Showing posts with label எங்கே பிராமணன். Show all posts
Showing posts with label எங்கே பிராமணன். Show all posts

7/02/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 111 & 112 - இறுதி எபிசோடு))

எபிசோடு - 111 (30.06.2010) சுட்டி - 2
நாதனை வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். நாதன் அசோக்குக்கு நேர்ந்த கஷ்டங்களை நினைத்து உருகுகிறார். காதம்பரி வந்து பார்க்கிறாள்.

வையாபுரியிடம் பணம் கொடுத்து ஏமாந்த அந்த தொழிலதிபர் சிங்காரத்தை கூப்பிட்டனுப்புகிறார். தன்னிடம் அடியாளாக சேரும்படி கேட்கிறார். சிங்காரம் மறுத்து விடுகிறான். அவன் ஏற்கனவே அடியாளாக இருந்தவன்தானே, அதுவும் இறந்துபோன நல்லத்தம்பியின் சகோதரன் வையாபுரியிடம்தானே என கேட்க, சிங்காரம் வையாபுரியும் நல்லத்தம்பியும் ஒரே ஆள் எனக் கூறிவிடுகிறான். திடுக்கிட்ட அந்தத் தொழிலதிபர் அப்போது தான் கொன்றது வையாபுரியையா என திகைப்புடன் கேட்க, சிங்காரம் இப்போது திடுக்கிடுகிறான்.

இது பற்றி அறிந்த நாதன் வக்கீலிடம் உடனே அந்த தொழிலதிபரை அரெஸ்ட் செய்ய ஏற்பாடு செய்யுமாறு கூறுகிறார். இதிலெல்லாம் அவசரப்படக்கூடாது என வக்கீல் அறிவுரை கூறுகிறார்.

கொலை செய்தவன் யாரெனத் தெரிந்தும் ஏன் இன்னும் தாமதம் என நண்பர் கேட்க, சோ அவசரப்பட்டால் காரியம் நடக்காது. இதில் சாதுர்யமாக நடந்து குற்றவாளியை பிடிக்க வேண்டியதன் அவசியத்தைக் கூறுகிறார்.

(தேடுவோம்)

எபிசோடு - 112 (01.07.2010) (இறுதி எபிசோடு) சுட்டி - 2

சிறைச்சாலையில் பார்வையாளர்கள் பகுதி. அசோக்கைப் பார்க்க அந்த சன்னியாசி வருகிறார். அசோக் அவரை வணங்கி தனக்கு ஏற்பட்ட சோதனைகளை கூறுகிறான். எல்லாமே பரமன் செயல் எனக்கூறி, அவர் அசோக்குக்கு கையாலயத்தில் நடந்த நிகழ்ச்சிகளை விவரித்துக் கூறி அவன் வசிஷ்டர் எனவும் கூறுகிறர். பிறகு அவர் நாரதராக சுயவுருவம் பெற, அசோக் வசிஷ்டரின் ரூபத்தைப் பெறுகிறான்.

எங்கே பிராமணன் என்பதை அவர் தேடியதன் பலனை கூறுமாறு நாரதர் வசிஷ்டரிடம் கேட்க, அவரோ கலியுகத்தில் முழுமையான வர்ணரீதியான பிராமணனாக வாழ்தல் துர்லபமே எனக்கூறிவிடுகிறார். பிறகு அங்கிருந்து இருவருமே மறைகின்றனர். உள்ளே வரும் காவலாளி அவர்கள் எங்கே என பிரமிக்கிறான்.

அசோக் நல்லவன், நேர்மையாளன் ஆனால் அவனை பைத்தியம் எனக்கூற வைத்தீர்களே எல்லோரையும், இப்போது திருப்திதானா என சோவின் நண்பர் கேட்க, அப்படித்தால் லோகம் நினைக்கிறது. இன்றையச் சூழ்நிலையில் வர்ண ரீதியான பிராமணன் என ஒருவன் வாழ முற்பட்டால் அவன் பைத்தியக்காரனாகத்தான் பார்க்கப்படுவான். ஏன் நேர்மையாக இருப்பவனுக்கும் அதே கதிதான் என சோ கூறுகிறார்.

வர்ணங்கள் என்பவை சாதிகள் அல்ல. நால்வகை குணநலன்களையே அவை குறிக்கின்றன. ஒன்றுக்கொன்று உயர்ந்ததோ தாழ்ந்ததோ இல்லை எனக் கூறும் சோ அவற்றுக்கான சான்றுகளை பல இடங்களிலிருந்தும் சுலோகமாகவும் மேற்கோள்களாகவும் காட்டுகிறார். இவை எல்லாம் ஒன்றும் தான் கண்டுபிடித்தவையல்ல், சொன்ன விவரங்கள் எல்லாமே பல இடங்களில் தேடிப்படித்து, விஷயம் அறிந்தவர்களிடம் கேட்டு தான் உணர்ந்தவை மட்டுமே என்றும் இதில் தனக்கு வேறு கிரெடிட் எதுவும் இல்லை எனவும் அவர் கூறி, இந்த சீரியல் வெற்றிகரமாக எடுக்கப்பட்டதற்கு சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் (ஜெயா டிவி, வெங்கட், தயாரிப்பாளர் சுந்தரம் ஆகியோர்) நன்றி கூறுகிறார்.

எங்கே பிராமணன் முதல் பகுதியில் கடைசி எபிசோட் என்பதை நான் முதலிலிருந்தே கண்டு கொள்ள முடிந்தது. ஆனால் இம்முறை நான் அவ்வாறு காண இயலவில்லை. ஆகவே இந்த சீரியல் இம்மாதிரி முடிந்தது என்னையும் ஆச்சரியத்திலும் ஏமார்றத்திலும் ஆழ்த்தி விட்டது. காரணம் கதையில் இன்னும் பல முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் உள்ளன.

எல்லாவற்றையும் விடுங்கள். காதம்பரி என்னும் அப்பெண்ணை இப்படி அம்போ என விட்டுப்போனது எந்த விதத்தில் நியாயம் என்பதே புரியவில்லை. மெனக்கெட்டு அவளை அசோக்கின் தர்மபத்தினியாக்கினார்கள். இப்போது அவள் கதி? அசோக் திடீரென மறைந்து போனதால் அவனது பெற்றோருக்கு வரும் மன உளைச்சல்கள், சட்ட சிக்கல்கள், போலீஸ் கெடுபிடிகள் ஆகியவற்றையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

எனக்கு வரும் கோபத்துக்கு பார்ட் -2 ஆரம்ப எபிசோடில் வந்தது போல நாதன், வசுமதி, நீலகண்டன், சாம்பு ஆகிய பாத்திரங்கள் காதம்பரியுடன் கூட வந்து சோ அவர்களை ஒரு மொத்து மொத்தினால்தான் என் மனம் ஆறும். சிங்காரம் ஒருவன் போதாதா, வந்து வீடுகட்டி உதைக்க?

அது சரி நீ எப்படி பெரிசு இந்தக் கதையை முடிச்சுருப்பே என முரளி மனோகர் நக்கலாகக் கேட்கிறான். அதையும் சொல்லிவிடுகிறேன்.

நாரதர் அசோக்கிடம் சொன்னதெல்லாம் சரிதான். ஆனால் அவன் தனது பூலோகக் கடமையையும் முடித்தாக வேண்டும், பீஷ்மரைப் போல. வக்கீலின் உதவியோடு உண்மை குற்றவாளியை பிடிப்பது பெரிய காரியமாக இருக்க முடியாது. பிறகு முழுவர்ண ரீதியான பிராமணனாக வாழமுடியவில்லை என்றாலும், கலியுக தர்மங்கள் மற்றும் சாத்தியக்கூறுகளுக்கும் ஏற்ப ஒருவன் எவ்வாறு பிராமணனாக வாழமுடியும் என்பதையும் அசோக் எடுத்துக் காட்டியதாக நான் கதையை கொண்டு சென்றிருப்பேன்.

அத்தனைக் காட்சிகளையுக் காண்பிக்க முடியாவிட்டால், காதம்பரி உண்மையிலேயே வசிஷ்டரின் மனைவி அருந்ததியே என கதையின் போக்கை மாற்றி அவளும் அதை உணர்ந்து அசோக்குடன் வாழ்வதையே சூசகமாக ஒரு எபிசோடில் காட்டியிருப்பேன். இத்தனை விஷயங்களையும் மேலும் ஒரே ஒரு எபிசோடில் காட்டியிருக்க இயலும்.

எது எப்படியோ நான் இம்மாதிரி சோ அவர்களை இம்மாதிரி முழுமையாகக் கண்டித்து இப்பதிவை போடுவேன் எனக்கனவிலும் நினைக்கவில்லை.

பொறுமையாக எனது எங்கே பிராமணன் சம்பந்தப்பட்ட பதிவுகளைப் படித்த எல்லோருக்கும் என் நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/30/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 109 & 110)

எபிசோடு 109 (28.06.2010) சுட்டி - 2
அசோக்கை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்னும் நோக்கத்திலேயே வக்கீல் கடைசியாக அந்த அஸ்திரத்தைப் பிரயோகம் பண்ணவிருக்கிறார், எல்லாமே நல்லபடியாக முடியும் என நாம் நம்புவோம் என நீலகண்டன் கூற, அந்த பிரும்மாஸ்திரத்துக்கு தனது நமஸ்காரம் என காதம்பரி கூறியதைக் கேட்கும் சோவின் நண்பர் பிரும்மாஸ்திரம் பாக்கி எல்லா அஸ்திரங்களிலும் பெரிதா என்னும் கேள்வியை வைக்கிறார்.

அந்த மாதிரி பொது புத்தியில் அமைந்து விட்டது என சோ கூறுகிறார். ஆனால் இன்னும் பல அஸ்திரங்கள் உள்ளன. உதாரணத்துக்கு நாராயணாஸ்திரம். அது பிரும்மாஸ்திரத்தை விடவும் பெரிது எனக்கூறாவிட்டாலும் அது பற்றிய வர்ணனைகள் அவ்வாறு நினைக்கவும் தூண்டலாம். அதே போல பிரும்மசிரஸ் என்ற இன்னொரு அஸ்திரமும் இருக்கிறது. அதை செலுத்தினால் அணு ஆயுதப்பிரயோகத்தின் அத்தனை கெட்ட பலன்களும் விளையும் என்பதும் கூறப்பட்டுள்ளது என்றெல்லாம் கூறும் சோ உதாரணமாக அஸ்வத்தாமனும் அருச்சுனனும் ஒருவரையொருவர் அழிக்கவிட்ட அந்த பிரும்மசிரஸ் அஸ்திரம் சம்ப்பந்தமாக இன்னும் கூறுகிறார்.

சிறையில் அசோக்கைப் பார்க்க வருகிறாள் காதம்பரி. ஒரு வேளை அசோக்தான் அக்கொலையை செய்திருப்பானோ என்ற தனது சந்தேகத்தையும் அவள் வெளிப்படையாகக் கேட்க, அசோக் திட்டவட்டமாகவே தான் அக்கொலையைச் செய்யவில்லை எனக்கூறுகிறான். எல்லாம் கடவுள் செயல் என அவன் மேலும் கூற, அதை புரிந்து கொள்ளமுடியவில்லை என அவள் கூறுகிறாள். அவன் திருவிளையாடலை யார்தான் அறியவியலும் என்றும் அசோக் கூறுகிறான்.

அசோக் எவ்வளவு வேதங்கள் படிச்சிருக்கான், அவனே அதை புரியவில்லை என்றால் என்ன அர்த்தம் என நண்பர் கேட்க, ஒருவன் தனக்கு எல்லாம் புரிந்தது எனக்கூறினால் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை எனப் பொருள் என்று சோ பதிலளிக்கிறார். ஒருவன் ஒரு விஷயம் தனக்குப் புரியவில்லை என்று கூறினால் அவன் அதைத் தேடி புரிந்து கொள்ள இயலும். அந்த அடக்கம்தான் தேவை, அது அசோக்கிடம் இருக்கிறது என்கிறார், சோ.

அது இருக்கட்டும், இந்தப் பெண் காதம்பரி அசோக்கைப் பற்றி என்ன நினைக்கிறாள் என சோவின் நண்பர் கேட்க, ஒரு பெண்ணீன் மனத்தை அறிய தேவர்களாலும் இயலாது என்னும் பொருள்பட அவர் ஒரு ஸ்லோகத்தைச் சொல்கிறார்.

திருமணத்துக்கு முன்னால் அவன் ஒரு விசித்திரப்பிறவி என்றே தானும் பலரைப் போலவே நினைத்ததாகவும், ஆனால் இப்போதுதான் அவன் எப்படிப்பட்ட ஞானஸ்தன் என்று தான் உணர்ந்ததாகவும், அவனுக்கு மனைவியானது தான் செய்தச் பெரும்பாக்கியம் என்றும் காதம்பரி உணர்ர்ச்சி பொங்கக் கூறுகிறாள்.

தான் தண்டனை அனுபவிக்க வேண்டியது அவன் சித்தம் என்றால் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றும், அப்படியின்றி இந்த நாடகத்தின் உச்சக்கட்டத்தில் அவன் ஏதேனும் அற்புதங்கள் நிகழ்த்தினாலும் அது பற்றியும் தான் ஒன்றும் செய்யவியலாது என்றும் அசோக் கூற, காதம்பரி அன்றைய தினலம் கோவிலில், கொட்டும் இடிமழையில் தங்களை ஆசீர்வதித்த அந்த தெய்வீக சன்னியாசி பற்றிக் பேசுகிறாள். அன்று விடியற்காலை அவர் தனது கனவில் வந்து எல்லாமே நல்லபடியாக முடியும் எனக்கூறிச் சென்றதாகவும் அவள் கூறுகிறாள்.

இதற்குள் பார்வையாளர் நேரம் முடிய, அசோக் செல்ல வேண்டியதாகிறது. அவன் சென்றதும் அவனுக்கே தெரியாமல் அவன் பற்றிய அந்த முயற்சியை அவனது வக்கீல் எடுக்கவிருப்பதையும், தான் உட்பட எல்லோருமே அத்ற்கு ஒப்புதல் தந்ததையும் எண்ணி அதற்காக அவனிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்கிறாள்.

(தேடுவோம்)

எபிசோடு - 110 (29.06.2010) சுட்டி - 2
அசோக்கின் வக்கீல் இப்போது தனது பிரும்மாஸ்திரத்தை எடுத்து வீசுகிறார். நான் எதிர்பார்த்ததுதான் என்றாலும் அது தேவையின்றி ஏதெனும் அற்புதம் நிகழ்ந்திருக்கலாகாதா என ஆதங்கப்பட்ட எனக்கு இப்போது மன்ம் சஞ்சலமடைவதை தவிர்க்க இயலவில்லை. அதாவது அசோக் மனநலம் குன்றியவன் ஆகவே அவனது செயல்களுக்கு அவன் பொறுப்பில்லை என்பதே அவர் வாதம். ஒரு தேர்ச்சி பெற்ற திறமையான வக்கீலுக்கு ஏற்ப அவர் தனது வாதங்களை முன்வைக்கிறார்.

அசோக் பணத்தையும் மண்ணையும் ஒன்றாக பாவித்து பணத்தை வீசி எறிந்தது, புத்தகங்களால் பலன் இல்லை என காலேஜ் புத்தகங்களை எரித்தது, தெருவில் போகும் ப்சு மாட்டை நந்தினி என அழைத்து அதனுடன் பேச முயன்றது (இதைக்கூடவா சேர்த்தார்கள் எனப் பொங்கிய என்னை முரளி மனோகர் தடுத்து பேசாமல் பாரு சீரியலை, இல்லாவிட்டால் இந்த எபிசோடுக்கு நான் பதிவு போடுகிறேன் எனச்சொல்லி என்னை அடக்கினான்), பணக்காரன் மகனாக இருந்தும் பிட்சை எடுத்தது, மனநல மருத்துவர்கள் அவனுக்காக எழுதித் தந்த மருந்துகளின் லிஸ்ட், இன்னும் பல விஷயங்களை வக்கீல் அடுக்கிக் கொண்டே போக கைலாயத்தில் உமா, நாரதர், விஸ்வாமித்திரர் புடை சூழ் வீற்றிருக்கும் பரமசிவன் இதெல்லாம் கேட்டு எல்லோருடனும் சேர்ந்து சிரிப்பது எனது மனதுக்கு ஆறுதலாக இருந்தது என்பதையும் குறிப்பிட்டு விடுகிறேன்.

வக்கீல் கூறக்கூற காதம்பரி, வசுமதி, நீலக்ண்டன் ஆகியோர் மனம் புழுங்குவதை காண முடிகிறது. நடுவில் இதை மேலும் காண இயலாத சாம்பு சாஸ்திரிகளோ வேம்புவை வெளியில் இழுத்துச் சென்று தனது ஆற்றாமையை அவரிடம் சொல்லி பிரலாபிக்கிறார். வேம்பு மிகவும் கஷ்டப்பட்டு அவரை சமாதானம் செய்கிறார். வர்ண ரீதியான பிராமணனாக வாழ முயன்றால் பைத்தியம் என்றுதான் பட்டம் கட்டுவார்களா என அவர் பொங்க, அவரை மிக சிரமப்பட்டு சமாதானம் செய்து வேம்பு கோர்ட்டுக்குள் இழுத்துச் செல்கிறார்.

அசோக்கை அரசு மனநல மருத்துவர் மூலம் பரிசோதிக்கச் செய்து பிறகு என்ன செய்வது என்பதை ஆராயலாம் என கோர்ட் கூறி கலகிறது. நாதன் டிஸ்சார்ஜ் ஆகலாம் என நீலக்ண்டன் கூற, அவரோ அசோக் கேஸ் பற்றி விசாரிக்க, நடந்ததைக் கூறுகிறார் நீலகண்டன்.

சாம்புவின் மகள் கருவுற்றிருப்பதை செல்லம்மா வீட்டில் உள்ளோருக்கெல்லாம் கூறி சர்க்கரை வழங்க அந்த சந்தோஷத்தில் சாம்புவால் பங்கு கொள்ளவியலவில்லை. அசோக்குக்கு நடந்த அநீதியை நினைத்து மனம் குமைகிறார் அவர். வர்ணரீதியான பிராமணன் என்றால் அவன் பைத்தியம்தானா என செல்லம்மா ஆதங்கத்துடன் கேட்க, சோவின் நண்பரும் அதே கேள்வியை வைக்க அவர் ஆமோதிக்கிறார். பாரதியாரை எல்லோரும் பைத்தியம் என்றுதானே கூறினார்கள், ஆனால் அவரோ மற்றவர்களை விட வித்தியாசமாகத்தானே வாழ்ந்தார்.

தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாட பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலெ - நான்
வீழ்வேன் னென்று நினைத்தாயோ!

என்றுதானே கடைசிவரை நின்றார். அதே போல அசோக் இங்கே ஆன்மீக உலகில் நிலைகொண்டு இருக்கிறான். அவனை பைத்தியமாகப் பார்ப்பவர்களுக்குத்தான் பிரச்சினை அவனுக்கல்ல என சோ அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறர்.

அர்த்த சாத்திரம் எழுஹிய சாணக்கியர் முக்கிய மந்திரி பதவியை வகித்தவர். ஆனால் அவர் வாழ்ந்தடோ ஒரு சிறு குடிசை. ஆனால் அதே போல இப்போது ஒரு மந்திரி நிஜமாகவே குடிசையில் இருந்தால் யாருமே அவரை மதிக்க மாட்டார்களே. அதுதான் உலகம்.

இருப்பினும் செல்லம்மாவுக்கு ஆறவேயில்லை. என்னதான் இருந்தாலும் ஒரு வக்கீலே தன் கட்சிக்காரர் பற்றி இவ்வாறு கூறலாமா எனக் கேட்க, சாம்புவோ அசோக்கை தூக்கு தண்டனையிலிருந்து தப்புவிக்க அவருக்கு வேறு வழி தோன்றவில்லை என்கிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/27/2010

எங்கே பிராமணன் சீரியலில் அசோக்காக நடிக்கும் அஃப்சரின் பேட்டி

தினமலர் 27.06.10 தேதியிட்ட வாரமலரில் வந்த இச்செய்தி/பேட்டியை அப்படியே எடுத்துப் போடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி தினமலர்.

ஜெயா, "டிவி'யில் திங்கள் முதல் வியாழன் வரை, இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பாகும், "எங்கே பிராமணன்?' தொடரை, பெரும்பாலானோர் பார்த்திருக்கலாம். வேதங்களில் சொல்லப்படும் வகையில், முழுமையாக வாழும் பிராமணன் எங்கு இருக்கிறார் என்று, இத்தொடரின் முதல் பாகத்தில் தன் தேடலை நடத்தும் அசோக் என்ற அந்த இளைஞன், இரண்டாம் பாகத்தில், முழு பிராமணனாக தானே வாழ்ந்து காட்டினால் என்ன என்ற சவாலை ஏற்று, அதன்படி வாழ்கிறார்.

இந்துக்கள் மட்டுமின்றி, எல்லா சமயத்தினரும் தொடர்ந்து, இந்த தொடரைப் பார்த்து, ரசித்து வருகின்றனர். "அசோக்' பாத்திரத்தில் ஒன்றி, எந்தவித அலட்டல், ஓவர் ஆக்டிங் இல்லாமல், அந்த தனித்தன்மை வாய்ந்த பாத்திரத்திற்கு சிறப்பு செய்கிறார். அசோக்காகவே மாறி விட்ட நடிகர் அப்சர், ஒரு இஸ்லாமிய இளைஞர். பேட்டியிலிருந்து:

திருநெல்வேலியைச் சேர்ந்த என் தந்தை ஷாகுல் ஹமீது, தமிழக அரசில் இன்ஜினியராகப் பணியாற்றினார். தமிழ் மீது அவருக்கு அபார பற்று. தாய் மொழியில் ஞானம் இருந்தால் தான், வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்பதில், முழு நம்பிக்கை கொண்டவர். எனவேதான், ஓரளவு வசதி இருந்தும், கான்வென்ட் பள்ளிகளில் எங்களை சேர்க்காமல், தமிழ் மீடியத்தில் தான் நாங்கள் படிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்.

பள்ளி, கல்லூரி மாணவராக இருக்கும் போதே நடிகனாக, கலைத்துறையைச் சேர்ந்தவனாகத்தான் உருவாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். பள்ளியில் படிக்கும் போதே, தூர்தர்ஷனில் அங்கீகரிக்கப்பட்ட நடிகனாக, ஆண்டுக்கு ஓரிரு, "டிவி' நாடகத்தில் நடித்தேன்.

பிரபல நடிகர் வி.கோபால கிருஷ்ணனின் கோபி தியேட்டர்ஸ்காக நாடகங்கள் எழுதும் பிரபல நாடக ஆசிரியர் விவேக் சங்கரின், "நித்தம் ஒரு யுத்தம்' மேடை நாடகத்தில் நடித்தேன். அந்த நாடகத் தின் அரங்கேற்றத்திற்கு வந்திருந்த நாடக ஆசிரியர், திரைப்பட வசனகர்த்தா, "வேதம் புதிது' கண்ணன், இயக்குனர் எஸ்.பி.முத்துராமனிடம் என்னைப்பற்றி சொல்ல, ஏவி.எம்.,மின், "நிம்மதி உங்கள் சாய்ஸ்' தொடரில், கதாநாயகியின் தம்பி மணி பாரதி பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அடுத்து, 2000த்தில், இயக்குனர் வெங்கட் இயக்கத்தில், ஏவி.எம்., மின், "சொந்தம்' 260 எபி சோடுகள் தொடரில், அண்ணிக்கு (மோனிகா) சப்போர்ட் பண்ணும், "பிரபா' என்ற பாத்திரத்தில் நடித்தேன். விகடன் டெலிவிஸ்டாசின், சுந்தர் கே. விஜயன் இயக்கிய, "அலைகள்' ஹிட் தொடரில், 400 எபிசோடுகளுக்கு மேல் முக்கியமான பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

"எங்கே பிராமணன்?' தொடரில் எனக்கு நடிக்க சான்ஸ் எப்படி கிடைத்தது என்பதற்கு என்னை விட, இயக்குனர் வெங்கட் பதில் சொல்வது பொருத்தமாக இருக்கும்.

"எங்கே பிராமணன்?' தொடரில், அசோக் பாத்திரத்தில் நடிக்க, அப்சரை எப்படி செலக்ட் செய்தீர்கள்? என்று டைரக்டர் வெங்கட்டை கேட்டபோது...

அசோக் ஒரு அசாதாரணமான இளைஞன். இளம் வயதிலிருந்தே, ஒரு குறிக்கோளோடு வேதங்களில் குறிப்பிட்டிருப்பது போன்று, எல்லா நியதிகளையும் கடைபிடித்து, முழு பிராமணனாக வாழ முயற்சிப்பவன். சாந்தமான முகம்; அலட்டிக் கொள்ளாத சுபாவம் கொண்ட இளைஞன்தான் அந்த காரெக்டருக்கு பொருத்தமாக இருக் கும். அப்சரின் முகம், குறிப்பாக அவரது கண்கள் ரொம்ப பவர்புல் லாக, பொருத்தமாக இருந்ததால், அவரை செலக்ட் செய்தேன்.

தன்னுடைய பாத்திரத்தை நன்கு உணர்ந்து, சீரியல் முழுவதும் நன்றாக நடித்திருக்கிறார். நிறைய ஹோம் ஒர்க் பண்ணினார். ஓவர் ஆக்டிங் செய்யாமல், கச்சிதமாக நடித்திருக்கிறார். வசனங்களை எளிதில் மனப்பாடம் செய்து, காட்சிக்கு ஏற்ப குரல் மாடுலேஷனோடு, தேவையான எக்ஸ் பிரஷனோடு பேசியிருக்கிறார். நிறைய புத்தகங்கள் படிக்கும் பழக்கமுள்ளவர் அப்சர்.
இந்த தொடரின் மற்றொரு ப்ளஸ் பாயின்ட் - ஒவ்வொரு எபிசோட்டிலும் சோ தோன்றி அளிக்கும் விளக்கங்கள்... வேதங்கள், உபநிஷத்துக் கள், ராமாயணம், மகாபாரதம், பாகவதம், பகவத் கீதை மற்றும் தமிழில் தெய்வீகப் பாடல்கள் ஆகியவற்றிலிருந்து ஸ்லோகங்களை சொல்லி, விளக்கம் தருகிறார்.

இந்து கலாசாரத்தில் கடைபிடிக்கப்படும் பல வழக்கங்கள், விரதங்கள், சடங்குகள், பூஜை முறைகள், நம்பிக்கைகள் உள்பட பல விஷயங் களுக்கு கேள்வி பதில் பாணியில், பலருக்கும் தெரியாத விளக்கங்களை எளிய நடையில் தருகிறார்.

சோவை சந்தித்து பேசியிருக்கிறீர்களா? என்று அப்சரை கேட்டதற்கு, "நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு இதுவரை கிட்டியதில்லை. டைரக்டர் வெங்கட், தொடருக்கான படப் பிடிப்பு ஆரம்பிக்கும் போது, தொலைபேசியில் சோவை அழைத்து, அவரோடு என்னை பேசச் சொன்னார். "உங்க ஆசிர்வாதம் வேணும் சார்!' என்றேன். "ஆல் தி பெஸ்ட்; நல்லா பண்ணுபா...' என்று, வாழ்த்தினார். "உன் காரெக்டருக்கு வேஷ்டியை, கணுக்காலுக்கு மேலே தூக்கி கட்டணும்; தழைய, தழைய கட்டறது மரியாதை இல்லை...' என்றார். ஒரு டயலாக்கை அவர் எடுத்துச் சொல்லி, எப்படி குரலை மாடுலேட் பண்ணி, ஏற்றி இறக்கி பேசணும்ன்னு சொல்லிக் கொடுத்தார்.

மிகவும் தூய்மையான, வியக்கத்தக்க இளம் பிராமணராக நீங்கள் நடித்திருப்பது பற்றி, உங்கள் சமுதாயத்தினரின் ரியாக்ஷன் எப்படி இருக்கிறது?

"இஸ்லாம்' என்ற சொல்லுக்கு சமாதானம், சகோதரத்துவம் என்று தான் அர்த்தம். 2008ல் இருந்து இரண்டு ஆண்டுகளாக எங்கே பிராமணன் முதல் பாகம், இரண்டாம் பாகங்களில் நடித்து வருகிறேன். எந்த ஒரு முஸ்லிம் சகோதரரோ, சகோதரியோ இந்த தொடரில் நான் நடித்ததற்கு ஆட்சேபம் தெரிவிக்க வில்லை; மாறாக, ஏராளமான முஸ்லிம் நண்பர்கள், சகோதரிகள் என் நடிப்பை, மனதார பாராட்டியிருக்கின்றனர்.

சகிப்புத் தன்மை, இஸ்லாமின் முக்கிய அங்கம். 99.99 சதவீதம் இஸ்லாமியர்கள் அப்படித்தான் வாழ்கின்றனர்; நினைக்கின்றனர். 0.01 சதவீதத்தினர் மாற்றுக் கருத்து கொண்ட வர்களாக இருக்கலாம்; வாழலாம். அதை வைத்து, முஸ்லிம் சமுதாயத்து மக்கள் எல்லாரும் அப்படித் தான் என்று நினைப்பது, வருந்தத்தக்க விஷயம்.

இந்த தொடரில் நடிப்பதன் மூலம், இந்து, இஸ்லாம் இரு மதங்களிலும், பொதுவாக எவ்வளவு விஷயம் இருக்கிறது என்று பார்க்க முடிகிறது.

கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே; வெற்றி வரும் போது பெருமகிழ்ச்சியும், தோல்வி ஏற்படும் போது துவண்டு போகவும் கூடாது என்று வேதங்களும், உபநிஷத்துக்களும் சொல்கின்றன. நடப்ப தெல்லாம், இறைவன் நாட்டப்படி தான் நடக்கிறது என்கிறது இஸ்லாம். "ஒருமித்த கருத்துக்கள், வேறு வேறு வார்த்தைகளிலே இந்து மதத்திலும், இஸ்லாமியத்திலும் சொல்லப்படுகின்றன.

பிரார்த்தனைகள், ஹோமங்களில், "ஓம் சாந்தி, ஓம் சாந்தி!' என்று சொல்கின்றனர். "சலாம் அலைக்கும்' என்று இஸ்லாமியர்கள், ஒருவரை ஒருவரை வரவேற்கும் போதும், முகமன் கூறும் போதும் சொல்கின்றனர்; அதற்கு சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும் என்று அர்த்தம்.
நம் சொந்த மதத்தையும், பிற மதங்களைப் பற்றியும் அக்கறையாக தெரிந்து கொண்டால், மக்களிடையே வேறுபாடுகளே இருக்காது.

இந்த தொடரில் நடித்ததன் மூலம் நீங்கள் கற்றது என்ன?நிஷ்காம கர்மா. வேலையையும் சரி, வேறு எதையும் சரி... எமோஷன் இல்லாமல், பற்று இல்லாமல் செய்யணும். வாழ்க்கையில் தினமும் செய்யும் வேலைகளில் இந்த சிந்தனையை நான் கடைபிடிக்கிறேன்; டென்ஷன் இல்லாமல், ரிலாக்ஸ்டாக இருக்கிறேன்.

நாம் விரும்புகிற மாதிரி நடக்க வில்லை; அதற்கு எதிராக நடந்தாலும், கடவுளின் விருப்பம் தான் நடந் திருக்கிறது என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு வந்திருக்கிறது. எல்லாம் நடந்தது, நான் ஒரு கருவி மட்டும் தான், நாம் இல்லை யென்றாலும் அது நடந்து விடும். நம்மால் தான் சாதிக்க முடியும் என்பதில்லை; நாம் இல்லா விட்டாலும், இன்னும் சிறப்பாக நடக்கும் என்று உணர்ந்தால், நம் ஈகோ பிரச்னை தீர்ந்துவிடும். வாழ்க்கை எளிதாகி விடுகிறது.


இந்த சீரியலில் வரும் எல்லோருக்குமே வேஷப்பொருத்தம் பிரமாதம், அதிலும் அசோக் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் அஃப்சர் அற்புதமாக நடிக்கிறார். எனது கேள்வி பதில் பதிவுகளில் ஒன்றில் இது சம்பந்தமாகக் கேட்கப்பட்ட கேள்வியும் பதிலும் இதோ:

கேள்வி: பிராமண அசோக் வேடத்தில் (கதாநாயகன்) நடிக்கும் நடிகர் ஒரு இஸ்லாமியர். தெரியுமா?
பதில்: நடிப்புத்தானே! இதில் என்ன பிரச்சினை? சோப்ராவின் மகாபாரதத்தில் அர்ஜுனனாக நடித்தது ஒரு இசுலாமியர். அதற்கென்ன இப்போது? பம்பாய் படத்தில் இசுலாமியராக கிட்டியும் இந்துவாக நாசரும் நடித்தனர். அதற்கு என்ன கூறுவீர்கள்?


இப்போது மனப்பூர்வமாகவே கூறுகிறேன், அஃப்சரைத் தவிர இப்போது வேறு யாரையும் இந்தப் பாத்திரத்திற்கு என்னால் கற்பனை கூட செய்ய முடியாது. அவருக்கு எனது பாராட்டுகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/26/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 105, 106, 107 & 108)

எபிசோடு - 105 (21.06.2010) சுட்டி - 2

(முதன்முறையாக இந்த சீரியலின் எபிசோடுகளை போடுவதில் மனச்சங்கடம் எனக்கு ஏற்படுகிறது. விஷயம் வேறொன்றுமில்லை. அசோக் சந்திக்கும் சோதனைகள்தான் மனதைக் கலக்குகின்றன. எல்லாமே கதைதானே என இருக்கவியலவில்லை. அசோக்குக்கு தெய்வ அனுக்கிரகம் கிட்டும், வசிட்டராகிய அவனுக்கு கிட்டாது யாருக்குக் கிட்டும் என்பதெல்லாம் புரிந்தாலும் தற்போதைய நிகழ்வுகளின் பாரம் மனதை அழுத்துகிறது. இருப்பினும் பல்லை கடித்துக் கொண்டு பதிவுகளை இடுவேன். இந்த மனப்பான்மைதான் என்னை 4 எபிசோடுகளாகச் சேர்த்து போட வைத்ததற்கு அடிப்படையான காரணம் என நினைக்கிறேன்).

அசோக்குக்காக வக்கீல் வைத்து வாதாடப்போவதாக நாதன் அவனிடம் கூற அவனோ வக்கீல் என்பவர் நியாயத்துக்காக மட்டுமே வாதாட வேண்டும் எனக் கூறுகிறான்.

சாம்பு வீட்டில் சந்துரு அப்பா அம்மாவிடம் ஆர்த்தி வீட்டில் சண்டை நடப்பதைக் கூறுகிறான். தான் உள்ளே போக பயந்து வந்து விட்டதாகவும் கூறுகிறான். ஆர்த்தி என்ன கஷ்டத்தில் இருக்கிறாளோ, தங்களாத்துக்கு வந்து விடப்போகிறாள் கோபத்துடன் என சாம்பு, சந்துரு, செல்லம்மா நினைக்க வந்து
நிற்கிறான் மாப்பிள்ளை. தனது பிறந்த வீட்டில் கோபித்துக் கொண்டு பெட்டியை எடுத்துக் கொண்டு மாமனார் வீட்டுக்கு வரும் நவீன மாப்பிள்ளை.

கேட்டரிங் வேலைக்கு தன்னையும் ஆள்குறைகிறது எனக்கூறி அப்பா அழைத்ததாகவும் தான் மறுக்கவே சண்டை வந்ததாகவும் கூற, சாம்புவுக்கு அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை. பின்னாலேயே புயலென வரும் ஆர்த்தி கணவனை கண்டித்து வீட்டுக்கு இழுத்துச் செல்கிறாள். அதிலும் தவறுதலாக தன் பெட்டியை மாப்பிள்ளை எடுத்து வந்ததாகக் கூற, அவன் முகத்தில் டன்டன்னாக அசடு வழிகிறது.

கோவிலில் வந்திருக்கும் செல்லம்மா நாதனை பார்த்து அறுதலாக விசாரிக்கிறாள். அசோக்குக்கு காலசர்ப்ப தோஷம் இருப்பதாகவும் திருநாகேஸ்வரத்துக்கு பிள்ளையை அழைத்து வந்து அஎச்சனை செய்வதாக வேண்டிக் கொள்ள வேண்டும் என சாம்பு கூறியதை செல்லம்மா நாதனிடம் கூறுகிறாள்.

நாதனைப் பார்க்க கைலாஷ் நகர் அசோசியேஷன் செயலாளர் வந்து விசாரிக்க நாதன் அவர் அசோசியேஷன் சம்பந்தப்பட்ட விஷயத்தால்தான் அசோக்கே இந்த வழக்கில் சிக்கியிருப்பதாகவும், அவரைப் பார்க்கவே தனகு வெறுப்பாயிருப்பதாகவும் கோபமாகப் பேசி நாதன் அவரை வெளியே போகச் சொல்கிறார்.

வக்கீல் கோபாலையரிடம் நாதன் அசோக் கேசை ஒப்படைக்கிறார். அவரும் வசுமதியும் பேசிக் கொண்டிருக்கும்போது சமையற்கார மாமி காப்பி கொண்டுவந்து வைக்கிறாள். நாதன் அவளை போலீசிடம் எல்லாவற்றையும் உளறியதற்காக சாடுகிறார்.

அந்தம்மா உண்மையைத்தானே சொன்னாங்க என சோவின் நண்பர் கேட்க, சில சமயங்களில் பொய்பேச வேண்டியதன் அவசியத்தை சோ உதாரணங்களுடன் விளக்குகிறார். மேலும் அந்தம்மா நேரில் எதையுமே பார்க்காது சிங்காரம் சொன்னதைக் கேட்டு பேசியது ஹியர்சே எவிடென்ஸ் ஒத்துக் கொள்ளமுடியாதது என்றும், அதைத் தர அவளுக்கு எந்த பிரமேயமும் இல்லையென்றும், நாதன் வீட்டு உப்பைத் தின்றுவிட்டு அவள் செய்தது தவறே எனவும் சோ கூறுகிறார்.

சமையற்கார மாமியை அனுப்பிவிட்டு நாதன் வசுமதியிடம் பேசும்போது அசோக்கே தன்னையுமறியாமல் இச்செய்கையை செய்திருக்கலாம் என்ற தனது சந்தேகத்தையும் வெளியிடுகிறார்.

கோவிலில் சாம்பு நாதனை சந்தித்து அசோக்குக்கு காலநேரம் சரியில்லையெனவும், அவனுக்கு சோதனை வரும் ஆனால் கடைத்தேறுவான் எனவும் அவனை வழிநடத்தும் சாமியார் கூறியதைக் கூறிவிட்டு மேலே பேசுகிறார். நாதனுக்கே பேசுவது சாம்பு சாஸ்திரிகள்தானா என்னும் ஐயம் வருகிறது. அவரிடமே kஏட்க, தனக்குள்ளிலிருந்து யாரோ பேசுவதாகவே தனக்கும் தோன்றுவதாக இருக்கும். சோதனை வரும், ஆனால் கடைத்தேறலும் நடக்கும் என அவர் திட்டவட்டமாகக் கூறுகிறார்.

(தேடுவோம்)

எபிசோடு - 106 (22.06.2010) சுட்டி - 2
அசோக்கின் கேஸ் ஆரம்பிக்கிறது. பிராசிக்யூஷன் வக்கீல் கேஸை சமர்ப்பித்தப் பிறகு அசோக்கின் வக்கீல் பேச ஆரம்பிக்கிறார். அசோக் ஒழுக்கமானவன், தர்மசிந்தனை உடையவன், பாரம்பரியம் மிக்க உயர்குலத்தைச் சேர்ந்தவன் என அவர் கூறுகிறார்.

பார்ப்பனர்கள் உயர்குலமா என நண்பர் ஆட்சேபிக்க, சோ அவர்கள் இந்த இடத்தில் குலம் என்பது குடும்பத்தைத்தான் அதாவது நாதனின் குடும்பத்தையே குறிக்கும் எனவும், சாதியில்லை எனவும் தெளிவுபடுத்துகிறார். பிறகு குலதர்மம் என்பதையும் பேசுகிறார். யுகதர்மமும் பேச்சில் வருகிறது. சம்பந்தப்பட்ட வீடியோவைக் காண்தலே சிறப்பாக இருக்கும்.

நாதனுக்கு கோர்ட்டிலேயே மைல்ட் அட்டாக் வர அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்கிறார் நீலகண்டன். ஐ.சி.யு.வில் அவரை சேர்க்கிறார்கள்.

சாம்புவும் வேம்புவும் பேசுகின்றனர். அசோக் மாட்டிக் கொள்ளாமல் புத்திசாலித்தனமாக நடந்திருக்கலாம் என பேச்சு வருகிறது. நண்பரும் அது உண்மைதானே என ஆமோதிக்க, சோ அவர்கள் அசோக் ஞானப்பாதையில் செல்கிறான். அவனது செயல்கள் வித்தியாசமாகவே இருக்கும் எனக்கூறிவிட்டு, மனிதன் என்பவன் எப்போதுமே தனிதான். சுற்றி எவ்வளவு பேர் இருந்தாலும் அவன் தனியேதான். அவனவன் செய்த காரியங்களின் பலனை அவனவனே அனுபவிக்க வேண்டும் எனக் கூறுகிறார்.

நீங்கள் நல்ல அறிவாளராகத் தோற்றமளிக்கிறீர்கள் என நண்பர் விதந்தோத, சோ சுயகிண்டலுடன் பேசுகிறார். பார்வைக்கு மட்டுமே குயிலும் காகமும் ஒரே நிறம், வசந்தகாலம் வந்தால் உண்மை வெள்ளிடைமலையாகும். அதே போல தன்னை அறிஞர்கள் நிறைந்த சபையில் நிறுத்திப் பேசவைத்தால் தனது லட்சணம் தெரியும் என்கிறார்.

(தேடுவோம்)

எபிசோடு - 107 (23.06.2010) சுட்டி - 2
அசோக் பற்றி சுப்புவும் அவள் நாத்தனாரும் வேணமட்டும் இளப்பமாகப் பேசிய பிறகு சுப்பு வசுமதிக்கு ஃபோன் போட்டு அசோக்கை பற்றி அங்கலாய்ப்பாகவும், புகழ்ந்தும் பேசி சீன் காட்டுகிறாள். அவள் கணவர் வேம்பு அவளை இதற்காகக் கண்டிக்கிறார். அசோக் அவன் அப்பாவிடம் சொல்லி இந்த வீட்டை அவர்களுக்கு வாங்கித் தரவில்லையானால் அவர்கள் நடுத்தெருவில்தான் நின்றிருப்பார்கள் என்பதையும் அவர் சுட்டிக் காட்ட, சுப்புவின் நாத்தனார் அதையும் புறம் தள்ளுகிறாள். பாத்திரமறிந்து பிச்சையிட்டிருக்க வேண்டும் அசோக் என வேம்பு நொந்து கொள்கிறார்.

சாம்பு அப்போது வர அவரிடம் நாதன் பற்றி விசாரிக்கிறார்கள். ராமர் காட்டுக்குப் போனார் என்பதையறிந்ததுமே தசரதர் உயிர்துறந்தார் என வேம்பு கூற அப்படியா எனக் கேட்கிறார் சோவின் நண்பர். வால்மீகி ராமாயணத்தில் அப்படியில்லை என சோ விளக்குகிறார். ராமர் காட்டுக்கு சென்ற சில நாட்கள் கழித்துத்தான் அவர் உயிர் துறக்கிறார் எனவும், அதுவும் அவர் அத்தனை நாட்கள் புத்திர சோகத்தை அனுபவிப்பதே அவருக்கு முன்னால் ஒரு ரிஷியால் இடப்பட்ட சாபம் என்பதையும் அவர் விளக்குகிறார்.

மரத்திலிருந்து விலகும் பழம் கீழே விழ வேண்டும் என்பது புவி ஈர்ப்பு விதிப்படி நடப்பது, ஆனால் யாராவது அதை கையால் தாங்கிப் பிடித்தால் அது விழாது அல்லவா? அசோக் இப்போது கீழே விழும் பழம், ஆனால் கடவுள் அருள் இருந்தால் அவன் விழ மாட்டான் என்று சாம்பு பூடகமாகச் சொல்கிறார்.

அசோக் வீட்டிற்கு வக்கீல் கோபாலையர் வருகிறார். அசோக்கைக் காப்பாற்ற ஒரு உபாயம் சொல்கிறார். ஆனால் அதைக் கூறும்போது வாய்ஸ் ஓவர் ஆகிறது. இதற்கு நாதன் ஒத்துக் கொள்வாரா என வசுமதியும் நீலகண்டனும் கவலைப்படுகின்றனர். எதற்கும் காதம்பரியையும் ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

(தேடுவோம்)

எபிசோடு - 108 (24.06.2010) சுட்டி - 2
காதம்பரி, அவள் அக்கா மற்றும் அத்திம்பேர் அசோக்கைக் காப்பாற்ற வக்கில் கொடுத்த உபாயம் பற்றிப் பேசுகின்றனர். இந்த உபாயம் ரொம்பக் கொடூரமானது ஒத்துக் கொள்ள முடியாது என காதம்பரி கூறுகிறாள். கடவுளின் சோதனை என அத்திம்பேர் கூற, அம்மாதிரி கொடூர மனதுடைய கடவுளை ஒதுக்கி வைக்குமாறு காதம்பரி கோபமாகக் கூறுகிறாள்.

எங்கள் போன்றவர்களை விடுங்கள் சார், உங்களைப் போன்ற தெய்வ நம்பிக்கையுடையவர்களை கடவுள் ஏன் சோதிக்கிறார் என சோவின் நண்பர் கேட்க, சோ அவர்கள் இதெல்லாம் கர்மபலன் என்றே கூறுகிறார். மகாபாரதத்திலிருந்து கௌதமி என்னும் பென்ணின் மகனை சர்ப்பம் தீண்டி மகன் இறக்க, அப்போது வந்த விவாதங்கலை உதாரணமாகத் தருகிறார். பிறகு அசோக் பற்றி பேசுகையில் அசோக் வசிஷ்டர். ஆனால் இங்கு நாதனின் புதல்வர்’ ஆகவே இம்மாதிரி சோகங்கள் அனுபவிக்க வேண்டியது நாதன் மர்றும் அவர் குடும்பத்தாரின் கர்ம பலனாகக் கூட இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

வக்கீல், நீலகண்டன் மர்றும் வசுமதிஉ நாதனைப் பார்க்க வருகின்றனர். அவர் அசோக் கேஸ் விவரம் குறித்து ஆவலோடு கேட்க, அவரிடம் வக்கீல் தான் யோசித்து வைத்த உபாயம் பற்றிக் கூறுகிறார். வேறு வழியில்லையா என நாதன் கேட்டுவிட்டு, மனமின்றி சம்மதிக்கிறார்.

காதம்பரியின் சம்மதத்தை பெற நீலக்ண்டன் முயலுகிறார். அவளோ இது பற்றி அசோக்கின் அபிப்பிராயம் என்ன என்று கேட்க, அசோக் கண்டிப்பாக இதற்கு ஒத்துக் கொள்ளமாட்டான் எனவும், ஆகவே அவனை கேட்கவில்லை என்றும் பதில் வருகிறது. வேறு வழியின்றித்தான் வக்கீல் இந்த உபாயத்தை கையில் எடுக்க க்க நேர்ந்தது எனக் கூற, வக்கீல் கையில் எடுத்துக் கொண்டதும் மிக அழிவுகளை தரக்கூடியதுமான அந்த பிரும்மாஸ்திரத்துக்கு தன் நமஸ்காரங்களை காதம்பரி தெரிவிக்கிறாள்.

அதென்ன சார் பிரும்மாஸ்திரம், அவ்வளவு அழிவைத் தருமா என சோவின் நண்பர் கேட்கிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/18/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 103 & 104)

எபிசோடு - 103 (16.06.2010) சுட்டி - 2
இரவு 12 மணிவரை அசோக் வீட்டுக்கு வராததால் காதம்பரி கவலைஅடைகிறாள். அப்போதுதான் அசோக்கும் உள்ளே வர அவன் எங்கே போயிருந்தான் என அவள் கேட்கிறாள். மனம் சரியில்லாததால் பீச்சில் போய் உட்கார்ந்திருந்ததாக அவன் பதிலளிக்கிறான்.

அடுத்த நாள் காலை வையாபுரி கொலை செய்யப்பட்ட செய்தியை சிங்காரம் வந்து நாதனிடம் கூற அவர் ஸ்தம்பித்து நிற்கிறார். ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என வசுமதி கவலையுடன் கேட்க, எல்லாமே தலையெழுத்து என அவர் சைகை காட்டுகிறார்.

வையாபுரி வீட்டில் அவனது பி.ஏ.வை போலீஸ் விசாரிக்க அவன் அசோக் வையாபுரியுடன் இரண்டு நாட்கள் முன்னால் சண்டை போட்டதை எடுத்துரைக்கிறான்.

இப்போ பாத்தீங்களா, போலீஸ் எல்லாரையும் முறையாகவே விசாரிக்கிறாங்க, முன்காலம் போல இல்லை என நண்பர் சிலாகிக்க, சோ அவர்களோ எவிடென்ஸ் ஆக்ட் பற்றி மனுஸ்மிருதியில் விரிவாகவே கூறப்பட்டதை எடுத்துரைக்கிறார். சுந்தரமூர்த்தி நாயனாரை சிவபெருமான் தடுத்தாட்கொண்ட கதையை கூறுகிறார். அதில் சாட்சிகள் மூவகைப்படும், அவையாவன, ஆட்சி, ஆவணம் மற்றும் அயலார் கண்ட சாட்சி என்கிறார். அவற்றையும் ஒவ்வொன்றாக விளக்குகிறார். அப்படியே சுந்தர மூர்த்தி நாயனார் கதையையும் சுவைபடக் கூறுகிறார். அதை அனுபவிக்க வீடியோவைக் காண்க.

அசோக் வீட்டில் வந்து இன்ஸ்பெக்டர் சமையற்கார மாமி, சிங்காரம் ஆகியோரை ஒவ்வொருவராக விசாரிக்கிறார். என்ன வேண்டுமானாலும் ஆகட்டும் பார்த்துக் கொள்வோம் என விரக்தியாகப் பேசுகிறார் நாதன். அசோக் மேலுள்ள சந்தேக வலை மெதுவாக இறுகுகிறது.

(தேடுவோம்)

எபிசோடு - 104 (17.06.2010) சுட்டி - 2
சிங்காரத்தை விசாரித்ததும் காதம்பரியை விசாரிக்க ஆரம்பிக்கிறார் இன்ஸ்பெக்டர். அதற்குள் அசோக்கே வந்து விட அவனை விசாரித்து விட்டு பிறகு ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கிறார். தன் அக்காவிடம் ஆறுதலுக்காக வருகிறாள் காதம்பரி. அசோக் இந்தக் கொலையை செய்திருக்கவே முடியாது என அவள் அக்கா உறுதியாகக் கூற, காதம்பரியோ தயங்குகிறாள்.

ஸ்டேஷனில் அசோக்கை மேலும் விசாரிக்க, அவனோ பதட்டமேயில்லாது பதிலளிக்கிறான். நடந்ததை நடந்தபடி கூறுகிறான். சம்பவம் நடந்த இரவு 9 மணிக்கு தான் பீச்சில் இருந்ததாக அவன் கூற, இன்ஸ்பெக்டர் அதை நம்ப மறுக்க, அவனோ அதற்காக தான் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிடுகிறேன். பிறகு அவனை லாக்கப்பில் வைக்கிறார்கள்.

சாம்பு சாஸ்திரிகள் வீட்டில் அவரும் செல்லம்மாவும் அசோக் கேஸ் பற்றி விவாதிக்கிறார்கள். அசோக்கின் ஜாதகத்தை பார்க்கும் சாம்பு அவனுக்கு கால சர்ப்ப தோஷம் இருக்கிறது எனவும், திருநாகேஸ்வரத்துக்கு சென்று அர்ச்சனை செய்தல் நலம் என சாம்பு கூற, அது என்ன கால சர்ப்ப தோஷம் என சோவின் நண்பர் கேட்கிறார். சோ தான் இதுபற்றி பம்மல் சந்தான குருக்கள் என்ற சோதிட வல்லுனரை கேட்டதாகவும், அவர் இதற்கு சரியான பெயர் கால சர்ப்ப யோகம் என்று சொன்னதாகவும் கூறுகிறார். ராகு கேது ஆகிய இரு சர்ப்பங்களுக்கிடையில் மீதி கிரகங்களின் வீடுகள் அமைந்தால் இது நடக்கும் எனக் கூறிக்கேட்டதாகவும் அவர் கூறுகிறார். இதற்கு மேல் எனது சோதிட அறிவு போதாமையால், நண்பர்கள் சுப்பையா, சித்தூர் முருகேசன் ஆகியோர் இந்த எபிசோடுக்கான வீடியோவைப் பார்த்து விட்டு ஏதேனும் பின்னூட்டமிட்டால் நன்றாக இருக்கும்.

செல்லம்மாவிடம் சாம்பு சாஸ்திரிகள் அசோக்குக்காக கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்யுமாறு கூற, அந்த உத்தமப் பெண்மணியும் அவ்வாறே செய்வதாக மனசாரக் கூறுகிறார். அசோக்கின் நலத்தில் உண்மையாகவே அக்கறை கொண்டுள்ள இந்த எளிய தம்பதியரின் நிலைப்பாடு மனதுக்கு நிறைவாக உள்ளது.

லாக்கப்பில் அசோக்கைப் பார்த்து நாதனும் வசுமதியும் கலங்குகின்றனர். சத்தியத்துக்கு சோதனை வருவது ஒன்றும் புதிதில்லையே என அசோக் கூற, சத்தியம் என்பது அபாயகரமான விஷயம், அதனுடன் சங்காத்தம் வைத்துக் கொண்டதால்தான் அசோக்குக்கு இந்த சோதனை என நாதன் கோபப்பட்கிறார். ஒரு வேளை ஒரு நொடிநேர ஆவேசத்தில் இவனே வையாபுரியை கொலை செய்திருப்பானோ என்ற தனது ஐயத்தையும் அவர் அவனிடம் கூறுகிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/16/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 101 & 102)

எபிசோடு - 101 (14.06.2010) சுட்டி - 2
அரசியல்வாதி நல்லத்தம்பியிடம் ஒரு தொழிலதிபர் தான் துவங்க விரும்பும் பொறியியல் கல்லூரியை நிறுவ அவரிடம் அரசியல் உதவிகள் எதிர்பார்க்கிறார். ஆகவே கணிசமான சூட்கேஸ் கைமாறுகிறது.

சாம்பு வேம்பு வீட்டில் மின்சார பில் குறித்து சர்ச்சை எழுகிறது. வேம்பு வீட்டை இரண்டாகப் பிரிக்கும் யோசனையை முன்வைக்கிறார்.

காரடையார் நோன்பு காதம்பரியின் அக்கா காஞ்சனா செய்து விட்டு கணவனுடன் பேசுகிறாள். அது பற்றி கணவர் கேட்க சுமங்கலிகள் தத்தம் கணவர் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்கான பிரார்த்தனை அது என விளக்குகிறார். கூடவே வாய்க்கு ருசியான உப்பு மற்றும் வெல்ல அடை கிடைப்பதால் அவளது கணவனுக்கு அது டபுள் ஓக்கே.

சோவின் நண்பர் அவரிடம் காரடையார் நோம்பு பற்றி கேட்க, அவர் அதன் அடிப்படை சாவித்திரி சத்தியவான் கதையிலிருந்து வருவதாக கூறியவர் மற்றப்படி வேறு ஏதும் பலமான சாத்திர அடிப்படை இல்லையெனவும் கூறுகிறார்.

பொறியியல் கல்லூரி துவக்க பணம் தந்தவரை நல்லத்தம்பி ஏமாற்ற, அவரும் கருவிய வண்ணம் செல்கிறார். இங்கு அசோக் நாதனிடன் தான் போய் நல்லத்தம்பியைப் பார்ப்பதாக சொல்ல அவர் அவனை செல்ல வேண்டாம் எனக்கூறுகிறார். ஆனால் அவன் கேட்பதாக இல்லை.

(தேடுவோம்)

எபிசோடு - 102 (15.06.2010) சுட்டி - 2
அரசியலில் நல்லத்தம்பி போன்றவர்கள் ஏமாற்றுவது சகஜம் எனக்கூறிய நாதனிடம் அசோக் தன்னைப் போன்ற ஒருவர் போய் அவனைக் கேட்பது அவசியம் எனக்கூறி செல்கிறான். எதற்கும் இருக்கட்டும் என நாதன் சிங்காரத்தையும் கூட அனுப்பி வைக்கிறார். நல்லத்தம்பி அசோக்கிடம் அலட்சியமாகப் பேச அவன் பொங்கி எழுகிறான். ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு செய்த அபசாரம் ஒரு வேளை தீய பலனைத் தராது போகலாம் ஆனால் ஒரு ஜனசமூகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம் செய்பவன் மேலேயே திரும்பும் என அசோக் கூறுகிறான்.

அப்படியா சார் என நண்பர் கேட்க, தனக்கு ஆதரவாக இருந்த ராஜதர்மா என்னும் கொக்கைக் கொன்று, செய்நன்றி மறந்த கௌதமன் என்னும் பார்ப்பனனின் கதையை சோ கூறுகிறார். விரூபாட்சன் என்னும் அரசனால் மரண தண்டனை விதிக்கப்பட்டு கொலையுண்ட அந்த நன்றி மறந்தவனது பிணத்தை உண்ண ஓநாய்கள், கழுகுகள் கூட மறுத்தன எனக்கூறும் சோ செய்நன்றி மறப்பதின் தீமையைக் கூறுகிறார்.

அசோக் பேசுவதை கேட்டு நல்லத்தம்பியும் கத்த ஆரம்பிக்க உள்ளே வரும் சிங்காரம் இருவரையும் சமாதானம் செய்ய முயல்கிறான். அப்போது நல்லத்தம்பி வாய் தவறி தான் வையாபுரியே என்னும் உண்மையை உளறிவிடுகிறான். கார் விபத்தில் அவன் தப்பித்த கதையையும் கூறுகிறான். அசோக் கடைசியில் அவனுக்கு கோபத்துடன் சாபமிட்டுச் செல்கிறான். அவனது ஆவேசத்தைக் கண்டு சிங்காரம், நல்லத்தம்பி, அவன் பிஏ ஆகியோரும் அசந்து போய் நிற்கின்றனர்.

நாதனிடம் நடந்ததைக் கூறும் சிங்காரம் வையாபுரிதான் நல்லத்தம்பி எனக்கூற அவரும் திடுக்கிடுகிறார். இருப்பினும் இப்போதைக்கு யாரிடமும் சொல்ல வேண்டாம் எனவும் கூறுகிறார். சிலவாரங்களுக்கு முன்னால் நடந்த காரடையார் நோன்பு அன்றைக்கு காதம்பரி தனது புடவை தலைப்பு பற்றிக் கொண்டது பற்றிக் கூற வசுமதி கவலையில் ஆழ்கிறாள்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/13/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 99 & 100)

எபிசோடு - 99 (09.06.2010) சுட்டி - 2
உமாவின் மாமியார் ரமேஷ் நாதனை சந்திக்கும் விஷயத்தை அவளுடன் விவாதிக்கிறாள். நாதன் உதவி செய்வாரா என அவள் மனம் மயங்க, கண்டிப்பாக செய்வார் என உமா உறுதியாகக் கூறுகிறாள்.

நாதன் அலுவலகத்தில் ரமேஷ். உமாவையும் குழந்தையையும் தான் பிரிய நேர்ந்தது விதியே என அவன் கூற, விதிதான் அவனை உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கச் சொன்னதா என நாதன் கேள்வி கேட்கிறார். பிறகு சாந்தமடைந்து அவன் எங்கும் வேலைக்கு போக முடியாது என்பதை சுட்டிக் காட்டுகிறார். கெட்டவன் என முத்திரை குத்தப்பட்ட அவனைப் போன்றவர்களுக்கு வாழ்க்கை கடினமே என நாதன் மேலும் கூறுகிறார்.

இது பற்றி நண்பர் சோவிடம் கேட்க அவர் யதார்த்த உலகில் அதுவே நிலை எனக்கூறுகிறார். மாரீசனின் கதைஅயையும் கூறுகிறார். மனந்திருந்தி வாழும் மாரீசனை ராவணன் கட்டாயப்படுத்தி மாயமானாக வரச்செய்து சீதையைக் கவருகிறான். இருப்பினும் மாரீசனுக்குத்தான் கெட்டப் பெயர் என சோ கூறுகிறார்.

சாம்பு வேம்பு வீட்டில் அவர்களது மனைவியரிடையே மன வேறுபாடுகள் ஆரம்பமாகின்றன. கோலம் போடுவதில் சண்டை ஆரம்பிக்கிறது. பின்னால் வரப்போகும் சண்டைகள் குறித்தும் கோடி காட்டப்படுகிறது.

நாதனிடம் அசோக் நீலக்ண்டனுக்கு வாக்களித்தப்படி அவரது மாப்பிள்ளை ரமேஷுக்கு உதவி செய்யுமாறு வலியுறுத்துகிறான். நாதன் அதை மனமேயின்றி செய்ய முற்படுகிறார். அசோக்கினது உபதேசம் தன்னைப் போன்றவர்களுக்குத்தானா, நல்லத்தம்பி கூடத்தான் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என அவர் சுட்டிக்காட்ட, அவரும் நல்லத்தம்பியும் ஒன்றல்லவே என அசோக் மிருதுவாகக் கூறுகிறான். அவனது ஹிதோபதேசம் தன்னைப் போன்றவர்களுக்குத்தானா என நாதன் கேட்க, அதென்ன ஹிதோபதேசம் என சோவின் நண்பர் கேட்கிறார்.

நல்ல உபதேசங்களே ஹிதோபதேசம் எனக்கூறும் சோ விஷ்ணு சர்மாவின் பஞ்சதந்திரக் கதைகள் பற்றி விவரிக்கிறார். விசுவாசம், துரோகம் ஆகியவற்றை விளக்கும் கதைகளையும் சொல்கிறார்.

நீலக்ண்டன் தன் வீட்டுக்கு மகளையும் மாப்பிள்ளையையும் வரச்சொல்லி, நாதன் ரமேஷுக்கு ஒரு சிறுதொழில் செய்யத் தேவையான கடனுக்கான செக்கை தன்னிடம் கொடுத்ததை மாப்பிள்ளையிடம் தர, உமாவும் ரமேஷும் மனம் நெகிழ்கின்றனர். இப்போதெல்லாம் அசோக் கைகாட்டுபவர்களுக்கு நாதன் தயங்காமல் உதவி செய்வதாக நீலக்ண்டன் தான் கண்டறிந்த விஷயத்தைக் கூறுகிறார். மகளையும் மாப்பிள்ளையையும் கோவிலில் செக்கை வைத்து பிரார்த்தனை செய்யச் சொல்கிறார்.

(தேடுவோம்)

எபிசோடு - 100 (10.06.2010) சுட்டி - 2
நாதன் ஆஃபீசில் அசோக் எவ்வாறு வேலை செய்கிறான் என வசுமதி கேட்க, அங்கு வந்து அவன் எல்லோரையும் சிக்கனம் என்னும் பெயரில் படுத்துகிறான் என அவர் அலுத்துக் கொள்கிறார். இது பற்றி அசோக்கிடம் வசுமதி விசாரிக்க, அவனோ நாதனே திகிலடையும் வண்ணம் அவரது கம்பெனி செய்யும் பல தில்லுமுல்லு காரியங்களைப் பட்டியலிடுகிறான்.

கோவிலில் வைத்து சாம்பு ரமேஷ் மற்றும் உமாவுக்காக பூஜை செய்து ஆசிகள் வழங்குகிறார். தனது காரியங்களை ஈசனின் துணையுடன் செய்யுமாறு அவர் தன் பங்குக்கு அறிவுரை கூறுகிறார். ரமேஷும் ஒத்துக் கொள்கிறான்.

வேம்பு சோர்வாக படுத்திருக்க, சுப்புலட்சுமி அவரை விசாரிக்கிறாள். தான் ஒரு வீட்டுக்கு சென்று நவக்கிரக ஹோமம் செய்து வந்ததால் சம்பந்தப்பட்ட வீட்டினர் நன்மையடைந்தாலும் அதை செய்து வைக்கும் புரோகிதர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் என்றும், அது தொழில்சார்ந்த உடல் உபாதை என்றும் கூறி விளக்குகிறார். மற்றவர்கள் எளிதாக நினைப்பதுபோல வெறுமனே மணியடித்து பிச்சை எடுப்பதுபோல உண்மையான பிராமணனது நிலை இல்லை. அவர்களுக்கான விதிமுறைகள் கடுமையானவை என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

அசோக்கும் உமாவும் கோவிலில் சந்திக்கின்றனர். ரமேஷ் பற்றி அசோக் விசாரிக்கிறான். உமா விடைபெற்று சென்றதும் நாரதர் தனது வழமையான சன்னியாசி வடிவில் அசோக்கை பார்க்க வருகிறார். அவனுக்கு இன்னும் பல சோதனைகள் வருமெனவும் ஆனால் சூறாவளியிலும் அசையாது நிற்கும் விளக்குச் சுடரையா நீர் என அவர் கூறுகிறார்.

அது எப்படி சார் சூறாவளியில் விளக்குச் சுடர் நிற்கும் அசையாமல் என நண்பர் கேட்க, இவ்வரிகள் பகவத் கீதையை ஒட்டி வருகின்றன எனவும் ஆனால் அதில் கூட சூறாவளி பிரஸ்தாபம் வரவில்லை என்றும், இங்கே சும்மா டிராமடிக்காக கூறுவதற்காகவே சேர்க்கப்பட்டது என சோ கூறுகிறார்.

அசோக்குக்கு சோதனை வரும் எனவும் ஆனால் அவனுக்கு ஈசன் அருள் உண்டெனவும் கூறிவிட்டு அப்பால் செல்கிறார். அசோக் திகைப்புடன் பார்க்கிறான்.

[என்னை மிகவும் உணர்ச்சிவசப்படச் செய்த காட்சி இது. அதை நான் கூற என்னிடம் வார்த்தைகள் இல்லை. ஆகவே வேண்டுமெனவே தட்டையான வரிகளில் கூறி முடிக்கிறேன். ஆர்வம் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட வீடியோவை பார்த்துக் கொள்ளட்டும். நான் கூறியவை வெறும் ஜூஜூபி என்பது தெரியவரும்].

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/09/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட் - 97 & 98)

எபிசோடு - 97 (07.06.2010) சுட்டி - 2
அசோக் வேலைக்கு செல்லும் நாள். தந்தையின் நிறுவனத்திலேயே ஒரு நல்ல உத்தியோகம். எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். சாம்பு சாஸ்திரிகள் பூஜை முடிந்து எல்லோருக்கும் கற்பூரத் தட்டை நீட்ட எல்லோரும் கண்ணில் ஒற்றிக் கொள்கின்றனர். காதம்பரியும் நாதனும் நடந்ததை மறந்து சுமுகமாகின்றனர். நாதன் ஆஃபீசுக்கு காரில் கிளம்ப, அசோக்கோ பஸ்ஸிலேயே செல்கிறான். காதம்பரி கஷ்டப்பட்டு அவனை ஒரு ஷர்ட் போட்டுக் கொள்ள செய்கிறாள். பேண்ட் போட மறுத்து வேட்டியிலேயே செல்கிறான்.

சாம்பு விடைபெற்றுச் செல்ல, மாமியாரும் மருமகளும் அவர் சென்ற பிறகு அவரை இகழ்கின்றனர். அலுவலகத்தில் ரமேஷ் அசோக்கைப் பார்க்க வருகிறான். உமாவுடன் பேசி தன்னுடன் வந்து வாழக் கூறுமாறு கேட்டுக் கொள்ள, அசோக்கும் சம்மதிக்கிறான். தனது செயல்களுக்கு வருத்தம் தெரிவித்து தான் படும் சிறுமைகளை குறிந்து மனம் நொந்து பேசுகிறான். அசோக் அவனுக்கு ஆறுதல் சொல்கிறான். அவனையும் உமாவையும் சம்பந்தப்படுத்தி தான் சந்தேகித்ததை குறித்து மன்னிப்பும் கேட்கிறான். ஒரு சலவைத் தொழிலாளி எழுப்பிய சந்தேகத்தால் சீதையே அக்கினிப் பிரவேசம் செய்ய நேர்ந்ததை அசோக் குறிப்பிடுகிறான்.

சோவின் நண்பர் இது பற்றிக் கேட்க, சோ முதலிலேயே ஒன்றை தெளிவுபடுத்தி விடுகிறார். அக்கினிப் பிரவேசம் என்பது யுத்தம் முடிந்த உடனேயே நடந்து விட்டது. அலவைத் தொழிலாளியின் கதையோ பின்னால்தான் வருகிறது. அதுவும் வால்மீகி ராமாயணத்தில் சலவைத் தொழிலாளி என குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நாட்டில் பலரும் சந்தேகப்பட்டனர். இதெல்லாம் கூறிவிட்டு உத்திர ராமாயணத்தில் வரும் அந்த நிகழ்வுகள் பற்றி மேலும் பேசுகிறார். எப்போதுமே என் மனதை சஞ்சலம் செய்யும் இந்த விஷயங்களும், அதுவும் என் அப்பன் ராமபிரானா இவ்வாறு அநியாயமாக நடந்து கொண்டானே என்ற எனது ஆதங்கமும் இது பற்றி மேலே பேச விடாமல் என்னைத் தடுக்கின்றன.

ரமேஷ் விடைபெற்று செல்கிறான். அசோக் கோவிலில் உமாவை சந்தித்துப் பேசுகிறான். அவளோ அவன் கூறும் அறிவுரைகளை சுலபத்தில் ஏற்றுக் கொள்வதாக இல்லை. இவ்வளவு இரக்கம் பற்றிப் பேசும் அவன் முதலில் ஏன் ரமேஷை போலீசில் காட்டிக் கொடுக்கும்படி தனக்கு உபதேசித்தான் என கடைசியாக அவனை கேள்வி கேட்கிறாள்.

(தேடுவோம்)

எபிசோடு - 98 (08.06.2010) சுட்டி - 2
உமாவின் கேள்விக்கு புன்னகையுடன் அசோக் பதிலளிக்கிறான். சட்டம் நாமே போட்டது அதை நாம்தான் மதிக்கணும். ஆகவேதான் ரமேஷ் சட்டத்தை மீறியதற்காகாக போலீசில் புகார் கொடுக்கும்படி அறிவுரை அச்சமயம் தரப்பட்டது. அவ்வாறே கைதும் செய்யப்பட்டு, வழக்கை சந்தித்து இப்போது வேளியே வந்து விட்டான் ரமேஷ். அவன் இப்போது உமாவிடம் வந்து காலில் விழாத குறையாக தன்னை மன்னிக்குமாறு கேட்கிறான். இப்போது அவனுக்கு ஒரு வாய்ப்பைத் தருவதன் மூலம் அவன் திருந்தும் சந்தர்ப்பம் வந்திருக்கிறது. சட்டம் தண்டிக்க மட்டும்தான் செய்யும், அது திருத்துவது என்பது சந்தேகத்துக்குரியதே. ஆனால் சட்டம் இல்லாவிட்டால் எல்லோருமே துணிந்து தவறுகள் செய்வார்கள். நாடே அழியும் என்கிறான் அசோக்.

அப்படியா சார் எனக்கேட்கும் நண்பருக்கு 90% கேஸ்களில் இதுதான் யதார்த்தம் என்கிறார் சோ. போக்குவரத்து விதிகளை போலீஸ்காரர் இருக்கும்போதுதான் சாதாரண ஜனங்களே மதிக்கிறார்கள். ஒருவரும் அருகில் இல்லாத போது போக்குவரத்து விளக்குகளின் சமிக்ஞைகளை சுலபமாகவே மீறுகிறார்கள். தண்டனை அளிப்பது அரசனின் கடமை. சத்திரியனால்தான் அது முடியும். ஒரு பார்ப்பனனால் முடியாது. ஆகவேதான் பார்ப்பனர்கள் எப்போதுமே அரசர்கள் ஆகவியலாது. இதையெல்லாம் மனுவே அழுத்தந்திருத்தமாகவே கூறிவைத்துள்ளார் என்கிறார் சோ.

ரமேஷை கைது செய்த சட்டமே அவனை விட்டதற்கு முக்கியக் காரணமே அக்குற்றத்தின் மூல வேரை அவன் காட்டிக் கொடுத்து அப்ரூவராக மாறியதாலேயே என்கிறான் அசோக். அதை அடிப்படையாக வைத்துத்தான் அவனுக்கு விடுதலை கிடைத்தது என்றும் அவன் கூறுகிறான். இப்போதும் சட்டத்தை மதித்து நாமும் நடக்க வேண்டும் என்கிறான் அசோக். வீடணன் சரணாகதி அடைந்தது போல அவன் உமாவிடம் சரணடைந்தான் என அசோக் கூற, இந்த இடத்தில் சிடியை நிறுத்திப் பேச ஆரம்பிக்கிறார் சோ. விபீஷண சரணாகதியும் ரமேஷ் இங்கு சரணடைந்ததும் ஒன்றே அல்ல. ஆகவே இவ்விரண்டையும் சேர்த்து அசோக் பேசியது ஒத்துக் கொள்ள முடியாது என்கிறார் சோ. பிறகு வீடணன் சரணாகதி படலத்தையும், அது குறித்து ராமரின் சகாக்கள் பேசியதையும் எடுத்துரைக்கிறார். கடைசியில் ராமரின் சுயதருமம் யார் சரணாகதி அடைந்தாலும் அவனைக் காப்பாற்றுவதே என்பதையும் கூறுகிறார். இதெல்லாம் கூறியபிறகு இப்போதெல்லாம் சரணாகதி என்ற கோட்பாடு எப்போது முன்னுக்கு வந்தாலும் வீடணனின் உதாரணமே தரப்படுவதையும் கூறுகிறார்.

அசோக்கின் வாதங்களை ஏற்று உமா தன் தந்தையுடன் ரமேஷ் வீட்டுக்கு செல்கிறாள். ரமேஷ் மனம் மகிழ்கிறான். இப்போது ரமேஷின் பொருளாதார நிலை பற்றிப் பேச்சு வருகிறது. அவனுக்கு வேலை இல்லை. அவனை வெளியே அழைத்துவர வீட்டையும் அடமானத்தில் வைத்திருக்கிறார்கள். இப்போது உமா ரமேஷிடம் அவன் நாதனை பார்க்கச் செல்ல வேண்டும் எனவும் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறாள். முதலில் மிகத் தயங்கும் அவன் கடைசியில் அவ்வாறே செய்ய ஒத்துக் கொள்கிறான்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/05/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 95 & 96)

எபிசோடு - 95 (02.06.2010) சுட்டி - 2
காதம்பரியின் குத்தல் பேச்சு தொடர்கிறது. இது கற்பனை கதைதான் என்றாலும் சாம்பு படும் துயரம் கண்முன்னால் விஸ்வரூபம் எடுக்கிறது. வார்த்தைகளால் எப்படி கொல்ல முடியும் என்பதை காதம்பரி காட்டும் இடம் அந்த நடிகையின் திறமையையே காட்டுகிறது.

சாம்பு வேம்பு வீட்டில் காதம்பரி நடந்து கொண்டது பற்றி விவாதம் தொடர்கிறது. நாதன் வீட்டில் இருக்கும் ஆண்களின் பெருந்தன்மை அவர் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இல்லை என வேம்புவின் மனைவி சுப்புலட்சுமி அபிப்பிராயப்படுகிறாள். வீட்டுப் பத்திரத்தை திருப்பித் தரவேண்டியதுதான் என வேம்பு கூற அது நாதனை அவமானப்படுத்துவதாகாதா என சாம்பு குழம்புகிறார். வேம்புவின் சகோதரியோ இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் எனக்கூற, அவளை சாஸ்திரிகளின் மனைவிகள் அடக்கிவிடுகின்றனர். ரொம்பவும் யதார்த்தமாக அதே சமயம் இம்மாதிரி காட்சிகளில் வந்திருக்கக்கூடிய மெலோடிராமாக்கள் ஏதுமின்றி இரு வைதிகர் குடும்பங்களுக்கு நேர்ந்த அந்த அவமானம் விஸ்வரூபமெடுக்கிறது.

சாம்பு தன் மகள் ஆர்த்தியை கோவிலுக்கு வரவழைத்து அவளிடம் நடந்ததை கூறி அவள் கையில் அந்த வீட்டுப்பத்திரத்தை தந்து நாதனிடம் கொடுத்துவிட்டு வருமாறு கூறுகிறார். அதே கோவிலுக்கு வந்திருக்கும் வேம்புவிடம் ஆர்த்தி இது பற்றிக் கூற அவர் சாம்புவிடம் வந்து பத்திரத்தை தங்களிடம் தந்தது அசோக், ஆகவே தாம் இருவருமே அவனிடம் சென்று கூறுவதுதான் மரியாதை எனக்கூறுகிறார். சாம்பு இதன் நியாயத்தை ஒத்துக் கொண்டாலும் இந்த சங்கடமான நிலையில் விவேகமாக செயல்படும் திறமை ஆர்த்திக்கே உண்டு என்பதால் அவளே செல்லட்டும் என்கிறார். சரஸ்வதிகளையுடன் இருக்கும் அந்த உத்தமப் பெண் தனது தந்தைக்கு ஏற்பட்ட துயரத்தை உள்வாங்கிக் கொண்டு செல்லும் காட்சியும் அற்புதம்.

(வால்மீகி ராமயணம் கிஷ்கிந்தா காண்டத்தில் சுக்ரீவன் சீதையை தேடுவதில் தாமதம் செய்வதால் கோபமுற்ற ராமன் வாலியின் மேல் பாணம் செலுத்திய ராமனின் அம்புறாத்தூணியில் மேலும் பாணங்கள் உள்ளன என சுக்ரீவனுக்கு தெரியப்படுத்துமாறு லட்சுமணனை அனுப்ப அவனும் அண்ணனின் முழு கோபத்தையும் தன்னுள் வாங்கிக் கொண்டு செல்லும் காட்சிதான் எனக்கு இங்கே நினைவுக்கு வந்தது).

அசோக் கையில் பத்திரத்துடன் நிற்கிறான். தனது குரு சாம்பு சாஸ்திரிகளை அவமதித்த ஆர்த்தியிடம் அவள் ஏன் அப்படி செய்தாள் என கேட்க, வசுமதி வந்து தனது நாட்டுப்பெண்ணுக்கு பரிந்து பேசுகிறாள். அசோக் அவளை சில வார்த்தைகளில் அடக்கி, காதம்பரியிடம் அவளிடம் தன் மேல் இன்னும் ஏதேனும் மரியாதை பாக்கியிருந்தால் அவளே சாம்பு சாஸ்திரிகளிடம் அந்தப் பத்திரத்தை திருப்பித் தரவேண்டும் என கட்டளையிடுகிறான். அவளும் அதை எடுத்து கொண்டு செல்கிறாள், தன் அக்கா வீட்டிற்கு.

அவளது அக்காவோ அவள் அவசரப்பட்டு விட்டதாகவும் இதனால் அவளது மதிப்பு புக்ககத்தில் அதல பாதாளத்தில் விழுந்து விட்டது என்றும் எடுத்துரைக்கிறாள். அவளோ கேட்பதாக இல்லை.

சோவின் நண்பர் காதம்பரியின் இச்செய்கை பற்றி சோவிடம் கேள்வி கேட்கிறார். அதற்கு அவர் பத்ம புராணத்திலிருந்து ஒரு கதையை கூறுகிறார். கணவனை சிறிது மதிக்காது இருக்கும் பெண்ணொருத்தி அடுத்த பிறவியில் படும் கஷ்டங்கள் விவரிக்கப்படுகின்றன.

(தேடுவோம்)

எபிசோடு - 96 (03.06.2010) சுட்டி - 2
காதம்பரி பிடிவாதமாக அக்காவின் வீட்டிலேயே இருக்கப் போவதாகக் கூறுகிறாள். வீட்டுப் பத்திரத்தை சாம்பு சாஸ்திரிகள் வீட்டில் நேரில் போய் தரவும் மறுக்கிறாள். ஆகவே வேறு வழியின்றி அவளது அக்காவே அதை எடுத்துக் கொண்டு சாம்பு சாஸ்திரிகளின் வீட்டுக்கு செல்கிறாள். அங்கு சாம்புவோ வேம்புவோ இல்லாததால் செல்லம்மாவும் சுப்புலட்சுமியும் அதை வாங்கிக் கொள்ள தயங்குகின்றனர். பிறகு வேம்புவின் செல்பேசிக்கு ஃபோன் செய்து அவரிடம் தகவல் தரப்பட, அவர் சாம்புவிடம் கலந்து பேசி பத்திரத்தை வாங்கிக் கொள்ளுமாறு சொல்ல, அவர்களும் அதை ஏற்கின்றனர்.

இதற்குள் அசோக்குடன் காதம்பரியின் அக்கா சாம்பு வீட்டிலிலிருந்தே பேசி அவனிடம் விஷயத்தைக் கூறுகிறாள். சாம்பு வீட்டுக்கு காதம்பரியை நேரிலேயே போகுமாறு தன் கூறியிருக்க அவளோ அக்கா மூலமாக அதை கொடுத்து விட்டது அவன் மனதை உறுத்துகிறது. காதம்பரியை அவள் அக்கா வீட்டுக்கே சென்று சந்திக்கிறான். அவளை வீட்டுக்கு வருமாறு அழைக்க அவள் தனக்கு நாதன் வீட்டில் அவமானம் ஏற்பட்டதாகக் கூறி வர மறுக்கிறாள்.

இப்போது ஃப்ளாஷ்பேக்.
காதம்பரியை தீவிரமாக கண்டிக்கிறார் நாதன். சாம்புவுக்கு தான் தந்த வீடு தன் சுயசம்பாத்தியத்தால் வந்ததெனவும் அதை யாருக்கு வேண்டுமானாலும் தரும் உரிமை தனக்கு மட்டுமே உண்டு என்றும், வேறு யாரும், வசுமதி உட்பட, அதில் தலையிட முடியாது எனவும் அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறார். வசுமதி அவரை சமாதானப்படுத்தும் முகமாக. காதம்பரி அவரை தந்தையாக நினைத்ததாலேயே அத்தனை உரிமை எடுத்துக் கொண்டாள் எனக் கூற, நாதன் தானும் அவளை மகளாக நினைத்ததாலேயே இந்த புத்திமதி கூறுவதாக சொல்லிவிடுகிறார்.
ஃப்ளாஷ்பேக் முடிந்தது.


அவர் கூறியதில் தவறு என்ன என அசோக் கேட்கிறான். இப்போது காதம்பரி வேறு கோணத்திலிருந்து பேசுகிறாள். தான் தர்மபத்தினியாக இருக்க முழு முயற்சிகள் செய்வதாகவும் ஆனால் அசோக்கொ உண்மையான கிருஹஸ்தனாக செயல்படவில்லை எனவும், தனது சம்பாத்தியத்தில்தான் தன் மனைவியை காப்பாற்ற வேண்டும் எனக் கூற, அசோக் இதன் நியாயத்தன்மையை உணர்ந்து சிறிது நேரம் அமைதி காக்கிறான். பிறகு தானும் ஒரு நல்ல வேலை தேடிக்கொள்ளப் போவதாக அவன் கூறுகிறான்.

என்ன சார் அசோக் இப்படி சொல்லி விட்டான்? இது வர்ணரீதியான பிராமணனுக்கு விதிக்கப்பட்ட கிரஹஸ்தாஸ்ரமப்படி சரியா எனக் கேட்க, சோ நிதானமாக ஆனால் அழுத்தமாகக் கூறுகிறார் சரியில்லை என. பிறகு வர்ணரீதியான பிராமணனுக்கு விதிக்கப்பட்ட கடுமையான விதிகளை விவரிக்கிறார். ஆனால் அவை இக்காலத்தில் முழுமையாகக் கடைபிடிக்க முடியாதவை எனவும் அவர் கூறுகிறார். இப்போது அசோக் செய்வது வர்ணரீதியான வைசியன் செய்வது என்கிறார். ஆனாலும் தற்காலத்தின் நிதர்சனங்களால் அவனது ஒவ்வொரு முயற்சியும் தோல்வியடைகின்றன என்றும் கூறுகிறார். அவ்வப்போது சமரசங்கள் தவிர்க்க முடியாதவையாக ஆகின்றன, இம்முறையும் அப்படித்தான் என அவர் கூறுகிறார்.

அசோக் சொன்னதைக் கேட்டு காதம்பரி மனம் மகிழ்ந்து அவனுடன் தனது புக்காத்துக்கு கிளம்புகிறாள். அசோக் கேட்டுக் கொண்டபடி அடுத்த நாள் காலையே அவள் சாம்பு சாஸ்திரிகளிடம் ஃபோனில் பேசி மன்னிப்பு கேட்கிறாள். சாம்பு வீட்டில் காதம்பரியின் மனமாற்றம் பற்றி பேசுகிறார்கள். அசோக் வேலைக்குப் போகப்போவது பற்றியும் பேசுகிறார்கள்.

அசோக்காக உருமாறி வந்திருக்கும் வசிஷ்டர் எவ்வாறு மேலே செயல்படப் போகிறார் என்பதை அறிந்து கொள்ள நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6/02/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 93 & 94)

எபிசோடு - 93 (31.05.2010) சுட்டி - 2
யயாதி பற்றிய கேள்விக்கு சோ புன்னகை பூக்கிறார். யயாதியை பற்றி இதுவரை சொல்லாத விவரங்களையும் கூறுகிறார். ஒரு கதையை எங்கே முடிக்கிறோமோ அப்போது வெவ்வேறு பாத்திரங்களுக்குள்ள இமேஜ் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கும். ஆனால் நிஜ வாழ்வில் கதை அப்படியே முடிவடைவதில்ல. மேலும், சூழ்நிலைக்கேற்ப ஒருவன் நடந்து கொள்வதால் அவனைப் பற்றிய கருத்தும் சில சமயம் தலைகீழாகவும் மாறிவிடுகிறது. அதுதான் யயாதியின் விஷயத்திலும் நடக்கிறது. ஆயினும் அவன் மொத்தத்தில் ரொம்ப தர்மிஷ்டன் என சோ முடிக்கிறார்.

சாம்பு வேம்பு சாஸ்திரிகளுக்கு வீடு வாங்கித் தருமாறு அசோக் சொன்ன யோசனையை ஏற்ற நாதனிடம், இதை அவர்களிடமும் கூற வேண்டும் எனக்கேட்க, நாதன் அவர்கள் அப்போது கோவிலுக்கு போயிருப்பதை அறிந்து கொண்டு அசோக்கையே அனுப்புகிறார். அசோக் கோவிலுக்கு கிளம்பிப் போக பின்னாலேயே அவனைக் கூப்பிட்டுக் கொண்டு வரும் காதம்பரியை அவன் கவனிக்காமல் போய் விடுகிறான்.

ஷாப்பிங்கிற்கு கிளம்பும் வசுமதி அவளையும் கூடவே அழைத்து செல்கிறாள். காதம்பரி முதலில் மறுத்தாலும் வசுமதி கேட்பதாக இல்லை. கோவிலில் வைத்து சாம்பு மற்றும் வேம்பு சாஸ்திரிகளிடம் அசோக் வீட்டு விஷயத்தைக் கூற இருவருமே நன்றியுணர்ச்சியில் மனம் நெகிழ்கின்றனர்.

ஷாப்பிங்கிலிருந்து திரும்ப வரும் காதம்பரி அசோக் திரும்ப வந்திருப்பானோ எனத் தயங்க, வசுமதியோ அசோக் கோவிலுக்குப் போனால் சன்னிதி சன்னிதியாக நின்றுவிட்டுத்தான் வருவான் என்றும், அதிலும் மௌனகுரு தட்சிணாமூர்த்தி சன்னிதியருகில் ரொம்ப நேரம் நிற்பான் எனவும் கூறுகிறாள்.

அது என்ன தட்சிணாமூர்த்தி கதை என சோவின் நண்பர் கேட்க, சிவபெருமானே தட்சிணாமூர்த்தியாக இளவயது குருவாக தன்னை விட வயோதிகர்களுக்கு மௌனம் மூலமாகவே பாடம் எடுப்பதைக் கூறுகிறார். தட்சிணாமூர்த்தியிலிருந்துன் ஆரம்பித்து, குரு பரம்பரை வரிசையை குறிப்பிட்டு விட்டு, இது ஸ்மார்த்த சம்பிரதாயருக்கு உரியது எனவும், அது போல மற்ற சம்பிரதாயங்களில் அதனதற்கான வெவ்வேறு குரு பரம்பரைகள் உண்டு எனவும் கூறுகிறார்.

வீட்டினுள் வந்து பார்த்தால் அசோக் ஹாலில் அமர்ந்திருக்கிறான். சங்கடப்படும் வசுமதி அங்கிருந்து பைய நழுவ, காதம்பரியுடன் பேசுகிறான். அவள் காரில் போனது பற்றி குறைகூற, அவளோ அவன் முன்னாலெல்லாம் சைக்கியாட்ரிஸ்டை பார்க்கப் போன போதெல்லாம் காரில்தானே போனான் என கேட்கிறாள். அப்போதெல்லாம் தான் வர்ணரீதியான பிராமணனை தேடிக் கொண்டிருந்ததகவும் ஆனால் இப்போது தானே வர்ணரீதியான பிராமணனாக்க வாழ் முயற்சிப்பதாகவும் ஆகவேதான் இந்த மாற்றம் என்று கூறுகிறான். காதம்பரி ஷாப்பிங்கில் வசுமதி தனக்கு வாங்கித் தந்த 15000 ரூபாய்க்கான புடவையையும் 55000 ரூபாய் மதிப்புள்ள நெக்லசையும் குறிப்பிடுகிறாள். மானத்தைக்காக்க நூல் புடவையே போதும் எனவும், பட்டுப்புடவை அனாவசியம் என்றும் அசோக் கூற, அப்படியானால் பட்டுவியாபாரிகள் எல்லாம் இழுத்துமூடிக்கொண்டு போக வேண்டியதுதானா என சோவின் நண்பர் கேட்கிறார்.

(தேடுவோம்)

எபிசோடு - 94 (01.06.2010) சுட்டி - 2
சோ அசோக் மட்டுமல்ல, மகாபெரியவாளே பட்டு கூடாது என கூறியிருப்பதை எடுத்துரைக்கிறார். பலபட்டுப்பூச்சிகளை கொன்றே பட்டுப்புடவைகள் நெய்யப்படுவதால் அதை ஒதுக்கக் கூறுகிறார் அவர் எனவும் சோ கூறுகிறார். அதே சமயம் அசோக் சொல்லும் எளிமைகள் பிராமணனுக்கு மட்டுமே என சோ தெளிவுபடுத்துகிறார். ராமாயணத்தில் கூட சீதை ராமரைப்போல மரவுரி அணியத் தேவையில்லை என வசிஷ்டர் குறிப்பிட்டதாக அவர் மேலும் கூறுகிறார். அசோக் சொல்வதை எல்லோரும் செய்ய வேண்டியதில்லையாதலால் பட்டு வியாபாரிகள் கவலை கொள்ள வேண்டாம் என சோ முடிக்கிறார்.

நூல் புடவையை விட ஆதிகாலவாசிகள் மாதிரி இலை தழைகளை அணிந்தால் இன்னும் பணம் மிச்சப்படுத்தலாம் என காதம்பரி கூற, எளிமையாக இரு என்று தான் கூறுவதை எதிர்த்து அவள் செய்யும் விதண்டாவாதமே என அசோக் பதில் கூறுகிறான். பிறகு அவளது செய்கைக்காக அன்று அவன் உண்ணப்போவதில்லை என அவன் கூறிவிட, காதம்பரி புடவையையும் நகையையும் மாமியாரிடமே ஒப்படைத்து விடுகிறாள். அசோக்குக்கு தான் பெண்டாட்டி இல்லை என்றும் தர்மபத்தினியே என்றும் அவள் வருத்தத்துடன் கூற, வசுமதி திகைக்கிறாள்.

சாம்பு மற்றும் வேம்பு சாஸ்திரிகளிடம் அசோக் வீட்டுப் பத்திரத்தை ஒப்படைக்கிறான். அவர்கள் நாதனுக்கு மிகவும் நன்றி கூறுகின்றன்றனர். வீட்டுக்கு திரும்பும் அசோக் நாதனிடம் தகவல் தருகிறான். அவரது தர்ம சிந்தனையை சிலாகித்து தன் மேல் வைத்த பாசத்தில் ஒரு பகுதியையாவது கடவுள் மேல் வைக்கச் சொல்கிறான். அது தன்னால் ஆகாத காரியம் என நாதன் கூறுகிறார். பிறகு சாஸ்திரிகளுக்கு வீடு தந்ததில் வசுமதிக்கு தன் மேல் கோபம் என நாதன் கூற, தான் அம்மாவை சமாதானப்படுத்துவதாக அசோக் கூறுகிறான். ஆனால் காதம்பரியே அவனை அதற்காக கோபிக்கிறாள். அசோக் அவள் சொல்வதை லட்சியம் செய்யவில்லை. அவள் கோபித்து கொண்டு சாப்பிடப்போவதில்லை எனக்கூற அவன் அவளை அப்படியே விட்டு விடுகிறான். காதம்பரி திகைக்கிறாள்.

சாம்பு வேம்பு வீட்டினர் நாதனின் தர்மகுணம் பற்றிப் பேசுகின்றனர். இங்கே நாதன் வீட்டில் சாம்பு பூஜைக்காக வர காதம்பரி வசுமதி கொடுக்கும் தைரியத்தில் அவருடன் குத்தலாகப் பேசுகிறாள். அவர் வீட்டை ஒத்துக் கொண்டிருக்கக்கூடாது என கூற, சாம்பு திகைக்கிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/29/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 91 & 92)

எபிசோட் - 91 (26.05.2010) சுட்டி - 2
நாதன் ஜட்ஜைப் பார்த்து பேசுகிறார். கைலாஷ் டைம்சில் அசோக் பற்றி எழுதும் முன்னாலே தன்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே என அவர் அங்கலாய்க்கிறார். தானே கோவில் புனருத்தாரணத்துக்கான பணத்தை தந்திருப்பேனே எனக்கூறி அவர் வருத்தப்பட, இது தனக்கு ஏற்கனவேயே தோன்றாமல் போயிற்றே என ஜட்ஜும் மன்னிப்பு கேட்கிறார். நாதன் ஒரு பிளாங்க் செக் தந்து விட்டு செல்கிறார்.

காதம்பரி தன் அக்கா வீட்டுக்கு வருகிறாள். அசோக்கிடம் தான் படும் கஷ்டங்களைச் சொல்லி புலம்புகிறாள். அசோக் கதா காலட்சேபத்துக்கு போக, அவள் கதா படத்துக்கு சென்றாளாமே என அவளது அத்திம்பேர் கேட்க, பின்னே வேற என்ன செய்வது என அவள் திரும்பக் கேட்கிறாள். அது ஒரு காதல் கதை, ஆனால் அதுபற்றி அசோக் கேட்டபோது அது ஒரு பக்திப் படம் எனக்கூறி தான் சமாளித்ததை அவள் கூறுகிறாள். ஒரு பத்தினி தன் பர்த்தாவிடம் பொய் சொல்லலாமா என அத்திம்பேர் கேட்க, அவர் வேண்டுமானால் அரிச்சந்திரனாக இருக்கட்டும் தன்னால் முடியாது என அவள் பதிலளிக்கிறாள். அரிச்சந்திரனின் மனைவியின் தாலி அவன் கண்களுக்கு மட்டும்தான் தெரியும் எனவும், ஆனால் காதம்பரியின் தாலி தன் கண்களுக்கு தெரிகிறதே என அவள் அத்திம்பேர் கிண்டலடிக்கிறார்.

அரிச்சந்திரன் மனைவியின் தாலி கதை தனக்கும் தெரியும் என சோவின் நண்பர் குறிப்பிட, அந்த தாலி மேட்டர் ஒரு பிற்சேர்க்கையே என சோ அழுத்தந்திருத்தமாக கூறுகிறார். பிறகு அரிச்சந்திரனின் முழுக்கதையையும் சுருக்கமாகவே கூறுகிறார் (இதை நானும் சமீபத்தில் 1968-ல் படித்திருக்கிறேன்). பொய்யே பேசாதவன் எனப் பெயரெடுத்த அரிச்சந்திரன் உண்மையிலேயே ஆரம்பத்தில் பொய்யுரைத்த கதையும் அதில் வருகிறது. அவனுக்கு மகன் பிறக்கவில்லை என வருணனை நோக்கி தபஸ் செய்ய, அவனும் பிள்ளை வரம் தருகிறான். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன், அப்பிள்ளையை தனக்கு பலி தரவேண்டும் என. அரிச்சந்திரனும் எப்படியாவது பிள்ளை வந்தால் போதும் என அதற்கு ஒத்துக் கொல்ள லோகிதாட்சன் அவனுக்கு பிறக்கிறான்.

ஆனால் பிறகு பிள்ளையை வருணனிடம் தராமல் சாக்கு போக்கு சொல்லியே தள்ளிப் போடுகிறான். அப்போதே பல பொய்களை கூறியவனாகி விட்டான். பிறகு இன்னொரு ஏழையின் பிள்ளையை விலைக்கு வாங்கி அவனை பலி கொடுக்க எண்ணியபோது விஸ்வாமித்திரர் அப்பிள்ளைக்கு வருண மந்திரத்தை உபதேசித்து அவனை அதை சொல்ல வைக்கிறார். வருணனும் வந்து அப்பிள்ளையை ஆசீர்வதிக்க, எல்லாமே சுபமாக முடிகிறது.

ஆனால் அதற்கு பிறகு அரிச்சந்திரன் தான் சொன்ன பொய்களுக்கு பிராயச்சித்தமாக ஒரு பொய் கூட சொல்லாமல் வாழ்ந்து நல்ல பெயர் பெறுகிறான். அவனது குரு வசிஷ்டர் அதற்காக அவனை சிலாகித்து பேச, விஸ்வாமித்திரர் வசிஷ்டரை வெறுப்பேற்றவே அரிச்சந்திரனுக்கு அத்தனை சோதனைகள் வைக்க, அவனும் வெற்றி பெறுகிறான் என கதை போகிறது. ஆனால் ஒரிஜினல் கதையிலோ தாலி விஷயம் இல்லவே இல்லை. இதே மாதிரி பல நிகழ்ச்சிகள் பிற்சேர்க்கையால் மெருகேற்றப்படுகின்றன எனக் கூறும் சோ உதாரணங்களையும் அடுக்குகிறார். அவற்றில் சில வாலிக்கு இந்திரன் அளித்த மாலை எதிராளியின் பாதி பலத்தை முதலிலேயே கிரகித்துக் கொள்வது, லட்சுமணன் கோடு கிழிப்பது, குசேலருக்கு 27 பிள்ளைகள் ஆகியவை ஆகும்.

எப்படியாவது காதம்பரி தன் கணவனை மாற்ற வேண்டுமென அவள் அக்கா கூற, மாறியது தான் மட்டுமே எனக் கூறி அவள் உதாரணங்களை அடுக்குகிறாள்.

நாதன் வீட்டில் வசுமதி காதம்பரியிடம் அவள் அசோக் பற்றி அவளது பிறந்தகத்தில் குறை கூறியது குறித்து கண்டிக்கிறாள். அவரை எப்படி மாற்றுவது என்பது தெரியவில்லை என காதம்பரி வருத்தப்பட, வசுமதி அவளுக்கு ஒரு ஐடியா சொல்கிறாள். அதன்படி அடுத்த நாள் அவர்கள் கோவிலுக்கு நடந்து செல்லும்போது காதம்பரியின் செருப்பு ‘அறுந்து’ போகிறது. வீட்டுக்கு திரும்பிச் சென்று காரில் போகலாம் என அவள் யோசனை கூற, கோவிலுக்கு செல்லும்போது படாடோபம் கூடாது என அசோக் மறுக்கிறான். வாக்குவாதம் இவ்வாறே வளர, கோவில்களில் நைவேத்தியம் செய்து பக்தர்கள்தானே பிறகு அதை உண்கிறார்கள், விக்கிரகம் உண்ணவில்லையே என அவள் கேள்வி கேட்கிறாள். அது சூரியன் கடல் தண்ணீரை உறிஞ்சுவது போல புறக்கண்களுக்கு தெரியாது என அசோக் பதிலளிக்கிறான்.

அது எப்படி சார், தண்ணீரை சூரியன் உறிஞ்சினால் தண்ணீர் குறைவது நமது கண்ணுக்கு தெரிகிறதே, ஆனால் நைவேத்தியத்தின் அளவு குறைவதில்லையே என சோவின் நண்பர் கேட்கிறார். சோ ஒரு எதிர் கேள்வி போடுகிறார், அப்படி நைவேத்தியத்தின் அளவு குறைந்தால் மறுபடி யாராவது நைவேத்தியம் செய்வார்களா என.

(தேடுவோம்)

எபிசோட் - 92 (27.05.2010) சுட்டி - 2
சோ மேலும் பேசுகிறார். நிவேதனம் என்றால் காட்டுதல் எனப் பொருள். பகவானிடம் உனதருளால் இன்றைய அன்னம் கிடைத்தது. இதை உன் ஆசியுடன் எடுத்துக் கொள்கிறேன் எனச் சொல்லி தன்னடகத்தை வளர்த்து கொள்ளவே செய்யப்படுகிறது. விக்கிரகம் உண்ணும் என்று பொருள் அல்ல. அப்படியெல்லாம் நாம் அளிக்கும் அன்னத்தை உண்ண நாம் என்ன கண்ணப்ப நாயனாரா என சோ மேலும் கிண்டலுடன் கேட்கிறார். அசோக் கொடுக்கும் விளக்கம் தவறானது என்றும் கூறுகிறார்.

காதம்பரி விடாது பேசுகிறாள். சரி கார் வேண்டாம், ஆட்டோ வைத்துக் கொண்டு போகலாமே என அவள் கேட்க, அதுவும் படாடோபமே, மேலும் கோவிலுக்கு நடந்து போவதே சிறப்பு என அவன் பதிலளிக்கிறான். கடைசியில் வீட்ட்லிருந்து அவர்கள் அதிக தொலைவில் இல்லையென்றும், காதம்பரி வீட்டுக்கே செல்லலாம் எனவும் அவன் கூறிவிட்டு மேலே செல்கிறான்.

காதம்பரி வீட்டுக்கு வந்து வேறு செருப்பு அணிந்து செல்ல, வசுமதி தான் சொன்ன ஐடியா (செருப்பு அறுந்து போவது) என்னவாயிற்று என கேட்க, காதம்பரி அது ஊத்திக்கிச்சு எனக்கூறிவிட்டு வேகமாக போய் அசோக்குடன் சேர்ந்து கொள்கிறாள். அவனும் அவளை ஒரு பெரிய புன்னகையுடன் வரவேற்க, இது என்ன எப்போதுமே புத்தர் போல அவன் புன்முறுவல் பூக்கிறான் என காதம்பரி ஆச்சரியப்படுகிறாள். அது போதாதா அசோக்குக்கு, இப்படித்தான் பகவான் புத்தர் ஒரு சமயத்துல என பேசியவாறே நடக்க, காதம்பரி ஒரு அற்புதமான கேமரா லுக் தருகிறாள்.

நீலகண்டன் வீட்டுக்கு நாதன் வந்திருக்கிறார். உமா விஷயம் அலசப்படுகிறது. ரமேஷ் விடுதலையானதில் கம்பெனியின் எம்டி என்னும் முறையில் தனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்றாலும், தான் நீலகண்டனின் நண்பர் என்னும் முறையில் அவர் மாப்பிள்ளை விடுதலையானதில் சந்தோஷமே எனக்கூறுகிறார். ரமேஷ் நேரில் வந்து பேசினாலும் உமா அவனுடன் முகம் கொடுத்து பேசவில்லை என நீலகண்டன் வருந்துகிறார். ரமேஷ் வந்த காட்சி ஃப்ளாஷ் பேக்காக காட்டப்படுகிறது. நீலகண்டன் மிகவும் வற்புறுத்திக் கேட்க, உமா அசோக்குடன் கலந்து பேசித்தான் இனிமேல் முடிவெடுக்கப் போவதாகக் கூற நீலகண்டனும் பர்வதமும் கோபமடைகின்றனர்.

தன் பிள்ளை அசோக்தான் விசித்திரமானவன் என தான் நினைத்தால் உமா அதற்கு மேலாக இருக்கிறாளே என நாதனும் வியக்கிறார். பிறகு ரமேஷுக்கு ஏதேனும் பிசினஸ் வைக்க தானே பின்னால் உதவி செய்வதாக அவர் கூற நீலகண்டன் மனம் நெகிழ்கிறார். யார் கண்டது, பின்னால் ரமேஷ் பெரிய பிசினஸ்மேனாகவும் நல்ல பெயர் எடுக்கலாம் என நாதன் மேலும் கூற, நீலக்ண்டன் Every Saint has a past என்று அவர் கூறுகிறா என கேட்க, நாதனோ Every sinner has a future என்று பதிலளிக்கிறார். (வசுமதி இதை பின்னால் நீலகண்டன் தன்னிடம் டெலிஃபோனில் கூறக்கேட்டபோது மனமெல்லாம் நெகிழவில்லை என்று கூறவும் வேண்டுமோ)?

சிங்காரம் நாதனிடம் வேம்பு சாஸ்திரிகள் இப்போதிருக்கும் வீட்டில் படும் கஷ்டங்களை பட்டியலிடுகிறான். நாதன் யோசனையில் ஆழ்கிறார். அப்போது அங்கு வரும் அசோக் ஒரு யோசனை கூறுகிறான். சாம்பு சாஸ்திரிகளின் வீடு விற்பனைக்கு வருகிறது என்றும், அதை நாதனே வாங்கி அவர்கள் பெயருக்கு கிரயம் செய்து கொடுத்து விட்டு, வேம்பு சாஸ்திரிகளையும் சாம்பு சாஸ்திரிகளையும் ஒரே வீட்டில் குடியேற்றி விடலாம் எனபதுதான் அந்த யோசனை. இப்படி செய்தால், வைதீகாளையும் கௌரவம் செய்த மாதிரி இருக்கும் என்றும் அவன் கூறுகிறான்.

நாதன் உடனே அதற்கு ஒத்துக் கொள்ள, அசோக் தனது தந்தையின் தர்ம சிந்தனையை மிகவும் சிலாகிக்கிறான். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என நாதன் கூறிவிட்டு, அசோக் தன் பிள்ளை என்றும் முடிந்தவரை அவன் கேட்பதை தான் தருவது தனது கடமை என அவர் புரிந்து கொண்டிருப்பதாகக் கூறிவிடுகிறார். மேலும் அவனுக்காக தன் உயிரையே கூட தருவேன் எனவும் கூற, பாபர் ஹுமாயூன் கதை மாதிரியா என அசோக் கேட்கிறான். அவரோ அப்படியும் வச்சுக்கலாம், ஆனால் யயாதி மாதிரி பிள்ளையின் யௌவனத்தை கேட்க மாட்டேன் எனக் கூறிவிட்டு, அப்போது தான் காண்டேகரின் யயாதி கதையை தான் படித்து கொண்டிருப்பதாக கூறுகிறார்.

யயாதிதானே பிள்ளையின் இளமையை வாங்கிக் கொண்ட ராஜா, நீங்க ஏற்கனவே சொல்லியிருக்கீங்களே, பேராசை பிடிச்சவன் சார் அவன் என சோவின் நண்பர் கூற, சோ கண்களை உருட்டியவாறே புன்னகை பூக்கிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/26/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 89 & 90)

எபிசோட் - 89 (24.05.2010) சுட்டி - 2
அசோக்குக்கும் காதம்பரிக்கும் திருமணம் முடிந்து வீட்டுக்கு அழைத்து வருகின்றனர். வாசலில் ஆரத்தி எடுக்கின்றனர். அசோக்கின் கிருஹஸ்தாஸ்ரம வாழ்க்கை ஆரம்பிக்கிறது. ஆரம்பத்திலிருந்தே காதம்பரிக்கும் அசோக்குக்கும் இடையே உள்ள பொருத்தமின்மை வெளிப்படையாக தெரிய ஆரம்பிக்கிறது.

இதை கண்டு நாதனும் வசுமதியும் டென்ஷன் அடைய ஆரம்பிப்பதும் புரிகிறது. அசோக் தேடும் பெண் அவன் கூறியபடி ஒரு வைதீக குடும்பத்தில் கிடைத்தாலும் கிடைத்திருக்கலாம், ஆனால் வசுமதி ஸ்டேட்டஸ் என்ற விஷயத்தை புகுத்தியதில் காதம்பரி வந்து சேருகிறாள். அசோக்காவது தனது தெரிவில் தெளிவை காட்டியிருக்கலாம், ஆனால் என்னவோ தெரியவில்லை அவன் எல்லாமே பகவான் செயல் என விட்டுவிட்டான். மேலே கதை எப்படி செல்லப் போகிறது என்பது சோவுக்கும் வெங்கட்டுக்குமே வெளிச்சம். ஏதாவது பெரிய விஷயம் வந்தால்தான் உண்டு. பார்ப்போம், தேடுவோம்.

சாம்பு சாஸ்திரிகள் வீட்டு கல்யாண முகூர்த்தத்துக்கு போக நேரம் கிடைக்கவில்லை, ஆகவே ரிசப்ஷனுக்கு போக முடிவு செய்கின்றர். அவாத்துக்கு கிஃப்ட் வாங்கிப் போக வேண்டாமா என வசுமதி கேட்க, நாதன் தான் ஏற்கனவேயே அசோக்கிடம் 25000 ரூபாய்க்கான செக்கை கொடுத்து விட்டதைக் கூறுகிறார். இது ரொம்பவே டூ மச் என வசுமதி அபிப்பிராயப்படுகிறாள்.

அசோக் அன்று மாலை காதம்பரியை அழைத்து கொண்டு மயிலாப்பூரில் வாலி வதம் பற்றிய கதாகாலட்சேபத்துக்கு போகப் போவதாகவும் வாலிவதம் பற்றி பாகவதர் அழகாகக் கதை கூறுவார் எனவும் கூறுகிறான்.

வாலியை ராமர் ஒளிந்திருந்து தாக்கியது தவறுதானே என சோவின் நண்பர் கேட்க, “வாலியை மரத்தின் பின்னால் ஒளிந்து நின்று ராமர் அம்பு விட்டது மட்டும் சரியா” என கேட்க, சோ அவர்கள் அழுத்தம் திருத்தமாக கூறுகிறார், ராமர் அவ்வாறு ஒருபோதும் செய்யவேயில்லை என. இம்மாதிரி மரத்தின் பின்னாலிருந்து அம்பு விட்ட கதை கம்ப ராமாயணம் மற்றும் துளசி ராமாயணத்திலும்தான் வருகிறது, வால்மீகி ராமாயணத்தில் வரவேயில்லை. மேலும் வால்மீகி ராமாயணம்தான் அத்தாரிட்டி, மீதி ராமாயணங்கள் அல்ல என சோ அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார். வாலியின் உடலை பார்க்க வந்த தாரையிடம் வானரங்களே கூறுகிறார்கள், “வாலி ஆக்ரோஷமாக ராமருடன் சண்டையிட்டான் மரங்கள் பாறைகள் ஆகியவற்றை அவர் மீது எறிந்தான், ஆயினும் ராமபாணத்தின் முன்னால் அவை எல்லாம் வியர்த்தமாகப் போயின” என்று. இதை தானாக சொல்லவில்லை. பிரதிவாத பயங்கர, ராமாயண பிரவசன சிரோன்மணி பிரும்மஸ்ரீ சீதாராம சாஸ்திரிகள் 1939-ல் வெளியிட்ட புத்தகத்தில் கூறப்பட்டதையே தானும் கூறுவதாக மேலும் சோ கூறுகிறார்.

என் அப்பன் ராமபிரான் குற்றம் செய்யவில்லை என அறிந்து டோண்டு ராகவனாகிய எனக்கும் மீண்டும் மனச்சமாதானம் ஏற்பட்டதை நான் இங்கே மறைக்கப் போவதில்லை. அதென்ன மீண்டும்? இந்த வாலிவதம் பற்றிய விஷயம் ஏற்கனவேயே எங்கே பிராமணன் பார்ட் -1-ல் 83-ஆம் எபிசோடில் வந்து விட்டது.

அசோக் மட்டும் தனியாக கதா காலட்சேபத்துக்கு போக காதம்பரியோ புதிதாக வெளியான கதா என்னும் ஹிந்தி படத்துக்கு போகிறாள். விஷயம் புரிந்து நாதனும் வசுமதியும் திகைக்கின்றனர்.

(தேடுவோம்)

எபிசோட் - 90 (25.05.2010) சுட்டி - 2
கைலாசநகர் வாக்காளர்களுக்கு தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதியான கோவில் புனருத்தாரணத்தை அரசியல்வாதி நல்லத்தம்பி நிறைவேற்றாதது குறித்து ஜட்ஜும் கைலாசநகர்வாசிகளின் அசோசியேஷன் செயலாளரும் பேசுகின்றனர். கிருஷ்ணர் குசேலர் கொடுத்த ஒருபிடி அவலை வாயில் போட்டுக் கொண்டதிலேயே குசேலர் பணக்காரர் ஆனது மாதிரி இந்த இடைதேர்தலில் அடைந்த வெற்றியை வைத்து நல்லத்தம்பி இன்னும் பணக்காரனானதுதான் நடந்தது என ஜட்ஜ் கூறுகிறார்.

அதென்ன குசேலருக்கு 27 குழந்தைகள் என கூறுகிறார்களே உண்மையாக இருக்குமா என சோவின் நண்பர் கேட்கிறார். அத்தனை குழந்தைகள் இருந்ததாக பாகவதத்தில் எங்குமே கூறவில்லை எனவும், இதுவும் பிற்சேர்க்கையாக கதைக்கு அதிக அழுத்தம் தருவதற்காக சேர்க்கப்பட்டது எனவும் சோ கூறுகிறார். குசேலரின் கதையையும், குருகுலவாசத்தில் கிருஷ்ணருக்கும் அவருக்கும் ஏற்பட்ட நட்பு பற்றியும் சோ விவரிக்கிறார். கடைசியில் எல்லாவற்றையும் கூறிவிட்டு, 27 குழந்தைகள் என்பது மிகைப்படுத்திக் கூறலில் வருகிறது என்று முத்தாய்ப்பாக மறுபடியும் சொல்கிறார்.

அசோக் சொல்லித்தான் தான் கைலாசநகர்வாசிகளுக்கு அந்த இடைதேர்தலில் நல்லத்தம்பிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் ஆகவே அவன்தான் இதற்கு பதில் கூறவேண்டும் எனவும் ஜட்ஜ் கூறுகிறார்.

வேம்பு சாஸ்திரிகள் தனக்கு மாதாமாதம் ரேஷன் பொருட்களை அனுப்புவது யார் என்பதை கண்டுபிடித்து விடுகிறார். அவரது பழையவீட்டின் சொந்தக்காரர்தான் அது. அவரை விசாரித்ததில் தான் அவரை வீட்டைவிட்டு அடாவடியாக காலிசெய்வித்தது மகாபாவம் எனவும், அது நடந்த பத்தே நாட்களில் தனது மகன் ஒருவிபத்தில் கையை இழந்ததாகவும், தன்னிடம் இதுபற்றிப் பேசிய பலருமே இதற்கெல்லாம் காரணமே வேம்பு சாஸ்திரிகளை வீதியில் கொண்டுவந்து நிறுத்தியதுதான் என்று கூறியதாகவும் சொல்லி அவரது மன்னிப்பைக் கோருகிறார். வேம்பு அவரை தேற்றுகிறார். இனிமேல் இம்மாதிரி சாமான் எல்லாம் அனுப்ப வேண்டாம் என அவர் கேட்டுக் கொள்ள, வீட்டுக்காரரோ வேம்பு சாஸ்திரிகள் ஒரு ஸ்திர நிலைக்கு வரும்வரை இதை செய்யப்போவதாகக் கூறிவிடுகிறார்.

சாம்பு சாஸ்திரிகள் காதம்பரியை பார்த்து பேசுகிறார். அவள் தங்களாத்து கல்யாண ரிசப்ஷனுக்காவது வந்திருக்கலாம் எனக்கூற, அவளோ பிறகு ஒரு நாள் அவரது வீட்டுக்கு வருவதாகக் கூறுகிறாள்.

நாதன் ஆபீசில் நீலகண்டன் வந்திருக்கிறார். அசோக் காதம்பரி பற்றி பேச்சு செல்கிறது. அவர்களில் ஒருவர் மற்றவருக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என நாதனும் நீலகண்டனும் அபிப்பிராயப்படுகின்றனர். வழக்கம்போல, எல்லா விடுகளிலும் நடப்பது போல இங்கும் அசோக்தான் விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும் என பாதி சீரியசாகவும் பாதி வேடிக்கையாகவும் கூறப்படுகிறது.

கைலாஸ்நகர் டைம்சில் அசோக் பற்றி தாறுமாறாக செய்திகள் வந்ததை நீலகண்டன் நாதனுக்கு காட்ட அவர் கோபப்படுகிறார். அப்பத்திரிகைக்கு போன் செய்து பேச முயல ஃபோன் கட் செய்யப்படுகிறது. அதை நிர்வகிப்பது பிரியாவின் தந்தை ஜட்ஜ் என்பதை அறிந்து நாதன் அவரை நேரில் சந்திக்க விரைகிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/21/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 87 & 88)

எபிசோட் - 87 (தேதி 19.05.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
கேட்டரர் மனைவியின் சந்தர்ப்பவாதப் பேச்சைக் கேட்டு சோவின் நண்பர் மனம் கொதித்துப் பேசுகிறார். அலயன்ஸ் என்றாலே இப்படித்தானா என அவர் கேட்க, கூட்டணி அமைப்பதில் கடைபிடிக்க வேண்டிய முன்சாக்கிரதை நடவடிக்கைகளை பற்றி சோ பேசுகிறார். அதற்கு மேற்கோளாக மகாபாரதத்தில் பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு அம்புப் படுக்கையிலிருந்து செய்யும் உபதேசத்தில் கூறும் ஒரு கதையை இங்கு சொல்கிறார்.

பலிதம் என்னும் பெயர் உடைய எலிக்கும், லோபசம் என்று அழைக்கப்படும் பூனைக்கும் இடையில் இருவருக்குமே தனிப்பட்ட முறையில் வந்த உயிரபாயத்தைத் தவிர்க்க ஏற்பட்டக் கூட்டணி பற்றித்தான் இக்கதை. அதை வீடியோ லிங்கில் பார்த்துக் கொள்ளவும். அதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், உயிரபாயம் இருவருக்குமே அந்தக் கூட்டணியின் விளைவால் நீங்கிவிட்ட நிலையில், அக்கூட்டணி இனிமேலும் நீடிக்கும் என்ற பிரமேயமே இல்லாமல் போகிறது. எது எப்படியானாலும் எலி பூனையின் உணவு. அது எலியை அடிக்கத்தான் விரும்பும், எலி தப்பித்து ஓடத்தான் செய்யும். அது போல செயற்கை முறையில் காலத்தின் கட்டாயத்தால் உருவாகும் கூட்டணிகளுக்கும் அதுதான் கதி என்பதுதான் இக்கதையின் நீதி.

கேட்டரர் மனைவி இப்போது தனது கணவருக்கே ஒரு பெரிய ஆர்டர் வந்த நிலையில் சர்வ அலட்சியமாக 19-ஆம் தேதியிலிருந்து 21-ஆம் தேதிக்கு திருமணத்தை மாற்றி விட்டு ஒரு குற்றவுணர்ச்சியுமே இல்லாது மேலே பேசுகிறாள். இப்போது நாதன் எதிரில் தான் ஒரு சங்கட நிலையில் இருப்பதை அழமாட்டாக் குறையாக சாம்பு கூறிவிட்டுச் செல்கிறார்.

சாம்பு வீட்டுக்கு வந்து தன் மனைவியிடம் நடந்ததைக் கூற, அவள் இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என கேட்கிறாள். என்ன செய்வது அவர்கள் பெரிய இடம் தம்மால் என்ன செய்ய முடியும் என சாம்பு விரக்தியுடன் பேசுகிறார். அவருக்கு கிடைக்கவிருந்த நாதன் வீட்டு புரோகிதம் வேம்புவுக்கு போயிற்றே என அவர் மகன் கூறுகிறான். வேம்புவும் கஷ்டப்படுகிறான், ஆகவே அவனுக்கு வேலை செல்வதே நல்லது எனக்கூறும் சாம்பு, வேம்புவுக்கு இந்த விஷயம் தெரியவே கூடாது எனக் கூறுகிறார். ஆனால் அச்சமயம் வந்த வேம்பு அதை கேட்டு விட்டார்.

சாம்புவின் பெருந்தன்மையை நெகிழ்சியுடன் குறிப்பிடும் அவர் தான் சாம்புவின் சமகால புரோகிதனாக இருப்பது தான் செய்த பாக்கியம் என தழதழக்கிறார். சாம்புவோ அவருக்கு தெரிந்ததால் தனது சங்கடம் தீர்ந்ததென்றும், அவரே நாதனிடம் இதெல்லாவற்றையும் கூறிட வேண்டும் எனச் சொல்லி விடுகிறார். பேச்சு இப்போது வேம்புவுக்கு யாரோ பெயர் தெரியாதவரால் செய்யப்படும் உதவிகள் பக்கம் திரும்புகிறது. வேம்புவின் சம்பந்தி முதலியாராக இருப்பாரோ என கேட்கப்பட முதலியாரோ தன் இல்லை எனக்கூறிவிட்டதாகவும், அவர் பொய் சொல்ல மாட்டார் எனவும் வேம்பு கூறிவிடுகிறார். அசோக்கும் செய்யவில்லை, சாம்புவும் செய்யவில்லை, சிங்காரம் செய்திருக்க சான்சே இல்லை என அலசப்படுகிறது.

நாதன் வீட்டுக்கு வேம்பு வந்து அசோக் கல்யாண வேலைக்கான புரோகித ஏற்பாடுகள் பற்றிப் பேசுகிறார். முதற்கண் அசோக்கை வாதத்தில் இழுத்து விட்டதற்காக நாதனிடமும் வசுமதியிடமும் மன்னிப்பைக் கோருகிறார். நாதன் அவரை மன்னித்து அட்வான்சாக 5000 ரூபாய் தருகிறார். அதை வாங்கிக் கொண்டு, சாம்புவின் சங்கடத்தையும் கூறிவிட்டு அவர் விடை பெற்று செல்கிறார்.

நீலகண்டன் வீட்டில் ரமேஷை அவன் வக்கீல் அனந்தராமன் தன் திறமையான வாதத்தால் அவனை அப்ரூவராக மாறச் செய்து விடுவித்ததை பேசிக் கொண்டிருக்கிறார்கள். உமா அவன் விடுதலை பெர்றது அதர்மமான செயல் என பிடிவாதமாகக் கூறுகிறாள். அவனைப் பார்க்க நீலக்ண்டன் மற்றும் வசுவுடன் வர மறுக்கிறாள். தனது பெண்ணும் திருட்டு அப்பனைப் பார்க்க வேண்டாம் என அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறாள்.

(தேடுவோம்)

எபிசோட் - 88 (20.05.2010) சுட்டி - 2
அசோக் குடுமியை எடுத்து விட்டு, ஸ்டைலாக ஒரு மோட்டார் பைக்கில் அமர்ந்து தன்னைப் பார்க்க விட்டுக்கு வருவதாகவும், அவளால் தான் பல விதங்களில் மாறியதாகவும், இனிமேல் அவளுக்காகவே வாழப்போவதாகவும் கூறியதாக கனவு காண்கிறாள் காதம்பரி. அவள் அக்காவால் எழுப்பப் பெற்று அத்தனையும் கனவுதானா என எண்ணி ஏமாற்றமடைகிறாள்.

சிங்காரம் தன் மகனை காப்பாற்ற அசோக் உதவியாக இருந்ததை எண்ணி மிகவும் நெகிழ்ச்சியுடன் அவனுக்கு நன்றி கூறுகிறான். தான் ஒன்றுமே செய்யவில்லை என்றும், வெறுமனே பலரிடம் அவனுக்காக உதவி பெற்றதாகவும், உண்மையில் நன்றியெல்லாம் அவ்வாறு உதவி செய்தவர்களுக்கும் மேலும் அவர்கள் மனதில் புகுந்து அவர்களை அச்செயல்களை செய்ய வைத்த இறைவனுக்குமே அவன் நன்றி செலுத்த வேண்டும் எனவும் அவன் கூறுகிறான். மேலும், இனிமேலாவது அவன் தனது மகனுக்கு ஒரு நல்ல தகப்பனாக இருந்து காட்ட வேண்டும் எனவும் கூறுகிறான். அவனும் அதை கண்ணீருடன் ஏற்கிறான்.

வேம்புவும் சாம்புவும் கோவிலில் வைத்து சந்திக்கின்றனர். நாதன் வீட்டில் நடந்ததை வேம்பு கூறுகிறார். சாம்பு அவருக்காக மக்ழ்கிறார். அன்னேரத்தில் அசோக்கும் வந்து நாதன் அவர்கள் வேம்பு சாம்பு இருவருமே சேர்ந்தே புரோகிதத்துக்கு வரச்சொன்னார் எனக் கூறி சாம்புவுக்கும் முன்பணத்தை அளிக்கிறான். 21-ஆம் தேதியன்று நடக்கும் ஆர்த்தியின் கல்யாணத்துக்கு தனது குடும்பத்திலிருந்து அனைவரும் வரப்போவதாகக் கூறி அக்கல்யாணத்திற்காக நாதன் முன்னால் அவரிடம் தந்து அவர் மறுத்த 25000 துக்கான செக்கையும் தருகிறான். தன்னை ஊரை விட்டு அனுப்புவதற்காக தயாரிக்கப்பட்ட அந்த செக் இப்போது தன் மகளை பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு அனுப்ப பயன்படும் நகை முரணை சாம்பு எடுத்து கூறுகிறார்.

ரமேஷ் விடுதலையாகி வீட்டுக்கு வர, உமா அவனைப் புறக்கணித்தது குறித்து அவன் தாய் தந்தையர் குறை கூறுகின்றனர். ரமேஷோ உமாவின் சார்பாகவே பேசுகிறான். தான் செய்தது தவறுதானே எனவும் கேட்கிறான். நீலகண்டனும் பர்வதமும் வந்து ரமேஷுடன் பேசுகின்றனர். இப்போதும் இன்னும் உமா வராதது குறித்து ரமேஷ் வருந்துகிறான். அவளுடைய செல் நம்பர் நினைவிலிருந்தால், அவன் அவளுடம் பேசலாமே என நீலக்ண்டன் கேட்க, தயவு செய்து செல் நம்பர் எனக் கூறாதீர்கள், மொபைல் நம்பர் எனக்கூறுங்கள் என ரமேஷ் அவரிடம் கூறிவிட்டு உமாவுடன் பேச முயற்சிக்க அவளோ ஃபோனை கட் செய்கிறாள்.

இப்பெண் ஏன் இன்னும் பிடிவாதமாக இருக்கிறாள் என சோவின் நண்பர் கேட்கிறார். அதற்கு அவர் உண்மையே பேசிய சத்தியதபர் என்னும் பெயருடைய ஒரு ரிஷியின் கதையை வராக புராணத்திலிருந்து எடுத்துக்காட்டாகக் கூறுகிறார். வேடனின் அம்புக்கு பயந்த வராகம் ரிஷியின் ஆசிரமத்துள்ளே தஞ்சம் புகுந்து கொள்ள, அங்கு வந்த வேடன் வராகம் எங்கே என ரிஷிஅயிக் கேட்க, அவரோ தெரியாது என்பது போல இருந்து விட்டார். அவரது லாஜிக் இவ்வாறு செல்கிறது. வராகம் போனதை கண்கள் பார்த்தன ஆனால் அவை பேசா. வாயோ வராகம் போனதை பார்க்கவில்லை, ஆகையால் அது வேடனிடம் ஒன்றும் ஊற முடியாது என்பதே அது. உடனேயே வராகம் விஷ்ணுவாகவும் வேடன் இந்திரனாகவும் உருவெடுத்து, அவரது சத்தியத்தை சோதிக்கவே வந்ததாகக் கூறி அவருக்கு ஆசியளித்தனர்.

இங்கோ உமா தான் சிபாரிசு செய்து பெற்றுத் தந்த வேலையில் சேர்ந்த ரமேஷ் உண்டவீட்டுக்கே இரண்டகம் நினைப்பதை பொறுக்காமல் அவனை நாதனிடம் காட்டிக் கொடுத்தது சரிதான். ஆனால் ரமேஷ் இப்போது மனந்திருந்தி வருந்தும்போதும் அவனிடம் அதே விரோதபாவம் பாவிப்பது சரி அல்ல என சோ கூறுகிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/19/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 85 & 86)

எபிசோட் - 85 (17.05.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
தான் கொஞ்சம் பேசலாமா என அசோக் கேட்கும்போதே என்னுள் ஒரு புன்முறுவல் எழுந்தது. அவன் என்ன கேட்பான் என்பதை என்னாலேயே ஊகிக்க முடிந்தபோது அவனிடம் அனுபவம் பெற்றுள்ள அவன் பெற்றோருக்கு மட்டும் அது தோன்றாது இருக்குமா என்ன? அவனை மிருதுவாக அவாயிட் செய்ய நினைக்கின்றனர். ஆனால் அதெல்லாம் அசோக்கிடம் நடக்குமா?

நான் நினைத்த மாதிரியே அவன் கல்யாணம் என்பது மிகவும் எளிமையாக நடத்த வேண்டும் என மிருதுவாக ஆனால் உறுதியாகக் கூறிவிடுகிறான். வெளி மனிதர்களுக்கு அழைப்பில்லை, ரிசப்ஷன் கிடையாது, பெரிய மண்டபம் எல்லாம் வேண்டாம். வைதீக காரியங்களுக்கே முக்கியத்துவம் என்றெல்லாம் அடுக்க, அவனுக்கு கல்யாணம் நடந்த விஷயமே ஊருக்கு தெரியாமல் போகுமே என அவன் அன்னை ஆட்சேபம் எழுப்ப, ஊர் தெரிஞ்சுண்டு என்ன பண்ணப் போறது என அவன் எதிர் கேள்வி போடுகிறான். தேவையானால் ரிஜிஸ்டர் திருமணம் கூட ஓக்கே எனக்கூறிவிட்டு அப்பால் செல்கிறான்.

என்ன சார் இது என சோவின் நண்பர் கேட்க, ரிஜிஸ்டர் கல்யாணமெல்லாம் நமது வைதீக முறைப்படியான கல்யாணமே அல்ல, அதைப் போய் செய்யலாம் என அசோக் கூறுவது அபத்தமாகவே படுகிறது என அவர் பங்குக்கு அசோக்குக்கு ஒரு குட்டு வைக்கிறார். பிறகு பழங்காலத்தில் நடந்த நான்கு நாள் திருமணம் பற்றியும் பேசுகிறார்.

நடந்த விஷயம் கேட்டு காதம்பரி டரியல் ஆகிறாள். அசோக்குக்குத்தான் மூளை இல்லையென்றால் அவர் பெற்றோர்களுக்கு எங்கே போச்சு அறிவு என அவள் நீட்டி முழக்குகிறாள். இந்த எளிமையான கல்யாணம் அவள் மனதுக்கு பிடிக்கவில்லை என்பதை தெளிவாகவே காட்டுகிறாள். அசோக்குக்கு அவளே போன் போட்டு கிண்டலாகப் பேசுவதாக எண்ணி மண்டபம் கூட ஏன், கோவிலிலேயே வைத்துக் கொள்ளலாமே என கேட்க அதற்கும் சரி எனக்கூறி அவன் அவளை மேலும் திகைப்புக்கு உள்ளாக்குகிறான்.

நாதனும் வசுமதியும் என்ன செய்வதென்று புரியாது, திருப்பந்துரத்தியில் இருக்கும் தங்கள் குலதெய்வம் கோவிலில் திருமணத்தை வைத்துக் கொள்ள முடிவு செய்கின்றனர்.

கேட்டரர் வீட்டில் அசோக்கின் திருமணம் பற்றி பேச்சு வருகிறது. ரொம்பவுமே எளிமையாக சென்னைக்கு வெளியே செய்வதால் தனக்கு கேட்டரிங் சான்ஸ் இல்லை என கேட்டரர் கூறுகிறார். அப்போது சாம்பு சாஸ்திரிகள் அங்கு வர, அவரிடம் ஜனவரி 19-ஆம்தேதி ஆர்த்திக்கும் தன் பிள்ளைக்கும் கல்யாணம் என கேட்டரரின் மனைவி கூற, அவர் அன்றுதான் அசோக்குக்கு வெளியூரில் கல்யாணம் எனவும், அங்கு புரோகிதம் செய்ய தான் ஒத்துக் கொண்டு விட்டதாகவும் கூற, அந்த மாமியோ அதெல்லாம் முடியாது என நிர்தாட்சண்யமாக மறுத்து விடுகிறாள். சாம்புவும் குழப்பத்துடன் விடைபெர்றுச் செல்ல, கேட்டரரும் தன் மனைவியை இது பற்றி குறித்து கண்டிக்க, அப்பெண்மணி தான் பிடித்த முயலுக்கு மூணே கால் என நிற்கிறாள்.

நாதன் வீட்டுக்கு காதம்பரி வருகிறாள். அவளுடன் பொதுப்படையாகப் பேசும் நாதன் அசோக் வெளியில் போயிருப்பதாகக் கூறுகிறார். அவளுக்கு எளிமையான கல்யாணம் என்பதால் ஏதேனும் ஏமாற்றமா என அவர் மேலும் கேட்க, அப்படியெல்லாம் இல்லை என மறுக்கிறாள். திருமணத்துக்கு முன்பே தனக்காக அசோக் ஒரு காரியம் செய்வானா என அவனிடமா கேட்பதற்காக தான் வந்ததாக அவள் கூறுகிறாள். நாதனும் வசுமதியும் எவ்வளவு வற்புறுத்தியும் அவர்களிடம் அவள் இதை தான் அசோக்கிடம்தான் முதலில் கேட்க வேண்டும் எனக்கூறிவிட்டு சென்று விடுகிறாள்.

அவள் அந்தண்டை போனதும், அசோக் மாடியிலிருந்து இறங்கி வருகிறான். அவன் வெளியில் போகவில்லையா என நாதன் ஆச்சரியத்துடன் கேட்க, இல்லை என்கிறான். காதம்பரி வந்து சென்றது பற்றி அறிந்த அவன் அவளுடன் போனில் பேசுகிறான். அவள் மேலே ஏதும் கூறும் முன்னரே, அவள் கேட்பதை தன்னால் கன்சிடர் செய்யவியலாது எனவும் கூறி விடுகிறான்.

(தேடுவோம்)

எபிசோட் - 86 (18.05.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
காதம்பரி கேட்பதை தன்னால் ஏற்றுக் கொள்ளவியலாது என அசோக் கூறிவிட்டு அப்பால் போக வசுமதி நாதனிடம் என்ன இதெல்லாம் என கேட்க, எதிராளியை வாயடைக்க வைக்கும் இந்த டெக்னிக்கும் நன்றாகவே இருக்கிறது எனக் கூறிவிட்டு அவரும் அப்பால் செல்கிறார். சமையற்கார மாமி அசோக்கிடம் அவன் காதம்பரி என்ன கேட்க நினைத்தாள் என அறிந்துதான் அவ்வாறு கூறினானா எனக் கேட்க, அவனும் ஆமாம் என்கிறான். என்ன அவள் கேட்க நினைத்தாள் என மாமி விடாது கேட்க, அது முற்றிலும் தங்கள் தனிப்பட்ட விஷயம் எனக் கூறிவிட்டு அப்பால் செல்கிறான்.

கோவிலில் வைத்து காதம்பரி அசோக்கை சந்திக்கிறாள். செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் அம்பாளுக்கு விளக்கு ஏறுமறு தன் அக்கா கூறியதால் தான் கோவிலுக்கு வந்தாக அவள் கூறுகிறாள். செவ்வாயில் அம்பாளுக்கு ராகுகால பூஜை செய்வது விசேஷம் என அசோக்கும் கூறுகிறான்.

இதென்ன ராகு கால பூஜை என நண்பர் கேட்க, சோ இது முதற்கண் சாத்திர அங்கீகாரம் எல்லாம் பெற்றதில்லை என்றும், தான் பல அறிஞர்களிடம் விசாரித்தவரை இது காலப்போக்கில் ஏற்பட்டது எனவும் கூறி விளக்குகிறார். அம்பாளுக்கு பூஜை செய்தால் நவக்கிரகங்களில் ஒன்றான ராகுவுக்கு பிரீதி என பொருள்படும் வடமொழி ஸ்லோகம் இருப்பதைக் கூறி ஒரு வேளை இந்த வழக்கம் அதிலிருந்து டெவலப் ஆகியிருக்கலாம் என்றும், எது எப்படியாயினும் அதை செய்பவர்களுக்கு ஒரு மனவமைதியை இது கொடுப்பதால் இதுவும் ஏற்றுக் கொள்ளத் தக்கதே என்றும் கூறுகிறார்.

தனது வேண்டுகோளை அது என்னவென்று கேட்காமலேயே அசோக் நிராகரித்து விட்டதாகவும், ஆகவே அவன் அதை நிறைவேற்ற அவனைத் தூண்டுமாறு தான் அம்பாளை வேண்டிக் கொண்டதாகவும், அவள் தன் வேண்டுகோளை நிறைவேற்றுவாளா எனக் கேட்க, அவள் செய்ய மாட்டாள் என அசோக் கூறுகிறான். ஏன் அவ்வாறு கூறுகிறான் என காதம்பரி விடாது கேட்க, தானும் எதிர் வேண்டுகோள் அம்பாளிடம் வைத்திருக்கலாமல்லவா என அவன் கேட்கிறான்.

தான் கேட்க நினைத்தது என்ன என்பதை அவன் நிஜமாகவே அறிவானா என காதம்பரி கேட்க, தெரியும் என்கிறான் அசோக். அது என்ன என அவள் விடாது கேட்க, திருமணத்துக்கு முன்னால் தான் குடுமியை எடுத்துவிட வேண்டும் என்றுதானே அவள் கேட்க நினைத்தாள் என அவன் கூற, அவள் திகைக்கிறாள். ஏனெனில் அதுதான் உண்மை.

தன்னால் அசோக் திருமணத்துக்கு வரவியலாது என சாம்பு தன் இயலாமையை கூற, முதலில் திகைத்தாலும் அவரது நிர்ப்பந்தங்களையும் நாதன் புரிந்து கொள்கிறார். தனக்கு பதிலாக வேம்பு சாஸ்திரிகளை ஏற்பாடு செய்யட்டுமா எனக் கூறி, வேம்பு மிகச் சிரமதசையில் இருப்பதையும் அவரிடம் கூறுகிறார். வசுமதி தயங்கினாலும் நாதன் ஒத்துக் கொள்கிறார்.

வேம்பு வீட்டுக்கு சென்று சாம்பு விஷயத்தைக் கூற அவர் சாம்புவுக்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறார். வேம்புவுக்கு மாதா மாதம் மளிகை சாமான்கள் வருவது பற்றிக் கேட்க, அவரும் தன் திகைப்பை வெளிப்படுத்துகிறார். அது சாம்புவாக இருக்குமோ என வேம்பு எதற்கும் கேட்டு வைக்க சாம்புவோ நானா எனக் கேட்டு, ஒரு அவுட்டு சிரிப்பை வெளியிடுகிறார்.

நாதன் வீட்டில் அவருக்கு சமையற்கார மாமி காப்பி கொண்டு வந்து வைக்கிறாள். வசுமதி எங்கே என அவர் கேட்க, அவள் ஜவுளி எடுக்கப் போயிருப்பதாகக் கூறுகிறாள். கல்யாண பெண்ணுக்கு வசுமதி நகைகளாக வாங்கிப் பூட்ட எண்ணூகிறாள் என்றும் கூற, அவர் காதம்பரி சர்வாலங்காரத்துடன் நகைக்கோலம் பூண்டு அபிநயம் பிடிப்பதை மனக்கண்ணால் பார்த்து திகைக்கிறார்.

அசோக் அப்போது வெளியிலிருந்து வர, அவனிடம் எங்கே போயிருந்தான் அவன் என நாதன் கேட்கிறார். வேதபாடசாலைக்கு சென்றதாகவும் அங்கு தன் நண்பர்களுக்கு பத்திரிகை வைத்ததாகவும் அவன் அவன் நண்பர்கள் பஸ் ஒன்றை அரேஞ்ச் செய்து கொண்டு முந்தைய தினமே வந்து விடுவார்கள் எனவும் கூறுகிறான். கல்யாணம் முழுக்க வேத கோஷங்களுடன் களை கட்டும் என நாதன் தமாஷாகக் கூறுகிறாள்.

கேட்டரர் வீட்டுக்கு ஃபோன் வருகிறது. அவரது ஆடிட்டர் நண்பர் தங்களாத்துக் கல்யாணத்தை ஜனவரி 19-ஆம் தேதி வைத்திருப்பதாகக் கூறி, அவர்தான் கேட்டரிங் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ள, அவர் தயங்குகிறார். அவரது மனைவியோ அவரிடமிருந்து ஃபோனை பிடுங்கி, அதே தேதிக்கு ஒத்துக் கொண்டு விடுகிறாள். தங்கள் பிள்ளைக்கும் அன்றுதானே கல்யாணம் என கேட்டரர் கேட்க, அதனால் என்ன 21-ஆம் தேதி வைத்துக் கொண்டால் போயிற்று என அலட்சியமாக பேசுகிறாள். சாம்பு சாஸ்திரி அவ்வளவு கெஞ்சியும் மனமிரங்காத அவள் இப்போது மட்டும் இவ்வாறு செய்யலாமா எனக் கேட்க, துளிக்கூட குற்ற உணர்ச்சியே இன்றி அந்தப் பெண்மணி மேலே பேசுவதைக் காண எனக்கே கோபம் வருகிறது. அந்த கேட்டரர் அவள் கன்னத்தில் பொளேர் என ஒரு அறை விட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

சாம்பு சாஸ்திரிகள் அப்போது வந்து தான் வேம்புவை தனக்கு பதிலாக அசோக் கல்யாணத்துக்கு புரோகிதத்துக்கு ஏற்பாடு செய்ததை கூற கேட்டரர் பேய் முழி முழிக்கிறார். அவர்து மனைவியோ அவர் தைரியமாக பேச வேண்டும் எனக் கூறுகிறாள்.

என்ன சார் இப்படியிருக்காங்க என நண்பர் கேட்க, அப்படித்தான் என சோவும் ஆமோதிக்கிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/16/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 83 & 84)

எபிசோட் - 83 (12.05.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
நாதன் வீட்டில் அவர், வசுமதி, காஞ்சனா மற்றும் அவள் கணவன் முரளி ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். காஞ்சனா அசோக் காதம்பரி சம்பந்தத்தை உறுதி செய்து கொள்ளும் முகமாய் தட்டை மாற்றிக் கொள்ளச் சொல்ல, நாதன் இன்னும் சற்றே பொறுக்கலாம் எனக் கூறுகிறார். தங்கள் பிள்ளை அசோக் தங்களாலேயே புரிந்து கொள்ள ரொம்பக் கடினமானவன், அவனை இந்தக் காதம்பரி ஒரே சந்திப்பிலேயே புரிந்து கொண்டிருப்பாள் என்பதை நம்ப அவருக்கு கடினமாக உள்ளது.

காதம்பரி அருகிலுள்ள கோவிலுக்கு வந்திருப்பதை தெரிந்து கொண்ட அவர் அங்கு போய் அவளுடன் மனம் விட்டுப் பேசுகிறார். அசோக் பற்றிய அவளது கருத்துக்களை அவர் அவளிடமிருந்தே நேரடியாக தெரிந்து கொள்ளவே வந்ததாகவும், அவளது முடிவு அவளது அக்கா மற்றும் அத்திம்பேரின் தூண்டுதல்களால் உருவாக்கப்பட்டிருந்தால் அது சரியானதாக இருக்காது எனவும் அவர் கூறுகிறார். காதம்பரியும் தனது கருத்துக்களை வெளிப்படையாகவே கூறுகிறாள். முதலில் அசோக் குடுமி வைத்துக் கொண்டிருந்தது, அவனது அதீத செய்கைகள் ஆகியவை பற்றி குறைவாக என்ணினாலும் நேரில் சந்தித்து பேசிய பிறகு தான் மனம் மாறியதாகவும் கூறுகிறாள். தான் கண்டுணர்ந்த அவனது நல்ல பக்கங்களையும் வலியுறுத்துகிறாள். இருப்பினும் நாதன் முழுதாக கன்வின்ஸ் ஆகாதது போலத்தான் தோன்றுகிறது.

வேம்பு சாஸ்திரிகள் வீட்டில் அவரது சம்பந்தி சிகாமணி முதலியார், மாப்பிள்ளை ஆகியோர் வந்திருக்கின்றனர். வேம்புவின் மகள் ஜயந்தி வர மறுத்து விட்டதாக மாப்பிள்ளை கூறுகிறான். இவர்கள் அதைக் கேட்டு வருத்தப்படுகின்றனர். வரும் ஞாயிறன்று வேம்பு குடும்பத்தினர் தங்கள் வீட்டுக்கு விசிட் செய்ய வேண்டும் என சிகாமணி முதலியார் கூற, வேம்பு ஜயந்தியை என்ணி தயங்குகிறார். இருப்பினும் மாப்பிள்ளை அவரை கன்வின்ஸ் செய்கிறான்.

நாதன், நீலகண்டன், வசுமதி, பர்வதம் ஆகியோர் நாதன் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். நாதன் தனது தயக்கங்களை எடுத்துரைக்கின்றார். இப்போதைக்கு ஒத்துக் கொண்டுவிட்டு பின்னால் அப்பெண் மனத்தாங்கல்பட்டால் என்ன செய்வது என வசுமதி கேட்க, அப்படியெல்லாம் எந்த கல்யாணத்தையும் பிரெடிக்ட் செய்ய முடியாது என நீலகண்டன் எடுத்துக் காட்டுகிறார். பல திருமணங்கள் எதிர்பார்ப்புகளின் இரு பக்கங்களுக்கும் சென்றுள்ளன.

அதையே சோவின் நண்பரும் கேட்கிறார், இத்தனை ஜாதகங்கள் பார்த்தும் பல திருமணங்கள் ஏன் தோல்வியில் முடிகின்றன என்று.

சோ அவருக்கு ஜாதகங்களின் லிமிட்டுகளை விளக்குகிறார். அவை வெறுமனே சூசகமாகவே சொல்லக் கூடியவை என்றும், ஒரேயடியாக அவற்றைப் பிடித்துக் கொண்டு தொங்கக் கூடாது என்றும் கூறுகிறார். திருமணங்களில் கணவன் மனைவி இருவருக்குமே கடமைகள் உண்டு உரிமைகளும் உண்டு. அவரவர் கடமைகளை நன்கு செய்தால் எல்லாம் நல்லபடியாக இருக்கும் எனவும், அதன்றி ஒவ்வொருவரும் உரிமைகளை மட்டுமே பிடித்து தொங்கிக் கொண்டிருந்தால் கஷ்டமே எனவும் கூறுகிறார்.

நாதன் வீட்டில் சம்பாஷணை தொடர்கிறது. கடைசியாக அசோக் பேசாமல் சிவன் கோவிலின் பூக்கட்டிப் பார்க்கலாம் என ஆலோசனை கூற, வசுமதி அது சரியாக வருமா என தயங்குகிறாள்.

(தேடுவோம்)

எபிசோட் - 84 (13.05.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
சிவன் கோவிலில் பூக்கட்டிப் பார்த்து விடலாம் என அசோக் கூற, அதெல்லாம் சரியா வருமா என வசுமதி சந்தேகத்தைக் கிளப்புகிறாள். ஒரு வேளை வேண்டாம் என வந்து விட்டால் என்ன செய்வது என அவள் மனம் மயங்க, அப்போ அது ஈஸ்வர சங்கல்பம் என எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் என அவன் பதிலளிக்கிறான். பேச்சு இதிலேயே தொங்க, நீலகண்டன் அசோக் அவனை அடிக்கடி பார்க்க வரும் தேஜஸ்வியான அந்த தபஸ்வியை அவன் மனதார பிரார்த்தித்து அவரை தருவித்து வழிக்காட்டும்படி கூறலாம் எனக்கூறுகிறார். அருகில் உள்ள கோவிலுக்கு காதம்பரியை கூட்டிப்போய் அவர்கள் இருவரும் ஒன்றாகவே பிரார்த்திக்கலாம் எனவும் அவர் கூறுகிறார்.

அசோக்கும் காதம்பரியும் கோவிலில் சந்திக்கின்றனர். காதம்பரி அவன் ஏன் தன்னை வரச்சொன்னான் என கேட்க அவனும் நீலகண்டன் சொன்ன ஆலோசனையை அவளிடம் கூற, அவள் அதை எதிர்க்கிறாள். இது 21-ஆம் நூற்றாண்டு என அவள் கூற, நூற்றாண்டு என்பது மில்லெனியத்தில் ஒரு துளியே, சத்தியம் என்பது மாறவே மாறாது என மிருதுவாக ஆனால் அழுத்தமாகவே கூறுகிறான்.

காதம்பரி தனக்கு விதிக்கப்பட்டவள் இல்லை என்றால் அந்த தபஸ்வி நிச்சயமாக வர மாட்டார் எனவும் கூறுகிறான். இருவருமாக பிரார்த்திக்க திடீரென எங்கிருந்தோ இடியும் மின்னலுமாக மழை வருகிறது. கோவிலுக்கு வெளியிலிருந்து அந்த தேஜஸ்வி பிரவேசிக்கிறார். இவர்களை நோக்கி வருகிறார். இவர்களும் அவரை நோக்கிச் செல்கின்றனர். அசோக் ஒரு பரவச நிலையிலிருக்கிறான். காதம்பரி ஒரு பிரமிப்பில் இருக்கிறாள். அவர் ஒன்றுமே பேசாது அவர்கள் இருவரையும் ஆசீர்வதித்து திரும்பி போகிறார். அசோக் அவரை வணங்கிய வண்ணமே இருக்க, கடைசியில் காதம்பரி அவசர அவசரமாக ஒரு கும்பிடு போடுகிறாள்.

காதம்பரி தன் அக்கா, அத்திம்பேர், பிச்சுமணி ஆகியோரிடம் தனது இந்த அனுபவங்களைக் கூற, அவர்கள் பிரமிப்பில் ஆழ்கின்றனர். அந்த சன்னியாசி எங்கிருந்து வந்தார் என காஞ்சனா கேட்க, அவர் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை என்கிறாள் காதம்பரி. ஒரு வேளை ஏதேனும் செட்டப் வைத்து ஒரு சாமியாரை வரச்சொல்லியிருப்பானோ என பிச்சுமணி சந்தேகத்தைக் கிளப்ப, சான்ஸே இல்லை என்கிறாள் காதம்பரி. சன்னியாசியை வேண்டுமானால் செட்டப் செய்யலாம், ஆனால் அந்த இடியையும் மழையையும் எப்படி வரவழைக்க இயலும் என அவள் கேட்கிறாள்.

தெய்வ சங்கல்பம் இதுதான் என நிச்சயமாகத் தெரிகிறது என அவள் அத்திம்பேர் கூற, காதம்பரி தனது குழப்பங்களைத் தெரிவிக்கிறாள். அதாகப்பட்டது, அசோக்கின் பல எதிர்மறை விஷயங்கள் தெரிந்த நிலையிலும் அவனிடம் தன்னை ஏதோ ஒரு சக்தி இழுக்கிறது என அவள் பிரமிப்புடன் கூறுகிறாள். ஒரு வேளை ஏதேனும் பூர்வ ஜன்ம தொடர்பால் அவர்கள் இணைக்கப்பட்டவர்களோ எனக் கேள்வி வருகிறது.

இந்த இடத்தில் சோ தன் நண்பரிடம் துரோபதை பாண்டவர் ஐவரை மணந்த கதையின் பின்புலனைக் கூறுகிறார். முந்தைய பிறவியில் பாண்டவர்களுக்கும் துரோபதைக்கும் விதிக்கப்பட்டவையே ஒருங்கிணைந்து அவள் அவர்களை மணக்க நேர்ந்ததை அவர் எடுத்துரைக்கிறார்.

அப்படியே கூட இருக்கலாம் என காதம்பரி ஒத்துக் கொள்ள, அவளது அத்திம்பேர் நாதன் வீட்டுக்கு போன் செய்கிறார். பிறகு குறிப்பிட்ட நாளன்று சந்தித்துப் பேசுகின்றனர். கல்யாணம் நடக்க வேண்டிய லௌகீகங்களை விவாதிக்கின்றனர். தங்கள் ஒரே மகன் அசோக்குக்கு எப்படியெல்லாம் தடபுடலாக கல்யாணம் செய்ய வேண்டும் என அவர்கள் திட்டமிட, அசோக் அப்பக்கம் வந்து தான் ஒன்று சொல்லலாமா எனக் கேட்கிறான்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/12/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 81 & 82)

எபிசோட் - 81 (10.05.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
வேம்பு சாஸ்திரி வீட்டுக்கு மேற்கொண்டு கேஸ் இணைப்பும் வருகிறது. யார் அனுப்புகிறார்கள் என்னும் நிலையில் அந்த வீட்டில் ஒரே குழப்பம். நடுவில் புது வீட்டு வாடகை வேறு பாக்கி நிற்கிறது. சுப்புலட்சுமியின் வற்புறுத்தல் பேரில் வேம்பு தயக்கத்துடன் சாம்புவின் உதவியை கேட்க ஒத்துக் கொள்கிறார்.

நாதன் வீட்டில் அவர் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார். அது என்ன என வசுமதி கேட்க, மனுஸ்ம்ருதி என அவர் பதிலளிக்கிறார்.

என்ன சார் இது இவர் மனு ஸ்ம்ருதியைப் படிக்கிறார். அதிலே என்ன சொல்லியிருக்கப் போறாங்க? பாப்பான்தான் ஒசத்தி. அவன் சொன்னபடி கேளுங்கோ அப்படீன்னுதானே எழுதியிருக்கப் போறாங்க என சோவின் நண்பர் அசுவாரசியமாக கூற, சோ மனுஸ்ம்ருதியை பற்றி மிகத் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டது என பல எடுத்துக் காட்டுகளுடனே கூறுகிறார். அதில் பிராமணர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கர்மாக்களை பார்த்தால் பிராமணன் ஆகும் ஆசையே ஒருவருக்கும் வராது எனவும் கூறுகிறார்.

அது ஒரு அருமையான அரசியல் வழிக்காட்டு நூல். அதை சரியாக புரிந்து கொண்டு நடந்தால் நாடு நன்றாகவே ஓகோன்னு வரும் என சோ எடுத்துரைக்கிறார். இங்கு நான் அவற்றைக் கூறப்போவதில்லை. வீடியோவில் காண்க என்று மட்டும் சொல்வேன்.

நாதன், வசுமதி மற்றும் பிச்சுமணி ஆகியோர் கூடிப் பேசி, காதம்பரியையும் அசோக்கையும் சந்திக்க ஏற்பாடு செய்ய முடிவெடுக்கின்றனர். அசோக்கும் ஒத்துக் கொள்கிறான்.

(தேடுவோம்)

எபிசோட் - 82 (11.05.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
(சுட்டி பாதிலிலிருந்துதான் ஆரம்பிக்கிறது)
அசோக்கும் காதம்பரியும் சந்தித்து பேசுகின்றனர். அசோக் தனது நிலைப்பாட்டை விளக்குகிறான். அவன் வர்ணரீதியான பிராமணனை தேடுவதாக தான் அறிந்ததாக காதம்பரி கூற, அவனே இப்போது தன்னுள்ளேயே பிராமணனை தேடுவதாகவும், தேடுவதை விட தேடப்படும் பொருளாக மாறுவது நல்லதல்லவா என்றும் கூறுகிறான். அவன் தான் முதல் கட்டமான பிரும்மச்சரியத்தை முடித்து விட்டதாக கூற, காதம்பரி bachelorhood? எனக் கேட்கிறாள். பிரும்மச்சாரிகள் எல்லோருமே கல்யாணம் ஆகாதவாத்தான் ஆனாக்க கல்யாணம் ஆகாதவா எல்லோருமே பிரும்மச்சாரிகள்னு சொல்லிட முடியாது என அசோக் எடுத்து கூறுகிறான்.

அதே போலத்தான் கிருகஸ்தாஸ்ரமம் என்பதும் வெறுமனே குடும்ப வாழ்க்கை மற்றும் சந்ததிகலை பெருக்க மட்டுமே இல்லை என்றும் குறிப்பிடுகிறான். பிறகு தர்ம பத்தினியின் குணநலன்களை அடுக்குகிறான். இக்காலத்தில் எல்லாராலுமே இது எல்லாம் முடியாது என்பதை தானும் அறிவதாகவும், ஆகவே சில சமரசங்கள் செய்து கொள்ளலாம் என்றும் கூறுகிறான். பிறகு காதம்பரியாக யோசித்து நிதானமாக முடிவைச் சொன்னால் போதும் எனவும் குறிப்பிட்டு விடுகிறான்.

தன் வீட்டில் காதம்பரியும் அவள் அக்கா மற்றும் அத்திம்பேர் அசோக்கை திருமணம் செய்து கொள்ளுவதன் சாதக பாதகங்களை அலசுகிறார்கள். தனது ஆட்சேபணைகளை ஒவ்வொன்றாக காதம்பரி கூறக்கூற, அவற்றுக்கு பதிலும் அளிக்கப்படுகிறது. அசோக் மூணு வேளையும் சந்தி பன்ணுகிறான் என அவள் திகைப்புடன் கூற, அந்தந்த நாளின் பாவத்தை அன்றே முறிக்கிறான் என அவளுக்கு பதில் வருகிறது.

அப்படியா சார் என சோவின் நண்பர் கேட்க, அது சந்தி செய்வதின் நோக்கங்களில் ஒரு சிஇய பகுதியே எனக் கூறி, சந்தியாவந்தனம், பிராணாயாமம், மற்றும் காயத்ரி மந்திரங்களின் பெருமையை எடுத்துக் கூறுகிறார். இப்போது மேலேறப்பட்டிருக்கும் வீடியோ துண்டில் அது கவர் செய்யப்படவில்லை என்பது ஒரு குறையே. கூடிய சீக்கிரம் அதை சரி செய்வார்கள் என நம்புகிறேன். (அப்பாடா சரி செய்து விட்டார்கள். முழு வீடியோவையுமே இப்போது பார்க்க இயலுகிறது).

காதம்பரி மற்றும் அவளது அக்காவின் அலசல் தொடர்கிறது. அவளது அத்திம்பேரும் இதில் கலந்து கொள்கிறார். இப்போதுதான் கவலை தரும் ஒரு டெவலப்மெண்ட் வருகிறது. என்ன வேண்டுமானாலும் வாக்கு தந்து விட்டு காதம்பரி அசோக்கின் மனைவியாகிவிட வேண்டும் என்றும் பிறகு எல்லாவற்றையும் நாளடைவில் தூக்கி எறியலாம் என அபாயகரமான கருத்தை அவள் அக்கா முன்வைக்க, காதம்பரியும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்குகிறாள். (இது நல்லதுக்கு எனத் தோன்றவில்லை)

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/07/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 79 & 80)

எபிசோட் - 79 (05.05.2010) சுட்டி - 79 & சுட்டி - 80
சாம்பு சாஸ்திரிகள் வீட்டுக்கு ஆர்த்திக்காக நிச்சயம் செய்துள்ள மாப்பிள்ளை பட்டாபி வருகிறான். அவரிடம் அவன் ஆர்த்தியை பீச்சுக்கு அழைத்துச் செல்ல அனுமதி கேட்கிறான். அவர் நன்கு யோசித்து அனுமதி மறுத்து விடுகிறார். அவனும் சரி எனக் கூறிவிட்டு செல்கிறான்.

அவன் அந்தண்டை போனதும் ஆர்த்தி தன் அப்பாவிடம் அவர் வருங்கால மாப்பிள்ளையிடம் அவ்வாறு கூறியிருக்கலாகாது எனக் கூறுகிறாள். முடிவை தன் கையில் விட்டிருந்தால் தானே நாசுக்காக மறுத்திருப்பேன் எனக் கூறுகிறாள். அப்போது பட்டாபிக்கும் இது அவ்வளவு பெரிய வருத்தமாகப் பட்டிருக்காது என்கிறாள். அப்போது பிரியா உள்ளே வருகிறாள். தான் பட்டாபியை போக விடாது வெளியிலேயே நிற்க வைத்திருப்பதாகவும், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள இம்மாதிரி செல்வது உதவியாக இருக்கும் என எடுத்துக் கூறி அவரை சம்மதிக்க வைக்கிறாள். ஆர்த்தியும் மகிழ்ச்சியுடன் செல்கிறாள்.

அசோக் வீட்டில் அவனுக்காக சில பெண்களின் போட்டோக்களை செலக்ட் செய்து வைத்திருக்கிறாள் வசுமதி. அவற்றை நாதனிடம் காட்டுகிறாள். நாதனும் அசோக்கின் அபிப்பிராயம் கேட்க, தாய் தந்தையர் பார்த்து எந்தப் பெண்ணை செலக்ட் செய்தாலும் அவனுக்கு சம்மதமே என்கிறான்.

அழகான பொண்ணா பாருங்கோ, இல்லேன்னாக்க பார்யாள் ரூபவதி சத்ரு என்பான் அவன் என வசுமதி கிண்டல் செய்கிறாள். அது என்ன பார்யாள் ரூபவதி சத்ருங்கறது என சந்தேகம் கேட்கிறார் சோவின் நண்பர்.

இந்த இடத்தில் எனக்கு பளீரென ஒரு பொருத்தமின்மை தென்பட்டது. அதையே சோவும் சுட்டிக் காட்டுகிறார். அதாவது வசுமதி சொன்ன மேற்கோள் தவறு என்று. உண்மை கூறப்போனால் அழகு அதிகம் இல்லாத பெண்ணைத்தான் பார்க்க சொல்லிவிட்டு, அப்போது வேண்டுமானால் பார்யாள் ரூபவதி சத்ரு என கோட் செய்யலாம் என அவர் கூறுகிறார்.

இது ஒரு வடமொழி ஸ்லோகத்தின் ஒரு பகுதி. அதாகப்பட்டது, கடனை வைத்து விட்டு இறந்து போகும் தந்தை சத்ரு, நடத்தைக் குறைவுள்ளவளாக தாய் அமைந்தால் அவள் சத்ரு, அழகிய மனைவி சத்ரு, படிப்பறிவில்லாத பிள்ளை சத்ரு.

இன்னொரு ஸ்லோகமும் கூறுகிறார். அதன் பொழிப்புரை இதோ. சீதைக்கு அவளது பேரழகே சத்ரு, ராவணனுக்கு அவனது கர்வமே சத்ரு, தர்மவானான மகாபலிக்கு அவனது தர்ம சிந்தனைகளே சத்ரு, ஆக, எதிலுமே மிகையாக இருத்தல் ஆகாது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்றும் இதைக் குறிக்கலாம்.

இவ்வாறான மேற்கோள்கள் வட மொழியிலும் தமிழிலும் மண்டிக் கிடக்கின்றன. ஆனால் நாம்தான் ஆங்கிலத்தில்தான் அவை அதிகம் உள்ளன என நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

நாதன் காண்பித்த ஃபோட்டோக்களில் உள்ள பெண்கள் வேலைக்கு போகிறார்கள், தனது கிருகஸ்தாஸ்ரம தர்மத்துக்கு துணையாக இருக்க மாட்டார்கள் என அசோக் அபிப்பிராயப்படுகிறான். பின்னால் ஆலோசனைக்காக கூப்பிடப்பட்ட சாம்பு சாஸ்திரிகளும் அதையே கன்ஃபர்ம் செய்கிறார். முழுக்க முழுக்க கிரகஸ்தாஸ்ரமத்துக்கு ஒத்துப் போகும் பெண்கள் துர்லபம் என்றாலும், முடிந்தவரை தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கலாம் என சாம்புவும் அபிப்பிராயப்படுகிறார்.

காஞ்சனாவை அவள் வீட்டில் டிராப் செய்ய வசுமதி வருகிறாள். அங்கும் அசோக் கல்யாணம் பற்றிய பேச்சு தொடர்கிறது. வசுமதி பணக்கார இடங்களிலிருந்து பெண்ணைத் தேடாமல் நடுத்தர வகுப்பினர் வீடுகளிலிருந்து தேடலாம் என கருத்து கூற, வசுமதி ஆலோசனையில் ஆழ்கிறாள்.

(தேடுவோம்)

எபிசோட் - 80 (06.05.2010) சுட்டி- - 1 & சுட்டி - 2
வேம்பு சாஸ்திரிகளின் வீட்டுக்கு ஒரு மாதத்துக்கான மளிகை சாமான்கள் அனுப்பப்படுகின்றன. அவர், சுப்புலட்சுமி மற்றும் அவர் அக்கா யார் அவற்றை இதை அனுப்பியிருப்பார்கள் எனப்புரியாது திகைக்கின்றனர். தங்கள் மகள் ஜயந்தி அனுப்பியிருப்பாளோ என சுப்புலட்சுமி கேட்க, சான்ஸே இல்லை என்கிறார் வேம்பு சாஸ்திரிகள். குழப்பம் தொடர்கிறது.

பிரியாவை பார்க்க நீலக்ண்டன் வருகிறார். அவள் தனது ஜூனியர் வேலையை விட்டதற்கு வக்கீல் அனந்தராமன் வருத்தப்படுவதாகக் கூறுகிறார். அனந்தராமன் ரமேஷ் கேசை எடுத்துக் கொண்டது தனக்கு பிடிக்கவில்லை எனவும், இப்போது அதன் விளைவாக நாதன் அவரை தனது லீகல் அட்வைச்ர் நிலையிலிருந்து நீக்கி விட்டார் என்றும் பிரியா கூறுகிறாள்.

இந்த இடத்தில் டோண்டு ராகவன். அனந்தராமன் ஏற்கனவே நாதனின் லீகல் அட்வைசர். அப்படியிருக்க அவர் ரமேஷின் கேசை எடுத்ததே முதல் தவறு. ரமேஷ் நாதன் கம்பெனியில் ஜி.எம். ஆக இருக்கையில் மோசடி செய்து அவரது புகாரின் பெயரில் சிறையில் இருப்பவன். அனந்தராமன் இப்போது செய்ததால் நேரெதிர் நலன்களின் மோதல்கள் வருமே (conflict of interests). இனிமேல் அவரது நாதனது லீகல் அட்வைசராக இல்லை என்று ஆனாலும், இத்தனை நாட்கள் அந்த வேலையில் இருந்ததால் அவரது கம்பெனிகளின் பல உள்விஷயங்களை அறிந்திருக்கலாம் அல்லவா. அவை privileged confidential information அல்லவா? அதைக் காரணமாக வைத்தே அவரது சன்னதை பிடுங்கலாமே? ஒரு வேளை சீரியலில் இது பற்றி பிறகு டீல் செய்கிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும்.

எது எப்படியானாலும் தான் அனந்தராமனை விட்டு விலகியது விலகியதுதான் என பிரியா திட்டவட்டமாகக் கூறுகிறாள். நீலகண்டனின் மாப்பிள்ளை ரிலீசாக தனது தனிப்பட்ட வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறாள்.

காஞ்சனாவும் காதம்பரியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதில் காஞ்சனாவின் கணவன் எல்.ஐ.சி. ஏஜெண்டும் அவரது மைத்துனன் பிச்சுமணியும் கலந்து கொள்கின்றனர். பேச்சு அசோக் பக்கம் செல்கிறது. எல்லோருமாகச் சேர்ந்து அசோக்கை திருமணம் செய்து கொள்ளுமாறு காதம்பரிக்கு வேப்பிலை அடிக்கின்றனர். அவளும் இது சம்பந்தமாக தன் மனதில் உள்ள பல ஆட்சேபங்களை தெரிவிக்கிறாள்.

இந்திய ஆங்கில எழுத்தாளர் விக்ரம் சேத் எழுதிய A suitable boy என்னும் கதையிலும் இப்படித்தான் பெண்ணுக்கு ஏற்ற மாப்பிள்ளையைத் தேடிக் கொண்டே இருப்பார்கள் எனவும் காதம்பரி கூறுகிறாள்.

அப்படித்தானே தேடணும் என சோவின் நண்பர் கூற, அது பற்றிய ஒரு தமாஷ் கதையை மகாபெரியவள் சொன்னதாக சோ கூறுகிறார்.

ஒருவன் தன் மகளுக்கு ஏற்ற மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்க, அவளோ அந்த ஊரிலேயே அதிகம் சக்தியுள்ளவனையே தானே தேர்ந்தெடுக்கப் போவதாக கூறிவிட்டு புறப்படுகிறாள். முதலி அரசன் ராஜ தோரணையில் பவனி வருவதைப் பார்த்து அவனாக இருக்குமோ என மயங்கினால், அவனோ ஒரு சாமியாரை பார்த்து வணங்குகிறான். சாமியாரோ குளக்கரை பிள்ளையாரை வணங்க, அச்சிலை மேல் வழியே செல்லும் நாய் அசிங்கம் செய்து விட்டு செல்கிறது, ஆனால் அந்த நாயை ஒரு சிறுவன் கல்லால் அடித்து துரத்த, அப்பக்கம் வந்த ஒரு வாலிபன் அச்சிறுவனை தண்டிக்கிறான். கடைசியில் அந்த வாலிபனை அவள் தேர்ந்தெடுக்க, அவனே அவளுக்காக அவள் தந்தையால் பார்க்கப்பட்ட மாப்பிள்ளை என்பது தெளிவாகிறது.

கடைசியில் அசோக்கை நேரில் சந்தித்துப் பார்த்து பிறகு தன் கருத்தைக் கூறுவது நலமாக இருக்கும் என்பதையும் அவள் ஏற்றுக் கொள்கிறாள்.

தன்னைப் பார்க்க வரும் உமாவிடம் பிரியா பேசி அவள் தனது கணவன் ரமேஷை ஒரு முறை சிறைக்கு சென்று பார்க்க சம்மதிக்க வைக்கிறாள். உமாவும் செல்கிறாள். ஐந்து நிமிடம் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் பேசாது அமர்ந்திருக்கின்றனர். பிறகு உமா எழுந்து செல்கிறாள்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5/05/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 77 & 78)

எபிசோட் - 77 (03.05.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
பிரியா தன் சீனியர் வீட்டுக்கு வருகிறாள். அவரிடம் அவர் ரமேஷ் கேசை கையில் எடுத்துக் கொண்டதால் அவருக்கு இனிமேல் தான் ஜூனியராக இருக்க விருப்பம் இல்லை எனக்கூற, அவரும் தான் இதை எதிர்பார்த்ததாகவும், அவள் தன் இஷ்டம்போல செய்து கொள்ளலாம் எனக்கூற, அவள் அவரிடம் விடைபெற்று செல்கிறாள்.

நீலகண்டனும் பர்வதமும் உமாவின் மாமனார் வீட்டுக்கு வந்திருக்கின்றனர். அவள் மாமனார் மாமியாருடன் பேசுகின்றனர். அவர்களுக்கு உமா மேல் ரொம்பக் கோபம். சிறிது நேரம் பொறுமையாகப் பேசிய நீலக்ண்டனும் திடீரென கோபப்பட்டு அவர்கள் பிள்ளை ரமேஷ் செய்த கிரிமினல் வேலைகள் மட்டும் நியாயமோ என கேட்கிறார். அப்படியே பேச்சு முற்றிப் போய் மாமனார் நீலகண்டனையும் பர்வதத்தையும் வீட்டை வீட்டு வெளியே போகுமாறு கூறுகிறார். அவர்கள் சென்ற பிறகு மாமியார் தன் கணவரிடம் இப்படி ஒரேயடியாக உறவை முறித்திருக்க வேண்டாம் என அபிப்பிராயப்படுகிறாள். ரமேஷை வெளியில் கொணர்ந்து அவனுக்கு வேறு நல்ல பெண்ணைக் கல்யாணம் செய்விக்கப் போவதாக அவர் கூற, மாமியாரோ அவரது திருட்டுப் பிள்ளைக்கு பெண் தர எல்லோரும் கியூவிலா நிற்கிறார்கள் எனக்கேட்டு அப்பால் செல்கிறாள்.

பிரியா வீட்டில் அவளும் காதம்பரியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். பிரியா தனது ஜூனியர் வேலையை விட்டு விட்டதைக் கூற, காதம்பரி அது பற்றி அவளிடம் விவாதிக்கிறாள். வக்கீல் தொழிலின் எதிக்ஸ் பற்றி பேச்சு செல்கிறது. பிறகு அவளும் காதம்பரியுமாக புறப்பட்டு அசோக் வீட்டுக்கு செல்கின்றனர். காதம்பரி கீழே தோட்டத்தில் இருப்பதாகக் கூறி நின்றுவிட, அசோக்கைப் பார்த்து பிரியா பேசுகிறாள். தான் வேலையை விட்டுவிட்ட சந்தர்ப்பம் பற்றிக் கூறி தான் செய்தது சரியா என அவள் அவனைக் கேட்க, அவன் புன்முறுவலுடன் அவள் எல்லா தரப்பையும் சீர்தூக்கிப் பார்த்து, மனசாட்சிப்படித்தானே முடிவெடுத்திருக்கிறாள், ஆகவே இதில் என்ன குழப்பம் எனக்கேட்க, அவள் மனதும் லேசாகிறது.

பிறகு அசோக்குக்கு மனைவி தேடும் விஷயம் பற்றி பேச்சு திரும்புகிறது. அவன் கல்யாணத்துக்கு சம்மதித்தானா என அவள் அசோக்கைக் கேட்க, அவனோ திருமணம் எனச் சொல்வதைவிட கிருஹஸ்தாஸ்ரமம எனச்சொல்லலாமே எனக் கூறுகிறான். ஆக, அவனுக்கு கூடிய சீக்கிரம் மனைவி வந்து விடுவாள் என அவள் மகிழ்ச்சியாகக் கூற, அவனோ மனைவி என்பதைவிட தர்மபத்தினி எனக்கூறலாமே என்கிறான்?

இதென்ன சார் தர்மபத்தினி, மனைவின்னு சொன்னா போறாதா, பெண்டாட்டி எனச்சொன்னா போறாதா, வீட்டுக்காரின்னு சொன்னா போறாதா, என சோவின் நண்பர் கேட்க, அவர் குறும்புத்தனமாக ஏன் தேடிவரவழைத்த தொந்திரவு எனச்சொன்னால் போறாதா எனக் கேட்கிறார். பிறகு சீரியசாக பேச ஆரம்பிக்கிறார். மனைவி அருகில் இல்லாது ஒரு கிரஹஸ்தன் எந்த தர்ம காரியமும் செய்யவியலாது, அதற்கான யோக்கியதை அவனிடம் இல்லை என அவர் விளக்க, அப்படியானால் அவன் தர்ம காரியங்கள் செய்யும்போது வெறுமனே பக்கத்தில் நின்றால் போதுமா என நண்பர் கேட்க, அதுவும் போதாது எனக்கூறுகிறார். மனு நீதிப்படி, மகாபாரதத்தில் சொல்லியபடி பல கடமைகள் மேலும் உள்ளன எனக்கூறி அவற்றில் சிலவற்றையும் அடுக்குகிறார்.

ஆனால் இதெல்லாம் தற்காலத்தில் சாத்தியமா எனப் பார்த்தால் கஷ்டம்தான் என்கிறார். பொருளாதார நிர்ப்பந்தங்களால் மனைவியானவள் வெளியே வேலைக்கெல்லாம் போக வேண்டியிருக்கிறது, ஆனால் தான் சொல்பவை தர்ம சாத்திரங்களில் கூறப்பட்டவை மட்டுமே எனவும் கூறி விடுகிறார்.

காதம்பரி வெளியே காத்திருப்பதைப் பார்த்த வசுமதி அவளை உள்ளே அழைத்துப் பேசுகிறாள். அவள் தனது தூரத்து சொந்தம் கும்பகோணம் காஞ்சனாவின் தங்கை என அறிந்து மேலும் மகிழ்கிறாள். அவர்கள் இவ்வாறு பரஸ்பரம் விசாரித்துக் கொண்டிருக்க, பிரியாவும் கீழே இறங்கி வருகிறாள். வசுமதியும் காதம்பரியும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை பார்த்து அவள் மகிழ்கிறாள்.

காதம்பரியிடம் பிரியா அவள் விரும்பினால் அசோக்கை சந்திக்கலாம் எனக் கூறுகிறாள், விருப்பம் எனக் கூறுவதை விட அவ்வாறு குடுமி வைத்த வாலிபன் எப்படி இருப்பான் என பார்க்க கியூரியாசிடியாக உள்ளது எனக் கூறி, காதம்பரி சற்றே தயங்குகிறாள்.

(தேடுவோம்)

எபிசோட் - 78 (04.05.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
கோவிலில் வைத்து சாம்புசாஸ்திரியும் வேம்பு சாஸ்திரியும் சந்திக்கின்றனர். தத்தம் குடும்ப விஷயங்களை விவாதிக்கின்றனர். பேசாமல் வேம்பு தன் வீட்டை காலி செய்ய நேர்ந்தபோது தங்கள் வீட்டுக்கே வந்து இருந்திருக்கலாம் என சாம்பு கூற அது சரியாக வந்திருக்காது என வேம்பு கூறுகிறார்.

அந்தப் பக்கம் வரும் அசோக்கும் அவர்களது பேச்சில் கலந்து கொள்கிறான். கர்மா தியரி பர்றி பேச்சு செல்கிறது. அசோக் கூறும் விஷயங்களை சாம்பு ஒரு குருவுக்கிருக்கும் பெருமையுடன் அவதானிக்கிறார். அசோக் இப்போது கிரகஸ்தாஸ்ரமத்துக்கு வரவிருப்பது பற்றி பேச்சு செல்கிறது. அவனால் சின்சியராக கிருகஸ்தாஸ்ரமக் கடமைகளையெல்லாம் கடைபிடிக்க இயலுமா என வேம்பு சந்தேகிக்க, அசோக் பொறுமையுடன் அது தன்னால் இயலும் என தான் நம்புவதாகக் கூறுகிறான். பிரும்மச்சரியத்தை முழுமனத்துடன் கடைபிடித்ததாலேயே அதை வெற்றிகரமாக முடிக்க முடிந்தது என்றும், இவ்வாறே கிருகஸ்தாஸ்ரமம் என்றால் என்னவென்றும், அக்னிஹோத்ரம் என்பது என்ன, மனைவியுடன் சேர்ந்து செய்ய வேண்டிய தினசரி கடமைகள் ஆகியவற்றையும் விளக்குகிறார்.

இங்கு டோண்டு ராகவன். இதுவே ஒரு முழுநேர வேலையாகி விடுகிறது. இப்போதைய அவசர யுகத்தில் அவற்றை பராமரிக்க முடியாது என்றுதான் எனக்குப் படுகிறது. அதைச் செய்யவும் வசிஷ்டராகிய அசோக் போன்றவர்களால்தான் முடியும் எனவும் தோன்றுகிறது. சீரியலில் இதற்கெல்லாம் விளக்கங்கள் வரும் எபிசோடுகளில் வரும் என நினைக்கிறேன்.

வேம்பு சாஸ்திரிகள் அசோக்கை தங்கள் வீட்டுக்கு வருமாறு அழைக்க அவனும் அங்கு செல்கிறான். சிங்காரம் வேம்புவுக்கு ஏற்பாடு செய்து தந்த வீடு அது. சுற்றுப்புறத்தில் உள்ள மனிதர்கள் முதலில் தங்களை வித்தியாசமாக நோக்கினாலும், இப்போதெல்லாம் அன்பு காட்டுகிறார்கள் என வேம்பு அவர்கள் மன நிறைவுடன் கூறுகிறார். அவர் அங்கு வந்து விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளதாகவும், அங்கு பூஜைகள் முதலியவை நன்கு செய்யப்படுவதாகவும் சிங்காரமும் மனநினைவுடன் கூறுகிறான். அவன் பிள்ளையின் நலத்தை அசோக் விசாரிக்க, அவனும் நன்றியுடன் அசோக் தனக்கு செய்த உதவியை நினைக்கிறான்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது