சில நாட்களுக்கு முன்னால் நண்பர் சுபமூகா அவர்கள் இட்ட இப்பதிவை எதேச்சையாகப் பார்த்தேன். அதில் ஆரம்பத்திலேயே அவர் "டோண்டு, வீ மிஸ் யூ ;-)" என குறிப்பிட்டிருந்தது எனது ஆவலைத் தூண்டியது. என்னடா இது நான் என்னை அறியாமலேயே தமிழ் மணத்தை விட்டு நீங்கி விட்டேனா, இங்கேத்தானே பலரை படுத்திக் கொண்டு இருக்கிறேன் என்று யோசித்து கொண்டே மேலே பார்த்தேன். அதில் சுபமூகா அவர்கள் தனது இன்னொரு பதிவைக் குறிப்பிட்டிருந்தார். அதில்தான் அவர் கேள்வி பதில் பகுதியை திறந்திருக்கிறார் என தெரிந்தது. கேள்விகளை அப்பதிவில் பின்னூட்டமாக போடும்படி கேட்டிருந்தார். ஆனால் என்ன ஆச்சரியம்? ஒரு பின்னூட்டமும் இன்னும் பப்ளிஷ் ஆகவில்லை. என் பங்குக்கு நானும் சற்று விஸ்தாரமான கேள்வியை இட்டிருந்தேன். அதை மட்டும் அவர் தனிப்பதிவாகவே போட்டு விட்டார்.
இப்போது சிறிதே வேறு விஷயம் பற்றிப் பேசுவோமா? இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் பலர் பெயர் பெற்றிருந்தனர். எனக்கு தெரிந்து அமெரிக்காவில் இது முதலில் பிரபலம் ஆயிற்று. சமீபத்தில் அறுபதுகளில் ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகையில் "Ask Henry" என்னும் கேள்வி பதில் பதிவு பர்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. அதில் வந்த ஹென்றி அப்போது ஒரு பதின்ம வயதினர். ஆகவே தன்னால் தன் சம வயதுடைய இளைஞர் இளைஞிகளை பற்றி கேள்வி கேட்டால் உண்மையான பதிலை அளிக்க இயலும் என்று வேறு கூறியிருந்தார். பல கேள்வி பதில்களும் அக்கட்டுரையில் வெளியாகி இருந்தன. அவற்றில் ஒரு ஜோடியை மட்டும் இங்கு என் ஞாபகத்திலிருந்து தருகிறேன்.
கேள்வி: என் பத்து வயது மகன் ரொம்ப முரடன். அம்மாவாகிய நான் என்ன சொன்னாலும் கேட்காமல் எதிர்வாதம் எல்லாம் செய்வான். ஆனால் சில நாகளாக "அம்மா நீயில்லாமல் எனக்கு உலகம் ஏது" என்றெல்லாம் கவித்துவமாக பேசுகிறான். என்னுடன் ரொம்ப இழைகிறான். என்ன விஷயமாக இருக்கும்?
ஹென்றி: அந்தப் பையன் ஏதோ பெரிய விஷமம் செய்திருக்க வேண்டும். அதை நீங்கள் எப்போது வேணுமானாலும் கண்டு பிடிப்பீர்கள் என்ற பயம் அவனுக்கு இருந்திருக்க வேண்டும். ஜாக்கிரதை.
இந்தியாவுக்கு வந்தால் மதர் இந்தியாவின் ஆசிரியர் பாபுராவ் படேல் நினைவுக்கு வருகிறார். அவர் கேள்வி பதில்களிலிருந்து ஒரு சாம்பிள்.
Q: What is the difference between a lover and a non-lover?
A: A lover kisses a miss, whereas a non-lover misses a kiss.
தமிழ்நாட்டிலோ கேட்கவே வேண்டாம். தமிழ்வாணன், சாவி, மணியன், அரசு, தராசு, பராசக்தி, சோ ஆகியோர் முதலில் நினைவுக்கு வருகின்றனர். அதில் சாவி அவர்கள் கேள்வி பதிலில் ஒரு ஜோடி என் மனதை நெகிழ்ச்சியடையச் செய்தது.
எழுபதுகளில் அவர் குங்குமம் பத்திரிகையின் முதல் ஆசிரியராக இருந்தார். அப்போதெல்லாம் எல்லா குங்குமம் இதழ்களும் அட்டைப் படத்தில் குங்குமம் எப்படியாவது காட்டப்பட்டு விடும். ஆனால் ஒரு இதழில் அது வரவில்லை. அது பற்றி எழுந்த கேள்வி பதில் குறித்து பேசும் முன்னால் சிறிது பின்புலத்தை கூறவேண்டும்.
அச்சமயத்தில் நடந்த ஒரு விமான விபத்தில் சாவி அவர்கள் மகள் ஜயாவின் கணவர் இறந்து விட்டார். சில காலம் கழித்து சாவி அந்த மகளுக்கு மறுமணம் செய்வித்தார். அதே விமான விபத்தில் இறந்த ஒரு பெண்மணியின் கணவர்தான் சாவியின் மகளை மணந்தார். இப்போது கேள்வி பதிலுக்கு வருவோம்.
கேள்வி: இவ்வார இதழில் குங்குமம் பார்க்க முடியவில்லையே, எங்கே அது?
சாவி: அதை என் மகள் ஜயாவுக்கு வைத்து விட்டேன்.
என்னை மிகவும் நெகிழச் செய்தது சாவி அவர்களின் இந்த பதில்.
அரசு அவர்களுக்கு சமீபத்தில் 1976-ல் நான் இட்ட கேள்வி இது:
"Fiddler on the roof படம் பார்த்து விட்டீர்களா? அதில் கதாநாயகனாக வரும் எனது அபிமான இஸ்ரவேல யூத நடிகர் டோப்போலின் நடிப்பு எப்படி?
அதற்கு அரசு அவர்களின் பதில் (நினைவிலிருந்து தருகிறேன், வார்த்தைகள் சற்று முன்னே பின்னே இருக்கலாம்). "இஸ்ரவேலர்கள் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் நாடின்றி அலைந்ததை இக்கதையின் மூலம் இயக்குனர் கூற முயன்றுள்ளார். டோப்போலின் நடிப்பு அபாரம்".
சோ அவர்கள் கேள்வி பதிலுக்காகவே இந்த டோண்டு ராகவன் தனிப்பதிவு போட உத்தேசித்துள்ளான். ஆகவே இங்கு ஒரு ஜோடி மட்டும் கூறுகிறேன்.
கேள்வி: தமிழ்நாட்டில் பசு அம்மா என்று கத்தும். 'தாய்'லாந்தில் என்னவென்று கத்தும்?
பதில்: 'சித்தப்பா' என்று கத்தும். தாய்லாந்து போனால் கேட்டு சொல்கிறேன்.
இப்போது சுபமூகா விஷயத்துக்கு வருவோம்.
அவரிடம் கேட்ட ஒரு கேள்வியும் அதற்கு அவர் பதிலும்:
கேள்வி: உங்கள் காரில் உங்களுடன் உங்கள் தந்தை, தாய், மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். காரில் இடம் இல்லை. போகும் வழியில் த்ரிஷா, அசின், ஷ்ரேயா, நமீதா அனைவரும் ஒரு சேர நின்று லிப்ட் கேட்டால் யாரை இறக்கி விட்டு விட்டு யாருக்கு லிப்ட் கொடுப்பீர்கள்?
சுபமூகாவின் பதில்: த்ரிஷாவை எனக்குப் பிடிக்கும் என்பதை விட என் மனைவி, மகளுக்குப் பிடிக்கும் என்பதால், வேண்டுமானால் என்னையே இறக்கிவிட்டுவிட்டு அவரை ஏற்றிக் கொண்டு விடுவார்கள்.
அசின் - அவருக்கு லிப்ட் கொடுக்கவில்லை என்றால் it is a sin!
ஷ்ரேயா - இவருக்குக் கொடுக்கவில்லை என்றால் பெய்யும் 'மழை'யும் நின்று விடாதா?
நமீதா - யார் தான் கொடுக்க மாட்டார்கள்?! நான் கொடுக்கவில்லை எனில், கடவுளின் சாபம் 'நம் மீதா' இல்லையா சொல்லுங்கள்.
அது சரி, என்னை என்ன என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? குடும்பத்தினரில் ஒருவரை இறக்கிவிட்டு, யாரையாவது ஏற்றிக் கொள்ளும் அளவுக்கு நான் இறங்கி விட மாட்டேன். குடும்பத்தினர் எல்லோரையும் பத்திரமாக வீட்டில் கொண்டு போய் இறக்கி விட்டு, திரும்ப வந்து எல்லோரையும் ஏற்றிக் கொண்டு செல்வேனாக்கும்!
மேலும் சுபமூகா எழுதுகிறார்: //நீங்களும் சுவாரசியமான கேள்விகளை அனுப்பலாம். பின்னூட்டத்தில் உங்கள் கேள்விகளை அனுப்புங்கள்.//
ஆனால் மேலே குறிப்பிட்டபடி ஒரு பின்னூட்டமும் இன்னும் பப்ளிஷ் ஆகவில்லை. என் பங்குக்கு நானும் சற்று விஸ்தாரமான கேள்வியை இட்டிருந்தேன். அதை மட்டும் அவர் தனிப்பதிவாகவே போட்டு விட்டார்.
இப்போது சுபமூகாவுக்கு நான் இட்ட கேள்வி:
////குடும்பத்தினர் எல்லோரையும் பத்திரமாக வீட்டில் கொண்டு போய் இறக்கி விட்டு, திரும்ப வந்து எல்லோரையும் ஏற்றிக் கொண்டு செல்வேனாக்கும்! //
நீங்கள் திரும்பி செல்லும்போது அங்கு நீங்கள் எதிர்பார்க்கும் யாரையுமே காணும்.
அங்கிருந்த டீக்கடைக்காரர் அந்தப் பக்கம் தன் காரில் (!) வந்த டோண்டு ராகவன் என்னும் அறுபது வயது இளைஞன் அந்த நால்வரையும் தன்னுடன் காரில் தள்ளிக் கொண்டு போய்விட்டான் என்று கெக்கெக்கே என சிரித்து கொண்டும், பொறாமை பெருமூச்சுடனும் கூறுகிறார்.
அப்போது உங்கள் மனநிலை:
1. டோண்டு ராகவனைப் பற்றி
2. த்ரிஷா, அசின், ஷ்ரேயா, நமீதா ஆகியோர் பற்றி என்னவாக இருக்கும்?
இந்த சிச்சுவேஷனுக்கு:
அ. கண்ணதாசன் மற்றும்
ஆ. வாலி என்ன பாட்டு எழுதுவார்கள்?
யாராவது அக்கேள்விக்கு இந்தப் பதிவில் பின்னூட்டம் ரூபத்தில் பதிலளிக்க முயற்சி செய்யுங்களேன். மேலும் ஏதாவது உங்கள் தரப்பிலிருந்து என்னைக் கேள்வி கேட்டாலும் மகிழ்ச்சியே.
இது பற்றி பேசும்போது நாட்டாமை அவர்கள் எனக்கு வைத்த கேள்விகளும் அவற்றுக்கு எனது பதில்களும் இப்பதிவில் பார்க்கலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
8 hours ago
23 comments:
நீங்க விளம்பரப் பிரியர்னு பேசிக்கறாங்களே. அது குறித்து ஏதேனும் கருத்து?
பூதப்பாடி ராமலிங்கம்
சோ இந்தியாவின் மன்னரானால்?
சோ வெறியன்
What is it that you see in Cho?
Gopalakrishnudu
அப்பாடா, ரொம்பவே முயற்சி செய்து உங்களோட பதிவைக் கண்டு பிடித்து வந்திருக்கேன். தமிழ்மணம் மூலமாய்த் தான் வர முடிந்தது. உங்களோட தென் திருப்பேரை மகர நெடுங்குழைக்காதரைப் போய்ப் பார்த்து நலம் விசாரித்து விட்டு வந்தோம். நீங்க அவரை மறக்கவே இல்லைனு சொல்லிட்டேன். எவ்வளவு பெரிய காது? எவ்வளவு பெரிய மகர நெடுங்குழை? நல்ல திவ்ய தரிசனம், சார், ரொம்பவே நன்றி. அது பத்தித் தனியா ஒரு பதிவு கூடிய சீக்கிரம் போடறேன். வந்து வாழ்த்திட்டுப் போங்க.
இப்போ என்னோட கேள்வி உங்களுக்குப் பிடிக்காதுன்னாலும் இது தான், "ராஜாஜி ஏன் சார் இப்படிச் செய்தார்? அவ்வளவு பெரிய மனுஷர் ஒரு தனிப்பட்ட விரோதம் காரணமாய் இப்படிச் செய்யலாமா?" கேள்வி தப்பாய் இருந்தால் வெளியிட வேண்டாம்.
//ராஜாஜி ஏன் சார் இப்படிச் செய்தார்? அவ்வளவு பெரிய மனுஷர் ஒரு தனிப்பட்ட விரோதம் காரணமாய் இப்படிச் செய்யலாமா?//
எதை குறிப்பிடுகிறீர்கள் நீங்கள்? சமீபத்தில் 1967-ல் திமுகவுடன் கூட்டு வைத்ததையா? அதற்கு என்னிடம் பதில் உள்ளது. கண்டிப்பாகத் தருகிறேன். அதற்கு முன்னால் அதைத்தான் நீங்கள் குறிப்பிட்டீர்களா என அறிவது முக்கியம்.
இல்லை வேறு ஏதையாவது என்றால் அதை அறியத் தாருங்கள் எனக் கேட்டு கொள்கிறேன்.
அது வரை:
//அப்பாடா, ரொம்பவே முயற்சி செய்து உங்களோட பதிவைக் கண்டு பிடித்து வந்திருக்கேன். தமிழ்மணம் மூலமாய்த் தான் வர முடிந்தது.//
என் பதிவின் உரல் ரொம்ப எளிதானது. என்ன, dondu வுக்கு இன்னொரு ஒ போடக்கூடாது அவ்வளவே.
//உங்களோட தென் திருப்பேரை மகர நெடுங்குழைக்காதரைப் போய்ப் பார்த்து நலம் விசாரித்து விட்டு வந்தோம். நீங்க அவரை மறக்கவே இல்லைனு சொல்லிட்டேன். எவ்வளவு பெரிய காது? எவ்வளவு பெரிய மகர நெடுங்குழை? நல்ல திவ்ய தரிசனம், சார், ரொம்பவே நன்றி. அது பத்தித் தனியா ஒரு பதிவு கூடிய சீக்கிரம் போடறேன். வந்து வாழ்த்திட்டுப் போங்க.//
மிக்க மகிழ்ச்சி. எல்லாம் என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் மகரநெடுங்குழைகாதன் அருள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சுடரோட்டத்தில் அவரை யாரும் கண்டுக்கிடலையாம். அதனால்தான் அவரே இப்படி செய்துகொள்கிறாராம்.
:-)))
கீதா சாம்பசிவம் அவர்களே, நீங்கள் 1967 பற்றிய விஷயத்தைத்தான் கேட்கிறீர்கள் என்ற அனுமானத்தில் இப்பதிலை அளிக்கிறேன்.
ராஜாஜி காமராஜ் இருவருமே வெவ்வேறு முகாம்களில். மற்றப்படி இருவரும் நண்பரகளே என்பதில் சந்தேகமே இல்லை. இது பற்றி நான் இட்ட பதிவு இதோ. http://dondu.blogspot.com/2006/11/5_26.html
ஆகவே ராஜாஜி அவர்கள் தனிவிரோதம் காரணமாக 1967-ல் காங்கிரஸை எதிர்த்தார் என்று கூறுவது தவறு.
1967-ல் தமிழகத்தின் நிலை என்ன? காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பதவியில் இருந்து வந்திருக்கிறது. வேறு கட்சி ஆட்சியை மக்கள் இக்காலக் கட்டத்தில் அறியவில்லை. 1967 வரை எல்லா கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டு வந்துள்ளன. 1962-ல் ஒரு கூட்டணி முயற்சி நடந்தது. ஆனால் தாமதமாக அதற்கான வேலைகள் துவங்கப்பட்டன. அதுவே அந்த ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பலத்தை அதிகரித்தது. ஆகவே 1967-ல் திமுக, ராஜாஜியின் சுதந்திரா கட்சி, ஃபார்வேர்ட் ப்ளாக், ம.பொ.சி. அவர்களின் தமிழரசுக் கட்சி எல்லாம் சேர்ந்து போட்டியிட்டன. தேர்தலில் ஓட்டுக்கள் சிதறாமல் பார்த்து கொண்டன. காங்கிரஸின் ஓட்டுவங்கி குறையவில்லை என்றாலும் அதை விட கூட்டு ஓட்டு வங்கி அதிகம் என்பது புலனாயிற்று.
ஆக, 1967 விஷயம் என்பது அப்போதைய தேர்தல் யுக்தியே. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் பிளவுபடாதிருந்தால் அதுவே வெற்றி பெற்றிருக்கக்கூடும் என்பது வேறு விஷயம்.
1971, 1975 எல்லாம் யாரும் 1967-ல் எதிர்ப்பார்த்திருக்க முடியாது என்பதே நிஜம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நீங்க விளம்பரப் பிரியர்னு பேசிக்கறாங்களே. அது குறித்து ஏதேனும் கருத்து?
பூதப்பாடி ராமலிங்கம்//
விளம்பரம் வேண்டும் என்றால் அதற்கான விலையையும் தர வேண்டியிருக்கும். ஆனால் என் விஷயத்தில் ஒரு அடாவடிப் பதிவரிடம் நான் பணிய மறுத்தேன். என்னை பணிந்து போகும்படி அறிவுரைகள் கூறப்பட்டன. அது எனது தன்மானத்துக்கு இழுக்கு என்பதால் அவ்வாறு செய்ய மறுத்தேன். விளைவு என்னவென்பதை எல்லோரும் அறிவீர்கள்.
ஆக என் விஷயத்தில் விலை என்னிடமிருந்து ஏற்கனவே அவதூறுகள் ரூபத்தில் எடுத்து கொள்ளப்பட்டு விட்டது. ஆகவே அதனால் வரும் விளம்பரத்தை நான் ஏன் ஏற்று பயனடையக் கூடாது? கெட்டதையும் நல்லதாக்கிக் கொள்ளும் எனக்குண்டு.
தமிழில் எழுதி என் மொழிபயர்ப்பு வேலைகளில் நல்ல முன்னேற்றம். இப்போது இதை நான் எழுதும்போது கூட ஒரு சகவலைப்பதிவர் என்னுடன் தொடர்பு கொண்டார். அவருக்கு ஜெர்மன் - ஆங்கில மொழிபெயர்ப்பு தேவையானதாக இருக்கிறது. அவருக்கு உடனே என் ஞாபகம் வந்தது. ஏன்? நான் பெற்ற விளம்பரம்தானே.
இதில் ஒரு தமாஷ். என் மனைவியின் அத்திம்பேருக்கு நான் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு துணை போவதை பற்றி குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அவர் தில்லியிலிருந்து வந்திருக்கிறார். அவருக்கு அறத்துப்பாலில் முதல் 29 அதிகாரங்களை தட்டச்சு செய்து பிரிண்ட் அவுட் கொடுத்தேன். அவர் ஒரு விஷயம் சொன்னார். தில்லியில் தன் நண்பர் ஒருவரிடம் இந்த விஷயத்தை பற்றி பேசும்போது தனது மருமகளின் கணவர், சென்னையில் இருப்பவர், உதவி செய்வதாக கூறி, அவர் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழியும் அறிந்தவர் என்று கூறி மேலே பேசும் முன்னரே அந்த நண்பர் கேஷுவலாக "டோண்டு ராகவனைப் ப்ற்றித்தானே குறிப்பிடுகிறீர்கள்" என்று கேட்டு இவரைத் திகைப்படையச் செய்திருக்கிறார்.
ஆக, என் விஷயத்தில் அசிங்கமான தாக்குதல் வந்தது. அதை நான் வெற்றிகரமாக எதிர்த்து தலை நிமிர்ந்து வெற்றியுடன் நிற்கிறேன். அதனால் வரும் விளம்பரத்தை எனது உரிமையாகக் கருதி எடுத்து கொள்கிறேன், அவ்வளவே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//சோ இந்தியாவின் மன்னரானால்?//
எல்லோரும் இன்னாட்டு மன்னர், சோவும் இன்னாட்டு மன்னர்.
தர்க்க சாத்திரத்தில் கேட்டகாரிகல் சில்லஜிஸத்தின்படி (categorical syllogism) இது சரியான வாதமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//What is it that you see in Cho?//
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல் வெல்லல் யார்க்கும் அரிது என்று கூறிய பொய்யாமொழிப்புலவராம் ஐயன் வள்ளுவரின் கூற்றுக்கு இலக்கணமாய் விளங்குவது சோ என்பதுதான் நான் அவரிடம் மகிழ்ச்சியுடன் பார்ப்பது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//சுடரோட்டத்தில் அவரை யாரும் கண்டுக்கிடலையாம். அதனால்தான் அவரே இப்படி செய்துகொள்கிறாராம்.
:-)))///
:-))))))))))))))))))))))))))))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
//என்னவோ தெரியலை பழைய டோண்டுவை இதில் காணுமே...//
Please define பழைய டோண்டு.
ஆரவாரப் பேய்களெல்லாம்
ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில்
கூடி விட்டதடா
தர்ம தேவன் கோயிலிலே
ஒளி துலங்குதடா - மனம்
சாந்தி சாந்தி சாந்தி என்று
ஓய்வு கொண்டதடா
இதற்கு முந்தைய டோண்டுவை நீங்கள் பார்க்க இயலாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//சோ இந்தியாவின் மன்னரானால்?
//சோ வெறியன்
What else Thuglak tharpar than :-)
நான் கேட்டது இது தான். ஆனால் பதில் எனக்குத் திருப்தியாக இல்லை. :(
// "61 வயது இளைஞன் டோண்டு ராகவனைக் கேள்வி கேட்போமா?"//
16 வயது போண்டா மாதவனை பதில் சொல்ல வைப்போமா?
:-))
நீங்கள் இறக்கும் போது ஒருவரை கண்டிப்பாக உங்களுடன் நரகத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும். யாரை அழைத்துச் செல்வீர்கள்?
ஏலேலோ ஐலசா பகுதி இந்தப் பதிவுக்கு இடம் மாறி விட்ட மாதிரி தோன்றுகிறதே! ;-)
அன்புடன்,
சுபமூகா
//நான் கேட்டது இது தான். ஆனால் பதில் எனக்குத் திருப்தியாக இல்லை. :(//
2007-ல் இருந்து கொண்டு 1967 பற்றி பேசுவது சுலபம் மேடம். 1967 நிகழ்வுகளையும் அப்போது காங்கிரஸ் போட்ட ஆட்டத்தையும் நேரில் பார்த்தவன் நான். எனக்கு அது இப்போதும் சமீபமே. அந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுற்றது காலத்தின் கட்டாயம். இதில் மாமனிதர் ராஜாஜியின் சுய நலம் ஒன்றும் இல்லை. அவரும் காமராஜரும் ஒருவரையொருவர் மதித்தவர்கள்.
ஆனால் தனது சுயநலத்துக்காக மாநில காங்கிரஸ் கட்சிகளை அசிங்கம் செய்து, முக்கியமாக திராவிடக் கட்சிகளின் காலில் விழுந்தது சர்வாதிகாரி இந்திரா காந்திதான். சாடுவதாக இருந்தால் அவரைத்தான் சாட வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ஏலேலோ ஐலசா பகுதி இந்தப் பதிவுக்கு இடம் மாறி விட்ட மாதிரி தோன்றுகிறதே! ;-)//
கேள்வி பதில் கேட்க்கும் கான்சப்ட் நமக்கு புதிதல்லவே? உங்கள் பதிவில் வரும் பின்னூட்டங்களை நீங்கள் ஏனோ பிரசுரிக்க விரும்பவில்லை. ஒரு கணிசமான அளவுக்கு பின்னூட்டங்களை சேர்க்க விரும்பியுள்ளீர்கள் என நினைக்கிறேன். அல்லது ஒரு அசத்தலான கேள்விக்கு காத்திருந்தீர்கள் என எண்ணுகிறேன்.
ஆனால் எனது அணுகுமுறை வேறு. கேள்விகளை வரும்போதே பிரசுரம் செய்து விட வேண்டும். அவற்றுக்கு பதில்கள், அப்பதில்கள் கிளப்பும் எதிர் கேள்விகள் என்று ஒரு ரோலர் கோஸ்டரில் போகும் உணர்வைத் தரவேண்டியுள்ளது. இல்லாவிட்டால் தமிழ்மணத்தின் முகப்பிலிருந்து வெகு சீக்கிரம் பதிவு மறையும்.
நான் உங்களிட்ட கேள்வியில் வேண்டுமென்றே எனது காரில் என்று குறிப்பிட்டிருந்தேன். கிழத்தின் ரவுசு தாங்க முடியவில்லை என்று யாராவது உங்களுக்கு மேல் கேள்விகள் தரட்டும் என்று எண்ணினேன்? ஆனால் நீங்கள்? நீங்களே என் கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டீர்கள்.
கேள்விகள் வந்திருக்குமாக இருக்கும். ஆனால் அவற்றை பூட்டி வைத்தால் என்ன செய்ய முடியும்?
After all, nature abhors a vacuum and even to retain one's position, one has to run very fast. :)))
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நீங்கள் இறக்கும் போது ஒருவரை கண்டிப்பாக உங்களுடன் நரகத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும். யாரை அழைத்துச் செல்வீர்கள்?//
என்னுடம் கண்ணியமான முறையில் வாதம் செய்ய விரும்புபவர்களை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//16 வயது போண்டா மாதவனை பதில் சொல்ல வைப்போமா?//
அதாவது என்னை விட 9 வயது இளைஞனை, அப்படித்தானே?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அப்போது உங்கள் மனநிலை:
1. டோண்டு ராகவனைப் பற்றி
2. த்ரிஷா, அசின், ஷ்ரேயா, நமீதா ஆகியோர் பற்றி என்னவாக இருக்கும்?
இந்த சிச்சுவேஷனுக்கு:
அ. கண்ணதாசன் மற்றும்
ஆ. வாலி என்ன பாட்டு எழுதுவார்கள்?//
டோண்டு பற்றிய மனநிலை:
இந்த கிழத்தோட ரவுசு தாங்கலை சாமி. வாடகைக் காரெலாம் தன்னோடதுன்னு பீத்திக்குது. டீக்கடைகாரரை கேட்டு அது எந்த டிராவல்ஸ் வண்டின்னு கேட்டு அந்த கம்பெனிக்க்ராங்க கிட்டே போட்டுக் கொடுக்க வேண்டியதுதான். அப்படியே லாலு பிரசாத்தையும் ஜாக்கிரதையா இருக்கச் சொல்லணும். ரயிலையும் அடிச்சுண்டு போயிடும் போல இருக்கே. அப்பா மகரநெடுங்குழைகாதனே உன் பக்தனை என்னன்னு விசாரிப்பா.
2. த்ரிஷா, அசின், ஷ்ரேயா, நமீதா ஆகியோர் பற்றி:
- பெண்களை நம்பாதே, கண்களே பெண்களை நம்பாதே.
- உலகே மாயம், வாழ்வே மாயம்.
கண்ணதாசன் கவிதை: நினைத்ததெல்லாம் நடந்து நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
வாலி கவிதை:
காரில் வந்து பிகர்களைத் தள்ளி,
போனவன் போனாண்டி
புலம்பும் கிளியா என்னை ஆக்கி போனவன் போனாண்டி ஹோய் ஹோய் ஹோய் போனவன் போனாண்டி.
பிருந்தாவனத்தின் நொந்தகுமாரன்
Post a Comment