் ஆங்கிலத்தில் இருந்தால் ஒரு நிமிடத்திற்கு ஒரு பக்கம் என்ற வேகத்தில் படிப்பேன். தமிழாக இருந்தால் ஒரு நிமிடத்துக்கு இரு பக்கங்கள். ஆனால் இப்போது, சில பக்கங்கள் படித்த உடனேயே ஆர்வம் குன்றி விடுகிறது. வேறு வேலையில் மனம் செல்கிறது. நூலகத்திலிருந்து கொண்டு வரும் சில புத்தகங்கள் படிக்கப்படாமலேயே திருப்பி கொடுக்கப்பட்டுள்ளன.
பழைய வேகத்தில் புத்தகங்கள் படிப்பது ரொம்ப குறைந்து விட்டது. 2003, 2005 மற்றும் 2007-ல் மூன்று புத்தகங்களை அவ்வாறு முடிக்க முடிந்தது. அவை முறையே ஹாரி பாட்டர் புத்தகத்தின் ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது புத்தகங்கள். நேற்றைக்கு புத்தகம் வாங்கி வந்ததும் நிறைய வேலைகள். இருப்பினும் நேரம் திருடி படித்தேன். இன்று கணினியை திறந்து வைத்திருந்தாலும் வேலை எல்லாவற்றையும் ஒத்திப் போட்டு விட்டு முப்பது வருடங்களுக்கு முந்தைய ராகவனாக மாறினேன். அந்த அளவுக்கு அந்தக் காலம் திரும்ப வந்தது.
ஹாரி பாட்டரின் கடைசி புத்தகம் என்பதால் இது பற்றிய எதிர்பார்ப்புகள் மிக அதிகமாகவே இருந்தன. கதையின் ஓட்டத்தை ஊகித்து பலர் பல கதைகள் விட்டார்கள். அவ்வாறு நான் படித்ததில் ஒன்று கூட உண்மையில்லை. இந்தப் புத்தகம் என்னைப் பொருத்தவரை முழுக்கவும் புதிதாகவே இருந்தது. சும்மா சொல்லக்கூடாது. ரௌலிங் பின்னி பெடல் எடுத்துள்ளார். இரண்டு நாட்கள் முன்னால் கதையின் அச்சிட்ட பக்கங்களை சில நாதாறிகள் இணையத்தில் வெளியிட்டு இழிந்த காரியம் செய்தனர். என்னிடம் அதை கூறிய எனது நண்பர் சுட்டி வேண்டுமா எனக் கேட்டார். வேண்டவே வேண்டாம் எனக் கூறிவிட்டேன்.
ரௌலிங் ஏற்கனவே சொன்னது போல பல மரணங்கள் நிகழ்கின்றன. யார் யார் என்று நான் கூறப் போவதில்லை நன்மைக்கும் தீமைக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தில் வேடிக்கை விளையாட்டு ஒன்றும் இல்லை என்பது இப்புத்தகத்தின் அடிப்படை நாதம். அதை இந்த மரணங்கள் உறுதி செய்கின்றன. வெற்றியோ தோல்வியோ, கடமையைச் செய்யவும் என்று கூறிய கீதாசார்யனின் அறிவுரையைக் கடைபிடிக்கிறான், பகவத் கீதையின் பெயரைக் கூட கேட்டிருக்க முடியாத ஹாரி பாட்டர். அவன் தோழர்கள் ரானும், ஹெர்மியானும் அவனுக்கு உறுதுணையாக இருக்கின்றனர். கதையின் பிற்பகுதியில் டம்பிள்டோரேயின் சேனை வேறு வந்து சேர்ந்து கொள்கிறது. மந்திரச் சொற்கள் வழக்கம் போல லத்தீன மொழியில் இருப்பது கம்பீரமாக உள்ளது. டாபி, க்ரீச்சர் போன்ற எல்ஃபுகள் அமர்க்களம் செய்கின்றன. ஆறாவது மற்றும் ஏழாவது புத்தகங்கள் ரொம்பவும் சீரியசான விஷயங்களை கூறுகின்றன. இதற்கு மேல் கதையை கூற மாட்டேன். போன தடவை ராபணா என்று போட்டு உடைத்ததைப் போல் இம்முறை சேய்ய மாட்டேன்.
எதேச்சையாக ஆரம்பித்த ஹாரி பாட்டர் கதை இப்படி பல கோடிக்கணக்கான வாசகர்களை புரட்டிப் போட்டு விட்டது. மிக அதிக அளவு விற்பனையான புத்தகங்களில் இவையும் அடங்கும்.
என் நூல்கள் அமெரிக்கவெளியீடாக…
-
என் மூன்று நூல்கள் இந்தியாவில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளன. பிரியம்வதா
மொழியாக்கம் செய்த அறம் கதைகளின் ஆங்கிலவடிவமான Stories of the True ,
சுசித்ரா மொழியாக...
9 hours ago