இது ஒரு மீள்பதிவு. முக்கியக் காரணம் பழையப் பதிவுகளை வகைபடுத்த முடியவில்லை, புதிய தமிழ்மணமும் அவற்றில் ஏதேனும் புது பின்னூட்டங்கள் வந்தால் அவற்றை இற்றைப்படுத்த முடியவில்லை. ஆகவே இந்த மீள்பதிவு. பழையப் பின்னூட்டங்கள் அப்படியே இதிலும் வருகின்றன. மேலும் இம்மாதிரி பதிவுகள் மீள்பதிவாக்கம் செய்யப்படும் என்பதையும் கூறிவிடுகிறேன். இப்போது இன்ஹ்டப் பதிவுக்குப் போகலாமா. அதில் சற்று மாருதல் செய்து கீழே கொடுத்துள்ளேன்.
சிலப்பதிகாரம் கதை சம்பந்தமாக எனக்குள் பல கேள்விகள் உண்டு. அவற்றைப் பற்றி இங்கே சில வார்த்தைகள் எழுத விரும்புகிறேன்.
முதலில் கோவலனைப் பார்ப்போம். அவனைப் பற்றி புலவர் கீரன் ஒரு சொற்பொழிவில் கூறினார்: "குறுமொழி பேசும் கோவலன்" என்று. அதாவது கெட்ட வார்த்தைகள். போலி டோண்டுவைப் போல என்று வைத்து கொள்ளலாமே. தன் நண்பர்களுடன் அவ்வாறு பேசிக் கொண்டே ஊர் சுற்றுபவன். அவனுக்கு கண்ணகி என்னும் உத்தமப் பெண்ணை மண முடிக்கின்றனர். திருமணத்துக்கு பிறகு அவன் மனம் மாதவியை நாடுகிறது. ஆணாதிக்க சமுதாயமல்லவா, யாரும் ரொம்ப அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. கண்ணகியும் அதில் அடக்கம். என்ன செய்வது, ஆணாதிக்கத்தை போற்றும் சமூகத்தில் பிறந்தவள் வேறு என்னதான் செய்திருக்க முடியும்?
பணம் எல்லாம் தொலைத்துவிட்டு வரும் கணவனை செருப்பாலடிக்காமல் வரவேற்றது கண்ணகி செய்த பெறும் குற்றம். இவள் இவ்வாறு செய்ததால்தான் இன்னும் நம் நாட்டில் கன்ணகியை ஒரு எடுத்துக் காட்டாக நினைக்கும் பல பெண்கள் கஷ்டப்படுகின்றனர்.
ஆம்பள இப்படி அப்படித்தான் இருப்பான் என்ற சப்பை கட்டு வேறு. அது ஒரு புறம். சிலப்பதிகாரத்திலேயே வருகிறதே. கணவனுக்கு துரோகம் செய்யும் பெண்களை கொன்று உண்ணும் நாளங்காடி பூதங்கள், சதுக்க பூதங்கள் என்று. பரத்தை வீடு செல்லும் ஆண்கள்? இந்த பூதங்கள் ஒரு வேளை அப்போது தூங்கப் போய்விடும் போல.
சரி, சிலப்பதிகாரத்தின் முக்கியக் கதைக்குத் திரும்ப வருவோம். கண்ணகி கோவலனைப் பின்தொடர்ந்து செல்கிறாள். போன இடத்தில் கோவலன் மரண தண்டனை பெறுகிறான். இதுவரை சாதுவாக இருந்தவள் புயலாக எழுகிறாள். மதுரையையே எரிக்கிறாள். எல்லோருக்கும் தெரிந்த கதை.
அதே நேரம் பூம்புகாரில் என்ன நடந்தது? கோவலன் மாண்ட செய்தி கேட்டு அவன் தாய் தந்தையர் உயிரிழக்கின்றனர். மாதவி துறவறம் பூணுகிறாள். இங்கு மதுரையில் பாண்டியன் நெடுஞ்செழியன் இறந்த்ததும் பட்டத்துக்கு வந்த அவன் மகன் இத்தனைக்கும் காரணம் ஒரு பொற்கொல்லனே என்பதைக் கண்டு அவனை மட்டும் தண்டிக்காமல் பல பொற்கொல்லர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றுகின்றான். போகிற போக்கில் அதைக் கூறும் இளங்கோவடிகள் இந்தச் செயலின் அநீதியைப் பற்றி ஒன்றும் கூறியதாகத் தெரியவில்லை.
ஆனால் என் வருத்தம் என்னவென்றால் இத்தனை ஆவேசமும் ஒரு உபயோகமற்றக் கேவலனான கோவலனுக்காக என்பதுதான். இந்தக் கேனையனுக்கா இத்தனை பாடு?
கண்ணகி தைரியம் மிக்கவள்தான். அவள் செய்ததும் அவளைப் பொருத்தவரை சரிதான். அக்காலக்கட்டத்தில் ஒரு பெண் வேறு மாதிரி சிந்தித்திருக்க முடியாதுதான். ஆனாலும் இப்பாத்திரம் பெண்ணடிமையின் ஒரு வெளிப்பாடுதான்.
ஆகவே கூறுவேன், பெரியார் கண்ணகி பாத்திரப் படைப்பை பற்றியும், சிலப்பதிகாரம் பற்றியும் கூறியது 100% சரியே என்று கூறி அவருடன் இந்த விஷயத்தில் நானும் ஒத்துப் போகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தன்னிலிருந்து வெளியேறுதல்
-
அன்புள்ள ஆசிரியருக்கு, சிறு வயதில் இருந்து கேட்ட மகாபாரதக் கதை. கல்லூரி
காலத்தில் கையடக்க மகாபாரத புத்தகத்தில் முழுமையாக வாசித்து முடித்த கதை.
கொரானா கால ...
2 hours ago
50 comments:
அந்த காலங்களில் ஆடவர்கள் வெளிப்படையாக வைப்பாட்டி வைத்துக்கொள்வது வழக்கம். அதை மனைவியர் ஏற்றுக்கொண்டனர். இன்று நான் சொல்ல வேண்டியதில்லை. தன் கணவன் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பதற்காக தனது நகைகளை கொடுத்து பொருள் இல்லாதபொதும் கோவலன் கேட்க பொருள் இல்லையே என வருந்துகிறாளே தவிர சொத்தெல்லாம் போய்விட்டதே என அவள் நினைக்க வில்லை.
அப்படிப் பட்ட கணவனுயிருக்கே ஆபத்தென்றரிந்த பின் கொதித்தெழுகிறாள்,துடிக்கிறாள் பழிவாங்க கிளம்பினாள்.
அந்த தீயையும் தீயவர் பக்கம் சார்க என கூறுகிறாள்
என்னார்
அதைத்தான் பெண்ணடிமை என்று கூறுகிறேன் என்னார் அவர்களே.
சிலபாதிகாரத்தை ஒதுக்கும் நேரம் வந்து விட்டது. இது ரொம்ப மோசமான உதாரணங்களை கொடுக்கிறது. கண்ணகியைப் பொருத்தவரை அவள் தைரியசாலி பெண்மணி, அதில் சந்தேகம் இல்லை. இதை எழுதியதற்காகக் இளங்கொ அடிகளையும் குறை சொல்ல முடியாது. அவர் இருப்பதைத்தான் எழுதினார். பெண்கள் அவ்வாறு அடங்கி கிடக்க பல சமுதாய காரணங்கள் அக்காலத்தில் இருக்கலாம். இக்காலத்துக்கு அவை பொருந்தா. சிலப்பதிகாரத்தை இலக்கியத்துக்காகப் படிக்கலாம். ஆனால் ஒரு disclaimer-உடன். அதாவது இதன் உட்கருத்து பெண்ணடிமையை ஆதரிக்கிறது, என்று.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு அய்யாவின் கருத்தில் பல உண்மைகள் உள்ளன, கண்ணகிக்கு சிலை வைத்ததும் கண்ணகி போன்ற கற்புக்கரசி என்பதும் கண்ணகியை தமிழ்ப் பெண்களின் உருவகமாக கூறுவதும் குறைந்த பட்சம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது, பதிவில் குறிப்பிடவில்லையென்றாலும் பெண்ணடிமைப் பற்றி பேசுவதால் சொல்கின்றேன், இதே கோபம் எனக்கு இராமரின் மனைவி சீதையின் மீதும் உண்டு.
முந்தைய பின்னூட்டத்தில் விடுபட்ட சில வார்த்தைகளுக்காக நானே அழித்தேன்
நன்றி
இந்த உபயோகமற்ற கோவலனால் வந்த மற்றக் கேடுகளையும் பாருங்கள்.
1. கோவலன் இறந்தது கேட்டு அவன் தாய் தந்தையர் உயிரிழக்கின்றனர்.
2. மாதவி துறவறம் பூணுகிறாள்.
3. பாண்டியன் நெடுஞ்செழியனின் மகன் பட்டத்துக்கு வந்து நூற்றுக்கணக்கான பொற்கொல்லர்களை கழுவேற்றுகிறான். (இந்த விஷயத்தில் கருணாநிதி அவர்கள் பூம்புஹார் திரைக்கதையில் செய்த மாற்றம் மனதுக்கு ஆறுதலாக இருந்தது).
அன்புடன்,
டோண்டு ராகவன்
சிலப்பதிகாரத்துக்கு disclaimer கொடுப்பது எல்லாம் ரொம்ப டூ மச்... அப்புறம் எல்லா பழந்தமிழ் இலக்கியத்துக்கும் disclaimer கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்...
சிலப்பதிகாரம் ஒரு இலக்கியம், அவ்வளவுதான்... யாரும் சிலப்பதிகாரத்தை வாழ்க்கை நெறிமுறையாக/வழிகாட்டியாக எடுத்துக்கொள்வது கிடையாது...
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் நடந்து கொள்ளும் முறை பற்றி பல புதினங்கள் பதியப்பட்டிருக்கலாம்... அது தற்போதைய காலகட்டத்தின் கண்ணாடி... 50 ஆண்டுகளுக்கு பின் அதில் பலவிஷயம் கால ஓட்டத்தில் மறைந்திருக்கும்... அதற்காக முன் எழுதிய எல்லாவற்றிலும் அர்த்தம் இல்லை என்று சொல்ல முடியுமா...
சிலப்பதிகாரம் சம்பந்தமான கிளைக்கதை ஒன்று ::
திரு. கிருபானந்தவாரியார் அவர்கள் சொற்பொழிவில் நடந்ததாக கேட்ட செய்தி :: அவர் கூட்டத்தில் இருந்த ஒருவரை எழுப்பி சிறந்த கற்புக்கரசியின் பெயர் ஒன்று சொல்ல சொல்கிறார்... அவர் கண்ணகி என்கிறார்... இன்னொருவரை எழுப்பி கற்பில் சிறந்த இன்னொரு பெயரை சொல்ல சொல்கிறார்... அவர் சாவித்திரி (சத்தியவான்) என்கிறார்...
பிறகு வாரியார் சொன்னது :: கற்புக்கரசி என்றதும் எல்லாரும் கண்ணகி, சாவித்திரி என்று சொல்கிறீர்களே... ஏன் யாருக்கும் உங்கள் மனைவி பெயரோ தாயார் பெயரோ நினைவுக்கு வர மாட்டேன் என்கிறது...
"கற்புக்கரசி என்றதும் எல்லாரும் கண்ணகி, சாவித்திரி என்று சொல்கிறீர்களே... ஏன் யாருக்கும் உங்கள் மனைவி பெயரோ தாயார் பெயரோ நினைவுக்கு வர மாட்டேன் என்கிறது..."
ஒரு படத்தில் பாக்கியராஜ் பஞ்சாயத்து ஸீன் ஒன்றில் இதே கேள்வியை பஞ்சாயத்து செய்பவர்களை கேட்டு, அவர்கள் புராணங்களிலிருந்து பெயர்களை கூற, பிறகு அவர்களை பாக்கியராஜ் வாரியார் அவர்கள் கேட்ட கேள்வியை கேட்டு அவர்கள் மனைவியரிடம் போட்டு கொடுத்து அவர்களுக்கு அடி வாங்கி கொடுப்பார்.
படத்தின் பெயர் மறந்து விட்டது, ஏதோ காமெடி கௌந்த்/டௌனில் பார்த்த ஞாபகம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதுவும்
உறைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டுவதும்
என்பதுவும் தான் சிலப்பதிகார நோக்கம்., அதற்கான காரணத்தை வலுவாகச் சொல்லுகிறார். கண்ணகி அப்படியே கோவலனை ஏற்றுக் கொள்ள வில்லை., பெரியோர் பழித்த செயல்கள் செய்தாய் என கணவனுக்கு சுட்டுகிறாள். மதுரைக்கு செல்லும் வழியில் ஒரு வீட்டில் இருக்கும்போது. கணவன் தனக்கிழைத்த அநீதியை விட, மக்களுக்கு மன்னன் இழைக்கும் அநீதி தவறென சுட்டவே கொதித்தெழுந்தாள். கோவலன் வரும் போது தன் வீட்டின் கதவைச் சாத்துதல் எல்லாம் படிக்கும்போது கண்ணகி ஒன்றும் அவ்வளவு கோழையல்ல என்றே தோன்றுகிறது. ஏசாச் சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி... என தான் வாழ்க்கைப் பட்ட வீட்டை எந்நிலையினும் பெருமையில் சரிய விடாததே அவள் குணம். அது சரியானதா என்றால்., எனக்குத் தெரியவில்லை.
பெரியார் கவியங்களையும்., காப்பியங்களையும் வேறு பார்வையில் பார்த்தார்.
இன்னொன்று, பெரியார் கூறிய பல விஷயங்கள் 100% சரியே.
"அதை நீங்கள் ஏற்றால் ராமன் பல தவறுகள் செய்தவன், மனைவியை சந்தேகித்த சாதாரண மனிதன், என்பதயையும் ஏற்க வேண்டி வரும்."
அப்படி ஒன்றும் கட்டாயம் இல்லை விசிதா அவர்களே. ராமாயணம் அவதார காரியத்தைக் கூறுகிறது. அதில் திருமால் மனிதனாக அவதாரம் எடுத்து, அத்தருணத்தில் தன்னையும் மனித அவதாரத்தின் அத்தனை கட்டுப்பாட்டுக்கும் உட்படுத்திக் கொள்கிறார். இதில் என் மனத்தை நெருடுவது சீதையை வனத்துக்கனுப்பியதே. இது சம்பந்தமாக ஒரு நிகழ்ச்சியை கூறுவேன்.
ராமானந்த சாகரின் உத்தர ராமாயணம் தொலைக்காட்சியில் வந்து கொண்டிருந்த நேரம். அன்று சீதையை வனத்துக்கு அனுப்ப வேண்டிய காட்சி வருவதாக எதிர்பார்த்தோம். அதை பற்றி என் தில்லி நண்பர் சர்மா அவர்களுடன் காரசாரமான விவாதம். நான் கூறினேன் "மக்கள் சீதையை குறை சொல்வதை ஏற்கும் ராமன் தான் தன் மனைவியை காப்பாற்றத் தவறியதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே அவன் மன்னனாக நீடிக்கும் தகுதியை இழக்கிறான். பேசாமல் முடி துறந்து சீதையுடன் மறுபடி வனவாசம் செல்ல வேண்டியதுதானே". என் நண்பர் சர்மா குழப்பமடைந்தார். விவாதம் என் வீட்டில் நடந்தபோது நிகழ்ச்சியும் ஆரம்பம் ஆயிற்று. என்ன ஆச்சரியம், ராமானந்த் சாகர் அவர்களும் நான் கூறியது போலவே திரைக்கதையை அமைத்திருந்தார். ராமர் பரதனிடம் ஆட்சியை ஏற்றுக்கொள்ளும்படி கூற, பரதன் மறுபடி அழுது புலம்ப, இதை பற்றி அறிந்த சீதை தானே வனவாசம் செல்ல முடிவு எடுக்கிறார். சர்மா அவர்கள் என்னைத் திகைப்புடன் பார்த்தார். நானும்தான் திகைத்தேன். ஏதோ ஒரு ஆற்றாமையில் கூறியதைப் போலவே தயாரிப்பாளரும் சிந்தித்திருக்கிறார். கருணாநிதி அவர்கள் பூம்புகார் திரைக்கதையில் மாற்றம் செய்தது போல.
சீதையைப் பிரிந்த ராமரும் சுகப்படவில்லை. இது எல்லாம் திருமாலுக்கு அளிக்கப்பட்ட சாபம் என்று தெரிகிறது.
முழு காப்பியத்தையும் பார்க்காது, பல்வேறு ராமாயணங்களில் சொல்லப்பட்டதிலிருந்து தனக்கு சாதகமானதை மட்டும் திரித்து context இல்லாது கூறினார் பெரியார் அவர்கள். அதை ஒப்பு கொள்வதற்கில்லை.
சிலப்பதிகாரம் விஷயம் வேறு. இங்கு எனக்கு கண்ணகி மேல் மிக்க மரியாதை. கோவலன் என்னும் கேவலனுக்காக இத்தனையும் செய்திருக்க வேண்டுமா என்பதுதான் என் ஆதங்கம். அதை வெளிபடுத்தவே இப்பதிவு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பதிவுக்கு வாசகர்களை பெற்றுத்தர வல்ல ஓர் அருமையான தலைப்பு ;-) தலைப்பில் பெரியாரை போட்டதற்காக, அவரைப் பற்றி, பதிவின் இறுதியில் ஒரு வரி, ஆஹா, பலே பலே !!!
இப்போது பதிவின் மேட்டருக்கு! கண்ணகி, வேறொருத்தியுடன் வாழ்ந்து விட்டு தன்னிடம் திரும்பி வந்த கோவலனை கடிந்துரைத்து பின்னர் அவனை மன்னித்து ஏற்றுக் கொண்டது அவளது பெருந்தன்மையை காட்டுகிறது. அது மாபெரும் குற்றமாக நினைக்கப்படாததற்கு காரணம், அக்காலச் சூழலே ! இக்கால கட்டத்தில் அது வேறு விதமாக பார்க்கப்படுகிறது, அதனாலேயே தற்கால இலக்கியத்திலும் கதாபாத்திரங்கள் அவ்வாறாக புனையப்படும் சாத்தியங்களும் குறைவே !
எனவே, கண்ணகி பெண்ணடிமைத்தனத்தின் மொத்த உரு (அல்லது சிலப்பதிகாரம் பெண்ணடிமையை போற்றுகிறது) என்று கூறுவதெல்லாம அபத்தத்தின் உச்சம் என்பது என் கருத்து.
சிலப்பதிகாரம் ஒரு பேரிலக்கியம். வாழ்க்கை நெறிகளை எடுத்துரைக்கும் ஒரு போதனை நூல் அல்ல !!!
பாலா அவர்களே,
உங்கள் கருத்துகள் சிந்தனையைத் தூண்டுகின்றன. கண்ணகி வீடு திரும்பிய கோவலனை கடிந்துரைத்தாளா? அது எனக்கு புதிய செய்தி. சிலப்பதிகாரத்தின் அப்பகுதியை நான் ஒரிஜினலில் படிக்கவில்லை. நான் படிததெல்லாம் உரைநடையே. ஆகவே நான் அதை தவற விட்டேன் போல.
கண்ணகி ஒரு பிரமிப்படைய வைக்கும் பெண் என்பதில் சந்தேகமில்லை. அவளைப் போய் கோவலனுக்காக வீணாக்கி விட்டார்களே என்பதுதான் என் கோபம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"ஜயா, கண்ணகி கோவலனுடன் வாழ்ந்ததால்தானய்யா உன்னை பிரமிக்க வைக்கும் பெண்ணானால்,"
நான் ஜயா அல்ல. ஐயா என்று கூற நினைத்தீர்களா?
பெண்ணானால் அல்லது பெண்ணானாள்?
தமிழ் எழுத்து பிழையில்லாமல் எழுதப் பழகுங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"ஆகவே கூறுவேன், பெரியார் கண்ணகி பாத்திரப் படைப்பை பற்றியும், சிலப்பதிகாரம் பற்றியும் கூறியது 100% சரியே"
இதில் மட்டும்தான் பெரியாருடன் ஒத்து பொகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அடி ஆத்தி,
பிழையை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ஐயா!. திருத்திக் கொள்கிறேன்
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஒரே ஒரு வரி!
அதுவும், கணவனை அப்படியே ஏற்றுக்கொண்டு விட்டு, அவன் 'மதுரைக்குப் புறப்படு' என்றவுடன் மறுபேச்சு சொல்லாமல் புறப்பட்டு, பல நாட்கள் நடந்து, மதுரை வந்தடைந்து, ஐயையின் வீட்டில் உணவருந்திய பின்னர் சாவகாசமாக வெற்றிலை மடித்துக் கொடுத்து விட்டு, கோவலன் அவள் பாதங்களைப் பார்த்து வருந்தி, ஆற்றாமையோடு பேசும்போது, ஒரே ஒரு சொல்,
'அவர் உள்ளம் வருந்தப் போற்ற ஒழுக்கம் புரிந்தீர்!' [கொலக்களக் காதை: வரி 81]
[உங்கள் பெற்றோர் வருந்தும்படியாக, போற்றுதற்கு உரியது அல்லாத ஒழுக்கத்தை மேற்கொண்டு விட்டீர்கள்]
எனச் சொல்லும் அந்த ஒரு வரியை வைத்துக் கொண்டு, கண்ணகி அப்படியே ஏற்கவில்லை எனச் சொல்வது வாத நியாயம் ஆகாது!
ஆனால், கண்ணகி இருந்த கால கட்டத்தின் நெறிமுறைகள் வேறு; அவற்றை இப்போதைய கண்ணோட்டத்தில் நோக்கி, குழம்பக் கூடாது.
அடுத்த வரியிலேயே சொல்கிறாள்,
" மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின்
ஏற்று எழுந்தனன் யான் என்று அவள் கூற" [கொ. க. காதை: வரிகள் 82,83]
'நான் உங்களுடைய சொல்லை மாற்ற நினையாத உள்ளத்தை உடையவளாக இருப்பதால், நீங்கள் கூறியவுடனேயே புறப்பட்டு விட்டேன்' என்கிறாள்.
சிலப்பதிகாரக் கண்னகி போற்றுதலுக்கு உரியவளே!
வணக்கம் எஸ்.கே. அவர்களே. சிலப்பதிகார கண்ணகி போற்றுதலுக்குரியவர் என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. என் கோபமெல்லாம் அந்தக் கோவலன் என்றக் கேவலன் மேல்தான். அவனுக்காக இத்தனை மெனக்கெடல் என்பதையும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
நம் பார்வையும் இக்காலத்திற்கு ஏற்பத்தான் பார்க்கும். ஆகவே கண்ணகியின் பாத்திரமே அக்கால ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்று நான் கூறியதிலும் எவ்வித மாற்றமுமில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஒரே ஒரு தவறு!
'அவர் உள்ளம் வருந்தப் ""போற்றா"" ஒழுக்கம் புரிந்தீர்!' [கொலக்களக் காதை: வரி 81]
[உங்கள் பெற்றோர் வருந்தும்படியாக, போற்றுதற்கு உரியது அல்லாத ஒழுக்கத்தை மேற்கொண்டு விட்டீர்கள்]
"போற்ற" என்று போட்டுவிட்டேன் முன்பு.
எஸ்கே அவர்களே,
நீங்கள் 'அவர் உள்ளம் வருந்தப் போற்ற ஒழுக்கம் புரிந்தீர்!' [கொலைக்களக் காதை: வரி 81]'
என்று போட்ட வரிகளை நான்
'அவர் உள்ளம் வருந்தப் போற்றா ஒழுக்கம் புரிந்தீர்!' [கொலைக்களக் காதை: வரி 81]
என்றுதான் படித்தேன். கோவலனாவது மற்றவர் போறும் ஒழுக்கம் உடையவனாக இருப்பது. இப்போது நீங்கள் கூறியதும்தான் இத்தவறையே பார்த்தேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கூறும்விதமாக கூறினால் டோண்டு ஒரு திராவிட ராஸ்கலாக கூட ஆக வாய்ப்பு உள்ளது.அவருடைய பல கருத்துக்கள் அவ்வாறாக உள்ளது.
saathi ozhiya vEndumendral paappaan ozhiya vendum enpathum sari thane?
saathi ozhiya vEndumendral paappaan ozhiya vendum enpathum sari thane?
தவறு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"கூறும்விதமாக கூறினால் டோண்டு ஒரு திராவிட ராஸ்கலாக கூட ஆக வாய்ப்பு உள்ளது.அவருடைய பல கருத்துக்கள் அவ்வாறாக உள்ளது."
ஆண்/பெண் கற்பு நிலை பற்றியக் கருத்துக்களிலும் நானும் ஈ.வே.ரா. அவர்களுடையக் கருத்துக்களுடன் ஒத்துப் போகிறேன்.
நானறிந்த ஆறு மொழிகளில் தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்று நான் கூறும்போது தமிழ் மொழியைப் பற்றி அவர் வைத்திருந்த கேவலமான கருத்துக்கள், மற்றும் தமிழ்ப் புலவர்கள் பிச்சைக்காரர்கள் என்பது போன்ற அவர் கருத்துக்களுடன் தீவிரமாக மாறுபடுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மிகவும் வருத்தமான பதிவு இது. டோண்டு நீங்கள் சிலப்பதிகாரத்தைப் படித்ததில்லை என்றே நினைக்கிறேன். சிலப்பதிகாரத்தை ஓருமுறையாவது படித்து விட்டு பிறகு பதிவு எழுதுங்கள். ஈ.வெ.ரா என்ன சொன்னால் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று எனக்குப் புரிகிறது. என்னைப் பொருத்த வரையில் நீங்கள் பதிவில் சொல்லியிருப்பவை சிலப்பதிகாரத்தின் முறையான அறிமுகம் இன்றி சொல்லப்பட்ட கருத்துகள். ஆகையால் இதற்கு மேல் இங்கு நான் விளக்கிக் கொண்டிருக்கப் போவதில்லை. அடுத்து ஏதேனும் இலக்கியங்களைப் பற்றியோ இலக்கியப் பாத்திரங்களைப் பற்றியோ பதிவு எழுதும் பொழுது......தயவு செய்து நுனிப்புல் மேயாதீர்கள். நன்றி.
"என்னைப் பொருத்த வரையில் நீங்கள் பதிவில் சொல்லியிருப்பவை சிலப்பதிகாரத்தின் முறையான அறிமுகம் இன்றி சொல்லப்பட்ட கருத்துகள். ஆகையால் இதற்கு மேல் இங்கு நான் விளக்கிக் கொண்டிருக்கப் போவதில்லை."
சிலம்புச் செல்வர் திரு. ம.பொ.சி. அவர்கள் கல்கியில் சிலப்பதிகாரம் பற்றி எழுதி வந்தத் தொடரை வாரா வாரம் படித்தவன். ஆறம் வகுப்பிலிருந்து பி.யு.சி. வரை எங்கள் தமிழ்ப் பாடங்களில் சிலப்பதிகாரத்திலிருந்து ஏதேனும் ஒரு காதை நிச்சயம் பாடமாக உண்டு. ஆகவே அறிமுகம் இல்லாமல் நான் நிச்சயமாக இல்லை. இங்கு உங்களுக்குக் கூற விருப்பம் இல்லையெனில் ஒரு தனிப் பதிவாகவே போடுங்களேன்.
என்னுடையக் குற்றச்சாட்டுகள் பின்வருமாறு.
1. கோவலன் என்பவன் ஒரு கேவலனே.
2. ஆண் பெண் கற்பு நிலைகளில் இரட்டை நிலையைப் பேணுகிறது சிலப்பதிகாரம். உதாரணம்: கானல் வரிப் பாடல்கள்.
3. சீற வேண்டிய இடத்தில் சீறாது, கணவனை தறிகெட்டுப் போகவிட்டு, பிறகு சீறும்போது ஒரேயடியாக ஓவராகச் சீறி, அரசன் செய்த குற்றத்துக்கு ஒரு ஊரையே அழித்தவள் கண்ணகி. அதுவும் ஒரு கேவலமான மனிதனுக்காக.
4. ஹைண்ட்சைட் என்று நீங்கள் கூறினாலும், கோவலன் செய்தக் காரியம் (பரத்தையர் வீடு சென்றது) அக்காலத்திலேயே குற்றமாகக் கருதப்பட்டது.
அப்படிப்பட்டவனைக் காவியத் தலைவனாக்கியதுதான் சிலப்பதிகாரத்தின் பலவீனம். பாட்டுடைத் தலைவன் மற்றும் தலைவியின் இலக்கணங்களைப் பற்றியும் தமிழ் இலக்கியங்கள் கூறியதையும் நீங்கள் படித்திருப்பீர்கள்தானே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கண்ணகி கற்புக்கரசியோ இல்லையோ தெரியாது. ஆனால் மதுரை நகரையும் அப்பாவி மக்களையும் எரித்த ஒரே காரணத்திற்காக முக்கியமாக மதுரையை எரிக்கும் கட்டம் வரும்போது என்னால் படிக்க முடியாது. அதனால் பள்ளி நாட்களில் மதிப்பெண்கள் கூடக் குறைந்திருக்கிறது.ஆகவே கண்ணகியைப் போற்ற என்னால் முடியவில்லை. தனிப்பட்ட ஒருத்தியின் நஷ்டத்திற்காக ஒரு நகரே அழிந்தால்? ஆனால் நகரத்தார் சமூகத்தில் அதற்குப் பிறகு யாரும் கால் சிலம்பு போடுவதில்லை என்றும் அதற்குப் பின் தான் அவர்கள் செட்டிநாடு என்று இன்று நாம் அழைக்கும் இடத்திற்குக் குடி பெயர்ந்ததாகாவும் படித்தும் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த சிலர் மூலம் கேட்டும் இருக்கிறேன்.
"நகரத்தார் சமூகத்தில் அதற்குப் பிறகு யாரும் கால் சிலம்பு போடுவதில்லை என்றும் அதற்குப் பின் தான் அவர்கள் செட்டிநாடு என்று இன்று நாம் அழைக்கும் இடத்திற்குக் குடி பெயர்ந்ததாகாவும் படித்தும் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த சிலர் மூலம் கேட்டும் இருக்கிறேன்."
நானும் படித்திருக்கிறேன் கீதா அவர்களே. எங்கு என்பதுதான் நினைவில்லை. கண்ணதாசன்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு உங்கள் பதிவில் பின்னூட்டம் போடக்கூடாது என்பதல்ல என்னுடைய எண்ணம். யாருடைய பின்னூட்டங்களுக்கும் பயப்படவில்லை. விளக்கங்கள் மிகவும் நீளமாகப் போகும். அதற்கு நேரம் இப்பொழுது இல்லை. ஆனால் ஒரு நாள் நிச்சயம் சொல்வேன்.
இந்தப் பதிவில் கொஞ்சமே கொஞ்சம் எழுதியிருக்கிறேன்.
http://gragavan.blogspot.com/2006/02/blog-post.html
அடேங்கப்பா! தெரியாம வந்துட்டேன்! இரும்பு அடிக்கற இடத்தில் ஈ க்கு என்ன வேலைனு யாராவது பின்னூட்டம் போட்டு விட போகிறார்கள்!
நிச்சயமாக நான் போலி டோண்டுவைப் பற்றி நினைக்கவேயில்லை ராகவன் அவர்களே.
உங்களுடைய "தென்னவன் தீதிலன்" கதையை நானும் ரசித்தேன். யாரிடமுமே செருப்படி வாங்காமல் போய் விட்டான் கோவலன் என்பதுதான் என் ஆதங்கமே.
அன்புடன், டோண்டு ராகவன்
வந்ததுதான் வந்தீர்கள். கருத்து கூறுங்கள் அம்பி அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
// யாரிடமுமே செருப்படி வாங்காமல் போய் விட்டான் கோவலன் //
It is 100% true.
நன்றி சிவபாலன் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தமிழ்வாணனின் "கல்கண்டு" பத்திரிகையில் படித்த நினைவு. அப்போது நகரத்தார் சமூகத்தைப் பற்றிக் கட்டுரை வந்ததாக ஞாபகம்.அல்லது குமுதத்திலா தெரியவில்லை.
கல்கண்டில் வருவதற்கு அதிக வாய்ப்புக்கள் உண்டு கீதா அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கோவலனை கேவலன் என்கிறீர்கள்.
கண்ணகியின் மாண்மை இதிலேதான் வெளிப்படுகிறது. இத்தகைய கணவனிடம் அவள் பதிபக்தியோடு இருந்தது தான் சிறப்பு. அதனால்தான் அவள் இன்றும் போற்றப்படுகிறாள்; வணங்கப்படுகிறாள்.
இழுமையிலும் பெருமை தரும்படி நடப்பதால்தான் பெண் சிறக்கிறாள். அழகான, அம்சமான, வளமான கணவனிடம்தான் என் அன்பும் காதலும் கனியும் என்று சொன்னால் அவளுக்கு என்ன சிறப்பு இருக்க முடியம்.
காந்தியை நாம் போற்றுகிறோம் என்றால் அவரின் தியாகத்திற்காக. பெண்களிலும் அவ்வாறே! சீதையும், மண்டோதரியும் பெண்குல வழித்தோன்றல்கள், ஓரே காவியத்தில். ஏன் என்று யோசித்துப்பாருங்கள்.
தங்களின் 'புரட்சிக்கருத்துக்கள்' பெண்மையை இன்னும் இழிவு படுத்தும் பெருமைபடுத்தாது என்று நான் கருதுகிறேன்.
கண்ணகியின் பெருமை அவள் கணவனை அவள் சகித்துக் கொண்டாள் என்பதால் அல்ல (அவள் கோவலனை திருத்த சிறுதும் முயலவில்லை என்று காவியத்தில் இருக்கிறதா இல்லை உங்கள் கற்பனையா என்று தெரியவில்லை. அவள் தன்வழிப்படியே கணவனுடன் நல்ல இல்லறத்திற்காக போராடியிருப்பாள் என்றுதான் தோன்றுகிறது. ஆனால், தாங்கள் சொல்லும் "செருப்பாலடித்து" டெக்னிக் இருக்காது நிச்சயமாக.
பர்த்ருஹரி சொன்னதுபோல் சந்தர்ப்பம் கிடைக்கும்வரை எல்லோரும் பத்தினிகள் தான். சாக்கடையிலும் தாமரையாக ஒளிர்ந்தவள் கண்ணகி.
ராமசாமி நாயக்கரின் தமிழ் விரோத பாவனைகளில் இதுவும் ஒன்று. அதற்கு தாங்கள் வழி மொழிவது சரியல்ல.
நன்றி
"அவள் கோவலனை திருத்த சிறிதும் முயலவில்லை என்று காவியத்தில் இருக்கிறதா இல்லை உங்கள் கற்பனையா என்று தெரியவில்லை. அவள் தன்வழிப்படியே கணவனுடன் நல்ல இல்லறத்திற்காக போராடியிருப்பாள் என்றுதான் தோன்றுகிறது. ஆனால், தாங்கள் சொல்லும் "செருப்பாலடித்து" டெக்னிக் இருக்காது நிச்சயமாக."
செருப்பாலடிப்பது அப்புறம். முதலில் கண்ணகி ஒன்றுமே முயலவில்லை என்பதுதான் நிஜம். பரத்தை வீட்டிலிருந்து கொண்டு கேவலன் பொருள் அனுப்புமாறு தூதனுப்ப அனுப்ப கண்ணகியும் அவ்வாறே செய்து வந்திருக்கிறாள். கலைஞரின் பூம்புஹார் படத்திலேயே இந்தக் காட்சி வருகிறதே. கேவலனின் தந்தையே கண்ணகியிடம் அவ்வாறு செய்ய வேண்டாம் எனக் கூறுகிறார் என்று அந்தக் காட்சியில் பார்க்கலாம்.
"கண்ணகியின் மாண்மை இதிலேதான் வெளிப்படுகிறது. இத்தகைய கணவனிடம் அவள் பதிபக்தியோடு இருந்தது தான் சிறப்பு. அதனால்தான் அவள் இன்றும் போற்றப்படுகிறாள்; வணங்கப்படுகிறாள்."
யாருக்கு சார் வேண்டும் இந்தப் பெருமை? பொருளை கொடுத்தனுப்பாது பரிபாலனம் செய்திருந்தால் மாதவியின் தாய்க்கிழவி கேவலனை முதலிலேயே விரட்டியடித்திருப்பாளே. கேவலனும் கொலையுண்டிருக்க மாட்டானே. ஒரு வழியில் பார்த்தால் கண்ணகியின் இந்த சகிக்க முடியாத சகிப்புத் தன்மையும் அவனது கோர முடிவுக்குக் காரணம்.
மேலும் ஈ.வே.ரா. அவர்கள் சொன்னதற்காக நான் இதை ஆதரிக்கவில்லை. அவர் அவ்வாறு கூறியதைப் பற்றிக் கேள்விப்படுமுன்னரே என்னுள் எழுந்த கேள்விகள்தான் இந்தப் பதிவில் வந்துள்ளன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: இனிமேல் நான் கேவலன் என்றுதான் குறிப்பிடப் போகிறேன். அவ்வளவு கோபம் வருகிறது அந்தப் பாத்திரத்தின் மேல்.
பர்த்ருஹரி சொன்னதுபோல் சந்தர்ப்பம் கிடைக்கும்வரை எல்லோரும் பத்தினிகள் தான்//
ஜெயராமன் அவர்களே, இந்த வரிகளை கொஞ்சம் விளக்க முடியுமா? சந்தர்ப்பம் என்றால் என்ன? வீட்டை விட்டு, வெளியே வந்து கணவன் அல்லாத ஆணுடன் பேசினாலே "சந்தர்ப்பம்" கிடைத்துவிடுமா? பேசாமல் பத்துவயதானதும், சமையல் அறையைத்
தாண்டி, ஹாலுக்குக்கூட வரக்கூடாது என்று சட்டம் போட்டு, பெண்களின் பத்தினிதனத்தைக் காக்கலாமே?
உழா அவர்களுக்கு,
நீங்கள் தனியாக ஒரு விவாதத்தை துவக்குகிறீர்கள். இதற்கு டோண்டு அவர்களின் உடன்பாடு இருக்குமா என்பது சந்தேகம். இருந்தாலும், தன்னிலை விளக்கம் கொடுக்கிறேன்.
சந்தர்ப்பம் கிடைக்கும்வரை எல்லோரும் பத்தினிதான் என்றால், சந்தர்ப்பம் கிடைத்தவுடன் அவள் தரமிழப்பாள் என்பதல்ல. சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமையாதவரை அவள் பத்தினித்தனம் டெஸ்ட் செய்யப்படாதது என்று மட்டுமே என் அர்த்தம். இது பர்த்ருஹரியின் வாக்கியம். இதை நான் இங்கு குறிப்பிட்ட ஒரே காரணம், கோவலனிடம் கண்ணகி காட்டிய பதிபக்தி தான் அவளுக்கு கிடைத்த டெஸ்ட். அதில் தேர்ந்தாள், அவள் மனிதர் குல திலகமானாள்.
பாகவதத்தில் பல இடங்களில் பத்தினித்தன்மைக்கு பார்வதியை மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. லட்சுமியை அல்ல. இலக்குமி பத்தினி அல்ல என்பதால் அல்ல, பாம்புடன் மயானத்தில் விடமுண்டு ஆடும் கணவனுடன் வாழ்கிறாள் என்பதால், பார்வதி லட்சுமியை விஞ்சுகிறாள் மேற்கோள்களில். அவ்வாறே கண்ணகியும்.
மேலும், வற்புறுத்தி சந்தர்ப்பம் வராமல் காத்தால், பத்தினித்தனம் ஏற்படாது. தங்கள் வாதம் சரியல்ல.
ஆணும் பெண்ணும் ஒருமித்து வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு ஓரொருவர் குறைகளை ஏற்றுக்கொண்டு வாழும் இல்லறத்தை கொச்சைப்படுத்தும் இந்த பதிவு மிக வருத்தம் அளிக்கிறது.
தவறு செய்யாத ஆண் இல்லை. கடைசியில் கோவலன் மனம் வருந்தி திரும்பிய பின் அவள் நடத்த விருந்த நல்ல இல்லறம் அனியாயமாய் பறி போனது. பொருமையினாலும், அன்பினாலும் கோவலனை திருத்தி, அவனை நல்வழிப்படுத்திய கண்ணகியை இவர்கள் புரிந்து கொண்டது இவ்வளவுதான்.
இவர்களின் வழி கேட்டால் ஒரு குடும்பமும் நிம்மதியாக இருக்க முடியாது.
இதை மேலும் இவ்விடம் தொடர விழையவில்லை.
நன்றி
உஷா அவர்களே,
நானும் நீங்கள் குறிப்பிடும் அந்த வரிக்கு ஆட்சேபம் தெரிவிக்க நினைத்து மறந்து விட்டேன். இப்போது செய்து விடுகிறேன்.
அரசர் பத்ரஹரி தன்னுடைய அனுபவத்தால் நொந்துப் போய் கூறியது அது. அதே அரசர் தன்னுடைய அந்தப்புரத்தில் வைத்திருக்கும் பல மனைவிகளை பற்றி என்ன கூறுவார்? எது எப்படியாயினும் அது ஆணாதிக்க வரியேயாகும். அந்தப்புரத்தில் நூற்றுக்கணக்கான மனைவியர் இருப்பர். அத்தனை பேரையும் அரசன் ஒருவனால் திருப்திப்படுத்த முடியுமா? அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட மனைவிகள் ஒரு ஆசையும் இல்லாதிருக்க வேண்டுமாம். என்ன போங்கு ஐயா இது?
எது எப்படியாயினும் எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்காமல் கேஸ் பை கேஸ்தான் பார்க்க வேண்டும் என்பேன் நான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
திரு டோண்டு அவர்களுக்கு,
தாங்கள் எழுதியுள்ளீர்கள்::
யாருக்கு சார் வேண்டும் இந்தப் பெருமை? பொருளை கொடுத்தனுப்பாது பரிபாலனம் செய்திருந்தால் மாதவியின் தாய்க்கிழவி கேவலனை முதலிலேயே விரட்டியடித்திருப்பாளே.
பெருமைக்காகவும் தன்மானத்திற்காகவும் தன் உலக சுகங்களை இழந்தவர்கள்தான் சான்றோர்கள். தன் பெயர் சிறக்க வேண்டும் என்று தர்மமான வழிகளையும் துறந்து கஷ்டப்பட்டவர்கள்தான் காவிய நாயகர்கள். இராமனுக்கு அரசாள உரிமையில்லையா. தர்மமில்லையா. எத்தனை முறை எல்லோரும் சொல்லியும் அவன் ஏன் இந்த "பெருமை" வழியை மேற்கொண்டான். ஏன் அடாத செயலை (தேவியை காட்டுக்கு துறத்தல்) நாட்டு மக்களிடை நற்பெயருக்காக ஏற்றான். சிறிது எண்ணிப்பாருங்கள்.
கண்ணகி இங்குதான் சிறக்கிறாள்.
அவள் வழி என்றும் நன்மை பயக்கும் பொருமை வழி. கடைசியில் கோவலன் திருந்தி வந்து அவள் தவத்துக்கு பலன்தானே.
நன்றி.
நான் ஜெயராமன் அவர்களுக்கு பதிலளித்துக் கொண்டிருந்த போது அவருடைய அடுத்தப் பின்னூட்டம் வந்திருக்கிறது. ஆகவே அதற்கான பதில் இதோ.
"நீங்கள் தனியாக ஒரு விவாதத்தை துவக்குகிறீர்கள். இதற்கு டோண்டு அவர்களின் உடன்பாடு இருக்குமா என்பது சந்தேகம்."
உடன்பாடு இருந்ததால்தான் எனது முந்தையப் பின்னூட்டம் இட்டேன்.
டெஸ்ட் பென்ணுக்குத்தானா? ஆணுக்கில்லையா? ஏகபத்தினி விரதன் என்பதும் சந்தர்ப்பம் வரும்வரை என்று கூறலாமே. என் அப்பன் ராமபிரானைத் தவிர்த்து யார் அந்தச் சோதனையில் வெற்றி பெற்றிட முடியும்?
நான் இப்பதிவில் கூறவந்ததே, கண்ணகி தும்பை விட்டு வாலைப் பிடித்திருக்கிறாள். முதலிலேயே குடும்ப செல்வம் பறிபோகாமல் தடுத்திருக்க வேண்டும், அதை செய்யாது கணவன் இறந்தவுடன் ஊரையே எரிக்கிறாள். அத்தனையும் கேவலனுக்காக என்பதுதான் என் கோபத்துக்குக் காரணம்.
"தன் பெயர் சிறக்க வேண்டும் என்று தர்மமான வழிகளையும் துறந்து கஷ்டப்பட்டவர்கள்தான் காவிய நாயகர்கள். இராமனுக்கு அரசாள உரிமையில்லையா. தர்மமில்லையா. எத்தனை முறை எல்லோரும் சொல்லியும் அவன் ஏன் இந்த "பெருமை" வழியை மேற்கொண்டான். ஏன் அடாத செயலை (தேவியை காட்டுக்கு துறத்தல்) நாட்டு மக்களிடை நற்பெயருக்காக ஏற்றான். சிறிது எண்ணிப்பாருங்கள். கண்ணகி இங்குதான் சிறக்கிறாள்."
என் அப்பன் ராமன் தர்மத்துக்காக செய்ததை தயவு செய்து இங்கு கொண்டு வராதீர்கள். தன் தந்தை வாக்கு தவறாதவர் என்பதைக் காக்க வேண்டும். அதே சமயம் யாருக்காக நாட்டை விட்டுக் கொடுத்தான்? அருமைத் தம்பி பரதாழ்வானுக்கு. ஒரு விதத்தில் ராம ராஜ்யத்தைவிட பரத ராஜ்யமே சிறந்தது என்பதை ராமனே ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறான்.
அன்னை சீதையை காட்டுக்கனுப்பித்தது... வேண்டாம் அது இங்கு வேண்டாம்.
ஆனால் இங்கு கண்ணகியின் கதை வேறு. வீட்டுத் தலைவன் பரத்தை வீட்டில் குடியிருக்க அங்கு அவனுக்கு இவள் பொருளை அனுப்பிவைத்தது பயித்தியக்காரச் செயல்.
"அவள் வழி என்றும் நன்மை பயக்கும் பொருமை வழி. கடைசியில் கோவலன் திருந்தி வந்து அவள் தவத்துக்கு பலன்தானே."
இதை நீங்கள் நிஜமாகவே நம்புகிறீர்களா? மாதவியுடன் கானல் வரிப் பிணக்கால்தான் இங்கு வந்தார் வாத்யார். அத்தோடு பொருள் வேறு காலி. இன்னும் ஒரு நாள் அங்கிருந்தாலும் தாய்க்கிழவியிடம் நிஜமாகவே செருப்படி பட்டிருப்பான். (அடாடா அது நடக்காமல் போயிற்றே, ஒரு தடவைகூட செருப்படிப்படாமலேயே போய்ச் சேர்ந்தானே).
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்புடன்,
டோண்டு ராகவன்
ராகவன் அவர்களுக்கு,
தங்கள் மேலான பதிலுக்கு நன்றி.
தங்களின் கண்ணகி மற்றும் கோவலன் வெறுப்பு தங்களின் ராம்பக்தியால் மட்டுமே மிகைகிறது. எதிலும் தீவீரம் காண்கிறேன்.
இச்சூழ்நிலையில் தங்களிடம் நடுநிலை எதிர்பார்க்கவில்லை.
ஆனாலும்.... என் விளக்கங்கள்....
1.தாங்கள்: உடன்பாடு இருந்ததால்தான் எனது முந்தையப் பின்னூட்டம் இட்டேன்.
பதில்: தங்கள் பின்னோட்டத்தை பார்க்கும் முன் எழுதிய வரிகள் அவை.
2. தாங்கள்: டெஸ்ட் பென்ணுக்குத்தானா? ஆணுக்கில்லையா? ஏகபத்தினி விரதன் என்பதும் சந்தர்ப்பம் வரும்வரை என்று கூறலாமே. என் அப்பன் ராமபிரானைத் தவிர்த்து யார் அந்தச் சோதனையில் வெற்றி பெற்றிட முடியும்?
பதில்: ஏன். டெஸ்ட் நிச்சயமாக ஆணுக்கும்தான். இதில் சந்தேகமே இல்லை.
ஏன், அந்த காவியத்திலேயே இலக்குவன், அனுமன் எல்லோரும் டெஸ்டில் வெற்றி பெறவில்லையா. தங்கள் ராம பக்தி தங்கள் கண்ணை மறைக்கிறது.
3. தாங்கள்: முதலிலேயே குடும்ப செல்வம் பறிபோகாமல் தடுத்திருக்க வேண்டும், அதை செய்யாது கணவன் இறந்தவுடன் ஊரையே எரிக்கிறாள்.
பதில்: இரண்டும் வெவ்வேறு அடிப்படைகள். இரண்டையும் குழப்ப வேண்டாம். தடம் பிறண்ட கணவனை அன்பாலும், பொறுமையாலும் திருத்த முற்பட்டது ஒரு சாய்ஸ். (தாங்கள் ஒப்பவில்லைதான்!). ஆனால், தன் குடும்பத்தில் கிடைத்த திருட்டு பழி போக போராடியது வேறு ஒரு விஷயம். இரண்டுக்கும் சம்பந்தமில்லை.
4. தாங்கள்: என் அப்பன் ராமன் தர்மத்துக்காக செய்ததை தயவு செய்து இங்கு கொண்டு வராதீர்கள்.
பதில்: 'தர்மத்துக்காக" என்ற தங்கள் வார்த்தையை மறுபடி யோசித்துப் பாருங்கள். குடும்பத்தினரால் அநீதி இருவருக்கும் (ராமன், கண்ணகி) பொது. போராடாமல் ஏற்று பெருமை சேர்த்ததும் பொது.
ஆனால், கண்ணகியிடம் உள்ள காழ்ப்புணர்ச்சி ராம்பக்தியினால் இங்கு தோன்றவில்லை. ராமனும், கண்ணகியும் இருவரும் செய்தது சான்றோர் வழி செயல்.
5. தாங்கள்: அதே சமயம் யாருக்காக நாட்டை விட்டுக் கொடுத்தான்? அருமைத் தம்பி பரதாழ்வானுக்கு. ஒரு விதத்தில் ராம ராஜ்யத்தைவிட பரத ராஜ்யமே சிறந்தது என்பதை ராமனே ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறான்.
பதில்: விசித்திரமான வாதம். ஒருவேளை, பரதன் கெட்டவனாக இருந்தால், ராமன் காட்டுக்கு போயிருக்க மாட்டான் என்கிறீர்களா. நான் அவ்வாறு நினைக்கவில்லை. பரதனின் தரம் இங்கே விஷயமில்லை.
6. தாங்கள்: அன்னை சீதையை காட்டுக்கனுப்பித்தது... வேண்டாம் அது இங்கு வேண்டாம்.
பதில்: தர்மசங்கடமானதால் தாங்கள் தவிர்க்கிறீர்கள். ராமன் செய்தது சரி. கண்ணகி செய்ததும் சரி. இவர்கள், யுக புருஷர்கள்.
6. இதை நீங்கள் நிஜமாகவே நம்புகிறீர்களா?
பதில்: நிச்சயமாக நம்புகிறேன். காமமும், காசும் கரை கண்டபின் காதலாகி கசிந்த மனைவிதான் அடைக்கலம். எத்தனை எத்தனை தடவை இது நடக்கிறது என்று சொல்லவும் வேண்டுமா??
தங்கள் விவாதத்துக்கு நன்றி.
"வ்ருத்தா நாரி பதிவ்ரதா' என்கிற வரியைப் பற்றி வலைப் பதிவாளர்கள் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்.
பெண்களைப் பற்றி உயர்வான கருத்துக்களை முன்வைத்த போதும் நமது இலக்கியங்கள் பல (வட, மற்றும் தேனணைய தென்மொழிகளில்) பெண்களின் கற்பை சந்தேகப்படக்கூடிய ஒன்றாகவே கருதுகின்றன. இதற்குக் காரணம் அவற்றை எழுதியவர் பெரும்பாலும் ஆண்களாகவிருந்ததுதான். பெண்கள் தற்காலத்தில் எழுதுகின்ற கதை, கட்டுரைகளில் இதே பல்லவிதான் -- ஆண்கள் ஒழுங்கீனர்களாக கருத்துருவாக்கப்படுகிறார்கள்.
ஆணோ, பெண்ணோ கற்பு என்ற கருத்து பின்வரும் காரணங்களால் இருபாலருக்கும் தேவைப்படுகிறது:
1. மனவியல் ரீதியான காரணங்கள்
பொஸெஸிவ்னெஸ் என்பது இருபாலருக்கும் பொதுவானது. எனக்கு உரிமையான ஒன்றை வேறு எவரும் உபயோகிக்கக் கூடாது என்கிற கருத்து.
2. பொருளாதார காரணங்கள்
நான் சம்பாதித்த பொருட்களை என்னுடைய ரத்தம் மட்டுமே உபயோகிக்க வேண்டுமென்ற உயிரியல் உந்துதல்.
3. சமூகக் காரணங்கள்
அ. அதிகளவு பலமும், திறமையும், அழகும், புத்திசாலித்தனமுமுள்ள ஒருவனையே/ஒருத்தியையே அனைவரும் விரும்புவர். ஒருவரது மனைவி அல்லது கணவன் வேறொரு நபரை விரும்பினால் அது சம்பந்தப்பட்ட நபருடைய இழப்பு. சம்பந்தப்பட்டவரிடம் குறையுள்ளது.
ஆ. சமூகக் கலப்பு ஏற்படுவதால் அச்சமூகம் தனது தனித்துவதை இழக்கிறது என்ற கருதுகோள். தனித்துவத்தை இழப்பதே அழிவு எனக் கருதும் ஸர்வைவல் இன்ஸ்டிங்க்ட்.
மேலே சொன்ன அனைத்து விஷயங்களும் மனிதரால் உருவாக்கப்பட்ட கருதுகோள்களாதலால் அவை உண்மையல்ல ( நிலையானதில்லை). உண்மையின் பலமுமில்லை. இயற்கையின் (தெய்வத்தின்) சக்திக்கு உட்பட்டு வேறொரு ஆணையோ, பெண்ணையோ நாடுகிறார்கள்.
சமூக, பொருளாதர, மனோமய நிறுவனங்களை (கற்பிதங்களை) உறுதி செய்யும் முயற்சிகளில் தலையானது கற்பு. இம்மூன்றுமே கருத்துருவாக்கங்கள் என்பதால் மீறுபவர்களும், மீறாதவர்களும் குற்ற உணர்வாலும், இயலாமையினாலும் துன்பமடைகிறார்கள்.
இதனால் தவறில்லையென சம்பந்தப்பட்ட அனைவரும் நினைப்பார்களானால் யாருக்கும் தொல்லையில்லை. உதாரணமாக தங்கள் துணையை விருந்தினரோடு பகிர்ந்து கொள்கிற எஸ்கிமோக்கள், நம்மூரில் கண்டும் காணாதது போலவிருக்கும் கணவன் மற்றும் மனைவியர், தங்களுடைய முதல் குழந்தை ஒரு புனிதரின் குழந்தையாக இருக்க வேண்டும் எனக் கருதுகிற தம்பதியர், காமம் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு முறை எனக் கருதி ரகசிய குழுக்களாக செயல்படும் மனிதர்கள் என இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
வாய்ப்பும், மூடும் ஒரே சமயத்தில் அமையப் பெறாதவர்கள் கற்புள்ளவர்களாக இருக்கிறார்கள். பர்த்ருஹரியின் கருத்தும் அதுவாக இருக்கலாம்.
இதில் மூட் என்பது அம்மனிதர்களின் கருத்துருவாக்கங்களை அடிப்படையாகக் கொண்டது. எத்தனை வாய்ப்பு கிடைத்தாலும் இதில் ஈடுபடுவது தன் துணைக்கு செய்யும் த்ரோகம் என்கிற நினைப்பாலும் உண்டு. இவர்களுக்கு இந்த நினைபே அவ்வாய்ப்பின் மேல் அருவருப்பை உருவாக்குகிறது. ஆனால், இவர்களும் எப்போதும் இந்த உணர்வோடு இருப்பார்கள் என்று கூற இயலவில்லை.
உடலால் பலர் கற்புள்ளவர்கள்தான். மனதாலும் கற்போடு இருப்பவர்கள் மிக மிக சிலரே.
99 சதவீத மனிதர்கள் கற்பற்றவர்கள். மீதி இருப்பவர்கள் பொய்யர்கள். இவர்களுக்கு தாங்கள் சொல்வது பொய் என்பது தெரியாமலும் இருக்கலாம்.
ஏனெனில் கற்பு என்ற ஒன்றுதான் இல்லையே.
எது நடந்தலும் ஒரு உறவில் அன்பு நிலைத்திருக்குமானல் அதுவே சந்தோஷமானது. புனிதாமனது என்ற ஒன்று உலகில் இல்லை. தேவைகளே எந்த ஒரு விஷயத்திலும் அதன் தரத்தை நிர்ணயிக்கிறது.
சிறப்பானப் பின்னூட்டம் ம்யூஸ் அவர்களே. நான் ஆண் பெண் கற்புநிலை பற்றிப் போட்ட மூன்று பதிவுகளின் சாரத்தை இங்கே கொடுத்திருக்கிறீர்கள்.
பெண் கர்ப்பமடைகிறாள், ஆண் அடைவதில்லை. பெண் பெறும் குழந்தைகளுக்கு தந்தை யார் என்று சந்தேகத்துக்கிடமில்லாமல் தெரிய வேண்டியது சமுதாய நிர்ப்பந்தம். ஆகவே பெண்ணுக்கு அத்தனைக் கட்டுப்பாடுகள். உடல் உறவு என்பது குழந்தை பெறுவதற்கே என்றக் கட்டுப்பாடு. ஆகவே பெண் மேல் இருந்தக் கட்டுப்பாட்டை புரிந்து கொள்ள முடிகிறது.
அறுபதுகளில் அமெரிக்காவில் கருத்தடை மாத்திரை புழக்கத்துக்கு வந்தபோது அது வரை அடக்கி வாசித்தப் பெண்கள் உடலுறவில் தீவிரமாக ஈடுபட, ஆண்கள் திக்குமுக்காடிப் போயினர் என்பது சரித்திர உண்மையே.
இன்னொறு விஷயம் சமுதாயக் பழக்க வழக்கங்கள் பற்றியது. மகாபாரதத்திலேயே பல பிறப்புகள் தற்கால அளப்பீட்டின்படி முறை தவறியவையேயாகும்.
மீண்டும் பாராட்டுக்கள் ம்யூஸ் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
காதல், காமம் என்ற இரண்டிலும் நேரடி அனுபவமில்லாவிட்டாலும், சிந்தித்ததை எழுதினேன்.
தாங்கள் என்னை பாராட்டியது மிகவும் சந்தோஷமாகவுள்ளது. இதை நான் ஒரு ஜுனியர் (தொழிற்முறையிலும்) என்ற வகையில் ஆசிர்வாதமாக எடுத்துக்கொள்கிறேன்.
என்னுடைய ப்ளாகிலும் இதை ஒரு பதிவாகவே இட்டுள்ளேன்.
என் ஆசிகள் ம்யூஸ் அவர்களே. உங்கள் பதிவில் பின்னூட்டமாக என்னுடைய முந்தைய பதிலையே இடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆதிரை அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://ullal.blogspot.com/2006/06/blog-post_09.html
இது சம்பந்தமாக பார்க்க என் பதிவு: http://dondu.blogspot.com/2006/04/100.html
இப்பின்னூட்டத்தை என் தனிப்பதிவிலும் இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/100.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
திரு அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://periyaarr.blogspot.com/2006/08/2.html
இந்த விஷயத்தில் நான் பெரியார் அவர்கள் கூறியதுடன் 100% ஒத்துப் போகிறேன்.
முக்கியமாக கேவலனுக்காக (ஸ்பெல்லிங் தவறு இல்லை) மெனக்கெட்டு கண்ணகி என்னும் உன்னதப் பெண்மணி பட்ட கஷ்டங்கள் கண்ணில் ரத்தம் வரவழைக்கக் கூடியவை. இந்த அழகில் கேவலன் ஓர் ஆண்டு மட்டுமே மாதவியுடன் இருந்தான் என்று ஒரு மதிப்புக்குரிய வலைப்பதிவாளர் சப்பை கட்டு கட்டுகிறார். பல ஆண்டுகள் என்று இன்னொருவர் கூறியதை இவர் ஓராண்டு என்று திருத்துகிறாராம். என்ன ஆராய்ச்சி, புல்லரிக்குதய்யா மனம்.
ஏன், கண்ணகி ஓராண்டு வெளியே சென்றிருந்தால் இவர் என்ன கூறியிருப்பாராம்?
அபாயகரமான அதர் ஆப்ஷனை வைத்திருக்கும் இப்பதிவில் இந்தப் பின்னூட்டம் இட்டிருப்பது உண்மையான டோண்டுதான் என்பதைக் காட்டும் முகமாக இதன் நகலை என்னுடைய சிலப்பதிகாரம் சம்பந்தமானத் தனிப்பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/100.html
அதில் இப்பின்னூட்டம் வருகிறதா என்பதைப் பார்த்து மட்டும் மட்டுறுத்தல் செய்யவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மகேந்திரன் அவர்களது இப்பதிவில் நான் இட்ட இப்பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://paarima.blogspot.com/2006/08/blog-post_27.html
"இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ள வேண்டும்? நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசையுடையவன். இதற்கு முட்டுக் கட்டையாகப் பார்ப்பன சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ, தப்பாகவோ கருதுகிறேன்."
இவர் தப்பாகக் கருதுவதற்கெல்லாம் பார்ப்பனர்கள் நடனமாட வேண்டுமா இது என்ன போங்கு?
தமிழர்கள் தலைமை ஏற்கத் தகுதியற்றவர்கள், ஆகவே தான் தலைமை ஏற்றதாகவும், தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்றும், தமிழ்நாட்டையாவது ஆங்கிலேயர்களே ஆள வேண்டும் என்றும் கூறும்போது இவர் மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று யோசித்தாராமா?
1965-ல் அரசியல் சட்ட ஷரத்தின்படி இந்தி ஒரே ஆட்சிமொழியாக வந்து விடும் அபாயக்கட்டத்தில் தமிழ்நாடே ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்திய போது இவர் மட்டும் அப்போராட்டத்தை கேவலம் தனது அரசியல் நிலையான காங்கிரஸ் ஆதரவுக்காக எதிர்த்தாரே, அப்போது நினைத்தாராமா அவர் மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பர் என்று?
குழப்பத்தை விளைவிக்கும் அதர் ஆப்ஷனை உங்கள் வலைப்பூ வைத்திருப்பதால் இந்தப் இன்னூட்டத்தை உண்மையான ராகவனே இட்டான் என்பதைக் காட்டும் வண்ணம் அதன் நகலை எனது ஈவேரா அவர்களை ரெஃபர் செய்த இந்தப்பதிவில் பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/100.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
மகேந்திரன் அவர்களது இப்பதிவில் நான் இட்ட இப்பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://paarima.blogspot.com/2006/08/blog-post_27.html
"மேலும் 1965 விசயத்தை மட்டும் நீங்கள் எங்கே போனாலும் எதற்கு பெரியார் விஷயத்தில் சொல்கிறிர்கள் என்பது கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமா?
ஒருவேளை பெரியார் செய்த ஒரே தவறாக அது இருக்கிறது என்று நீங்கள் கருதுகிறீர்களோ என மற்றவர்கள் நினைக்கக் கூடும் :))"
நான் என்ன கருதுகிறேன் என்று மற்றவர் நினைப்பது அப்புறம் இருக்கட்டும், நீங்கள் எழுதியதையும் தங்கமணி அவர்கள் அதை மட்டும் தன் பதிலில் குறிப்பிடாது சுத்தமாக ஒதுக்கிவிட்டதைப் பார்க்கும்போது நீங்கள் கூட பெரியார் அவர்கள் 1965-ல் செய்தது தவறே என்ற நிலைப்பாட்டுக்கு ஸ்லோ அண்ட் ஸ்டெடியாக வந்து கொண்டிருக்கிறீர்களோ என்ற நினைப்பு அடிக்கடி பலருக்கும் வரும் என்றே நான் நினைக்கிறேன். :))))))
குழப்பத்தை விளைவிக்கும் அதர் ஆப்ஷனை உங்கள் வலைப்பூ வைத்திருப்பதால் இந்தப் இன்னூட்டத்தை உண்மையான ராகவனே இட்டான் என்பதைக் காட்டும் வண்ணம் அதன் நகலை எனது ஈவேரா அவர்களை ரெஃபர் செய்த இந்தப்பதிவில் பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/100.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment