இந்த தவிர்க்க வேண்டிய நபர்கள் பற்றிய ஐந்தாம் பதிவில் ஒரு அடி மேலே எடுத்து வைக்கிறேன். சிலர் கேட்கலாம், ஐயா, நான் தவிர்க்க வேண்டிய நபர் எனக் கருதுபவர் என் அலுவலகத்தில் எனது டீமில் எனது சக உறுப்பினர். அவர் வேலை என்னவென்றால் எந்தப் பிரச்சினை வந்தாலும் தான் அதற்கு பொறுப்பில்லையென்றும், குழுவில் உள்ள மற்றவர்தான் காரணம் என்றும் எப்போதும் கூறிக் கொண்டேயிருப்பார். அவரது கூற்றுக்களில் சில உதாரணங்கள்:
1. பிரச்சினை வந்த அன்று நான் லீவில் இருந்தேன். நான் இருந்திருந்தால் அது நடக்காமல் தடுத்திருப்பேன்.
2. இந்த கோப்பு பற்றி பேசும்போது நீங்கள் எல்லாம் சரியாக இருக்கிறது என கூறினீர்கள். அதை நான் நம்பி விட்டேன்.
3. சரி நாந்தான் சொன்னேன் எல்லாம் சரியாக இருக்கிறது என்று. நீங்கள் அதை சரி செய்து பார்த்திருக்க வேண்டாமா? எனக்கு இந்த கோப்பை கொடுத்தவர் எல்லாம் சரியாக இருக்கிறது என்று சொன்னார். அவரை நான் நம்பி விட்டேன். (இது எப்படி இருக்கு?)
இந்தப் பதிவில் நான் அவரைப் பற்றி மட்டும் பேசப்போவதில்லை. அவர் தவிர்க்க வேண்டியவர்தான், ஆனால் முடியாது. அதை எப்படி சமாளிப்பது? இந்தக் கேள்விக்கு என்னிடம் முழு விடையில்லை. அதற்கு சகபதிவர்கள் ஏதாவது விடையளிக்கலாம் என்ற எண்ணத்தில் இப்பதிவை போடுகிறேன்.
இப்போது இப்பதிவை போடுவதற்கு முக்கியக் காரணமே நேற்று (17.02.2007) ஒரு கம்பெனியில் ஆன்சைட் மொழிபெயர்ப்பு வேலைக்கு போன இடத்தில் நான் எதிர்க்கொண்ட இந்த நபர்தான் காரணம்.
நேற்று நான் காலை 9 மணிக்கு மறைமலை நகரில் உள்ள அவரது அலுவலகத்துக்கு பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு சிலவரைபடங்களை மொழிபெயர்க்க வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டேன். நான் முதலிலேயே கூறினேன், செக்யூரிடியிடம் நான் வருவதை எழுத்துமூலமாகத் தெரிவிக்கும்படி. ஏனெனில் ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் பெற்ற அக்கம்பெனியில் அவ்வளவு சீக்கிரம் உள்ளே சென்று விடமுடியாது. கம்பெனியிலிருந்து சம்பந்தப்பட்ட நபர் வந்து அழைத்து செல்ல வேண்டும். உள்ளே நடமாட்டமும் மிகக்கட்டுப்பாட்டில் இருக்கும். இவரும் சரி என்று கூறி காலை ஒரு செக்யூரிட்டியிடம் கூறியுள்ளார். ஆனால் எனது கார் சரியாக 8.55க்கு கம்பெனி வளாகத்தின் உள்ளே வந்தபோது அந்த செக்யூரிட்டி இல்லை. ஆகவே உள்ளே செல்வதில் தாமதம். உள்ளே போனதுமே அவர் என்னிடம் தான் ஏற்கனவே கூறியிருந்ததாகவும், ஆனால் செக்யூரிடியினர் சொதப்பினர் எனக் கூறினார். நான் இது குறித்து கவலைப்படவில்லை. அது கம்பெனியின் உள்பிரச்சினை என விட்டுவிட்டேன். (அரைமணி மீட்டர் அதிலேயே ஓடிவிட்டது).
பிறகு கணினியை ஆன் செய்து வரைபடத்தைத் திரையில் வரவழைத்தார். அதன் மென்பொருள் அருமையானது. A0 அளவு வரைபடத்தில் கனினி திறையில் முழுமையாக A4 அளவில் சுருக்கி காண்பிக்கும். பூதக்கண்ணாடி ஐக்கானை அழுத்தி, குறிப்பிட்ட பகுதியை தெரிவுசெய்து க்ளிக் செய்தால் அந்த இடம் பலமடங்கு பெரிதாக்கப்பட்டு, படிக்க முடியும். பிறகு டெக்ஸ்டை உள்ளிடும் ஐக்கானை அழுத்தி, டெக்ஸ்ட் பாக்ஸ் போல செய்து, அதில் ஆங்கில மொழிபெயர்ப்பை தட்டச்சு செய்ய வேண்டியதுதான் பாக்கி. இதில் நான் வேலை செய்வது ஐந்தாம் முறை. அருமையான மென்பொருள். சங்கடம் என்னவென்றால், அவ்வாறு மொழிபெயர்ப்பதை சேமித்து வைப்பதுதான். 'சேமி', 'இப்படிச் சேமி' என்பது போல எளிதானதில்லை அது. எல்லோரும் மன்றாடிப் பார்த்து விட்டார்கள். ஆக என்ன நடந்ததென்றால், ஒவ்வொரு முறையும் ஒரு பக்கத்தை நான் தட்டச்சு செய்து முடித்ததும் அதை சேமிப்பதற்கென்றே ஒருவர் வரவேண்டியிருந்தது. இந்த அழகில் அக்கம்பெனியில் அது பல கணினிகளில் வெவ்வேறு வெர்ஷன்களில் இருந்தது. அவற்றை சேமிக்கும் முறையும் வெர்ஷனுக்கேற்ப மாறுபட்டது. ஒரே கலாட்டாதான்.
நானும் அதைபற்றி எனது மொழிபெயர்ப்பாளர் தலைவாசலில் ஒரு பதிவு போட்டு சக மொழிபெயர்ப்பாளர்களிடம் உதவி கேட்டிருந்தேன். இன்றுவரை அதற்கு பதிலில்லை. நான் கூறிய ஆலோசனை என்னவென்றால் அந்த வரைபடங்களை அனுப்பியவரையே அதை கேட்கலாமேயென்று. கடைசியில் அப்படித்தான் நடந்திருக்கிறது. நேற்று நான் போய் பார்த்தவர் எனக்கு சேமிப்பு எப்படி செய்வது என்பதைக் காண்பித்தார். அவருக்கும் தடுமாற்றம்தான். அதிலேயே ஒரு மணி நேரம் போய்விட்டது. பிறகு வேலை ஆரம்பித்தது. செய்து முடித்தேன் என வைத்து கொள்ளுங்கள்.
ஆனால் இப்போது இந்த மனிதரை பற்றி கூறவேண்டும். என்னிடம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கூறியதையும் எனது எதிர்வினைகளையும் இப்போது பாருங்கள்.
அவர்: நீங்கள் ஐந்தாம் முறையாக இதில் வேலை செய்கிறீர்கள் என்பதால் உங்களுக்கு இதில் நிபுணத்துவம் உண்டு என நினைத்து விட்டேன்.
நான்: என்ன சார் விளையாடுகிறீர்களா? செய்தவேலையை எப்படி காப்பாற்றுவது என்பதுதானே இத்தனை முறையும் உங்கள் கம்பெனியில் எல்லோருக்குமே பிரச்சினையாக இருந்திருக்கிறது? இதில் எனக்கு மட்டும் நிபுணத்துவம் எப்படி வந்திருக்க முடியும்?
அவர்: சரி வேலையை ஆரம்பியுங்கள். ஆனால் இணைய தொடர்பு கிடையாது.
நான்: அது அவசியம் ஆயிற்றே. இல்லையெனில் ஆன்லைன் அகராதி, எனது மொழிபெயர்ப்பு தலைவாசலுக்கு சென்று ஆன்லைன் உதவி பெறுவது எல்லாம் பாதிக்கப்படுமே?
அவர்: இணையத் தொடர்பு வேண்டுமென்று நீங்கள் கூறவேயில்லையே?
நான்: அதுபற்றி எனது ஆஃபர் லெட்டரில் குறித்துள்ளேனே. மேலும் இத்தனை முறையும் அதை கொடுத்துத்தானே வந்திருக்கிறீர்கள்?
அவர்: நான் ஆஃபர் லெட்டரை பார்க்கவேயில்லை
(இது முழு பொய். எனது அக்கவுண்டை முழுமையாக டீல் செய்யும் எனது தொடர்பு அதிகாரி அவர் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் நான் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை).
நான்: பரவாயில்லை. என்னிடம் எனது பேப்பர் அகராதிகள் உள்ளன. என்ன, அவை சற்று பழையவை. ஆன்லைன் அகராதி இற்றைப்படுத்தப் பட்டிருக்கும். மொழிபெயர்ப்பின் தரமும் இன்னும் நேர்த்தியாக இருந்திருக்கும்.
அவர்: நீங்கள் இன்றைக்கு எவ்வளவு வார்த்தைகள் மொழிபெயர்த்தீர்கள் என்பதை கூட்ட வேண்டும்.
நான்: அவ்வாறு செய்வது சரியாக இருக்காது. நேரடியான வெறுமனே மொழிபெயர்ப்பு என்னும் போதுதான் வார்த்தை எண்ணிக்கை கணக்குக்கு வரும். அது நான் வீட்டில் எனது கணினியில் செய்யும் டெக்ஸ்டை மொழிபெயர்ப்பு செய்யும்போது. இங்கு உங்கள் நிறுவனத்துக்கு வந்து வேலை செய்தபோது, உங்கள் மென்பொருள் என்னவெல்லாம் தன்ணிகாட்டியது என்பதைப் பார்த்தீர்கள்தானே. அந்த நேரவிரயத்துக்கெல்லாம் யார் ஜவாப்? மேலும் இங்கு மணிக்கு இவ்வளவு என்ற கணக்கில்தான் ரேட். இந்த இடத்தில் வார்த்தைகள் அடிப்படையில்லை.
அவர்: அப்படியா எனக்கு அதை யாரும் கூறவில்லையே.
நான்: என்ன சார் எனது இம்மாதிரியான வேலைகளுக்கெல்லாம் பில்களை உங்களிடம் நேரடியாகத்தானே கொடுத்துள்ளேன். அதில் இவ்வளவு மணி நேரம் என்றுதானே இருந்திருக்கிறது. நீங்களும் நான் குறிப்பிட்ட மணியளவு சரியாக இருக்கிறது என்பதை உறுதி செய்துதானே அனுப்பினீர்கள்? அதன் பக்கத்திலேயே மணிக்கு இவ்வளவு ரூபாய்கள் என்று இருக்குமே? பார்க்கவில்லை?
அவர்: பார்க்கவில்லை. நான் வெறுமனே மணி நேரம் சரியாக உள்ளதா என்றுதான் பார்த்தேன். மீதியயெல்லாம் பார்க்கவில்லை. ஆனாலும் நீங்கள் சொல்லுவதை நம்புகிறேன்.
நான் (மனதுக்குள் 20 வரை எண்ணிவிட்டு): நம்பிக்கைக்கு நன்றி சார். எனது பழைய பில்களின் போட்டோ காப்பிகளை என்னிடம் காட்டினீர்களே, அவற்றை எடுத்து பாருங்களேன்?
அவர் (அவசரம் அவசரமாக): நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
அவர் மாலை 5.30 க்கு வேலை இன்றைக்கு இதற்கு மேல் வேண்டாம் எனக் கூறினார். நானும் அவரிடம் வேலை முடித்த வரைபடங்களின் நகலைக் கொடுத்து வேறு ஏதாவது இருக்கிறதா எனப் பார்க்குமாறு கேட்டேன். பார்த்தாகி விட்டது எனக் கூறினார். நானும் 8 மணி நேரத்துக்கான பில்லை போட்டு விட்டு (அரை மணி நேரம் லஞ்ச் நேரம் பில்லில் இடவில்லை) கிளம்பும் ஆயத்தங்கள் செய்தேன். அவர் மறுபடியும் லிஸ்டை பார்த்து விட்டு தேள் கொட்டிய பாவனையில் துள்ளிக் குதித்தார்.
அவர்: ஐயையோ, முக்கியமாக இரு வரைபடங்கள் விட்டுப் போய் விட்டனவே. எல்லாம் முடிந்ததாக நீங்கள் கூறியதை நம்பிவிட்டேன்.
நான் இதற்கு பதில் சொல்லாது அவரைக் கூர்ந்து பார்த்தேன். அவருக்கே தான் சொன்னது ஓவர் எனப் பட்டது போலிருக்கிறது.
அவர்: சரி, இப்போது நீங்கள் அவற்றையும் மொழிபெயர்க்கிறீர்களா?
நான்: சார் அவை பெரிய வரைபடங்கள். மொழிபெயர்க்க இரண்டு மணிகளுக்கு மேல் ஆகும். என்ன செய்யலாம்? இப்போதே மணி 5.45.
அவர்: பரவாயில்லை சார் தயவு செய்து செய்யுங்கள்.
நான்: சரி செய்கிறேன். இப்போது நான் கொடுத்த பில்லை திருப்பித் தாருங்கள். வேறு பில் வேலை முடிந்ததும் தருகிறேன்.
அவரும் அதைத் தந்தார். பிறகு என்ன அடுத்த இரண்டு மணி நேரங்களுக்கு புயல் வேலைதான். எல்லாம் முடிந்து 10 மணிநேரத்துக்கு பில். பிறகு ஒன்றாக கிளம்பி வெளியில் வந்து அவரை எனது காரில் குரோம்பேட்டை வரைக்கும் அழைத்து சென்று டிராப் செய்தேன்.
இவரைப் போன்றவர்கள் தமது கீழே, அதே நிலையில், மேலே வேலை செய்யும் எல்லாறுக்குமே தலைவலி தருபவர்கள். அதாவது பொதுவான ஒருபிரச்சினைக்கு தாங்கள் பொறுப்பில்லை என்று நிலைநிறுத்துவதிலேயே துடியாக இருப்பார்கள். அத்துடன் மற்றவர்கள்தான் பொறுப்பு என்பதையும் சமயம் வரும்போதெல்லாம் கூறிக் கொண்டிருப்பார்கள். இவர்களை தவிர்க்கவோ இயலாது. ஆகவே எதிர்க் கொள்ள வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
14 hours ago
25 comments:
உங்களுக்கென்றே இப்படி வந்து வாய்க்கிறார்களே!
:)
வாருங்கள் சிபி அவர்களே. இம்மாதிரி மனிதர்களை எல்லாவிடத்திலும் பார்க்கலாம். அவர்களை முடிந்தால் தவிர்க்க வேணும். அதே சமயம் முடியவில்லை என்றால் எதிர்க்கொள்ள வேணும்.
உங்கள் சொந்த அனுபவம் இந்த விஷயத்தில் ஏதாவது உண்டா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//உங்கள் சொந்த அனுபவம் இந்த விஷயத்தில் ஏதாவது உண்டா?
//
என் சொந்த அனுபவத்தில் பெரும்பாலான எங்கள் கிளையண்ட்கள் அனைவருமே இப்படித்தான்!
அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை மறந்துவிட்டு நம் மீது மட்டுமே குறை சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
//என் சொந்த அனுபவத்தில் பெரும்பாலான எங்கள் கிளையண்ட்கள் அனைவருமே இப்படித்தான்!//
நொந்து நூலாகியிருந்திருப்பீர்களே. அதிலும் உங்கள் மேலதிகாரி அவர்கள் கூறுவதை அப்படியே நம்பினால் கதை கந்தல்தான். அல்லது நீங்களும் என்னை மாதிரி சுயதொழில் செய்பவரா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நொந்து நூலாகியிருந்திருப்பீர்களே. //
உண்மைதான்.
//அதிலும் உங்கள் மேலதிகாரி அவர்கள் கூறுவதை அப்படியே நம்பினால் கதை கந்தல்தான். //
நல்ல வேளையாக அப்படிச் செய்வதில்லை!
அதனால்தான் எதையுமே மினிட்ஸ் செய்யவேண்டும் என்று வலியுறுத்துவார்கள்.
ஆனாலும் அந்த நிறுவனங்களில் எண்ட் யூசருடன் போடப்படும் மினிட்ஸ்களை
"அவர்களுக்கு என்னவென்று தெரியாது, ஏதோ நீங்கள் கையெழுத்துப் போடச் சொன்னீர்களென்று போட்டிருப்பார்கள்" என்றும் அந்த நிறுவன அதிகாரிகள் சொல்வதுண்டு.
மேலும் சாஃப்ட்வேரை பயன்படுத்தி டெஸ்ட் செய்யும் நேரத்தையெல்லாம் விட்டுவிட்டு, பில் அனுப்பிய பின்னர்தான் நாங்கள் இன்னும் பயன்படுத்தவே ஆரம்பிக்க வில்லை என்றெல்லாம் என்று சொல்வார்கள்.
:((
//மேலும் சாஃப்ட்வேரை பயன்படுத்தி டெஸ்ட் செய்யும் நேரத்தையெல்லாம் விட்டுவிட்டு, பில் அனுப்பிய பின்னர்தான் நாங்கள் இன்னும் பயன்படுத்தவே ஆரம்பிக்க வில்லை என்றெல்லாம் என்று சொல்வார்கள்.//
நமக்கென்றே இப்படி வந்து வாய்க்கிறார்களே. :)))))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்ல பதிவு.
டோண்டு சார் ஞாயிறுகளில் பதிவு போட்டால் படிப்பவர்கள் குறைவு. வாரநாட்க்களில் மட்டும் பதிவு போட்டால் அனைவரும் படிக்கலாம்.
//டோண்டு சார் ஞாயிறுகளில் பதிவு போட்டால் படிப்பவர்கள் குறைவு.//
:)))))))))))))))
//நல்ல பதிவு.//
நன்றி.
ஆனாலும் நீங்களும் தத்தம் அனுபவங்களைக் கூறலாமே. நான் என்ன நினைக்கிறேன் என்றால், இப்படிப்பட்ட மனிதர்கள் எங்கும் உண்டு. அவர்களால் படுத்தப்படுபவர்களும் உண்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Hi Dondu,
We see this kind of people everywhere around us. That too in this corporate culture, pushing the ball on to others head has become an art. :)
Better way to handle these guys is to have strong documentation. In our case - mail cofirmation on each and every small bit of their words.
Beware!! any time they can trun around.
In the society There are a lot more people like this to compare.
//We see this kind of people everywhere around us. That too in this corporate culture, pushing the ball on to others head has become an art. :)//
அதனாலேயே, மீட்டிங்குகள் வைக்கும் நாளன்று எல்லோரும் அட்ட்ண்ட் செய்து விடுகின்றனர். இல்லையென்றால், மீட்டிங்கிற்கு வராதவர் மேல் சௌகரியமாக பல பழிகளை அவர்களது உயிர்த்தோழர் தோழியர் போட்டு விடுவர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்றாடம் நான் சந்திக்கும் சில பிரச்சினைகளில் இதுவும் ஒன்று! நல்ல பதிவு டோண்டு.
பின்னூட்டத்திற்கு நன்றி மதுசூதனன். சில உதாரனங்களையும் அவற்றை நீங்கள் எப்படி எதிர் கொண்டீர்கள் என்பதையும் கூறலாமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வேற என்ன, ஒவ்வொரு விடயத்தையும் எழுத்தில் வைத்துக்கொள்வதும்,ஒவ்வொரு காரியம் ஆரம்பிக்கும்போதும் அதனுடைய லாப, நட்டங்களை சம்பந்தப்பட்டவர்க்கு தெரிவிப்பதும்
டோன்டு : ஒரு மணி நேரமா வேலை ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் மீட்டர் சார்ஜ் ரூ.
அவர் : அய்யோ -((((
//டோண்டு : ஒரு மணி நேரமா வேலை ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் மீட்டர் சார்ஜ் ரூ.
அவர் : அய்யோ -(((( ///
அவருக்கு :((((
டோண்டுவுக்கு :))))))))
அந்த ஒரு மணி நேரமும் சேமிப்பதை பற்றித்தானே பேசினோம். எனக்கு சொல்லிக் கொடுக்கும்போதே அவருக்கு தண்ணி காட்டியது அந்த விஷயம்.
ஆனால் ஒன்று. இனிமேல் வரும் நாட்களில் அந்த நேர விரயம் கூட இருக்காது. வேலை மின்னல் வேகத்தில் ஓடும். ஏனெனில் பிரெஞ்சு அல்லது ஜெர்மனில் உள்வாங்கி ஆங்கிலத்தில் செய்வது எனக்கு மூச்சு விடுவது போல எளிது. பார்ப்பவர்களுக்கு இவன் ஏதோ காப்பி அடிக்கிறான் என்பது போலத் தோன்றும்.
அதுவும் எம்.எஸ். வோர்ட் போன்ற திருத்தக்கூடிய மென்நகல்களில் இப்படிச் சேமித்த கோப்பை திரையின் மேல் பகுதியிலும் மூலக் கோப்பை திரையின் கீழ்பகுதியிலுமாக ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக் கொண்டு வேலை செய்யும் சுகமே தனி. மேலே பிரெஞ்சு வார்த்தைகளில் குறைந்த பட்ச எழுத்துக்களை மாற்றி ஆங்கில சொற்களை கொண்டு வரும்போது கண் முன்னாலேயே ஆங்கிலக் கோப்பு உருவாவதை பார்க்கலாம். ஒரு சிருஷ்டி செய்பவனின் சந்தோஷம் வரும். அதற்கு ஈடே கிடையாது. அதை செய்ய துட்டு வேறு. ஆஹா, வாழ்க்கையே அற்புதமயமானது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//தமது கீழே, அதே நிலையில், மேலே வேலை செய்யும் எல்லாறுக்குமே தலைவலி தருபவர்கள். அதாவது பொதுவான ஒருபிரச்சினைக்கு தாங்கள் பொறுப்பில்லை என்று நிலைநிறுத்துவதிலேயே துடியாக இருப்பார்கள். அத்துடன் மற்றவர்கள்தான் பொறுப்பு என்பதையும் சமயம் வரும்போதெல்லாம் கூறிக் கொண்டிருப்பார்கள்//
டோண்டு அய்யா,
நீங்க சொல்றதை வச்சுப் பாத்தா,எனக்கு நீங்கள் எங்க புரட்சிகர கட்சி ம.க.இ.க தலைவர்களை மறைமுகமா இடிக்கறோங்களொன்னு சந்தேகமா இருகுங்கய்யா.எங்க தலைவர் அசுரன் அய்யா,இளைய தளபதி ராஜவனஜ் அய்யா,பின்ன நவீன பீரங்கி வெளியே மிதக்கும் அய்யா,போன்றவங்க நீங்க சொல்றபடி கேவலமா நடந்துகொண்டு பிழப்பை நடத்துவாங்க.ஆனா தவிர்க்கப்ப்டவேண்டியவர்கள் அல்ல.
பாலா
பாலா அவர்களே. நான் இங்கு யாரையும் குறிவைக்கவில்லை. அந்த கம்பெனியின் அந்த அதிகாரி கூட அரண்டு போய் தன்னை பாதுகாத்து கொள்ள முயற்சி செய்துள்ளார். மற்றப்படி நல்லவராகவே இருப்பாராக இருக்கும்.
என்ன, இந்த விஷயத்தில் அவருக்கு இடம் தருவது நல்லதல்ல என்பதாலேயே நான் கெடுபிடியுடன் நடந்து கொண்டேன்.
அசுரன் எனக்கு நேரடி பழக்கமில்லை. ஆனால் மிதக்கும் வெளி மற்றும் ராஜ் வனஜை நேரிலேயே சந்தித்து பேசியுள்ளேன். மரியாதைப்பட்ட மனிதர்கள். அசுரனும் அவர் எழுத்துக்களில் சின்ஸியராகவே படுகிறார்.
மேலும் இப்பதிவில் பதிவர் யாரையும் குறை கூறவேண்டாம் என கேட்டு கொள்கிறேன். ஏனெனில் பதிவு அவர்களை பற்றி அல்ல.
இப்பதிவில் நான் குறிப்பிட்ட நபர் தவிர்க்கப்பட முடியாதவர். அவருக்காகக் நாம் வேலையெல்லாம் விட்டு நீங்க இயலாது.. ஏனெனில் அம்மாதிரி நபர்கள் எங்கும் அதிகமாகக் காணப்படுவர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எந்த ஒரு வேலையிலுமே பிற வேலைகள் என்று முக்ய வேலை செய்வதற்க்கு முன்னும் பின்னும் இருக்கும். அதை உங்களுக்கு வேலை கொடுப்பவர் இப்போது புரிந்து கொன்டிருப்பார். நாங்கள் எஸ்டிமேட் போடும்போதே System study,Project Mangement,Testing என்று அதையும் சேர்த்தே போடுவோம்.
என்னை என் க்லையன்ட் கேட்டார் - ஏன் இந்த வேலையை செய்வதற்க்கு இவ்வளவு(1 மணி நேரம்) ஆகுமா என்று. ஆம் என்று சொல்லி 10 உப வேலைகளை பட்டியலிட்டேன். பேசாமல் ஒத்துக்கொண்டார்.
<---
மற்றப்படி நல்லவராகவே இருப்பாராக இருக்கும்.
-->
எல்லோருமே தனக்குப் பிரச்னை வராதவரைக்கும் நல்லவர்தான்
//எந்த ஒரு வேலையிலுமே பிற வேலைகள் என்று முக்ய வேலை செய்வதற்க்கு முன்னும் பின்னும் இருக்கும். அதை உங்களுக்கு வேலை கொடுப்பவர் இப்போது புரிந்து கொன்டிருப்பார். நாங்கள் எஸ்டிமேட் போடும்போதே System study,Project Mangement,Testing என்று அதையும் சேர்த்தே போடுவோம்.//
ஆனால் பல கம்பெனிகளில் அவர்கள் ப்ளானிங்கை பார்த்தீர்களானால் மொழிபெயர்ப்புக்கென்று - அதிலும் அன்னிய மொழிக்காரர்களுடன் போடும் ஒப்பந்தங்களில் - தனியாக பணம் ஒதுக்காது விட்டுவிட்டு சந்தியில் நிற்பார்கள். அதுவும் வேற்றுமொழியில் கோப்புகளை அளிக்கவேண்டிய இடத்தில் இது மிகுந்த சிக்கல்களில் விட்டுவிடும்.
மேலும் பார் சார்ட்டிலும் இதை கோட்டை விட்டு விடுவார்கள்.உதாரணத்துக்கு ஒரு மேன்யுவலை மூல மொழியில் தயாரிக்கவே 10 நாட்களுக்கு மேல் எடுத்து கொள்வார்கள். பத்தாயிரத்துக்கும் மேல் தொழிற்நுட்ப வார்த்தைகள் இருக்கும். ஒவ்வொரு பகுதியையும் ஒரு துறையைச் சேர்ந்த குழுவினர் தயாரித்திருப்பார்கள். ஆனால் மொழிபெயர்ப்பாளர் மட்டும் இந்த கோப்பை ஓரிரு நாட்களில் முடிக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.
அவர்களுக்கு எல்லாம் நான் பேசவே இடம் கொடுப்பதில்லை. முடியும் என்றால் முடியும் இல்லையென்றால் இல்லைதான். சிலர் புத்திசாலித்தனமாக பகுதி பகுதியாக முடியும்போதே அவற்றை மொழிபெயர்ப்பு செய்வித்து வைத்து கொள்வார்கள். ஆனால் இங்கு கஷ்டம் என்னவென்றால் திடீரென முடிந்த பதிவிலிருந்து மாறுதல் செய்வார்கள். நாமும் ஈடு கொடுக்க வேண்டியிருக்கும். தட்டச்சு செய்த முழு பத்திகளையே நீக்க வேண்டியிருக்கும். ஆகவே இம்மாதிரி வேலைகளஊக்கு நான் வாடிக்கையாளர் அலுவலகம் செல்லவே விரும்புவேன். இல்லாவிடில் கடைசியில் எழுத்து எண்ணிக்கை அடிப்படையில் பில் செய்யும் போது எனக்கு பெரிய இழப்பாக முடியும். அழித்ததையெல்லாம் கூட்டிவைத்து கேட்டால் அடே பாதகா என்பது போல முழிப்பார்கள்.
பில் பாஸ் பண்ண வேண்டிய கணக்கு பிரிவினர் அதெல்லாம் எமக்குத் தெரியாது என்று உத்தமமாக பேசுவர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இதே போல ஆட்களை தினமும் பார்க்கிறேன்
.
சில மேல் அதிகாரிகளுக்கு தன் கீழே வேலை பார்ப்பவர்கள் சீக்கிரம் வீட்டிக்கு சென்றால் ஆகாது. இவருக்கு வீட்டில் என்ன பிரச்சனையோ.
சார் வீட்டுக்கு போய்ட்டு வரேன் என்று சொன்னால் போதும் உடனே தம்பி இது ரொம்ப அர்ஜெண்ட் முடிச்சு கொடுத்துவிட்டு போ என்பார். எட்டு மணிக்கு குறைந்து யார்வீட்டுக்கு போனாலும் இவருக்கு பிடிக்காது.
அப்ரைசல் நேரங்களில் மேல் அதிகாரியின் உண்மை சொரூப்பதை பார்க்கலாம். சோப்பு போடாத ஆட்களை டார்சர் செய்தே நோகடித்து விடுவார்கள்
ராஜ சேகரன்
என் மேல் அதிகாரியுடம் வெளியூர் சென்றால் ஏண்டா போனோம் என்று ஆகிவிடும் நிலை. இலவச குறட்டை சத்தம் முதல் படி
இவருக்கு பிடித்தது தான் சாப்பிடவும் ஆர்டர் செய்வார். ஊர் வந்து சேரும் போதுசென்ரல் வந்தவுடம் தீடீர் பாசம் காட்டுவார். அது ஒன்றும் இல்லை. அவருக்கும் சேர்த்து ஃபீரி பெய்டு ஆட்டோ புடிக்கனும் ;))
//சார் வீட்டுக்கு போய்ட்டு வரேன் என்று சொன்னால் போதும் உடனே தம்பி இது ரொம்ப அர்ஜெண்ட் முடிச்சு கொடுத்துவிட்டு போ என்பார்.//
கடவுள் அருளால் எனக்கு அம்மாதிரி மேலதிகாரிகள் இல்லை. அதிலும் குறிப்பாக ஐ.டி.பி.எல். லில் கம்பெனி பஸ்ஸை விட்டால் கதை கந்தல்தான். ஆகவே நமக்கு முன்னாலேயே மேலதிகாரிகள் ஓடி பஸ்ஸில் ஏறி அமர்ந்து விடுவர்.
ஆனால் இப்போதைய ஐ.டி. வாடிக்கையாளர் கம்பெனிகளில் இரவு 8 மணிக்கு கூட நான் அவரவரை சம்பந்தப்பட்ட எக்ஸ்டென்ஷன் நம்பர்களில் கூப்பிட இயலுகிறது.
நானும் தேவையான போது கோலங்கள் சீரியல்கள் விளம்பர இடைவேளை போது அவர்களுடன் அலுவகத்தில் பேச முடிந்தாலும், யோசித்து பார்த்தல் அவர்கள் பாவம்தானே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நானும் தேவையான போது கோலங்கள் சீரியல்கள் விளம்பர இடைவேளை போது அவர்களுடன் அலுவகத்தில் பேச முடிந்தாலும், யோசித்து பார்த்தல் அவர்கள் பாவம்தானே.//
Quite true sir. They are really to be pitied. Hope you didn't tell them the truth about the way you do work at home, seeing the serials and doing work during commercial breaks.
GK
Post a Comment