11/08/2007

கலைஞர் செய்வது சரியே, அதை நான் ஆதரிக்கிறேன்

கலைஞருக்கு வேண்டியவர்கள் என்று நினைக்கப்படுபவர்கள் அவருக்கு இப்போது ஆபத்து விளைவிக்கும் யோசனையை தெரிவித்து வருகின்றனர். அதாவது கலைஞர் அரசை கலைத்து பார்க்கட்டுமே என்று. அப்பதிவில் நான் இட்டப் பின்னூட்டங்கள் இதோ.

"ஏன் இந்தக் கொலைவெறி. பாவம் கலைஞர் உங்களைப்போன்ற அவரது ஆதரவாளர்கள் இருக்கும்போது அவருக்கு விரோதிகளே தேவையில்லை.

ஆட்சிக் கலைப்புக்கும் கலைஞருக்கும் ராசியே இல்லை.

1976-ல் கலைக்கப்பட்ட அவரது ஆட்சி எம்ஜீஆர் அவர்கள் உயிருடன் இருந்தவரைக்கும் அமையவே இல்லை.

ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு அமைஞ்ச 1989-ல் அமைந்த ஆட்சியை 1991-ல் கலைச்சாங்க. அதுக்கு அப்புறம் நடந்த தேர்தல்லே அவரும் பரிதி இளம்வழுதி மட்டுமே வெற்றி பெற முடிந்தது. சட்டசபைக்கு செல்ல விருப்பம் இல்லாது தோல்விக்கு தார்மீகப் பொறுப்பு ஏற்பதாக சாக்கு சொல்லி தன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தது அவருக்கு பெருமை தேடித்தரவேயில்லை.

அதுவும் 1991-ல் ஈழப்பிரச்சினைக்காகவே ஆட்சிக் கலைப்பு வந்தது. சிலர் கூறுவதுபோல அதை அவர் லைட்டாக எடுத்து கொள்ளவில்லை. அது நடக்காமல் இருக்க என்னென்னவோ திரைக்கு பின்னால் செய்து பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை. இது இப்போது பலருக்கு ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ, அவருக்கு மறக்காது.

இப்போது மட்டும் எப்படி ஆட்சிக் கலைப்பை வரவேற்பார் என நினைக்கிறீர்கள்? பதவி போனால் உடனேயே அழகிரி கேசை தூசிதட்டி எடுப்பார்களே. கலைஞர் டி.வி.யை யார் முன்னுக்கு கொண்டுவருவதாம்?

இம்மாதிரி உசுப்பேத்தி உசுப்பேத்தியே அவரை கெடுப்பது நியாயமா"?

அதுவும் அந்த 1991 ஆட்சிக் கலைப்பு சமயத்தில் துக்ளக்கில் வந்த அந்த கார்டூன் இப்போதும் மனதில் நிற்கிறது. அப்போது சுப்பிரமணியம் ஸ்வாமியும் ஜெயலலிதாவும்தான் சேர்ந்து அப்போதைய பிரதமர் சந்திரசேகரிடம் கலைஞரை போட்டு கொடுத்து அவர் ஆட்சியை கலைக்க செய்தனர். முதலில், "சுப்பிரமணிய ஸ்வாமியா யாரது" என்று சீறிய கலைஞர் பிறகு பதறிப்போய் தன் நிலையைக் காப்பாற்றிக் கொள்ள சுப்பிரமணிய ஸ்வாமியின் ஆதரவை பெற முயன்றதை ஒரு கார்ட்டூனில் துக்ளக் இவ்வாறு காட்டியது. கலைஞர் சுப்பிரமணிய ஸ்வாமியின் வீட்டருகில் நின்று பாடுகிறார். "சொப்பன வாழ்வில் மகிழ்ந்து சுப்ரமண்ய சுவாமி உனைமறந்தார் அந்தோ". அதைப் பார்த்து அக்காலக் கட்டத்தில் நான் விடாது சிரித்த சிரிப்பு இன்னும் ஞாபகத்தில் உள்ளது.

மேலே சுட்டியிட்ட அதே பதிவில் இசை அவர்களின் பின்னூட்டம் இதோ:

"உணர்ச்சி இருக்குறவங்கள தானே உசுப்பேத்தமுடியும்?? மரக்கட்டைகளையும், மாராப்பு விரித்து மன்றம் பிடித்தவர்களையும் உதைத்தால் கூட ஒரு பயனும் இல்லை. நல்லது நடக்கும் என்று தெரிந்ததால் தான் உசுப்பேற்றுகிறோம் டோண்டு அவர்களே".

அதற்கு எனது பதில்:

"ஆயிரத்தில் ஒரு வார்த்தை இசை அவர்களே. கலைஞர் உணர்ச்சி மிக்கவர்தான். தனது குடும்பத்தினர் மட்டுமே கட்சியில் முன்னுரிமை பெறவேண்டும் என்ற பாச உணர்ச்சியில் இருப்பவர். தமிழ் உணர்ச்சிகள் மேலே சொன்ன உணர்ச்சிக்கு எதிராக வந்தால் அவற்றை அதற்காக தியாகம் செய்பவர்.

அவர் ஆட்சியை விட்டு விலகுவார் என நினைக்கிறீர்கள்? அதே சமயம் மன்மோகன் அரசு அவர் ஆட்சியை கலைத்தால் அவர்களுக்கே அது ஆப்புதானே.

இந்த நிலையில் உங்கள் எதிர்ப்பார்ப்பை என்னென்று சொல்வது"?

இதனாலெல்லாம் கலைஞர் செய்வது தவறென்று நான் சொல்ல வரவில்லை. அவர் பாட்டுக்கு தேமேனென்று தன் குடும்ப நலனை கவனிக்கிறார். அது பொறுக்காதே ஜனங்களுக்கு. இப்படி உசுப்பேத்தினால் கலைஞர் ராஜினாமா செய்து விடுவாராமா? வேறு ஆளைப் பாருங்கள். ஆனானப்பட்ட அழகிரி விவகாரத்திலேயே அவர் எவ்வளவு சாதுர்யமாக செயல்பட்டார்? இப்போதைக்கு அச்சமயம் கொலை செய்யப்பட்ட 3 தினகரன் ஊழியர்களின் குடும்பத்தினர் தவிர இப்போது யார் அதைப் பற்றி நினைக்கிறார்கள்?

ராமர் குடிகாரன், தெய்வமே இல்லை என்றெல்லாம் கொடிபிடித்த அதே கலைஞர் வட இந்தியாவில் வந்த எதிர்ப்பைப் பார்த்து எவ்வளவு திறமையுடன் தனது பேச்சை மாற்றினார்?

இது சம்பந்தமாக வந்த 31.10.2007 தேதியிட்ட துக்ளக் அட்டைப்பட் கார்டூன் அதை அழகாக காட்டுகிறது. அது இதோ:



இந்தியன் எக்ஸ்ப்ரஸ் நியூஸ் செர்வீசில் வந்த இச்செய்தியை இங்கு பார்க்கலாம். எதற்கும் அதில் உள்ளதை இங்கு காப்பி ஏஸ்ட் செய்வதே நலம். திடீரென சுட்டி வேலை செய்யாவிட்டால் என்ன செய்வதாம்?

Ram, Jesus, Mohammed all one and same god: Karunanidhi
Friday October 19 2007 00:00 IST
Express News Service

CHENNAI: In a remarkable reversal Chief Minister M Karunanidhi, who has been in the midst of controversy over his remarks against Lord Ram, on Thursday declared that Ram was as much a god as Jesus and Prophet Mohammed.

Speaking in the Assembly, Karunanidhi asserted that neither he nor his party or government was against Ram.

“As far as we are concerned Rama, Jesus and the Prophet (Mohammed) are one and the same. All are one and the same God. This government has deeply embedded in its heart (the late Chief Minister) CN Annadurai's dictum of ‘One family, One god’ and never intends to wound (the religious feelings of) anyone,” he said.

His declaration came as a part of his fervent plea for implementation of Sethusumudram project. “If necessary name it as Sethu Raman project. All that we need is the implementation of the project, and thereby the progress of Tamil Nadu. We are pressing for the project only for this and not to denigrate Rama.”

The remarks come in the wake of the appeal by actor Rajnikanth two days ago to Karunanidhi to resolve the Ram Setu issue.

In fact, Karunanidhi referred to Rajnikanth's appeal, and said that the actor had pointed out that there was a propaganda in North India that he was Ram-hater.

He also recalled that he had told Rajnikanth that he (Rajnikanth) should tell the ‘Sants and mahants’ that he was did not despise Ram. “We do not have anything against Ram,” he said.

இப்போது சிறு கஷ்டம் வரக்கூடும். ராமரை முதலில் திட்டி விட்டு பிறகு அவரை ஏசு, முஹம்மது போன்றவர்களுடன் ஒன்றாக பட்டியலிட்டதால் அது வரக்கூடும். இப்போதைக்கு வரவில்லை. பரவாயில்லை. கலைஞருக்கு அது நல்லதே.

நான் மறுபடியும் கூறுகிறேன். கலைஞர் அவர்கள் செய்வது தவறே இல்லை. தனது சொந்த நலனை பார்த்து கொள்வது எந்த விதத்திலும் தவறு கிடையாது.

எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/07/2007

மூன்றாம் ஆண்டு நிறைவு

விளையாட்டுப்போல 3 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்றுதான் அந்த மூன்றாம் ஆண்டின் கடைசி நாள் (07.11.2007). இது 434-வது பதிவு. முதல் பதிவு 08.11.2004 அன்று போடப்பட்டது. முதல் ஆண்டு முடிந்தபோது போட்ட பதிவு 173-வது. இரண்டாம் ஆண்டு நிறைவு பற்றி போட்ட பதிவு 321-வது ஆகும்.

இவை வெறும் புள்ளிவிவரம் மட்டுமே. அவற்றுக்கெல்லாம் மேலே எனது அனுபவங்கள் பற்றி எழுத வேண்டும். பெரும்பான்மையானவை நல்ல அனுபவங்களே. மிகச் சில அனுபவங்கள் அவ்வளவு நல்லவை அல்ல. ஆயினும் அவற்றையெல்லாம் மீறித்தான் நான் வந்தேன்.

நான் கெட்ட அனுபவம் எனக் குறிப்பிடுவது போலி டோண்டு என்னும் பெயரில் வந்த மூர்த்தி என்னும் பதிவர் மூலம் வந்தது. உபயோகமில்லாமல் என்னுடன் ஒரு பதிவு விஷயத்தில் போட்ட சண்டைக்காக விஷம் கக்கியவர் அவர். ஒரு மனிதனால் இந்த அளவுக்கு கீழே இறங்க முடியுமா என்று திகைப்பளிக்கும் வகையில் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் நடந்து கொண்டார் அவர். நல்ல வேளையாக அவர் பல பதிவர்களால் சரியானபடி அடையாளம் காண்பிக்கப்பட்டு அவர் தொல்லை ஒழிந்தது. இந்த விஷயத்தில் நான் நன்றிகூற வேண்டியவர்கள் குழலி, ஓசை செல்லா, செந்தழல் ரவி, சர்வேசன், உண்மைத் தமிழன் ஆகியோர். இதைத் தவிர மீதி எல்லாமே நல்ல அனுபவங்கள்தான்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி தமிழ்மணம் எனது முன்னேற்றத்துக்கு மிகவும் உதவியது. அதற்கு எனது மனப்பூர்வமான நன்றியை மீண்டும் தெரிவிக்கிறேன். இந்த நன்றி தெரிவிக்கும் விஷயத்திலும புதிதாக ஒன்று பார்த்தேன். சில சமயங்களில் நான் மனப்பூர்வமாக தெரிவித்த நன்றியறிவிப்பு பலருக்கு சங்கடம் தந்தது என்பதை அறிய நேர்ந்தது. ஆச்சரியப்பட்டாலும் சுதாரித்து கொண்டேன். ஏனெனில் எனது அனுபவங்களில் பல விஷயங்கள் இம்மாதிரி நான்-லீனியராக அமைகின்றன என்பதே அது.

இந்த மூன்றாம் ஆண்டில் பெரும்பகுதி திருக்குறள் மொழிபெயர்ப்பு வேலை நடந்தது. அது முடிந்த அன்றைக்கு நான் டப்பாங்குத்து நடனமே போட்டு ஒரு குழந்தையையும் அதன் அம்மாவையும் பயமுறுத்தியதை பற்றி ஏற்கனவே எழுதி விட்டேன். தாய்மொழியில் மொழிபெயர்க்கும் ஆனந்தம் செய்துதான் உணரமுடியும். உதாரணத்துக்கு இப்பதிவுக்காக நான ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தபோது சொற்கள் இயந்திரத் துப்பாக்கியிலிருந்து வருவதுபோல வந்தன. கண்களில் நீர் திரையையே மறைத்தது. ஸ்ரீலங்காவிலிருந்து வந்த வாடிக்கையாளர் பற்றிய பதிவும் என்னையறியாத அளவுக்கு வேகமாக வந்தது.

எல்லா பதிவுகளுமே என் குழந்தைகள்தான் என்றாலும் மேலே கூறியது போன்ற சில பதிவுகள் ஏதோ காரணங்களால் என் நினைவில் நிற்கின்றன. அவற்றில் முக்கியமானது ஆரவாரப் பேய்கள் பற்றியது. இன்னொன்று ஷ்டாஸி பற்றியது.

இந்த ஆண்டு எனது மொழிபெயர்ப்பு வேலைகளிலும் அபார முன்னேற்றம். மொழிபெயர்ப்பாளர்கள் தலைவாசலாம் ப்ரோஸ்.காமில் நான் ப்ளாட்டினம் உறுப்பினராக முடிந்தது அவர்களது இணையப்பக்கங்களை தமிழாக்கம் செய்ததன் மூலமே. அதற்கு தேவையான தமிழில் எழுதும் திறமையே நான் வலைப்பூவுக்கு வந்ததாலேயே வந்தது. முக்கியமாக இகலப்பைக்கு மிக்க நன்றி. நண்பர்களுடன் எதிர்வினை செய்யும்போதும் அதற்கும் மேலாக எதிரியுடன் மோதும்போதும் போட்ட பதிவுகள் இந்த விஷயத்தில் நல்ல பயிற்சி அளித்தன என்றால் மிகையாகாது.
இன்னும் பல காலம் இருந்து உங்களையெல்லாம் படுத்த உத்தேசம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/05/2007

நாடக அரங்கங்களில் ஆபாசங்கள்

மனோகரின் நாடகம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. சாணக்யன் என்று நினைக்கிறேன். அப்போது ஒரு காட்சியில் படையெடுப்பு முடிந்ததும் வென்ற அரசன் தன் வீரர்களிடம் அவர்கள் கைப்பற்றிய எதிரி தேசத்து அரசனின் பொருட்களை கொண்டு வந்து காட்டுமாறு கூறுவான். அவர்கள் கொண்டு வந்து அன்று அரசன் காலடியில் கொட்டியது இரண்டு தினத்தந்தி பேப்பர்கள், ஒரு டார்ச்லைட் மற்றும் சில ட்ரான்சிஸ்டர்கள். அரசன் முதற்கொண்டு எல்லோரும் சிரிக்க ஆரம்பிக்க, வேகமாக ஸ்க்ரீனை இழுக்க வேண்டியதாயிற்று.

இதே போலத்தான் எனது இப்பதிவில் "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்னும் தலைப்பில் போடப்பட்ட நாடகத்தில் நடந்ததாக நான் குறிப்பிட்ட நிகழ்ச்சி. நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார் ஹாம்லெட் நாடகம் போட்டார் (அமலாதித்யன்). அதிலும் இதே போல காலத்துக்கு சம்பந்தமில்லாத பொருள் நாடக மேடையில் தென்பட (ஹாம்லெட்டின் தந்தை அணிந்த ரோலக்ஸ் கைக்கடிகாரமாக இருக்குமோ!), "நான் அமலாதித்யன் என்பதை மறந்து ரங்கத்தில் உருண்டு புரண்டு சிரித்தேன்" என்று கூறுகிறார்.

நான் பார்த்த மராட்டிய நாடகம் ஒன்றில் வில்லன் கதாநாயகியை பலவந்தம் செய்ய அவள் இறக்கிறாள். அப்போது அங்கு வந்த ஹீரோ அதைப் பார்த்து திடுக்கிடுகிறான். அப்போது வில்லன், "அவள் என்னுடன் போராடினாள், ஆகவே அவளை நான் கொன்று விட்டேன்" என்று வசனம் கூற வேண்டியவன். திடீரென அவன் இதை மறக்க, சங்கடமான மௌனம் சிறிது நேரத்துக்கு. கீழே விழுந்து கிடந்த பிணம் எழுந்து "நான் அவனுடன் போராடினேன், ஆகவே அவன் என்னைக் கொன்று விட்டான்" என்று கூறி மீண்டும் படுத்து விட்டது. (பை தி வே நான் இதை விகடனுக்கு எழுதி 15 ரூபாய் சன்மானம் சமீபத்தில் 1976-ல் பெற்றேன்).

கல்கி பார்த்த ஒரு நாடகத்தில் கோவலன் சிலம்பை விற்பதற்காக கண்ணகியிடமிருந்து விடைபெற்று செல்கிறான். திடீரென "தேசபந்துதாஸ் பாட்டு" என்று அரங்கத்தில் கூச்சல் எழுப்ப "அங்கதேச வங்கதேச பந்துவை இழந்தனம்" என்று கோவலன் பாட ஒரே கைத்தட்டல். கல்கிக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லையாம். பிறகுதான் விளங்கியதாம், சில மாதங்களுக்கு முன்னால் இறந்து போன தேசபந்துதாஸ் மரணம் அடைந்தது பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோவலன் சிலம்பு விற்கப் போவதையும் மறந்து பிரலாபிக்கிறான் என்று.

நாடகங்களில் இன்னொரு சிரமம் உண்டு. முக்கியப் பாத்திரம் வசனம் பேச மற்றவர்களுக்கு என்ன செய்வது என்று சொல்லித் தந்திருக்க மாட்டார்கள். எல்லோரும் ஒரு சங்கடமான முகபாவத்துடன் இருப்பார்கள். இதை கண்டிக்கும் பம்மல் சம்பந்தம் முதலியார் அவர்கள் இதற்கு "அவல் மென்று கொண்டிருப்பது" என்று பெயரிட்டுள்ளார். மற்றவர்கள் ஏதேனும் இயல்பான செய்கைகள் புரிய வேண்டும் என்பார். அதற்கு by-play என்று பெயர்.

எது எப்படியாக இருப்பினும் நாடகம் குறிப்பிடும் காலக்கட்டத்துக்கு இயல்பில்லாத பொருள்கள் வருவதை அதே பம்மல் சம்பந்த முதலியார், அவற்றை தனது "என் நாடக அனுபவங்கள்" என்னும் புத்தகத்தில் "நாடக அரங்கங்களில் ஆபாசங்கள்" என்று அழைத்தார்.

நீங்கள் என்ன எதிர்ப்பார்த்து இப்பதிவுக்கு வந்தீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/02/2007

நான் அமெரிக்க ஆதரவாளன்

சமீபத்தில் அறுபதுகளில் டாக்டர் பெஞ்சமின் ஸ்போக் என்பவர் அமெரிக்காவின் வியட்னாம் கொள்கையை விமரிசனம் செய்த போது நான் எரிச்சலை காண்பித்தேன். அதை புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்த என் தந்தை "உன்னைப் போன்ற உண்மை அமெரிக்கர்களுக்கு கோபம் வருவது புரிந்து கொள்ள முடிகிறது" என்று என்னை கிண்டல் செய்தார். கிண்டலாக இருந்தாலும் அது உண்மையாக இருந்தது, ஆகவே நான் ஒன்றும் கூறவில்லை. You are more pro-American than an American" என்றும் அவர் என்னை கிண்டலடித்திருக்கிறார். அதிலும் உண்மை இருந்தது. இஸ்ரேலுக்கு அடுத்து நான் ஆதரிக்கும் நாடு அமெரிக்காவே. ஏன்?

முதல் காரணம் அது இஸ்ரேலை ஆதரிப்பதாலேயேதான் என்று கூறினால் மிகையாகாது. அதை நான் பலமுறை ஏற்கனவே கூறியதால் இங்கு அதை அப்படியே அடக்கி வாசிக்கிறேன். இல்லாவிட்டால் இது இன்னொரு இஸ்ரேல் ஆதரவு பதிவாகப் போய்விடும் அபாயம் உள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால் நான் தீவிர இஸ்ரேலிய ஆதரவாளனாகப் போனது சமீபத்தில் 1967-ல் நடந்த ஆறுநாள் யுத்தத்தின் பிறகுதான். அதற்கு முன்பும் இஸ்ரேலிய ஆதரவாளனே, ஆனால் அந்த அளவுக்கு இல்லை. ஆனால் அமெரிக்காவின் ஆதரவாளனது அறுபதுகளின் துவக்கத்திலிருந்தேதான். அதற்கு முக்கியக் காரணம் ரீடர்ஸ் டைஜஸ்ட் என்றால் மிகையாகாது.

அமெரிக்கா எனக்கு பிடிக்கும் முக்கியக் காரணமே அதன் தனிமனித சுதந்திரத்தைப் போற்றும் மனப்பாங்குதான். கென்னடியின் கொலைக்கு பிறகு பிராட்வேயில் ஒரு நாடகம் வந்து சக்கை போடு போடப்பட்டது. அதில் அப்போதையக் குடியரசுத் தலைவர் லிண்டன் ஜான்சனுக்கு அக்கொலையில் பங்கு உண்டு என்று வெளிப்படையாக கருத்து கூறி கதை சென்றது. இதுவே இந்தியாவாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? ஆட்டோக்கள் அணிவகுப்பே வந்திருக்குமே. ஒரு சாதாரண வாட்டர்கேட் விவகாரம் ஒரு ஜனாதிபதியையே துரத்தியது. "சாதாரண" என்ற பெயரெச்சத்தை வேண்டுமென்றே போடுகிறேன். நம்ம ஊர் இந்திரா காந்தி செய்யாததையா நிக்ஸன் செய்து விட்டார்? ஒரு பிரெஞ்சு பத்திரிகையாளர் தனிப்பட்ட முறையில் பேசும்போது கூறினார்: "வாட்டர்கேட்? எங்க ஊரில் நாங்கள் எத்தனை முறை வாட்டர்கேட் செய்யப்பட்டுள்ளோம் தெரியுமா"? சோவியத் யூனியனின் அள்ளக்கையான ப்ளிட்ஸ் கரஞ்சியாவே வாட்டர்கேட் விவகாரத்தின்போது அமெரிக்க பத்திரிகைகளுக்கு இருந்த சுதந்திரத்தை வேண்டா வெறுப்பாக ஒத்து கொண்டார்.

அடுத்து அமெரிக்காவிடம் எனக்கு பிடிப்பது அதன் கம்யூனிச எதிர்ப்பு. இது ஐம்பதுகளின் ஆரம்பத்தில் மிக தீவிரமடைந்தபோது, அதே அமெரிக்கர்கள்தான் அதற்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்தனர். அந்தக்காலக் கட்டத்தில் பாப் ஹோப் ஒரு ஜோக் சொல்லுவார்.

"சென்னட்டர் மெக்கார்த்தி ஒரு பெரிய தீவிர கம்யூனிஸ்டு மெம்பர்கள் அடங்கிய லிஸ்டை கண்டு பிடித்துள்ளார். யாரோ அவருக்கு மாஸ்கோவின் டெலிபோன் டைரக்டரியைத் தந்துவிட்டார்".

பை தி வே இதில் இன்னொரு உள்குத்தும் உண்டு. அதாவது அக்காலக் கட்டத்தில் மாஸ்கோவில் டெலிஃபோன் வசதி பெற கம்யூனிஸ்டு கட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்க வேண்டும் என்பதே அது.

சோவியத் யூனியன் தனது புளுகுப் பிரசாரங்களினால் அங்கு தேனும் பாலும் ஓடுவதாகவும், குற்றங்களே நடப்பதில்லை என மாய பிம்பத்தைத் தந்து நம்மூர் கம்யூனிஸ்டுகளும் அதை முழுதும் நம்பி அங்கு ரஷ்யாவைப் பார், சீனாவைப் பார் என்றெல்லாம் பிரசாரம் செய்தனர். அமெரிக்காவிலோ நாளெல்லாம் கொலை, கற்பழிப்பு நடப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அமெரிக்க தலைவர்களை எதிர்த்து செய்திகளும் வந்தன. ஒரு சமயம், ராஜீவ் கொலைவழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்த கார்த்திகேயன் அவர்களே சுஜாதாவக்கு தந்த நேர்க்காணலில் சோஷலிச நாடுகளைத் தவிர்த்து மற்ற எல்லா நாடுகளிலும் குற்றங்கள் மலிந்துள்ளன என்னும் பொருள்பட பேசினார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.

ஆனால் இந்த நிலையும் சோவியத் யூனியன் திவாலானதிற்கு காரணங்களில் ஒன்று என்பதை அறிவீர்களா? அதாவது தேனும் பாலும் சோவியத் யூனியனில் ஓடுகின்றன என்னும் புளுகு பிரசாரத்தை அதன் தலைவர்களே நம்பியதுதான் காரணம். நம்மூர் இந்திரா காந்தி அவர்கள்கூட அவசர நிலை சமயத்தில் பத்திரிக்கை தணிக்கைகள் போட்டு எதிர் கருத்துகளை கேட்க விடாமல் செய்து, தான் ஜெயிப்போம் என நம்பி தேர்தலை அறிவித்து மண்ணைக் கவ்வியது இங்கு நடந்ததும் தெரிந்ததே.

மறுபடியும் அமெரிக்கா. முழுக்க முழுக்க திறமைக்கு மதிப்பு தரும் நாடு அது. எப்பொருள் யார் யார் கேட்பினும் அதன் மெய்ப்பொருளை கேட்கும் ஆர்வத்தால் நல்ல வேலை செய்பவர்களை ஆதரித்து முன்னேற்றம் கண்டது.

அமெரிக்காவில் குறைகளே இல்லை என்று சொல்ல முடியுமா? அமெரிக்கர்களே அதை ஒத்து கொள்ள மாட்டார்களே. தென் மாநிலங்களில் காணப்படும் நிறவெறி, மற்ற நாடுகளை பற்றி அதிக அறிவு இல்லாமை ஆகியவை அங்கு உண்டு. ஆனால் அவையும் அமெரிக்க பத்திரிகைகள் மூலமாகவே நமக்கு தெரிய வருகின்றன என்பதை நாம் சிந்திக்கிறோமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது