கேன்சருடன் வாழ்தல்
நேற்று நான் பாட்டுக்கு தேமேனென்று பத்திரிகை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். திடீரென “சார், சார், ஒரு நிமிஷம்” என என் பின்னால் குரல் கேட்டது.
திரும்பிப் பார்த்தால் ஒரு 20 வயது இளைஞன் மூச்சு வாங்க நின்று கொண்டிருந்தான்.
என்ன விஷயம் எனக் கேட்க, அவன் தயக்கத்துடன் கேட்டான், “சில மாசங்கள் முன்னாடி உங்களை பார்த்தபோது உங்கள் தலைமுடியெல்லாம் கொட்டி விட்டது. இப்போது என்னவென்றால் மறுபடியும் வளர்கிறது. என்ன ஆயில் போட்டீர்க்ள்”? எனக் கேட்டான்.
ஒரு நிமிடம் அவனை உற்றுப் பார்த்து விட்டு சொன்னேன், “இம்மாதிரி முடி மீண்டும் வளரும் நிலை யாருக்குமே வேண்டாமப்பனே” எனக்கூறி விளக்கியதும் அவன் தலை குனிந்த வண்ணம் சென்றான்.
அவனிடம் கூறாதது இம்முறையில் முடி வளர எனது செலவு ரூபாய் 4 லட்சத்துக்கு மேல் என்பதுதான். கிட்டத்தட்ட ஓராண்டுகளாக சலூனுக்கு செல்லாததில் கிட்டத்தட்ட 600 ரூபாய் மிச்சம் என்பது தனி.
இருபது ஆண்டுகளுக்கு முன்னால் தைத்த பேண்ட் சட்டைகள் இப்போது பொருந்துவதும் தமாஷாக உள்ளது.
கேன்சரின் பின்விளைவுகள்
ஆறு கீமோதெரப்பி அமர்வுகளில் தலைமுடி கொட்டி, புருவங்களும் அவுட். மண்டையோட்டுத் தோற்றம். கதிர்விச்சு சிகிச்சைகள் 33 அமர்வுகளினால் காலில் புண்.
வசூல்ராஜாவில் கமல் கூறுவதுபோல பசியின்மையின் கொடுமையுடன், உணவு என்றாலே வாந்தி வ்ரும் உணர்வு வந்தது இன்னொரு கொடுமை. இதயம் சற்றே பெரிதாகியதில் மூச்சிரைப்பு, சற்று நடந்தாலே.
இவ்வள்வு கொடுமைகள் நடுவிலும் நல்லது என்னவென்றால், எனது மொழிபெயர்ப்பு வேலைகள் தாராளமாக வந்ததுதான். ஒரு ஜெர்மன்காரருக்கு துபாஷியாகச் சென்றேன். என்னைப் பார்த்ததுமே ஜெர்மன்காரர் என்ன உடம்புக்கு எனக் கேட்க எனது வாடிக்கையாளரிடம் கூடக் கூறாது அவரிடம் கேன்சர் பற்றிக் கூற அவர் அப்படியே என்னை அணைத்தவாறு, சென்றார். வேகமாக நடக்கும் அவர் எனது ஸ்பீடில் நடந்தார்.
எங்கொப்புராணை கூறுகிறேன், மொழிபெயர்ப்பு வேலைகளை எனக்கு தாராளமாகக் கிடைக்கச் செய்த எனது உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதனின் அருளே அருள். வேலை செய்யும்போது கேன்சரின் எண்ணமே வருவதில்லை.
நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
கேன்சர் என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். கெட்டப் பழக்கங்கள் ஏதும் இல்லாமலிருந்தால் அது வரும் சாத்தியக்கூறுகள் குறைவு மட்டுமே. மற்றப்படி அப்படியும் வரலாம் எனக்கு வந்தது போல.
மரணத்துடன் ஒரு சிறு சந்திப்பு வினையாகவே முடிந்தது.
கெட்டதிலும் நல்லது நடந்தது மகரநெடுங்குழைகாத்னின் பேரருளே.
இமயமாக எனது மதிப்பில் உயர்ந்த என் வீட்டம்மா
சத்தியமாகச் சொல்கிறேன், நிலைமை நேர்மாறாக இருந்திருந்தால் நான் அத்தனை தைரியத்துடன் இருந்திருக்க மாட்டேன். ஒரு தாய் தன் குழந்தையை பார்த்துக் கொள்வதுபோல அவர் என்னைப் பார்த்துக் கொள்வதால்தான் இப்பதிவையெல்லாம் போட முடிகிறது. பூர்வ ஜன்ம புண்ணியம்தான்.
மனச்சமாதானங்கள்
சிகிச்சைகள் நடக்க ஆரம்பித்து கொஞ்ச நாள் கழித்துத்தான் எனக்கு வந்தது கேன்சரா எனக் கேட்கும் மனவுறுதியே எனக்கு வந்தது. அதுவரை எனக்கு மட்டும் ஏன் இப்படி என்ற எண்ணம்தான் வந்தது. அண்ணாசாலையில் உள்ள ராய் மெமொரியல் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளைப் பார்த்து அதிர்ந்து போனேன். பச்சிளங்குழந்தைக்குமா கேன்சர்?
பூர்வஜன்மாவில் செய்த பாவங்கள் தவிர வேறு என்ன காரணம் இவற்றுக்கெல்லாம் இருக்கவியலும்?
அன்புடன்,
டோண்டு ராகவன்