9/11/2008

தொடரும் உத்தபுரம் ஸ்டைல் கூத்துக்கள்

உத்தபுரம் நிகழ்வுகள் சம்பந்தமாக நான் இட்ட பொங்கி எழுங்கள் தலித் நண்பர்களே பதிவில் குறிப்பிட்டிருந்தவை மறுபடியும் சேலம் கந்தம்பட்டியில் நடந்துள்ளன. அது பற்றி குமுதம் ரிப்போர்டரில் (14.09.2008) தலித்துகளின் ஆலயப்பிரவேசம் என்னும் தலைப்பின்கீழ் வந்துள்ள செய்தி கீழே தடித்த சாய்வெழுத்துக்களில் தரப்பட்டுள்ளது.

சேலம் கந்தம்பட்டியைச் சேர்ந்த வன்னிய மக்கள் தங்களின் குலதெய்வமாகத் திரௌபதியம்மனுக்குத் தனியே கோயில் கட்டி வழிபட்டு வந்தனர். வன்னியர்கள் மட்டும் வழிபட்டு வந்த இந்தக் கோயிலுக்குள் நுழைந்து வழிபட கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தலித்துகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதைக் கண்டித்துப் போராட்டத்தில் இறங்கினர் அங்குள்ள தலித் இளைஞர்கள். அவர்களுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளும் களத்தில் இறங்கினர்.

`தலித்துகள் கோயிலுக்குள் நுழையவே கூடாது, உயிரைக் கொடுத்தாவது அதனைத் தடுப்போம்' என்று வன்னியர் தரப்பும் மார்தட்ட, கந்தம்பட்டியில் அமைதி குலைந்து பதற்றமான சூழல் உருவானது. இதற்கிடையே கடந்த ஆண்டு ஆலய நுழைவுப் போராட்டம் அறிவித்து கோயிலுக்குள் நுழைவதாக அறிவிப்புச் செய்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் திருமாவளவன் கடைசிநேரத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் கோயில் மாவட்ட நிர்வாகத்தால் இழுத்துப் பூட்டப்பட்டது. திருமாவளவன் இதுகுறித்து பொதுநல வழக்கொன்றினை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து, கோயிலைத் திறக்கக் கோரியிருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றமும் கோயிலைத் திறக்கவும் அதில் தலித்துகள் நுழைந்து வழிபடவும் அனுமதியளித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தர விட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து தலித் தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்திய சேலம் போலீஸ் கமிஷனர் வன்னியபெருமாள் செப்டம்பர் எட்டாம்தேதியை கந்தம்பட்டி திரௌபதியம்மன் கோயில் மீண்டும் திறக்கப்படும் நாளாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கில் போலீஸார் கந்தம்பட்டியில் குவிக்கப்பட்டனர். `எங்களைக் கலந்தாலோசிக்காமல் காவல்துறையும், வருவாய்த்துறையும் இப்படி ஒரு முடிவை எடுத்தது நியாயமேயில்லை' என்று குற்றம் சாட்டிய வன்னியர்கள், இதைக் கண்டிக்கும் விதமாக கந்தம்பட்டியை விட்டே வெளியேறிவிடுவது எனக் கூடிப் பேசித் தீர்மானித்தனர்.

செப்டம்பர் ஏழாம் தேதி மாலையில் தங்களுடைய வீடுகளைப் பூட்டிக் கொண்டு தாங்கள் வளர்த்து வந்த கால்நடைகளையும் தங்களுடன் அழைத்துக் கொண்டு கந்தம்பட்டியைச் சேர்ந்த வன்னிய மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறத் தொடங்கினர். சேலத்திலிருந்து ஏறத்தாழ சுமார் இருபது கி.மீ. தொலைவில் இருக்கும் கஞ்சமலைப் பகுதியை நோக்கி அவர்கள் பயணிக்கத் தொடங்கினர்.

இதைக் கேள்விப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் ஊரைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்த அவர்களை நாம் பாதி வழியிலேயே மடக்கிப் பேச்சுக் கொடுத்தோம்.

கந்தம்பட்டி திரௌபதியம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவரான மணி, "நாங்கள் கட்டிய கந்தம்பட்டி திரௌபதியம்மன் கோயிலை, எங்களுக்கு உரிமையுடைய டினாமினேஷன் கோயிலாக அறிவிக்கக் கோரி நாங்கள் தொடர்ந்திருக்கும் வழக்கு சேலம் நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில்தான் இருக்கிறது. அதன் தீர்ப்பு வருமுன்னரே பொதுநல வழக்கொன்றில் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. இதைப் பற்றி இரு தரப்பிடமும் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டிய காவல்துறை மற்றும் வருவாய்த்துறை ஆகியவை தலித்துகளிடம் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி எட்டாம் தேதி கோயிலைத் திறப்பதாக அறிவித் திருக்கிறது. இது எங்களுக்கு மனவேதனையை அளிப்பதாக உள்ளது. எங்களுக்கு உரித்தான கோயில் என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் என்று கட்டாயம் நாங்கள் நம்புகிறோம். அப்படி அறிவிக்கப்பட்ட பிறகே நாங்கள் மீண்டும் கந்தம்பட்டிக்குத் திரும்பப் போகிறோம்'' என்றார். தற்போது கஞ்சமலைப் பகுதிக்குச் சென்றுவிட்ட கந்தம்பட்டி வன்னியர்கள் அங்கேயே உணவு சமைத்துச் சாப்பிட்டுப் பிடிவாதமாகத் தங்கியிருக்கிறார்கள்.

கோயில் திறப்புநாளாக அறிவிக்கப்பட்டிருந்த எட்டாம் தேதியன்று காலையில் இருந்தே அதிக எண்ணிக்கையில் போலீஸார் குவிக்கப்பட, கந்தம்பட்டியில் பரபரப்பு கவ்விக் கொண்டது. காலை 10.20 மணியளவில் கந்தம்பட்டி தலித்துகள், தாங்கள் வசித்து வந்த பகுதியில் இருந்து ஊர்வலமாக மாலைகளுடன் பழத்தட்டுகளை ஏந்தி திரௌபதியம்மன் கோயிலுக்கு உற்சாகத்துடன் கிளம்பிச் சென்றனர். ஒன்றரை ஆண்டுக்கும் மேலாகப் பூட்டியே கிடந்ததால் குப்பை மண்டிக் கிடந்த கோயிலை அவசரகதியில் சுத்தம் செய்து தூய்மையாக்கினர்.

ஏதாவது அசம்பாவிதம், கலவரம் என்றால் அதனையும் சமாளிக்கும் விதத்தில் ஆயுதங்கள், தலைக் கவசங்கள், கண்ணீர்புகைக் குண்டுகள் சகிதம் போலீஸார் தயாராக நிறுத்தப்பட்டிருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்க ஈரோடு எஸ்.பி. அவினாஷ்குமாரும், சேலம் போலீஸ் கமிஷனர் வன்னியபெருமாளும் வந்திருந்தனர்.

சென்னை உயர்நீதிமன்றம் கோயில் திறப்பு சமயத்தில் கடைப்பிடிக்க வேண்டுமென சில நெறிமுறைகளை அறிவுறுத்தியிருந்தது. கோயிலுக்கு வழிபட வருபவர்கள் `ஊர்வலமாக வரக் கூடாது. கொடிகள், பேனர்கள் முதலியவற்றை ஏந்தி வரக் கூடாது. கோஷங்கள் எதனையும் எழுப்பக் கூடாது' போன்ற விதிமுறைகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரால் அப்பட்டமாக மீறப்பட்டது. தங்களுடைய பகுதியில் இருந்து ஊர்வலமாகக் கிளம்பிய விடுதலைச் சிறுத்தைகள் கோயிலுக்குள் நுழைந்து வழிபட்ட சமயத்தில், மறைத்து எடுத்து வந்திருந்த தங்களது கட்சிக் கொடிகளை அம்மனின் சன்னதிக்கு முன்பாகத் தூக்கிக் காட்டி உற்சாகமாகக் குரலெழுப்பி அதிர வைத்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக, ஆலய எல்லைக்குள் நின்றவாறே `வீரவணக்கம் வீரவணக்கம்' என்று கோஷமிட்ட அவர்களைத் தடுத்து வெளியேற்றுவதற்கு போலீஸ் பெரும்பாடு பட வேண்டியிருந்தது.

"இது அண்ணன் திருமாவளவனுக்குக் கிடைத்திருக்கும் சிறப்பான வெற்றி'' என்றார் கந்தம்பட்டி 24-வது டிவிசனின் விடுதலைச் சிறுத்தைகள் செயலாளரான கண்ணன். "எங்களைக் கருவறைக்குள் நுழைய போலீஸ் அனுமதி மறுத்து விட்டது. அதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். நாங்கள் வழிபட வருவதால் கோயில் பூசாரி இன்றைக்கு கோயிலுக்கே வராமல் தவிர்த்து விட்டார். இரு தரப்புக்கும் பொதுவான பூசாரி ஒருவரை அரசு நியமித்து பூஜைகளை நடத்திட வேண்டும்'' என்றார் தலித் தரப்பினைச் சேர்ந்த பெரியதனக்காரரான கணேசன்.

சேலம் மாவட்ட இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாநகரச் செயலாளரான இமயவரம்பன் "நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீஸின் அச்சுறுத்தலுக்குப் பயந்துதான் வன்னியர்கள் நாங்கள் கோயிலுக்குள் நுழைவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. எனவே இது நிஜ வெற்றியல்ல. வன்னியர்கள் மனம் திருந்தி எங்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும்'' என்றார்.

கோயிலுக்குள் நுழைந்து விட்டு வெளியேறிய தலித்துகளைப் பார்த்து ஏகவசனத்தில் பேசினர் சில வன்னியர் தரப்பினர். உடனே இருதரப்பிலும் திமிறிக் கொண்டு பாய்ந்தவர்களை போலீஸ் தடுத்து நிறுத்தியிருக்காவிட்டால் போர்க்களக் காட்சிகள் அங்கு அரங்கேறியிருக்கும். `கோயில் இருந்தாத்தானேடா நீங்க இங்க வந்து கும்புடுவீங்க. கோயிலையே இடிச்சிட்டா என்ன பண்ணுவீங்க?' என்று வன்னியர்கள் கொந்தளிப்பாகக் கொட்டிய வார்த்தைகளை உளவுத்துறையினர் மிகவும் உன்னிப்பாகக் குறிப்பெடுத்துக் கொண்டனர்.
ஸீ சூர்யா
படங்கள் : விஜய்


இப்போது டோண்டு ராகவன். மேலே சுட்டப்பட்ட எனது உத்தபுரம் நிகழ்ச்சி சம்பந்தமான பதிவிலிருந்து சில வரிகள்.
"அரசின் செயல்பாடுகள் வெறுமனே எதிர்வினைகள் புரிவதாகவே உள்ளன. இந்த கலெக்டருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? வெளியில் போய் எவ்வளவு நாட்கள்தான் உட்கார முடியும்? அவ்வாறு சென்றவர்களில் யாரேனும் அரசு ஊழியர்கள் இருந்தால் அவர்களை முதலில் வேலையை விட்டு தூக்க வேண்டும். அது முடியாவிட்டால் வேறு ஏதாவது ஊருக்கு மாற்றல் செய்ய வேண்டும். அவனவன் சொந்த ஊரில் பல பகுதி வேலைகள் பார்த்து கொண்டு அரசிலும் வேலை செய்து பல சம்பளங்கள் வாங்குகிறார்கள். இந்த மாற்றலே பெரிய தண்டனையாக அவர்களுக்கு இருக்கும். ஊருக்கே பொது அபராதம் விதிக்கலாம். எடுத்துக்காட்டு தண்டனையாக (Exemplary punishment) பெரிய அளவில் தந்தால் மற்ற ஊர்களில் வன்கொடுமை செய்பவர்களும் யோசிப்பார்கள். தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை தரும் வாக்காளர் பட்டியலிலிருந்து பெயரை எடுப்பது பற்றிக் கூட யோசிக்கலாம்".

இப்போதாவது அரசு முன்னால் செய்த தவற்றை செய்யாமல் இருக்க வேண்டும். போனவர்களை கண்டு கொள்ளாமல் விடுவதே நலம். எவ்வளவு நாளைக்குத்தான் அடாவடி செய்ய இயலும்? அரசு செய்யுமா?

குறைந்த பட்சம் தலித்துகளாவது தங்கள் நிலையை மேம்படுத்தும் முயற்சியில் இறங்க வேண்டும். அது பற்றி நான் அதே உத்தபுரம் சம்பந்த பதிவில் எழுதிய வரிகள் இதோ. அவற்றில் ஒரு மாற்றமுமில்லை.

"தலித்துகளும் தத்தம் நிலையை உயர்த்த பாடுபட வேண்டும். என்ன நடக்கிறது என்றால் அவர்களில் பலர் ஒரு மொந்தை கள்ளுக்கும் ஒரு வேளை அசைவ சாப்பாட்டுக்கும் தங்கள் உழைப்பை வழங்கி விட்டு சென்று விடுகின்றனர். அதிலும் தங்கள் சகோதரர்களையே ஆண்டைக்காக அடிப்பதும் நடக்கிறது. பார்த்திபன் நடித்த பாரதி கண்ணம்மா இதை சரியான பார்வை கோணத்தில் காட்டாவிட்டாலும் காட்டிய அளவிலேயே மனதை பாதித்தது. அக்கொடுமையை பற்றி சரியாகக் கூறாது பூசி மொழுகிவிட்டு மீனாவுக்காக உடன்கட்டை ஏறுவது போன்ற அபத்த காட்சி.

பெற வேண்டிய கூலி கிடைக்கவில்லையென்றால் வேலை செய்ய முடியாது என்று இருப்பதே உத்தமம். மிகக் கடினமான செயல்தான் இருந்தாலும் ஏதேனும் பெரிய அளவில் இவ்வாறு செய்ய வேண்டும். அவர்களிலேயே படித்து பெரிய நிலைக்கு வந்து விட்டவர்கள் தங்களது ஏழை சகோதரர்களிடமிருந்து விலகி நிற்பது துரதிர்ஷ்டவசமானது.

இந்த இடத்தில் நாடார்கள் உதாரணம் மனதில் கொள்ளத்தக்கது. தலித்துகளைப் போலவே வன்கொடுமை செய்யப்பட்டவர்கள் இன்று தங்கள் சமுதாய ஒற்றுமையால் தலை நிமிர்ந்து நிற்கின்றனர். ஆகவே தலித்துகளால் இதெல்லாம் முடியாது எனக் கூறுவது சரியாக இருக்காது. முதலில் தங்கள் சுயமரியாதையை காப்பாற்றி கொள்ளட்டும்".

அன்புடன்,
டோண்டு ராகவன்

14 comments:

Anonymous said...

டோண்டு சார்,
தங்களின் மனித நேய உணர்வு தங்களின் பதிவுகளில் தெளிவாய் தெரியும் போது ஒரு சிலர் தங்களை தூற்றுவது ஏன் எனப் புரியவில்லை.

பல தலைமுறைகளாய் பல ஆதிக்க சக்திகளின் கட்டுப்பாட்டில் அடிமையாய் இருந்த சமூகம் கடந்த 50-60 ஆண்டுகளாக சுதந்திரக் காற்றை சுவாசிக்க தொடங்கியுள்ள நிலையில்
ஆலயம் தொழக்கூட நீதிமன்ற ஆணையை எதிர் பார்க்க வேண்டியுள்ளதே?

பரந்த பூமியில்
சுவாசிக்கும் காற்று பொது
குடிக்கும் தண்ணிர் பொது
அடங்கும் பூமி பொது
உதிக்கும் சூரியன் பொது

பின் ஏன் இந்த வேண்டாத விவாதம்.

இதை அனைவரும் உணர வேண்டும்.

ஒரு ஊரில் வசிக்கும் முற்பட்டோர்,பிற்பட்டோர்,தலித்துகள்
சுவாசித்து உயிர் வாழ்வது ஒரே காற்றை (oxygen)வைத்துதான்.

ஒரு பிரிவினர் குடிக்கும் தண்ணிர் வேர்வையாய் வெளி வந்து ஆவியாய் மாறி பின் குளிர்ந்து மழையாய் பொழிந்து ஆற்று நீராய் மற்றோரு பிரிவினருக்கும் குடி நீராகிறது.


இயற்கயே அனைவரையும் ஒன்றாய் பாவிக்கும் போது மனிதன் பேதம் பார்க்கலாமா?

Anonymous said...

நீங்க என்ன தான் மத்த பிசி எம்பிசி காரனுவ ஜாதி வெறி பத்தி சொன்னாலும் நாங்க கண்டுக்க மாட்டோம். ஏன்னா அவங்க ஓட்டை பணத்தை ஆதரவை வாங்கித்தான் நாங்க வண்டி ஓட்டணும்.

ஆனா ஜாதியை எதிர்த்தாகணுமே? இல்லாங்காட்டி எங்க பகுத்தறிவ எப்படி நிருபிக்கறது? அதுக்குத்தான் பார்பன எதிர்ப்பு படம் ஓட்டுறோம்!

ஆக நீங்க என்ன சொன்னாலும் எங்க ஜாதி எதிர்ப்பு பார்பன எதிர்ப்ப தாண்டாது தாண்டாது.

குடுகுடுப்பை said...

டோண்டு ஐயா, இதை வைத்து நான் ஒரு கதை எழுதியிருக்கிறேன் வந்து பாருங்கள்.

சாதிகளற்ற இந்து மதம் ஒரு நாள் வரும் என நம்புவோம்

Anonymous said...

நோண்டு சார் இன்னைக்கு கேள்வி பதில் எதுவும் ஸ்டாக் இல்லையா?

Anonymous said...

டோண்டு அவ‌ர்க‌ளே, ஆத்திர‌ப்ப‌டாம‌ல் கூற‌வும்!! அந்த உய‌ர்சாதிக்கார‌ர்க‌ள் 'யாரிட‌மிருந்த்து' இந்த‌ சாதிக்கொடுமையை க‌ற்றுக்கொண்டிருப்பார்க‌ள்? மூல‌ கார‌ண‌ம் யார்??!!! உங்க‌ளுக்கே விடை தெரியுமே!!!

கோம‌ண‌கிருஷ்ண‌ன்

Anonymous said...

//உய‌ர்சாதிக்கார‌ர்க‌ள் 'யாரிட‌மிருந்த்து' இந்த‌ சாதிக்கொடுமையை க‌ற்றுக்கொண்டிருப்பார்க‌ள்? மூல‌ கார‌ண‌ம் யார்??!!! உங்க‌ளுக்கே விடை தெரியுமே!!!//

அதானே? யாரிடமிருந்து?

அவரவர் பாட்டன் முப்பாட்டன் போன்ற மூதாதையர்களிடமிருந்து தான்! இது கூடத் தெரியாதா, கோமணகிருஷ்ணன்?!

நல்ல விஷயம்ன்னா மட்டும், "எல்லாம் எங்க மூதாதையர்கள் கிட்ட, எப்போதும் இங்கனயே இருந்திச்சி", கெட்ட விஷயம்ன்னா உடனே, "ஆரியர்கள், பார்ப்பனர்கள்"-ன்னு ஆரமிச்சிட வேண்டியது!

ஆங்கிலேயன் நம்மை நூற்றாண்டுகள் ஆண்டான். உண்மை. நம்மைச் சுரண்டினான். உண்மை. நமக்கு சில நன்மைகளும் அவனால் நடந்தன. அதுவும் உண்மை தான். ஆனால், விடுதலை அடைந்து மக்களாட்சி மலர்ந்த பின்பு, அவனால் கிடைக்கப் பெற்ற நல்ல விஷயங்களை மூலதனமாக வைத்தும், நமது ஆற்றலாலும் ஒரு சமூகமாக முன்னேறுவதில் கவனமாக இருப்பதே அறிவார்த்தமே தவிர, இன்றைய அரசியல்வாதிகளின் கயமைகளுக்கெல்லாம், இதெல்லாம் "யாரிடமிருந்து கற்றுக்கொண்டார்கள்" என்று, ஆங்கிலேயன் மேல் பழி போட முனைவது, நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட "நம்" பிரதிநிதிகளின் செயல்பாடுகளுக்கு நாம் நியாயமாக ஏற்க வேண்டிய பொறுப்பை அடாவடியாகத் தட்டிக் கழிப்பதேயாகும்; திசை திருப்புவதே ஆகும். அப்படிச் செய்தால் அத்தகைய போக்கு நம் யாரையுமே முன்னேற விடாது. அதே போலத் தான் இதுவும்.

முதலில், தன் செயலுக்கும் அதன் விளைவுகளுக்கும், தட்டிக்கழிக்காமல் பொறுப்பேற்றுக் கொள்ள எல்லாருமே (ப்ராம்மணர்களையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்) முன்வர வேண்டும்.

யாரிடமிருந்து கற்றுக்கொண்டிருப்பார்கள்ன்னு கேக்குறீங்களே, அப்போ அவங்க என்ன சுயமா சிந்திக்கத் தெரியாத பேதைகளா? "சுயமரியாதை" என்பது சுயசிந்தனையிலிருந்தும் பொறுப்பேற்கும் தன்மையிலிருந்தும் தோன்றுவது. ('பழி' ஏற்றுக் கொள்வது வேறு; 'பொறுப்பு' ஏற்றுக் கொள்வது வேறு.)

பிரச்சனையைப் "பகுத்து" எங்கு சிக்கல் என்பதை "அறிய" முனையாமல், எதற்கெடுத்தாலும் ஏதோ ஒரு சாராரை மாத்திரம் குற்றஞ்சாட்டிக் கொண்டிருப்பதிலிருந்து அல்ல. (பயங்கரவாதம் எங்கு நடந்தாலும், அதற்கு உடனே இஸ்லாமியர்களைப் பொத்தாம்பொதுவாக சாடுவதையும் நான் இவ்வாறே பார்க்கிறேன்.) இது ஒரு மனவியாதி. இதிலிருந்து நாம் அனைவருமே விரைவில் வெளிவருவது, நம் அனைவருக்குமே நன்மை பயக்கும்.

//டோண்டு அவ‌ர்க‌ளே, ஆத்திர‌ப்ப‌டாம‌ல் கூற‌வும்!!//

கோமணகிருஷ்ணன் அவர்களே, ஆத்திரப்படாமல் யோசிக்கவும்! ஒரு சாரார் சதுர்வர்ணப் பிரிவுகளுக்குப் பொறுப்பேற்க முன்வந்தால், மற்றொரு சாரார் இங்கு ஏற்கெனவே நிலவி வந்த நூற்றுக்கணக்கான சாதிகளுக்குப் பொறுப்பேற்க முன்வருவார்களா? (சாதிகளும் வெளியிலிருந்து தான் வந்தன என்று நிறுவ முயலாதீர்கள்; நியாயமாகப் பொறுப்பேற்பது இங்கிருந்தே துவங்கலாம்.)

-முத்துஸ்வாமி.

வால்பையன் said...

இந்து மதத்தில் இருக்கும் பெரிய கேலிக்கூத்து இதுதான்.
மாற்ற எந்த மதத்திலும் சாதி வித்தியாசம் பார்த்து வழிபாட்டு தளங்களுக்குள் அனுமதிப்பதில்லை. இங்கே மட்டும் தான் இந்த கொடுமை.

இந்து அறநிலைத்துறை எதற்கு இருக்கிறது? இது நாங்கள் கட்டிய கோயில் என்று எப்படி அவர்களால் சொந்தம் கொண்டாட முடிகிறது. இது இந்த வருடத்தில் இரண்டாவது சம்பவம். மக்கள் நல்லவர்கள் தான், வேறு யாரோ பெரிய தலைகள் இதை தூண்டி விடுகின்றன என்று நினைக்கிறேன்

Anonymous said...

//
இந்து மதத்தில் இருக்கும் பெரிய கேலிக்கூத்து இதுதான்.
மாற்ற எந்த மதத்திலும் சாதி வித்தியாசம் பார்த்து வழிபாட்டு தளங்களுக்குள் அனுமதிப்பதில்லை. இங்கே மட்டும் தான் இந்த கொடுமை.
//

ஹெ ஹெ ஹெ...!

குழந்தை மாதிரி இருக்கீங்களே, ரொம்ப நல்லவங்க சார் நீங்க.

தமிழகத்தில் மட்டுமல்லாமல், பல மாநிலங்களில் உள்ள சர்ச்சுகளில் கூட்டுப் பிரார்தனை செய்வதெல்லம் சாதிப்பிரிவைப் பொருத்துத்தான் அமைகிறது.

சாதி என்பது இந்து மதத்துக்கு மட்டுமே உரியது அல்ல. சாதி ஒரு சமூகப்பிரச்சனை.

Anonymous said...

இந்தியாவும் விடுதலைபுலிகளும்

சென்ற வாரம் வழக்கம் போல விடுதலை புலிகளுக்கும் சிங்கள் ராணுவத்திற்க்கும் நடந்த சண்டையில் இரண்டு இந்தியர்கள் காயமாம் .

இலங்கை பிரச்சனை என்பது இடியாப்ப சிக்கல்களை விட மிக மிக சிக்கலானது. கூடவே அங்கு நடக்கும் போராட்டம் அல்லது வன்முறை யாருக்காக என்பதும் படு படு குழப்பமானது..


தமிழ் மக்களுக்காகவா??

அப்ப ஏன் இந்தியாவில் இருந்து பிரிட்டிஸ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்து அழைத்து செல்லபட்ட கூலி தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து அந்நாட்டின் அந்நிய செலாவாணியை உயர்த்தினார்களே..அவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா???

அப்போது எல்லாம் ஏன் சண்டை வரவில்லை??


அந்த தேயிலை தொழிளார்கள் நிலை அடிமைக்கு கீழான நிலை..அவர்களுக்கு எந்த வித உரிமையும் கிடையாது ..ஓட்டுரிமை உட்பட.

அவர்களை சில பேரை தந்திரமாக இந்தியாவிற்க்கு திரும்ப அனுப்ப இலங்கை அரசாங்கம் முடிவு செய்த போது அதற்க்கு ஒத்து ஓதியது இந்த யாழ்பாண தமிழர்களே ...அல்லது இவர்களால் தேர்ந்து எடுக்கபட்டவர்கள்..

இன்று கூட மலையக தமிழர்கள் என்று அழைக்க படும் அவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்று தெரியவில்லை..

தமிழ் ஈழம் உருவானால் யாழ்பாண தமிழர்களுக்கு நிகரான மக்கள் தொகையில் இருக்கும் இவர்கள் கதி என்ன??


இந்த தமிழ் விடுதலை இயக்கங்கள் தோன்றியத்ற்க்கு காரணம் என்வென்றால் இட ஒதுக்கீடு என்ற அரசின் நிலை...அதை நேரம் கிடைத்தாம் பின் பேசலாம்..

ராஜீவ் படுகொலை.. பத்மநாபா முதல் அமிர்ந்தலிங்கம் வரை கொன்ற மாவீரர்கள் இவர்கள்..

இந்திய படைகளை பின்னால் இருந்து தாக்கிய கோழை புலிகள்..

சரி உங்களை தினமும் எவனோ ஒருவன் யார் என்ற முகம் தெரியாமல் சொல்லி கொள்ளாமல் பின்னால் இருந்து உங்களின் நடு மண்டையில் கல் எரிந்தால் என்ன செய்வீர்கள்??

காக்க போன ரானுவத்தை எதிரிகளாக ஆக்கிய மிக பெருமை இந்த புலிகளுக்கு உண்டு. பின்னால் இருந்து தாக்குவது வீரமாம்.. அதுவும் தற்கொலை படை எல்லாம் வீர காவியவாம்

பிரபாகரன் மகன் அலல்து மகளை எல்லாம் இப்படி தற்கொலை படை ஆக விட வேண்டியது தானே.. ஏன் அவர்களுக்கு மட்டும் லண்டனில் சொகுசு வாழ்க்கை??


சரி அப்ப என்னதான் முடிவு??

விடுதலைபுலிகளை அழிக்க யாராலும் முடியாது....உலக தமிழ் அகதிகளின் எண்ணிக்கை பெருக பெருக அவர்கள் பலம் பெருக தான் செய்யும்.. கூடவே நார்வே ஒத்தாசை செய்த கதை நினைவுக்கு வருகிறது. ஒஸ்லோவில் சட்டம் ஒழுங்கு நிலை படு மோசம்

காரணம் யார் .. நம்ம இலங்கை தமிழ் காரர்கள் தான்..

சரி இந்த பிரச்சனை தீர்ந்தா அப்படியே எல்லா அகதி என்று சொல்லி வந்தவங்களை எல்லாம் அனுப்பி வைத்து விடலாம் என்ற தன் உள் நாட்டு குழப்பத்தில் தான் நார்வே உதவிக்கு வந்தது..

பணக்கார அகதிங்க எல்லாம் ஐரோப்பாவுக்கு தான் போறாங்க..ஏழை அகதிங்க இந்தியாவிற்க்கு வராங்க..

ஏங்க சார் ..ஏன் சார் அகதி என்பது உயிர் பிழைக்க தஞ்சம் கேட்பது.. ஏன் உங்க ஆளுங்க எல்லாம் பணக்கார நாடுகளுக்கே உயிரி பிட்சை கேட்க்கறீங்க??? இணையங்களில் சம்ம டக்கரா தமிழ் புலின்னு கலக்கிறீங்க..

ஏங்க அகதின்னு ஓடுறீங்க உங்களூக்கு ஏன் பணக்கார நாட்டுக்கு ஓடுறீங்க,,சோமாலியா எத்தியோப்பியாவிக்கு எல்லாம் அகதியா போக வேண்டியது தானே??



இந்த போரை காட்டி புலம் பெயறந்தவர்கள்.. அதாவது வேலை தேடி வெளிநாட்ட்க்கு குறுக்கு வழியில் சென்றவர்கள் இருக்கும் வரை இந்த போர் ஒயாது..

இந்தியாவின் நிலை என்ன?


தமிழ் நாட்டின் தென் பகுதியில்

கல்பாக்கம், கூடங்குளம் தொடங்கி திருவனந்தபுரம் வரை பல நாட்டின் முக்கியதுவம் வாய்ந்த இடங்கள் உள்ளன. இந்த இடங்களை எல்லாம் அன்னிய நாட்டு அரசுகள் வேவு பார்க்க அனுமதிக்க கூடாது. கூடவும் இந்த இடங்களில் அந்நிய நாடுகளின் பார்வையும் பட கூடாது..

விடுதலைபுலிகளும் சிங்கள் ரானுவமும் இரு தரப்பும் நம்பிக்கைக்கு உரியவர்கள் இல்லை..

சிங்கள் தரப்பு தொடர்பாக நமக்கு ஏற்கனவே தெரியும்

விடுதலைபுலிகள் தரப்பும் அப்படியே

அவர்களின் தமிழ் துரோக கொலைகள் எல்லாம் நமக்கு தொடர்பில்லாது விட்டு விடுவோம்..

நாங்களும் சிங்களவர்களும் சகோதரர்கள் இந்தியர்கள் வந்தேறிகள் என்று சொன்ன அந்த ஆண்டன் பாலசிங்கதின் வார்தைகளை மறக்க முடியுமா?

மலையக தமிழர்கள் எல்லாரும் யாழ்பாணத்திரின் அடிமைகள் என்று இன்று வரை சொல்லும் யாழ்பாண வாசி தமிழர்களின் நடப்பை திருத்த முடிய்மா?

வடக்கியத்தானை நம்பாதே ( வடக்கித்தியான் - > தமிழ்நாடு ) என்று இன்று வரை சொல்லும் இந்த முதுகில் குத்தும் இலங்கை தமிழர்களை இன்னம் ஒரு முறை நம்பி மோசம் போகலாமா?


சரி அப்ப ராடார்?

ராடார் என்பது ஆள் கொள்ளும் இயந்த்ரம் இல்லை.. வானில் பறக்கும் விமானங்களை கண்காணிக்கும் ஒரு கருவி..

அப்ப அந்த இரண்டு இந்தியர்??

அந்த ராடர்களை அங்கு இருக்கு ஆட்களுக்கு கற்று தர சென்றவர்கள்..

சரி ராடாரை இந்தியா கொடுக்காமல் இருந்தால்?

சீனா கொடுத்துஇருக்கும்.. கூடவே நம் சென்னை வரை எல்லா ஏரியாவையும் அந்த ராடார் வழியாக சொல்லி கொள்ளாமல் கண்காணிப்பார்கள்?

அப்ப என்ன தான் சொல்ல வர?

என்னை பொருத்தவரை நான் முதலில் இந்தியன்..

அதுக்கு அப்புறம் தான் இந்த அல்லைகைகள்..

இவனுங்க கதை எல்லாம் எழுத ஆரம்பிச்சா ....


இலங்கை பிரச்சனை என்பது எந்த தீர்வும் அற்றது. கண்டுக்காம போ.. அவங்க இரண்டு தரப்பும் சண்டையை ஒரு நாளைக்கும் நிறுத்தாது.. இதில் தமிழ் தமிழர்ன்னு உன்னை நீயே குழப்பிகிட்டா அதற்க்கு யாரும் பொறுப்பில்லை..

Anonymous said...

ஞான் அவனில்லா said...
//
இந்து மதத்தில் இருக்கும் பெரிய கேலிக்கூத்து இதுதான்.
மாற்ற எந்த மதத்திலும் சாதி வித்தியாசம் பார்த்து வழிபாட்டு தளங்களுக்குள் அனுமதிப்பதில்லை. இங்கே மட்டும் தான் இந்த கொடுமை.
//

ஹெ ஹெ ஹெ...!

குழந்தை மாதிரி இருக்கீங்களே, ரொம்ப நல்லவங்க சார் நீங்க.

தமிழகத்தில் மட்டுமல்லாமல், பல மாநிலங்களில் உள்ள சர்ச்சுகளில் கூட்டுப் பிரார்தனை செய்வதெல்லம் சாதிப்பிரிவைப் பொருத்துத்தான் அமைகிறது.

சாதி என்பது இந்து மதத்துக்கு மட்டுமே உரியது அல்ல. சாதி ஒரு சமூகப்பிரச்சனை.//


இது உண்மையா?

விளக்கவும்.

Anonymous said...

டோண்டு ஐயா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

ஜாதிகள் இல்லாத சமுதாயம் உருவாவதற்கான தடைகள் பற்றிய பதிவு அனைவரது கண்களையும் திறக்கச் செய்யவேண்டும்.


நடை முறை வாழ்க்கையில்

1தாழ்த்தபட்ட பிரிவுகளில் ஒரு பிரிவினர் மற்றோரு பிரிவினரை மரியதைக் குறைவாக நடத்துகின்றனர்.

2.பிற்படுத்த பட்ட சமுகத்தினர்,தாழ்த்தபட்டோரை மதிப்பதில்லை.

3.முற்படுத்தப்பட்டோரோ இரு பிரிவினரையும் சமமாய் எண்ணுவதில்லை.


4.ஐயர்/ஐயங்கார் சமுகத்தினர் பிற முற்படுத்தபட்ட ஜாதிகளை வேறுமாதிரி நினைக்கிறார்கள்.


இதற்கு விடிவு என்று?

manikandan said...

questions for tomorrow :-

1) கேள்வி கேட்க ஒரு தகுதி தேவையா ?

2) சாரா பாலின் ஐஸ்வர்யா ராய் ஜாடையில் இருக்கிறாரா ?

3) வரும் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவை வெல்லுமா ? உங்களுடைய ஊகம் என்ன ?

4) தாங்கள் எப்பொழுது வெப்சைட் தொடங்க உள்ளீர்கள் ?

5) உங்கள் வெப் பக்கம் கறுப்பில் இருந்தால் 70% பவர் சேமிக்க முடியும் என்பது தெரியுமா ? அப்படி தெரிந்தால் நீங்கள் அந்த மாற்றத்தை கொண்டு வருவீர்களா ?

6) அடுத்த வார கேள்வி கேட்க நேரிட்டால், உங்களுக்கு எது சம்பந்தமாக கேட்டால் பிடிக்கும் ?

7) விடாது கருப்பு தொடர் உங்களுக்கு பிடிக்குமா ?

கோவி.கண்ணன் said...

இறைவன், கோவில், பக்தி இவையெல்லாம் சாதிப் பேயை ஓட்டவில்லை, இருந்தாலும் ஒன்று தான் இல்லாவிட்டாலும் ஒன்று தான்.

கண்ணுக்குத் தெரியாத 2 விசயங்களில் அதாவது கடவுள், சாதி இதில் கடவுளைவிட சாதி மீது தான் மிகப் பற்று கொண்டு இருக்கின்றனர்.

ஹூம்

சாதி அமைப்பு வேற்றுமையில் ஒற்றுமை என்று தத்துவம் பேசலாம், ஆனால் நடைமுறையில் என்றுமே அப்படி ஒரு நிலைவரவே வராது.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

டோண்டு சார்,

தாழ்த்தப்பட்டவர்கள்,பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் உயர்சாதியினர்(இவைகள் ஏற்கனவே வரையறுக்கப் பட்டவை. நான் சொல்லவில்லை) ஆகியோரின் உள் மன ஓட்டமும், ஏக்கமும், ஒருவர் மற்றவரை மதிப்பிடும்,நடத்தும் மனநிலை(mindset) பற்றி கொஞ்சம் விளக்கமாக தனித்தனி பத்திகளில் சொல்ல முடியுமா?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது