3/11/2008

புது பணக்காரர்களை ஏன் பலருக்கு பிடிப்பதில்லை?

எனது நடேசன் பூங்கா சந்திப்பு பதிவில் ஐ.டி.க்காரர்களை சாடி வந்த பின்னூட்டங்களும் சரி, ஐடிக்காரர்களைச் சாடி வந்த மற்றப் பலபதிவுகளும் சரி ஒன்றை அடிப்படையாக கொண்டுள்ளன. அதுதான் பொறாமை. இம்மாதிரி எரிச்சல் சரித்திரத்தில் பல முறை நடந்துள்ளது,. இரண்டாம் உலக மகாயுத்தத்தின்போது பலர் அரசு காண்ட்ராக்ட்கள் எடுத்து பெறும் பணம் குவித்தனர். அதே சமயம் வேறு பலர் நகரங்களில் தத்தம் வீடுகளை காலி செய்து கொண்டு கிராமங்களுக்கு விரைந்தனர். யுத்தத்துக்குப் பிறகு புதுப்பணக்காரர்களைப் பார்த்து மற்றவர் வயிறெரிந்தனர்.

அதற்கு முன்பாக கடல்கடந்து பணம் சம்பாதித்து வந்தவர்களைப் பார்த்து உள்ளூர்க்காரர்கள் மனம் வெதும்பினர். கேரளாவிலிருந்து பல ஏழை இளைஞர்கள் வளைகுடா நாடுகளுக்கு எழுபதுகளில் செல்ல ஆரம்பித்து, உள்ளூருக்கு பணம் அனுப்பி கேரளாவில் பல கிராமங்களில் அலங்கார பங்களா கட்டியதில் உள்ளூர் நிலச்சுவான்தார்கள் கோபம் அடைந்ததைப் பற்றி அக்காலக் கட்டங்களில் வேணது படித்தாயிற்று. இதில் சாதிப் பிரச்சினை வேறு.

1995 முதல் 2002 வரை இருந்த டாட்.காம் கம்பெனிகளின் ஆதிக்கம் இருந்தபோது பலர் பணக்காரர்கள் ஆயினர். அவர்களில் பலர் அதற்கப்புறம் உடனடியாக ஏழைகளும் ஆயினர். அதைப் பார்த்து நன்றாக வேண்டும் இவர்களுக்கு என்று பார்வையாளர்கள் பலர் கெக்கலி கொட்டவும் தவறவில்லை. அதற்கப்புறம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கணினித்துறை சார்ந்தவருக்கு இருண்ட தினங்களே. எனக்கு தெரிந்து ஒரு இளைஞன் எம்.சி.ஏ. படித்து முடித்தவன் மாதம் ஆயிரம ரூபாய் வேலைக்கும் செல்லத் தயாராக இருந்தான். அதன்பிறகு நல்ல நிலைமை வந்தது. ஆக நான் கூறுவது இதுதான். பல ரிஸ்குகள் எடுத்து காரியம் செய்பவனைப் பார்த்து முதலில் கேலி செய்யும் உலகம். பிறகு அவன் வெற்றியடைந்தது பார்த்து வயிறெரியும்.

இப்போதே பாருங்களேன். விப்ரோவில் சம்பள வெட்டுக்கள், டி.சி.எஸ்.சில் ஆள்குறைப்பு என்றெல்லாம் எகத்தாளப் பதிவுகள் வர ஆரம்பித்து விட்டன. ஐ.டி. கம்பெனியில் வேலை செய்கிறான் ஒருவன் எனக் கண்டு கொண்டால், ஒரு ரூபாய்க்கு தரும் மாங்காய்பத்தைகூட அவனைப் பொருத்தவரை இரண்டு ரூபாய் விலைக்குத்தான் தரப்படுகிறது.

இது இந்தியாவுக்கு மட்டும்தான் என்று யாரும் எண்ணிவிட வேண்டாம் புதுப்பணக்காரர்களை
nouveaux riches என்று பெயரிட்டு, அவர்களைப் பற்றி இழிவாகப் பேசுவது எல்லா பழைய பணக்காரர்களுக்கும் வழக்கம்தான். அதிலும் தன் வீட்டில் வேலைக்காரனாக இருந்து விட்டு, பிறகு வெளியில் பெருத்த அளவில் பொருள் ஈட்டி சொந்த ஊருக்கு வந்து மிகப்பெரிய பணக்காரனாக நடமாடுபவரைக் கண்டால் பழைய எஜமானனுக்கு பற்றிக் கொண்டு வரும். இது பற்றி இப்பக்கத்தில் பார்க்கலாம்.
ஆனால் ஒன்று இது தவிர்க்க முடியாதுதான். ஐடிக்காரர்கள் இதை உணர்ந்து கொண்டு தங்களைப் பார்த்து வயிறெரிபவர்களை புறம் தள்ளிச் செல்வதே சரியான செயல்பாடாக இருக்கும். அதே சமயம் பணத்தையும் ஜாக்கிரதையாக சேமித்து வைத்து கொள்வதே புத்திசாலித்தனமாக இருக்கும். ஏனெனில் இப்போது இருக்கும் நிலையற்ற வாழ்வில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதுவும் கிரெடிட் கார்டு தருகிறேன் பேர்வழி என்று பல வங்கிகள் தலையில் மிளகாய் அரைக்க அலைகின்றன. சுயக்கட்டுப்பாடு இல்லாவிட்டால் கடன் வலையில் விழவேண்டியிருக்கும். பிறகு அனுதாபம் காட்டக்கூட ஆட்கள் இருக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்களைக் கண்டு அவ்வளவு பொறாமை. இந்தப் பொறாமையில் பழைய பணக்காரர்களுடன் சேர்ந்து, புதுப் பணக்காரர்கள் முதலில் ஏழைகளாக இருந்தபோது கூடவே இருந்து இன்னும் ஏழைகளாகவே இருப்பவர்களும் பொறாமைத் தீயில் வேகின்றனர். ஆகவே ஜாக்கிரதை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

27 comments:

ஜயராமன் said...

டோண்டு ஐயா,

புதுப்பணக்காரர்கள் என்பதற்காக (மட்டுமே) யாரும் இகழப்படுவதில்லை. ஆனால், புதுப்பணக்காரர்கள் பணத்தின் அருமை தெரியாமல் நடக்கும்போது உலகத்தினரால் எள்ளி நகைக்கப்படுகிறார்கள். பணத்தின் நிலையற்ற தன்மையை உணராமல் நடக்கும்போது உலகம் இவர்களைப் பரிகசிக்கிறது.

மேலும், இந்தியாவில் இன்று 90 சதவீத பொருளாதாரம் (70 சதவீத மக்களின் விவசாயம், 15 சதவீத மக்களின் உற்பத்தித்துறை, 5 சதவீத மக்களின் விவசாயமற்ற கிராம்ப் பொருளாதாரம் ) கடந்த பத்தாண்டுகளில் சராசரிக்கும் கீழுள்ள வளர்ச்சியையே கண்டிருக்கிறது. இதனால், மீதமுள்ள 10 சதவீத மக்களின் அபார பொருள்வளம் சமுதாயத்தில் இயலாதவர்களின் வாழ்க்கையை இன்னும் கடினமாக்குகிறது. இந்த சமச்சீர் அற்ற சமுதாயத்தில் பொதுப்பொருட்களுக்கு இயன்றவர்களும், இயலாதவர்களும் ஒருசேர போட்டி போடுவதால் இயலாதவர்கள் (அதாவது, ஒன்றும் இல்லாதவர்கள்)தோற்கிறார்கள்.

மேலும், ஒரு சில சாராரின் வாழ்க்கைத்தரம் அவர்களின் திறமைக்கும், தேவைக்கும் மிஞ்சியதாக அமைந்துவிடுவதால் உலகம் அவர்களை அந்த வசதிக்கு தகுதியானவர்கள் இல்லை என்று நினைக்கிறது. இதனாலும், அவர்களுக்கு மரியாதை சமூகத்தில் குறைகிறது.

தங்கள் பதிவின் கருத்து நன்று. ஆனால், அதில் இழையோடும் சார்புத்தன்மையை நான் ஒப்பவில்லை. புதுப்பணக்காரர்களை உலகம் "கரித்துக்கொட்டவில்லை". The Millionaire Next Door புத்தகம் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உண்மையில் புதுப்பணக்காரர்கள் பலப்பலர் கண்களுக்குத்தெரிவதில்லை. உண்மையில் பணக்காரன் என்பவன் ஒருவேளை வாசலில் இஸ்திரி போடுபவனாக கூட இருக்கலாம். பணக்காரர்கள் எப்போதும் பகட்டுக்காரில் (வாடகைக்கார் அல்ல) தான் காணப்படுவார்கள் என்ற நினைப்பு தவறு.

நன்றி

ஜயராமன்

dondu(#11168674346665545885) said...

இஸ்திரி போடுபவன் என்ன, பம்பாயில் பல வீடுகள் வைத்திருக்கும் தொழில்முறை பிச்சைக்காரர்களும் கூட உண்டு. அவர்கள் அடக்கி வாசிக்கும் முக்கியக் காரணம், வெளியில் தெரிந்தால் யாரும் பிச்சை போட மாட்டார்கள் என்பதாலேயே. ஆகவே அவர்கள் பணக்காரர்களாக இருப்பினும் செயல்முறையால் ஏழைகளே. அவர்களைப் பொருத்தவரை மற்றவர்கள் பொறாமை என்பது இரண்டாம் பட்சமே. அது இல்லாமல் இல்லை, உண்டுதான் ஆனால் அவ்வளவு இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

" உண்மையில் புதுப்பணக்காரர்கள் பலப்பலர் கண்களுக்குத்தெரிவதில்லை. உண்மையில் பணக்காரன் என்பவன் ஒருவேளை வாசலில் இஸ்திரி போடுபவனாக கூட இருக்கலாம். பணக்காரர்கள் எப்போதும் பகட்டுக்காரில் (வாடகைக்கார் அல்ல) தான் காணப்படுவார்கள் என்ற நினைப்பு தவறு."


சார் இது உங்களைக் குறிப்பிடுவது போன்று தெரிவதால் ஜயராமன் மீது எனது கடும் கண்டன்ங்களைப் பதிவு செய்கின்றேன்.

புள்ளிராஜா

ஜயராமன் said...

///சார் இது உங்களைக் குறிப்பிடுவது போன்று தெரிவதால///

இல்லை.

ஜயராமன்

dondu(#11168674346665545885) said...

அடேடே புள்ளிராஜா, நானே கவனிக்கவில்லையே. ஜயராமன் உங்கள் ஜோக் அபாரம், வாய்விட்டு சிரித்தேன். நீங்கள் கூறுவது உண்மைதான்.

எனது பழைய பதிவு ஒன்றிலிருந்து: "பொருளாதாரத்தில் பொருளாதார மனிதன் என்ற ஒரு கோட்பாடு கடைபிடிக்கப்படுகிறது. அந்த மாதிரி உண்மையிலேயே ஒரு மனிதன் இருப்பானா என்பதே கேள்விக்குரியதே. இருப்பினும் அந்த கோட்பாட்டை உபயோகித்து சில பொருளாதாரப் புரிதல்களை அளிக்க முடிந்தது என்பதும் உண்மையே. ஒரு பொருளாதார மனிதன் பொருளாதார நிர்பந்தத்திற்கேற்ப நடந்து கொள்வதாக ஐதீகம்.

ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியையாகவும், உதவி முதல்வராகவும் பணி புரியும் என் தங்கையிடம் பல ஆண்டுகளுக்கு முன்னால் இது பற்றி பேசிக் கொண்டிருந்த போது அவள் "உன்னை மாதிரி நாலுபேர் இருந்தா போதும் பொருளாதார மனிதன்னு ஒருத்தன் இருக்கானா என்பதே சந்தேகமாகி விடும். உன்னை மாதிரி பொருளாதார லாஜிக்கை மீறும் சில நபர்களால் பல பொருளாதார தியரிகள் விதிவிலக்குகளை பற்றிப் பேச வேண்டியிருக்கிறது" என்று சிரித்துக் கொண்டே கூறினாள். அதாவது நான் பொருளாதாரக் கோட்பாட்டுக்கு உட்பட்டு நடக்கவில்லையாம். சம்பாத்தியம் அதிகரிக்க, அதிகரிக்க செலவை அதற்கு ஏற்ப அமைத்துக் கொள்வதில்லையாம். இத்யாதி, இத்யாதி. அப்போது அவளிடம் நான் கேட்டேன், நான் எம்மாதிரி மனிதன் என்று அவள் ஒரே வார்த்தையில் பதில் கூறினாள், அதன் ஹிந்தி மொழி பெயர்ப்பு "வன மானுஷ்".

பார்க்க: http://dondu.blogspot.com/2006/09/blog-post_14.html

பை தி வே வாடகைக்கார் முதலாளிகள் பலர் நான் வாடகைக்கு எடுக்கும் காரை எனது கார் என்று எழுதுவது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு புகார் அனுப்ப இருக்கிறார்கள் என அறிகிறேன். :)))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இதென்ன ஜயராமன் குழந்தை மாதிரி. நீங்கள் என் நெருங்கிய நண்பர். என்னைக் கலாய்க்க உங்களுக்கு முழு உரிமையும் உண்டு. மேலும் இதை நான் வாய் விட்டு சிரித்து ரசித்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜயராமன் said...

/// ஆகவே அவர்கள் பணக்காரர்களாக இருப்பினும் செயல்முறையால் ஏழைகளே.///

இஸ்திரிக்காரன் உதாரணமும், இந்த பிச்சைக்காரனின் உதாரணமும் வெவ்வேறு. என் உதாரணம் பணக்காரர் என்கிற வர்க்கம் பகட்டு வாழ்க்கை என்று இல்லாமல் சராசரி தினசரி வாழ்க்கையிலும் அமைகிறது என்பதைக் குறித்து. இன்னும் சொல்லப்போனால், இம்மாதிரி "பகட்டில்லா" பணக்காரர்களே பெரும்பான்மை. * Many of the types of businesses we are in could be classified as dullnormal. We are welding contractors, auctioneers, rice farmers, owners of mobile-home parks, pest controllers, coin and stamp dealers, and paving contractors.

( http://www.nytimes.com/books/first/s/stanley-millionaire.html )

இம்மாதிரி பணக்காரர்களிடம் உலகம் எகத்தாளமும், காழ்ப்பும் பாராட்டுவதில்லை. அவர்களின் பணக்காரத்தனம் தெரிந்தால் கூட அவை அவர்களால் தகுதியுடன் சம்பாதிக்கப்பட்டவை என்றே சமுதாயம் மதிக்கிறது.

ஆனால், நீங்கள் சொல்லும் உதாரணம் ஒரு புரட்டு ஏமாற்றுப் பிழைப்பை பற்றி.

என் கருத்தை சரியாக விளக்கியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

நன்றி

ஜயராமன்

ஜயராமன் said...

பொருளாதார மனிதன்

இந்தியர்கள் பெரும்பாலும் வடிகட்டிய கஞ்சர்கள் என்கிறார்கள் உலக வல்லுனர்கள். ஏனென்றால், அவர்கள் சாமான்யத்தில் ஒரு பொருளுக்கு அதிக விலை கொடுத்துவிட மாட்டார்கள்.

அதிலும், தெற்கிந்தியர்கள் மிகவும் அல்பமான நுகர்வோர்கள் என்று வெளிநாட்டில் பல தடவை புகார் சொல்லும் வியாபாரிகளைக் கண்டிருக்கிறேன்.

இதெல்லாம், ஒரு பொருளாதார மனிதனுக்கான இயல்பு. இது உலகளவில் ஆசியாவின் பல நாடுகளில் - முழுமையாக இல்லாவிட்டாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு - காணக்கிடைக்கிறது.

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.

நன்றி

ஜயராமன்

Anonymous said...

இதேபோல் கல்விவாய்ப்பு கிடைக்கப்பெற்றவர்களைப்பார்த்துப் கல்விவாய்ப்புகிடைக்கப்பெறாதவர்களும் பொறாமைப்படுவதைக் கண்டி(ரு)க்கிறேன்.
:-)

அமர பாரதி said...

டோன்டு அவர்களே,

உங்களுடைய பதிவுகளின் ரெகுலர் வாசகன் நான். இந்த பதிவு என்னை பின்னூட்டமிட தோன்றியதால் சில வார்த்தைகள். உங்களுடைய கருத்துக்கள் நிச்சயமாக பின்பற்றப்படவேண்டியவை, கொஞ்சமும் மனமாச்சர்யங்கள் இல்லாமல் சொல்லி இருக்கிறீர்கள். இந்த புது பணக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம், அதுவும் அவர்களுடைய பால்ய கால சினேகிதர்களுடன் இன்னும் அதிக ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.

dondu(#11168674346665545885) said...

நன்றி அமரபாரதி.
ஜயராமன், உங்கள் வழிக்கே வருகிறேன். இஸ்திரிக்காரர்களும் மற்ற தொழில்காரர்களும் அடக்கி வாசிப்பதும் கூட அனேகமாக மற்றவர்கள் பொறாமையைத் தவிர்ப்பதற்காகத்தான். மேலும் இப்படி எல்லாம் பந்தா செய்யாது இருப்பதால் அவர்கள் கடைகளுக்கு சென்று பேரம் பேசி பொருட்கள் வாங்க இயலுகிறது.

மற்றப்படி அமெரிக்க கிரெடிட் கார்டு கம்பெனிகளுக்கு இந்தியர்கள் என்றாலே அலர்ஜி என்று படித்துள்ளேன். :))

அன்புடன்,
டோண்டு ராகவன்

அமர பாரதி said...

டோன்டு அவர்களே,

அமெரிக்க கிரெடிட் கார்ட் கம்பெனிகளை விட வெகேஷன் டூர் ஏற்பாடு செய்யும் கம்பெனிகள் இந்தியர்கள் என்றால் ஓடிப்போய் விடுவார்கள். ஒரு மணி நேரம் அவர்களிடம் எல்லா விஷயங்களையும் கேட்டு விட்டு அனைத்து லீப் லெட்டுகளையும் பெற்றுக்கொண்டு, வீட்டில் கலந்தாலோசித்துவிட்டு வருகிறோம் என்று சொல்லி கானாமல் போய்விடுவார்கள்.

dondu(#11168674346665545885) said...

வெக்கேஷன் டூர் ஏற்பாடு செய்யும் பல கம்பெனிகள் இருக்குமல்லவா, எல்லாவற்றையும் கம்பேர் செய்ய வேண்டியது அவசியம்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அமர பாரதி said...

கம்பேர் மட்டும் தான் செய்வார்கள் என்று நினைக்கிறேன். சில நாட்கள் முன்னால் என்னுடைய நண்பன் இதே போல ஒரு சந்திப்பில் அவனிடம், "நீங்கள் புக் செய்வதாக இருந்தால் சொல்லுங்கள், இல்லையென்றால் என்னுடைய நேரத்தை வேஸ்ட் செய்ய விருப்பமில்லை" என்று சொல்லி விட்டார்கள்.

Anonymous said...

Mr.Raghavan

Present day youngsters should also learn to balance between enjoyment and savings.
To spend mindlessly without any forethought for savings and heavy usage of credit card is a disaster waiting to happen.

Anonymous said...

//ஐ.டி.க்காரர்களை சாடி வந்த பின்னூட்டங்களும் சரி, ஐடிக்காரர்களைச் சாடி வந்த மற்றப் பலபதிவுகளும் சரி ஒன்றை அடிப்படையாக கொண்டுள்ளன. அதுதான் பொறாமை. ...பிறகு புதுப்பணக்காரர்களைப் பார்த்து மற்றவர் வயிறெரிந்தனர்.//

சூப்பர், ஒரே பத்தியில் ஐ.டி வெறியர்களின் அடிப்படை என்னத்தை உடைத்துவிட்டீர்கள்.

தம்பிகளா நீங்க மருந்து கடைக்கு பொய் ஜெலுசில் வாங்கி சாப்புடுங்கோ.

நாம் அடிக்கடி ஜெலுசிலுக்கு பரிந்துரை செய்வதால், உங்கள் வலைப்பூவில் விளம்பரம் கொடுக்க கட்டாயம் ஜெலுசில் கம்பெனியிடம் பேச வேண்டும்.

dondu(#11168674346665545885) said...

கணேஷ் அவர்களே,

ஒரேயடியாக செலவழிக்காது சேமிப்பதும் எப்போதுமே ஸ்மார்ட் ஆகாது.

இது சம்பந்தமாக நான் எனது பழைய பதிவு ஒன்றில் இவ்வாறு எழுதியுள்ளேன்.

"சேமித்து நல்லபடியாக முதலீடு செய்தால் அதன் மூலம் அதிக வருமானம் வருமல்லவா? விலைவாசிகள் என்னவோ குறையப்போவதில்லை. செலவுக்கு மேலேயே வருமானம் இருக்குமாறு பார்ப்பதுதான் புத்திசாலித்தனம். அதற்கான முறைகளில் ஒன்றுதான் சேமிப்பின் மூலம் நமது பணமே நமக்காக மேலும் பணம் ஈட்டுவதாகும். இன்னொரு வழி செலவுக்கு மேலே வருமானம் ஈட்ட வேண்டியதுதான் என்பதையும் கூறவேண்டுமோ?

அதற்காக ஒரேயடியாக சேமித்து கொண்டே இருக்க வேண்டுமா? என்ன சௌகரியங்களோ அவற்றையும் அனுபவிக்க வேண்டாமா? அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது. அவை எந்த அளவில் பேலன்ஸ் செய்ய வேண்டும் என்பது அவரவர் வாழ்க்கை உள்விவகாரம். ஓரளவுக்குமேல் அதில் மற்றவர் தலையீடு இருக்க அனுமதிக்கலாகாது.

எனக்கு 12 வயதாயிருந்த போது, காங்கிரஸ் பொருட்காட்சிக்கு சென்றிருந்தேன். கூடவே என் அத்தை பிள்ளையும் வந்தான். எனக்கு என் அம்மா 70 பைசா தந்தார். அவனுக்கு என் அத்தை இரண்டு ரூபாய் தந்தார். அப்போதே டட்ச் ட்ரீட் முறைதான். உள்ளே செல்ல டிக்கட் 12 பைசா. பிறகு இரண்டு சித்திரக் கதை புத்தகம் ஒன்று 12 பைசா வீதம் வாங்கினேன். ஆக 36 பைசாக்கள் செலவு. வெறுமனே பொருட்காட்சியை சுற்றி வந்தேன். கூட வந்த அத்தை பிள்ளையோ அத்தனைப் பணத்தையும் செலவழித்தான். சில சமயம் எனக்கும் சில பொருட்கள் வாங்கித் தர முன்வந்தான். (அவனுக்கு எப்போதுமே தாராள மனசு). ஆனால் நான் மறுத்துவிட்டேன். பிறகு வீட்டுக்கு திரும்பினோம். போகவர நடை மட்டுமே. என் அம்மாவிடம் பெருமையாக நான் மீதம் பிடித்ததைக் காட்ட அவர் அதை எடுத்து வேறு செலவுக்கு உபயோகித்தார். அதற்காக அவரைக் குற்றம் சொல்ல இயலாது. வீட்டு நிலவரம் அப்படி. ஆனால் அதே சமயம் நான் 70 பைசாவையுமே செலவழித்திருந்தாலும் அவர் ஒன்றும் கூறியிருந்திருக்க மாட்டார்தான்.

இங்குதான் நான் நேரிடையாகவே ஒரு பாடம் கற்றேன். அதாவது செலவழிக்க வேண்டியதை செலவழிக்க வேண்டும் என்பதுதான் அது. மீதம் செய்தால் இம்மாதிரி கைமீறிப் போவதையும் எதிர்ப்பார்க்கத்தான் வேண்டும்".

பார்க்க: http://dondu.blogspot.com/2007/11/blog-post_09.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

பொறாமை / வயிதேரிச்சலால் பாதிக்க பட்டவர்கள் ஜெலுசில் வாங்க, அரசு மானியம் கொடுக்க வேண்டும்.

Anonymous said...

மேலும் இதை நான் வாய் விட்டு சிரித்து ரசித்தேன்.///


J= Joker

Anonymous said...

//இந்தியர்கள் பெரும்பாலும் வடிகட்டிய கஞ்சர்கள் என்கிறார்கள் உலக வல்லுனர்கள்.//

ஆனால் கஞ்சத்தனத்திலும் சைனர்களை நாம் மிஞ்சமுடியாது. அவர்களின் கஞ்சத்தனத்தை அமெரிக்காவில் பார்த்து நொந்து விட்டேன்.

Anonymous said...

"ஆனால் கஞ்சத்தனத்திலும் சைனர்களை நாம் மிஞ்சமுடியாது. அவர்களின் கஞ்சத்தனத்தை அமெரிக்காவில் பார்த்து நொந்து விட்டேன்."

I agree with this. There is a saying about Indians and Chinese. An Indian and a china man cannot do business together, because Indians do not want to spend any money at all but Chinese want every penny from others.

Anonymous said...

இப்பதிவு உங்களின் குறுகிய மனப்பான்மை.
சமூகப்பொறுப்போ அக்கறையோ மருந்துக்கும் இல்லை.

//டோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன்.//

குழந்தைகளின் விளையாட்டுகளிலேயே பிரதிபலிக்கும் 'இச்சிந்தனையை' நீங்கள் வாழ்வில் முட்டி மோதி தெரிந்துகொண்டதை அறிய வியப்பே மேலிடுகிறது.

-ஐயப்பன்-

Anonymous said...

அதுசரி, தலைப்பு "புது 'பணக்காரர்'களை ஏன் பலருக்கு பிடிப்பதில்லை?" யா அல்லது "புது 'பணக்கார்'களை ஏன் பலருக்கு பிடிப்பதில்லை?" தானா...

dondu(#11168674346665545885) said...

முன்னொரு பதிவில் கோவில்கள் கோவிகள் என எழுதப்பட்டு குழப்பம் உண்டான அளவில் பணக்காருக்கு வரவில்லை என்றுதான் நினைக்கிறேன். ஏனெனில் பேச்சுத் தமிழில் பால்காரரை பால்கார் என்றும் தயிர்க்காரரை தயிர்க்கார் என்றும் அழைப்பது சகஜம். பால்காரர், தயிர்க்காரர் என்று சமயத்தில் நாக்கு முழுமையாக புறள இயலாததே அதற்கு காரணம்.

எது எப்படியானாலும் பணக்காரர் என்றுதான் எழுதியிருக்க வேண்டும். தவற்றைத் திருத்தினாலும், தமிழ்மணம் என்னவோ பணக்கார் என்றுதான் காட்டிக் கொண்டிருக்கும். அது இன்னும் கோவிகள் என்றுதானே காட்டுகிறது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

K.R.அதியமான் said...

IT people paRRi oru nalalla argument ; paarkka :

http://balaji_ammu.blogspot.com/2008/02/418.html

சீனு said...

//புதுப்பணக்காரர்கள் என்பதற்காக (மட்டுமே) யாரும் இகழப்படுவதில்லை. ஆனால், புதுப்பணக்காரர்கள் பணத்தின் அருமை தெரியாமல் நடக்கும்போது உலகத்தினரால் எள்ளி நகைக்கப்படுகிறார்கள். பணத்தின் நிலையற்ற தன்மையை உணராமல் நடக்கும்போது உலகம் இவர்களைப் பரிகசிக்கிறது.//

விடுங்க சார்! அடி பட்டா தானா திருந்த போறாங்க...

Anonymous said...

ஐ.டி.காரர்களின் இருண்ட பக்கங்கள் பற்றிய என நியாயமான கேள்விகட்கு எந்த மேதாவியும் (டோண்டு அவர்கள் உட்பட) பதில் சொல்லவில்லை. சொல்லமுடியவில்லை. ஆனால் கிண்டல் செய்ய மட்டும் தெரிகிறது.

கோமணன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது