மேலே உள்ள அறிவிப்பில் ஆங்கிலேய லாரி ஓட்டுனர்களுக்கு பிரச்சினை ஏதும் இல்லைதான். ஆனாப் பாருங்க, வெல்ஷ் மொழிக்காரர்கள் டரியல் ஆனார்கள். ஏனெனில் அது என்ன கூறுகிறது என்றால், “நான் இப்போது அலுவலகத்தில் இல்லை. இருப்பினும் அனுப்ப வேண்டிய மொழிபெயர்ப்பு வேலைகளை அனுப்பி விடுங்கள், நான் வந்ததும் பார்க்கிறேன்”
அந்த அறிவிப்பு பலகையின் படம்
இந்த இடுகையிலிருந்து எடுத்தது.
வெல்ஷ்காரர்கள் டரியல் ஆனதில் என்ன ஆச்சரியம்?
நடந்தது என்ன? அந்த ஊரில் எல்லா அறிவிப்புகளும் ஆங்கிலம் மற்றும் வெல்ஷ் மொழிகளில் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் “இது குடியிருப்பு இடம், இங்கு கனரக வண்டிகள் வர அனுமதி இல்லை” என்று எழுதியாகி விட்டது. அதை வெல்ஷ் மொழிக்கு மாற்ற வேண்டும் என்று அங்கு வேலை செய்யும் ஒரு அதிகாரி வசம் பொறுப்பை ஒப்படைத்துள்ளனர். அவரும் ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு (மொழிபெயர்ப்பாளர் பெயர் டோண்டு ராகவன் அல்ல, அவனுக்கு வெல்ஷ் மொழி தெரியாது) இது சம்பந்தமாக மின்னஞ்சலை எழுதி அதில் மேலே ஆங்கிலத்தில் உள்ளதைப் போட்டு இதை வெல்ஷ் மொழியில் மாற்று ராஜா என்று அனுப்ப, அந்த பரதேசி மின்னஞ்சல் வரும் நேரம் பார்த்து அங்கு இல்லாமல் போக, அப்போது தன்னிச்சையான மறுமொழியை மின்னஞ்சல் சேவையில் உருவாகி திரும்பப் போயிருக்கிறது. அது வெல்ஷ் மொழியில் கூறியதுதான் மேலே சொன்ன “நான் இப்போது அலுவலகத்தில் இல்லை. இருப்பினும் அனுப்ப வேண்டிய மொழிபெயர்ப்பு வேலைகளை அனுப்பி விடுங்கள், நான் வந்ததும் பார்க்கிறேன்” என்ற அறிவிப்பு.
இப்போதுதான் விதி சிரித்துள்ளது. இந்த பதிலை பெற்ற சம்பந்தப்பட்ட அபிஷ்டு அதிகாரி (சுத்தமாக வெல்ஷ் மொழி ஞானமே இல்லாதவர் என்பது வெள்ளிடைமலை) அதுதான் தேவையான மொழிபெயர்ப்பு என நம்பி அச்சுக்கு கொடுத்து விட்டார், தெருவில் அறிவிப்புப் பலகையைப் பார்த்த வேல்ஸ்காரர்கள் வழித்துக் கொண்டு சிரித்திருக்கிறார்கள். யாருமே இதை கடைசி வரை அரசு அலுவலகத்தில் கவனிக்கவில்லை என்பதுதான் டாப்.
சமீபத்தில் 1989-ல் ஐ.டி.பி.எல்.-ல் நான் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளனாக வேலை பார்த்த போது அதே மாதிரி ஒரு சம்பவம் நடந்தது. எங்கள் C&MD-க்கு பிரான்ஸிலிருந்து பல கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் வந்தன. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் "Joyeux Noël" என்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் "Bonne Année" என்றும் பெரிய எழுத்துக்களில் அச்சடிக்கப்பட்டிருந்தன. வழக்கமாக இம்மாதிரி பிரெஞ்சு விஷயங்கள் எனக்குத்தான் மொழிபெயர்ப்புக்காக அனுப்பப்படும்,. அதே போல அவற்றுக்கான பதில்களை பிரெஞ்சு மொழிக்கு மாற்றுவதும் என் வேலைதான். ஏனோ தெரியவில்லை இம்முறை என்னைக் கலந்து கொள்ளாமலே பதில்கள் ஆங்கிலத்தில் அனுப்படவிருந்தன. என்ன ஆயிற்றென்றால் அனுப்பியவர் பெயர்கள்தான் Joyeux Noël மற்றும் Bonne Année என்றும் நினைத்து விட்டனர். நல்ல வேளையாக அந்தப்பக்கம் எதேச்சையாக நான் போன போது கடிதங்கள் கையெழுத்துக்காக அனுப்படும் முன்னரே பார்த்து விட்டேன். அவை இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டிருந்தன, Dear Joyeux Noël or Dear Bonne Année!!!!
அவை மட்டும் போயிருந்தால் ஐ.டி.பி.எல். கதை கந்தல்தான். அவற்றைத் தடுத்தேன் என்பதைக் கூறவும் வேண்டுமா?
இப்படித்தான் நான் தந்த ஒரு பிரெஞ்சு > ஆங்கில மொழிபெயர்ப்பை என் வாடிக்கையாளரின் பெண் தான் அப்போது பிரெஞ்சு கற்றுக் கொள்ளும் மாணவி என்ற ஹோதாவில் திருத்தி அதை கந்தரகோளமாக்கினாள். வாடிக்கையாளரிடம் நாசுக்காக பேசி அப்பெண்ணின் தவற்றை திருத்த வேண்டியிருந்தது
இது பற்றி நான் போட்ட
ஆங்கிலப் பதிவு இதோ.
அன்புடன்,
டோண்டு ராகவன்
7 comments:
Me the first.!!!
நல்ல காமெடி.. நான் Swansea-யில் தான் இருக்கிறேன். ஆனால் இந்த செய்தியை படிக்கவில்லை.
:-))
ஒரு சில பதிவாளர்கள்( கடவுள் மறுப்புக் கொள்கை உள்ளதாய் பாவ்லா காட்டும் மாமனிதர்கள்) மீண்டும் இந்து மதத்தை(மட்டும்) தாக்கி பிரச்சார இயக்கம் தொடங்கியுள்ளதை பார்த்து ஆன்மிக உள்ளங்கள் வருத்தம் அடைவதை தடுக்கும் முகமாக தங்களின் அதிரடி பதிவுகளை வெளியிட வேண்டுகிறேன்.
சூடு பறக்கும் உங்கள் சாட்டையடி பதிவுகள் அனைவரது கண்களை திறக்க வேண்டும்.
ராமகிருஷ்னஹரி
வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி
ஆமாம் உங்கள் கணிணியில் தன்னிச்சையாக பதில் மெயில் போகாதா!
அதற்க்கும் வழியிருக்கிறது.
என்ன உங்கள் வேலைக்கு வேட்டு வைத்துவிடும்
நல்ல காமெடி
மொழிபெயர்ப்பில் இதைப்போன்று பல சுவையான சம்பவங்கள் நடப்பதுண்டு. நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்
பகிர்விற்கு நன்றி டோண்டு சார்!
!!!!!துபாஷி!!?????
It remembers your forefather’s ‘துபாஷி’ work during English regime..My grand father told lot about that...and ...
Keep-it-up
Sathappan
Post a Comment