9/21/2008

சாரு நிவேதிதாவுடன் கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் சந்திப்பு


நேற்று மாலை (20.09.2008) கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் சாரு நிவேதிதா பங்கு பெறும் கலந்துரையாடல் பற்றிய பதிவை பார்த்து விட்டு அங்கு செல்லும்போது மணி சரியாக மாலை 05.15. "கிழக்கு மொட்டைமாடியை அடைய மூன்று தளங்களின் மாடிப்படிகளில் ஏறவேண்டும். லிஃப்ட் கிடையாது. முதியவர்கள், மாடிப்படி ஏறக் கஷ்டப்படுபவர்கள் இதை மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்" என்று அப்பதிவில் கூறப்பட்டதை மனதில் வைத்து மூன்று மாடிகள் லிஃப்ட் இல்லாமல் ஏறினால் அங்கு அச்சமயம் பா. ராகவன் மட்டும் இருந்தார். என்னை வரவேற்ற பா. ராகவன் மைக் டெஸ்டிங் செய்யும் தோரணையில் டோண்டு ராகவனை வரவேற்பதாக மைக்கில் கூறினார். பிறகு ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். முதலில் வந்தது ஐக்காரஸ் பிரகாஷ். பிறகு நாராயணன், ஹரன் பிரசன்னா. சற்று நேரத்தில் லக்கிலுக்கும் வந்தார். சிங்கப்பூரைச் சேர்ந்த பொன். மகாலிங்கம் என்னும் பத்திரிகையாளர் (இவர் ரேடியோ சிங்கப்பூரில் பணி புரிகிறார்), நவியா மார்க்கெட்ஸ் லிமிட்டடின் வைஸ் பிரெசிடெண்ட் வள்ளியப்பன் ஆகியோரிடம் கார்டு பரிமாறிக்கொண்டேன்.

பத்ரி அவர்கள் மிக மிக சுருக்கமாக துவக்க உரையைக் கூறி மைக்கை சாருவிடம் தந்தார். சாரு பேசும்போது எல்லோரும் தங்களுக்கு பேசவராது என்ற டிஸ்கியை முதலில் போட்டு விட்டு பிறகு தங்கு தடையின்றி பேசுவதாகவும், ஆனால் தனக்கு நிஜமாகவே பேச வராது என்று கூறிவிட்டு, மேலே கூறப்பட்ட டிஸ்கிதான் அவரது விஷயத்திலும் என்பதை நிரூபிக்கும் வண்ணம் நன்றாகவே பேச ஆரம்பித்தார்.

இணையத்தின் உபயத்தால் பலர் எழுத வந்துள்ளதை சுட்டிக் காட்டினார். ஆனால் வருபவர்கள் ஜஸ்ட் லைக் தட் எழுதுபவர்களாகவே இருக்கிறார்கள் என்றும். உடனேயே சிறுகதை, கவிதை ஆகியவற்றை போட முயற்சிப்பதாகவும் கூறினார். அதெல்லாம் செய்வதற்கு முன்னால் நிறைய ஹோம் வொர்க் செய்ய வேண்டும் என்றும் படிக்க வேண்டும் என்றும் கூறினார்.

அவரது முக்கிய கம்ப்ளைண்ட் என்னவென்றால் தமிழ் எழுத்தாளர்கள் பற்றி அதிகம் வெளியே தெரிவதில்லை என்பதே. ஒரு சராசரி மலையாள எழுத்தாளருக்கோ, வங்காள எழுத்தாளருக்கோ இந்த பிரச்சினை இல்லை என்றும் கூறினார். தமிழ்நாட்டில் தமிழ் தெரியாதவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருவதையும் கோடி காட்டினார். இர்ண்டு பஞ்சாபியரோ, மலையாளியோ தங்களுக்குள் தத்தம் தாய்மொழியில் பேச தயங்காத போது, தமிழர்கள் மட்டும் ஆங்கிலத்தில் பேசும் அவலத்தையும் சுட்டிக் காட்டினார். நல்ல தமிழ் புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டிய தேவையையும் வலியுறுத்தினார்.

சுருக்கமாகவே பேசிய பிறகு அவர் கேள்விகளுக்கு நேரம் தந்தார். முதல் கேள்வி கேட்டது அடியேன். மொழிபெயர்ப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லையென்றும் அதற்கு முதலில் மூல ஆசிரியரின் அனுமதி வேண்டும் என்றும், அப்படியே மொழிபெயர்த்தாலும் அதற்கான சன்மானம் அவ்வளவாக இல்லை என்பதையும் சுட்டிக் காட்டினேன். காலஞ்சென்ற சமுத்திரம் அவர்கள் என்னை தொலைபேசியில் சில ஆண்டுகளுக்கு முன்னால் தொடர்பு கொண்டு அவரது "அடுக்கு மல்லி" நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்குமாறு கூறியதை நான் இதற்கு மேற்கோளாகக் காட்டினேன். நான் கேட்ட தொகைக்கு சிறிதும் சம்பந்தமில்லாது அதன் மொழிபெயர்ப்புக்காக ஒதுக்கப்பட்ட தொகை இருந்ததால் அதை நான் மொழிபெயர்க்கவில்லை என்பதையும் கூறினேன். நான் கூறியதை சாருவும் ஒத்து கொண்டார். இருப்பினும் மொழிபெயர்ப்புகளின் அவசியத்தை மறுபடி வலியுறுத்தினார். இன்னொருவர் எழுந்து புனைக்கதை இல்லாத எழுத்துக்களை பற்றி கேள்வி கேட்டார். அவையும் முக்கியமே என சாரு கூறினார்.

தமிழ்நாட்டில் தமிழ் தேய்ந்தது ஒருபக்கமிருக்க ஆங்கிலமும் சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை என்பதை ஒருவர் கூற அதையும் சாரு ஆமோதித்தார். இந்த நிலைக்கு முக்கியக் காரணமே ஆங்கில கான்வெண்டு பள்ளிகளை ஒரு குடிசைத் தொழில் ரேஞ்சுக்கு தெருவுக்கு தெரு கொண்டு வந்ததுதான் என்றார். ஆங்கில மொழியை போதிப்பது சரியான தரத்தில் இல்லை என்பதையும் அவர் கூறினார்.

அவர் ஸ்பானிஷ், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட புத்தகங்களை பற்றி கூறி அவற்றை ஆங்கில மொழியாக்கத்தில்தான் படித்ததாகக் கூறினார். இவ்வளவு பேசும் இவர் நிஜமாகவே பிரெஞ்சு கற்று தேர்ந்திருந்தால் சம்பந்தப்பட்ட புத்தகங்களை பிரெஞ்சிலேயே படித்து மகிழ்ந்திருக்கலாம் என்ற எனது ஆதங்கத்தை நான் அவரிடம் கூற அவர் தனக்கு வேற்று மொழி கற்று கொள்வதில் ஒரு விதமான மெண்டல் பிளாக் இருப்பதாகக் கூறினார். இது நிஜமாகவே துரதிர்ஷ்டவசமானதுதான். ஆனால் என்ன செய்ய அதுதான் வாழ்க்கை. பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழி பேசப்படும் நாடுகளில் அனாயாசமாக சென்று வர இயலும் எனக்கு வெளிநாடுகளுக்கு செல்வதில் எவ்வித ஆர்வமும் இல்லை என்பதும் நகை முரண்தானே.

கமகமவென மணத்துடன் சமோசாக்கள் மற்றும் சுவையான தேநீர் வழங்கப்பட்டன. கிழக்கு பதிப்பகத்தின் சார்பில் சில புத்தகங்கள் சாருவுக்கு தரப்பட்டன. மீட்டிங் முடிந்ததும் கீழே உள்ள புத்தகக் கடைக்கு சென்று நான் தேவன் அவர்கள் எழுதிய "சி.ஐ.டி. சந்துரு" மற்றும் லிவிங் ஸ்மைல் எழுதிய "நான் வித்யா" புத்தகங்களையும் வாங்கினேன்.

மீட்டிங் சமயத்தில் குறிப்புகள் எடுத்து கொள்ளாததால் இப்பதிவை நினைவிலிருந்து எழுத வேண்டிய கட்டாயம். இன்று காலை பத்ரிக்கு போன் செய்து அவர் எடுத்த புகைபடத்தை அனுப்புமாறு கேட்டு கொள்ள அவரும் அனுப்பியுள்ளார். அதுதான் பதிவின் ஆரம்பத்தில் உள்ள படம். அவருக்கு என் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின்சேர்க்கை:
சாரு அவர்கள் தனது தளத்தை கட்டணத் தளமாக மாற்றவிருப்பதாக அதில் கூறியிருந்தார். அது பற்றி கேட்டதற்கு ஆனானப்பட்ட சுஜாதாவுக்கே அம்பலம் பே சைட்டில் 14 உறுப்பினர்கள்தான் என்ற தகவல் வந்ததாகவும் ஆகவே அந்த எண்ணத்தையே தான் விட்டுவிட்டதாகவும் சிரித்தவன்ணம் கூறினார்.

25 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அச்சோ! எனக்குத் தெரியாமப் போச்சே :(

துளசி கோபால் said...

விவரங்களுக்கு நன்றி.

போண்டா இல்லாத சந்திப்பா ஆகிருச்சே:-)))))

சாருவை ஒருமுறை சந்தித்து இருக்கேன். நட்பாகவே உரையாடினார்.

dondu(#11168674346665545885) said...

அதனால் என்ன? இனிமேல் இம்மாதிரி மீட்டிங்குகள் அடிக்கடி நடக்கும் என பத்ரி தெரிவித்துள்ளார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

ஏன் சமோசாவுக்கு என்ன குறைச்சல்? பை தி வே நீங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து செட்டில் ஆவது பற்றிய உத்தேசம் எம்மட்டில் உள்ளது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

துளசி கோபால் said...

கோபால் இன்னும் மூணு நாலு வருசத்தில் ரிட்டயர் ஆக நினைக்கிறார்.

இப்ப இருந்தே ப்ளான் செஞ்சுக்கிட்டா நல்லதுன்னுதான் யோசனையா இருக்கேன்.

Ramesh said...

Being in Bangalore so I cannot attend such meetings!

Anyway thanks for the update.

So we can expect meeting with Jeyamohan, S Ramakrishnan et al?

dondu(#11168674346665545885) said...

//So we can expect meeting with Jeyamohan, S Ramakrishnan et al?//
அதற்கு சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களும் பத்ரியும் மனது வைக்க வேண்டும்.

அன்புட்ன்,
டோண்டு ராகவன்

siva gnanamji(#18100882083107547329) said...

லிப்ட் இல்லாத கட்டிடத்தின் 7 வது
மாடியில் கூட்டினால் இன்னும் நிறையபேர் வருவார்களே......

ramachandranusha(உஷா) said...

அவர் தனக்கு வேற்று மொழி கற்று கொள்வதில் ஒரு விதமான மெண்டல் பிளாக் இருப்பதாகக் கூறினார்.//

டோண்டு சார்! ஒரு புது மொழியைக் கற்றுக் கொள்ள என்ன வழி முறைகள்? எனக்கும் இந்த
மெண்டல் பிளாக் உள்ளது. இந்த கேள்வியை உங்களிடம் கேட்க வேண்டும் என்று பல முறை
நினைத்திருக்கிறேன். உங்களுக்கு பிரன்சு, ஜெர்மன் போன்ற மொழிகளை சரளமாய் பேச, எழுத
எவ்வளவு நாள்/ மாதம், வருடம் ஆயிற்று? சற்றே விளக்கமாய், பதிவாகவே வேண்டுமானாலும், உங்கள் அனுபவங்களை,
நீங்கள் கையாண்ட முறையை, உங்களுக்கு சொல்லப்பட்டவைகளை பகிர்ந்துக் கொள்ளுங்களேன்.

dondu(#11168674346665545885) said...

//ஒரு புது மொழியைக் கற்றுக் கொள்ள என்ன வழி முறைகள்? எனக்கும் இந்த
மெண்டல் பிளாக் உள்ளது. இந்த கேள்வியை உங்களிடம் கேட்க வேண்டும் என்று பல முறை
நினைத்திருக்கிறேன். உங்களுக்கு பிரன்சு, ஜெர்மன் போன்ற மொழிகளை சரளமாய் பேச, எழுத
எவ்வளவு நாள்/ மாதம், வருடம் ஆயிற்று? சற்றே விளக்கமாய், பதிவாகவே வேண்டுமானாலும், உங்கள் அனுபவங்களை,
நீங்கள் கையாண்ட முறையை, உங்களுக்கு சொல்லப்பட்டவைகளை பகிர்ந்துக் கொள்ளுங்களேன்//.

சொன்னால் போயிற்று.

முதலில் ஜெர்மன் கற்று கொண்ட கதை
1969, ஜூலை 1. எல்லோரும் எங்கள் முதல் ஜெர்மன் வகுப்புக்காக உட்கார்ந்திருந்தோம். சரியாக 9 மணிக்கு மிடுக்காக உள்ளே நுழைந்தார் எங்கள் ஆசிரியர் சர்மா அவர்கள். சிறு அறிமுகம் - 1 நிமிடத்திற்கு, ஆங்கிலத்தில். அதில் அவர் கூறியதன் சாராம்சம் தான் இனி ஜெர்மனில்தான் பேசப் போவதாகவும் அம்மொழியிலேயே ஜெர்மன் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும் என்றும் கூறினார்.

உடனே பாடத்தை ஆரம்பித்து விட்டார். முதலில் பாடத்தை அவர் நிறுத்தி நிதானமாக உரக்கப் படித்தார். பிறகு எங்களை அதே உச்சரிப்புடன் படிக்கச் சொன்னார். என்ன ஆச்சரியம், தட்டுத் தடுமாறிப் படிக்க ஆரம்பித்தோம். பயிற்சி மிக உபயோகமாக இருந்தது. இது புது முறையைச் சார்ந்தது என்பதை அறிந்தோம். பிறகு டேப் ரிக்கார்டர் வழியே ஒரு ஜெர்மானியரின் உச்சரிப்பையும் பெற்றோம். எல்லாவற்றையும் கான்டக்ஸுடன் படித்துக் கேட்டதால் ஜெர்மன் மொழி எங்களை அறியாமலேயே எங்களிடம் குடி புகுந்தது.
கூடவே உரக்க நாங்களும் பாடத்தைத் திருப்பிச் சொல்ல வேண்டியிருந்தது. பலருக்கு உரக்கக் கத்துவதில் கூச்சம். ஆகவே உதட்டை மட்டும் அசைத்தனர். ஆனால் நான்? கூச்சமா? மூச், பேசப்படாது என்பது என் தாரக மந்திரம். என்னைப் பொருத்தவரை சர்மா தன் தெளிவானக் குரலில் ஜெர்மனில் எதைக் கூறினாலும் எனக்குப் புரிய ஆரம்பித்தது.

மெதுவாக வகுப்பில் மாணவர் நிலை ஒரு சமன்பாட்டுக்கு வரத் துவங்கியது. முதலில் வகுப்பறையில் உட்காரக்கூட இடம் இருக்காது. ஓரிரு வாரத்திலேயே சட சடவென்று பல மாணவர்கள் வகுப்புக்கு வருவதை நிறுத்தினர். மிஞ்சியவர்கள் அபார முன்னேற்றம் அடைந்தனர்.
நான் சேர்ந்தது Grundstufe - 1 வகுப்பில். ஒவ்வொருக் கல்வியாண்டிலும் இரண்டு செமஸ்டர்கள். முதல் செமஸ்டர் தேர்வு நவம்பர் 1969-லும், இரண்டாம் செமஸ்டர் தேர்வு ஏப்ரல் 1970-லும் நடப்பதாகத் திட்டம். அப்போது G - 1 சான்றிதழ் கிடைக்கும்.
இப்போது நான் ஒரு காரியம் செய்தேன். வாரத்துக்கு மூன்று வகுப்புகள், காலை 8-லிருந்து 9 வரை. மீனம்பாகத்திலிருந்து மாம்பலத்துக்கு மின் ரயில் வண்டியில் பயணம், அங்கிருந்து அண்ணா சாலை டி.வி.எஸுக்கு பேருந்துப் பயணம். ஆக, பயண நேரம் ஒரு மணிக்கு மேல். அப்போது விளையாட்டாக அடுத்தப் பாடங்களைப் படிக்க ஆரம்பித்து, அதில் கூறப்பட்டப் பயிற்சிகளைச் செய்யத் தலைப் பட்டேன். ஒரு வேளை ஏதாவது ஒரு நாள் வகுப்புக்குச் செல்ல முடியாவிடினும் சமாளித்துக் கொள்ளலாம் என்பதே இதற்குக் காரணம். ஆனால் நடந்ததென்னவென்றால் முதல் செமஸ்டர் முடியும் முன்னரே முழுப் புத்தகத்தையும் எல்லப் பயிற்சிகளையும் எழுத்தால் செய்து முடித்து விட்டேன். இப்போது ஜெர்மனில் நானே வாக்கியங்களை உருவாகிப் பேச ஆரம்பித்தேன். முதலில் என்னை வியப்புடன் பார்த்த சர்மா அவர்கள் என்னுடன் ஜெர்மனில் பேச ஆரம்பித்தார். நான் செய்தத் தவறுகளை நாசூக்காகத் திருத்தினார். மொழி வகுப்புகளில் எல்லோருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய டிக்டேஷன் எனக்கு ஒரு ஒரு விளையாட்டாயிற்று.

நவம்பர் 1969-ல் ஒரு நாள் மாலை 7 மணிக்கு முதல் செமஸ்டர் தேர்வு. சித்ரா திரையரங்கில் பாமா விஜயம் பகல் நேரக் காட்சியைப் பார்த்து விட்டு, மாலை தேர்வுக்குச் சென்றால் எல்லா மாணவர்களும் கடைசி நேரக் கொந்தளிப்பில். நான் பாட்டுக்கு ஒரு ஜெர்மன் தினசரிப் பத்திரிகையைப் பிரித்துப் பார்த்து விட்டு இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மையரின் கட்சிக்குத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று என் நண்பர்களிடம் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். அவர்களுக்கோ வாழ்க்கையே வெறுத்து விட்டது. பரீட்சை முடிவு வந்தது. ரொம்ப நாட்களுக்குப் பிறகு எனக்கு முதல் பரிசு கிடைத்தது.

இன்னொரு போனஸ். முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றவர்கள் அடுத்த வகுப்புக்கான முதல் மாதக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப் பட்டது. (மாதக் கட்டணம் 12 ரூபாய்!). ஆனால் ஒரு நிபந்தனை. பின் வரும் எல்லா மாதத் தேர்விலும் முதல் வகுப்பு மதிப்பெண்களை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அம்மாதத்திலிருந்து கட்டணம் கட்ட நேரிடும். நான் முதல் செமச்டருக்காகக் கட்டிய நான்கு மாதக் கட்டணமான 48 ரூபாய்களுக்கு மேல் ஒரு பைசாவும் கட்டவில்லை. வெறுமனே பரீட்சைக் கட்டணம் (ரூ. 10) மட்டுமே கட்டினேன்.

நவம்பர் 1969-ல் இரண்டாம் செமஸ்டர். கல்யாணி ஜானகிராமன் என்ற ஒரு அருமையானப் பெண்மணி வகுப்பெடுத்தார். ஏப்ரல் 1970-ல் இரண்டாம் செமஸ்டர் தேர்விலும் தேறி அடுத்த வகுப்புக்கான கட்டணத்திலிருந்து விலக்குப் பெற்றேன். இப்போது G - 2 வகுப்பை ஒரே செமஸ்டரில் முடிக்கத் திட்டமிட்டு, வாரத்துக்கு 5 நாள் வகுப்பில் சேர்ந்தேன். ஆசிரியை சியாமளா அவர்கள். வயலின் வித்தகர் துவாரம் வெங்கடசாமி நாயுடுவின் பெண். (மாதக் கட்டணம் 18 ரூபாய்கள், நான் கட்டவில்லை). பாதி செமஸ்டரில் Mittelstufe - 1 வகுப்புக்கானப் புத்தகம் வாங்கி பயிற்சிகளைச் செய்யலாமா என்று தேசிகனுடன் ஆலோசனை செய்ததில் அவர் மிகுந்த உற்சாகத்துடன் எனக்கு உதவி செய்தார். அவ்வகுப்பில் கடைசி மாதத்துக்கு மட்டும் வகுப்புக்குச் சென்றேன். சர்மாதான் ஆசிரியர். பிறகு நடந்ததுதான் தமாஷ். இரண்டு பரீட்சைகளையும் சில நாட்கள் இடைவெளியில் எழுதி இரண்டிலும் முதல் பரிசு பெற்றேன். முதல் பரிட்சை (G-2) அன்றுப் பார்த்தப் படம் சிராக் என்ற ஹிந்திப் படம், அடுத்தப் பரீட்சை (M1) தினத்தன்றுப் பார்த்தது லட்சுமி கல்யாணம்!

தேசிகன் எனக்குச் செய்த உதவி அளவற்றது. எம்- 1 வகுப்பில் கடைசி ஒரு மாதம் படித்ததற்குக் கட்டணம் பெற மறுத்து விட்டார். ஆக நான் ஜெர்மன் வகுப்புக்களுக்காக கட்டிய மொத்தப் பணம் 48 ரூபாய்கள்தான்.

1971 ஜனவரியில் மத்தியப் பொதுப் பணித் துறையில் இளநிலைப் பொறியாளராகப் பதவி நியமனம் பெற்றேன். வேலை பம்பாயில். அங்கிருந்த மேக்ஸ் ம்யுல்லர் பவன் என்னைக் கவரவில்லை. தவறு என்னுடையதுதான். சென்னை மேக்ஸ் ம்யுல்லர் பவனை மறக்க இயலவில்லை. அவ்வாண்டு ஜூலையில் பூனா மேக்ஸ் ம்யுல்லர் பவனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். இந்தியாவிலேயே மிகச் சிறப்பானது அது. முழு நேரப் பாடங்கள் அங்கே. நான் எம்- 2 வகுப்புக்கானத் தேர்வை பிரைவேட்டாக எழுத முடியுமா என்றுக் கேட்டிருந்தேன். கடிதம் எழுதியது ஆங்கிலத்தில். அவர்கள் பதில் வந்ததோ ஜெர்மனில். இம்மாதிரி அவர்களுக்கு ஒரு கடிதமும் வந்ததில்லை என்பதைப் பிறகு அறிந்தேன். நானும் ஜெர்மனில் எழுத, அவர்கள் பதில் போட, ஆகஸ்டில் எம்- 2 எழுதி தேர்ச்சிப் பெற்றேன். இரண்டாம் ரேங்க்தான் கிடைத்தது. நவம்பரில் ஒரு டிப்ளொமா பரீட்சைக்குப் பணம் கட்டி நவம்பரில் அதிலும் தேர்ச்சி பெற்றேன். இது ம்யூனிக் சர்வகலாசாலைக்காக கதே இன்ஸ்டிட்யூட்டால் உலகெங்கும் உள்ள பல தேர்வு மையங்களில் நடத்தப் படும் தேர்வு. விடைத் தாள்கள் ஜெர்மனியில் மதிப்பீடு செய்யப் படும். பூனாவும் தேர்வு மையங்களில் ஒன்று.
அத்துடன் ஜெர்மன் பரிட்சைகள் என்னைப் பொருத்தவரை முடிவுக்கு வந்தன. பிறகு ஜெர்மனில் புத்தகங்கள் படிப்பதே வேலையாகப் போயிற்று. ஆனால் மொழி பெயர்ப்பு வேலைகள் ஒன்றும் இன்னமும் ஆரம்பிக்கவில்லை. அதைச் செய்ய 1975-ல் தான் வாய்ப்பு கிடைத்தது. 1974-ல் எனக்குச் சென்னைக்கே மாற்றல் வந்து விட்டது. தேசிகன்தான் வழக்கம் போல மொழி பெயர்ப்பு வேலைகள் பெறுவதற்கும் உதவினார். எப்போது அவரைப் பார்த்தாலும் என்னுடன் ஜெர்மனிலேயே பேசுவார்.

1975-ல் ஃபிரெஞ்சு கற்பதற்காக சென்னை அல்லியான்ஸ் ஃபிரான்சேஸில் சேர்ந்தேன் அந்தக் கதையை இப்போது பார்ப்போமா?

எந்தக் கோவிலில் வேண்டுமானாலும் கற்பூரம் அணைத்து சத்தியம் செய்வேன். இந்த மொழியை பகுதி நேரத்தில் கற்றுக் கொள்ள அல்லியான்ஸ் ஃபிரான்சேஸை விடச் சிறந்த இடம் வேறில்லை. ஜே.என்.யூ. படிப்பை இதற்குச் சமமாகச் சொல்லலாம். ஆனால் அதில் படிக்க ரொம்ப மெனக்கெட வேண்டும். ப்ளஸ் 2 முடித்த பிறகு பி.ஏ. மற்றும் எம்.ஏ. (ஃபிரெஞ்சு படிக்க வேண்டும்). எல்லோராலும் முடிகிற காரியம் இல்லை.
ஜூலை 1975-ல் செர்டிஃபிகா வகுப்பில் சேர்ந்தேன். ஆசிரியை சாரதா லாற்டே. சாரதா அவர்கள் வகுப்பு எடுப்பதே கவிதை போன்று ஒரு அழகு. மாணவர்களின் சந்தேகங்களை மிக அன்புடன் தீர்த்து வைப்பார். மொத்தம் நான்கு நிலைகளில் மொழி கற்றுக் கொடுக்கப்பட்டது. அவை "செர்டிபிகா", "ப்ரே டிப்ளோம்", "டிப்ளோம்" மற்றும் "டிப்ளோம் ஸுபேரியேர்" ஆகும்.
வாரத்துக்கு நான்கு முறை மாலை வகுப்புகள். ஒவ்வொரு நிலைக்கும் வருடத்தை மூன்றாகப் பிரித்து பிரெஞ்ச் கற்பிக்கப் பட்டது. அவசரக் குடுக்கையான நான் ஆர்வக் கோளாறில் முதல் மூன்று மாதத்திலேயே முதல் நிலைப் புத்தகத்தில் உள்ள எல்லா பயிற்சிகளையும் எழுத்தில் செய்து முடித்து அதன் பின் இரண்டாம் நிலைக்கானப் புத்தகத்தையும் முடித்தேன்.

மூன்றாம் நிலைக்கானப் புத்தகத்தை வாங்கப் போனால் ஒரே ரவுஸுதான், முதல் நிலை மாணவன் மூன்றாம் நிலை புத்தகத்தை எப்படி வாங்குவதென்று. சாரதா அவர்கள் துணையை நாட அவர் அலட்டிக் கொள்ளாமல் தானே அப்புத்தகத்தைத் தன் பெயரில் வாங்கிக் கொடுத்தார். என் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்தார்.

இரண்டாம் நிலைக்கான வகுப்பில் இரண்டாம் டெர்முக்கு வந்தபோது எங்கள் வகுப்பு மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் கலைக்கப்பட்டது. நாங்கள் வேறு வகுப்பு நேரங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமே என்று ஆலோசனை கூறப்பட்டது. ஆனால் என்னால் அது முடியாத காரியமாயிற்று. மறுபடியும் சாரதா அவர்கள் உதவி செய்தார். இரண்டாம் நிலைக்கான மூன்றாவது டெர்மில் என்னை சேர்த்து விட்டார். அந்த ஆசிரியரோ ஒரே வாரத்தில் சாரதா அவர்களை அழைத்து இவனது முன்னேற்றம் ராட்சசத்தனமாக இருக்கிறது, மூன்றாம் நிலைக்கு அனுப்பலாம் என சிபாரிசு செய்தார். சாரதா அவர்களும் என்னை தன் கணவர் நடத்திய மூன்றாம் நிலைக்கான கடைசி டெர்ம் வகுப்பில் சேர்த்து விட்டார். இவ்வாறாக மொத்தம் 4 டெர்ம்கள் தாவல்.நானும் அவர் நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்காமல் அத்தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன் (Tres honorable). இரண்டாம் நிலைத் தேர்வு எழுதவே இல்லை.

நான்காம் நிலைக்கான இறுதித் தேர்வு சமயத்தில் ஸாரதாவும் அவர் கணவரும் ஸ்பெயினுக்கு மாற்றம் பெற்றனர். ஏதோ ஒரு தேவதையைப் போல வந்து சாரதா அவர்கள் எனக்கு உதவிகள் செய்திராவிட்டால் நான் சாதாரணப் பொறியாளனாகவே ஓய்வு பெற்றிருப்பேன். வாழ்க்கை அற்புதமயமானது.

அங்கு தேசிகன், இங்கு சாரதா. அவர் வகுப்பில் வரிசைக் கிரமத்தில் கேள்விகள் கேட்பார். என் முறை வரும்போது மட்டும் என்னை அடக்கி விட்டு என் பக்கத்து மாணவருக்குத் தாவி விடுவார். முதல் முறை நான் திகைப்புடன் பார்த்தபோது என்னிடம் "மற்றவர்கள் முதலில் முயற்சிக்கட்டும், உங்கள் முறை எல்லோருக்கும் கடைசிதான். நீங்கள் விடை கூறி விடுவீர்கள். அதனால் மற்றவருக்குப் பயனில்லை" என்று வேகமாக ஃபிரெஞ்சில் கூறி விட்டார். அடுத்த நாள் ஒரு டெஸ்ட் வைப்பதாக ஒரு சமயம் கூறியபோது நான் அவரிடம் அன்று என்னால் வர இயலாது என்று வருத்தத்துடன் கூற, உடனே டெஸ்டை அதற்கு அடுத்த நாளுக்குத் தள்ளிப் போட்டார். இவரை ஆசிரியையாக அடைய முன் பிறவியில் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
இப்போது திரும்பிப் பார்க்கும்போது நான் ஜெர்மனிலும் ஃபிரெஞ்சிலும் ஒரே யுக்தியைக் கையாண்டுள்ளேன் என்று புரிகிறது. எல்லாப் பாடப் பயிற்சிகளையும் எழுத்து ரூபத்தில் செய்து முடிக்க வேண்டும். சம்பந்தப் பட்ட மொழியில் பேசத் தயங்கவே கூடாது. பாடங்களை வகுப்புக்கு வரும் முன்னரே படித்து வைத்து விட்டால் ரொம்ப உத்தமம். உண்மையைக் கூறப் போனால் வகுப்பு என்னைப் பொருத்தவரை ஒரு விளையாட்டாயிற்று. இங்கும் டிக்டேஷன் ஒரு நண்பனாகவே இருந்தது. இரண்டாம் மாதத்திலேயே நூலகத்திலிருந்துப் புத்தகம் எடுக்க ஆரம்பித்தேன். அவற்றால் என் ஃபிரெஞ்சு இன்னும் கூர்மையடைந்தது. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இங்கும் போதனா மொழி ஃபிரெஞ்சுதான்.

இதெல்லாம் பற்றி இப்பதிவில் கூறியுள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

The learning experience in German and French was wonderful.

Re-blog it again please.. with updates.

Anonymous said...

link for charu's speech -

http://www.sanakannan.com/charu1.html

கோவி.கண்ணன் said...

//முதியவர்கள், மாடிப்படி ஏறக் கஷ்டப்படுபவர்கள் இதை மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்" என்று அப்பதிவில் கூறப்பட்டதை மனதில் வைத்து மூன்று மாடிகள் லிஃப்ட் இல்லாமல் ஏறினால் //

அது முதியவர்களுக்கு கூறப்பட்ட தகவல், 61 வயது இளைஞர் அதையெல்லாம் நினைவில் வைத்திருக்கக் கூடாது.

dondu(#11168674346665545885) said...

//அது முதியவர்களுக்கு கூறப்பட்ட தகவல், 61 வயது இளைஞர் அதையெல்லாம் நினைவில் வைத்திருக்கக் கூடாது//
அதாகப்பட்டது, லிஃப்ட் தேடி டைம் வேஸ்ட் செய்யத் தேவையில்லை என்ற நோக்கத்தில் மட்டுமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Vassan said...

திரு.ராகவன்

உங்களது மொழிகள் கற்றலனுபவம் வியக்கதக்கதாய் இருந்தது.

உடைந்த எஸ்பான்யா (ஸ்பெனிஷ்) வை வைத்து எனது நிறுவன ஆட்களிடம் மல்லுகட்டி வருகிறேன். நேரம் ஒதுக்கி ஒழுங்காக கற்றுக் கொள்ள வாய்க்கவில்லை. இங்கு 48% ஸ்பெனிஷ் உம் பேசுகிறவர்கள். எண்கள் எளிது.

முறையாக கற்றுக் கொள்ளும் போது உங்களுக்கு தெரிவிக்கிறேன். தமிழில் இதற்காக ஒரு பதிவு கூட செய்யலாம்.

வாசன்

அல்புகர்க்கி - நியு மெக்ஸிக்கோ யூ எஸ் ஏ

Anonymous said...

//நான்? கூச்சமா? மூச், பேசப்படாது என்பது என் தாரக மந்திரம். //

தூ. வெக்க‌மாயில்லை?

கோம‌ண‌ராம‌ன்

Anonymous said...

//தூ. வெக்க‌மாயில்லை?//

வெண்ணை... டோண்டு அப்ப‌டியென்ன‌ த‌வ‌றாக‌ எழுதிவிட்டார்? எத‌ற்காக‌ இந்த‌ 'தூ'?

கோம‌ண‌ல‌ஷ்ம‌ண‌ன்

வால்பையன் said...

//முதியவர்கள், மாடிப்படி ஏறக் கஷ்டப்படுபவர்கள் இதை மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்//

ஆனாலும் குசும்பு தான் உங்களுக்கு!

வால்பையன் said...

//ஆனால் தனக்கு நிஜமாகவே பேச வராது என்று கூறிவிட்டு//

உண்மையில் எழுத வராது என்று தான் சொல்லியிருக்க வேண்டும்
(சும்மா தமாஷ்)

வால்பையன் said...

//அதெல்லாம் செய்வதற்கு முன்னால் நிறைய ஹோம் வொர்க் செய்ய வேண்டும்//

நீங்கள் வீட்டிலிருந்தே தான் டைப் செய்கிறீர்கள் அப்படியானால் அது ஹோம் வொர்க் தானே

வால்பையன் said...

//தமிழ் எழுத்தாளர்கள் பற்றி அதிகம் வெளியே தெரிவதில்லை என்பதே. ஒரு சராசரி மலையாள எழுத்தாளருக்கோ, வங்காள எழுத்தாளருக்கோ இந்த பிரச்சினை இல்லை என்றும் கூறினார்.//

உண்மைதான்
ஏனென்றால் அவர்கள் வெளியே தெரிவதில்லை என்று கவலை படுவதில்லை
:)

ரவிஷா said...

//...டிஸ்கிதான் அவரது விஷயத்திலும் என்பதை நிரூபிக்கும் வண்ணம் நன்றாகவே பேச ஆரம்பித்தார்//

அது என்ன "டிஸ்கி"? விளக்கவும்! Please...

dondu(#11168674346665545885) said...

டிஸ்கி என்றால் disclaimer என்று பொருள். முன்ஜாக்கிரதையாக தனக்கு பேசத் தெரியாது என கூறிவிட்டால், ஏதேனும் பின்னால் உளறினாலும், தான் அப்போதே சொன்னதாகக் கூறி கொள்வது எளிதல்லவா?

இதெ டிஸ்கியை வேறுவிதமாக பொருள் அளித்து யாரேனும் கூறலாம் என்ற டிஸ்கியையும் போகிற போக்கில் கொடுத்து செல்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

//"அடுக்கு மல்லி" நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்குமாறு கூறியதை நான் இதற்கு மேற்கோளாகக் காட்டினேன்.//

Vadamalli?

Anonymous said...

//Anonymous said...
//நான்? கூச்சமா? மூச், பேசப்படாது என்பது என் தாரக மந்திரம். //

தூ. வெக்க‌மாயில்லை?

கோம‌ண‌ராம‌ன்

September 22, 2008 2:07 PM


Anonymous said...
//தூ. வெக்க‌மாயில்லை?//

வெண்ணை... டோண்டு அப்ப‌டியென்ன‌ த‌வ‌றாக‌ எழுதிவிட்டார்? எத‌ற்காக‌ இந்த‌ 'தூ'?

கோம‌ண‌ல‌ஷ்ம‌ண‌ன்//


welcome to lakashmanan

fitting reply to ko.ra by ko.la

where is ko.ki?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது