1/28/2005

வில்ஸனுக்கு ஒரு கடிதம் - Februray, 1968

அவர் பிறந்த நாள் 12 பிப்ரவரி, 1906. ஏற்கனவே கூறியது போல லிங்கனுக்கும் அவருக்கும் ஒரே நாளில் தன் பிறந்த தினம். நான் இப்புத்தகத்தைப் படித்து முடித்தது 2, பிப்ரவரி, 1968.

அவருக்குப் பிறந்த தின வாழ்த்து அனுப்ப எண்ணினேன். அமெரிக்க நூலகத்துக்குச் சென்று "ஹூ ஈஸ் ஹூ இன் அமெரிக்கா"-விலிருந்து அவர் முகவரியைப் பெற்றேன். 65 பைசாவுக்கு ஒரு ஏரோக்ராம் வாங்கி அவருக்கு வாழ்த்து அனுப்பினேன். 12-ஆம் தேதிக்குள் போய் சேர்ந்து விடும் என்றுக் கணக்குப் போட்டேன். அது என்னடாவென்றால் 8-ஆம் தேதியே போய் சேர்ந்து விட்டது. அவர் உடனடியாகப் போட்ட பதில் எனக்கு 12-ஆம் தேதி வந்தது.

என் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து எழுதியிருந்தார். தன் பிறந்த தினத்தன்றுத் தன் அக்கா வீட்டிற்கு செல்லப் போவதாகவும், அவரிடம் என் கடிதத்தைப் பற்றிக் கூறப்போவதாகவும் எழுதியிருந்தார். இந்த அனுபவம் நான் பிற்காலங்களில் பல எழுத்தாளர்களுக்குக் கடிதம் எழுதுவதற்கு முன்னோடியாக அமைந்தது.

ஒரு சிறு திருத்தம், வில்ஸன் புத்தகத்தைப் பற்றிய என்னுடைய முந்தைய ஒருப் பதிவில். வில்ஸனின் ஊர் ஈவான்ஸ்வில். ப்ளூமிங்டன் அவர் 1968-ல் இருந்த ஊர். இது இப்போது நினைவுக்கு வந்தது இன்னொரு ஹைப்பர்லிங்கால்தான்.

அவர் எனக்கு எழுதியக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்: " என் பிறந்ததினத்துக்கு ஈவான்ஸ்வில் செல்கிறேன். அங்கு வசிக்கும் என் அக்காவிடம் உங்கள் கடிதத்தைப் பற்றிக் கூறுவேன். அவள் மிகவும் மகிழ்ச்சியடைவாள்."

விடாது ஹைப்பர்லிங்க்!

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/27/2005

இது என்னப் புதுக் கதை?

இதற்கு முந்தையப் பதிவில் ஒரு தமாஷ் அனுபவம் ஏற்பட்டது. பதிவுப் பெட்டியில் நான் எழுத வேண்டியதை எழுதி "அச்சடி" என்ற பட்டனைச் சொடுக்கினால், "இப்பக்கம் அச்சடிக்க முடியாது" என்ற அறிவிப்பு வந்தது.
சரி என்று "பின்னால்" அம்பைச் சொடுக்கி மறுபடி பதிவை எழுதி அச்சடிக்கச் சொன்னால் அதே அறிவிப்பு.
இவ்வாறு எட்டு முறை முயன்ற பின் என் ப்ளாக்குக்குச் சென்றால், இப்பதிவு எட்டு முறை ஆகியிருந்தது தெரிய வந்தது.
அதில் ஏழை அழிக்க நேரம் ஆகி விட்டது.
சாதாரணமாக "உங்கள் பதிவு 100% அச்சடிக்கப்பட்டது" என்றுதானே வர வேண்டும்? பிறகு ஏன் வேறு செய்தி வர வேண்டும்?
ஒண்ணும் நேக்குப் புரியல்லேப் போங்கொ!

அன்புடன்,
டோண்டு ராகவன்

On the sunny side of a one-way street - காரின் முன் கண்ணாடியில் ஒரு 'ட'

வில்ஸன் மேலும் கூறுகிறார்:

<<என் தந்தை உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வேட்பாளராக நின்றார். அவருக்கு எங்கள் ஊரில் நல்ல செல்வாக்கு. தேர்தல் வேலைகள் சூடு பிடித்தன. நானும் பள்ளி நேரம் போக அவருடனேயே நேரத்தைக் கழித்தேன். அவருடன் காரில் சென்று வாக்காளர்களைப் பார்ப்பது, வாக்காளர் ஸ்லிப்களை நிரப்புவது, பிட் நோட்டிஸ் வினியோகித்தல் இத்யாதி, இத்யாதி.

தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி.

நான் பள்ளியிலிருந்து நேராக என் தந்தையின் தேர்தல் அலுவலகத்துக்கு வந்தேன். நான் உள்ளே நுழையும்போது என்னைத் தாண்டி அதுவரை நான் பார்த்திராத நால்வர் வெளியே சென்றனர். என்னுடைய ஹல்லோவை அவர்கள் சட்டை செய்யாமல் விர்ரென்று அந்த இடத்தை விட்டு அகன்றனர். நான் உள்ளே சென்று "யார் அப்பா அவர்கள்?" என்றுக் கேட்டேன். எனக்கு அவரிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை. நான் கேட்டதை கவனிக்காதது போல அவர் நான் அன்று செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். நானும் அதற்கு மேல் அவரை ஒன்றும் கேட்கவில்லை.

தேர்தல் நெருங்க, நெருங்க ஏதோ சரியாக இல்லதது போன்ற உணர்வு எனக்கு வர ஆரம்பித்தது. அது வரை எங்களை கண்டதும் ஆர்வமாக வரவேற்றுப் பேசும் வாக்காளர்கள் எங்கள் பார்வையைத் தவிர்க்க ஆரம்பித்தனர். முதலில் இதை கவனிக்காத நான் மெதுவாக நிலைமையின் தீவிரத்தை உணர ஆரம்பித்தேன்.

தேர்தலுக்கு முந்தைய நாள் எல்லா வேலைகளையும் முடித்தப் பின்னால் நான் என் தந்தையுடன் காரின் முன்ஸீட்டில் அவருடன் அமர்ந்துக் கொள்ள அவர் காரை மெதுவாக வீட்டை நோக்கிச் செலுத்த ஆரம்பித்தார்.
அவர் ஒன்றும் பேசாமல் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.

திடீரென்று என்னை நோக்கி அவர் கேட்டார்:
"இந்த தேர்தலைப் பற்றி என்ன நினைக்கிறாய்?"
நான் கூறினேன்: "நிச்சயம் வெற்றி நமக்குத்தான். இந்த ஊரில் உங்களுக்க் நல்லச் செல்வாக்காயிற்றே".
அவர்: "இல்லை வில்லியம், இம்முறை தோல்விதான்"
நான்: "ஏன் அப்பா?"
அவர்: "அன்றொரு நாள் நான்கு பேர் என் தேர்தல் அலுவலகத்துக்கு வந்தனர். நான் அவர்கள் கட்சி சார்பில் நிற்க வேண்டும் என்றுக் கூறினர். அவர்கள் கூ க்ளுக்ஸ் கான் (Ku klux khan) என்றத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நீக்ரோக்களுக்கெதிராய் வன்முறை செயல்கள் நடத்துபவர்கள். நான் மறுத்து விட்டேன். அவர்களுக்கு இங்கு நல்லச் செல்வாக்கு உண்டு. என்னை ஜெயிக்க விட மாட்டார்கள்"

எனக்கு என்னக் கூறுவது என்றே புரியவில்லை.

என் தந்தை தனகுத் தானே பேசிக் கொள்ள ஆரம்பித்தார்.

"இந்த நாட்டில் என்ன நடக்கிறது? ஆபிரஹாம் லிங்கன் போன்ற மாமனிதர்கள் கட்டிக் காத்த இந்த நாட்டின் நிலை இப்படியா ஆக வெண்டும்?" என்றுக் கத்திக் கொண்டே தன் கார் முன் கண்ணாடியை ஒரு குத்து விட்டார். "சிலீர்" என்ற சப்தத்துடன் கண்ணாடி உடைந்து அதில் "ட" வடிவில் ஒரு ஓட்டை விழுந்தது.

திடீரென்று என் தந்தையின் ஆவேசம் அடங்கியது. "என்ன இவ்வாறு ஆகி விட்டதே" என்று ஒரு குழந்தையைப் போல் என்னை நோக்கிக் கேட்டார்.

நேரே டாக்டர் வீட்டுக்குப் போய் ஒரு தையல் போட்டுக் கொண்டு வீடு போய் சேர்ந்தோம். அதற்கு முன்னால் அவர் என்னிடம் தேர்தல் பற்றி உன் அம்மாவிடம் எதுவும் கூறாதே" என்று என்னைக் கேட்டுக் கொண்டார். "நீயே ஏதவது கதை கூறிச் சமாளி" என்றும் கூறினார். என்னுடையக் கதை கட்டும் திறமையில் அவ்வளவு நம்பிக்கை அவருக்கு. முக்கியமாகக் கார் கண்ணாடி உடைந்ததற்கு அம்மா என்ன கூறுவாரோ என்று வேறு அவருக்குப் பயம்.

வீட்டுக்குச் சென்றோம். அப்பாவின் கையில் கட்டைப் பார்த்ததும் அம்மாவுக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. இந்தக் களேபரத்தில் திட்டவும் மறந்துப் போனார்.

"என்ன வில்லியம் என்ன நடந்தது" என்று அவர் தலையை கோதியபடி கேட்டார்.
நான் முந்திக் கொண்டு "ஒன்றும் இல்லை அம்மா, நம் ஊர் கால்பந்தாட்டக் குழு நேற்று ஒரு கோல் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்கள். அதைப் பற்றிப் பேசிக் கொண்டே அப்பா வண்டி ஓட்டிக் கொண்டிருந்தார். திடீரென்று நம்மூர் குழுவின் முன்னணி வீரர் எவ்வாறு தாவி பந்தை உதை விட வேண்டும் என்றுக் காண்பிக்கப் போக, அவர் கையால் முன் கண்ணாடியைக் குத்தினார்" என்று உளறினேன்.
"அப்பா, பிள்ளை இருவருக்கும் வேறு வேலையில்லை" என்று எங்களை மொத்தமாகத் திட்டி விட்டு அம்மா அடுக்களைக்குள் சென்றார்.

என் தந்தை என்னை நன்றியுடன் பார்த்தார். அத்தருணத்தில் நான் பையனிலிருந்து ஒரு வளர்ந்த ஆளாக மாறியதை உணர்ந்தேன்.

தேர்தல்? அதில் எதிர்ப்பார்த்தத் தோல்விதான். ஆனாலும் அவ்வளவு அதிர்ச்சியைத் தரவில்லை>>

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/25/2005

ஒரு வழிப் பாதையின் சூரியப் பக்கம், part-2

வில்லியம் இ வில்ஸன் மேலும் கூறுகிறார்:

<<நான் சிறுவனாக இருந்தப் போது டிஃப்தீரியா வந்து செத்துப் பிழைத்தேன். ஆனால் என் அக்காவுக்கு நடந்ததைப் பார்த்தால் எனக்கு வந்தது ஒன்றுமே இல்லை என்றுதான் கூற வேண்டும்.

அவள் மெதுவாகக் குருடாகிக் கொண்டிருந்தாள்!

முதலில் எங்கள் யாருக்கும் அவள் பிரச்சினை புரியவில்லை. அவள் மார்க்குகள் குறைய ஆரம்பித்தன. என் தாய் தந்தையர் அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். பிறகுதான் அவள் முழுக்கவும் பார்வை இழக்கப் போகிறாள் என்ற உண்மை அவர்களுக்குத் தெரிந்தது.

அப்போது எனக்கு 12 - 13 வயது இருக்கும். அவளுக்குப் 15 வயது.

மருத்துவரைப் பார்த்தப் பிறகு அவள் தனியே தன்னறையில் இருந்துக் கொண்டு, கண்ணை மூடிக்கொண்டு, கையை முன்னால் பரப்பிக் கொண்டு மெதுவாக நடந்துக் கொண்டிருந்தாள்.

ஒரு 12 வயதுப் பையன் தன்னுடைய அக்காவின் மேல் வைத்திருக்கும் ஒரு மையமானப் பிரியம் எனக்கும் உண்டு. அவள் ஏன் அவ்வாறு செய்கிறாள் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு எரிச்சல் கலந்தப் பொறுமையுடன் அவளிடம் "என்ன செய்யறே?" என்றுக் கேட்டேன். அவள் அதற்கு "குருடியாக இருக்கப் பயிற்சி செய்றேன்" என்றுக் கூறினாள்.

இப்போது தான் இவ்வரிகளை எழுதும்போது ஏதாவது அவளிடம் ஆறுதலாகக் கூறினேன் என்று சொல்ல எனக்கு ஆசையாக இருக்கிறது. ஆனால் என்ன செய்வது. ஏதோ கேலியாக அவளிடம் பேசிவிட்டு அவ்விடத்திலிருந்து ஓடிப் போனதுதான் நான் செய்தது.

அவள் முழுக் குருடியானாள். அவள் அதற்கு மனத்தளவில் தயாருமானாள். அவள் கண்கள் அழகானவை. பார்வை இல்லை என்பது புதிதாகப் பார்ப்பவர்களுக்கு முதலில் புரியாது. வீட்டின் எல்லா மூலைகளும் அவளுக்கு அத்துப்படி. உடல் வலிமை அதிகம் இல்லாதவள். ஆகவே அவளால் தன்னை வழிநடத்திச் செல்ல ஒரு பார்க்கும் நாயைக் கையாள முடியாமல் போனது.

என் தந்தை எங்கு நாங்கள் வெளியே சென்றாலும் அவளுக்கு தெருக்க்காட்சிகளைப் பொறுமையாக விளக்குவார். எனக்குத்தான் மிகவும் போர் அடிக்கும்.

அவர் சளைக்காமல் பொறுமையாக அவளுக்கு எங்கள் ஊரில் (ப்ளூமிங்க்டன், இந்தியானா மாநிலம்) எல்லா தெருக்கள், கட்டிடங்கள், கடைகள் முதலியவற்றை விளக்குவார். இதன் பலன் பின்னால் தெரிந்தது.

1944-ல் எங்கள் அன்னை மறைந்தார். அடுத்த 4 தனிமையான வருடங்களை ஒரு வழியாகக் கழித்து எங்கள் தந்தையும் தன் அருமை மனைவியைப் பின் தொடர்ந்தார்.

இந்த 4 வருடங்களில் என் தந்தைக்கு மறதி அதிகம் வர ஆரம்பித்தது. தெருவில் போய்க் கொண்டே இருப்பார். திடீரென்று வீட்டுக்குத் திரும்பும் வழி மறந்து விடும். ஊரில் எல்லோருக்கும் அவரைத் தெரியும். இருந்தாலும் யாரையும் போய் உதவி கேட்க அவர் தன்மானம் இடம் கொடுக்காது.

ஆகவே அருகில் உள்ள ஏதாவத் டெலிஃபோன் பூத்துக்கு வந்து வீட்டுக்கு ஃபோன் செய்து என் அக்காவைக் கூப்பிடுவார்.
"வீட்டிற்கு வரும் வழி மறுபடியும் மறந்து விட்டேன் பெண்ணே. நான் இப்போது கோல்ட்ஷ்டைன் மளிகைக் கடை வாசலில் இருக்கிறேன்" என்பார்.
அக்கா உடனே கூறுவாள்: "கவலைப் படாதீங்கப்பா. அந்த மளிகைகடையை அடுத்தக் கடை ஜானின் தையற்கடை. அதை அடுத்து ஒரு சந்து. அதில் நேரே சென்றால் அது ஒரு பெரியத் தெருவில் முடியும். வலப் பக்கம் திரும்பி வந்தால் நான்காவது கட்டிடம்தான் நம் வீடு."

இவ்வாறாக என் தந்தை முன்பு பொறுமையுடன் செய்தது அவருக்குச் சாதகமாகவே முடிந்தது.>>

இப்புத்தகத்திலிருந்து பிறகு மேலே பேசுவேன். ஆனால் ஒன்று. கண்ணை மூடிக் கொண்டு யோசிக்கும்போது இப்புத்தகத்தைப் படித்த 1968-ஆம் வருடத்திற்கே போய் விடுவேன். என்னை அந்த அளவுக்கு இப்புத்தகம் கவர்ந்து விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/23/2005

On the sunny side of a one-way street

இது 1968-ல் நான் படித்தப் புத்தகம். எழுதியது வில்லியம் இ வில்சன். கவித்துவம் வாய்ந்த இத்தலைப்பைப் போலவே அப்புத்தகத்தின் உள்ளடக்கமும். தன் சிறு வயது அனுபவங்களை அதில் ஆசிரியர் மிக அழ்காகக் குறிப்பிருப்பார். நேற்று திருவல்லிக்கேணி பக்கம் சென்ற போது இப்புத்தகம் என் நினைவுக்கு வந்தது.

நேசமுடன் வெங்கடேஷைப் பார்க்க திருவல்லிக்கேணி சுங்குவார் தெருவுக்குச் சென்றிருந்தேன். பழைய நினைவுகள் என்னுள் கிளர்த்தெழுந்தன. "ஞாபகம் வருதே..." என்றுப் பாடாததுதான் பாக்கி.

கையில் வெங்கடேஷ் எழுதிய "நேசமுடன்" புத்தகத்தை எடுத்துச் சென்றிருந்தேன். அவர் இருக்கும் அபார்ட்மென்ட் ப்ளாக்கில் பெயரைச் சொல்லிக் கேட்டதும் கீழே இருப்பவர்களுக்கு முதலில் புரியவில்லை. புத்தகத்தில் இருந்த அவர் புகைப்படத்தைக் காண்பித்ததும் ஒருவர் அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தையை அழைத்து "இவர் உன் அப்பாவைத்தான் பார்க்க வந்திருக்கிறார். அழைத்துப்போ. ஆமாம், உன் அப்பா புத்தகங்கள் எல்லாம் எழுதுவாரா என்ன?" என்றார்.

அச்சிறுமி என்னை தன் தந்தையிடம் அழைத்துச் சென்றாள். பிறகு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வெங்கடேஷுடன் பேச்சுத்தான். பல விஷயங்கள் அவரிடமிருந்துக் கற்றுக் கொண்டேன். தன் மனைவி மற்றும் மாமனாரை எனக்கு அறிமுகம் செய்வித்தார். ஆதவன் சாரின் புத்தகங்களை தான் பதிப்பிக்க இருப்பதாகக் கூறினார். மனதுக்கு மிக்க நிறைவாக இருந்தது. பேச்சு பல விஷ்யங்களை கவர் செய்தது.

பிறகு அவரிடம் விடை பெற்று சுங்குவார் தெரு வழியே நடந்துச் சென்றேன். என் நண்பன் பி.எஸ். ராமன் வீட்டுக்குச் சென்று அவன் சகோதரியிடமிருந்து அவன் டெலிஃபோன் எண்ணைப் பெற்றேன்.

இதற்கு முந்தைய சனிக்கிழமை திருவல்லிக்கேணியில் இருக்கும் பாலா (என்றென்றும் அன்புடன்) வீட்டிற்கு சென்றேன். இனி வரும் சனிக்கிழமைகளில் திருவல்லிக்கெணியின் மற்ற ஏரியாக்களுக்கு செல்ல வேண்டும். முக்கியமாக பைக்ராஃப்ட் சாலையில் உள்ள நடைபாதை புத்தகக்கடைகளை அலச வேண்டும். அலைகளில் கால் நனைக்க வேண்டும்.

நேற்று குளக்கரை பக்கம் போன போது 1953-ல் குளத்தில் மூழ்கி மரணமடைந்த என் மூன்றாம் வகுப்புத் தோழன் கே. ராகவன் என் நினைவுக்கு வந்தான். "முதன் முதல் அழுத சினேகிதன் மரணம்" என்ற வரி என் மனதில் ஓடியது.

ஆட்டோக்ராஃப் படம் ஏன் வெற்றி பெற்றது என்பது இன்னொரு முறை நன்றாக விளங்கியது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/21/2005

Can somebody help?

ஒரு பழைய படம். பெயர் மறந்து விட்டது. அதன் பெயரை யாராவது கூற இயலுமா? கதை சுருக்கம் இதோ.

கதை 1973-ல் நடக்கிறது. முதல் காட்சியில் சௌகார் ஜானகி விருவிரென்று ஒரு வீட்டுக்குள் நுழைகிறார். வீட்டுச் சாமான்களை ஒழுங்கு செய்ய ஆரம்பிக்கிறார். வீட்டிலிருக்கும் மாஸ்டர் ஸ்ரீதருக்கும் மற்றவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை.

ஏனெனில் சௌகார் ஜானகி முதன் முறையாக அவ்வீட்டினுள் வருகிறார். பிறகுதான் தெரிகிறது அவர் மனநிலை பிறழ்ந்தவர் என்று. அவரைப் பொருத்தவரை அவர் 1961-லேயே வாழ்கிறார். அப்போது அந்த வீட்டில் அவர் குடியிருந்திருக்கிறார். அவரது மைத்துனன் சசிகுமாரின் காவலையும் மீறி தன் பழைய வீட்டுக்கு வந்து விடுவதால் ஒரே குழப்பம்தான் போங்கள்.

அவர் கணவன் ஏ.வி.எம். ராஜன் வேறு அவர் பங்குக்கு அப்போதுதான் அந்த வீட்டுக்கு வந்து சேர கலாட்டா இன்னும் அதிகரிக்கிறது. அவர் செய்யாத ஒரு கொலைக்காக (உண்மையில் அது தற்கொலை; இறந்தவர் வெண்ணிற ஆடை நிர்மலா) 12 வருடம் சிறையில் இருந்து விட்டு அப்போதுதான் அங்கு வருகிறார். மாஸ்டர் ஸ்ரீதர்தான் தன் மகன் என்று அவரைக் கட்டித்தழுவ அவரோ மிரள, ஒரே கலாட்டாதன்.

பிறகு முன்கதை தெரிந்தவுடன் பார்வையாளர்களை ஒரு சோகம் கவ்விக் கொள்கிறது. இப்போது மருத்துவர் ஆலோசனை பேரில் 1961 காட்சியமைப்பை அவ்வீட்டில் உருவாக்கி நாயக நாயகியரை சந்திக்கச் செய்ய, சௌகார் ஜானகிக்கு பயைழ ஞாபகம் திரும்புகிறது. ஏ.வி.எம். ராஜனைக் கட்டிக் கொண்டு அவர் கதறித் தீர்த்து விடுகிறார். மாஸ்டர் ஸ்ரீதரும் மற்றோரும் உறைந்துப்போன நிலையில் அக்காட்சியைப் பார்க்க, நானும் உறைந்துப் போனேன்.

திடீரென்று இப்படம் என் ஞாபகத்துக்கு வந்தது. ஆனால் தலைப்பை மறந்து விட்டேன். யாராவது கூற இயலுமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

இன்னுமொரு ஹைப்பெர்லிங்க்

போன சனிக்கிழமை திருவல்லிக்கேணிக்கு சென்றிருந்தேன்.

"என்றென்றும் அன்புடன்" பாலா அவர்கள் வீட்டிற்கும் சென்றேன். என்னை வரவேற்று பேசிய அவர் தான் சமீபத்தில் தன் சித்தியின் மரணம் விஷயமாக பெங்களூர் சென்றிருந்ததாகக் கூறினார்.

நான் முதலில் சரியாகக் கவனிக்கவில்லை. அடுத்த முறை இப்பேச்சு வந்ததும் நான் மேல் விவரம் கேட்க, தன் சித்தி அவர் மருமானுடன் சில மாதங்கள் முன் வண்டியில் செல்லும் போது கீழே விழுந்துத் தலையில் அடிப்பட்டுக் கொண்டதாகவும் அதன் காரணமாகப் பிறகு காம்ப்ளிகேஷன்ஸ் வந்து அவர் மரணம் நிகழ்ந்தது என்றுக் கூறினார்.

உடனே என் மண்டைக்குள் வழக்கமான பல்ப் எரிய, அவர் சித்தியின் பெயர் வைதேகியா என்றுக் கேட்டேன். ஆச்சரியத்துடன் பாலா ஆம் என்றுக் கூற, அவருடையக் கணவர் தியாகுவின் அண்ணா சந்தானம் என் ஷட்டகர் என்ற விஷயத்தைக் கூறினேன்.

பாலா உடனே தன் தாயிடம் சென்று இதைக் கூற அவர் பரபரப்பாக வெளியே வந்து என்னுடன் மேலே பேசினார். இது ஒரு சிறிய உலகம்தான்.

பாலாவுடனான என் பேச்சு இப்போது என் வாழ்வில் வந்த ஹைப்பெர்லிங்குகளைப் பற்றி ஆரம்பித்தது. அவரும் தன் பங்குக்கு தன் வாழ்வில் வந்த ஒரு ஹைப்பெர் லிங்கைப் பற்றிக் கூறினார். Over to Bala for its description!

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/17/2005

ekalappai என்னும் அற்புதம்

இதை என் வன் தகட்டில் இறக்கிக் கொண்டதும் பலப் பிரச்சினைகள் தீர்ந்து விட்டன. முக்கியமாக வோர்ட், எக்ஸெல், பவர்பாயிண்ட் ஆகியவற்றில் நேரடியாகத் தமிழில் தட்டச்சு செய்ய முடிகிறது.

புதுவைத் தமிழ் ரைட்டரும் உபயோகமானதுதான் ஆனால் இதில் அடித்துக் கொண்டு, நகலெடுத்துப் பிறகு சம்பந்தப்பட்டக் கோப்புகளில் ஒட்டுவதில் சிறிது அதிகப் பிரயாசை எடுக்க வேண்டியுள்ளது.

ஆனால் என்ன, இகலப்பையில் லதா, கம்பன், சோழன் முதலிய எழுத்துருக்கள் கிடைப்பதில்லை. அது ஒரு குறைதான்.

இதுவரை நான் பார்த்த எல்லா முறைகளிலும் ஒரு சிறு குறை உள்ளது. அதாவது ஸ்பெல்லிங் மற்றும் இலக்கணத்தை சரி பார்க்க முடியவில்லை. இது எங்காவது கிடைக்குமா?

நான் மொழி பெயர்க்கும்போது காகித நகல்களை உபயோகிப்பதில்லை. மின்னஞ்சல் அட்டாச்மென்ட் ஆக கோப்புகளை வன் தகட்டில் இறக்கிக் கொள்கிறேன். பிறகு அதை save as நகலாக எடுத்துக் கொண்டு, நேரடியாகக் கணினியிலேயே மொழி பெயர்த்து, மொழிபெயர்ப்பை மின்னஞ்சல் மூலம் திருப்பி அனுப்பி விடுகிறேன். எங்கும் காகிதமே இல்லை.

எல்லாக் குறைகளும் விரைவில் சரி செய்யப்படும் என நம்புகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/15/2005

Thuglak 35th anniversary meeting on 14th January, 2005

சோவின் துக்ளக் ஆண்டு விழா மீட்டிங் ஒரு மிக அருமையான அனுபவம். 6.30 மணிக்குத் துவங்கவிருந்தக் கூட்டத்துக்கு சற்று முன்னால் சென்று இடம் பிடிக்கலாம் என்று 4.30-க்கு மியூஸிக் அகாடெமி அரங்கத்துள் சென்றால் அதே எண்ணத்துடன் வந்தவர்களால் அரங்கமே நிரம்பி வழிந்தது.

காசு கொடுத்து லாரிகளில் இறக்குமதி செய்து கூட்டம் சேர்க்கும் தலைவர்கள் இதைப் பார்த்திருந்தால் வயிறெரிந்துப் போயிருப்பர். அரங்கத்தில் இடம் போதாமல் வெளியே பெரிய ஸ்க்ரீன் வைத்துச் சமாளிக்க வேண்டியச் சூழ்நிலை.

அவ்வளவு சீக்கிரம் சென்றும் இருக்க இடமின்றி நாற்காலிகள் நடுவில் இருந்த நடைபாதைகளில் உட்காரும் நிலை. பொறுமை கடைபிடித்து உட்கார்ந்தோம்.

6.30-க்கு சோ வந்தவுடன் கைத்தட்டல் ஓசை காதைப் பிளந்தது. காத்திருந்தக் களைப்பெல்லாம் மறைந்தது. பலர் சார்பில் மாலை போடுதல் என்ற வழிசல்கள் இல்லாமல் கூட்டம் டாண் என்று ஆரம்பித்தது.

கூட்டத்தைப் பற்றி அடுத்து வரும் துக்ளக் இதழ்களில் சோ அவர்கள் எழுத அதைப் பிறகுப் படிக்கலாம். இப்போது நான் கூறுவது என் பார்வைக் கோணம் மட்டுமே.

குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட சில வாசகர்கள் பேச அழைக்கப்பட்டனர். இம்முறை பேசிய எல்லோரும் கச்சிதமாகக் கேள்விகள் கேட்டுத் தங்கள் பேச்சை முடித்துக் கொண்டனர்.

அக்கேள்விகளில் ஜயேந்திரர் கைதைப் பற்றியக் கேள்விகளை மட்டும் தான் கடைசியில் பதில் கூறுவதாகக் கூறி விட்டு மற்றக் கேள்விகளுக்குக் கூர்மையாகவும் அதே சமயம் நகைச்சுவைக் கலந்தும் பதிலளித்தார்.

சோவின் பின்னால் நின்றுக் கொண்டு அவர் உதவியாளர் உறுத்தாத வகையில் வாசகர்களின் கேள்விகளை வரிசையாக அவர் கவனத்துக்குக் கொண்டு வர அவர் அக்கேள்விகளுக்கு பதிலளித்தது மனதை நிரம்பக் கவர்ந்தது.

சில கேள்விகளும் பதில்களும்:

கே: "துக்ளக்கின் சர்குலேஷன் என்ன?"
ப: "சுமார் 75,000."

கே: "துக்ளக்கிற்கு வாரிசு?"
ப: "இல்லை"

கே: "சுனாமி நிவாரணத்துக்கு நீங்கள் அளித்தத் தொகை எவ்வளவு?"
ப: "ரூ.1 1/2 லட்சம்" (அக்கேள்விக்குத் தன் ஆட்சேபத்தையும் அவர் வெளியிடத் தயங்கவில்லை.)

ஜயேந்திரர் கைது பற்றி அவர் எழுதியதைப் படிப்பதே நல்லது. ஒன்று மட்டும் கூறுவேன். இந்த விஷயத்தில் அவர் கருத்துக்களுடன் நான் 100% ஒத்துப் போகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Pottering around the book fair - Chennai 2005

புத்தகக் கண்காட்சியில் நல்ல வேட்டைதான் போங்கள்.

உள்ளே போகும்போதே பத்ரி அவர்களைச் செல்பேசியில் தொடர்பு கொண்டு கிழக்குப் பதிப்பகத்தின் கடை எண்ணைக் கேட்டுக் கொண்டு நேராக முதலில் அங்கே சென்றேன். பத்ரி மற்றும் பாரா அங்கு இருந்தனர்.

இரா. முருகன், பாரா, ஆர்.வென்கடேஷ் மற்றும் அசோக மித்திரன் எழுதிய சிலப் புத்தகங்களை வாங்கிக் கொண்டு பாராவிடம் அவர் புத்தகங்களில் கையெழுத்தையும் பெற்றுக் கொண்டேன்.

பிறகு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் கடைக்குச் சென்று இரு தமிழ் அகராதிகள் (பொறியியல் மற்றும் சட்டம் சார்ந்தக் கலைச் சொற்கள் சார்ந்த அகராதிகளை வாங்கினேன்.

அல்லையன்ஸ் கடைக்குச் சென்று சோவின் ராமாயணம் இரன்டுப் பகுதிகளையும் மற்றப் புத்தகஙளையும் வாங்கினேன்.

1982-லிருந்து டில்லியில் இரட்டைப்படை எண்களுடைய ஆண்டுகளில் நடத்தப்படும் உலகப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்று புத்தகங்கள் (முக்கியமாக ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் இத்தாலிய அகராதிகள்) வாங்கிக் குவிப்பது என் வழக்கம். ஆகவே இங்கு புத்தகங்கள் தேர்வு செய்வதில் காலத் தாமதம் ஒன்றும் இல்லை.

குடும்பத்துடன் சேர்ந்து வந்ததால் அதிக நேரம் கண்காட்சியில் இருக்க இயலவில்லை. முடிந்தால் இன்னொரு முறை வர வேண்டும் என்று முடிவு செய்தேன்.

அன்புடன்,
ராகவன்

1/09/2005

யாருக்கும் வெட்கமில்லை - SITA is ultravires of the Constitution of India

எழுபதுகளின் துவக்கத்தில் சோ அவர்களால் எழுதப்பட்ட "யாருக்கும் வெட்கமில்லை" என்ற நாடகத்தைப் பார்த்தேன்.

கதாநாயகி பிரமீளா ஒரு விலை மாது. அவ்வாறு அவள் ஆவதற்கு முன்னால் அவளை முதலில் காதலித்து ஏமாற்றியிருப்பான் நாடகத்தின் வில்லன் - கதாநாயகன். பிறகு சந்தர்ப்பச் சூழ்நிலையால் அவள் விலை மாது ஆகிறாள்.

இதில் சோ அவளுக்கு ஆதரவாகப் பேசும் ராவுத்தர் பாத்திரத்தை ஏற்றிருந்தார்.

அதில் ஒரு காட்சி.

முதலில் காட்சியின் பின்புலத்தைப் பார்ப்போம். கதாநாயகனின் தந்தை அப்பாதுரையும் ராவுத்தரும் வியாபாரத்தில் பங்காளிகள். கதாநாயகி ஒரு விலைமாது என்பதை கதாநாயகனின் தாயிடம் கூறுவார் அந்த வீட்டுக்கு வந்துஇருக்கும் ரங்கனாதன் என்பவர். தான் விலை மாதிடம் போகும் வழக்கம் உடையவன் என்பதையும் அவ்வாறு செல்லும் ஒரு தருணத்தில் கதாநாயகியைக் கண்டதாகவும் அவர் கூறுவார்.

அந்தத் தாய் கதாநாயகியைத் திட்டி விட்டு ரங்கநாதனிடம் இன்னும் ஒரு ஸ்வீட் எடுத்துக் கொள்ளச் சொல்லி உபசரிப்பார். உடனே சோ கூறுவார்:

"அம்மா, நீங்கள் பிரமீளாவைக் குற்றம் கூறியது சரியே. அந்தப் பெண்ணைச் செருப்பால் அடியுங்கள். ஆனால் அதே செருப்பையெடுத்து இந்த ரங்கனாதனையும் ரெண்டு அடி அடிப்பதற்குப் பதிலாக அவனுக்கு இன்னும் ஒரு ஸ்வீட் எடுத்துக் கொள்ள உபசரிக்கிறீர்களே. இது என்ன நியாயம்?"

நான் ரசித்த மிகச் சிறந்த காட்சி இது. அதைத்தான் இப்போது நான் மறுபடியும் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

விபசார ஒழிப்புச் சட்டம் விபசாரிகளை மட்டும் தண்டிக்கிறது. கொழுப்பெடுத்துப் போய் அவர்களிடம் செல்லும் வாடிக்கையாளர்களை மட்டும் விட்டு விடுகிறது.

இதே கேள்வி "ஜனவாணி" என்ற நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பொது மக்கள் தரப்பிலிருந்து அப்போதையச் சட்ட மந்திரி பரத்வாஜ் அவர்களிடம் வைக்கப்பட்டது.

ஆனால் அவர் கேள்வியைத் தவறாகப் புரிந்துக் கொண்டு (?) பதிலளித்தார்.

கேள்வி: " விபசாரச் சட்டம் ஆண்களை ஏன் தண்டிபதில்லை?"

பதில்: " ஏன், நாங்கள் பிம்புகளையும் (pimps) தண்டிக்கிறோமே!"

வாடிக்கையாளர்களைப் பற்றி ஒன்றுமே கூறவில்லை.

நான் இப்போது வைக்கும் இன்னொரு கேள்வி. இச்சட்டம் பால் அடிப்படையில் பாகுபாடு (sexual discrimaination) செய்து பெண்ணை மட்டும் தண்டிக்கிறது. இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. ஆகவே இச்சட்டமே செல்லாது. இவ்வாறு யாராவது ரிட் பேட்டிஷன் போட்டால் வெற்றி பெருமா?

இவ்வாறு செய்வது பலரது "மாமூல்" வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதை அறிவேன். ஆனால் எப்போதுதான் ரங்கனாதனையும் செருப்பால் அடிப்பது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

1/07/2005

Maitreyi and Piroshka

ஒருவர் இந்தியர் மற்றொருவர் ஹங்கெரிய நாட்டைச் சேர்ந்தவர்.ஒருவருக்கொருவர் பரிச்சயம் இல்லை.

ஆனால் இந்த இரு பெண்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.

மைத்ரேயியைப் பற்றி அவர் இள வயது ருமேனிய நண்பர் எலியாட் ருமேனிய மொழியில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதன் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு "La nuit bengali" என்றத் தலைப்பில் வந்தது.

பிரோஷ்காவைப் பற்றி அவர் ஜெர்மானிய நண்பர் "Ich denke oft an Piroschka" (பிரோஷ்காவின் நினைவு எனக்கு அடிக்கடி வருகிறது) என்றத் தலைப்பில் ஜெர்மன் மொழியில் எழுதியுள்ளார்.

இரண்டு புத்தகங்களுக்கிடையில் அதிசய ஒற்றுமை உண்டு.

முதலில் மைத்ரேயி: 1930-ல் நடந்த உண்மைக் கதையாக அது குறிப்பிடப்பட்டுள்ளது.16 வயது மைத்ரேயிக்கு எலியாட் மேல் ஒரு மயக்கம். இருவர் காதலும் கலாசார வேற்றுமைகள் காரணமாக முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது.தன் அனுபவங்களைப் பற்றி எலியாட் தன் நோக்கில் எழுத அது மைத்ரேயியைப் பற்றி வாசகர்களுக்கு ஒரு தவறானக் கண்ணோட்டம் கொடுத்து விட்டது.

மைத்ரேயியும் தன் சிறு வயதுக் காதலைப் பற்றி எழுதியுள்ளார். ஆனால் அது எனக்கு இதுவரைப் படிக்கக் கிடைக்கவில்லை.பிரெஞ்சு மொழிபெயர்ப்பின் ஆங்கில மொழி பெயர்ப்பு மைத்ரேயி இறந்தபின்புதான் வெளி வந்தது. அதைப் படிக்க எனக்கு விருப்பம் இல்லை.

இப்போது பிரோஷ்காவைப் பார்ப்போம்.1939 ஹங்கேரியில் நடந்தது.16 வயதுப் பிரோஷ்காவுக்கும் இந்த ஜெர்மானிய வாலிபனுக்கிடையிலும் அன்பு மலர்ந்தது. இந்த நாவலில் யுத்தம் காரணமாகப் பிரிவு ஏற்படுகிறது. "பிறகு நான் பிரோஷ்காவை பார்க்கவேயில்லை" என்ற வரியுடன் ஜெர்மானிய நாவல் முடிவடைகிறது.

ஆனால் இதே புத்தகத்தின் பின்னாள் வெளியீட்டை பார்த்தப் போது அவர்கள் இருவரும் மறுபடிச் சந்தித்ததுப் பற்றிக் குறிப்பிடப் படுகிறது.அப்போதுதான் வாலிபன் கூறியது மிகைப்படுத்தப்பட்டது என்றுத் தெரிய வருகிறது.ஆனால் ஒன்று. பிரோஷ்கா இதைப் பற்றி ஹ்ங்கேரிய மொழியில் கதை ஒன்றும் எழுதியதாகத் தெரியவில்லை.

இரண்டிலிருந்தும் நான் அறிந்தது என்னவென்றால் ஒரே நிகழ்ச்சியைப் பற்றி அதில் சம்பந்தப்பட்ட இருவர் பிற்காலத்தில் எழுதும் போது உள்ளடக்கம், கட்டமைப்பு எல்லாவற்றிலும் வேறுபாடுகள் தெரிகின்றன என்பதுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
P.S. I am reposting this as it has vanished from my archive without trace and without any known reason. It is unfortunate that Raviaa's comment too has vanished. I had replied to his query and that too is gone.

1/06/2005

Even a scene in a mega-serial can be a hyperlink

புறா சமாதானச் சின்னமே இல்லை.

எல்லோரும் வரிந்துக் கட்டிக் கொண்டு வருவதற்கு முன் நான் கொடுக்கும் ஆதாரங்களைப் பாருங்கள்.

கோன்ராட் லோரென்ட்ஸ் (Konrad Lorenz) என்பவர் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி. அவர் எழுதியப் புத்தகம் எங்களுக்கு ஜெர்மன் டிப்ளமா பரீட்சைக்குரியப் பாடமாக வைக்கப்பட்டிருந்தது.

புத்தகத்தின் பெயர் "Er redete mit dem Vieh, den Vögeln und den Fischen"(மிருகம், பறவைகள் மற்றும் மீன்களுடன் பேசினான் அவன் (அரசன் சாலமன்)). இனி புத்தகத்திலிருந்துத் தொகுத்துத் தருகிறேன்.

இரண்டு நாய்கள் ஆவேசமாகச் சண்டை போடுகின்றன. ஒரு நாய் சளைத்து விட்டது. அது உடனே கீழே படுத்துக் கொண்டு தன் கழுத்தை இன்னொரு நாய்க்குக் காட்டுகிறது.

ஒரு கடியில் கதை முடிந்து விடும் என்று எதிர்ப்பார்த்த கோன்ராடுக்கு வியப்பு. வெற்றியின் விளிம்பில் இருக்கும் நாய் அதைக் கடிக்கவில்லை. அதையே சுற்றிச் சுற்றி வருகிறது. படுத்திருக்கும் நாய் எழுந்தவுடன் சண்டை மறுபடியும் துவங்குகிறது.

கோன்ராட் இதை Demütsgebärde (சரணாகதிச் சமிக்ஞை) என்றுக் குறிப்பிடுகிறார். நாய், ஓநாய், சிங்கம், புலி ஆகிய மிருகங்களின் பரம்பரை அணுக்களில் புதைந்துள்ள அற்புதம் இது.

ஆனால் புறாக்கள்? அதே புத்தகத்தில் கான்ராட் கூறுவதைப் பாருங்கள்.

இரண்டு புறாக்கள் ஒரே கூண்டில் இருந்தன. ஒரு புறா அமைதியான முக பாவத்துடன் வலிமையற்ற இன்னொருப் புறாவின் கழுத்தைக் கொத்திக் குதறுகிறது. ஒரே ரத்தம். இருப்பினும் கொத்துவது நிற்கவில்லை. மரணத்துக்குப் பிறகே அது நிற்கிறது.

ஆனாலும் இது அதிகம் காணக் கிடைக்காதக் காட்சிதான் ஏனெனில் சுதந்திரமாகப் பறக்கும் நிலையில் வலிமைக் குறைந்தப் புறா பறந்துச் சென்று விடும்.

இப்போது இதை நான் ஏன் கூறுகிறேன் என்றுக் கேட்பவர்களுக்கு:

நேற்று நான் பார்த்த மெட்டி ஒலிக் காட்சிதான் நான் மேலே கூறியதற்கு எனக்கு ஹைப்பர் லிங்காகச் செயல் பட்டது.

ரவிப் புறா லீலாப் புறாவைக் குத்துகிறது. லீலாப் புறாவின் அப்பாவாகிய சிதம்பரம் புறா லீலாவுக்குப் பொறுமையை உபதேசிக்கிறது. ஏன்? இந்தியப் பண்பாடாம்.

இந்தக் கூண்டில் அடைப்பட்டுக் கிடக்கும் லீலாப் புறாக்கள் தேவையானால் கட்டுப்பாடுகளை உடைக்கத் தைரியம் கொள்ளும்படிக் கதையை நடத்தத் தெரியாமல் திருமுருகன் என்னும் டைரக்டர் புறா எல்லோர் வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொள்கிறது.

எல்லா தமிழ் சீரியலகளுமே இந்தக் குற்றத்தைத்தான் செய்கின்றன. இது பற்றிப் பிறகு.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது