அறுபது எழுபதுகளில் வானொலி நிகழ்ச்சிகளை கேட்காதவர்களே கிடையாது என்ற நிலை இருந்தது. அச்சமயத்தில் தற்போது கிட்டத்தட்ட ஒருவரும் வானொலி நிகழ்ச்சிகளை கேட்பதில்லை என்னும் நிலையை கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள். ஆனால் அதுதான் உண்மை.
எங்கள் வீட்டில் வானொலி கேட்டே பல ஆண்டுகள் ஆகின்றன. எல்லாவற்றையும் தொலைகாட்சி ஆக்கிரமித்து கொண்டது. தில்லியில் இருந்த சமயம் ஆல் இண்டியா ரேடியோவின் வெளிநாட்டு சேவையில் பிரெஞ்சு ஒலிபரப்புகள் செய்துள்ளேன். யாரும் அவற்றை கேட்டு அதிகம் கடிதம் எழுதியதில்லை. நேயர் கடிதங்கள் நிகழ்ச்சியில் பல முறை ஒரே ஒரு கடிதம் எங்காவது ஆப்பிரிக்காவிலிருந்து வரலாம். பல சமயம் கடிதமே லேது என்ற நிலைதான். ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுவது போன்ற உணர்ச்சியை தவிர்க்க இயலாது. அதை பிரதிபலிக்கும் வகையில் ஆல் இண்டியா ரேடியோ கட்டடமே வெறிச்சோடி கிடக்கும். (ஆனால் நான் அங்கு ஒலிபரப்பிய நேரம் விடியற்காலை 1.15 முதல் 2.00 மணி வரைதான். அதனால் கூட இருக்கலாம். ஆனால் நேயர் கடிதங்களே வராதது நிலைமையை சரியாகவே காட்டியது).
சரி அதெல்லாம் இப்போ எதுக்கு சொல்றே எனக்கேட்டு கண்களை உருட்டுகிறான் முரளி மனோஹர். விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.
திடீரென நேற்று மாலை ஆல் இண்டியா ரேடியோ எஃப்.எம். ரெயின்போ நிகழ்ச்சி தயாரிப்பவரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அடுத்த நாள் (அதாவது 25.09.2008 அன்று) காலை 8 முதல் 9 மணி வரை ஒரு நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலுமா என அவர் கேட்டார். தமிழகத்தில் தமிழ் பேசுவது அருகி வருகிறது என்பது பற்றி ஒரு கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சி அது. (அவருக்கு என் நம்பரை கொடுத்தது சகபதிவர் என்றென்றும் அன்புடன் பாலா அவர்கள். அவருக்கு முதற்கண் நன்றி). நானும் ஒப்புதல் தெரிவித்தேன். ஆல் இண்டியா ரேடியோ ரெயின்போ எஃப்.எம் நிகழ்ச்சி எல்லாம் சரிதான். ஆனால் அதை கேட்க ரேடியோ இல்லையே. என்ன செய்வது? என் வீட்டம்மா உள்ளேயிருந்து அவர் சகோதரி அவருக்கு அன்பளிப்பாக தந்த ஒரு ட்ரான்சிஸ்டர் ரேடியோவை தேடி எடுத்தார். அவசர அவசரமாக பேட்டரி செல்கள் போட்டேன்.
காலை 8.10 வாக்கில் தயாரிப்பாளரிடமிருந்து ஃபோன். இன்னும் மூன்று நிமிடத்தில் எனது முறை வரும் என்றும் தொடர்பை வெட்டாமல் வைத்திருக்குமாறு கூறினார். நிகழ்ச்சி 8 மணிக்கு ஆரம்பித்து விட்டிருந்தது. முதலில் பாலா அவ்ர்களை கேள்வி கேட்கப்போவதாக கூறியிருந்ததால் ஆவலுடன் கேட்டேன் ஆனால் வரவில்லை. ஒலிபரப்பு பல இடையூறுகளால் தெளிவாக இல்லை. நானும் செல்பேசியை எடுத்து கொண்டு மொட்டைமாடிக்கு சென்றேன். தொடர்பு இருந்ததால் ரேடியோ நிகழ்ச்சியை செல்லில் கேட்க முடிந்தது. சொன்னது போலவே கேள்வி கேட்கப்பட்டது. அதாகப்பட்டது தமிழ் நாட்டில் பேச்சுத் தமிழ் உள்ளது. அப்படியே பேசுபவர்களும் ஆங்கில சொற்களையே அதிகம் கையாளுகின்றனர். இந்த நிலை பற்றி என் கருத்து என்ன? எனது பின்னணியையும் முதலில் அவர் கூறிவிட்டிருந்தார். அதில் நங்கநல்லூரில் வசிக்கும் டோண்டு ராகவனுக்கு ஆறு மொழிகள் தெரியும் என்பதும் அடங்கும்.
கொடுக்கப்பட்ட நேரம் ஒன்றரை நிமிடங்கள். நான் கூறிய விஷயங்கள். முதற்கண் தமிழகத்தில் சிரிக்காமல் செந்தமிழ் பேசுபவர்கள் குறைவு. உதாரணத்துக்கு எழுபதுகளில் ஒன்பதாம் எண் பேருந்தில் பணிபுரிந்த ஒரு நடத்துனர் செந்தமிழிலேயே பேசுவார். படிக்கட்டில் தொற்றி நிற்பவர்களிடம் (முக்கியமாக ஃபிகர்களை பிராக்கெட் போடும் ரோமியோக்கள்) “ஏனய்யா தேனடை போல படிக்கட்டில் தொங்கி வருகிறீர்கள்”? எனக் கேட்பார். அவர் பேசுவதை கேட்டு சிரித்தவர்களே அதிகம். அவர் அதற்காகவெல்லாம் கவலைப்படாமல் கடமை ஆற்றுவார். ஆனால் அவரைப் போன்றவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர்.
நிகழ்ச்சி தயாரிப்பாளர் இப்போது கூறியது, செந்தமிழ்தான் வேண்டும் என்றில்லை, சாதாரணத் தமிழே போதுமே என்று. அதற்கு எனது பதில் செந்தமிழை குறிவைத்து பேசினால்தான் முழு வெற்றியில்லாவிடினும் சாதாரணத் தமிழாவது மிஞ்சும் என்பதே. யாமறிந்த ஆறு மொழிகளில் தமிழ் மொழி போல இனிதாவதெங்கும் காணோம் என்பதையும் கூறிவிட்டு நான் மேலே கூறியதாவது.
தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என்ற நிலை துரதிர்ஷ்டவசமாக வந்து விட்டது. மேலும் தமிழாசிரியர்கள் தாங்கள் திருத்தும் விடைத்தாள்களில் மதிப்பெண்கள் தருவதில் கஞ்சத்தனம் காட்டியே பல மாணவர்களை வேறு மொழிகளுக்கு துரத்தி விட்டனர். இப்போது நிலைமை என்னவென்றால் தமிழகத்திலேயே எனக்கு ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்புகள் வேலைகள் அதிகம் வருகின்ரன. இந்த நிலையை நான் தில்லியில் இருந்தபோது கற்பனைகூட செய்ததில்லை. துபாஷி வேலை செய்யும் வாய்ப்பும் வந்தது. தற்போதைய இளைஞர்களில் நல்ல தமிழ் எழுதுபவர்கள் அருகி விட்டனர். பேசுவது பற்றி கேட்கவே வேண்டாம்.
இதற்குள் எனக்கு அளிக்கப்பட்ட நேரம் முடிந்ததால் எனக்கு நன்றி கூறி பேட்டியை முடித்தார் தயாரிப்பாளர். நிகழ்ச்சியை மேலே நானும் கேட்கவில்லை, ஏனெனில் ஒரே இடையூறுகள். எனக்கு பிறகு பாலா பேசியிருக்கிறார். அதையும் கோட்டை விட்டேன். சில நிமிடங்களில் அண்ணா கண்ணன் அவர்களிடமிருந்து பேட்டி நன்றாக இருந்ததாக குறுஞ்செய்தி வந்தது. பாலாவும் பேசினார்.
பொதுவான சில கருத்துக்கள் இங்கு கூற ஆசைப்படுவேன். தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தமிழுக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை என்பது ஒரு கசப்பான ஆனால் ஒத்துக் கொள்ளவேண்டிய உண்மையே. இந்த நிலை ஏன் என்பதை பார்ப்போம்.
முதல் காரணம் தமிழில் நல்ல பாடநூல்கள் வெளிவராததே. நான் 1962-ல் பள்ளியிறுதித் தேர்வு எழுதியபோது இருந்த நிலையைக் கூறுவேன். ஒன்பதாம் வகுப்புவரை தமிழிலேயே படித்து வந்த நான் பத்தாம் வகுப்பில் பொறியியலை விருப்பப் பாடமாக எடுத்துக்கொண்டபோது ஆங்கில மீடியத்துக்கே செல்ல வேண்டியிருந்தது. பொறியியல் பாடங்களுக்கேற்ற தமிழ் பாட நூல்கள் இல்லை என்பதுதான் காரணம். பொறியியல் எடுத்துக் கொள்ளாதவர்கள் கூட காம்போசிட் கணிதத்தை ஆங்கிலத்திலேயே கற்க வேண்டியிருந்தது. இதற்கும் அதுவே காரணம்.
இன்னுமொரு காரணம் ஏற்கனவேயே மேலே சொன்ன மதிப்பெண்கள் அளிக்கும் முறை. என்னதான் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழில் 60 மதிப்பெண்கள் போட்டாலே விசேஷம் என்ற நிலை. ஆனால் வடமொழி எடுத்துக்கொண்டால் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் சுலபம். பிற்காலத்தில் இந்த சாதகமான தன்மை ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு பாடங்களுக்கும் வந்தது. ஆனால் இதில் கொடுமை என்னவென்றால் பள்ளிகளில் கண்ராவியான முறையில் பிரெஞ்சு அல்லது ஜெர்மன் கற்பவர்கள் அவற்றை பிற்காலத்தில் சுலபமாக மறந்து விட்டனர். அதற்காக அவர்கள் கவலைப்படவுமில்லை. அவர்களுக்கு வேண்டியது நல்ல மதிப்பெண்கள். அவற்றின் மூலம் நல்ல கோர்ஸுகளில் இடம் கிடைத்தால் போதும். இது பற்றி பிறகு. ஆனால் தமிழில் இம்மாதிரி ஆகாது, ஏனெனில் அது நமது தாய்மொழி.
இப்போது நாம் தமிழைப் பார்ப்போம். யுத்தகால அடிப்படையில் வேலை செய்ய வேண்டும். அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் தமிழ் கட்டாயமாக சாய்சில் இருக்க வேண்டும். தமிழில் மதிப்பெண்கள் வழங்குவதில் தாராளம் காட்டப்பட வேண்டும். தமிழாசிரியர்கள் தங்களை நக்கீரன் ரேஞ்சுக்கு நினைத்துக் கொள்வது நிற்க வேண்டும்.
தமிழாசிரியர்களும் சீனியாரிட்டி அடிப்படையில் தலைமை ஆசிரியர்களாக வரவேண்டும். இது முக்கியம். பதவி வந்தாலே மரியாதையும் வரும்.
மற்றப்படி தமிழ் மீடியத்தை கட்டாயமாக்கவேண்டும் என்பது இப்போதுள்ள நிலையில் ப்ராக்டிகல் இல்லைதான். படிப்பதற்கு தேவையான அளவில் மாணாக்கர்கள் வர வேண்டும், பாட நூல்கள் பல தமிழில் வேண்டும், இத்யாதி, இத்யாதி.
கோல்ட் வார் என்று கூறப்படும் நெருக்கடி நிலை அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் உச்சக்கட்டத்தில் இருந்தபோது. ஜெர்மனி இரண்டாக பிளந்து கிழக்கு ஜெர்மனி ரஷ்யா பக்கத்திலும் மேற்கு ஜெர்மனி அமெரிக்கா பக்கமாகவும் இருந்தன. அப்போது நடந்ததாக ஒரு நிகழ்ச்சியை வேடிக்கையாகக் கூறுவார்கள். இரண்டு ஜெர்மனிக்காரர்களும் தங்களுக்குள் பேச்சுவார்த்தைகள் நடத்த மொழிபெயர்ப்பாளர்கள் தேவை பட்டனராம். அதாவது மேற்கு ஜெர்மனிக்காரர்கள் ஆங்கிலத்திலும் கிழக்கு ஜெர்மானியர் ரஷ்யனிலும் பேசினார்களாம். அம்மாதிரி நிலை ஒன்றுமில்லாமலேயே இரண்டு தமிழர்கள் தங்களுக்குள் ஆங்கிலத்தில் பேசுவது என்ன கண்றாவி!
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
10 hours ago
8 comments:
So what do settlers from other states do?
// இரண்டு ஜெர்மனிக்காரர்களும் தங்களுக்குள் பேச்சுவார்த்தைகள் நடத்த மொழிபெயர்ப்பாளர்கள் தேவை பட்டனராம். அதாவது மேற்கு ஜெர்மனிக்காரர்கள் ஆங்கிலத்திலும் கிழக்கு ஜெர்மானியர் ரஷ்யனிலும் பேசினார்களாம். அம்மாதிரி நிலை ஒன்றுமில்லாமலேயே இரண்டு தமிழர்கள் தங்களுக்குள் ஆங்கிலத்தில் பேசுவது என்ன கண்றாவி!//
கொன்னுடீங்க சார். பதிவு பிரமாதம்
வானொலியில் பேசியதற்கு முதலில் வாழ்த்துக்கள் டோண்டு சார்!
//தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என்ற நிலை துரதிர்ஷ்டவசமாக வந்து விட்டது. //
இவ்வாறே தான் நானும் பல காலம் எண்ணியிருந்தேன்.
தமிழ் படித்தவர்கள் அதை சரியான முறையில் பேச்சிலோ, எழுத்திலோ பயன்படுத்தினால் அது நமக்கு வாழை இலைபோட்டு பலவித பதார்த்தங்களோடு சோறும் போடும் என்று எழுத்தாளர் ஒருவர் தனது சொந்த அனுபவத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
நன்று. ஒரு எஸ்ஸெம்மெஸ் கொடுத்திருக்கலாம். நானும் அனுபவித்திருப்பேன். நான் கேட்டபோது அதே நிகழ்ச்சியில் ஆங்கிலத்தில் பீட்டர் ஆண்களா, பெண்களா என்று விவாதம் நடந்துகொண்டிருந்தது :-))
தமிழ்இந்து.காம் தளத்தில் நான் எழுதிய தமிழ்படும்பாடு என்ற கட்டுரையைப் பார்த்தீர்களா? http://www.tamilhindu.com/2008/09/the-state-of-tamil-language/
உங்களைப்பற்றியும் ஒரு வரி உண்டு அதில்!
நன்றி
ஜயராமன்
எனக்கு முன்னால் பேசிய நீங்கள் பல புள்ளிகளை தொட்டு விட்டதால், என் முறை வந்தபோது நான் என்ன பேசுவது என்று திகைப்பாக இருந்தது.
மருத்துவர் பாணியில் போட்டேன் ஒரு போடு:
அதாவது, 1-5 வகுப்புகளில் தமிழ் கட்டாயப் பாடமாக இருத்தலின் அவசியத்தை, அதைப் பெற்றோரும், பள்ளிகளும் நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற டிஸ்கியோடு :) அத்துடன், வேற்று மொழிச் சொற்களை தமிழ் உள்வாங்குவதில் தவறில்லை என்றும், அதனால் அது வளம் பெறவே செய்கிறது என்றும் சொன்னேன். தமிழ் வலைப்பதிவுகள் பெருகி வருவது பற்றிச் சொல்லி, "மெல்லத் தமிழ் இனிச் சாகும்" என்று அஞ்ச வேண்டியதில்லை என்றேன்.
ஆல் இண்டியா ரேடியோ நிகழ்ச்சி என்பதால், no அரசியல் ;-)
எ.அ.பாலா
//தமிழ் படித்தவர்கள் அதை சரியான முறையில் பேச்சிலோ, எழுத்திலோ பயன்படுத்தினால் அது நமக்கு வாழை இலைபோட்டு பலவித பதார்த்தங்களோடு சோறும் போடும் என்று எழுத்தாளர் ஒருவர் தனது சொந்த அனுபவத்தில் குறிப்பிட்டிருக்கிறார்//
அவரவர் சாமர்த்தியத்தை பொருத்தது அது. ஆனால் சராசரியாக ஒருவர் தமிழ் மீடியத்திலேயே பட்டப்படிப்பு முடித்தால் அவருக்கு தமிழகத்தில் கூட சரியாக வேலை கிடைக்கும் உத்திரவாதமில்லை. ஆங்கிலத்தையும் விடாது தமிழையும் படிப்பதே புத்திசாலித்தனம்.
எனது மொழிபெயர்ப்புகளில் தமிழும் முக்கிய பங்கு வகிக்கிறதே. மனதிருந்தால் மார்க்கபந்துன்னு வசூல் ராஜாவே சொல்லியிருக்காரே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//உங்களைப்பற்றியும் ஒரு வரி உண்டு அதில்!//
பார்த்துள்ளேன் அப்பதிவை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
// இரண்டு ஜெர்மனிக்காரர்களும் தங்களுக்குள் பேச்சுவார்த்தைகள் நடத்த மொழிபெயர்ப்பாளர்கள் தேவை பட்டனராம். அதாவது மேற்கு ஜெர்மனிக்காரர்கள் ஆங்கிலத்திலும் கிழக்கு ஜெர்மானியர் ரஷ்யனிலும் பேசினார்களாம். அம்மாதிரி நிலை ஒன்றுமில்லாமலேயே இரண்டு தமிழர்கள் தங்களுக்குள் ஆங்கிலத்தில் பேசுவது என்ன கண்றாவி!//
இதை விட அழகா நம்ம நிலையை எப்படி சொல்ல முடியும். டமில் வால்க!!!
Post a Comment