2/16/2005

யாராவது உதவி செய்ய முடியுமா?

கடலில் அடிக்கும் வெவ்வேறு வகைக் காற்றுகளுக்கு மீனவர்கள் தனிப் பெயர்கள் வைத்துள்ளனர். நடுக்கடலில் மீன் பிடிக்கும் போது அவற்றை அவதானித்து புயல் வருமா இல்லையா என்பதைக் கண்டுக் கொள்ளுகின்றனர். நான் இப்போது ஒரு கட்டுரையைத் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். இதில் கீழ்க்கண்டக் காற்றுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அவை: கொண்டைக்காற்று, கோடைக்காற்று, கச்சாவ்கார்று, வாடைக்காற்று மற்றும் வாடைக்கொண்டைக்காற்று ஆகும். இவற்றின் ஆங்கிலப் பெயர்கள் தேவை. உதாரணத்துக்கு வாடைக் காற்று என்பது தென்றலுக்கு எதிர்ப்பதம் என்று படித்திருக்கிறேன். வடக்கு திசையிலிருந்து வரும் காற்று என்றளவில் அதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இதை உறுதி செய்ய இயலுமா?

க்ரியா அகராதியில் கச்சான்காற்று என்றுக் குறிப்பிட்டு இது மேற்கிலிருந்து வரும் காற்று என்றுக் கூறப்பட்டுள்ளது. இதையும் உறுதி செய்ய வேண்டுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6 comments:

வசந்தன்(Vasanthan) said...

எங்கட இடத்தில சோளகம் எண்டும் ஒரு வகைக் காத்து இருக்கு. நீங்கள் சொல்லுற கோடைக்காற்று தான் அது எண்டு நினைக்கிறன். இது சரியான பலமா வீசும். இது கச்சான் காத்துக்கு எதிர்க்காத்து. (அதாவது கிழக்கிலிருந்து வீசும்). நீங்கள் சொன்னபடி வாடைக்காற்றின் திசை என்னளவிற் சரியே. எங்கட இடத்தில மற்றத கொண்டல் எண்டுதான் சொல்லுறது. (தெற்கிலிருந்து வீசுவது.) இதுகளில வாடையையும் கொண்டலையும் தான் முதன்மையான காத்துகளாகவும்(நீண்ட காலம் வீசும்) மற்ற ரெண்டையும் இடையில வந்துபோற குளப்படிக் காத்துகளாகவும் கதைக்கிறவயள். அனேகமா சோளகம் பலமா இருக்கேக்க கடலுக்க இறங்கிறேல எண்டு நினைக்கிறன் (இது சின்னப் படகுகளுக்குத்தான் பொருந்தும்).
எதுக்கும் என்ர சொல்ல மட்டும் கேளாம அனுபவப்பட்ட ஆக்களின்ர கதயளயும் கேளுங்கோ. உதுகளுக்கெல்லாம் ஆங்கிலத்தில் ஒண்டும் தெரியாதுங்கோ.

ROSAVASANTH said...

//வடக்கு திசையிலிருந்து வரும் காற்று என்றளவில் அதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இதை உறுதி செய்ய இயலுமா?//

இதை மட்டும் உறுதி செய்ய இயலும்! இதற்கு ஆங்கிலத்தில் வார்த்தைகள் தேடுவதைவிட, உருவாக்குவதை விட, அந்த பெயர்களை அப்படியே பயன்படுத்தி (தேவையெனில் சுருக்கி), அது குறித்த குறிப்பை தருவதே சரியான அணுகுமுறை என்று எனக்கு தோன்றுகிறது. ஆங்கிலத்தில் அப்படியே இருக்கும் எத்தனையோ பிறமொழி வார்த்தைகள் போல் இதுவும் இருந்துவிட்டு போகட்டுமே!

ஈழநாதன்(Eelanathan) said...

டோண்டு அவர்களே
வாடை,கொண்டல் இரண்டுமே பருவப் பெயர்ச்சிக் காற்றுகள்தாம் இருக்கும் இடத்தின் பூகோள அமைவைப் பொறுத்து அவை வீசும் திசை சிறிது மாறுபடலாம்.இந்திய உபகண்டத்தின் அமைவை(இதற்குள் இலங்கையும் அடக்கம்)வைத்துப் பார்த்தால் வடகீழ்ப் பருவப்பெயர்ச்சிக் காற்று வாடை எனவும் தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்று கொண்டல்/சோழகம் எனவும் அழைக்கப்படும்

dondu(#11168674346665545885) said...

"வடகீழ்ப் பருவப்பெயர்ச்சிக் காற்று வாடை எனவும் தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்று கொண்டல்/சோழகம் எனவும் அழைக்கப்படும்"

அவ்வாறாயின் வாடைக்கொண்டைக்காற்று?

அன்புடன்,
டோண்டு ராகவன்

வன்னியன் said...
This comment has been removed by a blog administrator.
வசந்தன்(Vasanthan) said...

//வடகீழ்ப் பருவப்பெயர்ச்சிக் காற்று வாடை எனவும் தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்று கொண்டல்ஃசோழகம் எனவும் அழைக்கப்படும்//

ஈழநாதன் நீங்கள் சொல்பதைப்போல் வடகீழ், தென்மேல் பருவப் பெயர்ச்சிக்காற்றுக்கள் சரியே. ஆனால் தென்மேல் பருவப் பெயர்ச்சிக்காற்று கொண்டல் என்பதே சரி. சோழகம் என்பது அதற்குச் செங்குத்தாக வீசும் (கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையிலிருந்து). எப்படி கொண்டலும் சோழகமும் ஒன்றாக முடியும். மேலும் கொண்டல் அமைதியானது. ஆனால் சோழகம் சற்றுப் பலமானது. சோழகம் கிழம்பினால் எங்களுர் கிடுகுகள் கிழம்பும்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது