காமராஜர் அவர்களைப் பற்றி அடுத்த பதிவு போடுவதற்காக இணையத்தைத் தேடிக் கொண்டிருந்தபோது எனக்கு இந்த அருமையான இடுகை கிடைத்தது. சம்பந்தப்பட்டவர்களிடம் நான் காமராஜ் அவர்களைப் பற்றிப் போடும் பதிவுக்காக கண்ணதாசனின் இந்த கவிதையானப் பாடலைப் பற்றிய இடுகையை உபயோகப்படுத்த அனுமதி கோரி பெற்றேன். நிலா அவர்களுக்கு என் நன்றி.
முதலில் இந்த இடுகையில் கண்ட பொருளை பதிவுக்கு மேலோட்டமாகத்தான் உபயோகிக்க எண்ணினேன். பிறகு அருமையான இந்த இடுகையில் எதை எடுக்க, எதை விட என்று மயங்கியதால், இப்பதிவையே அதற்கு அர்ப்பணிக்கிறேன். மேலும் இத்தொடரின் தலைப்பின் வரியும் நான் முதல் பகுதியில் கூறியபடி கண்ணதாசன் பாடல்தானே. இப்போது இடுகைக்குப் போவோமா? இப்பாடல் ஒரு வரிசையில் வருவதால் சில முன்குறிப்புகள் மற்றும் பின் குறிப்புகள் உள்ளன. அவற்றைத் தவிர்த்து இடுகையைத் தருகிறேன். காமராஜர் அவர்களைப் பற்றி அடுத்த இடுகையில் தொடர்கிறேன். தலைப்பைக் கூட மாற்றியிருக்கிறேன்.
"நான் தெரிவு செய்த பாடல் டி.எம்.எஸ்., சுசீலா குரலில் ஒலித்த "அந்த சிவகாமி மகனிடமும் சேதி சொல்லடி" எனும் பாடலாகும். இதற்குக் காரணங்கள் இரண்டு. முதலாவது இந்த பாடல் பிறந்ததன் பின்னணியாகும்.காங்கிரஸ் கட்சியிலிருந்து கண்ணதாசன் பிரிந்த காலத்தில், கர்ம வீரர் காமராஜரிடத்தில் ஒரு தனி மரியாதை வைத்திருந்த கவியரசர், அவரை மனதில் நிறுத்தி எழுதிய பாடலாம். அதாவது காமராஜரின் அன்னையின் பெயர் சிவகாமியாகும். அத்தோடு அழகான காதல் வரிகள் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றன.
காதலனின் பிரிவால் காதலி வருந்துகிறாள். அவனை எண்ணி மிகவும் மனம் நொந்து போகிறாள். அங்கே பிறக்கிறது அந்த அழகிய தமிழ்ப்பாடல்:
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி?
வேலன் இல்லாமல் தோகை ஏதடி?
தோழியின் மூலம் தன் காதலனுக்குச் சேதி அனுப்புகிறாளாம். தன் தலைவனிடம் போய்த் தன்னை மணமுடிக்க நாள் குறிக்கும்படிக் கூறுகிறாள். அது மட்டுமா?
மயிலின் தோகை எவ்வளவு அழகானது? அதன் வர்ணங்கள் உயிர் பெறுவது அந்தத் தோகை விரிக்கப்படும் போதே. ஆனால் அந்த மயில் தனது முழு அழகையும் தன் தலைவனான அந்த முருகப் பெருமான், வேலன், அவனுக்கு முன்னால் தானே காட்சிக்கு வைக்கும், அவனில்லா விட்டால் எப்படி அங்கே தோகையின் அழகு பெருமை பெறும்? அதே போலத் தன் தலைவனின் முன்னால் மட்டுமே மலரும் தன் அழகிற்கு, மயிலின் தோகையை ஒப்பிடுகிறாள் அந்தத் தலைவி.
தொடருகிறாள் காதல் வேதனையில் துவளும் தலைவி,
கண்கள் சரவணன் சூடிடும் மாலை
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை
பெண்ணெனப் பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல் வேறென்ன வேலை
அவளுடைய விழிகள் பூ விழிகள் தானே, அவை மலர்வது எதற்காக? அவளது தலைவன் அவைகளைக் கோர்த்து மாலையாய் அணிந்து கொள்வதற்கே, அது மட்டுமா? கண் விழிகள் மலர்கள் என்றால் அவைகளைத் தாங்கி நிற்கும் கன்னங்கள் வேறென்ன சோலைதானே!
தன்மீது உள்ள காதலினால் உருகும் காதலியின் நிலையறிந்து காதலன் மனதில் உருவாகும் பாடல் வரிகள்
மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
நிலப் பரப்புக்களிலே உயர்ந்ததாம் மலையின் உச்சியில் பிறந்த சந்தனம், அதனடியில் வாழும் மனிதனின் மார்புக்குத் தானே சொந்தமாகிறது. அத்தகைய உயரிய இதயத்தைக் கொண்ட அவன் காதலியின் இதயம் தனக்கே சொந்தம் என்று பெருமையில் பூரிக்கிறான் தலைவன்.
தலைவனின் பதில் கேட்டுப் பூரித்த மங்கையவள் மனதில் ஒரு சிறு சந்தேகம், தனது இதயத்தை மலையின் உச்சிக்கும், தன்னை அதன் அடிவாரத்தில் இருக்கும் மனிதனுக்கும் ஒப்பிட்ட அந்தத் தலைவனின் நிலை உயர்ந்து வசதி பெருகி விட்டால், ஒருவேளை தன்னை மறந்து விடுவானோ?தாம் நெருங்கி விட்டால் தமக்குள் இருக்கும் அந்தஸ்து பேதமே தம்மைப் பிரித்து விடுமோ? துடிக்கும் இதயத்துடன் வினவுகிறாள்!
நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ?
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ?
திடுக்கிட்டு விட்டான் அவன்! என்ன சந்தேகம் வந்து விட்டதோ தலைவிக்கு, தனது காதலின் மீது? அறுதியாகக் கூறுகிறான் தலைவன்
காலம் மாறினால் காதலும் மாறுமோ?
மாறாது! மாறாது இறைவன் ஆணை
கண்னுக்குத் தெரியாமல் காவல் இருக்கும் அந்த அனைவருக்கும் பொதுவான இறைவனைத் துணைக்கு அழைக்கிறான்.
மகிழ்ச்சியுடனே அவளும் இணைகிறாள்
என்றும் மாறாது! மாறாது! இறைவன் ஆணை
திரும்பவும் அவளுக்குத் தீர்மானமாகச் சொல்கிறான்.
இந்தச் சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி
இன்னும் சேர நாள் பார்ப்பதேனடி?
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி?
தோகையில்லாமல் வேலன் ஏதடி?
மிகவும் துணிச்சலாக மனதோடு சேர்ந்து விட்ட நீ என்னுடன் சேர்வதற்கு நாள் பார்க்க வேண்டுமா என்ன? என்னுடன் சேர்ந்து நின்றால் பிறகென்ன பிரிவு எனக் காதலன் எனும் அதிகாரத் தோரணையில் காதலிக்கு ஆறுதலளிக்கிறான்."
மேலும் சில தகவல்கள் இப்பாடலைப் பற்றி.
இப்பாடல் வந்த படம் "பட்டினத்தில் பூதம்", சமீபத்தில் அறுபதுகளில் வந்தது (1966?). ஜெயசங்கர், கே.ஆர்.விஜயா, நாகேஷ், ஜாவர் சீத்தாராமன் (ஜீபூம்பா) ஆகியோர் நடித்தது. நேயர் விருப்ப நிகழ்ச்சிகள் விடாமல் கேட்கப்பட்டப் பாடல். அறுபதுகள் சினிமாப்பாடல்களின் பொற்காலம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்…
-
நாம் இந்த ஒரு தலைமுறைக்காலமாகத்தான் அடிப்படைப் பொருளியல் விடுதலையை
அடைந்துள்ளோம். நம் முந்தைய தலைமுறைக்கு அன்றாடமே வாழ்க்கை. உழைப்பே அதன்
நடைமுறை. நிரந்தரம...
11 hours ago
6 comments:
மிக அருமையான பாடல் டோண்டு சார்.
கவியரசு கண்ணதாசன் மிக உணர்ச்சிவசப்படுபவர்னு நல்லாவே புரிஞ்சுக்க முடியுது.
அன்பன்,
முகம்மது யூனுஸ்
எனக்கும் இந்தப் பாட்டு புடிக்குங்கோ. நான் பொண்ணு பாக்கப் போனபோது இந்தப் பாட்ட கேட்டுதான் மயங்கி அந்தப் பொண்ணை கட்டினேனுங்கோ.
பொண்ணு பாத்த போது நல்ல வேளையா என்னோட இந்தச் நிக்நேம் பொண்ணு வூட்டுக்காரங்களுக்கு தெரியாதுங்கோ. இல்லேன்னா என்னோட எதிர்க்கால மச்சான், மச்சினிச்சிங்க எல்லாம் அதைச் சொல்லியே கோட்டா பண்ணியிருப்பானுங்கோ.
ஏன்னாக்க பஜ்ஜி சொஜ்ஜில்லாம் பொண்ணு பாக்கச்சே கொடுத்தாங்க இல்லே.
பஜ்ஜி
நீங்கள் சொல்வது உண்மைதான் முகம்மது யூனூஸ் அவ்ர்களே. உணர்ச்சிவசப்பட்டால்தான் அவன் கவிஞன். அவனுக்குத்தான் கவிதையே வரும்.
ஒருவரின் துடிப்பினிலே வருவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே வருவது மழலையடா
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்லா தமாஷா பேசறீங்க பஜ்ஜி சார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அக்கட்டுரையை நானும் படித்தேன் நடராஜ் அவர்களே. திருவல்லிக்கேணி நான் பிறந்து, வளர்ந்த ஊர்.
சுதாங்கன் எழுதியதை அனுபவித்து படிக்க முடிந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்தப் பதிவில் இருக்கும் அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்ற பாடல் பிறந்த கதை வேறுவிதமாகவும் பல புத்தகங்களில் நான் படித்திருக்கிறேன். அதாவது சொல்லின் செல்வர் திரு.ஈ.வி.கே.சம்பத் அவர்கள் தி.மு.கவிலிருந்து விலகி தமிழ்த் தேசியக் கட்சியைத் துவக்கினார். இந்தக் கட்சியில் திரு.சம்பத் அவர்களோடு கவியரசு கண்ணதாசன், நெடுமாறன் இவர்களும் இருந்தனர். கட்சியை ஆரம்பித்தாலும் பெரியாரின் அனுக்கிரகம் கிடைக்காமலும், மூன்றே மூன்று பேரின் முக விலாசத்தை மட்டுமே வைத்துக் கொண்டும் சம்பத்தால் கட்சியை நடத்த முடியாத சூழல். இந்தச் சமயத்தில்தான் பேசாமல் காங்கிரஸ் கட்சியில் மூவருமே சேர்ந்துவிடுங்கள் என்று சம்பத்தின் நலம் விரும்பிகள் அவருக்கு அட்வைஸ் செய்யத் துவங்கினர். காமராஜரை எப்படி அப்ரோச் செய்வது என்பது புரியாமல் சம்பத் தவித்துக் கொண்டிருந்தபோது கண்ணதாசன்தான் அந்தத் திருப்பணியைத் தனது தெனறல் இதழில் கவிதை மூலமாகத் தெரியப்படுத்த ஆரம்பித்தார். இதற்கு முரசொலியில் கலைஞர் ஓணான் வேலி தாண்டப் போகிறது என்று பதில் கவிதை எழுத இதற்கு கவியரசும் பதில் எழுத.. கவிதைப் போர் அந்தக் காலத்தில் பிரபலமானது. இப்படியொரு சூழ்நிலையில் கண்ணதாசன் இந்தப் படத்திற்கு பாடல் எழுதும்போது இந்த வரிகளை கையாண்டதாக திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் சொல்லி ஒரு புத்தகத்தில் படித்தேன். இதற்குப் பின் தமிழ்த் தேசியக் கட்சி காங்கிரஸ¤டன் இணைந்தது. திரு.சம்பத்தும் விரைவில் இறந்து போனார். இதுதான் இந்தப் பாடல் பிறந்த கதை.
Post a Comment