இரு நண்பர்கள் காட்டினூடே சென்று கொண்டிருந்தனர். திடீரென புலி ஒன்று அவர்கள் முன்னால் தோன்றியது. எடு ஓட்டம் என இருவரும் ஓடினர். புலியும் துரத்தியது. “புலி அளவுக்கு வேகமாக நம்மால் ஓட முடியாது, என்ன செய்வது” என்று ஒருவன் குழற, இன்னொருவன் ஓடிக்கொண்டே கூறினான்: “அது எனக்கும் தெரியும். ஆனால் என்னைப் பொருத்தவரை உன்னைவிட வேகமாக ஓடினால் போதும்” எனக் கூறி சிட்டாகப் பறந்தான். இந்தக் கதை இங்கு ஏன் வருகிறது என்பதை பிறகு கூறுகிறேன்.
ஐ.டி.பி.எல். லில் இருந்த போது ரஷ்ய ஜெனெரேட்டிங் செட் (500 KVA என்று நினைவு) ஒன்றை சென்னை தொழிற்சாலையிலிருந்து குட்கானுக்கு வரவழைத்து நிறுவினோம். சும்மா சொல்லப்படாது, எருமை மாட்டு சைசுக்கு இருந்தது. அதே திறன் கொண்ட மற்ற ஜெனெரேட்டிங் செட்டுகளை விட மிகப்பெரிய அளவில் இருந்தது. இதைத்தான் ஓவர் இஞ்சினியரிங் எனக் கூறுவார்கள். எவ்வளவு தேவையோ அதைவ்ட அதிக மூலப்பொருட்களை உபயோகிப்பதுவே ரஷ்ய பொறியியல் நிபுணர்கள் வாடிக்கை. இதனால் என்னவாயிற்று என்றால், தேவையின்றி பொருள் விரயம் ஏற்பட்டது. அதனால் அதிகப்பலன் ஏதேனும் விளைந்தாலும், அதனுடைய அசௌகரியங்கள் அவற்றை மறக்கடித்தன.
தடை ஓட்டப்போட்டியில் பார்க்கலாம். விவரம் தெரிந்தவர்கள் தடையை க்ளியர் செய்ய எவ்வளவு தேவையோ அவ்வளவு உயரம்தான் குதிப்பார்கள். அப்போதுதான் அதிகம் களைப்படையாமல் தவிர்க்கலாம், ரேசையும் வெல்லும் வாய்ப்பு உண்டு. தேர்தல் சமயங்களில் பல தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தும் கட்சியினர் எங்கு வெற்றி வாய்ப்பு குறைவோ அங்குதான் அதிகம் பாடுபட வேண்டும். வெற்றி வாய்ப்பே இல்லாத தொகுதிகளை தவிர்ப்பதுவும் புத்திசாலித்தனமான செயல். பத்து சீட்டுகளில் சுமாரான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது, இரண்டு சீட்டுகளில் அமோக வெற்றி பெறுவதை விடச் சிறந்ததுதானே.
தேர்வுகளில் கேள்விகளுக்கு பதில் எழுதும்போது எவ்வளவு கேள்விகள் முடியுமோ அத்தனை கேள்விகளை முயற்சிக்க வேண்டும் என எங்கள் ஆசிரியர் கூறுவார். ஒரே கேள்வியில் கவனம் செலுத்தி எத்தனை நல்ல முறையில் எழுதினாலும் அக்கேள்விக்கு எவ்வளவு மதிப்பெண்ணோ அதைத்தான் பெற இயலும். அதுவே பரவலாக கேள்விகளை முயற்சித்தால் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். இது ரொம்பவும் ஆப்வியஸ் என்றாலும் தேர்வு எழுதும்போது பலர் அதை மறப்பதே நடக்கிறது.
நான் உறுப்பினராக இருக்கும் ப்ரோஸ் காம் மொழிபெயர்ப்பாளர்களின் தலைவாசல் ஆகும். மொழிபெயர்ப்பு தேவைப்படும் தருணங்கள் பல கம்பெனிகளுக்கு அடிக்கடி ஏற்படும். விஷயம் தெரிந்தவர்கள் இத்தலைவாசலுக்கு வந்து தங்கள் அப்போதைய வேலைக்கேற்ற மொழிபெயர்ப்பாளர்களைத் தேடுவார்கள். அதற்கென்றே மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் துபாஷிகளின் லிஸ்டுகளை அது பல மொழி ஜோடிகளுக்கு பாவிக்கிறது. உதாரணத்துக்கு இந்தியக் கம்பெனி ஒன்றுக்கு ஜெர்மனிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பு தேவைப்பட்டால், அத்தளத்திற்கு சென்று மூல மொழி ஜெர்மன், இலக்கு மொழி ஆங்கிலம் என தெரிவு செய்வார்கள். நாடு இந்தியா என்பதைத் தெரிவு செய்தால் இந்தியாவில் உள்ள அத்தனை ஜெர்மனிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் அத்தனை ப்ரோஸ் மெம்பர்களும் பட்டியலில் வருவார்கள். இதில் இன்னொரு விஷயம் உண்டு. கட்டணம் செலுத்தியிருக்கும் ப்ளாட்டினம் உறுப்பினர்களின் பெயர்கள்தான் முதலில் தனி லிஸ்டாக வரும். அதில் உள்ள முதல் சில பேரிலிருந்துதான் கம்பெனிகள் தங்கள் தெரிவை செய்யும். சாதாரண மெம்பர்களின் லிஸ்டுகள் பின்னால் வரும். அதைப் பார்ப்பவர்கள் குறைவே. ஆக உறுப்பினராக இருக்கும் ஒருவர் முதற்கண் செய்ய வேண்டியது ப்ளாட்டினம் உறுப்பினர் ஆவதே. ஆண்டுக்கு 128 அமெரிக்க டாலர்கள். அதை நான் தரவில்லை என்பது வேறு விஷயம். இருந்தாலும் நானும் ப்ளாட்டினம் மெம்பர் என்பதுதான் முக்கியம்.
பிளாட்டினம் மெம்பர் ஆவது மட்டும் போதாது. அந்த லிஸ்டிலும் முதல் இடங்களுக்கு வருதல் முக்கியம். அதற்குத்தான் குடோஸ் புள்ளிகள் உதவுகின்றன. மொழிபெயர்க்கும் போது சில சொற்களுக்கு விளக்கம் சட்டென்று வராது. அப்போது ப்ரோஸ் காமில் இதை குடோஸ் கேள்வியாகப் போட்டால் சக மொழிபெயர்ப்பாளர்கள் உதவிக்கு வருவார்கள். அதுவும் அடுத்த சில நிமிடங்களிலேயே விடை கிடைக்கும். அதே போல மற்றவர்களின் சந்தேகங்களுக்கும் நாம் விடையளிக்கலாம். நமது பதில்களை ஏற்று கொள்ளும் பட்சத்தில் அவற்றுக்கு குடோஸ் மற்றும் ப்ரௌனீஸ் புள்ளிகள் கிடைக்கும். இரண்டாவதால் நமக்கு பல பயன் உண்டு. அவற்றின் மூலமே நான் இலவசமாக ப்ளாட்டினம் உறுப்பினன் ஆக முடிந்தது. ஆனால் குடோஸ் புள்ளிகள் இன்னும் அதிக சூட்சுமம் வாய்ந்தவை. குடோஸ் புள்ளிகள் வரிசையில்தான் உறுப்பினர்கள் பட்டியலிடப்படுகின்றனர். ஆக, ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் இத்தாலிய மொழிகளிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும், இந்தியாவில் நிலை கொண்டுள்ள மொழிபெயர்ப்பாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் நரசிம்மன் ராகவன் வருகிறான் (அடியேன்). தமிழிலிருந்து ஆங்கிலம் மற்றும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பவர்கள் பட்டியல்களிலும் நரசிம்மன் ராகவன் முதலிடத்தில் வருகிறான் (இது உலகளவு பட்டியல்களிலிருந்து). அந்த முதலிடத்தை தக்கவைத்து கொள்ள விடாது குடோஸ் கேள்விகளுக்கு பதிலளித்து அவை ஏற்கப்பட வேண்டும். இதையே அதே சமயம் முழுநேர வேலையாகவும் வைத்து கொள்ள இயலாது. எனக்கும் மொழிபெயர்ப்பு வேலைகள் வரும் அல்லவா?
ஆக, இங்கு நான் செய்ய வேண்டியது என்ன? ஒரு விஷயம். என்னதான் நான் முயன்றாலும் ஐரோப்பிய மொழிகளை பொருத்தவரையில் அகில உலகளவில் முதல் இடங்களுக்கு வர இயலாது. அதற்கென ஜாம்பவான்கள் உள்ளனர். ஆகவே அதை நான் முயற்சிக்கவேயில்லை. என்னை பொருத்தவரை இந்திய மொழி பெயர்ப்பாளர்களில் நான் முதலிடத்தில் இருப்பதுதான் முக்கியம். அதைத்தான் செய்து வருகிறேன். இந்திய கம்பெனிகள் இந்தியாவில்தான் மொழிபெயர்ப்பாளர்களை தேடுவர். அவர்களுக்கு வெளி நாட்டு மொழிபெயர்ப்பாளர்களை தெரிவு செய்வது கட்டி வராது. ஆக நான் அவர்கள் கண்ணில் படும் சாத்தியக்கூறுகளே அதிகம்.
நான் கூற வருவது என்ன? புலியை விட வேகமாக ஓடுவது முக்கியமல்ல. கூட ஓடுபவரை விட அதிக வேகம் ஓடுவதுதான் நாம் செய்யக்கூடியது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்துலிங்கம்
-
கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். திரைப்படங்களில் பாடலாசிரியராகப்
பணியாற்றினார். இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அனைத்திந்திய அண்ணா
திராவிட மு...
1 day ago
3 comments:
சபாஷ், நரசிம்மன் ராகவன்! ரொம்ப சந்தோஷம். Keep it up!
ராஜப்பா
சூப்பர்ப்
//இந்தியாவில் நிலை கொண்டுள்ள மொழிபெயர்ப்பாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் நரசிம்மன் ராகவன் வருகிறான் (அடியேன்). //
இது தற்பெருமை, ஆணவம்
//தமிழிலிருந்து ஆங்கிலம் மற்றும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பவர்கள் பட்டியல்களிலும் நரசிம்மன் ராகவன் முதலிடத்தில் வருகிறான் (இது உலகளவு பட்டியல்களிலிருந்து). //
இது பொய்
கோமணகிருஷ்ணன்
Post a Comment