1969, ஜூலை 1. எல்லோரும் எங்கள் முதல் ஜெர்மன் வகுப்புக்காக உட்கார்ந்திருந்தோம். சரியாக 9 மணிக்கு மிடுக்காக உள்ளே நுழைந்தார் எங்கள் ஆசிரியர் சர்மா அவர்கள். சிறு அறிமுகம் - 1 நிமிடத்திற்கு, ஆங்கிலத்தில். அதில் அவர் கூறியதன் சாராம்சம் தான் இனி ஜெர்மனில்தான் பேசப் போவதாகவும் அம்மொழியிலேயே ஜெர்மன் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும் என்றும் கூறினார்.
உடனே பாடத்தை ஆரம்பித்து விட்டார். முதலில் பாடத்தை அவர் நிறுத்தி நிதானமாக உரக்கப் படித்தார். பிறகு எங்களை அதே உச்சரிப்புடன் படிக்கச் சொன்னார். என்ன ஆச்சரியம், தட்டுத் தடுமாறிப் படிக்க ஆரம்பித்தோம். பயிற்சி மிக உபயோகமாக இருந்தது. இது புது முறையைச் சார்ந்தது என்பதை அறிந்தோம். பிறகு டேப் ரிக்கார்டர் வழியே ஒரு ஜெர்மானியரின் உச்சரிப்பையும் பெற்றோம். எல்லாவற்றையும் கான்டக்ஸுடன் படித்துக் கேட்டதால் ஜெர்மன் மொழி எங்களை அறியாமலேயே எங்களிடம் குடி புகுந்தது.
கூடவே உரக்க நாங்களும் பாடத்தைத் திருப்பிச் சொல்ல வேண்டியிருந்தது. பலருக்கு உரக்கக் கத்துவதில் கூச்சம். ஆகவே உதட்டை மட்டும் அசைத்தனர். ஆனால் நான்? கூச்சமா? மூச், பேசப்படாது என்பது என் தாரக மந்திரம். என்னைப் பொருத்தவரை சர்மா தன் தெளிவானக் குரலில் ஜெர்மனில் எதைக் கூறினாலும் எனக்குப் புரிய ஆரம்பித்தது.
மெதுவாக வகுப்பில் மாணவர் நிலை ஒரு சமன்பாட்டுக்கு வரத் துவங்கியது. முதலில் வகுப்பறையில் உட்காரக்கூட இடம் இருக்காது. ஓரிரு வாரத்திலேயே சட சடவென்று பல மாணவர்கள் வகுப்புக்கு வருவதை நிறுத்தினர். மிஞ்சியவர்கள் அபார முன்னேற்றம் அடைந்தனர்.
நான் சேர்ந்தது Grundstufe - 1 வகுப்பில். ஒவ்வொருக் கல்வியாண்டிலும் இரண்டு செமஸ்டர்கள். முதல் செமஸ்டர் தேர்வு நவம்பர் 1969-லும், இரண்டாம் செமஸ்டர் தேர்வு ஏப்ரல் 1970-லும் நடப்பதாகத் திட்டம். அப்போது G - 1 சான்றிதழ் கிடைக்கும்.
இப்போது நான் ஒரு காரியம் செய்தேன். வாரத்துக்கு மூன்று வகுப்புகள், காலை 8-லிருந்து 9 வரை. மீனம்பாகத்திலிருந்து மாம்பலத்துக்கு மின் ரயில் வண்டியில் பயணம், அங்கிருந்து அண்ணா சாலை டி.வி.எஸுக்கு பேருந்துப் பயணம். ஆக, பயண நேரம் ஒரு மணிக்கு மேல். அப்போது விளையாட்டாக அடுத்தப் பாடங்களைப் படிக்க ஆரம்பித்து, அதில் கூறப்பட்டப் பயிற்சிகளைச் செய்யத் தலைப் பட்டேன். ஒரு வேளை ஏதாவது ஒரு நாள் வகுப்புக்குச் செல்ல முடியாவிடினும் சமாளித்துக் கொள்ளலாம் என்பதே இதற்குக் காரணம். ஆனால் நடந்ததென்னவென்றால் முதல் செமஸ்டர் முடியும் முன்னரே முழுப் புத்தகத்தையும் எல்லப் பயிற்சிகளையும் எழுத்தால் செய்து முடித்து விட்டேன். இப்போது ஜெர்மனில் நானே வாக்கியங்களை உருவாகிப் பேச ஆரம்பித்தேன். முதலில் என்னை வியப்புடன் பார்த்த சர்மா அவர்கள் என்னுடன் ஜெர்மனில் பேச ஆரம்பித்தார். நான் செய்தத் தவறுகளை நாசூக்காகத் திருத்தினார். மொழி வகுப்புகளில் எல்லோருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய டிக்டேஷன் எனக்கு ஒரு ஒரு விளையாட்டாயிற்று.
நவம்பர் 1969-ல் ஒரு நாள் மாலை 7 மணிக்கு முதல் செமஸ்டர் தேர்வு. சித்ரா திரையரங்கில் பாமா விஜயம் பகல் நேரக் காட்சியைப் பார்த்து விட்டு, மாலை தேர்வுக்குச் சென்றால் எல்லா மாணவர்களும் கடைசி நேரக் கொந்தளிப்பில். நான் பாட்டுக்கு ஒரு ஜெர்மன் தினசரிப் பத்திரிகையைப் பிரித்துப் பார்த்து விட்டு இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மையரின் கட்சிக்குத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று என் நண்பர்களிடம் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். அவர்களுக்கோ வாழ்க்கையே வெறுத்து விட்டது. பரீட்சை முடிவு வந்தது. ரொம்ப நாட்களுக்குப் பிறகு எனக்கு முதல் பரிசு கிடைத்தது.
இன்னொரு போனஸ். முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றவர்கள் அடுத்த வகுப்புக்கான முதல் மாதக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப் பட்டது. (மாதக் கட்டணம் 12 ரூபாய்!). ஆனால் ஒரு நிபந்தனை. பின் வரும் எல்லா மாதத் தேர்விலும் முதல் வகுப்பு மதிப்பெண்களை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அம்மாதத்திலிருந்து கட்டணம் கட்ட நேரிடும். நான் முதல் செமச்டருக்காகக் கட்டிய நான்கு மாதக் கட்டணமான 48 ரூபாய்களுக்கு மேல் ஒரு பைசாவும் கட்டவில்லை. வெறுமனே பரீட்சைக் கட்டணம் (ரூ. 10) மட்டுமே கட்டினேன்.
நவம்பர் 1969-ல் இரண்டாம் செமஸ்டர். கல்யாணி ஜானகிராமன் என்ற ஒரு அருமையானப் பெண்மணி வகுப்பெடுத்தார். ஏப்ரல் 1970-ல் இரண்டாம் செமஸ்டர் தேர்விலும் தேறி அடுத்த வகுப்புக்கான கட்டணத்திலிருந்து விலக்குப் பெற்றேன். இப்போது G - 2 வகுப்பை ஒரே செமஸ்டரில் முடிக்கத் திட்டமிட்டு, வாரத்துக்கு 5 நாள் வகுப்பில் சேர்ந்தேன். ஆசிரியை சியாமளா அவர்கள். வயலின் வித்தகர் துவாரம் வெங்கடசாமி நாயுடுவின் பெண். (மாதக் கட்டணம் 18 ரூபாய்கள், நான் கட்டவில்லை). பாதி செமஸ்டரில் Mittelstufe - 1 வகுப்புக்கானப் புத்தகம் வாங்கி பயிற்சிகளைச் செய்யலாமா என்று தேசிகனுடன் ஆலோசனை செய்ததில் அவர் மிகுந்த உற்சாகத்துடன் எனக்கு உதவி செய்தார். அவ்வகுப்பில் கடைசி மாதத்துக்கு மட்டும் வகுப்புக்குச் சென்றேன். சர்மாதான் ஆசிரியர். பிறகு நடந்ததுதான் தமாஷ். இரண்டு பரீட்சைகளையும் சில நாட்கள் இடைவெளியில் எழுதி இரண்டிலும் முதல் பரிசு பெற்றேன். முதல் பரிட்சை (G-1) அன்றுப் பார்த்தப் படம் சிராக் என்ற ஹிந்திப் படம், அடுத்தப் பரீட்சை (M1) தினத்தன்றுப் பார்த்தது லட்சுமி கல்யாணம்!
பதிவு மிக நீள்வதால் இங்கு நிறுத்துகிறேன். அடுத்தப் பதிவில் மேலே எழுதுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
‘உங்க கருத்தோட முரண்படுறேன், ஆனா…”
-
அன்புள்ள ஜெ அண்மையில் ஒரு கடிதத்தில் உறுதியான கருத்துக்கள்
கொண்டிருக்கக்கூடாது என்று சொல்லியிருந்தீர்கள். இளம்வாசகர்கள் உடனடியாக
உறுதியான கருத்துக்கள் கொண்...
13 hours ago
4 comments:
ராகவன்
யேர்மன் மொழியைக் கற்பதென்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. அந்த der die das ஐ ஒவ்வொரு சொல்லுக்கும் சரியாகப் பொருத்துவதே பெரும் பிரச்சனை. உங்களுக்கு மொழியைக் கற்பதில் அபார திறமை இருந்திருக்கிறது. அதனால்தான் நீங்கள் அத்தனை சுலபமாக உள்வாங்கிக் கொண்டீர்கள் என நினைக்கிறேன்.
அதற்கு முழு பாராட்டு சர்மாவுக்குத்தான் போக வேண்டும். எங்களுக்கு அவர் முதலிலேயே கூறிவிட்டார். எந்தப் பெயர்ச் சொல்லை எடுத்துக் கொண்டாலும் அதன் பால், பன்மைச் சொல் ஆகியவர்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு பென்ஸிலுக்கு வெறுமனே Bleistift என்று மட்டுமின்றி der Bleistift, die Bleistifte என்று உருப்போட வேண்டும். மூன்று ஆர்டிகிள்களையும் (der, das, die) கவனமாகப் பொருத்திக் கொள்ள வேண்டும், அவ்வாறு செய்தால் தவறு ஏற்படுவது குறையும் என்றுக் கூறியது என் மனத்தில் பதிந்து விட்டது. மேக்ஸ் ம்யுல்லர் பவனின் நோக்கமே நாங்கள் தொலை பேசியில் யாராவது ஜெர்மானியனருடன் பேசினால் அவருக்கு நாங்கள் ஜெர்மானியர் என்றது போன்றத் தோற்றத்தை அளிக்க வேண்டும் என்பதே. அது 100% என்றால் நான் அடைய முடிந்தது எவ்வளவு என்பதில்தான் என் வெற்றியை அளவிட வேண்டியிருக்கும்.
ஸ்விட்சர்லாந்திலிருந்து வந்த ஒரு ஜெர்மன் பேசும் நிபுணர் என்னுடைய ஜெர்மன் ஸ்விஸ் ஜெர்மன் போல இருக்கிறது என்றுக் கூறினார். நான் இந்தியாவை விட்டு எங்குமே சென்றதில்லை என்பதைக் கேட்டு மிக வியப்படைந்தார். நான் அப்போது என்ன நினைத்தேன்? சர்மா, தேசிகன் ஆகியோருக்கு என் மனத்தில் நன்றி கூறினேன்.
ராகவன், உங்கள் மொழி கற்கும் திறமை மிகவும் ஆச்சர்யமானது; இப்போது நான் உங்களிடமிருந்து கற்பது, தமிழை சிறிய வாக்கியங்களாய் எழுதுவதைத் தான். உங்களுடைய பதிவுகளும் பின்னூட்டங்களும் சிறிய, நேரடி வாக்கியங்களாய் இருக்கின்றன. நான் ஜெயகாந்தன் படித்த பாதிப்பில் (பல வருடங்களுக்கு முன்)என்னையறியாமலே நீண்ட வாக்கியங்களை எழுத ஆரம்பித்தேன் என நினைக்கிறேன். பிறகு குட்டி இளவரசன் (Little Prince-தமிழில் தான்) மற்றம்ம சில புத்தகங்களால் சின்ன வாக்கியங்களின் பால் கவரப்பட்டேன். இப்போது அதைப் பயிலவேண்டும்.
நன்றி!
சிறு வாக்கியங்கள் எழுதுவதற்கு என் தந்தையும் தாயுமே எனக்கு முன்னோடிகள். என்னுடைய அவர்களைப் பற்றியப் பதிவில் இதைக் குறிப்பிட்டுள்ளேன். 18/02/2005 தேதியிட்ட "ஆர். நரசிம்மன் - என். ருக்மிணி: ஆதர்சத் தம்பதியர்" என்னும் பதிவு அது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment