இந்தப் பதிவுக்கு எதிர்ப்புகள் ஆக்ரோஷமாக வரும் என்பதை முன்னாலேயே எதிர்பார்த்தேன். ஆகவே பிரச்சினை இல்லை. நான் கூற வந்ததை சொல்லிவிட்டு போகிறேன். பதிவு-2-ல் ஒருவர் பின்னூட்டமிட்டது போல் வேறு பெண்கள் யாரும் இப்பதிவுக்கு பின்னூட்டமிடவில்லைதான். ஏன் என்பதையும் புரிந்து கொள்கிறேன்.
ஜனத்தொகையில் பாதிக்கு பெண்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் சரிசமமாக இல்லை என்பதால் பாதிக்கப்படுபவர்கள்தான் ஏதேனும் செய்ய வேண்டும். ஆண்களுக்கு தற்போதைய நிலை சௌகரியமாக இருக்கிறது என்பதால் அவர்கள் ஏதாவது செய்ய வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. எல்லா பெண்களும் அவ்வாறு செய்வார்கள் என்று ஏன் பயப்பட வேண்டும்? நல்ல நிலைமையில் இருக்கும் பெண் ஒருவர் ஏன் தேவையில்லாது ரிஸ்க் எடுக்கப் போகிறார்? மாட்டிக் கொண்டால் அவர்களுக்குத்தானே கஷ்டம்?
பாலியல் உறவுக்கு உடல் தயாராகி பல ஆண்டுகள் கழித்துத்தான் ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி திருமணம் நடக்கிறது. இடைபட்ட காலத்தில் உடல் இச்சை வரவே வராதா? ஆண் இதில் அதிகம் கஷ்டம் அடைவதில்லை. பெண்தான் அவதிக்குள்ளாகிறாள். பழங்காலத்தில் பால்ய விவாகத்துக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். இந்த முறையில் வேறு சிக்கல்கள் எழுந்தன. உதாரணத்துக்கு பால்ய விதவைகள். அதில் மட்டும் சற்றே கருணையுடன் நடந்து, பால்ய விதவைகளுக்கும் மறு திருமணம் செய்து வைத்திருந்தால் பலரது வாழ்க்கை பாழாகாது இருந்திருக்கும். இந்த பிரச்சினையை ஹிந்தி படம் "ப்ரேம் ரோக்"-ல் ராஜ் கபூர் மிக அழகாக எடுத்துக்கூறியுள்ளார்.
புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா என்றெல்லாம் கேட்டார்கள். வராமல் இருக்க புள்ளி ராஜா ஆணுறை உபயோகிக்க வேண்டும் என அறிவுறை கூறினார்கள். ஆனால் எய்ட்ஸ் வந்துவிட்டால் புள்ளிராஜாவின் மனைவியின் கதி என்ன என்பதைக் கூறினார்களா? ஒருவனுக்கு ஒருத்தி என்றெல்லலம் இப்போது கூற முடியுமா? கணவனுக்கு எய்ட்ஸ் வந்தால் மனைவி அவனிடம் விவாகரத்து பெற இது ஒரு காரணமாக அமையுமா? தெரியவில்லை. வழக்கறிஞர்கள் யாராவது கருத்து கூறலாம்.
நான் வலைப்பதிவு ஆரம்பித்த புதிதில் SITA சட்டத்தைப் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன். அது இப்போது என் வலைப்பூவில் காணவில்லை. ஆனாலும் நல்ல வேளையாக என் வந்தகட்டில் சேமித்து வைத்திருந்ததால் அதை இங்கு மறுபடியும் இடுகிறேன். பதிவின் தலைப்பு:
"யாருக்கும் வெட்கமில்லை - SITA is ultravires of the Constitution of India"
எழுபதுகளின் துவக்கத்தில் சோ அவர்களால் எழுதப்பட்ட "யாருக்கும் வெட்கமில்லை" என்ற நாடகத்தைப் பார்த்தேன்.
கதாநாயகி பிரமீளா ஒரு விலை மாது. அவ்வாறு அவள் ஆவதற்கு முன்னால் அவளை முதலில் காதலித்து ஏமாற்றியிருப்பான் நாடகத்தின் வில்லன் - கதாநாயகன். பிறகு சந்தர்ப்பச் சூழ்நிலையால் அவள் விலை மாது ஆகிறாள்.
இதில் சோ அவளுக்கு ஆதரவாகப் பேசும் ராவுத்தர் பாத்திரத்தை ஏற்றிருந்தார்.
அதில் ஒரு காட்சி.
முதலில் காட்சியின் பின்புலத்தைப் பார்ப்போம். கதாநாயகனின் தந்தை அப்பாதுரையும் ராவுத்தரும் வியாபாரத்தில் பங்காளிகள். கதாநாயகி ஒரு விலைமாது என்பதை கதாநாயகனின் தாயிடம் கூறுவார் அந்த வீட்டுக்கு வந்திருக்கும் ரங்கநாதன் என்பவர். தான் விலை மாதிடம் போகும் வழக்கம் உடையவன் என்பதையும் அவ்வாறு செல்லும் ஒரு தருணத்தில் கதாநாயகியைக் கண்டதாகவும் அவர் கூறுவார்.
அந்தத் தாய் கதாநாயகியைத் திட்டி விட்டு ரங்கநாதனிடம் இன்னும் ஒரு ஸ்வீட் எடுத்துக் கொள்ளச் சொல்லி உபசரிப்பார். உடனே சோ கூறுவார்:
"அம்மா, நீங்கள் பிரமீளாவைக் குற்றம் கூறியது சரியே. அந்தப் பெண்ணைச் செருப்பால் அடியுங்கள். ஆனால் அதே செருப்பையெடுத்து இந்த ரங்கநாதனையும் ரெண்டு அடி அடிப்பதற்குப் பதிலாக அவனுக்கு இன்னும் ஒரு ஸ்வீட் எடுத்துக் கொள்ள உபசரிக்கிறீர்களே. இது என்ன நியாயம்?"
நான் ரசித்த மிகச் சிறந்த காட்சி இது. அதைத்தான் இப்போது நான் மறுபடியும் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.
விபசார ஒழிப்புச் சட்டம் விபசாரிகளை மட்டும் தண்டிக்கிறது. கொழுப்பெடுத்துப் போய் அவர்களிடம் செல்லும் வாடிக்கையாளர்களை மட்டும் விட்டு விடுகிறது.
இதே கேள்வி "ஜனவாணி" என்ற நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பொது மக்கள் தரப்பிலிருந்து அப்போதையச் சட்ட மந்திரி பரத்வாஜ் அவர்களிடம் வைக்கப்பட்டது.
ஆனால் அவர் கேள்வியைத் தவறாகப் புரிந்துக் கொண்டு (வேண்டுமென்றே?) பதிலளித்தார்.
கேள்வி: " விபசாரச் சட்டம் ஆண்களை ஏன் தண்டிப்பதில்லை?"
பதில்: " ஏன், நாங்கள் பிம்புகளையும் (pimps) தண்டிக்கிறோமே!"
வாடிக்கையாளர்களைப் பற்றி ஒன்றுமே கூறவில்லை.
நான் இப்போது வைக்கும் இன்னொரு கேள்வி. இச்சட்டம் பால் அடிப்படையில் பாகுபாடு (sexual discrimaination) செய்து பெண்ணை மட்டும் தண்டிக்கிறது. இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. ஆகவே இச்சட்டமே செல்லாது என நினைக்கிறேன். இவ்வாறு யாராவது ரிட் பெட்டிஷன் போட்டால் வெற்றி பெருமா?
இவ்வாறு செய்வது பலரது "மாமூல்" வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதை அறிவேன். ஆனால் எப்போதுதான் ரங்கநாதனையும் செருப்பால் அடிப்பது?
அன்புடன்,
டோண்டு ராகவன்
# posted by Dondu @ 8:55 PM, 1/9/2005"
இவ்வளவு சீரியசான பதிவுக்கு வந்த கருத்துக்களை பாருங்கள்.
2 comments
Comments:
இந்தச் சட்டத்தை விட்டுவிட்டு, மேலை நாடுகள் சிலவற்றைப்போல இதை ஒரு தொழிலாக அங்கீகரித்தால் என்ன விளைவுகள் உண்டாகும்?
# posted by Radhakrishnan : 4:19 AM
அதாவது தண்டனை இருபாலருக்கும் என்றாகிவிடும் என்றால் இந்தத் தொழிலையே சட்டப் பூர்வமாகுவது என்ற முடிவுக்கு ஆண்கள் வந்து விடுவார்கள் என்றுதான் எனக்குப் படுகிறது.
இதே நாடகத்தில் இன்னொருக் காட்சி நினைவுக்கு வருகிறது. கதாநாயகி நீதிமன்றத்தில் வைத்துக் கூறுவார்:"என்னுடைய வாடிக்கையாளர் ஒருவரை இங்கு இருப்பதைக் காண்கிறேன். நாளைக்கும் அவர் வந்தால் அவர் யார் என்பதைப் பகிரங்கமாகக் கூறிவிடுவேன்"
அடுத்த நாள் பார்த்தால் வேறு நீதிபதி வந்திருப்பார்.
அன்புடன்,
டோண்டு
# posted by Dondu : 11:16 AM
இந் நாடகம் திரைப் படமாக எடுத்தபோது பிரமீளா வேடத்தில் நடித்தவர் யாரென்று நினைவிருக்கிறதா?
# posted by Raviaa : 8:46 PM
ஏன் இல்லை?
சிவகுமார்: வக்கீல்,
ஜயலலிதா:பிரமீளா.
அன்புடன்,
டோண்டு
# posted by Dondu : 12:43 PM"
இப்போதைக்கு நான் கூற நினைப்பது இவ்வளவுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்