பகுதி - 3
பகுதி - 2
பகுதி - 1
சற்று நேரம் முன்னால்தான் புத்தகத்தை இரண்டாம் முறையாக முழுக்க படித்து முடித்தேன்.
விட்ட இடத்திலிருந்து கதையைத் தொடங்குகிறேன்.
வியாசரின் பாரதத்தில் வியாசர் விநாயகரிடம் கதையைக் கூறக்கூற அவர் எழுதியதாகச் சொல்லப்பட்டுள்ளது. இங்கும் அப்படித்தான். ஆனால் என்ன, இங்கு வி.வி.ஜி அடிக்கடி ஸ்டெனோ கணபதியிடம தன் எண்ணங்களைக் கூறி கதையைக் கோர்வைப்படுத்துவது அதிகம் காண்பிக்கப்படுகிறது. ஆனால் கணபதி பேசுவது இதில் வரவில்லை. வி.வி.ஜி மட்டுமே பேசுகிறார். மற்றப்படி மூல நூலை நான் குறிப்பிடாது வெறுமனே கதையைக் கூறிச் சென்றால் அது சஷி தாரூரின் The great Indian novel என்று வைத்து கொள்ளவும்.
பிரிட்டிஷ் ரெசிடண்ட் சர். ரிச்சர்ட் தனது உதவியாளரிடம் கங்காஜியின் நடவடிக்கை குறித்து புலம்புகிறார். அவரது உதவியாளர் ஹீஸ்லாப் (Heaslop) கூறுவது என்னவென்றால், அஸ்தினாபுரத்தின் இளவரசர் பதவியை சத்யவதியின் வாரிசுகளுக்காக விட்டு கொடுத்திருந்தாலும், அதன் காப்பாளர் (regent) பதவியிலிருந்து அவர் எப்போதுமே முறைப்படி ராஜினாமா செய்யவில்லை, ஆகவே அவரது நடவடிக்கைக்காக (மோதிஹரி என்னும் ஊரில் விவசாயிகளுக்காக போராடியது) அஸ்தினாபுரத்தை ஆங்கிலேயர் கைப்பற்றலாம் என்ற ஆலோசனையும் கூறுகிறார். இது ஒரு புறம் இருக்க அஸ்தினாபுரத்துக்கு திரும்பவும் வருகிறார் வி.வி.ஜி.
திருதிராஷ்டிரர் காந்தாரியின் மணவாழ்க்கை நன்றாகவே தொடங்குகிறது. காந்தாரி தன் கணவன் பார்க்கவியலாத உலகம் தனக்குத் தேவையில்லை என தன் கண்களை துணியால் கட்டிக் கொள்கிறாள். வியாசர் கூறிய 100 பிள்ளைகளுக்கு பதில் ஒரே ஒரு பெண் பிரிய துரியோதனி பிறந்ததையும் போன பதிவிலே கூறியாகி விட்டது. பாண்டுவின் கஷ்டத்தையும் அதே பதிவில் கூறியாகி விட்டது. ஆனால் பாண்டுவுக்கோ வாரிசுகள் வேண்டும். ஏனெனில் வாரிசு இல்லாத அரசுகளை பிரிட்டிஷார் தம்வசப்படுத்திக் கொள்வது அக்காலத்தின் கட்டாயம். ஆக, பாண்டு தன் மனைவிகளிடம் வேறு யாரிடமிருந்தாவது பிள்ளைகளை பெற்றுத் தர கேட்டு கொள்கிறார். உடனே குந்தி தான் திருமணத்துக்கு முன்னமே Hyperion Helios (கதிரவன்) என்ற வேற்று நாட்டான் ஒருவனுடன் சினேகம் ஏற்பட்டு ஒரு குழந்தையைப் பெற்றதாகவும், அபவாதத்துக்கு பயந்து அதை ஆற்றில் கூடையில் வைத்து அனுப்பியதாகவும், தேடினால் அக்குழந்தையைக் கண்டெடுத்து வாரிசாக நியமிக்கலாம் என்று ஆலோசனை கூறுகிறாள். ஆனால் பாண்டு ஒத்து கொள்ளவில்லை.
ஆகவே குந்தி, தர்மா (ஒரு இளம் நீதிபதி), அரண்மனைக் காவல்படைத் தலைவன் மேஜர் வாயு மற்றும் தேவேந்திர யோகி ஆகியோருடன் சேர்ந்து முறையே யுதிஷ்டிரர், வீரபீமன் மற்றும் அர்ஜுனை பெற்றெடுக்கிறாள். அதற்குள் தாவு தீர, இதற்கு மேல் முடியாது என்று கூறிவிட, மாத்ரி தான் மட்டும் எவ்வகையில் குறைந்தவள் என்று அச்வின் மற்றும் அஷ்வின் என்னும் இரட்டை சகோதரர்களுடன் சேர்ந்து நகுல சகாதேவர்களை பெற்றெடுக்கிறாள்.
இதுவரை வந்த பாத்திரங்கள் இந்திய சரித்திரத்தில் யார் யார் என்பதை ஒரு முறை பார்த்தல் சவுகரியமாக இருக்கும். ஏற்கனவே குறிப்பிட்டது போல வேத வியாசர் ராஜாஜி. (பிறகு அவரே சஞ்சீவ ரெட்டியாகவும் ஆச்சாரிய கிருபளானியாகவும் வருவது பின்னால் வரும் அத்தியாயங்களில்). கங்காஜிதான் காந்திஜி, திருதிராஷ்டிரர் நேருஜி, காந்தாரி கமலா நேரு, பிரிய துரியோதனி இந்திரா காந்தி (அவருக்கு பிரியதர்சினி என்றும் பெயர் உண்டு). பாண்டு சுபாஷ் சந்திர போஸ். விதுரர் சுபாஷ் சந்திர போஸ். யுதிஷ்டிரர் மொரார்ஜி தேசாய், பீமன் இந்திய சேனை, அர்ஜுனன் இந்திய பத்திரிகை உலகம், நகுலன் சிவில் சர்வீஸ், சகாதேவன் வெளிநாட்டு சேவை, அம்பா (சிகண்டி) நாதுராம் கோட்ஸே.
அஸ்தினாபுரத்தை ஆங்கிலேயர் அபகரிக்கின்றனர். அதன் மக்கள் தெருக்களில் கூடி பேசுகின்றனர். "Bibighar" தோட்டத்தில் அவர்கள் கூடுகின்றனர். கங்காஜி அங்கு வந்து மக்களை சந்திப்பதாக வதந்தி. அங்கு ஆங்கிலேய கர்னல் ருட்யார்ட் மக்கள் மேல் துப்பாக்கி சூடு நடத்தி பலரைக் கொல்விக்கிறான். (இங்கு சஷி தாரூர் இரண்டு நிகழ்ச்சிகளை ஒரே சமயத்தில் தருகிறார். அவத் ராஜ்ஜியத்தை 1857-ல் அபகரித்தது, ஜாலியன் வாலாபாக் படுகொலை அதற்கு ஐம்பது ஆண்டுகள் பிறகு. ஆனால் இதையெல்லாம் ரொம்ப கண்டுக் கொள்ளக்கூடாது). கிட்டத்தட்ட 400 பேர் கொல்லப்படுகின்றனர், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு படுகாயம்.
அதற்கு பிறகு, கர்னல் ருட்யார்டுக்கு 2.5 லட்சம் பவுண்டு அளவில் பென்ஷன்/நிதித்திரட்டல். பெயரிடப்படாத நோபல் பரிசு பெற்ற கவிஞர் தனது சர் பட்டத்தைத் துறக்கிறார் (ரவீந்திரநாத் டாகுர்). ருட்யார்டை கொல்ல முனைந்த தேச பக்தர்கள் தவறுதலாக ருட்யார்ட்டுக்கு பதிலாக கிப்ளிங் என்பவரைக் கொல்கின்றனர்.
விதுரர் சிவில் சர்வீசிலிருந்து ராஜினாமா செய்ய முன்வருகிறார். ஆனால் கங்காஜி மற்றும் திருதிராஷ்டிரர் அவரை அவ்வாறு செய்வதிலிருந்து தடுக்கின்றனர். இப்போது அஸ்தினாபுர அரசக் குடும்பம் கௌரவர்கள் கட்சியில் (காங்கிரஸ்) ஈடுபடுகின்றனர். திருதிராஷ்டிரர் அதன் தலைவர், பாண்டு எல்லா மட்டத்து மக்களிடமும் கலந்து கட்சியை வளர்க்கிறார்.
கல்கத்தா அருகே சணல் ஆலையிருக்கும் பட்ஜ் பட்ஜ் என்னும் இடத்தில் தொற்றுநோய் பரவ, தொழிலாளர்களுக்கு கங்காஜியின் வெளிநாட்டு சிஷ்யை சாராபென் சணல் ஆலையின் மேலாளரான தனது சகோதரரிடம் பேசி போனஸ் தரச் செய்கிறார். பிறகு தொற்றுநோய் நின்றதும் போனஸ் நிறுத்தப்பட, கங்காஜி போராடி அதை மீட்டு தருகிறார்.
இப்போது பான்டுவுக்கும் திருதிராஷ்டிரருக்கும் இடையில் பிரச்சினை ஏற்படுகிறது. இருவருமே கௌரவர் கட்சிக்குள்ளேயே இருந்தாலும் பாண்டு தீவிரவாதி, திருதிராஷ்டிரர் மிதவாதி. கங்காஜி வெள்ளைக்கார அரசால் கூட்டப்பட்ட வட்ட மேஜை மகாநாட்டுக்கு செல்கிறார். பாலக்காட்டிலிருந்து வந்த ஒரு கவுரவ கட்சி நிர்வாகி மஹாதேவ மேனன். மாங்காய்கள் மேல் விதிக்கப்படும் வரி சம்பந்தமாக ஏதேனும் கங்காஜி செய்ய வேண்டும் அவர் கேட்டுக் கொள்ள கங்காஜி மாங்காய் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கிறார். பாண்டு இதை எதிர்த்து கௌரவர் கட்சியிலிருந்து தள்ளி நிற்கிறார். சில நூறு மைல்கள் கடந்து ஒரு தோட்டத்தில் காந்திஜி மாங்காய் பறிக்கிறார். அடுத்த நாள் கைது செய்யப்படுகிறார்.
இதனால் நாடு முழுதும் போராட்டம் ஆரம்பிக்கிறது. சவுராஸா என்னும் இடத்தில் போராட்டம் வன்முறை பாதையை எடுத்து இரு போலீஸார் கொல்லப்படுகின்றனர். உடனே கங்காஜி போராட்டத்தை கை விடுகிறார். வைஸ்ராயைப் பார்க்க செல்லும் கங்காஜி அவருக்கு ஆட்டுப்பாலின் மகத்துவத்தை விளக்குகிறார்.
காந்தி திரைப்படத்தைப் பார்த்த எல்லோருக்கும் மேலே சொன்ன காட்சிகள் விளங்கியிருக்கும் என நினைக்கிறேன். ஆனால் என்ன, பல தனித்தனி நிகழ்ச்சிகளை கலந்து கிச்சடியாக்குகிறார் சஷி தாரூர். படிப்பவர்கள் கவனத்துடன் இல்லையென்றால் டரியல் ஆவார்கள்.
மிகுதியை அடுத்தப் பதிவில் பார்ப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Manasa Book Club, Chennai.
-
Hi Sir, Hope you’re doing well. Manasa Publications has launched the
‘Manasa Book Club’ — a monthly gathering for readers and writers. The meet
will be on ...
7 hours ago

3 comments:
சில வருடங்களுக்கு முன் படிக்கத் துடங்கி பாதியில் நிறுத்தி விட்டேன். "பெரியவன்" ஆனதும் தொடர வேண்டும்.
சார் பதிவுக்கு டரியல் tag சேர்க்கவும்
இந்து மதமே புரட்டு. அதில் வரும் கதைகள் புரட்டோ புரட்டு. டோண்டு அவர்களே நடத்துங்கள். இன்னும் எத்தனை காலத்துக்கு என்று பார்க்கலாம்.
கோமணகிருஷ்ணன்
Post a Comment