தற்சமயம் நண்பர் இரா. முருகனால் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு ஒன்றை படித்து கொண்டிருக்கிறேன். ஆனால் இப்பதிவு அப்புத்தகத்தின் மதிப்புரை அல்ல. அது பற்றி பிறகு எழுதுவேன். அதில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு பத்தி, அது கிளறி விட்ட எனது நினைவுகள் ஆகியவைதான் இப்பதிவு. அப்பத்தியைப் பார்ப்போமா?
"என்னளவிலே சாகித்யம்னா கவிதை... சங்கீதம்னா இசை... அம்புட்டுத்தான்... முத்துசாமி தீட்சிதர் கிருதி எல்லாம் அவசரத்துக்கு பிடிச்ச கொழுக்கட்டை.ஏதாவது ஊருக்குப் போக வேண்டியது. அங்கே நிச்சயம் கோவில் இருக்கும். உடனே பாடு. இந்த ஊர்... இந்த திசையில் இருக்கு... அம்பாள் பெயர் அது. இத்தனை கை... இந்தக் கையிலே இந்த ஆயுதம். இந்தப் பூ... இந்த நிற உடுப்பு... இந்த ராட்சஸனை வதம் பண்ணினாள். இவளைப் பூஜித்தால் இந்த தோஷம் போகும். இப்படி அடுக்கி குருகுஹான்னு சாப்பா வச்சு முடிச்சுட்டு அடுத்த ஊருக்கு கிளம்பிடுவார்."
அதாவது அவரது கிருதிகளின் ஒரு மேக்ரோ கண்ணோட்டம்தான் அது. என்ன, ஒரே ஒரு விஷயம் விட்டு விட்டார். எல்லா கிருதிகளுக்கும் அவரே ராகம் போட்டிருப்பார், அந்த ராகத்தின் பெயரும் கிருதியில் வந்து விடும். அப்படித்தான் "மாயே" என ஆரம்பிக்கும் கிருதி தரங்கிணி ராகம் என தெரிந்து கொள்ளலாம். மற்றப்படி இதை விட சுருக்கமாக யாரும் எழுத இயலாது. இதைப் போலவே ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் பாடல் பெற்ற தலங்களுக்கும் இம்முறையிலேயே பாட்டு போட்டிருப்பார்களோ? உதாரணத்துக்கு திருமங்கை ஆழ்வார் திருவல்லிக்கேணி வந்த சமயம் கோவில் தல புராணத்தை அறிந்து பாடல்கள் இயற்றியிருப்பார் என கொள்ளலாமோ?
மேலே சொன்ன பத்தியை எனது மைத்துனியிடம் படித்து காட்டியபோது, சென்னை தொலைக்காட்சியில் தயாரிப்பளராக பணி புரியும் அவர் தீட்சிதர் பற்றி மேலும் கூறினார். அவர் சென்னையில்தான் வாசம் செய்தாராம், பத்தொன்பதாம் நூற்றாண்டில். வெள்ளையர்களுடன் ஏற்பட்ட பழக்கம் ஆங்கில இசையின் தாக்கமும் அவருக்கு ஏற்பட்டதாம். அவர் போட்ட இங்கிலீஷ் நோட்ஸ்களைத்தான் தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜி கணேசன் வாசிக்க, வெள்ளையர்கள் நடனம் ஆடுவதாக காட்சி அப்படத்தில் அமைத்திருப்பார்கள். கூர்ந்து கவனித்தால் சி.ஐ.டி. சகுந்தலா குரூப் டான்சர்களில் ஒருவராக வந்திருப்பதை பார்க்கலாம். அப்பாடல் கீழே.
சரி, அதை இப்போதைக்கு விடுங்கள். முத்துசாமி தீட்சிதர் பற்றியும் இப்பதிவு இல்லை. "பின்னே எதை பற்றி எழுத நினைத்துள்ளாய் என்பதை சொல்லித் தொலை" என சலிப்புடன் கூறுவது முரளி மனோஹர். சொல்லாமலா போகிறேன், சொல்வேன்.
அதாவது சிச்சுவேஷனுக்கு தகுந்து பாடல்கள் இயற்றுவது என்பதுதான். இயக்குனர் பாடலாசிரியருக்கு சிச்சுவேஷனைக் கூற கவிஞரும் விறுவிறுவென வரிகளை எழுதித் தர, இது சரியில்லை எனக்கூற உடனேயே வேறு சில வரிகளை எழுதித் தர என தமாஷாக பொழுது போகும். சில சமயங்களில் வரிகள் ரொம்ப யதார்த்தமாக தாங்களே வந்து புகும். உதாரணத்துக்கு சமீபத்தில் 1970-ல் வந்த ஆன் மிலோ சஜ்னா என்னும் படத்தில், மியூசிக் டைரக்டர் கவிஞரிடம் “ஓக்கே, இப்போது செல்கிறேன்” எனக் கூற, அவர் பதிலுக்கு “பிறகு எப்போது சந்திக்கலாம்” என யதார்த்தமாகக் கேட்க அதற்கு பின்னால் வந்த வார்த்தை பரிமாற்றங்களே அந்த சிச்சுவேஷனுக்கு பாடலாக வந்தது என்பதை அக்கால ரேடியோ பேட்டி ஒன்றில் கேட்டிருக்கிறேன். அதுதான் அச்சா தோ ஹம் சல்தே ஹைன் என்னும் பாடல். ராஜேஷ் கன்னாவும் ஆஷா பரேக்கும் விடை கூறி பிரியும் காட்சியில் சேர்த்தார்கள். அப்பாடலில் வந்த வரிகள் தானாகவே வந்து விழுந்தனவாம். அப்பாடலையும் கீழே பார்த்து விடுங்களேன்.
அதே சமயம் சில பாடல் சிச்சுவேஷன்கள் பலமடங்குக்கு வேலை வாங்கும். ஜெமினி கதை இலாக்காவில் வாசனுக்கு வலதுகையாக செயல்பட்டவர் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள். தில்லானா மோகனாம்பாள் கதையை அவர்தான் விகடனில் தொடர் கதையாக எழுதியவர். அவரைப் பற்றி அசோக மித்திரன் அவர்கள் ஒரு இடத்தில் இப்படி வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.
வாசன் ஒரு சிச்சுவேஷனை விவரிக்கிறார். அதாகப்பட்டது ஒரு எலி ஒன்று புலியை கொன்று விட்டதாம். ஆகவே புலிக்குட்டிகள் அனாதைகளாகப் போக அந்த எலியே அவற்றை எடுத்து வளர்த்ததாம். இந்த சிச்சுவேஷனை கூறி, அந்த எலி அப்புலிக் குட்டிகளை எவ்வாறு தாலாட்டு பாடி தூங்க வைக்கும் என கேட்க, கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் நான்கு வெர்ஷன்களில் பாடல் தருவாராம்.
நிஜமாகவே சினிமாவுக்கு பாட்டு எழுதறதுங்கிறது கஷ்டம்தேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்துலிங்கம்
-
கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். திரைப்படங்களில் பாடலாசிரியராகப்
பணியாற்றினார். இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அனைத்திந்திய அண்ணா
திராவிட மு...
23 hours ago
8 comments:
மேலதிகத் தகவல்:-
முத்துஸ்வாமி தீக்ஷிதரின் சகோதரர், பாலுஸ்வாமி தீக்ஷிதர் மணலி முதுகிருஷ்ண முதலியார், வெங்கடகிருஷ்ண முதலியார் ஆகியோரிடமிருந்து பெற்ற ஆதரவின் காரணமாக, ஒரு ஐரோப்பியரிடமிருந்து வயலின் கற்றுக் கொண்டாராம். அவரது விடாமுயற்சியின் காரணமாகவே வயலின் இன்று கர்நாடக சங்கீதத்தின் ஒரு அங்கமாக மாறியுள்ளது. அதற்கு முன்னால்,(1814)கர்நாடக சங்கீதத்தில், வீணை மற்றும் புல்லாங்குழல் ஆகியவை மட்டுமே பக்கவாத்தியமாக இருந்து வந்தன.
வயலின் வந்த பிறகு அது, பக்க வாத்தியம் மட்டுமல்லாது, பக்காவாத்தியமாகவும் ஆகிவிட்டது.
- சிமுலேஷன்
"அவர் சென்னையில்தான் வாசம் செய்தாராம், பத்தொன்பதாம் நூற்றாண்டில். வெள்ளையர்களுடன் ஏற்பட்ட பழக்கம் ஆங்கில இசையின் தாக்கமும் அவருக்கு ஏற்பட்டதாம்."
1. பல ஆண்டுகள் அரசு பணியில் இருந்துள்ளீர்கள், லஞ்சம் வாங்கிய அனுபவம் உண்டா..இல்லை எனில் லஞ்சம் மறுத்த அனுபவம் உண்டா?
2. லக்கிலுக் என்ற பதிவர் தன் பதிவில் பின்னோட்டம் இடுவபர்களை கழிந்து விட்டு செல்கிறார்கள் என்று சொல்கிறார், இது உங்கள் பார்வையில் சரியா தவறா?
3. ரழ்யாவிற்க்கும் அமெரிக்காவிற்க்கு ஆறு வித்யாசம்?
4.தற்போதைய குமுதம் விகடன் இதில் எது பெஸ்ட்?
5.சன் டிவி அழகரி சண்டையில் தங்கள் கருத்து என்ன?
ஒரு படைப்பை உருவாக்குவது என்பது ஒரு கலைஞனுக்கு பிரசவம் போல. அதைத் தூக்கிக் குப்பையில் எறிவது மிகவும் சுலபம். சங்கீத மும்மூர்த்திகளின் படைப்புகள் இலக்கியத்தரம்வாய்ந்தவை அல்ல (அதாவது ஒரு காப்பியமாகவோ,
சங்க நூல்களுக்கு ஒப்பாகவோ சொல்லத் தக்கவை அல்ல).ஆனால், ஒரு 'வாதாபி கணபதிம் பஜே' - பல்லவியை 12 தரம் வேறு வேறு ஸ்வரக் கற்பனைகளில் பாடும்போது சங்கீத அனுபவமும், அல்லது, "ஸ்ரீ சுப்ர மண்யோமாம் ரக்ஷது' வின் பல்லவியில் உள்ள கம்பித கமக சுகம் சங்கீத அனுபவத்தை மட்டுமே தருகிறது. அதில் இலக்கியத்தைத் தேடினால், இரா. முருகனி¢ன்
கதைகளில் இல்லாத ஒன்றைத் தேடுவது போலத்தான். இவ்வளவு ஏன், தமிழ்க் கவிஞர் பாரதியார், 'சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து' என்று எழுத வேண்டும்? தெலுங்கு மொழியில் பாட்டு வடிவம் சிறப்பாக உள்ளதால் தான்.
தமிழ் உரை நடைக்கும், தெலுங்கு பாட்டு நடைக்கும், கன்னடம் நாடக நடைக்கும் ஏற்றவை.ஏதோ ஒரு முருகன் சொல்லி விட்டதால், தீஷிதரின் பாடல்கள் குறைந்து விடப் போவதில்லை. அவசரக் கொழுக்கட்டை ஆகிவிடப் போவதில்லை. தீஷிதர் காலத்தில் அவர் கால் நடையாகச் சென்றுதான்
கோவில்களைத் தரிசித்தார். பஸ், ரயில் இல்லை. நாட்டில் நாக்கு முக்கவுக்கும் ரசிகர்கள் உண்டு, எந்தரோ மகானு பாவுலு' க்கும் ரசிகர்கள் உண்டு. ஆனால், தீஷிதரின் பாடல்கள் 300 வருஷங்களாக பாடப் பெற்று வருகின்றன. முருகனின் இலக்கியங்கள் இன்னும் எத்தனை வருஷங்கள் தாக்குப்
பிடிக்கின்றன பார்ப்போம். நான் இன்னும் அவரது கதைகளைப் படித்ததில்லை.
மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா என்று ஒருவர் இருந்தார். காவேரியின் குறுக்கே கண்ணம் பாடி அணையைக் கட்டிய இஞ்சினீயர். தமிழைப் பற்றி அவரது கருத்து. 'ஒரு தகர டப்பாவில் கூழாங்கற்களைப் போட்டு குலுக்கினால் எப்படி இருக்குமோ அது மாதிரிதான் தமிழைக் கேட்கும் போது எனக்குக் கேட்கிறது' இதனால் தமிழ் என்ன குறைந்தா போய் விட்டது?
தவறாகப் புரிந்து கொண்டீர்கள் ரங்குடு அவர்கெளே. தீட்சிதரை மட்டம் தட்டும் நோக்கம் நிச்சயம் இரா. முருகனுக்கு இல்லை. நான் குறிப்பிட்ட அப்பத்தி, அவரது ஒரு கதையில் ஒரு பாத்திரம் இண்டர்வ்யூ சமயத்தில் கூறுவதாக அமைந்துள்ளது.
நான் சொல்ல வந்த விஷயமும் வேறுதான். இம்மாதிரி ஒட்டுமொத்தமாக சம்மரைஸ் செய்து யாரைப் பற்றி வேண்டுமானாலும் எழுதி விடலாம். அவ்வாறுதான் பலரும் பலரைப் பற்றி கூறி வந்திருக்கிறார்கள். அதைத்தான் முருகன் அவர்களின் இப்பத்தி சுட்டிக் காட்டுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எனக்கு சங்கீதமும் தெரியாது , தீட்சிதரையும் தெரியாது,
பின்ன என்னத்த சொல்ல.
தமிழகத்தில் மெட்டுக்கு வேகமாக பாட்டேழுதுவதில் கண்ணதாசனும் பின்னே வாலியும் சிறந்தவர்கள் என கேள்விபட்டிருக்கிறேன்
இரா. முருகன் கலக்கலாக எழுதி இருக்கிறார்!
ரங்குடு அவர்கள் சொன்னது ஓரளவு சரிதான்...கர்நாடக இசையாவது பரவாயில்லை.
ஹிந்துஸ்தானி இசையில் அவர்களுக்கு சாஹித்யம் (மொழி) என்பது Least priority ..
ஒரு மூன்று வார்த்தையை வைத்து மூன்று மணி நேரம் ஓட்டி விடுவார்கள். சங்கீதத்திற்கு
முக்கியத்துவம் கொடுக்கும் போது சாஹித்யத்தின் முக்கியத்துவம் சிறிது குறைந்து தான்
விடுகிறது. (தாளத்துக்கு ஒத்து வர வேண்டும் என்பதாலும், நிரவல் செய்ய வேண்டும்
என்பதாலும்) ..கர்நாடக இசையில் வர்ணங்கள் என்ற ஒரு இசைவகை உண்டு. அங்கே
ராக லட்சணம் தான் முக்கியமே தவிர சாஹித்யம் ஏதோ ஒப்புக்கு தான் இருக்கும்
(சரசுட, சாமி, சிறுனவ்வு, நின்னே கோரி போன்ற பதங்களே திரும்பத் திரும்ப வரும்).ஆனால்
தீட்சிதர் பாடல்களை ஏதோ ஒப்புக்கு எழுதினார் என்பது கண்டிக்கத்தக்க ஒரு விஷயம்.
அவரின் பாடல்களில் உருக்கம் இல்லாவிட்டாலும் மொழிநடை அபாரமாக இருக்கும்
. வார்த்தை பிரயோகங்கள், எதுகைகள், மோனைகள், சந்தங்கள், சாஹித்யத்தோடு ராக முத்ரிகையை
பொருத்தும் அழகு இப்படியெல்லாம். ரா. முருகன் என்ற ஆசாமி தீக்சிதரின் எல்லா
கிருதிகளையும் வரிவிடாமல் படித்திருப்பாரா இல்லை வெறும் அமெச்சூரா என்று தெரியவில்லை.
தீட்சிதரின் மொழி ஆளுமையோடு ஒப்பிடும் போது ஏழை பிராமணரான த்யாகராஜர் இயற்றிய பாடல்களில் அந்த அளவு எதிர்பார்க்க முடியாது தான். ஆனால் அவரது
உருக்கம் நிறைந்த பல பாடல்கள் கேட்பவரின் இதயத்தை உருக்கி கண்ணீராக
உருகச் செய்யும்..
@சமுத்ரா
ரங்குடுவுக்கு நான் கூறிய பதில்தான் உங்களுக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment