அறுபதுகளில் என்னைக் கவர்ந்த எழுத்தாளர்களில் ல்லாய்ட் சி. டக்லஸ் மிகவும் முக்கியமானவர். அவரது ஆங்கில நடை எளிமையாக இருக்கும். மனதைக் கவரும். எல்லாவற்றையும் விட முக்கியமாக கதைகளின் கருத்துக்கள் மிக முக்கியமானவை. அவர் எழுதிய நாவல்களில் என்னை மிகவும் கவர்ந்தது 1929-ஆம் ஆண்டு அவர் எழுதிய Magnificent Obsession என்னும் நாவல்.
கதை சுருக்கம் பின்வருமாறு.
ராபர்ட் மெர்ரிக் என்னும் இளைஞனுக்கு படகு விடும்போது விபத்து ஏற்படுகிறது. அவனுக்கு திறமை வாய்ந்த மருத்துவக் குழு அவசர சிகிச்சை அளித்து அவனைக் காப்பாறுகிறது. ஆனால் அதே சமயம் சற்று அருகிலேயே இருத நோயால் அவதிப்பட்ட மருத்துவர் ஹட்ஸனை அக்குழுவால் காப்பாற்ற சமயமின்றி அவர் இறக்கிறார். ஹட்ஸன் சிறந்த மூளை சிகிச்சை நிபுணர். ராபர்ட்டோ கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழும் பணக்கார இளைஞன். வேலை செய்யாமலேயே வாழ்நாள் முழுதும் கழிக்கும் அளவுக்கு பணம் படைத்தவன். மருத்துவர் ஹட்ஸன் இறந்த அதே மருத்துவ மனையில்தான் உயிர் பிழைத்த ராபர்ட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தான். மருத்துவருக்கு பதிலாக இவன் இறந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் இவன் காதுபடவே பேசுகின்றனர்.
முதலில் கோபப்பட்ட ராபர்ட், பிறகு ஹட்ஸனின் முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு துணுக்குறுகிறான். மற்றவர்கள் ஆதங்கப்பட்டதின் உண்மை அவனுக்கு உறைக்கிறது. நடந்தது நடந்து விட்டது. இப்போது என்ன செய்வது என யோசிக்கிறான். ஹட்ஸன் இறந்ததால் பல நோயாளிகளின் நிலையில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு தான் ஏதாவது செய்ய வேண்டும் என அவனுக்கு தோன்றுகிறது. இதே நிலைமையில் பலர் மருத்துவ மனைக்கு பெரிய நன்கொடையாகக் கொடுத்து தங்கள் மன நெருடலை நீக்க முயற்சித்திருப்பார்கள். ஆனால் இவன் சற்று வித்தியாசமாக சிந்தித்தான். ஹட்ஸன் இடத்தில் இன்னொரு மருத்துவர் அதே திறமைகளுடன் தேவை. இதை மனதில் இருத்தி தானும் ஹட்ஸன் மாதிரியே மூளை சிகிச்சை நிபுணனாக வேண்டுமென தீர்மானிக்கிறான்.
இடையில் இவனிடம் டாக்டர் ஹட்ஸனின் ரகசிய டயரி கிடைக்கிறது. ஆனால் அதை டாக்டர் ஹட்ஸன் முழுக்க முழுக்க சங்கேதக் குறிகளாலேயே நிரப்பியுள்ளார். பிறகு அதனுடன் போராடி அதற்கான திறவுகோலை கண்டுபிடிக்கிறான். டாக்டர் ஹட்ஸனின் ரகசிய உலகுக்குள் பிரவேசிக்கிறான். அற்புத உலகம் அது.
ராபர்ட் மருத்துவ கல்லூரியில் சேருகிறான். தன்னை விட பல ஆண்டுகள் சிறிய மாணவர்கள் மாணவிகளுடன் கல்லூரிக்கு செல்கிறான். பலரது ஏளனத்துக்கு ஆளாகிறான். மனம் தளறாமல் படிக்கிறான். பலருக்கு பல உதவிகள் செய்கிறான். பொருள் ரூபத்திலோ, உடல் உழைப்பாகவோ அவன் செய்யும் உதவிகள் பலரது வாழ்வில் வசந்தத்தை மலரச் செய்கின்றன. உதவி அளிக்கும்போது ஒரே ஒரு நிபந்தனைதான் விதிப்பான். அது என்னவென்றால் தான் உதவி செய்தது, செய்வது செய்யப்போவது எல்லாமே ரகசியமாக இருக்க வேண்டும் என்பதே அது.
சில காலங்களுக்கு பிறகு அவனிடம் உதவி பெற்றவர்கள் நன்றியுடன் பிரதியுபகாரம் செய்ய வரும்போதோ, பெற்று கொண்ட பொருள் வசதிகளைத் திரும்பத் தர முயலும்போதோ ஒன்றே ஒன்றுதான் கூறுவான். "நான் இதை எப்படித் திரும்பப் பெறுவேன்? அதை நான் ஏற்கனவே முழுக்க முழுக்க உபயோகப்படுத்தி விட்டேனே"! என்று. அதற்கு மேல் கூற மாட்டான். விளக்கம் கேட்டாலும் சொல்ல மாட்டான்.
நாவலிலும் முதலில் விளக்கம் தரப்படவில்லை. வாசகனான நான் தலைமயிரைப் பிய்த்க்து கொண்டேன். நாவல் படித்து முடிந்ததும்தான் விளங்கிற்று.
எல்லாவற்றுக்கும் டாக்டர் ஹட்ஸனின் ரகசிய டைரிதான் காரணம். அவர் பலருக்கு ரகசியமாக உதவிகள் செய்து வந்தவர். தன் பெயர் எக்காலத்திலும் வெளியில் வரலாகாது என்பதில் முனைப்பாக இருந்தவர். அவ்வாறு அவர் காரியங்கள் செய்து கொண்டு போகப் போக அவர் முனைப்புடன் செய்ய முயன்ற காரியங்களில் வெற்றி தேவதை சர்வ சாதாரணமாக அவருக்கு துணை இருக்க ஆரம்பித்தாள். தர்மத்தின் புண்ணிய பலன் அடுத்த பிறவி வரை காத்திராது இப்பிறவியிலேயே கிடைத்து விடும் என்பதுதான் கதையின் அடிநாதம். இதை உணர்ந்ததாலேயே அவர் பிரதியுபகாரங்களை மறுத்து வந்த்தார்.
வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூட தெரியலாகாது என்னும் சொலவடையை இக்கதை விளக்குகிறது என்பதையே நான் புரிந்து கொள்கிறேன். மகாபாரதத்தில் வரும் கர்ணன் செய்த கொடைகளின் பலனாய் அவன் மேல் விடப்பட்ட பார்த்தனின் அம்புகள் பலனின்றி கீழே விழ, பார்த்தசாரதியாம் கண்ணன் அதைக் கண்டுணர்ந்து போரை நிறுத்தி விட்டு கர்ணனிடம் கிழ ரூபம் தரித்து தானம் கேட்கிறார். கர்ணன் ஒரே ஒரு வேண்டுகோளையே அவரிடம் விடுக்கிறான். "என்னால் மரணத்தின் வாயிலில் நிற்கும் இத்தருணத்தில் தரக்கூடியதையே கேளுங்கள்" என்கிறான். கண்ணனும் அவனது தானதருமங்களின் பலனைத் தருமாறு அவனிடம் யாசிக்கிறார். "எனது எல்லா தருமங்களின் பலனையும் தந்தேன். அத்தருமங்களுள் நான் இப்போது செய்யும் தருமமும் அடங்கக் கடவது" என்று கூறி தானம் அளிக்கிறான் கௌந்தேயனான கர்ணன்.
பிறகு கர்ணன் மாண்டதும் குந்தி மட்டும் அழவில்லை. தரும தேவதையுமே வந்து கதறுகிறாள், தான் இனி யாரிடத்தில் குடி கொள்வது என்று.
பிரதியுபகாரம் எதிர்ப்பார்க்காது உதவி செய்ய வேண்டும், ஆனால் அதே சமயம் அவ்வாறு செய்வது வேறு யாருக்கும் தெரியக் கூடாது. சற்று கஷ்டமான காரியமே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
1 hour ago