விடாது கருப்பு செய்த ஒரு நல்ல காரியத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவரது பெரியார் பேச்சு பற்றிய இப்பதிவைத்தான் குறிப்பிடுகிறேன்.
தனது ஆருயிர் மனைவி நாகம்மாள் மறைந்த சமயத்தில் பெரியார் அவர்கள் மனம் விட்டு எழுதியதை இங்கே கீழே அப்படியே தருகிறேன்.
உண்மையிலேயே கூறுகிறேன் தனது இப்பேச்சால் பெரியார் அவர்கள் என் மதிப்பில் மிகவும் உயர்ந்தார். அவர் பொதுக்கூட்டங்களிலோ, தனது கட்டுரைகளிலோ என்னதான் கடுமையான சொற்களை உபயோகித்தாலும் நேரில் பழக இனிமையானவர் என்றும் தனக்கு மிகவும் இளையவர்களையும் வாங்க என்று மரியாதையாக விளிப்பார் என்றும் படித்துள்ளேன். ஹிந்து நிருபராக பணி புரிந்த எனது தந்தையார் நரசிம்மன் அவர்களே என்னிடம் கூறியிருக்கிறார் என்பதை நான் பெரியார் அவர்களது திருமணம் பற்றிய பதிவில் ஏற்கனவே எழுதியுள்ளேன்.
இப்போது வி.க.தனது பதிவில் இட்ட பெரியார் அவர்களது பேச்சை அப்படியே கீழே போடுகிறேன். நன்றி விடாது கருப்பு மற்றும் குடிஅரசு இதழ் 14.5.1933. தடித்த சாய்வெழுத்துகளில் சில வரிகளை குறித்திருப்பது நான். என்னைக் கவர்ந்த வரிகள் அவை.
"நாகம்மாள் மறைவு நன்மையைத் தருவதாகுக!
எனதருமைத் துணைவி, ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11.5.1933 ஆம் தேதி மாலை 7.45 மணிக்கு ஆவி நீத்தார். இதற்காக நான் துக்கப்படுவதா? மகிழ்ச்சியடைவதா? நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு லாபமா, நஷ்டமா என்பது இது சமயம் முடிவு கட்ட முடியாத காரியமாய் இருக்கிறது.
எப்படியிருந்தாலும், நாகம்மாளை ‘மணந்து' வாழ்க்கைத் துணையாகக் கொண்டு 35 வருட காலம் வாழ்ந்து விட்டேன். நாகம்மாளை நான்தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல், நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வரவில்லை.
நான் சுயலநல வாழ்வில் ‘மைனராய்', ‘காலியாய்', ‘சீமானாய்' இருந்த காலத்திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தார் என்பது மறுக்க முடியாத காரியம்.
பெண்கள் சுதந்திர விஷயமாகவும், பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ போதிக்கிறேனோ அதில் நூற்றில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக் கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.
ஆனால், நாகம்மாளோ பெண் அடிமை விஷயமாகவும் ஆண் உயர்வு விஷயமாகவும், சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமையாகவும் மூர்க்கமாகவும் குறிப்பிட்டிருந்ததோ அவற்றுள் ஒன்றுக்குப் பத்தாக நடந்து கொண்டிருந்தார் என்பதையும் அதை நான் ஏற்றுக் கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகிறேன்.
நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு விநாடியும் நன்றாய் உணர்ந்து வந்தேன். இவைகளுக்கெல்லம்ம் நான் சொல்லக்கூடிய ஏதாவதொரு சமாதானம் உண்டென்றால் அது வெகு சிறிய சமாதானமேயாகும்.
அதென்னவென்றால், நாகம்மாளின் இவ்வளவு காரியங்களையும் நான் பொதுநல சேவையில் ஈடுபட்ட பிறகு பொதுநலக் காரியங்களுக்கும், சிறப்பாகச் சுயமரியாதை இயக்கத்திற்குமே பயன்படுத்தி வந்தேன் என்பதுதான். நான் காங்கிரசிலிருக்கும் போது, நாகம்மாள், மறியல் விஷயங்களிலும் வைக்கம் சத்தியாகிரக விஷயத்திலும், சுயமரியாதை இயக்கத்திலும் ஒத்துழைத்து வந்தது உலகம் அறிந்ததாகும்.
ஆகவே, நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற்றென்று சொல்லட்டுமா? எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவும் விளங்கவில்லையே! எது எப்படியிருந்த போதிலும், நாகம்மாள் மறைவு ஒரு அதிசய காரியமல்ல. நாகம்மாள் இயற்கையை எய்தினார். இதிலொன்றும் அதிசயமில்லை.
ஆதலால், நாகம்மாள் மறைவால் எனக்கு அதிக சுதந்திரம் ஏற்பட்டதுடன் "குடும்பத் தொல்லை' ஒழிந்தது என்கின்ற ஓர் உயர் பதவியையும் அடைய இடமேற்பட்டது.
இது நிற்க. நாகம்மாள் மறைவை நான் எவ்வளவு மகிழ்ச்சியான காரியத்திற்கும் லாபமான காரியத்திற்கும் பயன்படுத்திக் கொள்கின்றேனோ, அந்த மாதிரி எனது மறைவையோ எனது நலிவையோ நாகம்மாள் உபயோகப்படுத்திக் கொள்ளமாட்டார். அதற்கு நேர்ரெதிரியடையாக்குவதற்காக உபயோகித்துக் கொள்வார். ஆதலால், நாகம்மாள் நலத்தைக் கோரியும், நாகம்மாள் எனக்கு முன் மறைந்தது எவ்வளவோ நன்மை.
2, 3 வருடங்களுக்கு முன்பிருந்தே நான் இனி இருக்கும் வாழ்நாள் முழுவதையும் சங்கராச்சாரிகள் போல (அவ்வளவு ஆடம்பரத்துடனல்ல பண வசூலுக்காக அல்ல) சஞ்சாரத்திலேயே, சுற்றுப் பிரயாணத்திலேயே இருக்க வேண்டும் என்றும் நமக்கென்று ஒரு தனி வீடோ அல்லது குறிப்பிட்ட இடத்தில் நிரந்தர வாசமோ என்பது கூடாதென்றும் கருதி இருந்தது உண்டு.
ஆனால், அதற்கு வேறு எவ்விதத் தடையும் இருந்திருக்கவில்லையென்றாலும், நாகம்மாள் பெரிய தடையாய் இருந்தார். இப்போது அந்தத் தடை இல்லாமல் போனது ஒரு பெரிய மகிழ்ச்சிக்குரிய காரியமாகும். ஆதலால், நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையைத் தருவதாகுக!
'குடிஅரசு' 14.5.1933"
இப்போது மறுபடியும் டோண்டு ராகவன்.
மகாத்மா காந்தி அவர்கள் தனது சத்திய சோதனையில் தன்னைப் பற்றி பல குறைகளை வெளிப்படையாக எழுதியதற்கு எவ்வகையிலும் பெரியார் அவர்கள் மேலே எழுதியது நேர்மையில் சிறிதும் குறைந்ததல்ல. உண்மையிலேயே அவர் பெரியார்தான். அவரை அப்படிப்பட்ட வரிகளை எழுத வைத்த உத்தமப் பெண்மணியான அமரர் நாகம்மாள் பற்றி கூறவே வேண்டாம்.
மறுபடியும் கூறுகிறேன், ஈவேரா அவர்கள் உண்மையிலேயே பெரியார்தான். அவர் ஏற்கனவே சிலப்பதிகாரத்தை பற்றி கூறியதுடன் நான் ஒத்துப் போனதை எழுதியுள்ளேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எளியமுறை யாப்பிலக்கணம்
-
*எளியமுறை யாப்பிலக்கணம்*
பிற்பகல் நேரம். பதிவில் இல்லாத எண்ணில் இருந்து ஒரு வாட்சாப் தகவல் வந்து
விழுந்தது. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கி...
3 weeks ago